அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2 பகுதி: 4

 சிலம்பணி சன்னதி தெரு

இப்போ மறுபடியும் ஆர்ச் வளவுக்குள்ளே செல்வோம்.    உங்களை எல்லாம் ஒரு 90 ஆண்டுகளுக்கு முந்தைய தேவகோட்டை எப்படி இருந்து இருக்கும் என்று ஒரு கற்பனையோடு இங்கே நிழலாக வார்த்தைகளில் வந்து செல்லும் வடிவங்களை அவர்கள் தற்போது உங்கள் முன் இருப்பதாக நினைத்துக் கொண்டு நிகழ்வுகளை வாசிக்கும் படி வேண்டுகிறேன்.  90 வருடங்களுக்கு முந்திய நினைவுகளை பெரியவர்களிடம் இருந்து அதிலும் குறிப்பாக வழக்கறிஞர் வெங்கடபதி அய்யா அவர்களிடம் இருந்து கேட்டு அத்துடன் என் மனதில் தேங்கி நிற்கும் நினைவுகளைக்  கலந்து ஒரு 90 வருட கால நினைவுகளை இங்கே வடிக்கிறேன்.   உங்கள் அனைவரது பின்னூட்டங்கள் மிக மிக அவசியம்.

 இப்போ ஆர்ச்சின் வலது புறம், அதாவது சிலம்பணி சன்னதி தெருவின் தெற்கு வாடையில் நமது நகர்வைத் தொடர்வோம்.  ஆர்ச்சின் வலப்புறத்தை  ஓட்டிய  ஆர்ச்சை ஒட்டி ஒரு கோனார் பெட்டிக்கடை இருந்தது. அவர்.வீடு வீரபாண்டியபுரம் கிழக்குதெருவில் இருந்தது. அவர் சட்டை அணியமாட்டார்.  அடுத்து கணேஷ் காபி ஹோட்டல், நாயாயணவிலாஸ் ஹோட்டல் போட்டி ஹோட்டல் என்பார்கள்.  அடுத்து சங்கர் இட்லிகடை, அடுத்து டெய்லர்கடை. 


பிறகு சில காலம் கழித்து அது புரோட்டாகடையாக மாறியது அதுதான் தேவகோட்டையில் முதல் புரோட்டா கடை அதை நடத்தியவர் பாபா ராவுத்தர். பின்பு சில நாள் கழித்து கடையை வெ.ஊரணிக்கு மாற்றிவிட்டார் அப்போது புரோட்டாவும் அதன் சால்னாவும் வாசம் தூக்கும்.  இரவுமட்டும்தான் கடையிருக்கும் சால்னா இப்போதுபோல் பிராய்லர்கோழி சால்னாயில்லை ஆட்டுக்கறி சால்னா அவ்வளவு ருசி இரண்டு புரோட்டா 10 பைசா சிலநாள்கழித்து கூட்டம் அதிகமானவுடன் 15 பைசாஆக்கிவிட்டனர்.  





இப்படி புரோட்டா விலை ஏற்றத்தை பற்றி அங்கலாய்ப்பவர் எம்முடன் 35 ஆண்டு காலத்துக்கு முன்னர் மருது  பாண்டியர் போக்கு வரத்து கழகத்தின் தேவகோட்டை கிளையின் அலுவலகப் பணியாளராய் இருந்த திரு.வெங்கடாச்சலம் அவர்கள் .  நான் எப்போதும் குறிப்பிடுவது போல இது நமது தேவகோட்டை மக்களின் தொடர். இதை முழு மூச்சாக எழுதுவது நீங்கள் தான்.   


இந்த பாவா ராவுத்தர் குடும்பம் எனக்கு மிகவும் சின்ன வயதில் இருந்து பழக்கம். அன்றைய தி.மு.க.வின் உண்மை விசுவாசி. இவரது மகன் மதார் சிக்கந்தர் ஜைனுல் ஆபீதீன் ( நாங்கள் சேட் என்றுதான் அழைப்போம் அந்தக் காலத்தில்) என் மைத்துனர் பாலுவுக்கு மிகவும் நெருங்கிய நண்பர். 







மதார் சிக்கந்தர் தந்தை வழியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் பாசறை தொண்டராக இன்றும் வலம் வருகிறார்.  இந்த பாவை  ராவுத்தரின்  அண்ணன்  ஜனாப்.யாசின் எங்கள் வட்டாணம் ரோடில் பெரிய பள்ளி வாசலுக்கு அருகில் டீ  மற்றும் பரோட்டோ கடை வைத்து இருந்தார். இவர் பற்றி நாம் சென்ற பகுதியிலேயே பார்த்து விட்டோம்.




 அப்புறம் ஒரு வீடு , மொச்சைக்கடை சாமிநாதன் அவர்களுக்கு சொந்தமானது.தற்போது அங்குதான் பாரம்பரியம் மிகுந்த மொச்சைக் கடை நடை பெறுகிறது என்று அறிந்தேன்.  உள்ளே வரிசையாய்  வீடுகள் ..  இந்த கட்டிடம்  நான் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில்  எமது ஒத்தக்கடை பகுதியின் அகில இந்திய அண்ணா தி மு க வின் செயல் வீரர்களான  அமரர் நாவாப் அண்ணன் , ஜெயபால் மாமா இவர்கள்  அதன் பின்னர் தொகுதியின் சட்ட மன்ற உறுப்பினரானவரும் எனது உறவினருமான அமரர் திரு.அங்குச்சாமி இவர்கள் குழுவோடு பின் தொடர்வேன்.  அந்தக் காலகட்டத்திலே திரு.அங்குசாமி அவர்களும், மொச்சைக் கடை சாமிநாதன் அவர்களும் பிரிய தோழர்கள், நாடகப் பிரியர்கள்.  நாடகம் பார்ப்பதில் பிரியர் இல்லை.. நாடகம் நடத்திடுவதில் ,,, நடிப்பதில்.. பிரியர்கள். எனக்கு தெரிந்த வகையில் தேவகோட்டை  பெருமாள் கோவில் அருகே கட்சியின் கொள்கை பரப்புவதாகிய பல நாடகங்களை அரங்கேற்றி இருந்தனர்.  இப்போது இந்த சாமிநாதன் அவர்களின் வீட்டில் இரவு 10 மணிக்கு மேல் ஒரே நாடக ஒத்திகை தான் நடக்கும்.  சாமிநாதன் அண்ணன் , அங்குசாமி அண்ணன் மற்றும் பலர் வசனங்களைப்  பேசி ஒத்திகை பார்ப்பார்கள். நடிகைக்கு, மதுரையில் இருந்து வரவழைத்து பின்னர் ஆர்ச் அண்ணா அரங்கில் அரங்கேறிய நாடகம் பார்த்த நினைவு இருக்கிறது.

 


கிரிக்கெட் அண்ணா

இந்த மொச்சைக்கடை  சாமிநாதனுக்குச் சொந்தமான இல்லம் அந்த நாளில் கோவிந்தராஜ அய்யங்கார் என்பவருடையது.  அவரை அனைவரும் கிரிக்கெட் அண்ணா என்றே அழைப்பார்கள். ஏனெனில் அக்ராஹாரப்  பையன்களுக்கு கிரிக்கெட் மற்றும் பூப்பந்து (BALL BADMINTON ) கற்றுத்தந்து அவர்களை தினமும் விளையாட வைத்து போட்டிகள் எல்லாம் நடத்துவாராம். அவரிடம் இருந்து அந்த இல்லம் திரு.சாமிநாதன் அவர்களால் வாங்கப்பெற்றது. 

 


 

பஞ்சாங்க அய்யங்கார்

 இதற்கு அடுத்தது பஞ்சாங்க அய்யங்கார் என்று அழைக்கப்பட்ட செல்லூர் அய்யங்காருக்கு சொந்தமான வரிசை வீடுகள். தமிழகம் முழுவதும் பல சோதிட முறைகள் இருந்தாலும் பஞ்சாங்கத்தைப் பொறுத்த வரையில், ஆற்காடு சர்வ முகூர்த்த பஞ்சாங்கம்,  பாம்புப் பஞ்சாங்கம், இராமநாதபுரம் சேது சமஸ்தானப் பஞ்சாங்கம், யாழ்ப்பாணம் பஞ்சாங்கம், திருநெல்வேலி வாக்கியப் பஞ்சாங்கம், வாசன் திருக்கணித பஞ்சாங்கம் என்பவை மிகவும் பெயர் பெற்றவை.  ஒன்றுக்கு ஒன்று கொஞ்சம் வேறுபாடு இருக்கும். இந்த பஞ்சாங்க அய்யங்கார்களிடம் அந்தக் கால கட்டத்தில் நல்ல நேரம் குறித்து  வாங்காத நகரத்தார் பெருமக்களே இல்லை. மற்ற சமூகத்தினரும் நேரக்  கணிப்புகளை இவர்களையே நாடினர். எனவே இவர்கள் பஞ்சாங்க அய்யங்கார்கள்  என்றே அழைக்கப்பட்டனர்.

 



இந்த இல்லத்தில் தான் நமது அன்பர்  திரு.வெங்கடபதி அவர்கள் குடும்பம் வாடகைக்கு குடி இருந்து இருக்கிறது.   அங்குதான்  1939 இல் இவர் பிறந்து இருக்கிறார். இன்றைய தியாகிகள் சாலையில் அமைந்து இருந்த நீதி மன்ற வளாகம் 1942 விடுதலை போராட்டத்தில் எரியூட்டப்பட்ட  நிகழ்வுகளையும் அதன் பின்னணி மற்றும் தொடர்புடைய செய்திகளையும் முந்தைய அத்தியாயங்களில் விளக்கமாகக் கண்டோம்.  இந்த நாளில் ஆர்ச் சை ஒட்டிய சன்னதி தெருவின் தெற்கு வாடையில் இருந்த திரு வெங்கடபதி அய்யங்கார் குடியிருந்த வீட்டில் ஒரு சுவாரசிய மான சம்பவம் நடந்து இருக்கிறது . 

 நீதிமன்றம் எரிக்கப்பட்ட கலவரம் நடந்த அன்று அதற்கு முன்னதாக நடைபெற்ற நிகழ்வுகளில் சாரத்தைக்  கொண்டே ஏதோ  நகரில் அசம்பாவிதம் நடக்கப்  போகிறது என்ற உள்ளுணர்வு காவல் துறைக்கு இருந்தது.  நகரின் முக்கியப்  புள்ளிகளின் பாதுகாப்புக்கு அவர்கள் தானே பொறுப்பு. எனவே நகரின் அனைத்து  உயர்பதவியில் இருக்கும் முக்கியப் பிரமுகர்களுக்கும் முன்னெச்சரிக்கை செய்து விட்டனர்.  ஆனால் இதை பொருட்படுத்தாமல் நீதிபதி வழக்கம் போல நீதி மன்றம் வந்து விட்டார்.  தொழில் பக்தி.  வெளியே போராட்டம் வெடித்தது.  கூட்டத்தில் இருந்த ஒருவர் நீதிமன்றத்துக்கு தீ வைத்து விட்டார்.  தீ தன்  நாக்குகளை விரித்து சுற்றிலும் பரவியது.   வெளியே தீ .. உள்ளே ஜட்ஜ் மற்றும் சிலர் மாட்டிக் கொண்டனர்.  போராட்ட காரர்களை அடக்கவே போதாத காலத்துடன் போராடிக் கொண்டிருந்த போலீசுக்கு இந்த ஜட்ஜை காப்பாற்றி வெளியே கொண்டு வந்து பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டிய தலைவலியும் சேர்ந்து கொண்டது.

  

அதிலும் ஒரு அதிர்ஷடம்.  இந்த ஆர்ச் சன்னதியின்  இரண்டாம் வீட்டு மாடி  நீதி மன்றத்தை ஒட்டி இருந்தது .ஒரு வழியாக நீதி மன்ற வளாகத்தில் இருந்த இரண்டு ஏணிகளை  ஒன்று சேர்த்து  இந்த வீடு மாடிக்கு நீதிபதி பத்திரமாக இறக்கப்பட்டார்.  சரி நீதி வழங்கும் நீதிபதியை அப்போதைக்கு தீயிலிருந்து காப்பாற்றி ஆகி விட்டது. இப்போது வெளியில் உயிர்ப்பலியிலும் , குருதிப் புனலொடும் நீந்திக் கொண்டிருக்கின்ற சினங்கொண்ட சிறுத்தைகளிடம் இவர் மாட்டிக்கொண்டால் ... உயிரற்ற நீதிமன்றகே கட்டிடமே தீயில் குளிக்குது.. அதில் அமர்ந்து நீதி சொல்லும் நீதிபதி கதி என்னவாகும்?   யாரை நம்பி.. யாரிடம் இவரை ஒப்படைப்பது ?   கையை மட்டுமல்ல... மூளைகளையும் பிசைந்து கொண்டு இருந்தனர்  பிரிட்டிஷ் அதிகாரத்தின் பிடியில் இருந்த அதிகாரிகள்.

 

தஞ்சம் என்று வந்த நெஞ்சம்தனை  என்றும்  காட்டிக் கொடுக்காததுடன் காவலும்  புரிகின்ற வீரர் செறிந்த நாடு நம் மண்.  அதற்கு அஞ்சா நெஞ்சமும், உறுதியும், நீதி வழுவா  நெறிமுறை பேணும் பாங்கும்  ஒருமித்தே கொண்ட குணம் வேண்டும்.. இருந்தார்கள்...  இரவுசேரி Headman காளிமுத்து சேர்வை தந்தை காசிலிங்கம் சேர்வை மற்றும் அவர் இளைய சகோதரர் சொக்கலிங்கம் சேர்வை ஆகியோர்கள் பெயர்களை கேட்டாலே தேவகோட்டை நடுங்கும்.அப்போது சீனியர் அட்வகேட் M.R.சிவராம ஐயர், சொக்கலிங்கம் சேர்வையை சந்தித்து  Judge அவர்களை பத்திரமாக அழைத்துக்கொண்டு வந்து சில தினங்கள் பாதுகாப்பாக வைத்து கொள்ள சொன்னார். அதன்படி சொக்கலிங்கம் சேர்வை தன் ஆட்களுடன் வந்து ஜட்ஜ் அவர்களை பத்திரமாக அழைத்துக்கொண்டு திருப்பத்தூர் ரோடில் இருந்த ( தற்போது காளிமுத்து சேர்வை அவர்களின் அலுவலகம்) தன் சவுக்கைக்கு சென்றார்.   80களில்  கமலம் டெக்ஸ்டைல்ஸ் என்று ஒரு ஜவுளிக்கடை இந்த இடத்திற்கு அடுத்தது எனது மைத்துனருக்கு சொந்தமாக இருந்தது.   அந்த கால கட்டம் சொர்ணலிங்கம், அண்ணன், இரவுசேரி முத்துக்குமார் அண்ணன்  இவர்களுடன் எல்லாம் அண்ணன்   தம்பியாய் பழகிய பழைய நாட்கள்.

    அதற்கடுத்து வருகின்ற வீடுகள் அனைத்தும் கிருஷ்ண  அய்யங்கார் மற்றும் செல்லம் அய்யங்கார்  குடும்பத்தினருக்கும் அவர்கள் பங்காளிகளும் சொந்தமான வரிசை வீடுகள்.  ஒரு 5 வீடுகளின் கொல்லைப்புறமும் ஓன்று கூடி வளைந்து இன்றைய 'நாவன்னா  மெடிகல்ஸ்'  க்கும் முன்னதாக ஓடிக்கொண்டிருக்கும் கால்வாய்க்கருகில் ஒரு கேட் டில்  போய் முடியும் .

 

இதோடு இன்னைக்கு முடிச்சுக்குவோமே !! சரியா?

 





கருத்துகள்

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. No words to express my feelings, eventhough I don't know much about Devakottai, but reading your article you hijacked me to Devakottai and that too to 1950

    பதிலளிநீக்கு
  3. நீண்ட காலம் நகர்மன்ற உறுப்பினராக இருந்த திரு.பெத்தபிள்ளை மற்றும் கிருஷ்ணா காபி பரஞ்சோதி ஐயா அவர்கள்,பற்றியும் டாக்டர்கள் பாலையா(மெய்வழி),பழனிச்சாமி,வைத்தியநாதன் போன்றோர்கள் பற்றிய குறிப்புக்களையும் தாருங்கள். பழைய நினைவுகள் என்னைப் பள்ளிக்காலத்துக்கு கொண்டு சென்றுவிட்டது!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60