அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2; பகுதி: 2
அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2
பகுதி:
2
சிலம்பணி
விநாயகர் சன்னதி
நலம்பல நயக்க
நாவளம் பயக்க
குலம்குடி உய்க்க
குவலயம் சிறக்க
தலமதில் உயர்தேவி
தமிழ்நக ரெழும்
சிலம்பணி விநாயகன் சீரடியே சேர்
சிலம்பணி
விநாயகர்.... வேறு எந்த நகருக்கும் இல்லாத
எத்தனையோ பெருமைகளில் தனித்துவ குணங்களில் தாளில் சிலம்பினை அணிந்து நகரின் சீலம் காக்கும்
சிலம்பணி விநாயகர் தேவகோட்டையில் எழுந்து அருள்வதும் ஒன்று. இந்த சிலம்பணி விநாயகர் சன்னதியில் தான் தேவகோட்டை
நகரின் மகுடமான 'ஆர்ச்' (ARCH ) என்று அழைக்கப்படும் அலங்கார வளைவு கம்பீரமாக நிற்கிறது. இந்த ஆர்ச் பகுதியில் தான் நாம் இப்போது நிற்கிறோம். ஆர்ச்சின் வலது பக்கம் இருந்த மொச்சைக்கடை பற்றி
இதற்கு முந்தைய பதிவில் கண்டோம்.
இந்தத்
தொடர் பல பெரிய ஆளுமைகளை எமக்கு வழங்கி கொண்டே இருக்கிறது. எவ்வளவு பெரிய ஆளுமைகள். எப்படி இந்தத் தேவி நகரத் தேவி
இத்தனை பெரிய அறிவுச்சுடர்களைத் தன்னுள் அடை காத்து பொத்திப் பொத்தி வளர்த்து இருக்கிறாள்?. அந்தப் பெரும் ஆற்றல் கொண்டல்களும், எவ்வளவு அமைதியாய் அவரவர் திறன் காட்டி தன்னடக்கத்தோடு இன்றும்
இருந்து வருகிறார்கள். அந்த வகையிலே எமக்கு
அறிமுகமானவர் தேவகோட்டை சிலம்பணி வடக்கு அக்ரஹாரத்தில் வாழ்ந்து வந்த வழக்குரைஞர் திருவாளர்
வெங்கடபதி அவர்கள். தேவகோட்டையின் வரலாற்றோடு ஒரு 60 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தவர். இவரது தந்தையார் காலத்தையும் சேர்த்து நினைவு கூறும்
இவரது வாய்மொழி தேவகோட்டையின் ஒரு நூற்றாண்டு
காலத்தை கண் முன்னே கொண்டு வருகிறது. இந்தத்
தொடரின் நோக்கமே நமது நகரின் சரித்திரம் அடுத்த தலைமுறைக்கு இறக்கி வைக்கப்பட வேண்டும்
என்பது தானே. அதில் நாமும் எவ்வளவு புதிய செய்திகளை
அறிந்து கொள்கிறோம் என்னும் போது தொடரினை எழுதும்
அலுப்பு தொலைந்து விடுகின்றது.
நீதி
மன்றங்களின் நித்திய பரிபாலனம் செய்து வந்த நெறி வழுவா நகரம் தேவகோட்டை. வெள்ளையர் காலத்திலும் அதன் பிறகும் கூட மிகச் சிறந்த
வழக்குரைஞர்கள், வழக்கறிஞர்கள் நிறைந்த பூமி.
அதிலும் இந்த சிலம்பணி அக்ரகாரம், திண்ணன் செட்டி அக்ரகாரம் இவை எல்லாம் சட்டப் புத்தகங்களின் பெரும் சுமையை சாதாரணமாகத் தாங்கி இருந்த தளங்கள். அதனால் தான் என்னவோ மனிதம் நிறைந்த புனிதம் நிறை தீர்ப்புகள் வழங்கி
நீதியை நிலை நாட்டிய நீதி அரசர்கள், லெட்சுமணன் அவர்கள், கற்பக விநாயகம் போன்ற நீதி இறைவர்கள் தோன்றிய மண்.
இந்த
வழக்கறிஞர் திரு வேங்கடபதி அவர்கள் நாம் அறியாத பல தகவல்களை அறியத் தந்தார். இவரது தந்தையார் திரு.ஸ்ரீனிவாச அய்யங்கார்,
1927 வருட வாக்கில் தேவகோட்டையில் தமது வழக்குரைக்கும் தொழிலை ஆரம்பித்து உள்ளார்.
95 வருடங்களுக்கு முந்தைய தேவகோட்டை என்பதை நீங்கள் அனைவரும் மனதில் ஏற்றி அந்தக் கால
காட்டத்து நகரை மனதில் ஊற்றிக் கொள்ளுங்கள். மிகப்பெரும் தன வணிகர்களான நகரத்தார்களுக்கு வழக்குரைஞராக வாதிட்டவர்,
1996 ஆம் ஆண்டு தனது 94 ஆம் வயதில் இயற்கை
எய்தி இருக்கிறார்.
தந்தையைப்
போலவே வழக்கறிஞரான திரு. வெங்கடபதி அய்யங்கார் அவர்களும் தேவகோட்டையில் இருந்து பணி புரிந்து விட்டு தந்து 79 ஆம் வயதில் 2018 ஆம் ஆண்டு சென்னையிலும், பெங்களூருவிலும் வசிக்கும் தனது மகன், மக்கள் இல்லம் சென்று விட்டார்.
ஆயின் இன்றும் தனது கட்சிக்காரர்களுக்கு சட்ட சேவை செய்து கொண்டு தான் இருக்கிறார்,
இந்த 82 வயது இளைஞர். இவர் பகிர்ந்த பல விபரங்கள்
இந்தத் தொடரின் இந்தப் பகுதியில் இடம் பெறுகின்றன . அய்யா திரு வெங்கடபதி அவர்களுக்கு நாம் அனைவரும்
நன்றி கூறி தொடர்வோம்.
மொச்சைக்கடை
பார்த்தோம். வாங்கி ருசிக்க ஆசை தான். அன்றைய
ருசிக்கு இன்று செய்து கொடுக்கத்தான் ஆட்கள் இல்லை. இந்த மொச்சைக்கடையை இசக்கி மொச்சைக் கடை என்றும்
அழைப்பார்கள். இந்தக் கடைக்கும் ஒரு வரலாறு இருக்கிறது. மொச்சைக்கடை வரலாறு எல்லாம் இப்போ தேவைதானா என்று எழுப்பும் குரல்கள் எமக்கு கேட்காமல் இல்லை. 'தெய்வம் என்றால் அது தெய்வம்.... கல் என்றால் வெறும்
சிலை தான்' என்பது போல அது அவரவர் மனம் சார்ந்த
பொருண்மை. தேவகோட்டை எமக்கு தெய்வம் என்பதே
இந்த தொடரின் சக்தி.
1940
இன் இறுதிகளில் சாரதாம்பாள் என்ற ஒரு அந்தணர் அம்மையார் தேவகோட்டையில் இட்லி மொச்சைக்கடை
நடத்தி வந்து இருக்கிறார். அப்ப இந்த மொச்சை இட்லிக்கு வயது 81, இன்றைய தேதியில். அந்த கடை மொச்சைக்கு நம் மக்கள் வைத்த பெயர்,
'மொச்சையம்மா கடை மொச்சை'. அந்த அம்மையாருக்கு
உதவி ஆட்கள் அவரின் மகளும், இசக்கியப்ப தேவர் என்பவரும். சாரதாம்பாள் காலத்துக்குப் பிறகு அவரது மகள் அந்தக் கடையை கொஞ்ச காலம் நடத்தி வந்து இருக்கிறார். அதற்கு மேல் இயலவில்லை. இசக்கியப்ப தேவருக்கே கடையின் மாண்பினைக் காக்கும்
பணியினையும் சேர்த்து விற்று விட்டார். மொச்சையம்மா
கடை இப்போது எசக்கி மொச்சைக்கடை என்று புதுப்பெயர் பெற்றது. இசக்கியாருக்குப் பின் அவரது மைந்தர் சுவாமிநாதன்
அந்தக் கடையை நடத்தி வந்தார். இதற்கு முந்தைய பத்திவைப் படித்து விட்டு சுவிட்சர்லாந்து
நாட்டின் 'ஜெனீவா' நகரில் இருந்து ஐ.நா. சபையில் பணியாற்றும் எனது கல்லூரித் தோழர் திரு.கணபதி சுப்பிரமணியம்
அவர்கள், நம் நகர் மொச்சை பற்றி இவ்வாறு அங்கலாய்த்து இருந்தார்.
'நானும்
சுவிட்சர்லாந்து வந்த நாளில் இருந்து சாமிநாதன் கடை மொச்சை மாதிரி ஒரு முறையாவது செய்து
பார்த்து ருசித்து விட வேண்டும் என்றும் பல முறை முயன்றும் ஒரு முறை கூடாது தேறவில்லை'.
இப்போது
புரிகிறதா? பாரம்பரியம் என்ற வாக்கியத்தின்
உண்மைப் பொருள். அததற்கென்று ஒரு தனிச்சுவை
இருக்கிறது. எந்த மென் பொருளும் இதனைப் படி எடுக்க முடியாது.
இந்த
மொச்சைக்கடை இருந்த இடத்தில் திரு.சாமிநாதன் அவர்களின் மகன் 'படிமம் ( PHOTOCOPYING ) மற்றும் அலை பேசி சேவைகள் நடத்தி
வருவதாகவும், இதன் எதிர் புறத்தில் மொச்சைக்கடை நடந்து வருவதாகவும் கேள்வியுற்றேன். வாழ்க.
அவரை ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்னதாக முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திரு.அங்குசாமி
அவர்களுடன் அங்கு சென்று இருக்கையில் சிறுவனாகப் பார்த்த நினைவு இருக்கிறது.
இப்போது
அடுத்த இடத்துக்கு நகர்வோம். சரித்திர புதினங்கள்
முடிசூடா மன்னன் சாண்டில்யன் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்து இருப்பீர்கள். அதே சாண்டில்யனுக்கும் இந்த சிலம்பணி சன்னதி தெருவுக்கும்
ஒரு தொடர்பு இருந்ததை பலர் அறிந்து இருக்க மாட்டீர்கள். அவற்றை அடுத்த பகுதிகளில் பார்ப்போம்.
இந்த மொச்சைக் கடை சாமிநாதன் அண்ணன் ஒரு நடிகர் என்று சொன்னீர்களே.. அதை பற்றி சொல்லாமல் போகிறீர்களே . என்று கேட்கிறீர்களா ? கட்டாயம் அந்த நினைவுகளை அசை போடுவோம்.. சிலம்பணி சன்னதி தெருவில் சென்று பராக்கு பார்த்து விட்டு சிலம்பணிந்த சீராளன் பாதங்கள் தொழுது எழுந்து விட்டு பின்னர்...
அதுவரை....ஜூ......ட்
....
Super Mani...convey our best regards to Ayya Venkadapathi...
பதிலளிநீக்கு