அசை போடும் தேவகோட்டை நினைவுகள் பாகம்: 2; பகுதி: 3
நதி வெள்ளம் காய்ந்து விட்டால் நதி செய்த குற்றம் இல்லை
இந்த
பிரபஞ்சத்தில் ஆத்மா அழியாதது. இந்த உடலை ஆன்மா
கொஞ்ச காலத்துக்கு மேலாடை போல உடுத்தி விட்டு நேரம் வரும் போது பாம்பு சட்டையை கழற்றுவது போல போட்டு விட்டு சென்று
விடுகிறது.. அந்த ஆன்மாவின் வேறுபட்ட உருவங்கள் தான் நாம் காணும் வடிவங்கள்.. படிவங்கள்...
என்றும் சிரஞ்சீவியாக வாழும் தேவி நகர் தேவகோட்டைக்கு வாழும் மனிதர்களாகிய நாமும், நம் முன்னோர்களும், கட்டிடங்களும் இந்த நகரம் கழற்றி போடும் சட்டைகள்தான். சட்டை செய்வது நம் கடமை... நாம் வந்து போகின்ற வழிப்போக்கர்கள் மட்டுமே... நினைவுகள் மட்டுமே மிச்சம்....
நினைவுகளை
மட்டுமே சேமித்தாய்
இந்த மாபெரும் காலத் தொடரிலே நமது சிந்தனைக்கு எட்டிய சிலரை, நம் மண்ணிலே வாழ்ந்து மறைந்த பெரியவர்களின் நினைவுகளை பகிர இந்த தொடரை பயன் படுத்திக்கொள்வது நல்ல பணி என்று நினைக்கிறேன்.
தமிழுக்கும் நமது தேவகோட்டைக்கும் நிறைய தொடர்பு உண்டு. நம் பகுதியைச் சேர்ந்த பிராமணர்கள், தமிழுக்கும் சமூகத்துக்கும் நிறையவே செய்து இருக்கிறார்கள். இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஏதோ ஒரு வகையிலே உயர் குலத்தில் பிறந்தோர் தமிழுக்கு தீங்கு செய்து விட்டதை போன்ற ஒரு மாயை ஏற்படுத்த பட்டு இருக்கிறது. உண்மை எப்போதும் உணரப்பட வேண்டும். அமரர் உ.வே.சாமிநாத அய்யர் இல்லை என்றால் இன்றைக்கு நாம் வாசிக்கும் பண்டைய தமிழ் இலக்கியங்கள் பல இருந்து இருக்காது. தேவகோட்டையில் பலர் அந்தக் காலத்திலேயே நம் நகரில் தங்கி இருந்து நிறைய தமிழ்ப்பணிகள் புரிந்து இருக்கிறார்கள். அவர்களை நகரத்தார் பலரும் ஆதரித்து இருந்து இருக்கிறார்கள். கம்பனே தன் கடைக்காலத்தில் தஞ்சம் புகுந்த நகரத்தார் நிலம் அல்லவா?
தமிழக இலக்கிய மேன்மைக்கு மிகவும் பாடுபட்டவர்கள் வரிசையில் இரண்டு இராகவய்யங்கார்கள் உண்டு. ஒருவர் இராமநாதபுரம் புதுக்கோட்டை ரா.இராகவையங்கார் (பெரியவர்), மற்றவர் மு.இராகவையங்கார் (முன்னவருக்கு மருமகன் ). நம் தேவகோட்டையோடு உறவு உடையவர் பெரியவரான ரா.இராகவையங்கார்.
1902 இல் மதுரையில் பாண்டித்துரை தேவர் நான்காம் தமிழ்ச்சங்கம் தொடங்கிய வேளையில் இராமநாதபுரம் சேதுபதியின் அன்புக்கு இசைந்து அவருடன் இணைந்து பல பழைய தமிழ் நூற்களை பதிப்பித்து வெளியிட்ட பெருமகனார். அன்றைய ஒருங்கிணைந்த இராமநாதபுரம் மாவட்டம் தென்னவராயன் புதுக்கோட்டையில் பிறந்தவர். தமிழ் தாத்தா உ.வே.சு. தனது ஆசானான திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளை ஒருவரை மட்டுமே 'மகாவித்வான்' என்று போற்றியுள்ளார். ஆனால் அதே உ.வே.சா. வால் மகாவித்வான்' என்ற பட்டம் வழங்கப்பட்டு பாராட்டப் பெற்றவர் இந்த ரா.இராகவையங்கார். சேதுபதி சமஸ்தான ஆதரவில் இருந்த போதும், 1902 ஆம் ஆண்டு, உடல் நலம் குன்றிய போது அவரை கம்பனை ஆதரித்த சடையப்ப வள்ளல் போலும், வள்ளல் மெ .அரு . இராமநாதன் செட்டியார் அன்போடு ஆதரித்து வந்து இருக்கிறார். நமது தேவகோட்டை நகரில் தங்கி 7 ஆண்டுகள் வரை இங்கு பலருக்கும் பல நல்ல பழைய தமிழ் நூல்களின் அமுதம் அள்ளி வழங்கி இருக்கின்றார்.
ஹரிஜன
ரெங்கண்ணா
திரு ரெங்கண்ணா அவர்கள் அய்யங்கார் குடும்பத்தில் பிறந்தவர்.. தேவகோட்டை புதூர் அக்ரஹாரம் தெற்கில் வாழ்ந்து வந்த புகழ் பெற்ற மூத்த வழக்கறிஞர் ரெங்கண்ணா என்று அழைக்கப்பட்ட A .ரெங்கசாமி அய்யங்கார். காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர். இதனால் இவர் 'ஹரிஜன் ரெங்கண்ணா ' என்று அழைக்கப்பட்டார்.
இந்த ஹரிஜன் ரெங்கண்ணா பற்றிய பழைய சம்பவங்களையும் நினைவுகளையும் அதன் தொடர்பான பெரிய மனிதர்களையும் நமக்கு அறியத்தருபவர் திருமிகு . வெங்கடபதி அய்யங்கார் அவர்கள். இத்தனை காலம் எப்படி இவரது தொடர்பு இல்லாமல் இருந்து திடீரென ஊற்றுக்கண் திறந்தது போல இந்த மூன்றாம் கண் கிடைத்தது காலச்சுவட்டினைக் காணத்தானோ?
திருவாளர் வேங்கடபதி அவர்களின் குடும்பமே மிகப்பெரும் பாரம்பரியம் பெற்றதும் அவர்களின் அனைத்து உறவுகளும் மிகப்பெரும் ஆளுமைகளும், இந்த தேவகோட்டை நகரிலே பலருக்கும் சட்ட வழியிலும், சமூக வகையிலும் பல சேவைகள் புரிந்ததாக தெரிகிறது. வேங்கடபதியாரின் தந்தை திரு V. ஸ்ரீநிவாச அய்யங்கார் 1927 ஆம் ஆண்டு முதலே ( 94 ஆண்டுகளுக்கு முன்னர் அன்பர்களே) தேவகோட்டையில் வழக்குரைஞராக வாழ்வைத் தொடங்கி இருக்கிறார். மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலும், அமெரிக்கன் கல்லூரியிலும், பின்னர் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் ( 1923~25), சென்னை சட்டக்கல்லூரியில் (1925~27) பயின்ற அத்தனை இடங்களிலும் கால் பந்து விளையாட்டுக் குழுவில் தலைவராகவே (CAPTAIN ) இருந்திருக்கிறார். அவ்வளவு அருமையான விளையாட்டு வீரர் என்பதால் நமது தேவகோட்டை நகரின் விடுதலை வீரர் ஆர்ச் அண்ணாமலை அவர்கள் இந்த ஸ்ரீனிவாச ஐயங்காரின் தீவிர ரசிகராம். CAPTAIN என்றுதான் தியாகி அண்ணாமலை, அய்யங்காரை அழைப்பது வழக்கம்.
வாழ்க்கையில்
ஒவ்வொருவருக்கும் ஒருவர் முன்மாதிரியாக தூண்டு கோலாக, தமிழகத்தின் வழக்கறிஞர் பெருமக்கள் தமது அகன்ற ஆழ்ந்த அறிவிலே நீதித்துறையில் மனு நீதி சோழர்களாக விளங்கி இருக்கிறார்கள். மானசீக குருவாக இருப்பார்கள்.
ஒருவரை வைத்து அவர் போல ஆக வேண்டும் என்கிற
உத்வேகம் தான் நல்ல மனிதர்களை உருவாக்குகிறது. ரௌடிகளையும் அப்படிதான். அதுபோல இந்த V .ஸ்ரீனிவாச அய்யங்காரின் பக்திக்குரிய
குருவாக இருந்தவர் சென்னை மாகாண அட்வகேட் ஜெனெரல் ஆக அந்நாளில் மிகப்பெரும் புகழுடன்
இருந்த S .ஸ்ரீனிவாச அய்யங்கார். 1927 ல்
அசாம், கௌஹாத்தியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டின் தலைவர் இவர் என்றால்
பார்த்துக் கொள்ளுங்களேன். திருவாடானை வட்டம் திருத்தேர்வலையின் தாசில்தாரான நமது வெங்கடபதி
ஐயாவின் பாட்டனாரும் திருத்தேர்வலையின் ஜமீனான அட்வகேட் ஜெனெரல் ஸ்ரீநிவாச அய்யங்காருக்கும்
நட்பு இருந்ததில் வியப்பில்லை.
நமது
வெங்கடபதி தந்தை வழி இப்படி என்றால் தாய் வழியிலும் தனது பெரியம்மாவின் கணவராக வாய்த்தவர்தான் தேவகோட்டையில்
மிகப்பெரும் புகழுடன் விளங்கிய வழக்கறிஞர் 'ஹரிஜன் ரெங்கண்ணா' என்றழைக்கப்பட்ட A .ரெங்கசாமி
அய்யங்கார். அய்யா வேங்கடபதியின் தாய் வழிப் பாட்டனார் பரமக்குடியில் மிகப் புகழுடன் விளங்கிய
வேதாந்தம் ஐயங்கார். அவரின் கடைசி பெண்ணான திருமதி இலக்குமி தான் நம்ம
ஹரிஜன் ரெங்கண்ணாவின் மனைவி
1923க்கு முன்னர் தேவகோட்டையில் SUBCOURT என்று அழைக்கப்படும் துணை நீதி மன்றங்கள் இல்லை. இந்த ஹரிஜன் ரெங்கண்ணா சிவகங்கை நீதி மன்றங்களில் வழக்குகளை கையாண்டு இருக்கிறார் அது வரை. 1923 இல் முதன் முதலாக தேவகோட்டையில் தற்காலிக துணை நீதி மன்றம் அமைக்கப் பட்டு இருக்கிறது. அதன் பின்னர் ரெங்கண்ணா தேவகோட்டைக்கு நிரந்தரமாக வந்து விட்டார். அந்தக் கால கட்டத்தில் புதூர் அக்கிரகாரம் மிக முக்கியமான இடமாக விளங்கி இருக்கிறது. அங்குதான் இந்த நீதி மன்ற வளாகம் அமைந்து இருந்தது. எனவே அந்த புதூர் அக்ரஹாரத்திலேயே தனது பெரிய வீட்டினையும் அமைத்துக் கொண்டார் ரெங்கண்ணா . 1942 ஆம் ஆண்டு விடுதலை வேள்வியில் ஓம குண்டலத்தில் அவிர்பாகமாக தீயில் இடப்பட்ட நீதி மன்றம் 1930 ஆம் ஆண்டு தேவகோட்டை ஜமீன்தாரால் எழுப்பப் பெற்ற பளிங்கு மாளிகை வந்தது பின்னர் தான்.
உறுதியான காங்கிரசு தொண்டரான இவர் அணிகின்ற அனைத்து ஆடைகளும், கோட் உட்பட கதர் மட்டுமே அணிவார். ரெங்கண்ணா மிகப்பெரும் மாளிகையை புதூர் அக்ரஹாரத்தில் எழுப்பினார் . தொழிலில் நல்ல பெயர், நல்ல வருமானம் ... பெரிய வீடு... இரண்டு தோட்டங்களுடனும் , மூன்று கிணறுகளுடனும்...மொத்தமாக ஏறக்குறைய இரண்டு ஏக்கர் நிலப்பரப்பு.. வெங்கடபதி ஐயாவின் தந்தை ஸ்ரீனிவாச அய்யங்காரும், மற்றும் தாய் வழி உறவினர் பலரும் இந்த ஹரிஜன் ரெங்கானாவின் ஜுனியர்கள் . மகாத்மா காந்தி இந்த ரெங்கண்ணாவின் இல்லத்தில் 4 நாட்கள் தங்கி இருந்தாராம்.
நீதி
மன்றம் தேவகோட்டையின் இன்றைய தியாகிகள் சாலைக்கு புதூர் பகுதியில் இருந்து மாற்றப்பட்ட
பின்னர், நம்ம ரெங்கண்ணா ஆர்ச்சுக்குள் சிலம்பணி சன்னதி தெருவில், தனியாக பெரிய அலுவலகம்
திறந்தார். ராஜாஜி பிரஸ் என்று ஒரு அச்சகம் அதன் அருகில் இவரது தர்பாரான அலுவலகம். சட்டத்துறையில், நீதித்துறையில் வெளிவரும் அனைத்து
புத்தகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், கால இடைவெளியில் வரும் இதழ்களுக்கும் இவர்
சந்தாதாரர். எந்த ஒரு வழக்கறிஞரும் எந்த ஒரு புதிய சட்ட இயற்றலும் அல்லது தீர்ப்புகள்
விபரங்களும் அறிந்து கொள்ள வேண்டுமெனில் இவரது மிகப்பெரிய நூலகத்தை நாடலாம். தனது அலுவலகத்துக்கு
வழக்கு தொடர்பாக வருகின்ற கட்சிக் காரர்கள் சாப்பிடுவதற்காக வென்றே தனியாக சமையல் ஆட்கள்
போட்டு சாப்பாடு பரிமாறல் எப்போதும் நடக்குமாம்.
தமிழகத்தின் வழக்கறிஞர் பெருமக்கள் தமது அகன்ற ஆழ்ந்த அறிவிலே நீதித்துறையில் மனு நீதி சோழர்களாக விளங்கி இருக்கிறார்கள். தேவகோட்டைக்கு பெருமை சேர்க்கின்ற ஜஸ்டிஸ் இலக்குவனார், ஜஸ்டிஸ் கற்பகவிநாயகம் அவர்களை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். பல வழக்கறிஞர் பெருமக்கள் நூற்றாண்டு காலமாக ஆங்கிலேய நீதிபதிகளும் பின்பற்றும் படியான சட்ட நுணுக்கங்களை அணுக்கமாக அறிந்தவர்கள்.
மண்டகொளத்தூர் பதஞ்சலி சாஸ்திரி (சனவரி 4, 1889 – 16 மார்ச் 1963) என்பவர் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நவம்பர் 7, 1951 முதல் சனவரி 3, 1954 வரை இருந்தவர். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் திருவண்ணாமலை மாவட்டம் மண்டகொளத்தூரில் பிறந்தார். இந்தியாவின் இரண்டாவது உச்ச நீதி மன்றத்தின் நீதிபதியாகிய இவர் நமது தேவகோட்டைக்கு வந்த பொழுது எடுத்த நிழற்படம் உங்கள் பார்வைக்கு ..
சிலம்பணி சன்னதி தெருவில் வாழ்ந்த ஒருவரை மட்டும் தான் பார்த்து இருக்கிறோம்.. இந்த தேவகோட்டை மண் மகள் எத்தனை எத்தனை மனிதர்களின் எத்தனை நிறங்களை பார்த்து இருப்பாள்? பார்த்து கொண்டே இருப்பாள்..
புனை கதைகளை விட நாம் வாழும் இடத்தில் வளர்ந்த மனிதர்களின் நிகழ்வுகளை நாம் பார்த்தாலே இயற்கை நமக்கு போதனை தந்து விடும்... ஞானம் பெற கார்பொரேட் சாமியார்களிடம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை .
செல்வோம் என்று வரும் செல்வம்.... பேணிக் காக்காவிட்டால் குப்புறத் தள்ளி குழியும் பறித்து விடும். குதிரையை போன்றது...
விதி
செய்த குற்றம் இன்றி வேறு யாராம்மா ......
தொடர்வோம்
தோழர்களே....
Very supper.hwo do you clout the lnfermas.
பதிலளிநீக்குஅருமை. பல தேடல்கள் உங்கள் அறிவின் மேன்மைக்கு மட்டுமல்ல எங்கள் அறிவின் மேன்மைக்கும் உதவி இருக்கிறீர்கள். பெயர்கள் தான் சிலவேளை மறந்து போகும். தகவல்கள் பதிவுக்குள் இறக்கிவிட்டேன். நன்றி அண்ணா.
பதிலளிநீக்கு