அசை போடும் தேவகோட்டை நினைவுகள்- பாகம் 2

 

அசை போடும் தேவகோட்டை நினைவுகள்- பாகம் 2

 

பகுதி-1; சாமி நாதன் மொச்சைக்கடை

 

அன்புச்  சொந்தங்களே ...

 

முதலில் அனைவரும் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.  தேவகோட்டை ஆற்றுப்பாலத்தில் இருந்து உங்களுடன் நகர் வலம்  ஆரம்பித்து திண்ணன் செட்டி ஊரணி வெள்ளையன் ஊரணி, நகரச் சிவன் கோவில், இரவு சேரி ,கருதா ஊரணி, புதூர் அக்ரஹாரம், திருப்பத்தூர் சாலை, தியாகிகள் பூங்கா என்று அந்த வழிகளின்  வாசங்களையும், நேசங்களையும், வலிகளையும் அனுபவித்து வந்து கொண்டு சரியாக ஆர்ச்  வளவில் கொண்டு வந்து நிறுத்தி விட்டு காணாமல் போய்விட்டது மிகப்பெரிய தவறுதான்.

 

இந்தா  வந்திடலாம்னு  இருந்தேன் .. அதற்குள் காலம் விரைவாக ஓடி விட்டது .  ஆம்  காலம் யாருக்காகவும் நிற்காது.  பணிச்சுமை அதிகம்.இரண்டு வருடங்களாகவே உலகம் முழுவதும் பொருளாதாரம் மிக மந்த நிலையில் மனிதர்களைப் படாத பாடு படுத்தி வருகிறது.  இப்போது அதற்கு மகுடம் வைத்தது போல கொரோனா வேறு.

 


இந்தக் கால இடைவெளியில் நாம் நமது மதிப்புக்கும், அன்புக்கும் உரிய ஆசிரியர் பத்மநாபன் அவர்களை இழந்தது மிகப்பெரிய சோகம்.  அவர் பூர்விகம் எனது பூர்விகமாக மானாமதுரைக்கு அருகில் உள்ள கிராமம்.  அவர் அமெரிக்காவில் இருந்த போதும் தினமும் என்னுடன் தொடர்பில் இருந்தார். அடிக்கடி நமது நகர் பற்றிய நமது காலத்துக்கும் முந்தைய செய்திகளை சரியான நேரத்தில் அள்ளித் தருவார்.  அடிக்கடி நான் எழுதுகின்ற கவிதையைப் பற்றி குறுந்தகவல் அனுப்புவார். அவரும் உடனடியாகக் கவிதை எழுதிக் காட்டுவார். அவரின் கவி ஆற்றல் மிக அரிதான நாம் அறியாத  அவரின் இன்னொரு பக்கம்.   அவரின் சில கவிதைகளுடன் இந்தப் பகுதியைத் தொடர்கிறேன்.  இப்படி நான் பதிவு செய்யாவிடில் உங்களுக்கு எல்லாம் தெரியாமலேயே போய் விடும்.

 


அந்தஆண்டு காரைக்குடி அருள்மிகு கொப்புடைய நாயகி அம்மனுக்குபி புதிய தேர் செய்யப்பட்டு அந்த வண்ணப்படங்களை திரு.பத்மநாபன் ஐயா அவர்களுக்கு அனுப்பி வைத்து இருந்தேன்.  உடனே பதிலாக ஒரு கவிதை இப்படி அவரிடம் இருந்து ....

 






செப்பரிய   செல்வமிகு   செட்டி     நாட்டில்

தப்புடையோரைத்தவறாமல்  தண்டிக்கும்

கொப்புடையாளைக  கொண்டேன்  துணையாய்  அவளுக்கு

ஒப்புடையாரும்  உண்டோ  உரை

 

கவியரசர் கண்ணதாசன் தென்றல் பத்திரிகை நடத்தி வந்த அவரது இலக்கிய வாழ்வின் ஆரம்பக்காலத்தில் வெண்பாவிற்கான ஒரு வரியைக்  (கடைசி அடியை ) கொடுத்து வாசகர்களை வெண்பா எழுத வைப்பார்.  போட்டியாக  நிறைய பேர் களம்  இறங்குவர்.  அவற்றில் நல்ல வெண்பாக்களைத் தேர்வு செய்து கவியரசர் தனது தென்றல் பத்திரிகையில் வெளியிடுவார்.   அப்படி ஒரு முயற்சியாக நான் நமது மிக நெருக்கத்தில் இருந்தவர்களிடம் மட்டும் கீழே உள்ள ஒரு அடியினைக் கொடுத்து ஒரு வெண்பா புனையுமாறு வேண்டினேன்.

அத்துடன் எடுத்துக்காட்டுக்காக என்னுடைய இரண்டு வெண்பாக்களை பின்வருமாறு எழுதி இருந்தேன்.

 

அகத்தில் புறத்தில் அருந்திறல்ம றத்தில்

தொகுத்தநூல் கூறும் தொகையில்-மிகுத்துப்

பகுத்துண் தமிழரின் பான்மை பழித்தார்

முகத்திலே காறி உமிழ்

 

நுகத்தெருது பூட்டி நூலறிவு காட்டி

இகத்தில் தனிப்பேர் இனமாய்-சகத்தின்

அகத்தில் தமிழினத்தை அழிக்க நினைப்போர்

முகத்திலே காறி உமிழ்

 

தமிழ்ப் பேராசான் கவியரசு அர.சிங்காரவடிவேலனின் மைந்தர் அன்புத்தம்பி அரசி.பழனியப்பன் கீழ்க்கண்ட வெண்பாவை அனுப்பி வைத்தார்.

 

தமிழ்க்குடியில் தோன்றித் தமிழே அறியார்

தமிழறிந்தும் பேசாத் தகையார்- தமிழை

எகத்தாளம் பேசுவார் ; ஏளனமே செய்வார்

முகத்திலே காறி உமிழ்

 

வேறு எவரும் வெண்பா இலக்கணத்தின் தன்மையதானால் கலந்து கொள்ள இயலவில்லை.  நமது ஆசிரியர் பத்மநாபன் அவர்கள் ஒரு இளைஞனின் உத்வேகத்தோடு தனது வெண்பா என்று அனுப்பி  வைத்த  பாடல் இதோ :

 

சுகத்தில்   வாழ்ந்து   சோம்பேறியாய்த்திரிந்து

இகத்தில்  இனிமை   தேடி   எள்ளளவும்

நகத்தில்  அழுக்கின்றி  தாய்மொழி  பழித்தோர்

முகத்தில்  காறி  உமிழ்

 

இந்த ஒற்றை வெண்பாவோடு நிறுத்தவில்லை.  அடுத்தடுத்து இந்த பாடல் களை அனுப்பி அசத்தினார் .

 

அகத்தில்     அழுக்கும்        முகத்தில்          முறுவலுமாய்

சகத்தில்       வாழும்            சதிகாரர்             தம்

ரகத்தில்        இணந்து        இழிசெயல்       ஆறறுவார்

முகத்தில்      காறி                உமிழ்

 

(23, Oct., 2019)

 

பெற்றவரைப்   பேணாதோர்  கற்றவர்சொல்  கேளார்

மற்றவர்            மனம்நோகப்    பேசி     அவர்தம்

மகத்துவம்       அறியாது    மதியாது இருப்போர்

முகத்தில்           காறி   உமிழ்

(24, Oct., 2019)

 

கடைசியாக திரு.பத்மநாபன் அவர்கள் எனக்கு எழுதிய கவிதை, அவரது முடிவு அவருக்கு முன்பேயே தெரிந்து விட்டதோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது.

 

செந்தமிழில்     சந்தமுடனா       பாடி            நின்றனுக்கு

எந்தன்                வாழத்துக்கள்   என்றும்       உண்டு

கந்தன்                கருணை             கட்டாயம்   கிட்டும்

உந்தன்                தமிழ்                    ஆர்வம்        யாரறியார்

(28-10-19)

 

 

விட்டுப்போன இந்தத் தொடர் பட்டுப்போகாமல் நமது சொந்தம் என்றும் தொடர ஆசிரியர் பத்மநாபன் அவர்களின் ஆசிகளை வேண்டி இத்தொடரை அவரது நினைவுடன் தொடர்கிறேன்.

 

 

தமிழகத்தின் அனைத்து  நகரங்களிலும் சிற்றுண்டியாக இட்லிக்கு சட்னி, சாம்பார்,மிளகாய்ப்பொடி என்று கிடைக்கும்.  நம்ம தேவகோட்டையில் மட்டும் தான் இட்லிக்குத் துணையாக மொச்சை கிடைக்கும்.  அதிலும் ஆர்ச்  உட்புறம் இருக்கும் சாமிநாதன் கடை மொச்சைக்கு ஈடு இணையே கிடையாது.  நா ஊற  வைக்கும் மசாலாவில் ஒளிந்திருக்கும் மொச்சை விண்ட  இட்லியோடு கலந்து வாயில் வழுக்கிக் கொண்டு வயிற்றில் இறங்கும் .  மாலை 5 மணி ஆகி  விட்டாலே ஆர்ச்  வளவு ஜனத்திரள் மிகுந்து காணப்படும். அதிலும் சாமிநாதன் அண்ணன் மொச்சைக் கடை ஒளிமயமாய் இருக்கும்.

 

அந்த அகன்ற தாம்பாளத்தில் மொச்சை மஞ்சள் வண்ணச் சேலையும்  கறிவேப்பிலை ஜாக்கெட்டும் உடுத்தி பாதி மசாலாவும் மீதி மொச்சையுமாக கலந்து பார்க்கவே வாயில் அள்ளி  அனைத்துக் கொள்ளச் சொல்லும்.  இதே சாமிநாதன் மொசைக் கடைக்கு எதிரே பிற்காலத்தில் எத்தனையோ மொச்சை வண்டிகள் வந்து போட்டி போட்டு தோற்று ஓடி இருக்கின்றன .

 

எனக்கு 9 அல்லது 10 வயது இருக்கும். 1969~70 வாக்கில்.. எனது சித்தப்பா தியாகிகள் சாலையில் இருந்த பேங்க் ஆப் மதுரையில் தற்காலிக ஊழியராக இருந்தார்.  இன்றைய ஏகம்மை திருமண மண்டபம் எதிரே இருந்த உயரமான படி வைத்த  கட்டிடம் .  அவரது பெயரும் முத்துமணி தான். பின்னர் நிரந்தரமாக மேலைச்சிவபுரி கிளையில் பணி புரிந்தார் ஓய்வாகி உயரேயும் சென்று விட்டார். பகல் நேரத்தில் வங்கியில் வவுச்சர் எழுதுவதில் இருந்து மற்ற பட்டியலில் இல்லாத அனைத்து பணிகளையும் செய்வார். இரவில் அவரே அங்கு காவலாளர்.  அன்றைய பேங்க் ஆப் மதுரை ஒரு குடும்ப நிறுவனம் போலத்தான்.   ஏஜெண்ட்  என்று அழைக்கப்படும் கிளைத் தலைவர் தான் அனைத்துக்கும் பொறுப்பாளர்.  அதனால், ஏவலுக்கும் காவலுக்கும் ஒருவரே என்றும் வைத்து கொள்ள இயன்றது. 

 


அவருக்கு இரவு உணவை எடுத்துச் சென்று கொடுக்கும் பணி  எனக்கு இடப்பட்டு இருந்தது.  இப்ப வாங்க என்னோடு ஒரு நகர்வலம் .  எதையும் ஆச்சரியத்தோடு கூர்ந்து நோக்கி அணு அணுவாக இரசித்து 'ஆ' வென்று வாய் பிளக்கும் வயது.  உணவு எடுத்துக் கொண்டு போகிற சாக்கில் இப்படி ஊர் சுற்றி வருவது ஒரு நல்ல அனுபவம்.  என் வீடு இருந்தது வட்டாணம்  ரோடில் பெரிய பள்ளிவாசலுக்கு அடுத்து திருச்சுழியார் வீட்டுக்கு எதிரில்..   இங்கிருந்து என் அத்தை (சித்தப்பாவின் அக்கா, அவர்தான் தன்  தம்பிக்கு உணவு கொடுத்து விடுவார், நமது வேலை அதைக் கொண்டு போய்க்  கொடுக்கும் அனுமார் உத்தியோகம் மட்டுமே, zomato கொஞ்சம் நவீனமா  சொல்லிக்  கொள்வேமே ??!!) வீடு இருந்த காந்தி ரோடில், பீர் ராவுத்தர் சந்துக்கு சென்று  அந்த உணவு தூக்கு சட்டியை பெற்றுக் கொண்டு அப்படியே தொண்டியார் வீதி வழி வந்து வெள்ளையன் ஊரணி வந்து சேர்வேன்.  அப்போதெல்லாம் வெள்ளையன் ஊரணி நால்  கரையும்  நகரின் முக்கியமான கடைத்தெருக்கள் தான்.  அப்படியே ஒவ்வொரு கடையா நோட்டம் விட்டு மேல பஜார் வீதியை பிடித்து தியாகிகள் சாலை வந்தால் இந்த பேங்க் ஆப் மதுரை.   உயரமான படிகளில் ஏறி அந்த zomato  டெலிவரி  வேலையை முடித்ததும் என் சேவையை மெச்சி இந்த சித்தப்பா ஒரு 10 புதிய காசு (நயா பைசா) கொடுப்பார். இந்தப் பெருந்தொகையை எப்படி செலவழிப்பது?. அதை விட எனது அன்றைய சம்பாத்தியமான 10 பைசாவை எனது தாயுடன் பங்கு வைக்க வேண்டும் என்ற எண்ணம்.

 

நேரே வீட்டுக்கு திரும்புவதில்லை.  இன்னும் கொஞ்சம் தியாகிகள் சாலையின் வடக்கே நடந்தால் நகரின் அடுத்த வர்த்தக மையமான ஆர்ச்.  அங்கே இந்த ஆர்ப்பாட்டமான சாமிநாதன் மொச்சைக்கடை.   இந்த 10 காசுக்கு மொச்சை வாங்குவேன்.  அழகாக ஒரு காகிதத்திற்குள் வாழை இலை பரப்பி அதன் மேல் எண்ணெய் மிதக்க மொச்சையார் பொட்டலமாகி இருப்பார், சுடச் சுட.   அப்படியே கையில் வைத்துக் கொண்டு, திருப்பத்தூர் சாலை வழியாக நீண்ட தூரம் நடந்து சிவன் கோவில் முக்கைப்  பிடித்து வட்டாணம் ரோடு வந்து வீடு வந்து சேர்வேன்.

 

இரவு உணவுக்கு இந்த மொச்சை சொர்க்கமாய் வாயில் கரையும்.  கொஞ்சம் கொஞ்சமாக மொச்சை 10 காசில் இருந்து 15 காசுக்கு ஏறியது.  சுவை மட்டும் குறையவே இல்லை .   இந்த மொச்சைக்கடை சாமிநாதன் அண்ணன் ஒரு சிறந்த நடிகர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்?

 

அடுத்த பகுதியில் சந்திபோமே .

 

கருத்துகள்

  1. உங்கள் கருத்துக்கள் உயிரோட்டம் மிகுந்தவை

    பதிலளிநீக்கு
  2. Mani... you mean Esakki Motchai kadai.... we all are waiting for your 2rd part... keep going...

    பதிலளிநீக்கு
  3. அசை போடும் தேவகோட்டை நினைவு
    அசையா சொத்து முத்துமணி - மாலை இசையின் பாசமலர் மீண்டும் ஞாபகத்
    திசை மாறா தேசியமே !
    #மேனா சீனிவாசன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அசை போடும் தேவகோட்டை நினைவு
      அசையா சொத்து முத்துமணி மாலை
      இசையின் பாசமலர் மீண்டும் ஞாபகத்
      திசை மாறா தேசியமே !
      #மேனா சீனிவாசன்

      நீக்கு
  4. கொடிய கிருமியாலே கோடானு கோடி
    மடியக் காரணமான நோய்த் - தொற்று
    நகத்திய சீனனை என்னென்று சொல்
    முகத்தில் காறி உமிழ் !
    #மேனா சீனிவாசன்

    பதிலளிநீக்கு
  5. நண்பா , oct 7th எனது பின்னூட்டம் ...
    Hv u read ?

    பதிலளிநீக்கு
  6. திரு. பத்மநாபன் 'நாராயணீயம்' என்ற வடமொழியில் குருவாயூரப்பன் மீது பட்டத்தின் படைத்த காவியத்தை தமிழில் கவிதை நூலாக எழுதிவந்தார் அதனை பதிப்பிப்போம் என நினைத்தோம் அதற்குள் இறைவன் அழைத்துக்கொண்டானே

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60