அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2 பகுதி: 9 நீ நினைக்கும் போதை வரும் ....நன்மை செய்து பாரு..



அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2

பகுதி: 9

அன்பு சொந்தங்களே ...

இந்தத் தொடரின் இந்த சிலம்பணி சிதம்பர விநாயகர் சன்னதி பகுதியை ஆரம்பிக்கும் போதே டாக்டர்.நரசிம்மன் அவர்களும் டாக்டர் M.V .இராசகோபால் அவர்களும் தான் நினைவுக்கு வந்தனர். மருத்துவர் இராசகோபால் அவர்களிடம் நானே நிறைய பேசியிருக்கிறேன், கபடிப் போட்டிகள் நடத்துகிறேன் பேர்வழி என்று திண்ணன் செட்டி ஊரணியில் இருந்து சம்பந்தமே இல்லாத ஆர்ச் பகுதியில் அவரிடம் இருந்து நிறைய முறை நன்கொடை வாங்கி இருக்கிறேன். நன்கொடை என்று சொல்வதை விட முதல் பரிசு வழங்குபவர் நீங்கள் தான் என்று மொத்தமாக சரணாகதி அடைந்து இருக்கிறேன். கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் கையில் இருப்பதைக் கொடுப்பார். மீதம் போட்டி நடக்கும் நேரம் வந்து வாங்கிக் கொள்கிறேன் என்று கொஞ்சம் நாங்கள் பெருந்தன்மையாக வந்து விட்டு இங்கே போட்டி நடக்கும் நேரம் நான் பணம் கேட்டு அவர் வீட்டில் அமர்ந்து இருந்த நாட்கள் நினைவில் வருகின்றன. நோயாளி வந்து வைத்தியம் பார்த்து அவர்களுக்கு தன் செலவிலேயே மாத்திரை மருந்தும் கொடுத்து அவர்கள் கொடுக்கின்ற சிறிய கட்டணத்தையும் அப்படியே அவர் பைக்குப் போகாமல் வாங்கி வைத்து இன்னும் குறைகிறது என்று நின்ற நாட்கள் நினைவில் ஊசலாடுகிறது, இருப்பதையும் கொடுத்து விட்டு இனி வருவதையும் கொடுப்பேன் என்று சொல்லுகின்ற அந்த குணம் சுட்டுப் போட்டாலும், சூட்டுப் போட்டாலும் எல்லோருக்கும் வந்து விடாது.
இப்படி பல நினைவுகள் டாக்டர் M V R அவர்களைப் பற்றி..... ஆனால் டாக்டர் நரசிம்மன் அவர்களின் பெயரை மட்டுமே கேள்விப்பட்டு இருந்தேன்.. சிறு வயதில்.. அவரை நேரில் பார்த்த நினைவு கொஞ்சமும் இல்லை. விசாரிக்க ஆரம்பித்த பின்னர் தான் தெரிந்தது மருத்துவர் நரசிம்மன் அவர்களின் இடத்துக்குத் தான் மருத்துவர் இராசகோபால் அவர்கள் வந்தார் என்றும்... அதே 53 ஆம் இலக்கமுள்ள இல்லத்தில் தான் இருவரும் தங்கினார்கள் என்பதும்.


பீடத்தில் அமர்ந்து இருப்பவர் 44 ஆவது பட்ட அழகிய சிங்கர். இவர்தான் ஸ்ரீரங்கம் இராஜகோபுரம் கட்ட மூலகர்த்தர் , நிற்பவர்களில் நடுவில் இருப்பவர், Dr. நரசிம்மன்


தேவகோட்டை நகராட்சியின் ஆயுர்வேத மருத்துவமனையில் பணி புரிந்த மருத்துவர் நரசிம்மன் அவர்கள் மருத்துவர் இராசகோபாலரின் தாய் மாமாவாகிய பேராசிரியர் ஸ்ரீஹரியின் மாணவர் என்று சென்ற பகுதியில் பார்த்தோம். இது நீண்ட நெடுங்கால உறவு. இந்த நிலையில் நமது கரிய மாணிக்கம் அம்பலார் தலைவராய் இருந்த கண்ணங்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெள்ளையபுரம் மருத்துவமனை சரியான மருத்துவர் இல்லாமல் நடந்து கொண்டு இருந்தது. இங்கு வருகின்ற எந்த ஒரு மருத்துவரும் அதிக பட்சம் 3 அல்லது 4 மாத காலத்துக்கு மேல் இங்கு தாக்குப் பிடிப்பதில்லை. வெள்ளயபுரம் 99.9 சதம் இசுலாமியப் பெருமக்கள் வாழும் பகுதி. அதிலும் 10 வயதுக்கு மேலும் 60 வயதுக்கு கீழும் உள்ள ஆண்கள் அங்கு வாழ்வது அபூர்வம். ஏன் ? அதிகமாக சிலோன் (இலங்கை), மலாயா, சிங்கப்பூர் நாடுகள் தான் அவர்கள் வாழ்வாதாரம். இங்கு பொன்னும் பொருளும் கொண்டு வந்து சேர்ப்பதோடு சரி.. உடனே திரும்பி விடுவார்கள். பக்கத்தில் இசுலாம் அல்லாதவர்கள் வாழும் 'மண்டலக்கோட்டை' 10 நிமிடத்துக்கு மேல் சுற்ற முடியாத சிறிய ஊர். இது மருத்துவம் படித்து விட்டு மனதில் கரன்சி நோட்டுக் கனவுகளோடு வரும் வாலிப மருத்துவர்களுக்கு கொஞ்சமும் பிடி படாத ஊர். இந்த ஊரில் பணி .. வருகிறாயா என்று டாக்டர் நரசிம்மன் கேட்க, நாலு காசு சேர்ப்பது பற்றி எந்த நாளும் கவலைப்படாத அன்பர் MVR போய்ப் பார்ப்போமே என்று வந்து சேர்ந்து விட்டார். சென்னையில் வளர்ந்து அங்கேயே படித்து பணியும் செய்து சிறகடித்துப் பறந்த சிட்டு சிறகொடிந்த நிலையினைத் தான் வெள்ளயபுர வாழ்வின் ஆரமபத்தில் உணர்ந்தது. ஆனால் 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய' வள்ளலாராக மனதில் வாழ்ந்த MVR அப்படியே அந்த மக்களுடன் ஐக்கியமாகி விட்டார். இவருக்குத்தான் யாரும் சிரமப்பட்டால் தாங்கிக் கொள்ள முடியாதே?? எதையும் எதிர்பார்க்காத சேவை வெள்ளைய புரத்தின் வெள்ளை உள்ளங்களைக் கொள்ளை கொண்டது.



மாட்டுக்கார வேலனாகத் தலைவர் பாணியில் மரு.இராஜகோபால்

இதற்கு முந்தைய பதிவில், அன்பு அண்ணன் புலவர், பொழிவாளர், தேவகோட்டை K.V.P. பள்ளி நிறுவுனர் மற்றும் தாளாளர் திரு.கார்மேகம் அவர்கள், தான், வெள்ளையபுரம் ஆரம்பப் பள்ளியில் 3 ஆம் வகுப்பு பயிலும் போது நடைபெற்ற பள்ளி விழாவில் மேடை ஏறி முழங்கியதையும், அந்த விழாவுக்கு சிறிது தாமதமாக அண்ணன் கார்மேகம் பேசி முடித்த பின்னரே வருகை தந்து இருந்த Dr.MVR, அங்கே இவருக்கு அடுத்துப் பேசிய மாணாக்கருக்கு ரூ 3 பரிசாக வழங்கியதையும், அதன் பின்னர் "இவருடைய பேச்சு அதை விட மிக நன்றாக இருந்தது' என்று கூட்டத்தில் இருந்தவர்களின் ஒருமித்த கருத்தை ஏற்று இவர்க்கு ரூ.5 ஐ ப் பரிசாக அளித்ததையும், அந்த ஒரு நிகழ்வு தன்னை ஒரு பேச்சாளனாக மாற்றியமத்ததையும் நினைவு கூறியிருந்தார். அண்ணன் கார்மேகம் அவர்களுக்கு வணக்கங்களும் வாழ்த்துக்களும். இது போன்ற நிகழ்வுகள் ஏராளம்.. மரு.MVR, தான் வாழ்ந்த இடங்களில், பலரது வாழ்விலும் ஒரு ஓளி விளக்காக அவர்களை நெறிப்படுத்தி இருக்கிறார்.


அடிகளார் அவர்களுடன்

இந்த நிலையில் 1969 ஆம் ஆண்டு வாக்கில் தேவகோட்டை நகரில் மருத்துவப் பணியில் இருந்த மருத்துவர் நரசிம்மன் அவர்கள் இயற்கை எய்தி விட்டார். தேவகோட்டை நகராட்சி மருத்துவமனை மருத்துவர் இல்லாமல் சுகவீனமாய் இருந்தது. அந்த நேரம் கண்ணங்குடி ஒன்றியத்துக்கும், தேவகோட்டை நகராட்சிக்கும் சிறப்பான ஆளுமைகள்.. ஆம் கரிய மாணிக்கம் அம்பலார் தான் வெள்ளயபுரம் அமைந்திருக்கும் கண்ணங்குடி ஒன்றியத்துக்கும் தலைவர்.. இங்கே ராம.வெள்ளையன் தேவகோட்டை நகரத் தந்தை. ராஜாஜியின் சுதந்திரா கட்சியின் சட்ட மன்ற உறுப்பினரான அம்பலாருக்கும், அதன் நேசக்கட்சியான தி.மு.க.வுக்கும் நல்ல அரசியல் உறவு வேறு. எப்படியாவது மருத்துவர் இராசகோபால் அவர்களை தேவகோட்டை நகராட்சி மருத்துவராக 'ஹை-ஜாக்' செய்து விடலாம் என்று இராம.வெள்ளையன் அவர்களுக்குள் எண்ணம். தன்னுடைய வெள்ளையபுரம் மக்களை மிகவும் பிரியமாக ஒரு தாயின் வாஞ்சையுடன் கவனித்துக் கொள்ளும் மருத்துவர் இராசகோபால் அவர்களைப் போல எவர் கிடைப்பார் என்று அவரைத் தக்க வைத்துக் கொள்வதில் கரிய மாணிக்கம் அவர்களுக்கு உறுதி. Dr. MVR க்கோ இரண்டு பெருமே மரியாதைக்கும் நன் மதிப்புக்கும் உரியவர்கள். அம்பலார் பெரியவர். இராம வெள்ளையன் தான் போற்றும் மக்கள் திலகத்தின் இயக்கத்தை சேர்ந்தவர். தேவகோட்டைக்கு மாற்றல் ஆகி வந்தால் குழந்தைகளின் கல்வி நன்றாக அமையும்.... இப்படி பல்வேறு நினைவுகளில் புரியாமல் இருந்தார். ஒரு வழியாக தேவகோட்டை நகரத் தந்தை, பெரியவர், காரிய மாணிக்கமான, வீரிய மாணிக்கமான , கிடைத்தற் கரிய மாணிக்கமான, கரியமாணிக்கம் அவர்களின் அன்பு ஆசிகளோடு மருத்துவர் இராச கோபாலன் அவர்களை வெள்ளைய புரத்தில் இருந்து வேரோடு எடுத்து தேவகோட்டை மண்ணில் பதியனிட்டு விட்டார்.
குடும்பத்துடன் மரு.இராஜகோபால்


இப்படியாக நம் தேவகோட்டைக்கு 1969~70 வாக்கில் வந்தவர் தனது அன்பின் வழியால் தேவகோட்டையில் மக்களோடு ஒருவராக இரண்டறக் கலந்து இன்றும் நினைவுகளில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். நிறைய நிகழ்வுகள் நினைத்துப் போற்ற... சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.
அந்தக்கால கட்டத்தில் நகராட்சிகளில் எல்லாம் போதுமான வருமானம் இல்லாத, நிதி நிலையில் துண்டு அல்ல வேட்டி , சேலைகளே விழுந்திருந்த நிலைமை. மாநில அரசின் மானியம் உள்ளாட்சி அமைப்புகளை காபந்து செய்து கொண்டு இருந்தது. இது பற்றிய ஒரு சிறப்பான செய்தி எமது முந்தைய பதிவான பாகம் 1 ல் பகுதி 68 இல் தேவகோட்டை நகருக்கு தண்ணீர் பொது விநியோகம் பற்றிய குறிப்புகளை கொடுத்து இருக்கிறேன். கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி வாசிக்கலாம்.
இதற்கும் முந்தைய காலம்... நகராட்சியில் ஊழியர்களுக்கு மாதச்சம்பளம் அடுத்த மாதம் 20 தேதி வாக்கில் பட்டுவாடா செய்யப்படுவதே சிறந்த மாதம். சில சமயங்களில் இரண்டு மாதம் கழித்தும் சம்பளம் வழங்கப்படும். இன்றைய நிலைமை என்னவென்று நான் அறியேன். அன்றைய நகராட்சி மருத்துவனையில் மருத்துவர் MVR, MNA (MALE NURSE ASSISTANT) வாக மறைந்த கோபால், Nurse ஆக திருமதி சுகிர்தம், திரு.கிருபாச்சரன் அவர்கள் கம்பவுண்டர். பணியில் இருப்போரின் குடும்பத்துக்கு மருந்தான மாதச் சம்பளமே சரியான தேதியில் கிடைக்காத பட்சத்தில் மருந்துகளின் விநியோகம் பற்றி நாமளே யூகித்து கொள்ள வேண்டியது தான். மருந்துகளுக்கு விருப்புப் பட்டியல் (Indent ) அனுப்பி விடுவார்கள். ஆனால், பணம் ?. அதைவிட Dr .MVR இடம் வரும் நோயாளிகள் எவருமே வசதி படைத்த நகர்த்தார்களோ, உயர் வகுப்பை சேர்ந்த அரசுப் பணியாளர்களோ தொழில் முறை (Professionals ) பெரியோர்களோ அல்ல. அவர்கள் எல்லாம் நாடுவது மரு.வைத்தியநாதன், மரு.இரமணன் இவர்களைத்தான். ஏழை எளியோர்தான் நமது மரு .இராசகோபால் அவர்களின் நிரந்தர வாடிக்கையாளர்கள். வெள்ளையாபுரத்தில் இருந்து காலை முதல் பேருந்தில் வந்து இவரிடம் வைத்தியம் பார்த்து விட்டு மாலை கடைசிப் பேருந்தை பிடித்து ஊர் திரும்பும் தொட்ட குறை வெள்ளையபுரம் உறவுகளும் இதில் உண்டு.

தன்னை நம்பி வருபவர்களுக்கு மருந்து, மாத்திரை இல்லை என்று சும்மா திருப்பி அனுப்பி விட முடியுமா என்ன? முடிந்த வரை வைத்தியமும் பார்த்து மாத்திரையும் வாங்கி அவர்களை அனுப்பி வைத்திருக்கிறார் இவர். இது தவிர தன் கீழே பணி புரியும் மருத்துவ மனை ஊழியர்கள் அவர்கள் குடும்ப நிலை என்று இவர்களையும் நினைத்து தன்னால் என்ன செய்ய இயலுமோ அதைச் செய்து கொண்டு இருந்தவர் மற்றவர்களுக்குத் தெரியாமல்.. இவருக்கும் குடும்பம் உண்டு, பிள்ளைகளின் கல்விச் செலவுகள் உண்டு.அது என்னவோ இவருக்கு இவரின் தலைவர் MGR மாதிரி கொடுப்பதில் ஒரு இன்பம். காசு மீது அவ்வளவு காதல் இல்லை கவிஞர் கண்ணதாசன் மக்கள் திலகத்துக்கு எழுதிய பாடலொரு பாடலில் ...

“புகழிலும் போதை இல்லையோ..
பிள்ளை மழலையில் போதை இல்லையோ..
காதலில் போதை இல்லையோ..
நெஞ்சின் கருணையில் போதை இல்லையோ..!


நீ நினைக்கும் போதை வரும்
நன்மை செய்து பாரு..

என்பார்.

கொடுத்துச் சுகம் பெறுவதில் மனம் மகிழ்ந்தவர் இவர்.

ஆர்.எம்.வீரப்பன் தேவகோட்டையில்... திரு.SP.தனசேகரன் திருமணத்துக்காக, (தலைவர் வர இயலாததால்.... அவர் சார்பாக)


பையில் இருக்கிற பணத்தை கொடுத்து விடுவார். காசு, பணம், துட்டு சேர்க்க வேண்டும் என்ற ஆசை இருந்ததில்லை. கடைசி வரை அந்த மிதி வண்டியிலேயே தான் பயணம் செய்தார். அதன் பிறகு ரிக்சாவில் செல்ல ஆரம்பித்தார். அந்த அளவுக்கு மிக எளிமையாக வாழ்ந்த மனிதர். ஆனால் அரசியலில் இரண்டு பெரிய கட்சிகளின் மூத்த தலைவர்களும் இவருக்கு மிக நெருக்கம். எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்த காலம் முதல் அதன் பிறகு 72இல் தனியாக கட்சி தொடங்கிய பின் மக்கள் திலகம் வழியில் இவர் சென்றாலும், இவரது குடும்ப நட்பு மற்ற தலைவர்கள் இவருக்குக் கொடுத்து வந்த மதிப்பு என்றும் குறையவே இல்லை. ஆர்.எம்.வீ., பேராசிரியர் அன்பழகன் இவரது குடும்பர் நண்பர்கள் . அன்றைய அமைச்சர் திருநாவுக்கரசர் இவரை மாப்பிள்ளை என்று தான் அழைப்பார். இங்கே தேவகோட்டையில் ஆர்ச் அண்ணாமலை செட்டியார் இவரை 'மாப்பிள்ளை' என்று தான் அழைப்பார். அ .தி.மு.க. அணியில் இருக்கின்ற போதும் அன்றைய தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர் பெரி.சண்முகம், கரிய மாணிக்கம் அம்பலார், நகர் மன்றத் தலைவர் இராம.வெள்ளையனா, காசிம் பாய் என்று எல்லோரிடமும் இவரின் அன்பு எப்போதும் போல் இருந்தது. கட்சி என்பது வேறு, தனி மனித உறவு என்பது வேறு .. இரண்டையும் போட்டு குழப்பக்கூடாது என்ற விபரம் தெரிந்த மனிதாபிமானி . நன்கொடை என்று எவர் கேட்டு வந்தாலும், அவர் எந்தத் தரப்பு, அவரால் தனக்கு என்ன பயன் என்று எந்த எண்ணமும் இல்லாமல் கொடுக்கும் குணம் உண்மையில் எல்லோருக்கும் வராது. MGR இரசிகராக இருந்த போதிலும் சிவாஜி ரசிகர் மன்றங்கள் நடத்தும் விழாக்களுக்கு நன்கொடை என்று அவர்கள் கேட்டு வந்தால் அதற்கும் இல்லை என்று சொல்லாமல் எடுத்து கொடுத்து விடுவார். 'பாத்திரம் அறிந்து பிச்சை போட்டது இல்லை .அவரைப் பொறுத்தவரை நல்ல காரியங்களை எவர் செய்தாலும் அவருக்கு உதவ வேண்டும் என்பதே.


என்றும் பதினாறு எம்.ஜி.ஆர்.அன்பர் குழுவின் கௌரவத் தலைவராக மரு.ம.வ.ராஜகோபால்... அதிமுக ஆரம்பிக்கப்படும் முன்னர், தி.மு.க.வில் அனைவரும் ஒன்றிணைந்து.....

தேவகோட்டையில் எம்.ஜி.ஆர் மன்றங்கள் மிக துடிப்பாக விளங்கின. 60களில் கழகத்தின் சார்பில் படிப்பகங்கள் ஏற்படுத்தப்பட்டன. இது பற்றிய தேவகோட்டை செய்திகளையும் பாகம் 1, பகுதி 11 இல் காணவும். 'என்றும் பதினாறு MGR அன்பர் குழு என்று நமது அதிமுக நகர செயலாளர் SP , தனசேகரன் மற்றும் மக்கள் திலகத்தின் அன்பர்களால் நடத்தப்பட்டு வந்தது.. தேவகோட்டையில் MGR பெயரில் நடத்தப்பட்டு வந்த அமைப்புகளுக்கு டாக்டர் இராசகோபால் அவர்கள் கவுரவத் தலைவராக இருந்தார். என்றும் பதினாறு எம்ஜியார் அன்பர் குழு பற்றிய விபரங்களை அடுத்து வரும் பகுதிகளில் காணலாம். இப்போது தடம் மாற வேண்டாம்.



குன்றக்குடி அடிகளார் கரங்களால் ஆசி

பொதுவாக எமது காலத்தில் இந்த இராசகோபாலன் அவர்கள் மீது வைக்கப்பட்ட குறை அவர் ரொம்ப கோபம் கொண்டு விடுவார் என்பது தான். ஆனால் அது ஒரு தகப்பனின் கோபமாகதான் இருக்கும். ஒழுங்காக உடம்பை பேணாமல் கண்டதையும் செய்து விட்டு இப்போ உடம்பு முடியவில்லை என்று வருகிறார்களே என்று அவருக்கு சட் டென்று கோபம் கொப்பளித்து விடும். நான் சொன்னதை எல்லாம் கடை பிடிக்க இயலாது என்றால் இந்த பக்கமே வராதே இனிமேல்..எத்தனையோ வைத்தியர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் போய் பார்த்துக் கொள் என்று கத்தி விடுவார். ஆனால் பிறகு மனம் பொறுக்காமல் தன்னால் இயன்றதைச் செய்து தான் அனுப்பி விடுவார். இது அவரை நன்றாக அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
இந்தக் கீழ்க்காணும் சம்பவத்தை MVR அவரகளின் புதல்வர், எனது நண்பர் திரு விஜய கிருஷ்ணன் பகிர்கிறார்.
அப்பா மதிய உணவுக்குப் பிறகு கொஞ்சம் அயர்ந்து உறங்குவார். அன்று கிராமத்தில் இருந்து ஒரு நோயாளி வீட்டுக்குள் வந்து வயிற்று வலியால் துடிக்கிறார். அப்பாவைப் பார்விட்டுத்தான் போவேன் என்று நிற்கிறார். இவரை எப்படி எழுப்புவதென தெரியவில்லை. நான் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, 'அப்பா , ஏந்திரு , பாவம் வலியில் துடிக்கிறார் அந்த நோயாளி' என்றேன். அப்பா கோபத்துடன், 'இப்பதான் சித்த நாழி படுத்தேன். அந்த ஆளை வேறு ஏதாவது ஒரு வைத்தியரிடம் போகச் சொல்லேன், ஊரில் நான் ஒருத்தன் தான் வைத்தியம் பாக்கிறேனா ?' என்றார்.
நானும் அந்த நோயாளியிடம் சென்று, 'டாக்டர் ஆழ்ந்து உறங்குகிறார். நீங்கள் வேறு ஒரு டாக்டரிடம் போய் பாருங்களேன்' என்றேன் . அந்த நோயாளியோ, செத்தாலும் இங்கே தான் சாவேன். வேறு எவரிடமும் போக மாட்டேன்' என்று பிடிவாதமாக சொன்னார். எனக்கோ தர்ம சங்கடம். என்னடா இது என்று மறுபடி அப்பாவிடம் போனேன் . அப்பா .. அவர் செத்தாலும் இங்கே தான் சாவேன்... என்று அடம் பிடிக்கிறார்.. பாவம்.. வந்து கொஞ்சம் பாத்துட்டு போயிடேன் ' என்றேன் கெஞ்சலுடன். கோபாவேசமாக எழுந்து வந்து அந்த நோயாளியை வாங்கு வாங்கு என்று வாங்கினார். பிறகு சோதனை எல்லாம் செய்து விட்டு ஊசி போட்டு விட்டு மாத்திரை எழுதிக் கொடுத்தார். அந்த நோயாளியோ கையில் 5 காசு கூட இல்லாமல் வெறுங்கையோடு தான் வந்திருக்கிறார். எப்படி மாத்திரை வாங்க இயலும் அவரால்? அப்புறம் அப்பா தன் சட்டைப் பையைத் துழாவி பணம் எடுத்து என்னிடம் கொடுத்து மாத்திரை வாங்கிக் கொடுக்க சொன்னார். நான் அருகில் இருந்த மீனாட்சி மெடிகல்ஸ் போய் மாத்திரை வாங்கி வந்து அந்த நோயாளியிடம் கொடுத்து அவரை கிராமத்துக்கு அனுப்பினோம்’….. என்றார் .
இப்படி அவரிடம் இரண்டு மாறுபட்ட தன்மைகளை மக்கள் அதிலும் ஏழை மக்கள் அறிந்து இருந்தனர். அதே போலத்தான் அவரிடம் பணியாற்றுபவர்களும் கடுமையாகத் திட்டு வாங்குவார்கள். ஆனால் அவர்களை ஒரு தாயன்போடு அவர்கள் சாப்பிட்டார்களா? அவர்கள் இல்லத்தில் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று அவர்களை ஒரு சௌகரியமான இடத்திலேயே வைத்து இருந்தார். அந்த வகையிலே அவரிடம் பணி புரிந்த திரு .கோபால் (MNA ) அவர்களைப் போல அப்பாவிடம் எவரும் திட்டு வாங்கி இருக்க முடியாது, ஆனால் அப்பாவைப் பற்றிய ஒரு செய்தி கூட அந்த கோபாலனிடம் இருந்து வாங்கி விட முடியாது. குடும்பத்தினரையும் விட டாக்டரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் இந்த கோபால் என்று நண்பர் விஜய் கிருஷ்ணன் தன் தந்தையார் வாழ்ந்த காலத்திற்கே எம்மை அழைத்துச் சென்றார்.

அரிமா சங்கம், தேவகோட்டையில்...

தேவகோட்டை நகராட்சியில் நிர்வாகப் பொறுப்பிலே இருந்த சம்பந்தம் என்பவர் அலுவலகப் பணியியிலே மிகவும் கண்டிப்பானவர். யாராக இருந்தாலும் தவறு என்றால் தவறு தான். அந்த விஷயத்தில் கொஞ்சமும் சமரசம் செய்து கொள்ளாத மனிதர். நகராட்சி மருத்துவரான மரு.இராசகோபாலும் இதற்கு விதி விலக்கல்ல.இன்று நீங்கள் மருத்துவமனைக்கு தாமதமாக வந்தீர்கள்... உங்களுக்கு மெமோ கொடுக்கிறேன் என்று நோட்டிஸ் கொடுப்பார் . மருத்துவரும் பேசாமல் வாங்கி வைத்துக் கொண்டு அடுத்து வரும் நாட்களில் தாமதம் இல்லாமல் சரியான நேரத்துக்கு வந்து விடுகிறேன் என்பார். இதெல்லாம் அலுவலகத்தில் பார்க்கும் போது, இருவரும் 'டாம் அண்ட் ஜெரி ' (TOM AND JERRY ) போலத் தெரியும். மாலை 5 மணிக்கு மெமோ கொடுப்பார் .ஆனால் மாலை 6 மணிக்கு இதே சம்பந்தம் மருத்துவரின் வீடு வருவார். எதுவுமே நடவாதது போல இவர்கள் பல நிகழ்வுகள் பற்றி விவாதங்கள் செய்வர். அதில் ஒரு நட்பு இழையோடும். இவ்வாறாக நட்புக்கு எந்த வகையிலும் பார்க்கும் தொழிலும் சார்ந்த இயக்கமும் தடை இல்லை என்ற புரிதல் அவர்களுக்கு இருந்த்து.

MVR MEDICAL CENTE, PONDICHERY



Appreciation by the CM...
மரு.இராசகோபால் அவர்களின் மக்கள் அனைவரும் சென்னையில் தற்போது வசிக்கிறார்கள். ஒரு மகள் மட்டும் பாண்டிச்சேரியில் தந்தையார் MVR பெயரில் மருத்துவ மனை நட்த்துகிறார். அந்த மருத்துவ மனை சார்பாகவும் நிறைய நலிவுற்றோர் பயன் அடைகிறார்கள். அவரவர் துறைகளில் அவரகள் குறிப்பிடத்தக்க வகையிலே பணி ஆற்றி வருகிறார்கள்.



மகன் விஜய கிருஷ்ணன் எம்மோடு தொடர்பில் இருக்கிறார். தமிழ்த் திரை இசைத் துறையில் மெல்லிசை மன்னருக்கு நிழல் போன்ற உறவு இவருக்கு. மெல்லிசை மன்னர் மட்டும் இன்றி அனைத்து இசை மேதைகளும் இவருக்கு மிக நெருக்கம். பல செய்திகளை அடக்கம் காரணமாக திரு. விஜய கிருஷ்ணன் பிரசுரிக்க வேண்டாம் என்று தடுத்து விட்டார்.


அனைத்துப் பிள்ளைகளுக்கும் அப்படியே தந்தையைப் போலவே தயாள குணம். சென்ற ஆண்டு, (2020) கொரானா தொற்று தன் கொடிய முகத்தைக் காட்டித்ட் தாண்டவம் ஆட ஆரம்பித்த நாட்களில் பலரும் வேலை இன்றி வீட்டில் முடங்கிக் கிடந்த சமயத்தில் நாங்கள் நண்பர்கள் (சேவுகன் அண்ணாமலை கல்லூரி வணிகவியல் 1976~79 குழு) நிதி திரட்டி தேவகோட்டையில் நலிவுற்று இருந்த ஏழை மக்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கினோம். உற்ற நண்பர்கள் என்கிற வகையில் சிலரிடம் கை ஏந்தினோம். தயங்காமல் கொடுத்தார்கள். அவர்களுள் நமது மரு.இராசகோபாலின் மகன் விஜ்ய கிருஷ்ணன் ஒரு நல்ல தொகையை அவரது பங்காக வழங்கினார். அன்றைக்கு அது பல குடும்பங்களின் பசியைப் போக்கியது. அவருக்கு தேவகோட்டை மக்களால் ஆகப்போவது எதுவும் இல்லை. அவர் தேவகோட்டைக்கு எதற்காகவும் வர வேண்டிய தேவையும் இல்லை. ஆனால், மனிதாபிமானம் எல்லைகள் தாண்டியது என்பதை அவரது நீண்ட கரம் நெகிழ்ந்து காட்டியது. அதுதான் கருவோடு வந்த கருணை.. அந்த குடும்பம் என்றும் மரு.இராசகோபால் அவர்களின் பெயர் சொல்லும் வண்ணம் வாழ்வாங்கு வாழ்க என நமது தேவகோட்டை மக்களின் சார்பாக வாழ்த்தி இந்தப் பகுதியை முடிக்கிறேன்..
இன்னும் சுற்றுவோம்…

கருத்துகள்

  1. படிக்க சுவாரஸ்யம். நன்றாக ஸ்கிரிப்ட் மற்றும் நானும் அந்த காலத்துடன் பயணிக்கிறேன்.
    அன்புடன்
    சிவா

    பதிலளிநீக்கு
  2. மரு. MVR அவர்களின் வாழ்வில் நடந்த
    நிகழ்வுகளை அழகுபட தெரிவித்தது ..
    நிகழ் சந்ததியர் வளமை தங்களின்
    வலிமையான எழுத்தாணியால் ..
    சிகரம் தொடுகிறது , நண்பா 👍

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60