அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 58


அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
31-05-2018
பகுதி: 58
எப்போது எல்லாம் நெருங்கி வர நினைக்கிறோமோ அப்போது தான் அதிகமான வேலைப்பளு நமக்குள் ஒரு இடைவெளியை ஏற்படுத்தி விடுகிறது.  காலத்துடன் போராடி அதன் கட்டுக்களை மீறி உங்களைக் காண வரும் காதல் கன்னிப்பெண்ணின் மன நிலைதான் எனக்கு, இந்தத் தொடர் மூலம் உங்களைச் சந்திப்பது.  அப்பவும், 
சொல்லில் வருவது பாதி….
நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது மீதி….

எனும் மன நிலைதான்.  அவசரத்தில் எத்தனையோ செய்திகளைச் சொல்ல வந்து, மறந்து பின்னர் நினைத்தவை பல..  உதாரணத்துக்கு, சென்ற பகுதியில், பேருந்துகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வரும்போது, மனதில் நினைத்து இருந்த ஸ்டேட் பஸ் பற்றி சொல்ல மறந்து விட்டேன்.  சிவப்பு வண்ணத்தில் மாவட்டங்களை கடந்து செல்லும் மாநில அரசின் பேருந்துகள், ஸ்டேட் பஸ் என்று அழைக்கப்படும்.  விரைவு வண்டிகள்.  அப்போது மண்டபம் to கிருஷ்ணகிரி க்கு ஒரு ஸ்டேட் பஸ் நமது வட்டாணம் ரோடு வழியாகச் செல்லும். அந்தக் காலத்தில் மண்டபத்தில் இருந்து ராமேஸ்வரத்துக்கு, பேருந்து செல்லும் பாலம் கிடையாது.   பேருந்துகள், மண்டபம் வரை மட்டுமே செல்லும். 


பாம்பனையும் இராமேஸ்வரத்தையும் இணைத்தது வெள்ளையர்களால் நிர்மாணிக்கப்பட்ட பாம்பன் ரெயில் பாலம் மட்டுமே.  இடையில் சிறிய கப்பல்கள் வந்து செல்லும் போது பாலம் இரண்டாகப் பிரிந்து உயராமான கோபுரம் போல கப்பல்களின் உயர்ந்த பகுதி தடையின்றி செல்லுமாறு ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே அமைக்கப் பட்டு இருந்த பாம்பன் பாலம் ஒரு அதிசயம் அந்தக் கால கட்டத்தில்.  143 தூண்களுடன், இரண்டு கிலோ மீட்டர் நீளத்தில் தீவினை இணைக்கும் இந்தப் பாலம் நாட்டின் இரண்டாவது நீளமான கடற்பாலம்.  முதலாவது இடத்தில் இருந்தது 2.3 கிலோ மீட்டர் நீளம் உள்ள மும்பை மேற்குக் கடற்கரையின், பாந்தரா-வொர்லி, கடல் இணைப்புப் பாலம்.  1914ல் நிர்மாணிக்கப் பட்ட பாம்பன் இரயில் பாலம் உண்மையில் ஒரு அதிசயம்தான். 1870ல் பிரிட்டிஷ் நிர்வாகத்தால், சிலோன் என்றழைக்கப்பட்ட ஸ்ரீலங்காவுடனான இந்திய வர்த்தகத்தை விரிவு படுத்த இந்தப் பாலம் திட்டமிடப் பட்டது.  எனினும், பல்வேறு காரணங்களால், 1911ல் கட்டுமானப் பணி துவங்கப்பட்டு, 1914, பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி நிறைவு பெற்றது.


ஜெர்மனியின் பொறியாளரான திரு.ஸ்கெர்சர் (Scherzer) திறந்து மூடும்படியான பாலத்தின் மத்திய பாகத்தை வடிவமைத்தார்.  சராசரியாக ஒரு மாதத்திற்கு 10 அல்லது 15 சிறிய கப்பல்கள் / பெரிய படகுகள் இதன் வழியே இடை சென்றன. 1964ல் பெரிய புயலில் சிக்கி தனுஷ்கோடி என்ற தீவே மொத்தமாக ஆழிப்பேரலைகளின் ஊழித்தாண்டவத்துக்கு இரையாகி அழிந்து ஒழிந்த காலத்திலும், இந்தப் பாலம் இந்தப் புயலைத் தாக்குப் பிடித்தது. முற்றிலுமாக காணாமல் போய் இருக்க வேண்டிய இந்தப் பாலம் ஓரளவு பெரிய காயங்களுடன் தப்பித்துப் பிழைத்தது.  இதை சரி செய்ய 6 மாத காலம் ஆகலாம் என்று அனைவரும் அனுமானித்து இருந்த காலத்தில், தென்னக ரெயில்வேயைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் வெறும் 46 நாட்களிலேயே, இந்தப் பாலத்தை சரி செய்து மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார்.



1988 ல் தான் திரு ராஜிவ் காந்தி அவர்கள் மத்திய முதன்மை அமைச்சராக பொறுப்பில் இருந்த போது சாலைப்பாலம் இந்த  இரும்பு ரெயில் பாலத்துக்கு இணையாக அமைக்கப் பட்டது.  இந்த சிமெண்ட் பாலம் கட்டி முடிக்க 14 ஆண்டுகள் ஆயின.  திருமதி. இந்திரா காந்தி அம்மையார் மிகுந்த கவனத்துடன் இந்த பாலத்தின் கட்டுமானத் திட்டத்தில் ஈடுபட்டார்.

சரி, இப்ப தேவகோட்டை வந்து இறங்கிடுவோம், இந்த மண்டபம் ஸ்டேட் பஸ்ஸில் பயணித்து.  தேவகோட்டை பேருந்து நிலையத்தின் முன் குதிரை வண்டிகள் அணி வகுத்து கருப்பு, மஞ்சள் டாக்சிகளுக்குப் போட்டியாக நிற்பதை சென்ற பகுதியில் கண்டோம்.  கொஞ்சம் நினைவுகள் மழுங்கித்தான் போய் விட்டன.  இருப்பினும் கொஞ்சம் நினைவுத் தேரின் வடம் பிடித்து நிலைகளுக்குள் நிறுத்தி நினைவின் நீர் மட்டத்துக்கு வருகின்றவற்றை பகிர்கிறேன். உங்கள் பின்னூட்டங்கள் மிக அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள்.

பேருந்து  விட்டு இறங்கியதும் எதிரே வரிசையாகக் கடைகள்.  பழக்கடை, பிஸ்கட் கடைகள் என்று கிராமத்து பயணிகளைக் குறிவைத்து வரிசை கட்டி நிற்கும் கடைகள்.  இப்போது அபிராமி உணவு விடுதி, மற்றும் கடைகள் இருக்கும் நகராட்சி கட்டிடம் இருந்த இடத்தில் தான் அன்று முத்து ரேடியோஸ் இருந்தது. அதன் அருகில் பாவா ராவுத்தர் புரோட்டா ஸ்டால் மற்றும் தேனீர் விடுதி.   எதிரில், சோணைமுத்து பழக்கடை, கஜேந்திரன் புரோட்டா ஸ்டால் மற்றும் தேனீர்க்கடை.  

அப்படியே நமது வலது கைப்பக்கம் திரும்புவோம்.  எதிரில் பழனியப்ப செட்டியார் சந்து.. அனைவருக்கும் குதிரை வண்டி சந்து என்று சொன்னால் தான் தெரியும்.  அவ்வளவு குதிரை வண்டிகள் அந்த சந்தில் நிற்கும் சவாரி தேடி.. சந்து ஆரம்பிக்கும் முனையில், கருணாநிதி பெட்டிக்கடை அன்று புதிதாக இருந்த ஒரு கட்டிடத்தின் முனையில்.  (தற்போது இன்னும் புதிய கட்ட்டிடம், மாற்றம் ஒன்றே மாறாதது ).  இந்தக் கடையின் பின்புலமாக திருப்பத்தூர் சாலையைப் பார்த்தபடி மூன்று கடைகள், வலது புறம் இதே கட்டிடம் குதிரை வண்டி சந்தில் வளைந்து அந்தப்புறமும் கடைகள்.

முதல் கடையில் இரவுசேரி காளிமுத்து அண்ணன்/ அன்பு நண்பர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ‘சொ’னா என்று அழைக்கப்படும் சொர்ணலிங்கம் அவர்களின் செயல் அலுவலகம் போலச் செயல்பட்ட இடம்.  அதன் வலது புறம், என் மைத்துனர் (மனைவியின் குடும்பத்துடைய) திரு.பாலு அவர்கள் நடத்தி வந்த ‘கமலம் டெக்ஸ்டைல்ஸ்’,  அதனை அடுத்து ‘உமையாள் டிரஸ் லேண்ட்’. அதனை அடுத்து அன்பு நண்பர் தென்னீர்வயல் பெரியண்ணன் அவர்களின் அண்ணன் நடத்தி வந்த இராமனாதன் & கோ, தேவகோட்டையின் ஃபிலிப்ஸ் டீலர்.  இதை முந்தைய பகுதியிலேயே பார்த்து விட்டோம் என நினைக்கிறேன்.  இப்போது குதிரை வண்டி சந்துக்குள் நுழைவோம்.

முதலில் எக்ஸ்போ சலூன் (EXPO SALOON ). நடத்தி வந்தவர் பெயர் திரு.செல்லப்பன் என்று நினைக்கிறேன். அந்தக் காலத்திலேயே மிக எழிலுடன் சுவர் முழுக்க கண்ணடிகள் பதிக்கப்பட்டு நகரின் முக்கியமான இடத்தில் அமைந்த சலூன். இதை அடுத்து திரு.லட்சுமணன் அவர்களின் பேனாக்கடை.  இந்த லட்சுமணன் பேனாக்கடை முதலில் பேருந்து நிலையத்தின் இடது பக்கம், வீரபத்திர பிள்ளை மரக்கடை அருகில் இருந்த முனீஸ்வரர் கோவில் ஆலமரம் அருகில் இருந்தது.  பின்னர் பேருந்து நிலையத்தின் எதிரில் இந்த புதிய கட்டிடம் கட்டப்பெற்றதும்  இங்கு மாற்றிக்கொண்டது தன் இருப்பிடத்தை.  மேலும் சாலை விரிவாக்கத்துக்காக, இந்த ஆலமரம் முதலில் அகற்றப்பட்டதும் ஒரு காரணம் என நினைக்கிறேன்.

திரு.லட்சுமணன், பொது உடமை சிந்தனையில் ஊறியவர்.  சிவப்புத்துண்டுக் காரர். நல்ல உழைப்பாளி, கண்ணாடி, கைக்கடிகாரம் சரி செய்வதுடன் பேனா, இங்க், நிப்பு என பல உதிரி பாகங்கள் விற்பனையும் உண்டு.  அவர் கடையில் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், சிவாஜி இவர்களின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் விற்குப்படும்.  அரிஞர் அண்ணா அவர்களின் இறுதி ஊர்வலத்தில் அவரின் உடல்  மீது இந்திய தேசியக் கொடி போர்த்தி இருந்த கறுப்பு வெள்ளை புகைப்படத்தை 10 பைசாவுக்கு வாங்கி வெகு நாட்கள் பள்ளி நோட்டுப் புத்தகத்தில் வைத்து இருந்தேன்.  இவரது கடையில் எப்போதும் சிவப்புத் துண்டுக்காரர்கள், செங்கொடியினர் குழுமி இருப்பதைப் பார்த்து இருக்கிறேன்.

இந்தக் கட்டிடத்தின் மாடியில் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலராக இருந்த திரு.பி.ஆர்.சந்திரன் அவர்களின்  அலுவலகம்.  இந்த சந்திரன் அவர்களின் புதல்வி திருமதி. குமுதாவும் என் அன்பு மனைவியும் மிக நெருக்கமான தோழிகள். கல்லூரியில், வகுப்பில், விடுதியில் என்று, இன்றும். அதே போல இந்த குமுதாவின் கணவர் திரு.தண்ணீர்மலை அவர்களும் எனது நண்பரே.  இந்த பி.ஆர்.சந்திரன் அலுவலகத்துக்கு அருகில் ஆர்ட்டிஸ்ட் ‘அப்சரா’ பழனி அவர்களின் ஓவிய அலுவலகம்.  சுவர் விளம்பரங்கள், போர்டுகள் மிக அழகாக எழுதுபவர் இந்த ஓவியர் பழனி அவர்கள். அந்தக் காலத்தில் இன்று போல ஃபிளக்ஸ் போர்டுகள் ஏது?  தேவகோட்டையில், மோகன் ஆர்ட்ஸ், முருகு ஆர்ட்ஸ், சுந்தர் ஆர்ட்ஸ், அப்சரா ஆர்ட்ஸ் எல்லாம் அந்தக் கால பிரபலங்கள். 

இதற்கு முன் அமெரிக்கா வரை புகழ் பெற்ற ஒரு ஓவியர் தேவகோட்டையில் இருந்தார்.  அவர் இருந்த இடம் தியாகிகள் பூங்கா அருகில்.  அந்த இடத்துக்கு நமது கால்கள்  நடந்து சென்று சேரும் போது அவர் பற்றிப் பார்க்கலாம்.   இப்போது இந்தக் குதிரை வண்டிச் சந்து.  இந்த கட்டிடம் கடந்து குதிரை வண்டிச்சந்தில் இன்னும் வடக்கு நோக்கிப் பயணித்தால், வைசியமித்ரன் அச்சகம். மிகப்பழமையான அச்சகம்.  அப்புறம் அந்த இடத்தில் முன்பு காவேரி அச்சகம் இருந்தது. அதன் மாடியில் ‘பார்வதி அழகப்பா புத்தக நிலையம்’ எனும் ஒரு புத்தகக்கடை.  இதை நடத்தி வந்தவர் நகரத்தார் உயர் நிலைப்பள்ளியில நமது மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு.பத்மனாபன் அவர்களுக்குப் பின் நூலகப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட திரு.அழ.ஞானசம்பந்தன் அவர்கள் ஆவார்.

இதனை அடுத்து திரு. ரத்தினம் அவர்களின் சகோதரர் நடத்தி வந்த ‘கிருஷ்ணா காபி’ அதை அடுத்து நீலாஸ் லஞ்சு  ஹோம். இந்த நீலாஸ் லஞ்சு ஹோம் இதற்கு முன்னர் தியாகிகள் பார்க்கின் தெற்குப் புறம் இருந்தது. மிகப்பாரம்பரியம் மிக்க உணவு விடுதி. அடுத்து  மூகாம்பிகை மெஸ்.  இந்த இடத்தில் தான் தற்போது பாரத் ஸ்டேட் வங்கி இருக்கிறது என்று எனக்கு தோன்றுகிறது.

அதை அடுத்து வெற்று இடம் காம்பவுண்டுக்குள். இங்கு அப்போது முதன் முதலில் காமராஜர் காலத்து மதுவிலக்கு ரத்தான பிறகு கள்ளுக்கடைகள் திறக்கப்பட்ட போது நமது நகரின் கள்ளுக்கடை இருந்தது.  இதை அடுத்து ஒரு பெரிய காம்பவுண்ட்.  அந்த இடத்தில் 1977~78 என்று நினைக்கிறேன்.  ‘ஷோ’ கொட்டகை என்று அழைக்கப்படும் ‘கலை விழா’ இங்கு நடந்தது.  அது என்ன கலை விழா என்று கேட்க்கிறீர்களா?  ஒரு புறம் அழகான தமிழில் சொன்னால், ‘கலை விழா’ . நல்ல கலை நிகழ்ச்சிகள்,  ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடை பெறும். தினசரி இருக்காது. ஒரு 15 நாட்களுக்கு ஒரு முறை.  இந்த நாட்களில் நுழைவுக் கட்டணம் உண்டு.  அதிக பட்சம், 2 ரூபாய் அல்லது 3 ரூபாய் என்று நினைவில்.. மற்ற நாட்களில் வேறு.. மாதிரி, உள்ளே தம்போலா, பிங்க் பாங்க் பந்து என்று ஒரு நூதனமான சூதாட்டம் நடக்கும். அதனால் இது ‘ஷோ’ கொட்டகை.  இந்த கலைவிழா  கம்  ஷோ கொட்டகைக்குள் நுழைவதற்கு முன், இதே குதிரை வண்டி சந்தின் இடது புறத்தையும் பார்த்து விட்டு வந்து விடுவோமே..


மீண்டும் பேருந்து நிலையத்தின் எதிரே, இடது புறம் பார்த்தபடி ஒரு நடை பயிலுவோமா? முதலில் இந்த சந்து முனையில், அமரர், காவேரி அவர்களின் மகன் திரு.இராமலிங்கம் நடத்தி வந்த ‘கண்மணி’ சைக்கிள் கம்பெனி.  இந்த காவேரி ஐயா குடும்பம் தலைமுறயில், அமரர், காவேரி அவர்களின் மகன் திரு.இராமலிங்கம் நடத்தி வந்த ‘கண்மணி’ சைக்கிள் கம்பெனி.  இந்த காவேரி ஐயா குடும்பம் 3 தலைமுறைகளாக எங்களுக்குப் பழக்கமானது.  இவரின் இன்னொரு மகனான திரு.குமரேசன் எனது தம்பி குமார் அவர்களின் வகுப்புத் தோழன். தினமும் பள்ளிக்குச் செல்லும் முன் எங்கள் வீட்டில் ஒரு பீட் போட்டு விட்டு பின்னர் தான் பள்ளி செல்வார்.  இவர் சரஸ்வதி திரை அரங்கம் அருகில் ‘குமார் ரெடிமேட்ஸ்’ என்னும் ஒரு ஆயத்த ஆடை விற்பனை நிறுவனம் நடத்தி வந்தார்.

இதனை அடுத்து ஒரு உள் புறம் நீண்ட ஒரு கட்டிடம்.  இந்த இடத்தில் திருமூர்த்தி டிரான்ஸ்போர்ட் அலுவலகம் நடந்து வந்தது.  இதே இடத்தில் மாணிக்கம் வித்தியாசாலை பள்ளியின் நிறுவுனர் அவர்களின் மூத்த மைந்தர் திரு.மோகன் அவர்கள் ‘மாணிக்கம் பிரிண்டர்ஸ்’ என்ற அச்சகம் ஒன்றை (முன்பு மாணிக்கம் வித்தியாசாலை அருகில் இருந்த வீட்டின் ஒரு பகுதியிலேயே நடத்தி வந்தார்) கொண்டு வந்தார்.  அடுத்து ஒரு தேனீர் கடை இருந்தது போன்ற ஞாபகம்.  இதனை அடுத்து ‘வலம்புரி சைக்கிள் வாடகை நிலையம்’.  இது எங்களின் ‘பாலைவனச் சோலை’ (OASIS). பகல் பொழுதில் நண்பர்கள் அனைவரும் கூடும் இடம் இந்த சைக்கிள் கடை.  கடையின், நிர்வாகி, பணியாள், கேசியர், சர்வீஸ் டெக்னீசியன் என்று பல்வேறு வேடங்களைத் தாங்கி ஆல் இன்  ஆள் ஆக இருந்த திரு.சிலையப்பன் எங்களையும் தாங்கி வந்தார் என்றே சொல்ல வேண்டும்.

திரு.அமரர். ரூசோ
திரு.செந்தில் நாதன் (தற்சமயம் கோயம்புத்தூர்)
திரு.கண்டதேவி ‘சொ’ணா என்ற சொர்ணலிங்கம்
திரு.மீனாட்சி சுந்தரம், M.B.A. பட்டதாரி ( தற்சமயம் கோயம்புத்தூர்),
திரு.மோஹன், (அந்தக் காலத்தில் கோவை மாவட்டம் முழுவதும் மிக பிரபலமாய் இயங்கி வந்த M.R.COLOUR LAB STUDIO வின் முக்கிய நிர்வாகி)
திரு.இரவிச்சந்திரன்,  CHARTERED ACCOUNTANT


இந்த செட் எல்லாம் பகலில் இங்கு கூடும்.  பின்னர் மாலையில் சிலம்பணி ஊரணியின் படித்துறையில்.

இதை அடுத்து பழனியப்ப விலாஸ் என்று ஒரு பெரிய வீடு.  உயரமாக ஏறிச்செல்லும் படிக்கட்டுக்கள் உள்ள வீடு.   இதில் அன்பு மாப்பிள்ளை செந்தில்நாதன் அவர்களின் தந்தையார் திரு.இராமலிங்கம் அவர்கள், டிரைவர், கண்டக்டர் லைசென்ஸ் எடுத்துக் கொடுக்கும், பேருந்துகளின் இன்சூரன்ஸ், F.C. (FITNESS CERTIFICATE) எடுத்துக் கொடுக்கும்  சேவைகளை செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.  இதனை அடுத்து ஒரு குடியிருப்புக்கான வரிசை வீடுகள்.    இதை அடுத்து இருந்த இடத்தில் சாராயக்கடை இருந்தது.

இதனை அடுத்து ஒரு சிறிய மரக்கடை.  இந்த மரக்கடையை நடத்தி வந்தவர், இதற்கு முன்னர் நகரின் பிரபலமாய் நடந்து வந்த ‘வீரபத்திர பிள்ளை’ மரக்கடையில் பணி புரிந்து வந்தார்.  பின்னர் வீரபத்ரபிள்ளை மரக்கடை வணிகத்தை அந்த இடத்தில் நிறுத்திய பின்னர், இந்த இடத்தில் தனியாக கடை ஆரம்பித்தார்.  இப்படி குதிரை வண்டிச் சந்தின் இடது புறமும், வலது புறமும் ஒரு பார்வை பார்த்து விட்டோம்.  முன்னர் சொன்னது போல கொஞ்சம் நினைவுகளின் தடுமாற்றத்தோடுதான்…. ஆயின் தடம் மாறவில்லை என நம்புகிறேன். மேலதிகப்படியான அன்பு நண்பர்களின் தகவல்கள் நினைவுகளைத் தட்டி எழுப்பும்.


இப்போது,  முன்னர் வாசல்வரை வந்து பார்த்து விட்டுப் போன ‘ஷோ’ கொட்டகைக்குள் செல்வோமா?.  அந்தக் கால கட்டத்தில் காரைக்குடியில் ‘தென்னவன் கலை விழா’ என்று தேவகோட்டையின் அனைத்து வீதிகளிலும் சுவரொட்டிகள். அதில், தினசரி, நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள், ஆடல், பாடல், மேஜிக் ஷோ என்று அச்சிடப்பட்டு இருந்தது. எனக்கு இப்படிப் பட்ட நிகழ்ச்சிகள் பார்க்க வேண்டும் என்றால் சித்தப்பா பவளம் அவர்களிடம் தான் அனுமதி மற்றும் வெகுமதி வாங்க வேண்டும்.  நான் பள்ளி மாணவன்.  நான் அவரிடம் சென்று இந்த தென்னவன் கலை விழாவுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்றதும், ‘போடா’ என்று கோபப்பட்டு அனுப்பி விட்டார்.  எனக்கு அப்போது புரியவில்லை.  பிறகு சில நாட்கள் சென்ற பின்னர் தான் தெரிந்தது, அப்படி கலை விழா என்று நடப்பது சூதாட்டக் கொட்டகைகள் என்று.. இருந்தாலும் என் போன்றவர்களுக்கு சூதாட்டத் தோலைத் தூக்கி எறிந்து விட்டு கலை நிகழ்ச்சிகளான சுளை இருந்தால் போதுமே?  அப்படியே தென்னவன் கலை விழா போய் விட்டது.



இந்த நேரத்தில் தான் இந்த குதிரை வண்டிச் சந்துக்கு கதிரவன் கலை விழா வந்தது.  இங்கு ஒரு ஆஸ்தான மேஜிக் நிபுணர் இருப்பார். ஒரு முக்கிய அறிவிப்பாளர் இருப்பார். இடையிடையே சிறப்பு நிகழ்ச்சிகளாகத் திரைப் பிரபலங்கள் நடத்தும் நாடக நிகழ்ச்சிகள் இங்கு நடைபெறும். இங்கு அடிக்கடி நாடகம் நடத்தும் நடிகர், ‘கள்ள பார்ட்’ நடராசன்.  திரையில் வாய்ப்புகள் குறைந்த பல நடிகர்களுக்கு இந்த மாதிரியான ‘ஷோ’ கொட்டகைகள்தான் வாழ்வளித்தன. 


இது போன்ற சிறப்பு விருந்து நிகழ்ச்சிகள் நடக்கும்போது கூட்டம் இருக்கும். மற்ற நாட்களில் கலை விழாக் குழுவின் ஆஸ்தான மேஜிக் நிபுணர் அடிக்கடி மேடயில் தோன்றுவார்.  இரண்டொரு முறை, விளம்பரத்திற்காக, இவர் தேவகோட்டை நகரில் கண்களை கறுப்புத் துணியால் கட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் நகர் வலம் வந்தார்.  அந்த அறிவிப்பாளர் பெயர் பாபு என்று நினைக்கிறேன்.  அதிரடியாக பேசுவார், ஒலி வாங்கி (மைக்) கையில் வந்ததும் அவரது சிந்தனை அருவியாக கொட்டுவது போல் இருக்கும்.  அதிலும் அவர் தம்போலா நடத்தும் பொது எண்களைச் சொல்லி விளிப்பதே அலாதி.  தம்போலா டிக்கட்கள் கூட்டத்தில் விற்று முடிந்த பின், எண்களின்  டோக்கன்கள் அடங்கிய பையை குலுக்கி ஒவ்வொன்றாக கையில் எடுத்து அந்த எண்ணை அறிவிப்பார்.. அவற்றில் நினைவின் இன்னும் நிற்கும் சில:

2:   நம்பர் இரண்டு,  ஸ்கூட்டர் வீலு…. கோழிக்காலு….
5:   அஞ்சு… அக்கினிக்குஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, பான்ச்.. பஞ்ச பாண்டவர்….
7:   ஏழு…. லாங்க் கோட்,  அமிதாப் பச்சன்…
8   எட்டு… கெட்டவனுக்கு எட்டு

இப்படி சொல்லிக் கொண்டே போவார்.  நாங்கள், தம்போலா எல்லாம் விளையாட மாட்டோம்.  விளையாடுபவர்களை வேடிக்கை பார்ப்போம்.

இங்கு பார்த்த முக்கிய நாடகங்கள்:

நடிகவேள் M.R.ராதா அவர்களின் ‘ரத்தக்கண்ணீர்’
விஜயபுரி வீரன், C.L. ஆனந்தனின்  நாடகங்கள்
கள்ளபார்ட் நடராசன் நடித்த ‘விதி’,  ‘விமலா’ போன்ற நாடகங்கள்
கல்லுக்குள் ஈரம் படத்தில் நடித்த ‘அருணா’ இங்கு வந்து நடித்துக் கொண்டு இருந்த போதுதான், அவருக்கு இயக்குனர் பாரதி ராஜாவிடம் இருந்து அவரின் திரைப்படத்தில் நடிக்க அழைப்பு வந்தது என்பார்கள்.


அப்போது மிக உச்சத்தில் இருந்த நகைச்சுவை நடிகர் சுருளிராஜன் , இரண்டு நாடகங்கள் நடத்தினார்.


சுருளிராஜன் நாடக மேடையில் கொஞ்சம் மப்பு ஆகி இலேசாகத் தடுமாறினது போல் இருந்தது.  ஒரு ரசிகர், கீழே இருந்து, ஏய்…. சுருளி தண்ணி அடிச்சுருக்கார் பார்டோய்….. என்று கத்தினார்.  உச்சத்தில் (புகழிலா… போதையிலா…) இருந்த சுருளிக்கு ‘சுர்…’ என்று கோபம் தலைக்கேறியது.   ‘ஏண்டா… 5 ரூபாய் சம்பாதிக்கிற நீ யெல்லாம் தண்ணி அடிக்கும் போது,,,,, நாங்க அடிக்கக்கூடாதா….’ என்றார், மேடையிலேயே… தன் மானம்…. தண்ணீ மானம்… நல்ல கலைஞர் அவர்.


அங்கு தற்காலிகமாகப் பணி புரிந்தவர்கள் நமக்கு வேண்டிய இருவர்.  ஒருவர் சுப்புராஜ்.  கறுத்த தேகக். சுருளை முடி. அண்ணா தி.மு.க.வில் கையில் மைக் கொடுத்தால் விடிய விடிய பேசும் ஆற்றல்.  முகம் நிறைய டால்கம் பௌடர் பூச்சு. இவரின் சகோதரிகள் தேவகோட்டை புனித மேரி பள்ளியில் ஆசிரியைகளாகப் பணி புரிந்தனர். இவரது தம்பி, கார் ஓட்டுனராக இருந்தார்.  இந்த சுப்புராஜ், மேலே சொன்ன தம்போலா பாபுவுக்கு சப்ஸ்டிடூட்.  அவர் மாதிரியே இவரும் மைக் பிடித்து முழங்க ஆரம்பித்து விடுவார்.  பின்னர் , மருது பாண்டியர் போக்குவரத்துக் கழகத்திலும் சிறிது காலம் பணி புரிந்தார்.  அதன் பிறகு என்ன ஆனார் என்று அறியேன்.

அடுத்தவர் நமது உறவினர். தமிழ்க்கொண்டல் ஆ.குமார் அவர்களின் அன்பு அண்ணன் திரு.ஆ.ராஜேந்திரன். இவர் எங்கள் பகுதி நகராட்சி உறுப்பினர் ஆகவும் பதவி வகித்தார்.  நல்ல மனம் படைத்த நல்ல மனிதர். இவர் இந்த ஷோ கொட்டகையில் பிங்க் பாங்க் பந்து வைத்து விளையாடும் பகுதியில் பணியில் இருப்பார். எந்த எண்ணில் பெட்டிங்க் கட்டுகிறார்களோ அந்த எண்ணில் எறியப்படும் பிங்க்பாங்க் பந்து விழுந்து விட்டால் கட்டிய தொகைக்கு இரட்டிப்பாக பணம் கொடுக்க வேண்டும்.  அந்த இடத்தைச் சுற்றி மூங்கில் கட்டி பெட் கட்டுபவர்கள் உள்ளே சென்று விடாத படி அதற்கும் இவரும் இவருடைய இணையாக இன்னொருவரும் இருப்பர்.

இப்போது நான் கல்லூரியில் இரண்டாம் வருடம் வணிகவியல் மாணவன்.  செமஸ்டர் முறை.  தேர்வுகளுக்கு இரவு வேளைகளில் நண்பர்களுடன் சேர்ந்து வீதிகளின் மின் கம்ப விளக்கொளியில் தான் எங்களில் தேர்வுகளுக்கான படிப்பு நடைபெறும்.  விடிய விடியப் படித்த காலங்கள்.  இடையிடையே ஒரு மணி நேரம் அல்லது அரை மணி நேரம் இடைவெளி எடுத்துக் கொண்டு பேருந்து நிலையம் அல்லது ஒத்தக்கடை அருகில் இருக்கும் டீக்கடைகளுக்கு காலார நடந்து சென்று ஒரு தேனீர் அருந்தி, சில முறுக்கு, கடலை மிட்டாய் சாப்பிட்டு கதை பேசி மீண்டு வந்து படிக்க ஆரம்பிப்போம்.  அந்த நேரத்தில் பணத்தட்டுப்பாடு இருக்கும். பணத்தட்டுப்பாடு என்று சொல்லக்கூடாது. காசுத்தட்டுப்பாடு….

நாங்கள் தெரு விளக்குப் படிப்பின் இடையே இந்த ஷோ கொட்டகைக்கு விஜயம் செய்வொம்.  பல நேரங்களில் அருகில் இருக்கும் சரஸ்வதி திரை அரங்கில் இருந்து மீனவ நண்பன் பாடல் ஒலிப்பதைக் கேட்டுக் கொண்டே இந்த குதிரை வண்டி சந்தில் நடந்து இங்கு வந்து சேருவோம்.  வேடிக்கை பார்ப்போம் இந்த பிங்க்பாங்க் பந்து விளையாடும் இடத்தில்.  நம்ம இராஜேந்திரன் அவர்கள், பெட்டிங்கில் வென்றவர்களுக்கு பணம் வழங்கும் போது அங்கு நிற்கும் எனக்கும் கொடுப்பார். நாங்கள் எங்கே பெட் கட்டினோம்.  அந்த காசை வாங்கிய படியே வந்து விடுவோம் கோஷ்டியாய் தேனீர் அருந்த…..

இன்னும் தொடர்வோம்…….

கருத்துகள்

  1. Wonderful sharing Mama, it gives an opportunity to visualise the Devakottai living style in early 70s and 80s and its also giving me to understand your excellent narrative skills which is an art, with deep knowledge in Tami and your thirst and love towards writing in Tamil. I and family enjoy your writing and we wish you a long life to continue your passion in writing which can be a boon for upcoming generation to get to know our culture and rural healthy living style. Thank you and appreciate your service.

    Best Regards,
    Raja Saravanan and family.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60