அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள் -பகுதி: 7
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 7
04-10-2017
இப்ப கீழக்குடியிருப்பு விட்டு வெளியே வந்துடுவோம். ஊர் சின்னதா இருந்தாலும் உணர்வுகள் அதிகம். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது அப்படின்னு சொல்லறாங்க இல்லையா? அதுபோல.. தேவகோட்டையின் கீர்த்தி பெரியது. அதுதான் என்னை எழுத வைத்திருக்கிறது. உங்களை வாசிக்க வைத்து இருக்கிறது. நானும் மிககுறைவான அளவில் எழுதி விடலாம் என்று பார்க்கிறேன். புலி வலை பிடித்த கதையாக ஆகி விட்டது. தொடவும் முடியவில்லை, விடவும் முடியவில்லை.
காந்தி ரோடில் உள்ள பசுமடத்தில் முன்பு லெட்சுமி ஆச்சி சகோதரிகளால் மாண்டிசோரி பள்ளி எனப்படும் குழந்தைகளுக்குகான ஆயத்தப்பள்ளி அந்த நாளில் மிக சிறப்பாக நடத்தப்பட்டு வந்தது. தேவகோட்டையில் நலந்தா ஜம்புலிங்கம் உங்களுக்கு தெரிந்து இருக்கும். இவர் சிறிய பாலகனாய் இங்கு படித்ததை உதவியதை பார்த்து இருக்கிறேன். இவரின் சகோதரிகள் தான் பள்ளி நிர்வாகிகள். அப்போது கந்தர் சஷ்டி விழாவில் ஒருநாள் இந்த மாண்டிசோரி குழந்தைகளின் காலை நிகழ்ச்சிகளுக்கு என்று கொடுத்து இருப்பர். அது பார்க்க ரொம்ப சுவாரசியமாக இருக்கும். நம்ம ஜம்புலிங்கம் 'அடுத்தாத்து அம்புஜத்தை பாத்தேளா' என்ற அன்றைய பிரபல பாடலுக்கு நடனம் ஆடியது இன்னும் நினைவில் இருக்கிறது.
மீண்டும் மாட்டுச்சந்தை பின்புறம் நடப்போம். மாட்டுச்சந்தையின் பின் புறம் பள.செ . ரோடு ஆரம்பம் ஆகிவிடும். அதற்கு வலது புறம் இணையாக செல்லுவது காந்தி ரோடு. பள .செ . ரோடில் இடது பக்கம் சட்டி சாமியார் கோவில் என்று ஒன்று இருக்கும். இது எத்தனை பெருக்குத் தெரியும் என்று நான் அறியேன். தெரிந்தவர்கள் விபரம் சொன்னால் எல்லோருக்கும் உதவியாக இருக்கும்.
வலது புறம் சொல்லோவியர் சொ .சொ .மீ .சுந்தரம் அவர்களின் இல்லம். இவர் அடியெடுத்துக் கொடுக்க கவியரசு கண்ணதாசன் அவர்கள் எழுதிய காமனை ஏன் எரித்தாய் எனும் கவிதை 16.7.81 குமுதம் இதழில் வெளிவந்தது. கண்ணதாசனால் " சொல்லுக்குச் சொல் மீறும் சுந்தரம்" என்று பாராட்டப்பட்டவர். 1981 இல் நிகழ்ந்த ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டில் கவிதைப் போட்டியில் கலந்துகொண்டு முதற்பரிசுடன் பொற்கிழியும் பெற்றார். தேவகோட்டையில் நடை பெறும் கந்த சஷடி விழா பட்டி மண்டப மேடைகளில் முழங்கியவர் . ஒருமுறை இவருக்கு எதிர் அணியில் இருந்து பேசியவர் இவர் திரும்பத் திரும்ப தன கருத்தை பேசியதை பார்த்து சொன்னதையே சொல்லும் மீனாட்சி சுந்தரம் , அத்தன் சொ .சொ .மீ . சுந்தரம் என்று கிண்டல் அடித்தது ஞாபகம் வருகிறது .மதுரை பன்னிரு திருமுறை மன்றத்தில்' திருமந்திரசொல் மணி' புலவர் மன்றத்தில்,' சொல்லோவியர்' திருவாவடுதுறை ஆதீனத்தில்,' தமிழாகமச் சிந்தைச் செல்வர்' விரிவுரை வித்தகர்,திருப்புகழ் உரைமணி,செந்தமிழ்பேரொளி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
காந்தி ரோடில் அந்த ஒரு பகுதியில் கொஞ்சம் இசுலாமியக் குடியிருப்புகள் இருக்கும். குர்-ஆன் ஓதும் அசரத்து ஒருவர் இருப்பார். அவர் ஒரு பெட்டிக்கடை cum மளிகைக்கடை வைத்து இருப்பார் . காலையில் இசுலாமியக் குழந்தைகளுக்கு புனித குர் -ஆன் ஓத கற்றுக்கொடுப்பார்.
இந்த காந்தி ரோடில் தான் 1982ல் நடை பெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு தங்கம் வென்ற தடகள வீரர் சார்ல்ஸ் பெர்ரோமியோ வின் இல்லம் இருந்தது. பாரத தேசத்தின் அர்ஜுனா விருது பெற்றவர் . 1984ல் பத்மஸ்ரீ விருதும் பெற்றார். இவர் முத்தாத்தாள் ஆச்சி பள்ளியிலும், தே பிரித்தோ பள்ளியிலும் பயின்றவர். இவரது தம்பி ஆல்பர்ட் எங்கள் விளையாட்டு தோழன். அந்த கால கட்டத்தில் கபடிபோட்டி நடத்துவதும், எங்கெல்லாம் கபடிப் போட்டிகள் நடக்கிறதோ அங்கெல்லாம் கலந்து கொள்வதும் தான் எங்கள் பொழுது போக்கு. பின்னர் வாய்ப்பு இருந்தால் அது பற்றி எழுதலாம். ஏனெனில் இது தேவகோட்டை பற்றிய குறிப்புங்கோ!!
அப்படியே காந்தி ரோடில் இன்னும் கொஞ்சம் நடந்தால் செயின்ட் ஜான்ஸ் பள்ளி வந்து விடும். எனக்கு அரிச்சுவடி சொல்லி கொடுத்த அருமையான பள்ளி. ஐயா நிறைய பள்ளிகளில் படித்து இருக்கிறார். எல்லாம் அனுபவம் தான் . இந்த ஜான்ஸ் பள்ளியில் 1 ஆம் வகுப்பு முதல் 3 ஆம் வகுப்பு வரை தான். ஆனால் எனக்கு முதல் நாள் முதல் வகுப்பில் இருந்த ஞாபகம் இன்னும் இருக்கிறது,,, ஆச்சரியம் தான் எத்தனை பேருக்கு முதல் வகுப்பில் இருந்த ஞாபகம் இன்னும் இருக்கும் என்று தெரியவில்லை. அதிலும் என்னை நாலரை வயதிலேயே பள்ளியில் சேர்த்து விட்டார்கள், பிறந்த தேதியில் குல்மால் செய்து...
காந்தி ரோடிற்கு இணையாக (Parallel ) ஆக முழு தூரம் செல்லப்ப செட்டியார் கோவில் வரை செல்வது பள .செ . ரோடு. தேவகோட்டை நகர வழக்கம் ஓவ்வொரு வீடும் வாசல் ஒரு சாலையிலும் கொல்லைப்புறம் மற்றோரு சாலையிலுமாக இருப்பது . இந்த இரண்டு சாலைகளும் இதற்கு விதி விலக்கு அல்லவே?
ஜான்ஸ் பள்ளிக்கு முன்னால் தொண்டியார் வீதி தொடங்கும் இடத்தில ஒரு சின்னக்கடையும் கடையை ஒட்டிய வீடும் இருக்கும். இந்த வீட்டின் பின்புறம் பள.செ.ரோடில் முடியும். இது அழகப்பனின் வீடு . நல்ல திறமையான ஓட்டுனர். இந்த வீட்டுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் பூர்வ ஜென்ம பந்தம் உண்டு.
ஆம். வைகை ஆறு வளம் பெருக்கிய வழித்தடங்கள் ஆன மதுரையில் தொடங்கி பரமக்குடி வரை வையைக் கரையின் மருங்கில் அமைந்துள்ள சின்னக் கிராமங்ககளில் நிலக்கிழார்களாக வாழ்ந்து வந்த குடியில் இருந்து என் தந்தையார் தேவகோட்டை வந்து சேர்ந்தது, காலச்சக்கரத்தின் ஓட்டத்தில் யார் யார் எங்கெங்கோ என்பதன் இயற்கை நியதி ஆகும். மானாமதுரை அருகில் உள்ள கிராமம் எங்கள் பூர்வீகம். முன்னாள் அமைச்சர், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் தா.கிருட்டிணன் ஊரான கொம்புக்காரனேந்தல் எங்கள் ஊர் சீனிமடையில் இருந்து கூப்பிடு தூரம். எங்கள் இரு குடும்பங்களும் 4 தலைமுறை பழக்கம். இன்றுவரை தா.கிருட்டிணன் அவர்களின் தம்பியார் எங்களுடன் பழைய வாஞ்சையுடன் இருக்கிறார்.
சிறியவனாய் என் தந்தை இருந்த போதே தாயை இழந்து விட, என் பாட்டனார் விவசாயத்தையும் கவனிக்காமல் , பெற்ற பிள்ளைகளையும் கவனிக்காமல் இரண்டையுமே வானம் பார்த்த பூமியாக விட்டு விட்டார் ...
இதற்கு மேல் அடுத்த பகுதியில் பார்ப்போமே....
கருத்துகள்
கருத்துரையிடுக