அசை போடும் தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 9
பகுதி: 9
05-10-2017
இப்பொ தொண்டியார் வீதி முனையில் நிற்கிறோம். இடையில் பயணம் தொடங்கிய திண்ணன் செட்டி உருண்ணிக்கரையில் சில முக்கியமானவர்களை சந்தித்து வந்து விடுவோம் . பின்னர் அவர்கள் கோபித்துக்கொள்வார்கள் . நகர காவல் நிலையம் இருக்கும் இடத்தில் இருந்து வலது பக்கம் நாகூர் ஆண்டவர் தர்ஹா (அவ்லியாக்கள் அடக்கமான இடம்) இருக்கும். இங்கு நடக்கும் சந்தனக்கூடு வைபவம் மறக்க இயலா ஒன்று.
தேவகோட்டைக்கு தொண்டியில் இருந்து அந்தக்காலத்தில் மிதிவண்டிகளில் மீன் ஏற்றிக்கொண்டு வருவார்கள். மீன் லோடுகள் ஓட்டுவதற்கென்றே ஒத்தக்கடையில் (professional ) வண்டி ஓட்டிகள் இருந்தார்கள். தேவர் மகன் தவசி, மீரா இன்னும் பலர். போட்டி போட்டுக்கொண்டு சைக்கிள் ஒட்டி வருவார்கள். ஒரு பகுதி லோடு ஒத்தக்கடையில் இறக்கப்பட்டு விடும் . இன்னொரு பகுதி பேருந்து நிலையத்துக்குப் பின்புறம் இருக்கும் சந்தைக்கு செல்லும். காரைக்குடிக்கு கூட இங்கிருந்து மீன் சென்ற காலம் அது . மிகப்பெரிய காண்டா விளக்குகள் பெரிய திரிகளுடன் வெளிச்சம் உமிழ மீன் வியாபாரம் வெகு ஜோராக நடக்கும்.
இந்த தவசி அவர்களின் குடும்பமும் தேவர் பூமியான பசும்பொன் பகுதியில் இருந்து வந்தது. பசுமடத்தில் எங்கள் குடுமபம் வாசித்த பொது அருகில் வாழந்தவர்கள். தவசி அவர்களின் தம்பி இருளாண்டி என் வயதை ஒத்த நண்பன்.தவசி அவர்கள் சித்தப்பா பவளம் செட்.
இந்த மீன் வியாபாரிகள் தான் முக்கியமான ஸ்பான்சர் (sponsars) சந்தனக்கூடு வைபவத்துக்கு. கொடியேற்றத்துடன் தொடங்கும் சந்தனக்கூடு உரூஸ். இப்போது இந்த நாகூர் ஆண்டவர் தர்ஹாவுக்கு இன்னும் வலது பக்கம் இருக்கும் மூன்று விடுகளுக்குள் செல்வோம். காந்தி ரோடில் சரியாக 6ஆம் வார்டு பள்ளிக்கு எதிரில் உயரமாக வாசல் படி வைத்து மூன்று வீடுகள் இருக்கும். அந்த வீடுகளின் பின்புறம் ஒரு கேட் ஆக ஒன்று சேர்ந்து திண்ணன் செட்டி ஊரணியின் தென்கரையைப் பார்த்து இருக்கும். இதன் அருகில்தான் நாகூர் ஆண்டவர் தர்ஹா.
இந்த வீடுகளின் மண் மணம் இன்னும் என் நாசிகளில். இதில் முதல் வீட்டில் திரு.யக்னேஸ்வரன் ஐய்யர் இருந்தார். கடுமையான உழைப்பாளி. வக்கீல் குமாஸ்தாவாக இருந்தார். அவர் மனைவி கோமதி அம்மாள். இரண்டு பிள்ளைகள். மூத்தவர் திரு.நரசிம்மன். இரண்டாவது பெண் திருமதி.விருதாம்பாள் என்கிற வினு. இந்த வீடு என் சொந்த வீடு போல.. இந்த வீட்டுக்கு வரும் முன்பு தி.பிள்ளையார் கோவில் சன்னதி முதல் தெருவில் இருந்தார்கள் .
இரண்டாவது அல்லது நடுவில் இருந்த வீட்டில் முன்பு முனியாண்டி என்று ஒரு இராமநாதபுரத்து காரர் , அங்கிருந்த அரசினர் மருத்துவமனையில் காம்பௌண்டர் ஆக இருந்தார். வாட்டர்மேன் (waterman) என்றும் சொல்வார்கள்.
கடைசி வீட்டில் சீனு, அவர் தம்பி கணபதி அவர் அம்மா ஆகியோர் இருந்தனர். இந்த சீனு ஆயிர வைசியர் வகுப்பைச் சேர்ந்தவர். தற்போது தேவகோட்டையில் ஷிரிடி சாய் பாபா கோவில் இருக்கும் இடத்துக்கு நேர் எதிரே வாடகை சைக்கிள் கடை வைத்து இருந்தார். என் உயரத்துக்கு எட்டுவது போல ஒரு சின்ன சைக்கிள் வாடகைக்கு இவரிடம் கிடைக்கும். இதற்காக ஒத்தக்கடையில் இருந்து இவர் கடைக்குப்போய் வாடகைக்கு சைக்கிள் எடுத்து பழகியது உண்டு. ஒரு மணிக்கு 15 பைசா. அப்போ ரொம்பப் பெரிய தொகை.... அதை வீட்டுல வாங்கிறதுக்குள்ள, தாவு தீந்துடும். நானும் நரசிம்மனும் போவோம்.
சீனுவின் அம்மா என்னிடம் அறிஞர் அண்ணா அவர்கள் சிகிச்சைக்காக அமெரிக்க சென்று இருந்த சமயம் தினத்தந்தி பேப்பரில் வரும் செய்திகளை படித்துக்காட்டுச் சொல்லி அய்யோ ,, பாவம் என்பார். எனக்கு அப்போது வயது 8 இருக்கும். நானும் ஆகாச வாணி செய்தி அறிவிப்பாளர் ரேஞ்சுக்கு குரலை ஏற்றி இறக்கி பேப்பரை வாசித்துக் காண்பிப்பேன்.
சிறு வயதில் இந்த நரசிம்மன் தான் எனக்கு இன்ஸபிரேசன். எனக்கு இரண்டு வருடம் முந்தைய செட் படிப்பில். ஆரம்பக்கல்வியை அவரது மாமா வீட்டில் மதுரையில் முடித்துவிட்டு 6 ஆம் வகுப்பில் இருந்து 6ஆவது வார்டு பள்ளியில் படிக்க வந்தார். எனக்கு ஏதாவது படிக்க வேண்டும் , அது மளிகை கடை பொட்டணம் மடித்த பேப்பர் கூட விட்டு வைப்பதில்லை. எனது வகுப்பு பாடப்புத்தகங்ககளை படித்து முடித்து விட்டு நரசிம்மனின் புத்தகங்களை படித்துக்கொண்டு இருப்பேன். அவர் புக்-கீப்பிங் எடுத்ததால் நானும் secretarial கோர்ஸ்.. அவர் பி.காம் .. நானும் following. ஆந்திரா சிமெண்ட் கம்பெனியில் பணி புரிந்தார். கடைசியாக அவரது திருமணம் பழனியில் நடந்த போது பார்த்தது. அப்புறம் ஏனோ முயற்சிகள் செய்தும் சந்திப்பு கை கூடவில்லை.
அந்த வீடுகளில் சாயந்திரம் கண்டிப்பாக இருப்பேன். ஏனென்றால் என் அம்மா அந்த ஐயர் வீட்டில் வேலை செய்யவார்கள். ஆனால் போனவுடன் டிபன் காபி எல்லாம் சூடாக உண்டு. என் தம்பி தங்கைகளை எந்த வித வேறுபாடும் இன்றி தம் குழந்தைகள் போல கவனித்து கொண்ட குடும்பம் அது. நாங்களும் அந்த வீட்டில் ஒருவராகத்தான் இருந்து இருக்கிறோம். இந்த நரசிம்மனை தேடி அன்றைய தேவகோட்டை income tax Practiioner திரு.ராகவன் அவர்கள் மகன் வாசன் வருவார். இவர் உலக நாயகன் கமலின் உறவினர் .
இப்ப நாகூர் ஆண்டவர் தர்ஹாவில் கொடி ஏற்றம் என்றால் சும்மாவே அங்கே திரியும் எங்களை பற்றி சொல்லியா தெரிய வேண்டும். கொடி ஏற்றிய நாளில் இருந்து சந்தனகூடு வைபவம் முடியும் வரை அங்கேதான் கிடை . (கிடை என்றால் ஆடு அல்லது மாடுகள் கிடைக்கும் இடம், சரியான வார்த்தை பிரயோகம் தான் என்னைப்பொறுத்தவரை ) . மணல் கொண்டு வந்து கொட்டுவார்கள். அந்த தர்ஹாவின் சுவற்றில் வெள்ளை அடித்து அழகாக சித்திரம் வரைவார்கள். அப்புறம் தினசரி இரவு பைத் என்று ஓதுவார்கள். எல்லாம் ஓதி முடித்த பின் நார்சா என்று சொல்லப்படும் சர்க்கரை, பேரிச்சம் பழம் சில நேரங்களில் தேங்காய் சாதம் வழங்கப்படும். இங்கே மணலில் எங்கள் கபடி ஆட்டம் நடக்கும்.
அப்புறம் சந்தனக்கூடு வைபவத்துக்கு முதல் நாளே அல்வா கடைகள் முளைக்கும். 'அம்மா பட்டினம் பீம புஷ்டி அல்வா' என்று கடை பெயர்கள் பேனர்களில் தொங்கும். எதோ அந்த அல்வாவை சாப்பிட்டால் உடனே உடம்பு அசுர வளர்ச்சி அடைந்து விடுவது போல படம் வரைந்து இருப்பார்கள். டின்களில் இருந்து பாளம்
பாளம் ஆக அல்வா மேஜையில் கவிழ்க்கப்பட்டிருக்கும். (எப்போது செய்த அல்வாவோ?)பெரிய சைஸ் பூந்தியும் உண்டு . இந்த அல்வாவை வெட்ட பட்டாக்கத்திகள் படார் படார் என்கிற ஓசையுடன் அல்வா மீது மோதும். இந்த சப்தம் கேட்கவும் அதை பார்க்கவுமே ஒரு கூட்டம் கூடும். சில சமயங்களில் அந்த ஏரியாவிலேயே இருப்பதால் அல்வா கடைக்காரர் நண்பர் ஆகி இருப்பார் . அவரது கடையில் நிற்பதற்கு அனுமதி அளிப்பார். ஆஹா ... சிம்மாசனமே கிடைத்து மாதிரி புளகாகிதம், பெருமை பிடி படாது.
அப்புறம் சந்தனகூடு நாளும் வந்து விடும் .
சந்தனக்கூடு விழா தேவகோட்டையில் சிறப்புகள் மிகக்கொண்டதாகும். அதை அடுத்த பகுதியில் பார்ப்போமே ...........
கருத்துகள்
கருத்துரையிடுக