அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 18


அசை  போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி

பகுதி: 18

26-10-2017

இப்போது கந்தர் சஷ்டி ஆரம்பித்து விட்டதால், கொஞ்சம் ஊர் சுற்றுவதை நிறுத்தி விட்டு நகரச் சிவன் கோவில் வரை நடையைக்  கட்டுவோமே.  தேவகோட்டையின்  மணி மகுடம் கந்தர் சட்டி விழா.  தமிழகத்தில் எது எதற்கோ கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டு கலகங்கள் உருவான கால கட்டத்தில் கந்தன் கழகம் என்று ஆரம்பித்து பக்தியோடு தமிழ் வளர்த்து வரும் கைம்மாறு கருதாத செம்மல்களை இந்தப் பதிவு மூலமாக பாதம் பணிந்து வணங்குகிறேன்.
72 ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்து வருடத்துக்கு வருடம் மேலும் மேலும் சிறப்பாக நடத்திடுவது என்பது கந்தன் கருணை விழிப்பார்வை ஒன்றை மட்டுமே நம்பும் நகரத்தார்களால் மட்டுமே இயலும்.
தமிழகத்தின் தலை சிறந்த கலைஞர்களை தேவகோட்டையின் கடைக்கோடி வாழும் என் போன்ற  சாதாரணமானவனும் தரிசிக்க வைத்த அருஞ்செயல் செய்து வருபவர்கள் தேவகோட்டை நகரத்தார்கள்.  இன்று ஓரளவுக்கு தமிழ் அறிவு இருக்கிறது என்றால் அதற்கு முழு முதல் காரணம் தேவகோட்டை நகரத்தார் விடாது நடத்தி வரும் கந்தர் சஷ்டி விழா தான்.  என்ன அருமையாக அந்த நிகழ்ச்சி நிரல் அமைக்கப்பட்டு இருக்கும் தெரியுமா? 

முத்தணி           மார்பன்       முத்தையன்      விழாவைத்து
முத்தமிழும்      தழைக்க      முனைப்பாய்   நிற்பவர்கள்
கந்தனின்         நினைவில்  கனித்தமிழும்   வளர்க்கும் 
எந்தை               தேவிநகர்     ஏழிலநகரத்       தார்           

இந்த கந்தன் கழக மேடையில் பங்கெடுக்காத கலைஞர்களே இல்லை.   பங்கேற்காதவர்கள் கலைஞர்களே இல்லை.  நான் 4 ஆம் வகுப்பு முதல் 5 ஆம்  வகுப்பு வரை கருதா ஊரணி சைவப்பிரகாச வித்தியாசாலையிலும் பின்னர் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம்  வகுப்பு வரை திருவேங்கடமுடையான் பள்ளி.  வீடு பெரிய பள்ளிவாசலுக்கு அடுத்து.

கருதா ஊரணியில் பள்ளி முடிந்தால் மாலை 4:30 மணிக்கே  சிவன் கோவில் கந்தன் விழா கழக மைதானம் வந்து அந்த மணலில் கொஞ்சம் ஆடி  விட்டுத்தான் வண்டி வீடு போய்ச்சேரும்.   அன்றைய நிகழ்ச்சிகள் ஏற்பாடு ஆகிக்கொண்டு இருப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்து அப்புறம் தான்  வீட்டுக்கு போய் சேர்வோம்.  அப்போது தச்ச வயலில் இருந்து நடராஜன் என்று ஒரு பையன் எனக்கு கீழ் வகுப்பில் கருதா ஊரணி பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தான்.  என்ன தச்ச வயலில் இருந்து கருதா ஊரணி வரை வந்து படித்தாரா  என்று எண்ணுகிறீர்களா?  அவரது பாட்டனார் பெரியாணா /சின்னாணா வீட்டில் வேலை பார்த்து வந்தார்.  சைவப்பிரகாச வித்தியா சாலை பள்ளியின் தாளாளர்கள் அவர்கள் தானே.  அதற்காகவே அந்த நடராஜனை அந்த பள்ளியில் படிக்க வைத்தார்கள்.  அந்தக் காலத்தில் அவ்வளவு விசுவாசம். 

அப்புறம் வீடு வந்து சேர்ந்து மறுபடியும் மாலை 6 மணிக்கு சிவன் கோவில் வாசலில் பார்க்கலாம்.  என்ன ஒரு வித்தியாசம் என்றால் மற்ற சிறுவர்கள் போல நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்து அனுபவித்து வந்து இருக்கிறேன், முதல் வரிசையில் உட்கார்ந்து.  எனக்கு நினைவு தெரிந்து 1967 முதல் 1987 வரை 21 வருடங்கள் விடாமல் கந்தர் சஷ்டி விழா கண்டு, கேட்டு, உணர்வில் உண்டு உயிர்த்து இருக்கிறேன்.  ஒவ்வொரு வயது கடக்கும் போதும், பக்குவம் வர வர அந்த விழாவின் அந்த மேடையின் மீது இலயிப்பும் அதிகம் ஆகிக்கொண்டே வந்தது.  சிறு வயதில் கர் நாடக சங்கீதம் பிடி படாத நாட்களில்,  சாமி புறப்படும் நேரங்களில் சாமி வாகனங்கள் பின்னால் ஓடித்திருந்து இருக்கிறேன்.  அதிலும் சூர சம்ஹாரத்துக்கு முந்தைய நாட்களில் கஜமுகன், அஜமுகன், தாரகாசூரன் வதம் நடக்கும்.  அங்கு கோவில் பிள்ளைகள் வேல் கம்பு கொண்டு பின்னால் ஓடிக்கொண்டு இருப்பார்கள்.  அதிலும் 'புட்டு' என்று ஒரு பையன், கரியினால்   மீசையெல்லாம் தனது முகத்தில் வரைந்து கொஞ்சம் டிராமா செய்வார்.


அவர்கள் பின்னால் ஓடிய நினைவுகள் இருக்கின்றது.  வயது ஆக ஆக தமிழ் மொழியின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டதற்கு காரணமே இந்த கந்தன் விழாதான்.   அந்தக்காலத்தில் இருந்தே  நிகழ்ச்சிகள் ஒவ்வொரு வருடமும் ஒரு ஒழுங்கோடு (systematically) வரையப்பட்டு இருக்கும்.  குறிக்கப்பட வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால் இங்கே கோவிலின் முன்பாக இயல், இசை, நாடகங்கள் நடந்து கொண்டு இருக்கும்.  அதே நிகழ்வோடு, கோவிலில் உற்சவ மூர்த்தி அருமையான அலங்காரத்தில், அழகு மிகு வாகனங்களில் ஊர்வலம் வந்து கொண்டு இருப்பார்.  ஆன்மிகமும் தமிழும் கலந்து முருக விழாவாக நடத்தும் பாங்கினை  என்னவென்பது?



முதல் நாள்:  திருமுருக கிருபானந்த வாரியார்                        -   ரக்ச பந்தனம்
இரண்டாம் நாள்:  புலவர் கீரன், இலக்கியப் பேருரை             -   யானை வாகனத்தில் இறைவன்
மூன்றாம்  நாள் :   சில சமயம் புலவர் கீரனே மீண்டும்           -    தங்கக்குதிரை வாகனம்
4 ஆம் 5 ஆம் நாட்களில் : இன்னிசை நிகழ்ச்சிகள்; கவியரங்கம்

இப்படியே சஷ்டியன்று காலை முதல் மாலை வரை பட்டிமன்றம் நடக்கும்.  மாலையில் சூரவதம் .
7 ஆம் நாளில் : திரைப்படத்துறையில் இருந்து நாட்டிய நாடகங்கள், பரதம்; அங்கு தெய்வானை திருமணம்
8  ஆம்  நாளில் : திரைப்பட இன்னிசை ;  அங்கு வள்ளி திருமணம்

கடைசி நாளில் வள்ளல் அழகப்பர் மன்றத்துக்கு ஒரு slot.  இடையில்  தேவகோட்டையின் மான்டிசோரி குழந்தைகள் கலை நிகழ்வும் உண்டு.

அப்பப்பா .. உயிரில் ஊறிப்போன நிகழ்வுகள்.  ஆமாங்க.. தேவகோட்டையில் இருக்கும் ஒரு சாதாரண சாமான்யன் இவ்வளவு நிகழ்வுகளையும் அடுத்தடுத்து எங்கே எப்போது எப்படிங்க பார்க்க முடியும்?  உண்மையிலேயே அந்த அற்புத சுகத்தை எத்தனையோ ஆண்டுகளாக இழந்து விட்டேன்.


இதில் நெஞ்சில் நீங்காது இன்று வரை நின்று கொண்டிருக்கும் சில நிகழ்ச்சிகளை மட்டும் குறிப்பிட்டு விட்டு இந்த பகுதியை நிறைவு செய்யலாம் என்று எண்ணுகிறேன்.  உண்மையில்  மறந்து விட்டது.  இந்தக்குறிப்பில் தவறுகள் இருக்குமேயானால் அன்பு உள்ளங்கள் தவறு காணாமல் திருத்துமாறு வேண்டுகிறேன்.

1967 என்று நினைக்கிறேன்.  அப்போது தேவகோட்டையில் கல்லூரி கிடையாது. தேவகோட்டையில் இருந்து காரைக்குடிக்கு அழகப்பா கல்லூரியில் நம் ஊர் மக்கள் சென்று படித்துக்கொண்டிருந்தனர் .  நான் சைவப்பிரகாசாவில் 4 ஆம் வகுப்பில் படித்து கொண்டு இருக்கிறேன்.  என் வகுப்புத்தோழன் போட்டோ கிராபர் திரு.ஏகப்பன் அவர்களின் மகன் சிதம்பரம்.  அவரது மூத்த அண்ணன் அழகப்பாவில் B.Sc., பயின்று கொண்டு இருந்தார். கந்தர்  விழாவில் கடைசி நாளாக அழகப்பா மன்றம் நாடகம் நடத்தினார்கள்.  நகரத்தார் உயர் நிலைப்பள்ளி ஆசிரியர் திரு.சோமசுந்தரம் அவர்கள் தான் நாடக ஆசிரியர்.  கதை, வசன கர்த்தா.  அந்த நாடகத்தில் நண்பன் சிதம்பரத்தின் அண்ணண் காவலராக ( நகைச்சுவை பாத்திரம்) நடித்தார்.

பின், வருடம் நினைவில் இல்லை,  ஆனால் கிட்டத்தட்ட 1667 அல்லது 1968.  திரைப்பட புகழ் விஜய சந்திரிகா ஒரு நாட்டிய நாடகம் நடத்தினார். மேடையில் காவிரி ஆறு ஓடுவது போல ஒரு செட்டிங்.  திரைப்பட பின்புலம் உள்ளவர்கள் அல்லவா.. அந்த வயதில் அது ஒரு அதிசயமாக இருந்தது.

மற்ற பிரபலங்கள் :  

·         கே.பி.சுந்தராம்பாள்
·         எம்.எல்.வசந்தகுமாரி
·         கே.ஜே. யேசுதாஸ்
·         வீணை சிட்டிபாபு
·         வீணை காயத்திரி
·         சீர்காழி கோவிந்த ராஜன் - அப்போது அவர் அகத்தியர், திருமலை தென்குமரி, வா ராஜா வா போன்ற திரைப்படங்களில் நடித்து பெரும் புகழுடன் இருந்தார். அதன் பின் எத்தனையோ முறை வந்து இருக்கிறார்.
·         மதுரை சோமு அவர்கள் கிட்டத்தட்ட தேவகோட்டை காரர் போலத்தான்
·         பாலக்காட்டு மணி அய்யர், திருமதி கன்னியாகுமரி எல்லாம் சர்வ சாதாரணம்
·         மாண்டலின் சீனிவாசன் சிறு குழந்தையாக
·         பத்மா சுப்பிரமணியன்
·         குமாரி சச்சு
·         இசை இரட்டையர்கள் சங்கர் கணேஷ்
·         நடிகை ரேவதி
·         ஆச்சி மனோரமா


அப்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த 'எங்க மாமா' திரைப்படம் பெரு வெற்றி அடைந்த நேரம்.  அவருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த சிறுவனை 'டான்ஸ்' ஆட அழைத்து வந்து இருந்தார்கள்.  அவரும் சிவாஜி பாடல்களுக்கு அற்புதமாக நடனம் ஆடினார். அதிலும் 'சொர்க்கம்' படத்தில் வரும் 'போன் மகள் வந்தாள் ... பொருள் கோடி தந்தாள் '  பாடலுக்கு அவர் நடிகர் திலகம் போலவே ஆடிய காட்சி இன்னும் என் இதயத்திரையில் ..

பட்டி மன்றம் என்றால் அடடா, இலக்கிய இன்பம் கரை புரண்டு ஓடும்.  எத்தனை பெரும் புலமையும், ஆற்றலும், தமிழ் ஞானமும் கொண்ட பெரியவர்கள். ஒரு காலத்தில் பட்டிமன்றம் என்றாலே தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் கண்டிப்பாக தேவகோட்டையில் இருப்பார்.   யாரையும் புகழ்வதோ, தம்பட்டம் அடிப்பதோ இல்லாமல் நடந்த தரமான பேச்சு மன்றங்கள்.  பட்டிமன்றம் என்றால் நினைவுக்கு வருபவர்கள், (அடிகளார் நீங்கலாக )


நீதிபதி மு.மு.இஸ்மாயில்
சௌந்தரா கைலாசம்
சொ.சொ.மீ.சுந்தரம்
சொல்விளங்கும் பெருமாள்
உமையாள் முத்து
சரஸ்வதி இராமநாதன்
புலவர் சத்தியசீலன்
தா.கு.சுப்ரமணியன்

அவசரத்தில் நிறைய பெயர்கள் தொண்டை வரை வந்து விரல்களில் மாட்டிக்கொண்டன.

இன்றைக்கு பட்டி மன்றம் பேசுபவர்களுக்கு எல்லாம் இவர்கள் முன்னோடி மட்டுமல்ல. சபை அறிந்தவர்கள்.   உண்மை அறிஞர்கள்.  பேச்சு வியாபாரிகள் இல்லை.

தேவகோட்டை கந்தர்  சஷ்டி விழாவின் பட்டி மன்றம் என்றால் தமிழகம் முழுவதுமே பெரும் பெயர்.  திருச்சிராப்பள்ளி ஆல்  இந்திய ரேடியோ வில் இருந்து முழு பட்டி மன்றத்தையும் பதிவு செய்ய தொழில் நுட்ப வல்லுநர்கள் வந்து விடுவார்கள்.  மேடையின் வலது புறம் அவர்களுக்கு. எனக்கோ அந்த டேப்பை ரெகார்டர் நாடா சுழல்வதை பார்ப்பதும் பின்னர் அவர்கள் அதை ஓடவிட்டு பார்த்து பேக் அப் செய்வதையும் பார்ப்பதே ஒரு வேடிக்கை.  பின்னர் அகில இந்திய வானொலியில் தேவகோட்டையின் பட்டிமன்றம் ஒரு மணி நேரமாக குறைக்கப்பட்டு ஒளி பரப்பாகும். திரும்பவும் ரேடியோவில் கேட்பது ஒரு சுகம்.

1970 ஆம்  வருடம்.. முதன் முதலில் என் செவிப்புலன் கவி அரங்கத்தில் இன்பம் கண்டது.  எதுகையும் மோனையும் இன்னதென்று இலக்கணம் இல்லாமலேயே மனதில் ஒருவாறு பதிய ஆரம்பித்தது.  அதிலிருந்து கவியின் மீது மனம் கவிழ்ந்து விட்டது.  யாரோ ஒரு கவிஞர் பாடுகிறார், 

'சிங்கார தேரதனை சிற்றெறும்பு பாடலாமா'

அந்த வரிகள் 47 வருடங்கள் கழித்தும் கூட நினைவில் உள்ளது.  இப்படி விதையாய் விழுந்த கவிதை யாப்பின் சுகத்தை பின்னர் திருவேங்கடமுடையான் பள்ளியில் எனக்கு ஆசானை இருந்த திரு.தாமஸ் அவர்கள் நீருற்றி வளர்த்து விட்டார்.  ஒவ்வொரு மாதமும் இலக்கிய கூட்டம் போடுவார்மு. தனது மகன் மனோஹரையும் பேச அழைப்பார்.   முதன் முதலில் 1971 ஆம் வருடம் காந்தி பற்றி கவிதை எழுதி வாசித்து விட்டேன்.  11 வயது.. எத்தனை பிழையோ தெரியாது .. ஆனால் அழகு என்று சொல்லி ஊக்கப்படுத்தினார்.

கந்தன் விழா தான் தமிழ் கற்றுத்தந்த பேராசான் .


அதன்பின் முனைவர் பேராசிரியர் சிங்கார வடிவேலன்அருமை ஆசிரியர் சபா அருணாச்சலம் இவர்கள் கவிதைகளில் இங்கு மயங்கி இருக்கிறேன்கண்ணதாசன் காட்சி தந்தார்கவிஞர் வாலி தமிழ் வரமாகப் பெற்றோம்வார்த்தை சித்தர் வலம்புரி ஜான் மழை விழுந்த ஒரு மாலையிலே மயக்குந்தமிழ் பேசினார்.

அடுத்து நினைவில் நிற்பது மாண்டி சோரி பள்ளி குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள்குழந்தைகளின் குறுகுறு அசைவுகள் மனதை அள்ளும்இப்ப நலந்தா புத்தக நிலையம் நடத்தி வருகிறாரே திரு.ஜம்புலிங்கம், அவர் சிறு பாலகனாக 'அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளாபாடலுக்கு ஆடிய நடனம் மனதில் நிற்கிறது.

அந்த ஒன்பது நாளும் முடிந்த பின் மனம் ஒரு சூனியத்தை உணரும்இன்று அந்த நிகழ்வுகளை நினைக்கும் நேரம் அதை விட அதிகமான சூனியத்தை உணர்கிறேன்.

ஏக்கத்துடன் கவிக்கிறுக்கன் .. அடுத்த பகுதியில் சந்திப்போம்



கருத்துகள்

  1. அனைத்து வரிகளும் உணர்ந்து உணர்ந்து அதற்குள்ளேயே ஒன்றி அருமையாக எழுதி இருக்கிறீர்கள். இல்லை கொட்டி இருக்கிறீர்கள் கழகங்கள்/கலகங்கள் அருமை எதையும் மறக்காத உங்களின் நினைவாற்றல் போற்றுதற்குரியது. Well done brother தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  2. மதுரை சோமுவின் ஆசிரியரான திரு. சித்தூர் சுப்பிரமணியம், சூலமங்களம் சகோதரியர் போன்ற எண்ணற்ற கலைஞர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். வழக்காடுமன்றம் என்ற நிகழ்வும் மிக நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  3. அருமை முத்துமணி அந்தநாள் நினைவு
    பெருமை அச்சாணி கந்தர்சஷ்டி - விழா
    உருவகம் அதனைக் கண்ணில் காட்டிய
    சிறுவாணி நீர்சுவைப்பதி வே !

    #மேனா சீனிவாசன்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60