அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 31

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 30
29-11-2017

அன்பர்களே.....

கொஞ்சம் அதிகமாகவே இடை வெளி விழுந்து விட்டது, முந்தைய பகுதிக்கும் இந்த பதிவுக்கு இடையில்.... பணிகளுக்கு இடையில் நேரம் கிடைக்கும் பொழுது எழுது  என்ற பேராசிரியர் குமரப்பன் அவர்களின் அறிவுரை கொஞ்சம் மனதுக்கு சமாதானம் அளிக்கிறது.

கண்டதேவி ரோடு புதூர் அக்ரஹாரம் புறப்படும் இடத்தில் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு உங்களை நிறுத்தி விட்டு நாலைந்து நாட்கள் காணாமல் போய்  விட்டேன்.  தொடர்வோம்... இந்த இடம் அந்த ஏரியா மக்கள் கூடும் இடம். நேராக கிழக்கில் ஓடும் புதூர் அக்ரஹாரம் சாலை அருணகிரி பட்டணம்  முத்து மாரியம்மன் கோவிலில் கொண்டு போய்ச் சேர்க்கும்.  

இந்த புதூர் அக்ரஹாரத்தில் வாழ்ந்த முக்கியமானவர்கள்/  குறிப்பிட வேண்டியவர்கள் 

திரு. வித்வான்.நாராயணசாமி, தமிழ் பண்டிட்:   அப்போது ஹிந்தி ஆசிரியர் ஹிந்தி பண்டிட் என்று அழைக்கப் படுவார்.  அதே போல தமிழ் ஆசிரியர் தமிழ் பண்டிட்...வித்வான் என்றும் போட்டுக்கொள்வார்கள்.  சேட்டை செய்கின்ற பையன்கள் '  வித்வான் விடிய விடிய கத்துவான்'  என்பார்கள்.  வித்வான் என்பது வித்தை கற்றவன், வித்தை பெற்றவன் என்று குறிக்கும் பயன் பாட்டில் இருந்து இருக்கிறது.

இந்த வித்வான் பின்னர் 'புலவர் ' ஆனது .  இன்னும் எனக்கு கண் முன் தெரிகிறது வித்வான் நாராயணசாமி அவர்களின் கம்பி ரேழி  வைத்த புதூர் அக்ரஹாரத்தில் இருந்த வீடு.  பச்சை அல்லது நீல நிற அடி வர்ணம் கொண்ட பெயர் பலகையில் அவர் பெயர் எழுதப்பட்டு வீட்டில் மாட்டப்பட்டு இருக்கும்.

திரு: சுந்தரராஜன் அய்யங்கார், அவரது தம்பி திரு.தெய்வசிகாமணி, பி.ஏ.பி.டி :  இவர்கள் சிவன் கோவில் அருகில் மிக அருமையாக திருவேங்கடமுடையான்   பள்ளியை நடத்தி வந்த சகோதரர்கள்.  திருநெல்வேலி மாவட்டம், எட்டையபுரம் அருகில் நம்பிபுரம் என்ற பகுதியை பூர்வீகமாக கொண்டவர்கள்.  இதில் மூத்தவர் திரு.சுந்தரராஜ அய்யங்கார், எட்டையபுரத்தில் பாட்டுக்கொரு புலவன் பாரதியின் வகுப்பு தோழர்.  திரு.தெய்வ சிகாமணி அவர்கள் தலைமை ஆசிரியர். இந்த இருவரும் சேர்ந்து ஆரம்பித்த பள்ளி தான் திருவேங்கடமுடையான் பள்ளி.  புரவலர் பலர் ஆதரவுடன் தான்..  பள்ளி பற்றிய மற்ற விபரங்கள் தனியாகப் பார்ப்போம்.   இப்போது அங்கு சென்றால், புதூர் அக்ரஹாரம் கிடந்து  போய் விடும்.  

திரு.முருகன் ஆசிரியர் அவர் தம்பி திரு.ஞானசம்பந்தன்.  ஆசிரியர் குடும்பம்.. திரு.முருகன் அவர்களை அனைவரும் அழைப்பதே 'ஆசிரியர்' என்று தான்.  முருகானந்தம் பள்ளி தனை  இந்த பகுதியில் மிக சிறப்பாக நடத்தி வந்தவர்.   இவரது தம்பி திரு.ஞான சம்பந்தன் நகரத்தார் உயர் நிலைப் பள்ளியின் ஆசிரியர். தலைமை ஆசிரியராக இருந்தார்.  முன்பே குறிப்பிட்டேன்... தேவகோட்டையில் மூலைக்கு மூலை, கோவில்களும், குளங்களும் மட்டுமல்ல... கல்விச்சாலைகளும் இறைந்து, நிறைந்து எங்கும் கலாதேவி நீக்கமற மகிழ்ந்து வாழ்ந்து இருந்தாள் .

திரு.வேங்கட கிருஷ்ணன் ஆசிரியர், அவர் மனைவி கோமதி,ஆசிரியை:  இவர்கள் இருவரும் திருவேங்கடமுடையன் பள்ளி ஆசிரியர்கள்.  இதில் ஆசிரியை கோமதி அவர்கள் , திரு.சுந்தரராஜன், திரு.தெய்வசிகாமணி அவர்களின் அக்கா மகள் .  இவர்கள் மகன் திரு.ஸ்ரீதர், இதே பள்ளியில் என் வகுப்பு தோழன்,  பின்னர் கல்லூரியிலும்...படிக்கும் காலத்தில் இவர்கள் வீட்டுக்கு அடிக்கடி போய்  ஆட்டம் போட்டு  இருக்கிறேன். ( ஒரு இடம் விடவில்லை).  இவர்கள் வீட்டு தோட்டத்தில் கொய்யா நல்ல இனிப்பாக இருக்கும். நண்பர் ஸ்ரீதர் தற்போது அருப்புக்கோட்டை, காரியப்பட்டியில் , பாண்டியன் கிராம வங்கியில் பணி  புரிகிறார், இன்னும் தொடர்பில் உள்ளார்.

தொடர்ந்து அருணகிரிப் பட்டணம் செல்ல  நேராக செல்ல வேண்டும். கொஞ்சம் முன்னால்  சாலயின் இடது புறம் பிரியும் சாலையில் பிரிந்து சென்றால் தாழையூர் அருள்மிகு கூத்தாடி பெரிய  நாயகி அம்மன் கோவிலில் கொண்டு போய் நிறுத்தும்.  

இந்த வரிகளை எழுதும்போது நான் சிறு பிள்ளையாக இருந்த போது கடந்த நிகழ்வு நிழல் ஆடுகிறது.  சித்தப்பா பவளம், ஜெயபால் மாமா, நவாப் அண்ணன்  அவர்கள் செட்டான திரு.முத்துராமலிங்கம் அப்போது தான் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்.  வருட விடுப்புக்கு சொந்த ஊர் வரும் இள  வயது ராணுவத்தினர் தங்கள் நண்பர்களுடன் பொழுதைக் கழிப்பார்கள்,  களிப்பார்கள்...  அப்படி முதல் விடுமுறைக்கு முத்து  ராமலிங்கம் அண்ணன்  தேவகோட்டை வந்து இருக்கிறார்.  அந்த சமயம் அருணகிரி பட்டணம் செவ்வாய் திருவிழா.  கூத்து நடக்கிறது. வழக்கம் போல வாலிப வட்டங்கள் (இளவட்டங்கள்) கதை பேசிய படியே கூத்து பார்க்க செல்கிறார்கள். அதில் இந்த முத்துராமலிங்கமண்ணன், ஜெயபால் மாமா, நவாப் அண்ணன் , பவளம் சித்தப்பா எல்லோரும் ..கூட கொசுறாக நான்.. அவர்கள் பேசிக்கொண்டு போவதை வாய் பார்த்துக்கொண்டு .... முத்து  இராமலிங்கம்,, ராணுவத்தில் சேர்ந்தது... உடல் அளவு, எடை அளவு பார்த்து,,, வட நாட்டவர்கள் தமிழரைப் பார்த்து மிரள்வது என்று பேசிக்கொண்டு வந்தது நினைவு வருகிறது.

அருணகிரிப் பட்டணம் செல்லும் பாதைக்கும் இடது புறம் பிரிந்து தாழையூருக்கு செல்லும் சாலைக்கும் இடையில் வரும் முக்கோண வடிவ இடத்தில ஒரு தென்னந்தோப்பு இருக்கிறது போன்ற ஞாபகம். ஒரு மொசைக் கல் தயாரிக்கும் கூடமும் உண்டு.

தாழையூர் சிறு பிராயத்தில் இருந்து விடாமல் புதன் கிழமையும், சனிக்கிழமையும் சென்று வழிபட்ட புனித மண்.  நினைத்ததை முடித்து வைக்கும் விநாயகர்,   அற்புதத்  தாய் அருள்மிகு கூத்தாடி பெரிய நாயகி அம்மன் , உசிலுடைய அய்யனார், 7 அண்ணன்  மார்கள் , சின்னக்கருப்பர், பெரிய கருப்பர், உளி வீரன்,  காளி  அம்மன் என்று ஒரு சுற்றில் இத்தனை  தெய்வங்களையும் வழி  பட்டு வரலாம்.  சின்ன வயதில் தாயுடன் சென்று கோவிலின் இடது புறம் கண்மாய் கரை ஓரம் இருக்கும் ஈச்ச மரத்தின் இலையை நினைத்தது நடக்க வேண்டி கொண்டு முடிச்சு போட்ட நினைவு இருக்கிறது.  அது அப்படியே தொடர்ந்து ஒவ்வொரு வருடம் பள்ளியின் முழு ஆண்டு தேர்வில் தேறி வரவும் முடிச்சுகளால் ஈச்ச மரம் நிறைந்தது.  அடிக்கடி வேண்டிக்கொண்டு பால் வாங்கி ஒத்தக்கடையில் இருந்து நடந்தே செல்வதும் உண்டு.   மாசி சிவராத்திரி அன்று இந்த கோவிலில் வைபவம் நடக்கும் . அந்த நாளில் முழு நாளும் என்ன செய்வது என்றே தெரியாமல் காலை  முதல் மாலை வரை இந்த கோவிலில் நண்பர்களுடன் சேர்ந்து வேடிக்கை பார்த்தது உண்டு.  கோவிலின் இடது புறம் எழுப்ப பட்ட கற்கோவில் மண் மூடிக்கிடக்கும்.  அது ஒரு குன்று போல கீழிருந்து மேலே உயரமாக செல்லும்.  அதன் மீது ஏறி அந்த கற் கோவிலின் மேல் உட்கார்ந்து இருப்பது ஒரு விளையாட்டு.   அப்புறம், அந்த காளி அம்மன் சன்னதியின் முன் உள்ள பலி பீடத்தின் விளிம்பில்   இரண்டு கைகளையும் விரித்து வைத்து கொண்டு இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து இரண்டு கைகளில் விரல்களும் மறுமுனையில் ஓன்று சேர்ந்தால் நினைத்தது நடக்கும் என்று எவனோ பீலா விட்டு விட்டான்.  அது தெரியாமல் நாங்களும்  வேலை மெனக்கெட்டு இரண்டு உள்ளங்கைகளையும் தரையைப் பார்க்கிற மாதிரி திருப்பிக்கொண்டு கட்டை  விரல்களுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் இடையில் உள்ள பகுதியை அந்த வட்ட வடிவ பலி பீடத்தின் மீது வைத்து தன்னை அறியாமலேயே கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி இரண்டு ஆள்காட்டி விரல்களையும் தொட வைத்து விடுவோம்.  எங்களைத் தொடரந்து இதை செய்து பார்க்க   ஒரு பெரிய க்யூ பின்னால் காத்து நிற்கும்.  கொஞ்சம் வயது ஆகி பக்குவம் படர்ந்த வயதில், மனதில் சோர்வு ஏற்படும் நேரமெல்லாம் மாலை வேளைகளில் அந்த கோவிலின் கண்மாயில் காலை நனைத்து விட்டு அம்மாவைக்  கை  தொழுது அனைத்து  தேவதைகளையும் வலம்  வந்து அந்த வாசலில் உடகார்ந்து  இருப்பதே மனதிற்கு  மிகப் பெரிய சக்தியும் ஆறுதலும் அளிக்கும்.  அந்த கண்மாய் தண்ணீர் சுத்தமாக வெண் நிறத்தில் இருக்கும்.   நல்ல காற்று, மாசு படாத அருமையான சுற்று சூழல்.... இதை எழுதும் போது  அதை அனுபவித்தே எழுதுகிறேன்.

இதோடு தாழையூர் விட்டு திரும்ப புதூர் அக்ரஹாரம் வழியாகவே திரும்பி கண்டதேவி ரோட்டுக்கு வந்து விடுவோம்.  அப்படியே இன்னும் கொஞ்சம் வடக்கில் அந்த சாலை செல்லும் வழியே சென்று தான் பார்த்து விடுவோமே... என்ன கால் வலிக்கிறதா?   கொஞ்சம் நடந்தால் அழகான முத்து  மாரியம்மன் கோவில் ஊரணி வந்து விடும்.  நல்ல வட்ட வடிவில் சுத்தமான வெண்ணிற தண்ணீர் சூழ் தடாகம்.  எங்கள் பகுதியான அருணாச்சல பொய்கை, சிவன் கோவில் ஊரணி வற்றிபோன வாட்டும் கோடை காலங்களிலும் வற்றாத வரம் பெற்ற குளம் இது.  கோடைகாலங்களில் குளம் குளமாய் தேடி குளிக்க போய் இருக்கிறோம் குழுக்களாய்....

இந்த ஊரணிக்கு மேற்கில் பிரியும் சாலையில் சென்றால் பனிபுலாவயல் செல்லலாம். இங்குள்ள மாதா  கோவில் மிகவும் பிரசித்தம்.  வேண்டுதல்களுடன் இந்துக்களும் சென்று மெழுகுதிரி ஏற்றி கை தொழும் இடம்.  இங்கு நடக்கும் உற்சவத்தில் ஒரு வருடம் 'ஞான சௌந்தரி' திரைப்படம் 16 m m இல் பார்த்த நினைவு இருக்கிறது.  பனிப்புலா வயல் செல்ல தேவகோட்டை திருப்பத்தூர் சாலையில் இருந்து சரஸ்வதி வாசக சாலை வழியாகவோ, கார்ப்பரேஷன் சாலை வழியாகவோ, செயின்ட் மேரிஸ் பள்ளி எதிரே செல்லும் சாலை வழியாகவோ செல்லலாம். 

இதை விட்டு கண்டதேவி ரோட்டிலேயே இன்னும் வடக்கு நோக்கி நடந்தால் தமிழக அரசின் கால்நடை மருத்துவ மனை .  அந்த காலத்தில் எங்கள் வீட்டில் ஒரு பால் மாடும், கன்றும், சில வெள்ளாடுகளும்  இருந்தன.  இந்த பால் மாடுதான் வீட்டுப் பெண்களுக்கு ஆண்கள் கையை எதிர் பார்க்காமல், வீட்டு செலவுகளை சமாளிக்க உதவும் சஞ்சீவினி.   சமயத்தில் இந்த மாட்டுக்கோ அல்லது கன்றுக்கோ  ஏதாவது உடம்புக்கு வந்து விடும்.  வீட்டில் இந்த மாதிரி வேலைக்கெல்லாம் முத்துமணி தான் மூத்த மணி.  வட்டாணம் ரோட்டில் இருந்து இந்த மாட்டை (சமயங்களில் மாட்டுடன் கன்றினையும் ) பிடித்துக்கொண்டு சிவன் கோவில் , கருதா ஊரணி கடந்து, கண்டதேவி ரோடு முழுதும் நடந்து இந்த மாட்டாஸ்பத்திரி, அதாங்க .. கால் நடை மருத்துவமனை செல்வேன்.  அங்கு அந்த வயதில் வேடிக்கை பார்க்க விஷயங்கள் நிறைய கிடைக்கும்.  அந்த வயதில் முதல் அதிசயம் கால் நடை வைத்தியர் தனது தோள்  பட்டை வரை கருவை சுமந்திருக்கும் மாட்டின் கருப்பைக்குள் கையை விட்டு பரிசோதனை செய்து பார்ப்பது.  அடுத்து இனப்பெருக்கத்துக்காக  அங்கு வளர்க்கப்படும்    காளை  மாடுகள்.. அழைத்து வரப்படும் கிடேரிகளுடன் இணைய வைப்பதற்கு  அந்த மருத்துவர் செய்யும் சைகைகள் என பார்த்து கொண்டே இருக்கலாம்.   அப்புறம் என் முறை வரும்போது மாட்டுக்கு என்ன பிரச்னை, என்ன சாப்பிட கொடுக்கலாம், அப்படி மருந்தை புகட்ட வேண்டும் என்று எல்லாம் கேட்டு தெரிந்து கொண்டு மருந்தை வாங்கிக் கொண்டு திரும்புவேன்.  சில அதிர்ஷ்டம் உள்ள நாட்களில் பறவைகள், முயல்கள் நாய், பூனை, வான் கோழி எல்லாம் வைத்தியத்துக்கு வரும்,  'ஆ' வென வேடிக்கை பார்க்க கிடைக்கும்.

இன்னும் கொஞ்சம் நடந்தால், வாழ்கிற மாணிக்கம் காளி  கோவில்.  அங்கே யாரிடமாவது வாழ்கிற மாணிக்கம் என்று கேட்டால் உங்களை  மேலும் கீழும் பார்ப்பார்கள்.  வால்ற மாணிக்கம் என்று கேட்டால் தான் தெரியும்.  ஹா .. ஹா. ஹா.  இன்னும் கொஞ்சம் நடந்தால்.... எப்படியோ.  ஒருவழியாக கண்டதேவி வந்து சேர்ந்துட்டோமே...

கண்ட  தேவி சொர்ண மூர்த்தீஸ்வரர் கோவில், தேரடி கருப்பர்  கோவில், குங்கும காளி  அம்மன் கோவில், கண்ட  தேவி ஊரணி என்று மிகவும் ரம்மியமான, பக்தி மணம்  கமழும் இடம்.  



இன்னும் போனால் ஆறாவயல் வந்து விடும்.  

மற்ற வேற்றுமை பற்றி நாம் இங்கு பேச வேண்டாம். காலம் அனைத்தையும் மாற்றும் ...மாற்றம் ஒன்றே மாறாதது ...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60