அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்பகுதி: 37

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 37
24-01-2018

கண்ணேறு வந்தது நம் ண
கண்களின்  கலவிக்கு...

விண்ணேறி  விளையாடும் 
முகநூல் மூலம் நம் 
மண்ணோடு விளையாடி 
மகிழ்ந்திருந்த மனதிற்கு 
புண்ணாக இடைவெளி 
புறப்பட்டு வந்தாலும்,

புலனொடு பொருந்திய 
பொன்சொந்தம் ஆனதனால் 
தொடர்வோம் என்றும்….

யார் கண் பட்டதோ தெரியவில்லை.   கொஞ்சம் வேகமாக ஊர் சுற்றிக் கொண்டு இருந்த நாம், சிவன் கோவில் முக்குக் கடையிலேயே முடங்கி விட்டோம்.  அதற்கு முக்கிய காரணம் வருடக் கணக்கு முடிப்பு.  ஆம் . இங்கு வருட கணக்கு முடிப்பது டிசம்பர் மாதத்தில்... குழுமத்தில் நிறைய நிறுவனங்கள்.  என்ன செய்வது.  பூ தேவியை தேடித் போனால் நா தேவிக்கு பிடிக்காது போல் இருக்கிறது.   ஆமாம் இலக்குமியைத் தேடும் பொழுதில் சரஸ்வதியை விட்டு விட நேர்கிறது.  

சில குழந்தைகளை செல்லம் கொடுத்தே பெற்றவர்கள் கெடுத்து விடுவார்கள் .  அந்தக் குழந்தைகளால் முடிந்த செயலைக்  கூட பெற்றோர் தான்  ஒன்றும் சொல்லப்போவதில்லையே  என குழந்தைகள் வெட்டியாய் இருந்து விடுவார்கள்.  எனக்கு அன்பு பேராசிரியர் குமரப்பன் அவர்கள், நான்  அலுவலகப் பணியின் அடர்த்தியில் பிடியில் சிக்கி இதனிடையில் எழுத முடியாமல் மனம் வேதனைப் படும் போதெல்லாம்,  பரவாயில்லை.  நேரம் கிடைக்கும் போது  எழுது என்று என்னை ஆசுவாசப் படுத்துவார்கள்.  எனவே செல்லம் கொடுத்து சோம்பேறியான பிள்ளை இல்லை இவன்.  இனி எப்படியாவது மிச்சம் இருக்கிற தேவகோட்டையை உறவினர்களும் நண்பர்களும் ஆன  உங்களுடன் சுற்றியே  தீர வேண்டும்.  வாரம் ஒரு முறையாவது சந்தித்து விடுவோம் அன்பர்களே...

சரி, இப்போது விட்டுப்போன பயணத்தை மீண்டும் தொடர்வோம் சிவன் கோவில் ஐயர் முக்குக்கடையில் இருந்து.   நேராக நீண்ட தூரம் செல்லும் திருப்பத்தூர் சாலை தான் தேவகோட்டையின் பிரதான சாலை. தேவகோட்டையில் மேற்கே செல்லும் அனைத்து   ஊர்களுக்கும் முக்கியமாக மேலூர், மதுரை போன்ற ஊர்களை இணைக்கும் முக்கிய சாலை.  நமது பயணம் சிவன் கோவில் முக்கு கடையில் இருந்து மேற்கு நோக்கி நகர்கிறது இப்போது.

இடது புறம் அள.அரு.வளவு.  ஒரு காலத்தில் பெரிய மனிதர்களின் வரவால் நிறைந்து இருந்திருக்கக்கூடும்.  வலது புறம் M.L.M. வீடு என்று அழைக்கப்படும் மஹாலிங்கம் செட்டியார் வீடு.  பூச்செடிகளும், கொய்யா மரங்களும் அடர்ந்து இருக்கும் பெரிய காம்பௌண்ட் சுவர்களுக்குள் அடக்கமாக அமர்ந்திருக்கும் பெரிய பங்களா.  பெரிய கேட், உள்ளே நுழைந்ததும் கார் பார்க்கிங்காக போர்டிகோ.  வீட்டின் இடது புறம் கொஞ்சம் உள்ளே சென்றால் பெரிய குதிரை லாயம்.  அதன் உள்ளே கம்பீரமாக நிற்கும் பாலின் வெண்மையில் உயரமான குதிரை.   வெளியே கேட்டுக்கு அடுத்து வீட்டின் வலது புறம் திருப்பத்தூர் சாலையைப் பார்த்தபடி சிறிய கதவு பொருத்திய வாசல்.   செட்டி நாட்டுக்கே உரித்தான விதத்தில் அந்த நுழைவு வாயிலின் மேல் புறம் ஒரு அழகான தோட்டம் சுதை வேலையில், வண்ணத்தில்... கீழே, பிருந்தாவன் என எழுதப்பட்டு ஒரு பிருந்தாவனமாகவே காட்சி அளிக்கும்.  

அதிகம் ஆட்களைப் பார்க்க இயலாது. சில வேலையாட்களைத் தவிர…ஒரு கணக்குப்பிள்ளை, ஒரு தோட்டக்காரர் இது தவிர அந்த பஞ்ச கல்யாணி குதிரையை பராமரிக்க எங்கள் பள்ளிவாசல் பகுதியில் இருந்து ஒரு வயதான இசுலாமியர். அவரது முகம் இன்னும் என் நினைவில் உள்ளது. அவ்வளவு உயரமான குதிரை எப்படி இவருக்கு ஆட்டுக்குட்டி போல அடங்குகிறது என்று ஆச்சரியப்பட்டு இருக்கிறேன்.  உத்தம புத்திரன் திரைப்படத்தில் நடித்தது அந்த குதிரை என்று சொல்வார்கள்.  




அந்தக் குதிரையைப் பார்க்கும் போது  எல்லாம் உத்தம புத்திரன் திரைப்படத்தின் இரட்டை வேட சிவாஜி கணேசன் மற்றும் அவரது ஸ்டைல் நடிப்பு நினைவில் வரும்.  அன்றைய 'பாலிவுட் ' நட்சத்திரம் 'ஹெலன்' இடுப்பை வளைத்து 'யாரடி நீ மோஹினி'  என்ற பாடலில் ஆடும் காட்சி மனத்திரையில் ஓடும்.   அந்த குதிரை சும்மா சோம்பேறியாக இருந்து விடக்கூடாது என்பதற்காக இரண்டு நாட்களுக்கு ஒரு முறை எங்கள் வீட்டுக்கு பின் புறம் இருக்கும் அந்த முதியவர் அந்த குதிரையை ரேக்ளா வண்டியில் பூட்டி வட்டாணம் ரோட்டில் ஓட்டி  வருவார்.  நாலு கால்  பாய்ச்சலில் ஓடியே பழக்கப்பட்டு இருக்கும் அந்த குதிரை மிக சிரமப்பட்டு கொஞ்சம் மெதுவாக ஓடும்.


அந்த பிருந்தாவன் வீட்டுக்கு அடுத்து 'மகாலிங்க முனீஸ்வரர்'  என்று ஒரு சிறிய கோவில் இருக்கும்.  ஒரு பீடத்தில் திரிசூலம் நடப்பட்டு பீடம் முழுவதும் குங்குமம் கொட்டப்பட்டு இருக்கும்.  பய பக்தியுடன் கை கூப்பி கடந்து சென்று இருக்கிறேன். அதற்கு நேர் எதிர்புறம், தற்போது ஒரு பங்களா இருக்கிறது.  இது 40 ~50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இரும்பு பட்டறையாக இருந்தது.  'கிருஷ்ணன் அயர்ன் ஒர்க்ஸ்'  என்று சிறிய போர்டு இருக்கும்.  மலையாளிகள்.  இரும்பு கிரில், கேட் என்று அனைத்து  இரும்பு வெல்டிங் வேலைகளையும் செய்து வந்தார்கள்.  இந்த வீட்டில் இருந்து என்னுடன் 'வேணு கோபால்'  என்பவர் திருவேங்கடமுடையான் பள்ளியில் வகுப்பு தோழராக இருந்தார். ஒரு முறை இருவரும் ஒருவர் தோளை மற்றவர் பிடித்து சிவன் கோவில் முன் புறம் விளையாடிக் கொண்டு இருந்தோம்.  அவரது தலை எனது முகவாய்க்கு கீழே இருந்தது.  இன்னும் அழுத்தமாக அவரின் தோளை கீழ் நோக்கி அமுக்கிக் கொண்டு இருந்தேன், பல்லைக் கடித்துக் கொண்டு .  சட்டென்று நான் எதிர்பாராத தருணத்தில் வேணுகோபாலன் தன தலையை நிமிர்த்தினார் . அது என் முகவாயை பலமாக மோதி கடித்த பற்களுக்கு நடுவே இருந்த என் நாக்கை பதம் பார்த்து விட்டது.  நடு நாக்கு என் மேல்வாய் பற்களின் உள்ளே , இரத்த வெள்ளத்தில்.. அப்பறம் என்ன?  பட்ட காலிலே படும், கேட்ட குடியே கெடும் என்பதற்கு இணங்க, மருத்துவமனையில் வெட்டுண்ட நாக்கில் மேலும் நாலைந்து தையல் போட்டு விட்டார்கள்.  கொஞ்ச காலம் முன்பு அந்த குடும்பம் கோயம்பத்தூர்சென்று செட்டில் ஆகிவிட்டது எனக் கேள்வி.  அந்த நண்பன் வேணு கோபாலன் எங்கு இருக்கிறாரோ?

மகாலிங்க முனீஸ்வரர் கோவிலுக்கு அடுத்து ஒரு சிதிலமடைந்த கட்டிடம். அடுத்து சாத்திரத்தார் வீதி ஆரம்பித்து விடும்.  சாத்திரத்தார் வீடுதியில் முதல் வீடு அழகான மைனர் வீடு ....

மீண்டும் சந்திப்போம்.  இன்றைய பகுதி தொடர்பை தொடர ஒரு முயற்சியே.  எனவே சிறியதாக முடித்து விட்டேன்.   ஆனால் நண்பர்கள்  இன்று வரை ஏன் தொடர் வரவில்லை என்று கேட்கவில்லையே ?  ரொம்ப போர் அடிக்கிறதோ?

கருத்துகள்

  1. பழைய நினைவுகளை முறைப்படித்தி எழுதியமை மகிழ்வை தருகிறது. நன்றி

    பதிலளிநீக்கு
  2. உத்தமபுத்திரன் குதிரை உங்களை நினைத்துப்பாத்திருக்கும். முன் 🏠 இருந்தவர் இப்போது எங்கே? எண்ணும் கண்ணெனத் தகும் என்பது போல் புலனம் என்ன முகநூல் என்ன எல்லாவற்றிலும் உங்கள் எழுத்தை தேடுபவர்கள் இருக்கவே செய்வார்கள். தொடருங்கள் நாமும் தொடர்கின்றோம்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60