அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 61


அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
13-08-2018
பகுதி: 61

சென்ற பகுதியில், இந்திய விடுதலைப்  போர் இயக்கத்தில் நமது  தேவகோட்டையில் களம்  கண்ட விடுதலை வீரர்களுக்கு வீர வணக்கம்.  இந்த பகுதி எண்  60 கொஞ்சம் நீண்டதாகத்தான் அமைந்து விட்டது.  எவ்வளவோ எத்தனித்தும் குறைக்க இயலவில்லை.  ஏனெனில் அந்தப் பகுதியில் என்னுடைய எழுத்துக்களை விடவும் பெருந்தலைவர்களாய் விளங்கிய திரு.சின்ன.அண்ணாமலை, மற்றும் தோழர் கே.டி.கே. தங்கமணி இவர்களின் வாய் மொழியினை அப்படியே பதிவிறக்கம் செய்து இருந்தேன்.  அவர்களின் அமுத மொழிகளை  அப்படியே பருக கொடுக்காமல் அவற்றில் கை  வைக்க எனக்கு என்ன உரிமை இருக்கிறது ?  இருந்த போதிலும், எப்போதும் போல் ரசித்து சுவைத்து பின்னூட்டங்கள் மூலம் ஊக்கப்படுத்திய அன்பு இதயங்களுக்கு நன்றி .

நமது நகரின் மணி மகுடமாக விளங்க வேண்டிய தியாகிகள் பூங்கா தற்போது இருக்கும் நிலையை விட்டு உயர்த்தி அதன் உண்மையான பாரம்பரியம் மிக்க அருமை பெருமைகளை உலகுக்கு அறியும் வண்ணம் எடுத்துக் கொண்டு வரும் முயற்சி நமது அனைவரின் கைகளிலும் இருக்கிறது.


தெய்வக்கோட்டையாம் தேவகோட்டையில் என்றும் இலக்கியத்துக்கும், தேசப்பற்றுக்கும், பொதுநலம் பேணுதலுக்கும் குறைவே இருந்ததில்லை.  தெய்வத் கோவில்களும், கல்விக்கோவில்களும் எங்கும் நிறை தங்க கோட்டை நமது நல் நகரம். சென்ற பகுதியினைப் படித்து விட்டு பலரும் நமது தியாகிகள் பூங்காவினை தொன்மை கெடாமல் பாதுகாக்க வேண்டும் என்றும், தியாகிகள் பற்றய செய்திகளை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று சொல்லி இருந்தார்கள்.  இந்த தொடர் மூலம் நமது தேவகோட்டையில் அமைப்புகளான

சிங்க நண்பர்கள் நடையாளர் சங்கம்
கலவைச்சோறு
சிந்தனைச் சோலை
பள்ளிகளின் ஆலோசகர்கள்

இதனை ஒரு இயக்கமாக எடுத்து சென்றால் நாம் வாழ தண்ணீரும் , காற்றும் கொடுத்த தாயினும் மேலான தயாபரனாய்த் திகழும் நம் தேவகோட்டையின் இரத்த வரலாறு என்றும் நிலைத்து நிற்கும். எனவே அன்பு நட்பூக்களே, தங்கள் இலக்கிய மணம் காணும் இளகிய மனதோடு இந்த குறிக்கோளையும் எடுத்து
செல்லுங்கள் என வேண்டுகிறேன்.  உங்களால் மட்டுமே இது முடியும். என் போன்றவர்கள் எழுத மட்டுமே..இயலும், தூரத்தில் இருந்து நகரைப் பார்ப்பதால்..

இப்போது இந்த தியாகிகள் பூங்காவிற்குள் செல்வதற்கு முன்  இதே பூங்கவின் வட புறம் இருந்து நமது நகரை பரிபாலனம் செய்து வரும் தேவகோட்டை நகராட்சியின் பழைய நினைவுகளுக்குள் (எனக்கு தெரிந்த வரை)  மூழ்குவோம்.

எனக்கு நினைவு தெரிந்த என் காலத்தில், தேவகோட்டை நகராட்சி, கண்ட தேவி சாலையில், புதூர் அக்ரஹாரம் ஆரம்பிக்கும் முச்சந்தியில் இருந்தது.  பின்னர் அந்த இட்த்தில் தாலுகா காவல் நிலையம் வரவும், நகராட்சி அலுவலகம் தற்போது இருக்கும் தியாகிகள் பூங்காவுக்கு வலது புறம் திருப்பத்தூர் சாலைக்கு மாறியது.   பழைய கட்டிடம் சில நாட்களுக்குப் பின் தீயணைப்பு நிலையமாக மாற்றப்பட்டது.   தற்போது திருப்பத்தூர் சாலையில் அமைந்து இருக்கும் தேவகோட்டை நகராட்சியின் அலுவலகக் கட்டிடத்தில் நகராட்சி மருத்துவமனையும் இயங்கியது.

Local Self Government G.O.No.4698, dated 27.10.1936 இன் படி, மூன்றாம் நிலை நகராட்சியாக உருவான தேவகோட்டை நகராட்சியின் பிறந்த தேதி 01-04-1937.  தற்போது 81 வயது ஆகும் தேவகோட்டை நகராட்சி மிகப் பழம்பெருமையும், பாரம்பரியமும் கொண்டது.  Rural Development & Local Self Government G.O.No.1677, dated 28.10.1978 இன் படி மூன்றாம் நிலை நகராட்சியில் இருந்து 1978 ஆம் வருடம் இரண்டாம் நிலை நகராட்சியாக நிலை உயர்ந்த்து.  பின், Municipal Administration & Water Supply Department G.O.Ms.No.85, dated 22.05.1998 இன் படி முதல் நிலை நகராட்சியாக உயர்ந்தது. அதென்ன மூன்றாம் நிலை... முதல் நிலை? என்று யோசிக்கிறீர்களா?.  எல்லாம் பணம் தானுங்க அளவுகோல். 
ரூ.10 கோடிக்கு மேல் வருட வருமானம் உள்ள நகராட்சி  =  Special Grade
ரூ. 6 கோடிக்கு மேல் 10 கோடி வரை வருமானம்    =  Selection Grade
ரூ. 4 கோடிக்கு மேல்  6 கோடி வரை வருமானம்         =  First Grade
ரூ. 4 கோடி வரை                                  = Second Grade
 எமது தலைமுறையைச் சேர்ந்தவர்களுக்கு தேவகோட்டையின் நகரத்தந்தை திரு.இராம வெள்ளையன் அவர்களைத் தெரியாமல் இருக்க முடியாது. இவரைப் பற்றிய நினவலைகள் இன்னும் தேவகோட்டையின் ஒவ்வொரு வீதி முனைகளிலும் மிதந்து கொண்டு தான் இருக்கும்.  எனக்கு இவரது நகராட்சிக்காலம் இன்னும் பசுமையாக நினைவில் நிற்கிறது. நம் நகரின் கழக்கண்மணிகளில் முதல் மணி.  இவரைப் பற்றிய நிகழ்வுகள் நினைவுகள் நிறைய... நிறைய... எனவே கொஞ்சம் மெதுவாகத்தான் அசை போட வேண்டும்.


இதற்கிடையில் இவருக்கு முந்திய தேவகோட்டையின் நகரத்தந்தையர் பற்றிய ஒரு குறிப்பு.  வழக்கம் போல உதவியது அன்பு ஆசிரியர் திரு.பத்மனாபன் அவர்கள், ஐக்கிய அமெரிக்க தேசத்தில் இருந்து.....
தேவகோட்டை நகராட்சி உறுப்பினர்கள் என்றால், எந்தக் காலமும் மறக்க முடியாதவர்கள்:
திரு.பெத்தபெருமாள் பிள்ளை
திரு.பரஞ்சோதி
இருவரும் தொடர்ந்து 5 முறை தவறாது மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு நகராட்சியின் நிரந்தர உறுப்பினர்களாக ஒரு காலத்தில் இருந்தவர்கள்.

1940களில், தேவகோட்டையின் நகரத்தந்தையாக அமர்ந்தவர், எனது அன்பு நண்பனும் வகுப்புத்தோழனுமாகிய, திரு.ரெகுநாதன், மற்றும் எனது அன்பு மாணாக்கன் திரு.கதிர்வேல் அவர்களின் தந்தை எமது மதிப்பிற்குரிய அய்யா. திரு.பெரியகருப்பன் அம்பலார் அவர்களின் தந்தை தெய்வத்திரு ரெகுநாதன் அம்பலார் அவர்கள்.


அதன் பின், தற்போதைய (முந்தைய திருவேங்கடமுடையான் பள்ளி, சிவன் கோவில் தெற்கு வீதி) சேர்மேன் மாணிக்கவாசகம் நினைவுப் பள்ளி நட்த்தி வரும் திரு.சோமசுந்தரம் செட்டியார் அவர்களின் பாட்டனார் திரு.மாணிக்கவாசகம் செட்டியார்.
அடுத்து SP.சுப்பிரமணியன் செட்டியார்
திரு.இராமநாதன் செட்டியார்....
SMM.சுப்பிரமணியன் செட்டியார்
அதன் பின்னர் திரு. இராம வெள்ளையன்
தொடர்ந்து எங்களோடு ஒரே பகுதியில் வசித்த காசிம் இராவுத்தர்
பின் திருமதி ஜான்சி ராணி,
திருமதி சாந்தா அரிமா
திருவாளர்.வேலுச்சாமி அவர்கள்
தற்சமயம் திருமதி சுமித்ரா  என்று நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட்து நமது நகராட்சி.
எம் நகரின் வளர்ச்சிக்கு பெருந்துணையாய் இருந்த அனைத்து உத்தமர்களுக்கும் இந்த தொடரின் மூலம் எமது நன்றிகளைக் காணிக்கை ஆக்குகிறோம்.

தொடர்வோம்……

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60