அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
27-07-2018
பகுதி: 60
அன்பு நண்பர்களே... ..
வரலாற்று உணர்வு வெள்ளையர்களுக்கு இருப்பதைப் போல இந்தியர்களுக்கு, அதிலும்
தமிழர்களுக்குக் கிடையாது. ''ஒவ்வொரு மனிதனும் பல பத்தாண்டுகள்வாழ்கிறான். அவன் தன்னைப் பற்றி - தன் குடும்பத்தைப் பற்றி - தன் முன்னோரைப் பற்றி - தான் அறிந்தவற்றைப் பற்றி செய்திகளை ஒரு வரலாறாக பதிவு செய்துவைக்க வேண்டும்என்கிற வரலாற்று உணர்வு தமிழனுக்கு வரவேண்டும்” என்பதை நாடோறும் வற்புறுத்தியநாடறிந்த நல்லறிஞர் சுரதா என்று வே. ஆனைமுத்து
அவர்கள் குறிப்பிடுவார்.
சென்ற
தொடரில் தியாகிகள் பூங்காவின் தெற்குப் பகுதியில் நின்று இருந்தோம். இந்தத் தொடர் நமது
சந்ததியினருக்கு ஒரு 50, 60 வருடங்களுக்குப் பின் ஒரு வரலாற்று ஆவணமாக
அமைய வேண்டும் என்பதே நமது அனைவரின் அவா. இதை மனதில் கொண்டு முடிந்தவரை நிகழ்வுகளின்
நிஜத்தன்மையை சரி பார்த்துக் கொண்டுதான் எழுதுகிறோம். இதில் நமது அனைவரின் பங்கும் இருக்கிறது. அவ்வப்போது விபரம்
அறிந்தவர்கள் தகவல்களை சரி பார்த்து பின்னூட்டங்கள் அனுப்ப வேண்டும் என்று
மீண்டும் ஒரு முறை வேண்டுகிறேன். சென்ற பகுதியினைப் படித்து விட்டு, ஐயா கேயெம்மெஸ் அவர்களின் அன்புப்
புதல்வன் எம் அன்புத்தம்பி, தெய்வசிகாமணி அவர்கள் சில தகவலகளை அனுப்பி
இருந்தார்.
ஐயா கேயெம்மெஸ்
அதாவது சஞ்சீவி மெடிகல்ஸ்
என்ற பெயரில் மருந்துக் கடை அமைவதற்கு முன்பு, நாராயணா மெடிகல்ஸ்
இருந்தததாக எழுதி இருந்தேன். ஆயின், நாராயணா மெடிகல்ஸ்க்கு
பின்,
சஞ்சீவி
மெடிகல்ஸ்க்கு முன் இடையில் SP.V. மெடிகல்ஸ் இருந்தது.. ஆம்.. நினைவுக்கு வந்து
விட்டது. திரு.E.L.சுப்பையா செட்டியார்
அவர்கள் நடத்தி வந்தார்கள்.
இதனை
அடுத்து தேவகோட்டையின் மற்றொரு பிரபல மருத்துவரான டாக்டர்.எபினேசர் மனோகர்
அவர்களின் கிளினிக். டாக்டர் மனோகரன் மிகவும் கைராசியான வைத்தியர்.
திருவேங்கடமுடையான் பள்ளியில் (தற்போது சேர்மன் மாணிக்க வாசகம் நடு நிலைப் பள்ளி)
எமது மதிப்பிற்குரிய ஆசிரியர், ஆசிரியையான திருமதி மற்றும் திரு. சற்குணம்
அவர்களின் ஆசை மகன்,எபி மனோகர் (கலவைச் சோறு, நிறுவுனர், ஆசிரியர்) அவர்கள், இந்த கைராசிக் கார
மருத்துவர் மனோகர் அவர்களின் மருத்துவ மேற்பார்வையில் நீண்டகாலமாகத் தவமாய்
இருந்து பிறந்தவர். அதனால்தான், நன்றி மறவாத எம்
ஆசிரியர்கள்,
அந்த
மருத்துவரின் பெயர் விளங்க தம் புதல்வனுக்கு எபி.மனோகர் என்றே பெயரிட்டார்கள். அவர் பெயர் விளங்க
வாழ்வாங்கு வாழ்க என வாழ்த்துகிறோம்.
அடுத்து
அன்றைய நாளில் பூங்கா அருகில் இருந்த பிரபலமான ஜவுளிக்கடை, சாரதாஸ் ஜவுளி ஹால். பொதுவாக அன்றைய நாளில், வெள்ளையன் ஊரணியின்
வடக்கு மற்றும் தெற்கு வீதிகள் தான், தேவகோட்டையின் தி.நகர். சுற்று வட்டார
கிராமங்களில் துணி எடுக்க வேண்டுமா.. ஸ்டெடி, ரெடி, கோ… வெள்ள ஊரணிக்கு…
அப்டித்தான். அதை மீறி இந்தப்
பகுதியில் வெற்றி கரமாக நடந்து வந்த ஜவுளிக்கடை, சாரதாஸ்.
இதை
அடுத்து,
பகவதி
விலாஸ் மிலிடேரி ஹோட்டல். திரு.விஸ்வநாதன் நாயர் இதனை நடத்தி
வந்தார். மலையாள பகவதியின் பெயர்
கொண்டு இருந்தாலும். செட்டி நாட்டு வாசனையுடன், மசாலா மணக்க மணக்க
அசைவம். சாப்பிட்டவர்கள், அசைவோம்… என்று அசைவம்
விரும்பி மீண்டும்..மீண்டும் உண்ணத் தூண்டும்… தூண்டும்.. உணவு விடுதி. அந்தக் கால
கட்டத்தில் சிறுவனாக இந்த மிலிடேரி உணவு விடுதியைத் தாண்டி செல்லும் வேளைகளில்
நினைத்தது உண்டு… ஏன் கடையில் மிலிட்ரி என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்? மிலிட்ரியில் பணி
புரிபவர்கள் மட்டும் சாப்பிட அனுமதியோ என்று… அட .. ஆமாங்க….இந்த விஸ்வநாதன் நாயர், பல்வேறு பொதுநலப்
போராட்டங்களில் முன்னின்று பங்கு பெறுபவர்.
அடுத்து
வருவதுதான்,
முன்பு
பார்த்த புத்தகப்பண்ணைக். புத்தகப்பண்ணை நடத்தி
வந்த திரு.மீனாட்சி சுந்தரம் அவர்கள் தனது நிறுவனத்தை தற்போது நடத்திக் கொண்டு
இருப்பவருக்கு விற்று விட்டார். இது பின்னாளில் செல்வி
கடையாக மாறியது. இதை அடுத்து சூடிக்கொடுத்தாள் ஹோட்டல். இந்தக் கட்டிடத்தை
திரு.சின்ன அருணாசலம் அவர்கள் விலைக்கு வாங்கி, வணிக வளாகம் மற்றும்
லாட்ஜ் கட்டி தன் மகனிடம் நிர்வாகம் வழங்கி இருக்கிறார். இதன் காரணமாக
புத்தகப்பண்ணை சிலம்பணி சந்நிதிக்கு மாற்றப்பட்டு இயங்கி வருகிறது.
ஓரளவு
தியாகிகள் பூங்கா தெற்குத்தெருவைப் பார்த்துவிட்டு அடுத்த முனை வந்து விட்டோம்.
தியாகிகள் சாலை போகும் முன்பு, பூங்கா வடக்குப் பகுதியான, திருப்பத்தூர் சாலைக்கும்
போகும் முன்பு இந்த தியாகிகள் பூங்காவின் வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டிப்
பார்த்து விடுவோம்.
நமது
தேசத்தில் தந்திரம் மிக்கவர்கள், கதை விடுவதில் தனித்திறம் படைத்தவர்களின்
கைகளில் நாட்டின் சரித்திரம் எழுதும் பணி கொடுக்கப் பட்டு இருக்கிறது. நமது நகரின் சரித்திரத்தை
இருட்டடித்து,
நமது
குழந்தைகளை சந்திரகுப்த மௌரிரியர், கில்ஜி வமிசம், மொகலாயர், டெல்லி பாதுஷாக்கள், அதன் பின் வந்த ஆங்கிலேய
கவர்னர் ஜெனரல்கள் வரை மனப்பாடம் செய்து, ஒரு நான்கு தலைமுறைக்கும் மேலாக பாரதத்தின்
சரித்திரம் என்றால், டெல்லியைச் சுற்றித்தான் என்பது போல ஆக்கி
விட்டோம். என்ன செய்வது? பாடத்திட்டம்
வகுப்பவர்கள்,
அந்தந்த
பகுதியின் சரித்திரம், சான்றுகளோடு மாணவர்களுக்கு இளம் வயதில்
மனதில் பதிக்க விடாமல் அன்னிய சரித்திரத்தை அடி மனதில் விதைத்து விட்டார்கள்.
உலகெங்கிலும் எழுதப்பட்டுள்ள வரலாறு ஆளும் வர்க்க வரலாறாகவேஉள்ளது. அந்த வரலாறுகூட தமிழ் நாட்டுக்கு இல்லை. கல்வெட்டுகளையும் இலக்கியங்களையும் தொல்பொருள் ஆராய்ச்சியையும் வைத்துக் கொண்டு தமிழக வரலாறுஎழுதப்பட்டுள்ளது. பெயரளவுக்கு கொஞ்சம்
பல்லவர்,
பாண்டியர், சோழர் என்று ஒரு
மேலெழுந்த வாரியாக தமிழக வரலாற்றை பட்டும் படாமல் பாடத்திட்டத்தில் வைத்து விட்டு
இடைக்கால வரலாறு இருட்டில் புதைக்கப்ப்ட்டு விட்டது.
சுதந்திரப்
போராட்டக் களத்தில் சிவகங்கைச் சீமையில் உலகின் முதல் மனித வெடிகுண்டாக மாறித் தன்
உயிரை மாய்த்துக் கொண்ட பெண் சிங்கம், குயிலியின் உண்மை வரலாறு, இதே சிவகங்கை
மாவட்டத்தின் குடிகளாக, மண்ணின் பயிர்களான நம் மக்களில் எத்தனை
பேருக்குத் தெரியும்? முதல் தற்கொலைப் போராளியான குயிலி வீரமங்கை
வேலு நாச்சியாரின் பாசத்தில் உருகி வளர்ந்தவள் வீரத்தாய் குயிலி. பிரான்மலையில்
இருந்து வெள்ளச்சி நாச்சியாரை, ஆங்கிலேயர்கள்
சிறைப்பிடித்து வேலுநாச்சியாரை வீழ்த்துவது என்பது ஆங்கிலேயர்களின் திட்டம்.
அதன்படி வெள்ளச்சி நாச்சியாரை சிறைப்பிடித்துக்கொண்டு, காட்டுவழியாக
ஆங்கிலேயர்கள் வரும் செய்தி குயிலிக்கும், நாச்சியாருக்கும்
கிடைத்தது. உடனே இருவரும் காட்டுக்குள் விரைந்தார்கள். நடுக்காட்டில் நுழைந்ததும்
ஆங்கிலேய சிப்பாய் வேலுநாச்சியாரை நோக்கி துப்பாக்கியை நீட்ட, உடனே
குயிலி கொடுவாளைக்கொண்டு அவன் கையை வெட்டினாள். அடுத்த கணமே வேலுநாச்சியாரின் வாள், அந்த
சிப்பாய் தலையைச் சீவியது. நாச்சியாரை பாதுகாப்பாக மீட்டு, விருப்பாச்சி
அரண்மனைக்குக் கொண்டு வந்தனர். வேலுநாச்சியார் சிவகங்கைச் சீமை மக்களுக்கும்
ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுத்தார். மக்கள் படை, திப்பு
சுல்தான் படை, கோபால் நாயக்கர் படை, மருது
சகோதர்கள் படை, குயிலி தலைமையில்
வாள்படை வளரி படை, கவன்கற்படை, வெட்டரிவாள்
படை, வீச்சரிவாள்படை, சக்கந்தி
வைரவன்படை, பெரியஉடையத்தேவர் படை என அலைகடலென
விருப்பாச்சிக்கு விரைந்தனர்.
வீச்சரிவாள்களயும், வளரிகளயும் ஆக்ரோசமாய் நுழைந்து
மூர்க்கமாய் போரிட்டு கடைசியில் பரங்கியரின் படைபலம் முன் தோற்றுப் பின் வாங்க
வேண்டிய நிலையைல் இருந்தது. ஆங்கிலேயரின் அதி நவீன ஆயுதங்களான துப்பாக்கிகளும், போர்க் கருவிகளும், வெடி மருந்துகளுக்கும்
முன்னால் நமது தமிழர் படையின் வாளும் வேலும் பயமறியாத திட மனமும் பயனற்றுப் போய்
விடும் என்று யூகித்தாள் மதி நிறை மறத்தி.
1780ம் ஆண்டு செப்டம்பர் 30. வேலு நாச்சியார்
தலைமையில் பெண்கள் படைப்பிரிவு ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த அரண்மனைக்குள்
இருந்த ராஜ ராஜேஸ்வரி கோவிலுக்கு நவராத்திரி கால விஜயதசமி நாள் அன்று பூஜை செய்வது
போல் மாலைகளையும், மலர்களையும், பழங்களையும் கடகாப்பெட்டி, பழக்கூடைகள்
மற்றும் பெரியமாலைகளுக்குள் சூரிக்கத்தி, கட்டாரி
போன்ற ஆயதங்களை மறைத்துக்கொண்டு சென்றார்கள் அரண்மனைக்குள்
ஆங்கிலேயப் படைகளுடன் புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் உள்ளுர்
ஆங்கிலப் படையினரும் இருந்தார்கள். அந்தப் படையில் தமிழர்கள்தான் அதிகம் என்பதால்
ஆயுதபூஜை அன்று ஆயுதங்களை வைத்து சாமி கும்பிடுவது மரபு. ஆங்கிலேய ஆயுதக்கிடங்கு தேவைக்கும் மேலான
ஆயுத,
வெடி
மருந்துக் குவியல்களுடன் கடுமையான காவலில் இருந்தது. அப்போது சட்டென ஒரு உருவம் எரிநெய்யை
உடலில் ஊற்றிக்கொண்டு ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கில் குதித்தது. அப்படியே அந்த
ஆயுதக்கிடங்கு வெடித்துச் சிதற அந்த உருவமும் வெடித்து சிதறியது. ஆங்கிலேயர்கள்
செய்வதறியாது திகைத்து நின்றனர். ஆங்கிலேயரின் அதி நவீன ஆயுதங்கள் முழுதும்
அழிக்கப்பட்டது அதனால் ஆங்கிலேயர் பெரும் தோல்வியை சந்திக்க நேரிட்டது.
ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கில் வெடித்துச் சிதறிய அந்த உருவம் தான் தியாக
வீரத்திருமகள் குயிலி.
இந்தக் குயிலியின் கதையையே கட்டுக்கதை என்று சொல்வாரும் உண்டு. எது எப்படி இருந்த போதும், நமது மக்களின் வீர மகளாகக் காட்டப்படும் திருமகளை வணங்குவோம்.
மேற்கண்ட இந்தப் பகுதியை நமது தமிழ்நாட்டு அரசின்
பாடத்திட்டத்தில் வரலாற்றுப் பாடமாக வைத்து இருந்து இருந்தால் எனது தாய்த்தமிழ்
நாட்டு சிறுமியின் மீது எந்த மனித மிருகமாவது இன்று நடப்பது போல் பாலியல் வன்
கொடுமை புரிந்து இருக்க முடியுமா? புலியாகப்
பாய்ந்து இருந்திருப்பாள். அதை விடுத்து தலைமுறைகளையே அடிமை
இரத்தம் ஓடும் படி செய்து விட்டது யார் குற்றம் என்பது நாம் பெருமூச்சு விட்டுக்கொண்டே
நினைத்துப் பார்க்க வேண்டிய ஒன்றாகும். உலகில் தற்கொடைப் போராளிகளுக்கான விதை தமிழ்மண்ணில்தான் விதைக்கப்பட்டது. பெண்கள் என்றால் நுகர்வுப் பொருளாகக் கருதும் இன்றைய தலைமுறைக்குகுயிலியின் வரலாறு புதிய பார்வையை வழங்கட்டும்.
இதே போல பாரத தேசத்தின் விடுதலைப் போரில் நமது
தேவகோட்டைப் பகுதியைச் சேர்ந்த வீரமறவர்கள் இந்தியத் துணைக்கண்டத்தின் எந்தப்
பகுதியினரின் வீரத்துக்கும் மானத்துக்கும் எள்ளளவும், இம்மியளவும்
எந்த அளவும் குறைந்தவர்கள் அல்ல. என்ன….
நம் பகுதியினரின் வீரவரலாறு நாடறியப்படாமல் ஆழக்குழி தோண்டிப் புதைக்கப்பட்டு
விட்டது. விடுதலைப்
போராட்டத்தில் தம் இன்னுயிர் ஈந்த எத்தனையோ தியாக ஆத்மாக்களின் அளப்பரிய
தியாகத்துக்கு இந்த தியாகிகள் பூங்காவின் நினைவுத்தூண் மட்டும் மௌன சாட்சியாக
நிற்கிறது வெறும் கான்கிரீட் தூணாக, இன்றைய
இரக்கமற்ற, தியாகம் என்றால் என்னவென்றே
அறியாத அரசியல் வியாதிகள் போல…
இன்றைக்கு ஜாதி அரசியல், வாக்கு
வங்கியை மட்டுமே குறிவைத்து அரசியல் வியாபாரிகளால் உரமிட்டு வளர்க்கப்பட்டு வருவது
போல, அன்றைக்கும்
வெள்ளையர்களால் வகுப்புப் பேதம் நன்றாகவே வளர்க்கப்பட்டு வந்தது. பிரித்தாளும்
சூழ்ச்சி. எனவே
சமூகத்தில் சாதி வேறுபாடுகள் தலை விரித்து ஆடின. அந்த நேரத்தில், சுதந்திரத்தை’
சுவாசிக்க வைத்த அற்புத அகிம்சைப் போராளி கா்ந்திக்கும், தமிழ்நாட்டிற்கும்
நிறைய தொடர்பு உண்டு. மகாத்மா
விடுதலைப் போருக்கு வித்திட்ட மகாத்மா தமிழகத்திற்கு 17 முறை
வந்து இருக்கிறர். வகுப்பு பேதம் களையப்பட்டு ஒற்றுமை உண்டானால் தான் புதிய பாரதம்
பிறக்கும் என்று காந்தி மகான் நம்பினார். (பாவம், அவருக்குத்
தெரியாது, சாதி எவ்வளவு பெரிய மகா
சக்தி, எப்படியெல்லாம் அரசியல்
வாதிகளால், மக்களை ஏமாற்றப்
பயன்படுத்தம் படும் என்று??) அதனால், சாதி வேற்றுமை
களைய வேண்டும் என்பதற்காகவே 1934 ஆம்
வருடம் ஜனவரி மாதம் தென்னக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
பூச்சி என்ற பட்டியல் வகுப்பை சேர்ந்தவர்
சாதிக்கலவரத்தால் கொல்லப்பட்ட நேரம் அது. 1934ல்
தலித்துகள் மேலாடை அணிவது அவ்வளவு பெரிய சமூகக்
குற்றமாக மேல் தட்டு மக்கள் நடந்து கொண்ட அவலமான கால கட்டம். காந்தி
தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தில் ஒரு தலித்
இறந்தமைக்கு வருந்தம் தெரிவிப்பதற்காக வந்தார், அப்போது
தலித் மற்றும் நாட்டார் இனத்தைச் சேர்ந்த மக்களிடம், தலித்துகள்
மேலாடை அணிவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். இவர் வந்து 75 ஆண்டுகள்
ஆனதை ஒட்டி, அவர் தங்கியிருந்த சரஸ்வதி
வாசக சாலையில் ஜனவரி 2009ஆம்
ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
பயணத்துக்கான உல்லாச வண்டிகள், நல்ல
சாலைகள் இல்லாத அந்த நாட்களிலேயே ஒரு நாளைக்குக் குறைந்த பட்சம் 150 மைல்களுக்கும்
மேலாகப் பயணம் செய்து, இந்தியாவின்
எல்லாப் பகுதிகளிலும் விடுதலை வேட்கையைத் தூண்டியது மட்டும் இன்றி சாதி
வேறுபாடுகளைக் களைய முயற்சி மேற்கொண்டார். அந்த நேரத்தில் நமது
பகுதிக்கு மட்டும் அவர் கலந்து கொண்ட நிகழ்வுகளின் நாட்குறிப்பு கீழே கொடுக்கப்
பட்டுள்ளது.
1934, January 23
Gave interview to
Members of Self Respect Party at Cape Comorin, Visited Nanganeri and Velliyur.
Reached Tinnevelly.
1934, January 24
At public meeting at
Tinnevelly and Tuticorin, exhorted people to donate generously for Bihar
Earthquake Relief Fund and to banish untouchability. Visited Palamcottah and
Tenkasi.
1934, January 25
Spoke at public
meeting, Rajapalayam. Visited Tuticorin, Ettaiyapuram, Koilpatti, Sankarankoil,
Sivakasi, Virudhunagar, Kalligudi.
1934, January 26
At Madura, appealed to
merchants for Bihar Earth-quake Relief. Spoke at Municipal Council meeting,
public meeting, women’s meeting, Hindi Pracharak Sabha and at meeting of
labourers.
1934, January 27
Appealed to Karaikudi
Municipal Council for better treatment of Harijans.
1934, January 27
Spoke at public
meeting at Karaikudi and Devakottah and exhorted people to contribute
generously for Bihar Earth-quake Relief Fund. Visited Therukutheru, Kilaour,
Chittanoor, Tiruppattur, Paganeri, Sivaganga and Manamadurai.
1934, January 28
Laid foundation stone
for Harijan School, Devakottah. Spoke at Harijan Cheri, Chitthanur.
1934, January 28
Had talks with Nattars
at Devacottah.
1934, January 28
Gave interview to The
Hindu on Nattar-Harijan problem.
இந்த ஜனவரி 28 அன்று
அவரும், கண்டதேவித் தேர் வடம்
பிடிக்கும் பிரச்சனை பற்றி நாட்டார்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இன்று
வரை அந்தப் பிரச்சனை எந்த அளவில் இருக்கிறது என்பதனை அனைவரும் அறிவோம். எப்படியோ
தேசபக்தர்கள் பலர் தம் உடல், பொருள், ஆவி
இவற்றைத் துறந்து தேச நலமே தம் நலம் என்று தேவகோட்டையில் இருந்த காலகட்டம் அது.இப்படி
காந்தி, இராஜாஜி முதலிய
தேசத்தலைவர்களால் ஏற்றி வைக்கப்பட்ட அக்கினி குஞ்சு சிறகடித்து பறந்த வானம் நமது தேவகோட்டையில் மக்கள் மனது.
தற்போது மஹாத்மா காந்தியை கொஞ்சம் மறந்து விட்டு இதே கால
கட்டத்தில் நம்ம ஊர் பக்கம் வருவோம்.
சின்ன அண்ணாமலையை ஓரளவு நமது பகுதி மக்கள் அறிந்திருப்பீர்கள். தெரியாதவர்களுக்காக சின்ன அண்ணாமலை பற்றி ஒரு
சிறு அறிமுகம் செய்ய ஆசை.
1920ல், சிறுவயலில்
பிறந்தவர சின்ன அண்ணாமலை. பின்னர்
தேவகோட்டைக்குப் பிள்ளை வந்து விட்டார்.
அதாவது சுவீகரிக்கப்பட்டு விட்டார். சிறு பாலகனாக இருந்த காலத்தில் தனது
இல்லத்துக்கே வந்த காந்தி மகானுடன் இக்கப்பட்டு, அதே
நினைவில் விடுதலை வேட்கையின் வெப்பத்திலியே
வளர்ந்தவர். சிறுவயலில் நாகப்பனாக
இருந்தவர் தேவகோட்டையில் அண்ணாமலை ஆனார்.
தனது பத்தாவது வயதிலேயே, தனது ஊரிலேயே, தனது உறவினர் வீட்டிலேயே,
மஹாத்மா காந்தியைத் தரிசிப்பதற்கு ஒருவர் எத்தனை கொடுத்து வைத்திருக்க வேண்டும் ?
இந்த பாக்கியம் பெற்றவர்
காரைக்குடியைச் சேர்ந்த சின்ன அண்ணாமலைதான்.. இளைஞன் அண்ணாமலையின் சிறிய தாயார் உமையாள் ஆச்சி, ராய.சொக்கலிங்கம் அவர்களின் துணைவியார்.
1934ல் மஹாத்மா காரைக்குடி வந்த போது இந்த நிகழ்ச்சி நடந்தது. இது
மட்டுமல்ல, பிற்காலத்திலே, காந்தியின் ‘ஹரிஜன்’ பத்திரிகையை தமிழில் வெளியிட
அண்ணலிடமே அனுமதி பெற்றவரும் கூட. இவருக்குச் சின்ன அண்ணாமலை என்ற பெயர் சூட்டியது
வேறு யாருமல்ல, இராஜாஜி அவர்களேதான்.
காரைக்குடி சா.கணேசனின் உறவினர்
இவர் – சின்னஞ்சிறு பிராயத்திலேயே தேசத்தைப் பற்றியும் காந்திஜியைப் பற்றியும்
நன்கறிந்து, தேசப்பணிகளிலே தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் அண்ணாமலை.
13 வயதில் சுதந்திர போராட்ட
களத்தில் குதித்தார். கல்கியின் தலையங்கத்த்தைப் படித்து மனப்பாடம் செய்து
அப்படியே மேடையில் முழங்குவாராம் சிறு வயதில்.
சிலருக்கு பேச்சாற்றல் இருக்கும், சிலருக்கு
எழுத்தாற்றல் இருக்கும். இரண்டையும் ஒருங்கு கொண்ட இளைஞராக இலங்கியவர் சின்ன
அண்ணாமலை. பள்ளி செல்லும் காலத்தில்
இராஜாஜியின் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டதனால், பள்ளிப்
படிப்பைத் தொடர முடியாமல் போனது. அதனால், அப்போது
மலேயாவில், பினாங்கில் இருந்த தாய்
மாமாவுடன் இருந்து அங்கேயே படிப்பைத் தொடரட்டும் என்று அனுப்பி வைக்கப்பட்டார்.
ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா
இருக்குமா என்ன?
அங்கு இரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் மதுவுக்கு அடிமையாகி
குடும்பங்கள் வீணாவத்தைக் கண்டு அங்குள்ள பெண்களைத் திரட்டி கள்ளுக்கடைகளுக்கு
எதிராகப் போராடினார். கள்ளுக்கடைகளுக்கு
தீ வைத்தனர். மலாய் அரசாங்கம் வேடிக்கை பார்த்துக் கொண்டு
இருக்குமா? ஒரு மாத காலத்துக்குள்
மலாயாவை விட்டு வெளியேறி ஆக வேண்டும் என்ற கண்டிப்பான நிபந்தனையுடன் அங்கிருந்து
தாயகம் அனுப்பி விடப்பட்டார்.
அண்ணாமலை கல்கியைச் சந்தித்ததே ஒரு சுவாரசியமான
கதை. தேவகோட்டையில் ராஜாஜி வந்திருந்த போது ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது.
அண்ணாமலை அக்கூட்டத்தில் ஒரு பேச்சாளர். அண்மையில் கல்கி எழுதி ஆனந்தவிகடனில்
தலையங்கமாக வெளி வந்த ராஜாஜி பற்றிய விஷயங்களை நன்றாகவே மனப்பாடம் செய்திருந்தார்
அண்ணாமலை. முதலில் மேடை நடுக்கம் தான் – ராஜாஜி ஊக்கிவிடவும் கணீரென்ற குரலில் தான்
பேச வேண்டியதை தைரியமாக எடுத்துரைத்தார். ராஜாஜி ஆசிகள் வழங்கி கூடவே “நன்றாக
மனப்பாடம் செய்திருக்கிறாய்” என்றார்.
பேச்சு
முடிந்தவுடன் மேடையில் பின்புறம் அமர்ந்தார் அண்ணாமலை. அருகில் இருந்த ஒருவர்
‘ரொம்ப நன்றாகப் பேசினீர்கள் – இவ்வளவு விஷயம் எங்கு படித்தீர்கள்’ என்று
கேட்டார். அவரிடம் உண்மையை மறைக்கக் கூடாதென்று ”ஆனந்தவிகடனில்” என்றார் அண்ணாமலை.
யார் எழுதியது தெரியுமா என்றார் அந்த மனிதர். கல்கி என்றார் அண்ணாமலை. அவரைத்
தெரியுமா? தெரியாது, நான் பார்த்ததில்லை. பார்த்தால் என்ன செய்வீர்கள்?
சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய்வேன். “அப்படியானால் என்னையே நமஸ்காரம்
பண்ணுங்க” என்றார். ஏன் என்று கேட்டார் அண்ணமலை. நான்தான் அந்தக் கல்கி என்று
பதில் வந்தது (அண்ணாமலை எழுதிய “சொன்னால்
நம்ப மாட்டீர்கள்” என்ற புத்தகத்திலிருந்து)
தன்
வாழ்வில் அனேக தேசபக்தர்களைச் சந்தித்துப் பழகும் பாக்கியம் பெற்றவர் சின்ன
அண்ணாமலை.
சிவாஜி
ரசிகர் மன்றம் ஆரம்பித்ததில் ஒரு முக்கியமான நோக்கம் இருந்தது.. 1967 தேர்தலில்
காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது, தொண்டர்கள் ஏமாற்றமும் சோர்வும் அடைந்திருந்தனர்.
அப்போது தமிழ் நாடு முழுவதும் இளைஞர்கள் பலர் சிவாஜிக்கென்று அனேக ரசிக மன்றங்கள்
வைத்திருக்கின்றனர், இவர்கள் எல்லோரையும் ஒன்று சேர்த்தால் காங்கிரசுக்குப் புதிய
பலம் கொண்டு வரலாம் என்று முடிவு செய்தனர்.
இதன் காரணமாகவேதான் 1969 ஆகஸ்டு மாதம் ” அகில
இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம்” என்ற அமைப்பு உருவாகியது. அதன் முதல் பேரவை அக்டோபர் முதல் தேதியன்று சென்னையில் எஸ்.ஐ.ஏ.ஏ. திடலில்
நடைபெற்றது. சரித்திரம் காணாத ஊர்வலமும், தென்னாட்டு, வடனாட்டு நட்சத்திரங்களும்,
அலை மோதினர். காங்கிரசைப் பலப்படுத்த அண்ணாமலை மறைமுகமாகச் செய்த இந்த ஏற்பாடு
காங்கிரஸ் தலைவர்களுக்கு நாட்டமில்லாததால் அதன் இலக்கை எட்டிப் பார்க்க
முடியவில்லை. அண்ணாமலை ஏழு வருடங்கள் இந்த அமைப்பின் தலைவராக இருந்தார்.
நிறைய
நூல்கள் இவர் எழுதியும், அந்த நூல்களின் விவரங்கள் கிடைக்கவில்லை — இவர் எழுதிய
முதல் நூல் “சீனத்துச் சிங்காரி” நினைவுக்கு வரும் மற்ற
நூல்கள் – தியாகச் சுடர், சொன்னால் நம்ப மாட்டீர்கள்,
கண்டறியாதன கண்டேன், காணக் கண் கோடி வேண்டும் என்பவை.
(தகவல்
உபயம் – சொன்னால் நம்ப மாட்டீர்கள்! – சின்ன அண்ணாமலை – குமரன் பதிப்பகம்}
1942ல் 'வெள்ளையனே
வெளியேறு' இயக்கம் தீவிரமாக
இந்தியா முழுவதும் பரவி மக்கள் மனதில்
கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தது.
நமது தேவகோட்டையில் தியாக சுடர்கள், இந்த
தீயில், அக்கினிப் பிரவேசம்
மேற்கொண்டார்கள்.
இதே நேரம், வானம்
பொய்த்து கடுமையான பஞ்சம் வேறு. நாட்டின் மற்ற பகுதிகளில் வெள்ளம் வந்தால் அந்த
சமயம் மட்டுமே நல்ல வெள்ளாமை பார்க்கிற இராமநாதபுரம் மாவட்டம் பற்றி சொல்ல
வேண்டுமா? வீட்டில்
அடுப்பு எரிக்க வழி செய்ய முடியாத ஆண் மக்கள்.
குடும்பத்தலைவன் கொண்டு வராவிட்டால் குலை எரிய பட்டினி கிடக்கிற
குடும்பத்தின் ஆன்மாக்கள். இதிலே ஊருக்கு
ஊர் அரசியல் போராட்டம். எங்கும் அமைதி இன்மை.
தன் நாற்காலியைக் காப்பாற்றுவதிலேயே கவனம் செலுத்தும் அரசு
மக்கள் பற்றி எப்படி கவலைப் பட முடியும் ( இப்போது மட்டும் என்ன வாழ்கிறது என்று
நீங்கள் முணு முணுப்பது இங்கு கேட்கிறது ).
பஞ்சத்தில் பராரியாய் அலைபவனுக்கு கொஞ்சம் படோடபமாய்
இருக்கும் , பிரிட்டிஷ்
அரசின் கருவூலம் ,
வறுமை அறியா அரசு அதிகாரிகள், அவர்களுக்கு
ஜால்ரா போட்டு எந்நேரமும் பன்னீரில் கொப்பளிக்கும் கைத்தடிகள், இவை
நடுவே ஆதிக்க நாயகர்களுக்கு மிக மிக விசுவாசமாய் நடந்து தமது இனத்தையே தண்டித்து
தனது மனதுக்கு நேர்மையாய் நடந்து
கொண்டிருக்கும் காவல் துறை அதிகாரிகள், சிப்பாய்கள்
இவர்களையெல்லாம் பார்த்தால் கொதிக்கும் கோபம் கொப்பளித்து மேல் எழும்பி எதையும்
செய்யத் தூண்டி விடும் பாமரனுக்கும்.
சிவகங்கை கருவூலம் கொள்ளை அடிக்கப் பட்டது. காந்தி கைது செய்யப்பட்டார். இந்திய
தேசம் முழுமைக்கும் விடுதலை வீரர் பொங்கி எழுந்தனர். எங்கும் மேடை முழக்கங்கள் தடை
செய்யப்பட்டன. காவல் நிலையங்களுக்கு உதவ
ராணுவம் தயார் நிலையில்.. தேவகோட்டையில் 1942, ஆகஸ்டு 14இல் 144 தடை
உத்தரவு நாடெங்கும். இந்த 144 பிரிவு
தடை உத்தரவை மீறியதால் தேவகோட்டையில் புரட்சி இயக்கத்தைச் சேர்ந்த இராமநாதன், சின்ன
அண்ணாமலை மற்ற போராளிகளுடன் கைது செய்யப்பட்டு திருவாடானை கிளைச் சிறையில்
அடைக்கப்பட்டார். இந்தச் செய்தி, எரிகிற தீயில் எண்ணெய்யாக அனைத்து ஊர்களுக்கும்
பரவியது. கைது நடவடிக்கை மூலம்
போராட்டத்தின் உக்கிரத்தை அமுக்கி விட நினைத்த ஆங்கில ஆதிக்கத்துக்கு ‘பூமராங்க்’
ஆகத் திரும்பி விட்டது.
அன்று இரவே தேவகோட்டை அருகே இருக்கும்
திருவேகம்பத்தூரில் புரட்சி வீரர்கள் ஒன்று கூடி இரகசிய ஆலோசனை நடத்தினர். போராட்ட வீரர் பாலபாரதி தலைமையில் திட்டங்கள்
வேகமாக சரியான கோணத்தில் தீட்டப்பட்டன.
கொஞ்சம் பிசகினாலும் பெரும் தோல்வி ஆகி விடும். உயிர்ச்சேதம் பற்றி கவலைப்படவில்லை
உன்மத்தத்தில் இருந்த உத்தமர்தம் மனம்.
ஆகஸ்டு 15ஆம் தேதி நள்ளிரவு திருவேகம்பத்தூர்…. திருவாடானை இடையில் இருந்த
பாலங்களைத் தகர்த்து எரிந்தனர்.
போக்குவரத்து தடை ஏற்படுத்தி விடுவது பலம் மிகுந்த எதிரியின் நடமாட்டத்தை
முடக்கி விடும் என்பது சிறந்த போர்த்தந்திரம்.
அடுத்து தொலை தொடர்பு... தொண்டி கடற்கரையை ஒட்டியே
இன்றைய கிழக்குக் கடற்கரைச் சாலை மார்க்கத்தில் தந்திக் கம்பங்கள். எந்தச் செய்தியானாலும் தந்தி மூலமாகத்தான்
ஆங்கிலேய மேலதிகாரிகளுக்குச் சென்று சேரும்.
எனவே, 17 ஆம் தேதி காலை அபிராமம் முத்தையா, திருவேகம்பத்தூர் ஜெயராமன் ஐயர்
ஆகியோர் மிதிவண்டியிலேயே தொண்டி சென்று தொலைத்தொடர்பு இணைப்புக்களைத்
துண்டித்தனர். இவற்றை ஒருங்கிணைத்து
மேற்பார்வை பார்த்துக் கொண்டு இருந்தவர் செல்லத்துரை என்பவர்.
ஒரு பகுதியினர் திருவாடானை கிளைச்சிறை சென்று அடைபட்டுக்
கிடந்த சின்ன அண்ணாமலை மற்றும் இராமநாதன் இவர்களை மீட்க சென்றனர். மற்றொரு பகுதி தேவகோட்டை நோக்கி. தேவகோட்டை எல்லைக்குள் நுழைந்தால்
புரட்சியாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படும் என்று ஆங்கில இராணுவம் எச்சரித்தது. பனங்காட்டு நரிகள், சலசலப்புக்கு அஞ்சுமா
என்ன? உண்மை அஞ்சா நெஞ்சங்கள்
நிமிர்த்திக் கொண்டு தேவகோட்டை வந்து சேர்ந்தன, தற்போதைய தேவகோட்டை நகராட்சி
அலுவலகம் இருக்கின்ற இடத்துக்கு.
தேவகோட்டை முழுவதும் கடை அடைப்பு. பொது மக்களும் புரட்சியாளர்களுடன் தோள்
சேர்ந்து தியாகிகளச் சிறை பிடித்த இன்ஸ்பெக்டர் குருசாமி, மற்றும் சங்கரன் இவர்களை
பூங்காவில் இருக்கும் ரேடியோ அறையில் சிறை வைத்து விட்டனர். என்ன ஒரு துணிவு? பின் தியாகிகள் சாலையில் இருந்த நீதி மன்றம்
முன் மறியலில் ஈடுபட்டனர். தியாகிகள்
சாலையில் பெத்தாள் ஆச்சி பெண்கள் மேனிலைக்கு எதிரில் கொஞ்சம் வலது புறம். இன்னும்
சரியாக சொல்லப்போனால், பாலு இன்றைய ஐசிஐசிஐ வங்கிக்கு நேர் எதிரில். நீதி மன்றம்
முன்பாகக் கூடியிருந்த கூட்டம் கலைவதாகத் தெரியவில்லை. 10 மணி வாக்கில்
மாஜிஸ்டிரேட் கூட்டத்தைக் கலைக்க துப்பாக்கி சூடு நடத்தும்படி ஆணை பிறப்பித்தார்.
வெட்ட வெளியில் எந்த ஒரு ஆயுதமும் இல்லாமல் கூட்டமாக
நின்று கொண்டு இருந்தவர்கள் மீது துப்பாக்கி வெடித்தது. முதல் குண்டுக்கு தர்மராஜன் எனும் 21 வயது
இளைஞர் பலி ஆனார். அடுத்த உயிர் கிருஷ்ணன்
எனும் 18 வயது வாலிபன். முத்திருளப்பன் அடுத்து…. ஆவேசம் கொண்ட மக்கள் படை நீதி
மன்றத்துக்குள் நுழைந்து சூறையாடி, ஆவணங்களை முதலில் கொளுத்தியது. பின்னர் வெள்ளையர் நடத்தி வந்த சிம்சன் கம்பெனி
பேருந்துகள் தீக்கிரையாயின.
தாங்க முடியாத கோபம் ஆங்கில ஆதிக்கத்தின்
சிப்பாய்களுக்கு… கண், மண் தெரியாமல் சுட்டு வீழ்த்த ஆரம்பித்தனர்.
குருவிக்கூட்டம் மேல் தாக்குதல் நடத்துவது போல் 75 பேரை சுட்டுக் கொன்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இரத்தக் களரி எங்கும்.
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்
சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத்
திருவுளமோ?
ராஜன் இன்ஸ்டிடியூட் நடத்தி வந்த தர்மராஜன் ஐயர்,
மணிவண்ணன், சாவல்கட்டு மணியன், சிவனாண்டி செட்டியாரின் தாயார் உட்பட 75 பேர் தம்
உயிர் உடலை விட்டுப் பிரியும் போது இந்த நாட்டில்
சுதந்திர சுய ஆட்சி மலர்ந்து பாலாறும் தேனாறும் பாய்ந்து செழிக்க அவர்களின்
சந்ததியினர் வல்லரசின் நல்லரசாய் வாழ்வர் என்ற எண்ணத்தில் மடிந்து
இருக்கலாம். இருக்கின்ற ஆற்றில் ஓடிய
தண்ணீரும் வறண்டு, மணல் கூட கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கும் என்று நினைத்துக்
கூடப் பார்த்து இருந்திருக்க மாட்டார்கள்.
ஆர்ச் ஆர்.எம்.அண்ணாமலை ஐய்யா அவர்கள், தன் நெஞ்சைத் திறந்து காட்டி சுடுங்கடா என்னையும்
என்று நெஞ்சை நிமிர்த்தி வந்தாராம். துப்பாக்கிக்குக்
காட்டிய திறந்த மார்பை கடைசி காலம் வரை திறந்த படியே சட்டை அணியாமல் இருந்த வைர
நெஞ்சம் படைத்த வன்மை கொண்ட பெரியவர்.
அவரை துன்புறுத்திய காவலர், அவர் வாயில் சிறுநீர் கழித்தனர். பிணமாகச்
சாய்ந்த அத்தனை சடலங்களையும், கைது செய்யப்பட்ட அத்தனை பேரையும் ஒரே வண்டியில்
ஏற்றி சென்றனர், இரக்கம் இல்லா பாவிகள்.
இது தேவகோட்டையில் நடந்த சம்பவம். இதே நேரம் அங்கு திருவாடானைக்கு ஒரு குழு சின்ன
அண்ணாமலை மற்றும் இராமநாதன் அவர்களை சிறை மீட்க சென்று இருக்கிறதே… என்ன ஆயிற்று
என்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருக்கிறதா?
இதோ அமரர் சின்ன அண்ணாமலை அவர்களே என்ன நடந்தது என்பதை தனது நூலில்
குறிப்பிட்டு இருக்கிறார். இதோ அவரது தனி
பாணியில்:
(திரு சின்ன அண்ணாமலை எழுதிய "தியாகச்சுடர்"
எனும் நூல் வெளியீட்டு விழாவில் பேசியது)
இனி திரு சின்ன அண்ணாமலை அவர்களின் வாயால் 1942இல்
திருவாடனையில் என்ன நடந்தது என்பதைக் கேட்போம். நமக்காக அவர் எழுதிவைத்திருக்கிறார். நாம்தான் அதைப்
படிக்கவோ, தெரிந்து கொள்ளவோ முயற்சி எடுத்துக் கொள்ளவில்லை. இப்போதாவது தெரிந்து கொள்வோம்.
"1942 ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி அன்று இரவு
12 மணிக்கு போலீஸார் என்னைக் கைது செய்தனர். பகல் நேரத்தில் எப்போதும் பெரும் கூட்டம்
என்னைச் சூழ்ந்து கொண்டிருந்தபடியால் ஒரு வார காலமாக முயற்சி செய்தும் கைது செய்தால்
பெரும் கலகம் ஏற்படும் என்று போலீஸார் கைது செய்வதைத் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்தனர்.
ஆனால் அன்று 144 தடை உத்தரவை மக்கள் முன்னிலையில்
நான் கிழித்தெறிந்ததும் போலீஸ் இன்ஸ்பெக்டரை மக்கள் விரட்டி அடித்ததாலும் அதற்குமேல்
என்னை வெளியில் வைத்திருப்பது பெருத அபாயம் என்று கருதி போலீஸார் அன்றிரவே என்னைக்
கைது செய்வது என்று முடிவு செய்து விட்டனர்.
இரவில் அதிகம்பேர் என்னைச் சுற்றி இருக்க மாட்டார்கள்,
சில பேர்தான் இருப்பார்கள். இருப்பவர்களைச் சமாளித்துக் கொள்ளலாம் என்று போலீஸார் எண்ணி
அன்றிரவு என்னைக் கைது செய்வதற்குச் சுமார் பத்து லாரி ரிசர்வ் போலீசைக் கொண்டு வந்து
நான் தங்கி இருந்த ஐக்கிய சங்கம் என்ற கட்டடத்தைச் சுற்றி வளைத்து நிறுத்திக் கொண்டு
உள்ளே படபடவென்று குதித்தார்கள்.
அப்பொழுது இரவு மணி 12 இருக்கலாம். சப்தம் கேட்டதும்
திடுக்கிட்டு விழித்துப் பார்த்தபோது என்னைச் சுற்றிப் பல ரசர்வ் போலீஸ் நின்றது தெரிந்தது.
"உங்களைக் கைது செய்திருக்கிறோம்" என்று போலீசார் சொன்னார்கள்.
இன்ஸ்பெக்டர் என் கையில் விலங்கை மாட்டி, பல நூற்றுக்கணக்கான
ரிசர்வ் போலீஸார் சூழ "இராமவிலாஸ்" பஸ் ஒன்றில் என்னை ஏற்றிக் கொண்டு முன்னும்
பின்னும் பல போலீஸ் வண்டிகள் தொடர தேவகோட்டையில் இருந்து 22 மைல் தொலைவில் உள்ள திருவாடனை
என்ற ஊருக்குக் கொண்டு சென்றார்கள்.
திருவாடனையில் உள்ள சப்-ஜெயிலில் என்னைக் கொண்டுபோய்
அடைத்தார்கள். மறுநாள் காலையில் என்னைக் கைது செய்த விஷயம் ஊர் முழுவதும் பரவி மக்கள்
கும்பல் கும்பலாகச் சேர்ந்து ஊரே ஒன்றாகத் திரண்டு என்னை விடுதலை செய்யும்படி போலீஸ்
ஸ்டேஷனுக்கு முன்னால் சென்று ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். கடைகள் அனைத்தையும்
மூடும்படியும் செய்து போலீசைத் திக்குமுக்காட வைத்து விட்டார்கள்.
என்னை ஏற்றிக் கொண்டு சென்ற இராமவிலாஸ் பஸ்ஸை சூழ்ந்து
கொண்டு தீ வைத்துக் கொளுத்தி மேற்படி பஸ்ஸைச் சாம்பலாக்கி விட்டார்கள். அதன் பின்னர்
தேவகோட்டையில் உள்ள சப்-கோர்ட்டை நடத்தக் கூடாது என்று மக்கள் கோஷம் போட்டிருக்கிறார்கள்.
அதையும் மீறி கோர்ட்டை நடத்தியதால் மக்கள் கோபம்
கொண்டு பக்கத்திலிருந்த பெட்ரோல் பங்கில் இருந்து பெட்ரோல் பிடித்து கோர்ட் கட்டடத்தின்
மீது ஊற்றி தீ வைத்து விட்டார்கள். போலீஸ் துப்பாக்கிப் பிரயோகம் செய்தும் கூட்டம்
கலையவில்லை.
பல பேர் துப்பாக்கிப் பிரயோகத்தில் இறந்தார்கள்.
அங்கிருந்த கூட்டம் கோபங்கொண்டு புறப்பட்டு திருவாடனையை நோக்கி வந்தது. திருவாடனை வரும்
வழியில் உள்ள கிராமங்களில் எல்லாம் இளைஞர்களும், பெரியோர்களும் உற்சாகமாக இக்கூட்டத்துடன்
சேர்ந்து அவர்களும் திருவாடனையை நோக்கி வந்தார்கள்.
சுமார் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒன்று
சேர்ந்து திருவாடனை சப்-ஜெயிலுக்கு என்னை விடுதலை செய்ய வந்துகொண்டு இருக்கிறார்கள்
என்று கேள்விப்பட்டதும் சப்-ஜெயிலைச்
சுற்றி இருந்த சர்க்கார் அலுவலகங்களான மாஜிஸ்திரேட் கோர்ட், தாசில்தார் காரியாலயம்,
கஜானா அதிகாரி, போலீஸ் ஸ்டேஷனில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் போலீஸ் கான்ஸ்டபிள்கள் அனைவரும்
என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயிலுக்கு முன்பு வந்தார்கள். எல்லோரும்
என்னிடம் என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்டார்கள்.
நான் சொன்னேன், 'இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட ஜனங்கள்
வருவதால் அவர்களைத் தடுத்து நிறுத்துவதோ, வன்முறையை உபயோகிப்பதோ இப்போது உள்ள சூழ்நிலைக்குச்
சரியாக இருக்காது. இது சுதந்திரப் போராட்ட வேகம். மக்களிடம் ஏற்பட்டிருக்கும் உணர்ச்சியை
மதித்து அவர்களுக்கு வழிவிட்டு நில்லுங்கள். அனைவரும் ஒதுங்கிக் கொள்வதுதான் இந்த நேரத்தில்
செய்யக்கூடிய புத்திசாலித்தனமான காரியம்'என்று அவர்களுக்கு ஆலோசனை கூறினேன்.
அவர்கள் சொன்னார்கள், 'நாங்களும் எங்கள் குடும்பமும்
குழந்தை குட்டிகள் அனைவரும் பக்கத்திலுள்ள லையனில்தான் குடியிருக்கிறோம். வருகின்ற
கூட்டம் எங்களையும் எங்கள் குடும்பத்தாரையும் கோபப்பட்டுத் தாக்கினால் என்ன செய்வது?' என்று கேட்டார்கள்.
'அதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதற்கு
நான் பொறுப்பு' என்று சொன்னேன். அப்போது அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டரின் பெயர் 'சூரப்புலி'
சுந்தரராஜ ஐயங்கார் என்பது ஆகும்.
என் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு நான் சொன்னபடி போலீசார்
தங்கள் உடைகள் அனைத்தையும் கழற்றி நான் இருந்த சப்-ஜெயிலுக்கு முன்னால் போட்டார்கள்.
எல்லோரையும் அவரவர் வீட்டுக்குப் போய் நிம்மதியாக இருக்கும்படி கூறினேன். அதன்படி அவர்கள்
அனைவரும் செய்தார்கள்.
இது நடந்த சிறிது நேரத்துக்கெல்லாம் பல ஆயிரக் கணக்கான
மக்கள் கையில் கடப்பாரை, கோடாரி, அரிவாள், ஈட்டி முதலிய ஆயுதங்களுடன் பலத்த கோஷம் போட்டுக்
கொண்டு சப்-ஜெயிலை நோக்கி வந்தார்கள். பலர் ஜெயிலை உடையென்றும், கட்டடத்திற்கு தீ வை
என்றும் பலவாறாகச் சத்தம் போட்டார்கள்.
கூட்டத்திற்குத் தலைமை வகித்து வந்தவர்களில் ஒருவரான
எனது நண்பர் திருவேகம்பத்தூர் பாலபாரதி
செல்லத்துரை அவர்கள் எல்லோரையும் அமைதிப்படுத்தி
நான் இருந்த சிறைக்கு முன்னால் உட்கார வைத்தார்கள். அவர் சொற்படி அனைவரும் சப்-ஜெயிலுக்கு
முனால் இருந்த மைதானத்தில் உட்கார்ந்தார்கள்.
பின்னர் செல்லத்துரை அவர்கள் என்னிடம் வந்து
"இப்பொழுது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்.
"நீங்கள் என்ன முடிவுடன் வந்திருக்கிறீர்கள்?"
என்று நான் திருப்பிக் கேட்டேன்.
"இந்தச் சிறையை உடைத்து உங்களை விடுதலை செய்ய
வந்திருக்கிறோம்" என்று பதில் சொன்னார்.
"சரி, அப்படியே செய்யுங்கள்" என்று நான்
சொன்னதும், அங்கு நின்ற சிறை வார்டன் ஓடிவந்து இதோ சாவி இருக்கிறது என்று சாவியைக்
கொடுத்தார். சாவி வேண்டியதில்லை, உடைத்துதான் திறப்போம் என்று
மக்கள் பெரும் முழக்கம் போட்டார்கள்.
அதன்படியே அவர்கள் கொண்டு வந்திருந்த கடப்பாரை
முதலிய ஆயுதங்களால் என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயில் பூட்டை உடைத்துத் தகர்த்து
கதவைத் திறந்தார்கள்.
பட்டப்பகல் 12 மணிக்குப் பல ஆயிரக் கணக்கான மக்கள்
சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இம்மாதிரி சிறைக் கதவை உடைத்து ஒரு
அரசியல் கைதியை விடுதலை செய்தது சரித்திரத்தில் அதுதான் முதல் தடவை.
அந்தச் சரித்திரச் சம்பவத்துக்கு நான் காரணமாக இருந்தேன்
என்று நினைக்கும்போது இன்றும் நான் பெருமைப் படுகிறேன். இந்தியாவில் வேறு யாருக்கும்
கிடைக்காத பெருமை எளியேனுக்குக் கிடைத்தது.
மக்களுடைய மாபெரும் சுதந்திர எழுச்சியின் வேகத்தில்
நடைபெற்ற சக்தி மிகுந்த இந்தத் திருவாடனை ஜெயில் உடைப்புச் சம்பவம், தமிழகத்தின் ஒரு
கோடியில் ராமேஸ்வரம் அருகில் நடைபெற்றதால் இந்தியா முழுவதும் விளம்பரம் இல்லாமல் அமுங்கி
விட்டது.
தமிழ்நாட்டுத் தலைவர்களும், இச்சம்பவத்தின் பெருமையை
உணரவில்லை.மதிப்பிற்குரிய ஜெயப்பிரகாஷ் நாராயண் அவர்கள் 1942இல் சிறையிலிருந்து தப்பியதே
பெரிய வீரச்செயல் என்று நாடு போற்றிக் கொண்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் திருவாடனையில்
மக்கள் திரண்டு வந்து சிறைச்சாலையை உடைத்து ஆங்கில ஏகாதிபத்தியம் கைது செய்து வைத்திருந்த
ஒரு சுதந்திரப் போராட்ட வீரனை விடுதலை செய்ததை நாடு முழுமையாக அறிந்து கொள்ளவுமில்லை,
பாராட்டவும் இல்லை.
விடுதலை செய்யப்பட்ட என்னைச் சுற்றி இருந்த மக்கள்
என்னைத் தோளில் தூக்கிக் கொண்டு ஆனந்தக் கூத்தாடினார்கள். சிலபேர் நான் இருந்த சப்-ஜெயிலுக்குத்
தீ வைத்தார்கள். வேறு சிலர் மாஜிஸ்திரேட் கோர்ட்டிற்கும், தாசில்தார் அலுவலகத்திற்கும்
தீ வைத்தார்கள்.
அதன் பின்னர் போலீஸ் லைனை நோக்கி ஓட ஆரம்பித்தார்கள்.
அப்போது நான் குறுக்கிட்டு, "அங்கு ஓடாதீர்கள். அவர்கள் அனைவரும் நமக்காக வேண்டிய
ஒத்தாசை செய்திருக்கிறார்கள்" என்று அவர்களிடம் சொன்னேன். சில பேர் போலீஸ்காரர்களை
சும்மாவிடக் கூடாது என்றும் அவர்கள் வீடுகளுக்குத் தீ வைக்க வேண்டும் என்றும் சத்தம்
போட்டார்கள்.
நான் அவர்களைத் தடுத்து அவர்கள் அனைவரும் நமது சகோதரர்கள்,
நமது சுதந்திரப் போராட்டத்திற்கு உறுதுணையாக உள்ளவர்கள், அவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம்.
இதோ அவர்களது உடைகள் என்று கூறி, போலீஸ்காரர்களுடைய உடைகள் அனைத்தையும் மக்களுக்குக்
காண்பித்தேன். அவர்கள் அந்த உடைகளை வாங்கித் தீயில் போட்டுப் பொசுக்கித் தங்கள் கோபத்தைத்
தீர்த்துக் கொண்டார்கள்.
பின்னர் கூட்டத்தினர் அனைவரும் என்னைத் தூக்கிக்
கொண்டு ஊர்வலமாகச் சென்றார்கள். அப்பொழுது என்னை அடைத்து வைத்திருந்த சப்-ஜெயிலும்,
அதைச் சுற்றி இருந்த சர்க்கார் அலுவலகங்களும் கொழுந்து விட்டு எரிந்தன. அச்சமயம் சிலர்
போலீஸ் ஸ்டேஷனுக்கு உள்ளே புகுந்து அங்கிருந்த துப்பாக்கிகளை ஒருவரும், துப்பாக்கிக்
குண்டுகளை இன்னொருவரும் தூக்கிக் கொண்டு வெளியே வந்தனர். சிலர் துப்பாக்கிகளை கையில்
ஏந்திக் கொண்டு சிப்பாய்களைப் போல நடந்தனர்.
மக்கள் என்னை ஊர்வலமாக அழைத்துக் கொண்டு ஊருக்கு
வெளியே செல்லும்போது தூரத்தில் போலீஸ் லாரிகள் வருவது தெரிந்தது. போலீஸ் லாரியைப் பார்த்து
மக்கள் கோபாவேசப் பட்டார்கள். பலர் போலீஸ் லாரியை அடித்து நொறுக்க வேண்டும் என்று கூச்சல்
போட்டார்கள். சிலர் போலீஸ் லாரியை நோக்கி அரிவாளை வீசிக்கொண்டு ஓடினார்கள்.
எல்லோரையும் சமாதானப் படுத்தி ரோட்டுக்கு பக்கமாக
இருந்த பனங்காட்டுக்குள் இருக்கும்படி கேட்டுக் கொண்டேன். அதன்படி மக்கள் இரு கூறாகப்
பிரிந்து ரோடின் இரு மருங்கிலும் உள்ள பனங்காட்டுக்குள் பதுங்கிக் கொண்டார்கள்.
போலீஸ் லாரிகள் மெதுவாக ஊர்ந்து கொண்டு வந்தன. மக்கள்
மறைந்திருப்பதை யூகித்தவர்கள் போல் போலீசார் சுடுவதற்குத் தயார் நிலையில் லாரியில்
நின்று கொண்டு இருந்தார்கள். ரோடு ஓரமாக மறைந்திருந்த ஒருவரை போலீசார் பார்த்து விட்டனர்.
உடனே அவரை நோக்கிச் சுட்டனர். அவர்கள் சுட்ட குண்டு மேற்படி நண்பரின் தொடையை தொட்டுக்
கொண்டு சென்றுவிட்டது.
உடனே மேற்படி நண்பர் பெரும் கூச்சல் போட்டு
"எல்லாம் வெத்து வேட்டு, வெளியே வாங்கடா" என்று கலவரப்படுத்தி விட்டார்.
மறைந்திருந்த மக்கள் அனைவரும் பெருங்கூச்சல் போட்டுக் கொண்டு வெளியே வந்து போலீசாரைத்
தாக்க ஓடினார்கள்.
இச்சமயம் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் ஒரு பக்கமும்
குண்டு வைத்திருந்தவர்கள் மறு பக்கமும் பிரிந்து இருந்தார்கள். அதனால் மக்களிடம் இருந்த
துப்பாக்கியினால் போலீசாரைச் சுட இயலாமல் போய்விட்டது. குண்டுகளைக் கையில் வைத்திருந்த
கிராமவாசிகள் மட்டும், மேற்படி குண்டுகளை எறிந்தால் வெடிக்குமா, வெடிக்காதா என்று தெரியாததால்
அவைகளைச் சரமாரியாக வீசிக் கொண்டு இருந்தார்கள்.
இந்நிலையில் போலீசார் தங்களைக் காத்துக் கொள்ளச்
சரமாரியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். குண்டுகளைப் பொழிந்து தள்ளினர். என்
இடது கையில் ஒரு குண்டு பாய்ந்தது. மக்களின் முன்னால் நின்ற என் மீது மேலும் குண்டு
படக்கூடாது என்று பலபேர் மாறி மாறி என் முன்னால் நின்று தங்கள் மார்பில் போலீசாரின்
குண்டுகளை ஏற்று வீரமரணம் எய்தினார்கள். இம்மாதிரி தியாகம் செய்த பெரு வரலாற்றை நான்
படித்ததும் இல்லை, கேட்டதும் இல்லை. இந்த மாபெரும் தியாகத்தை இன்று நினைத்தாலும் எனது
மெய் சிலிர்த்து விடுகிறது.
ஒரு தேசபக்தனைக் காப்பதற்காகப் பல பேர் உயிரைக்
கொடுப்பது என்பது வீரகாவியமாகப் பாட வேண்டிய அத்தியாயமாகும். எவ்வித பிரதி பிரயோசனமும்
கருதாமல் தங்கள் இன்னுயிரை ஈந்த அந்த மாபெரும் தியாகிகளுக்கு இந்த நாடு என்றும் தலை
தாழ்த்தி வணங்கக் கடமைப் பட்டுள்ளது.
இப்படிப் பல பேரைச் சுட்டு வீழ்த்திவிட்டு போலீசார்
தப்பி ஓடிவிட்டார்கள். சிலர் இறந்து வீழ்ந்ததும் பலர் உடம்பிலிருந்து ரத்தம் தெறித்தும்,
அங்கு கூடியிருந்த மக்கள் ஒரு நிமிடத்தில் எங்கே சென்றார்கள் என்று தெரியாமல் ஓடிவிட்டனர்.
நானும் எனது நண்பர் ராமநாதனும் பிணக்குவியலின் மத்தியில்
நின்று கொண்டிருந்தோம். உயிர் போன பலரும், உயிர் போகும் தருவாயில் சிலரும், கை, கால்,
கண் போன சிலரும் ஒரே இரத்தக்காடாக முனகலும், மரணக்கூச்சலும் நிறைந்திருந்த அந்த இடத்தில்
என்ன செய்வது என்று தெரியாமல் திக்பிரமை பிடித்து பத்து நிமிடத்துக்கும் மேல் நின்று
கொண்டிருந்தேன். இரவு மணி 7 ஆயிற்று. வெளிச்சம் மங்கி இருள் பரவிற்று. பனங்காடு, சலசலவெற
சத்தம். மரத்தினுடன் மரங்கள் உராயும் போது எற்படும் பயங்கரமான கிரீச் எனும் அச்சமூட்டும்
சத்தம். இந்நிலையில் நரிகளின் ஊளை வேறு. சுற்றிலும் இறந்து கிடந்த தேசபக்த தியாகிகளைப்
பார்த்து ஒரு முறை அவர்களின் பாதாரவிந்தங்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு நகர்ந்தேன்.
இருட்டில் மேடு பள்ளம் முள் கல் இவைகளில் தட்டுத்
தடுமாறி நடந்தோம். காலெல்லாம் கிழிசல் ஏற்பட்டு ரத்தம் வடிந்து கொண்டே இருந்தது. கையில்
குண்டு பாய்ந்த இடத்தில் ரத்தம் வழிந்தது. சுமார் நான்கு மைல் வந்ததும் தலை சுற்றியது.
மயக்கமாக இருந்தது. அதே இடத்தில் கீழே தடால் என்று விழுந்து விட்டேன். என் நண்பரும்
மயங்கிப் படுத்து விட்டார். மயங்கிய நிலையில் நன்றாகத் தூங்கி விட்டோம்.
தூங்கிக் கொண்டிருந்த எங்களைச் சிலர் தட்டி எழுப்பினார்கள்.
சுமார் பத்து பேர் நின்று கொண்டிருந்தார்கள். போலீசார் என்று நினைத்து விட்டோம். ஆனால்
அவர்கள் போலீசார் அல்ல. அதற்கு முன் தினம் இறந்து போன உறவினர் ஒருவருக்குப் பால் ஊற்றி
அஸ்தி எடுத்துப் போக வந்தவர்கள். அது சரி! அவர்கள் ஏன் நாங்கள் படுத்திருந்த இடத்திற்கு
வந்தார்கள்? எதற்காக எங்களை எழுப்பினார்கள்?
சொன்னால் நம்ப மாட்டீர்கள்! நாங்கள் அவர்கள் உறவினரைப்
புதைத்திருந்த இடத்திற்கு மேல்தான் அவ்வளவு நேரம் அந்த இரவு முழுவதும் படுத்திருந்தோம்.
இதை அறிந்ததும் எங்கள் மனோநிலை எப்படி இருந்திருக்கும்?
இத்துடன் போதுமே, ஒரு வழியாக வழக்குகளைச் சந்தித்து வெளியே வந்து விட்டார்.
இந்த நீதிமன்றம் கொழுத்திய வழக்கில் சிக்கியவர்கள் கதி என்ன என்று அறிந்து கொள்ள ஆவல் மேலிடுகிறதா?
இந்தக் குயிலியின் கதையையே கட்டுக்கதை என்று சொல்வாரும் உண்டு. எது எப்படி இருந்த போதும், நமது மக்களின் வீர மகளாகக் காட்டப்படும் திருமகளை வணங்குவோம்.
பிறர் மூலம் கேட்டு இந்த தகவல்களை நான் என் மூலம் சொல்வதை விட அந்தக் கால
கட்டத்தில் வசித்தவர்கள் நிகழ்வுகள் நிகழ்ந்த காலத்தில் நேரில் கண்டவர்கள், அவர்களோடு
பழகியவர்கள் இவர்கள் வாய் மொழியாக அறிந்து கொண்டால் இன்னும் சரியாகவும்
சுவையாகவும் இருக்கும் அல்லவா?
எத்தனை பகுதியில் தான் இந்த முத்துமணியின் நடையையே வாசித்துக் கொண்டு
இருப்பீர்கள் ? ஒரு மாற்றத்துக்காக
தோழர்.கே டி .கே .தங்கமணி வருகிறார்.
ஆம் முத்துமணிக்குத் துணையாக
தங்கமணி.... ( ஹா... ஹா... ஹா....).
கே டி.கே. தங்கமணி அவர்களை நம் மக்கள் நன்கு அறிவர், இருந்த போதும் ஒரு சிறு அறிமுகம் :
இந்தியத் தொழிற்சங்க இயக்க முன்னோடிகளில் ஒருவர். இந்தியக்
கம்யூனிஸ்டுக் கட்சியின் தலைவர். பிளவுபடாத இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழகத்
தலைவராக இருந்தார்.தனது பள்ளிப்படிப்பை திருமங்கலம் பி.கே.என். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சட்டப்படிப்பை இலண்டனில் முடித்து 1947ம் ஆண்டு மதுரை திரும்பினார். இங்கு தொழிலாளர்களுக்கு ஆதரவாக 1947 மற்றும் 1948 ஆண்டுகள்
(மதுரை டி.வி.எஸ் நிறுவனம் மற்றும் ஹார்வே மில்) போராடிச் சிறை சென்றுள்ளார். மேலும் 1957ம்
ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் மதுரை தொகுதியில் வெற்றியும் பெற்றார். தனது
போராட்டங்கள் மற்றும் தலைமைப் பண்புகளின் மூலம், அகில இந்திய பொதுவுடைமைக் கட்சியின் தமிழகத் தலைவராகவும் பதவி வகித்தார்.தன் 88ஆவது
வயதில் 2001 டிசம்பர் 26 அன்று கோவையில் மரணமடைந்தார். இவரது நினைவாக, மதுரை அண்ணாநகா் மற்றும் அச்சம்பத்திலுள்ள ஒரு தெருவிற்கும் மற்றும்
திருமங்கலத்திலுள்ள ஒரு சந்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டது. இவர் கோவையில்
வாழ்ந்த வீடு, நினைவு இல்லமாக மாற்றப்பட்டது.
இதோ இந்த தேவகோட்டை சம்பவத்தை திரு.கே.டி.கே.தங்கமணி
விவரிக்கிறார். அவரது பார்வையில் இருந்து :
விடுதலைப் போராட்டத்தில் நெஞ்சை விட்டு நீங்காத பல முக்கிய
நிகழ்ச்சிகள் இருக்கின்றன. இவற்றைப் பற்றி நிறைய சொல்லியும், எழுதியும் வந்துள்ளேன். என்னைப் பொது வாழ்க்கையின் உள்ளே
இழுத்து நிறுத்திய பழைய சம்பவத்தை நினைவு கூரலாம் எனக் கருதுகிறேன். லண்டனில்
சட்டம் படித்து பாரிஸ்டர் பட்டம் பெற்றதும், மலேயா சென்றேன். அங்கேயே எனக்குத் திருமணமும் நடந்தது. இரண்டு ஆண்டுகள் வரை
அங்கு தங்கி தொழில் நடத்திக் கொண்டிருந்தேன். இரண்டாம் உலகப்போர் வெடித்ததும் எனது
மாமனார் குடும்பம் இந்தியா திரும்பியது. எனது மாமனாரின் சொந்த வீடு காரைக்குடியை
அடுத்துள்ள பள்ளத்தூர் அருகே மணச்சை கிராமத்தில் இருந்தது. மாமனாரின் உடல்நிலை
நன்றாக இல்லை. அவருடனே நானும் தங்கியிருந்தேன். பள்ளத்தூர் காவல் நிலையத்தில் சப்
இன்ஸ்பெக்டராக ராமையா என்பவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருடன் எனக்கு
அறிமுகம் ஏற்பட்டது.
அப்போது 'வெள்ளையனே
வெளியேறு' இயக்கம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. யுத்தத்தின்
காரணமாகக் கடும் பஞ்சம் ஒவ்வொரு பகுதியிலும் மக்கள் தங்களுக்குத் தெரிந்த வழிகளில்
போராடிக் கொண்டிருந்தார்கள். சிவகங்கையில் அரசுக் கருவூலம் கொள்ளையடிக்கப்பட்டது.
தேவகோட்டையில் இருந்த சப் கோர்ட்டை நெருப்பு வைத்துக் கொளுத்தினார்கள். திருவாடனை
நீதி மன்றத்தையும் போலீஸ் ஸ்டேஷனையும் முற்றுகையிட்டு பொதுமக்கள் கைப்பற்றிக்
கொண்டார்கள். போலீஸ் எதுவும் செய்யத் திராணி இல்லாமல் முடங்கிப் போனது. ஏனைய அரசு
அலுவலகங்கள் எதுவும் செயல்பட முடியவில்லை.
இன்றைக்கு சிவகங்கை மாவட்டம் ராமநாதபுரம் மாவட்டம், விருதுநகர் மாவட்டம் என்றழைக்கப்படும் மூன்றும் அன்றைக்கு ஒரே
மாவட்டமாக இருந்தது. கிழக்கு ராமநாதபுரத்தில் மூன்று மாத காலமாக அரசு என்று
எதுவும் இல்லை. மக்களே ஆட்சி நடத்தினார்கள். இந்த எழுச்சியை நசுக்க வெளியிலிருந்து
பிரிட்டிஷ் அரசு போலீசைக் கொண்டு வந்தது. எழுச்சிக்குத் தலைமை தாங்கியவர்கள்
எல்லோரும் வேட்டையாடிப் பிடிக்கப்பட்டனர். இதில் முக்கியமானவர் சித்தூர் சிவஞானம்.
அவரும் கைது செய்யப்பட்டார்.
சிவஞானத்தைக் கொன்றுவிடுமாறு அரசாங்கம் தகவல் தந்துள்ளதாக
மிகுந்த மனவருத்தத்தோடு சப் இன்ஸ்பெக்டர் ராமையா என்னிடம் கூறினார். கைதானவரை எப்படிக்
கொல்ல முடியும் என்றேன். கோர்ட்டுக்குக் கொண்டு போகும் வழியில் தப்பித்துச்
சென்றதாகவும் அப்போது போலீஸ் சுட்டதாகவும் அதில் இறந்து போனதாகவும் ரிப்போர்ட்
தரச் சொல்லியிருக்கிறார்கள் என்றார் அவர். "அப்படிக் கொன்று
விடுவார்களா" பதைத்துக் கேட்டேன். "காலையிலேயே கட்டி வைத்துச் சுட்டுக்
கொன்றுவிட்டார்கள்" என்றார். எனக்குள் இந்தச் செய்தி இடியாக இறங்கியது. நான்
ஐந்தாண்டு காலம் இங்கிலாந்தில் தங்கியவன். அவர்களின் சட்டம், நீதி, நியாயங்கள்
பற்றியெல்லாம் கேட்டு, படித்து, தேர்வு எழுதியவன். இந்தக் காட்டுமிராண்டித்தனமான செய்கை
அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் இடையிலான இடைவெளியை எனக்குத் திறந்து
காட்டியது.
நான் மணச்சையிலிருந்து மதுரை வந்தேன். வழக்கறிஞர்
கே.பி.கோபாலனின் அலுவலகத்தில் சேர்ந்தேன். திருவாடனை, சிவகங்கை, தேவகோட்டை எழுச்சியில்
ஈடுபட்டவர்களை விசாரிப்பதற்காக அரசு ஒரு சட்டத்தின் மூலம் தனி நீதிமன்றம்
அமைத்தது. இதில் ஏழு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை பெறுபவர்கள் மட்டுமே அப்பீல்
செய்ய முடியும் என்று சட்டத்திலேயே கூறப்பட்டிருந்தது. மதுரை கோர்ட்டுக்கு நான்
வழக்கம் போல் சென்றபோது ஒருநாள் பெரும் கூட்டமாக கைதிகளை நிறுத்தி வைத்திருந்தனர்.
விசாரித்தபோது அது திருவாடனை வழக்கு என்று தெரிந்தது. நான் நேரே அவர்களிடம்
சென்றேன். 'சித்தூர் சிவஞானத்தின் உறவினர்கள்
யாரேனும் இருக்கிறீர்களா" என்று கேட்டேன். ஒருவர் 'என் அண்ணன்தான் சிவஞானம்' என்றார்.
அவர் பெயர் ஆறுமுகம். உடனே ஆறுமுகத்தின் சார்பில் நான் ஆஜராவதாகக் கூறி ஸ்பெஷல்
கோர்ட்டில் மனு தாக்கல் செய்தேன். வழக்கறிஞர்கள் யாரும் வழக்கில் ஆஜராகத் தயாராக
இல்லை. அரசுக்கு எதிரான கொடுங்குற்றம் என்று பயம் என்றாலும் அதையும் மீறி
கே.பி.கோபாலனின் ஜூனியர் எஸ்.டி.நாராயணசாமி, தர்மராஜ் சந்தோஷம், சேதுராமன்
ஆகியோர் இவ்வழக்கில் ஆஜராயினர். இதில் சீனியர் ஒருவரின் வழிகாட்டல் தேவையென்று
சென்னையில் இருந்த பிரபல கிரிமினல் லாயர் வி.வி.சீனிவாச ஐயங்காரை அணுகினோம்.
அவரும் உடன்பட்டார். சம்பவமே நடக்கவில்லை என்று எதிர்வழக்காட முடியாது. எனவே, சம்பவத்தில் கைதிகள் யாரும்
ஈடுபடவில்லை என்று வாதாடுங்கள் என்று அவர் ஆலோசனை சொன்னார். கைதிகள் அனைவரையும்
தாடி வளர்க்குமாறு சொன்னோம். அடையாளத்தை மறைக்கவே இந்த ஏற்பாடு.
ஆறுமாத காலம் வழக்கு நடந்தது. ஸ்பெஷல் கோர்ட்
முப்பது பேரை விடுதலை செய்தது. நான் ஆஜரான ஆறுமுகமும் விடுதலை செய்யப்பட்டார்.
நூறு பேருக்கு மேல் தண்டனை வழங்கப்பட்டது. எல்லோருக்கும் ஏழு ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை
விதிக்கப்பட்டது. இவர்கள் எல்லோரும் சாதாரண ஜனங்கள். யாரும் வசதி படைத்தவர்கள்
இல்லை. படிப்பறிவும் கிடையாது. தேவர்களும், ஹரிஜனங்களும்தான்
பெரும்பாலானவர்கள். இவர்கள் ஒரு பெரும் ஏகாதிபத்திய அரசி எதிர்த்து வீரச்சமர்
புரிந்தனர். ஏராளமான இன்னல்களையும் சித்திரவதைகளையும் இன்முகத்தோடு ஏற்றனர்.
தேசத்திற்காக இவ்வளவு பெரிய தியாகத்தைச் சாமானிய மக்கள் செய்யும்போது நானும்
ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் எனக்குள் விதையூன்றியது.
1949இல் மீண்டும்
கைது செய்யப்பட்டோம். பிரிட்டிஷ் ஆட்சியில்கூட அனுபவித்தறியாத கொடிய
சித்திரவதைகளுக்கு ஆட்பட்டோம். சித்தூர் சிவஞானம் எப்படிச் சுட்டுக்
கொல்லப்பட்டாரோ அதே பாணியில் பீபிகுளம் என்று தற்போது அழைக்கப்படும் மதுரை
புறநகர்ப் பகுதியில் தியாகி மணவாளன் தப்பியோடும் போது சுடப்பட்டதாகச் சுட்டுக்
கொல்லப்பட்டார். ஐ.வி. சுப்பையா மதுரை சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்து எனது
கண்முன்பாகவே அணுஅணுவாக உயிர்விட்டார். இந்த 84 வயதில் கூட சிவஞானமும், மணவாளனும் எனது
நம்பிக்கைகளை இதயக் கனவுகளை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
நன்றி: "தினமணி" சுதந்திரப் பொன்விழா
மலர்.
இப்படி நமது பகுதியில்
நடந்த இரத்த சரித்திரம், இந்திய சுதந்திரப் போராட்டத்தைக் குறிக்கும் எந்த வரலாற்றிலும்
இடம் பெறவில்லை என்பது எனது மிகப்பெரிய வருத்தம். 70களின் பிற்பகுதி வரை சிதிலமடைந்து,
கேட்பாரற்று ஒரு பெரிய உயிர்க்கூட்டத்தின் தியாகத் தழும்பாய் இந்த நீதிமன்றக் கட்டிடம்
தியாகிகள் சாலையில் நின்று இருந்தது. மத்தியிலும்,
மாநிலத்திலும் சுதந்திரம் வாங்கித் தந்ததாக மார் தட்டிய காங்கிரஸ் கட்சியின் அரசுகள்
எத்தனையோ ஆண்டுகள் அரசாண்ட போதும் எவரும் இந்தத் தேவகோட்டையின் உயிர்த்தியாகத்தின்
நினைவாய் நின்ற இந்த இடத்தை தேசிய சின்னமாகப் பாது காக்க வேண்டும் என்று நினைத்துக்
கூடப் பார்க்கவில்லை. திராவிடக் கட்சிகளுக்கும்
இதற்கெல்லாம் நேரம் இல்லை. இதே சிவகங்கை பாராளுமன்றத்
தொகுதியில் தேர்ந்து எடுக்கப்பட்டு நல்ல பொறுப்பான பதவியில் இருந்தவர்களுக்கும் இது
பற்றிய அக்கறை இல்லை. உயிர் நீத்தவர்கள் அன்றாடங்காய்ச்சிகளாய்
இருந்ததும் ஒரு காரணமாக இருந்து இருக்கலாம்.
நாடு சுதந்திரம் அடைந்த உடன் இந்த சாலைக்கு தியாகிகள் சாலை என்று பெயர் சூட்டி,
தியாகிகள் பூங்காவில் ஒரு நினைவுத்தூண் எழுப்பியதோடு இந்த உயிர்த்தியாகத்தை பூமியின்
அடி ஆழத்தில் புதைத்து விட்டோம். இன்று தேவகோட்டையில்
வாழும் எத்தனை இளம் தலைமுறையினருக்குத் தெரியும் இந்த தியாகிகள் பூங்கா, மற்றும் தியாகிகள்
சாலை என்பதன் பெயர்க்காரணம்?
வெகு காலம் யாரும் இல்லா அனாதையாய் நின்ற இந்தக் கட்டிடம், பின்னாளில் தொகுப்புக்
கட்டிடங்களாக மாறி, இந்த இடத்தில் ‘செந்தாமரை அச்சகம்’ ஒன்று நடந்து வந்தது. அதே செந்தாமரை அச்சகம், பின்னர் எமது கல்லூரியின்
வணிகவியல் விரிவுரையாளராக இருந்து திரு.ஆர்.எம்.சின்னையா அவர்களால் எடுத்து நடத்தப்
பெற்றது. இதன் ஒரு பகுதியில் புதிய கட்டிடம்
கட்டப்பட்டு அதில் இராமனாதபுரம் கூட்டுறவு வங்கி இயங்க ஆரம்பித்தது.
மொத்தத்தில் ஒரு கிடைக்கற்கரிய பொக்கிசத்தை, பாதுகாத்து வணங்க வேண்டிய திருக்கோவிலை,
வளரும் அடுத்த தலைமுறைக்கு நம் முன்னோர்களின் தியாகத்தை பார்த்த மாத்திரத்திலேயே எடுத்து
இயம்பும் ஒரு பாடசாலையை மண்ணோடு மண்ணாகப் புதைத்து விட்டோம்.. இந்த தியாகிகள் பூங்காவின்
பகுதிகளில் மீன் வியாபாரம் நடந்து கொண்டு இருப்பதை திரு.பத்மனாபன் ஆசிரியர் அவர்கள்
அனுப்பி இருப்பதைக் கண்டு மிகவும் மன வேதனை அடைந்தேன். நம்மாள வேற என்ன செய்ய இயலும்?
இது போன்ற ஒரு சம்பவம் நடைபெற்ற பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஜாலியன் வாலா பாக்
இன்றைக்கு ஒரு நூற்றாண்டு காலமாக விடுதலைப் போரின் நினைவுச்சின்னமாகப் போற்றப்படுகிறது. தமிழ் நாட்டின் கடைக்கோடியில் உள்ள பள்ளி மாணவனுக்கும்
பாடமாக்கப் பட்டு இருக்கிறது. இழிந்த தமிழனே… உன் தன்மானத்தின் விலை இவ்வளவு தான். இது அன்று மட்டும் அல்ல… இன்றும் கீழடி வரை தொடர்கிறது.
பசித்தவன் கேட்காமல், உணவு கிடைக்கப்போவது இல்லை.
இரண்டாம் ஜாலியன் வாலா பாக் என்று இருக்கும் இந்த நிகழ்வில் உயிர் நீத்த 75 பேரில்
14 பேர் பெண்கள். வடக்கு வாழ்கிறது… தெற்கு
தேய்கிறது என்பது போன்ற வார்த்தைகள் உண்மை தான்.
வடக்கு தாழ்ந்தது, தெற்கு உயர்ந்ததைப் பொறுத்துக் கொள்ள இயலாமல் அகத்திய முனியை
அனுப்பி விட்டவர்கள் அல்லவா? அதுதான். தெற்கு எப்பொழுதும் தாழ்ந்தே தான் இருக்க வேண்டும்
என்பது என்ன விதியா?
இன்றைக்கு இந்தியர் என்ற பெயர் தாங்கி சுதந்திரக் காற்றை சுவாசிக்க மஹாத்மா காந்தி,
சுபாஷ் சந்திரபோஸ் முதலியோர் பாடுபட்டு இருந்து இருந்தாலும், எம் தாய் மண்ணில் பிறந்த
தமிழ் வீரர்களின் உயிர்த்தியாகமும் எந்த வகையிலும் எவருடைய தியாகத்துக்கும் குறைவில்லை
என்பதில் மனதில் பெருமையே.
இந்தப் பகுதியினை இன்னுயிர் நீத்த எம் முன்னோரின் தியாகத்துக்கு காணிக்கை ஆக்குகிறேன்.
பின்
குறிப்பு:
இந்தச்
செய்தியைப் பார்க்கவும்
சுதந்திரத்திற்காக அன்று போராட்டம் ; பென்ஷனுக்காக இன்று போராட்டம்
Added : ஏப் 30, 2012 16:34 |
சிவகங்கை: சுதந்திரத்திற்காக போராடிய சிவகங்கை தியாகி சேதுராமன் மத்திய,மாநில அரசு பென்ஷனுக்காக
27 ஆண்டுகளாக,தொகுதி எம்.பி.,க்கள், கலெக்டர்களிடம் மனு கொடுத்து போராடியும் பென்ஷன் கிடைக்காமல் தவிக்கிறார். சிவகங்கை பொற்கைபாண்டியன் தெருவை சேர்ந்தவர் சேதுராமன்,92.
இவர், 1942ல் சுதந்திரத்திற்காக போராடினார். தேவகோட்டை தியாகிகள் பூங்கா அருகே
42ம் ஆண்டு நடந்த போராட்டத்தின் போது, பஸ்,தேவகோட்டை கோர்ட்டை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அன்றைய தினம் ஆங்கிலேயே ராணுவத்திடம் சிக்காமல், தலைமறைவானார்.
அதற்கு பின்,வந்த இவர் 1985ம் ஆண்டில் இருந்து சுதந்திர போராட்ட தியாகிக்கான மத்திய, மாநில அரசு பென்ஷன் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார். கடந்த 97ம் ஆண்டில் அப்போதைய கலெக்டர் தங்கவேலுவிடம் மனு செய்தார்.எம்.பி.,யாக உள்ள மத்திய அமைச்சர் சிதம்பரம், சுதர்சனநாச்சியப்பன் எம்.பி.,யிடமும் மனு கொடுத்தார். 2004ல் கலெக்டர் ராதாகிருஷ்ணனிடம் மனு அளித்தபோது, 1942 சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்கான உரிய ஆதாரம் இருப்பதால், பென்ஷன் வழங்கலாம் என பரிந்துரைத்தார். ஆனால், இன்று வரை இவருக்கு பென்ஷன் கிடைக்கவில்லை. தியாகி சேதுராமன் கூறியதாவது:
சுதந்திரத்திற்காக வெள்ளையர்களிடம் அன்று போராடினேன். இன்று பென்ஷனுக்காக அதிகாரிகளிடம் 27 ஆண்டுகளாக போராடுகிறேன். மத்திய அரசு மாதம் 10 ஆயிரம், மாநில அரசு 5 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்க வேண்டும். இவை கிடைத்தால் சிரமமின்றி ஜீவனம் நடத்துவேன், என்றார்.
அதற்கு பின்,வந்த இவர் 1985ம் ஆண்டில் இருந்து சுதந்திர போராட்ட தியாகிக்கான மத்திய, மாநில அரசு பென்ஷன் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார். கடந்த 97ம் ஆண்டில் அப்போதைய கலெக்டர் தங்கவேலுவிடம் மனு செய்தார்.எம்.பி.,யாக உள்ள மத்திய அமைச்சர் சிதம்பரம், சுதர்சனநாச்சியப்பன் எம்.பி.,யிடமும் மனு கொடுத்தார். 2004ல் கலெக்டர் ராதாகிருஷ்ணனிடம் மனு அளித்தபோது, 1942 சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்கான உரிய ஆதாரம் இருப்பதால், பென்ஷன் வழங்கலாம் என பரிந்துரைத்தார். ஆனால், இன்று வரை இவருக்கு பென்ஷன் கிடைக்கவில்லை. தியாகி சேதுராமன் கூறியதாவது:
சுதந்திரத்திற்காக வெள்ளையர்களிடம் அன்று போராடினேன். இன்று பென்ஷனுக்காக அதிகாரிகளிடம் 27 ஆண்டுகளாக போராடுகிறேன். மத்திய அரசு மாதம் 10 ஆயிரம், மாநில அரசு 5 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்க வேண்டும். இவை கிடைத்தால் சிரமமின்றி ஜீவனம் நடத்துவேன், என்றார்.
அப்பப்பா எத்தனை தகவல்கள். சில படி இயற்பெயர்கள் இப்படி நீங்கள் ஞாபகத்தில் வைத்திருக்கிறீர்கள்? புத்தகப் பண்ணை என்று பெயர் வைத்திருக்கிறார்கள். எவ்வளவு சிறப்பாக இருக்கிறது. பல தகவல்களை நான் அறிந்து கொண்டேன் குயிலியைப் பற்றி நான் முன்னமே அறிந்திருக்கின்றேன். உண்மைதான் நீங்கள் சொல்வது போல் வரலாற்றை பார்ப்பதற்கு டெல்லியைச் சுற்றி மட்டும் இருக்க வேண்டும் என்று இல்லை. சந்தோசமாக இருக்கின்றது இந்த பதிவை பார்க்கின்றபோது
பதிலளிநீக்குநன்றி சகோதரி
பதிலளிநீக்கு