தேவகோட்டை கந்தர் சஷ்டி விழா... நினைவுகள் .. தீபாவளி வந்து விட்டால் மற்ற ஊர்களில் இருப்பவர்களுக்கு என்னவோ, புத்தாடைகளும், புகை விடும் பட்டாசுகளும் தான் நினைவில் வரும். தேவகோட்டையில் இருந்த எங்களுக்கோ, தீபாவளியில் இருந்து ஆரம்பிக்கும் கந்த சஷ்டி விழா, 9 நாட்களும் இயல் இசை நாடகம் என்ற முத்தமிழையும் பொழிந்து விட்டுச் செல்லும் ஐப்பசிக் கொடை . பல நேரங்களில் தானாகவே ஞாபக மேகங்களாக நினைவின் வானத்தில் மிதந்து செல்லும் எமது பால பருவ நினைவுகள்..... கருதா ஊரணிக் கரையில் இருக்கும் சைவப் பிரகாசா வித்தியா சாலையிலும், பின்னர் சிவன் கோவில் குளக்கரையில் இருந்த திருவேங்கடமுடையான் (தற்போது சேர்மேன் மாணிக்கவாசகம் பள்ளி ) பள்ளியிலும் பயின்ற காலம். இந்த கந்தர் சஷ்டி விழாத் திடல் மணல் பரப்பி, தென்னைக் கிடுகுகளுக்குள், வெள்ளாடையும், பச்சை. சிவப்பு வண்ணங்களில் ஓரத்து அலங்காரமுமாக எழும்பிக் கொண்டிருக்கும் போதே எங்களுக்கு வேடிக்கைத் திடலாகி விடும். அருமையான நிகழ்வுகள்..அந்த சிற்றூரில்..... டிஜிட்டல் பலகைகள் இல்லாத காலம். பகல் நேரத்தில் ஒரு கரும்பலகை...