சாண்டில்யன்...... அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2: பகுதி: 12
அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2
பகுதி: 12
அன்பு சொந்தங்களே ...
சாண்டில்யன்......
சாண்டில்யன் - வரலாற்றுப் புதினங்களை விரும்பிப் படிக்கும் வாசகர்களால் இந்தப் பெயரை மறக்கவே முடியாது.
"ஒரு படத்துக்கு மக்கள் மத்தியில் ஐந்து ஆண்டுகள் மட்டுமே மவுசு இருக்கும். ஆனால், நான் எழுதும் புத்தகங்களுக்கு 500 ஆண்டுகள் மவுசு இருக்கும். அதனால்தான் நான் எழுத்துத் துறையைத் தேர்ந்தெடுத்தேன்''.
இப்படிச் சொன்னவர், அமரர் சாண்டில்யன்
எத்தனையோ தமிழரை தஞ்சைத் தரணியின் இராசேந்திர சோழனின் கடற்படையில் ஒருவராக இணைத்துக்கொண்டு கலிங்கத்தில் பாய் மரத்தை உயர்த்தி விரித்து நக்காவரத் தீவுகளில் (நிக்கோபார் ) இறக்கி இளைப்பாற வைத்து பின் இன்றைய இந்தோனேசியத் தீவுக்கூட்டங்களிடை மரக்கலன்களை செலுத்தி சாவகம், புஷ்பகத் தீவுப் பெண்களைக் கண்டு இரசித்து கடாரத்தின் கரைகளில் படாக்கு இனத்தாரோடு உறவாடி ஸ்ரீவிஜய மன்னரோடு பொருதித் தண்டனிட வைத்து மின்னும் பொன்னும் இன்னும் பொருளும் கொண்டு தமிழகக் கடற்கரையில் இறக்கி வைத்தவர். எத்தனை வரலாற்றுப் புதினங்கள்?
தமிழகத்தின் வடக்கில், மேற்கே யவனத்தில், கிழக்கே கடாரத்தில் என்று பெரும் பயணம் நம்மை மேற்கொள்ளச் செய்த பெருந்தகை.
அவற்றில், 42 சரித்திர நாவல்கள்.
மற்றவை சமூக நாவல்கள் மற்றும் இலக்கியக் கட்டுரைகள்.
இவர் எழுதிய மிகப்பெரிய நாவல் "கடல்புறா".
மூன்று பாகங்கள்; மொத்தம் 2,000 பக்கங்கள். கையெழுத்துப் பிரதிகள் 20,000 பக்கங்களுக்கும் மேல்.
இந்தியாவிலேயே அதிகம் எழுதி சரித்திரம் படைத்த சாதனையாளர் சாண்டில்யன்தான். பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்படக் கதை வசனகர்த்தா, வரலாற்று நாவலாசிரியர்கள் போன்றோரிடையே முன்னணி இடத்தைத் தேடிக்கொண்டவர் எனப் பலமுகத் திறமைகளோடு முன்னேறிக் கொண்டிருந்த சாண்டில்யன், உழைக்கும் பத்திரிகையாளர்களுக்கான சங்கம் ஒன்றை நிறுவுவதில் பெரும்பாடுபட்டு, "தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தை"த் தொடங்கினார். அது "தென்னிந்தியப் பத்திரிகையாளர் சம்மேளனம்" என்ற பெயரில் பிரபலமடைந்தது.
தனக்கு நியாயம் எனத் தோன்றாததை எதிர்த்து அவர் பேனா சீறிப்பாயும்.
நாடகமோ, திரைப்படமோ, சமுதாயத்துக்குத் தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தால் போர்க்கொடி உயர்த்தத் தயங்கமாட்டார். நண்பர் என்றும் வேண்டியவர் என்றும் பார்க்க மாட்டார்.
1910ஆம் ஆண்டு நவம்பர் 6ஆம் தேதி, டி.ஆர்.சடகோபன் ஐயங்காருக்கும், பூங்கோதைவல்லி அம்மையாருக்கும் மகனாக திருக்கோவிலூரில் பிறந்த எஸ்.பாஷ்யம் (தஞ்சை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்துள்ள திருஇந்தளூர் அவரது சொந்த ஊர்.) கல்லூரிப் படிப்பில் "இன்டர்மீடியட்" படித்தார்.
அப்போதே அவருக்குத் தேசிய இயக்கத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபாடு கொள்ளத் தொடங்கிய பிறகு, சென்னை வந்த அவருக்கு, அறிஞர் வெ.சாமிநாத சர்மா, கல்கி போன்றோர் நண்பர்களாயினர். இருவருடனும் பழகியதால் சிறுகதை எழுதும் ஆர்வம் ஏற்பட்டது. "திராவிடன்" இதழில் "சாந்தசீலன்" என்ற சிறுகதையை எழுதினார். அந்தக் கதையைப் படித்த கல்கி, அவர் ஆசிரியராக இருந்த "ஆனந்த விகடனில்" எழுத வற்புறுத்தினார்.
சாண்டில்யனின் எழுத்துத் திறமையை அறிந்த சுதேசமித்திரன் ஆசிரியர் ஸி.ஆர்.சீனிவாசன், அவரை நிருபர் பணியில் அமர்த்தினார். சாண்டில்யன், உயர் நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் பற்றிய செய்திகளை எழுதும் நிருபராகப் பணியாற்றினார். சாண்டில்யன் நிருபர்களுக்கு வழக்கு மன்றத்திலிருந்த "மரியாதை"யை சுவைபட விவரித்து, "ஆங்கில ஏடுகளின் நிருபர்களுக்கு மட்டும் நீதிமன்றத்தில் வசதியாகவும் மற்ற தமிழ்ப் பத்திரிகை நிருபர்கள் நின்றுகொண்டுதான் எழுதவேண்டிய நிலை" உள்ளதைச் சுட்டிக்காட்டிப் பேசியும், எழுதியும் வந்தார். நீதிமன்ற நடவடிக்கைகளை சுதேசமித்திரனில் வெளிவரச் செய்தார். சுதேசமித்திரன் செய்தி வழக்கறிஞர்களிடையே பரவியது. சாண்டில்யனுக்கு உட்கார நாற்காலி வசதி செய்யப்பட்டது. நீதிமன்ற வழக்குகளை நல்ல தமிழில் சுதேசமித்திரனில் எழுதியதால், சாண்டில்யன் திறமை எங்கும் பேசப்பட்டது.
1937இல் மகாத்மா காந்தியைச் சந்தித்துப் பேட்டி கண்டு எழுதினார்.
சாண்டில்யனின் மதிப்புணர்ந்த நிர்வாகம், அவரை உதவி ஆசிரியராகப் பதவி உயர்வு அளித்தது.
சாண்டில்யனுக்கு, சினிமா, நாடகம் பார்ப்பதில் மிகுந்த ஈடுபாடு உண்டு. "ஹிந்துஸ்தானி"ல் பணியாற்றிய போதுதான் திரைப்படத்துறையின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது. சினிமாவைத் தாக்கி எழுதுபவர்களுக்கு அவர், தன் பேனாவின் வலிமையால் பதில் சொல்லியிருக்கிறார். சினிமா பற்றி இராஜாஜி கூறிய கருத்துகளை எதிர்த்து "சினிமா பார்ப்பது கெடுதலா?" என்ற கட்டுரையை 1952இல் எழுதினார். வி.நாகையாவின் "தியாகையா" வெற்றிக்கு சாண்டில்யன் பெரிதும் காரணமானவர். அந்தப் படம் வெளிவந்த பிறகு, புகழின் உச்சியில் இருக்கும்போதே திரைப்படத் துறையிலிருந்து விலகிவிட்டார். இளம் வயதிலிருந்தே அவரின் இலட்சியம் எழுத்தாளராக வேண்டுமென்பது.
"அமுதசுரபி"யில் சரித்திர நிகழ்ச்சிகளை நிலைக்களனாகக் கொண்ட சிறுகதைகளை அவ்வப்போது எழுதினார். "சரித்திர நாவல் எழுதும் தாங்கள், வரலாற்றுப் புதினங்கள் எழுதவேண்டும்" என்று "அமுதசுரபி" நிறுவனத்தார் கேட்டுக்கொண்டதால், "ஜீவபூமி" என்ற சரித்திரத் தொடரை எழுதினார். "ஜீவபூமி" தொடர், பின்னர் பிரபல அமெச்சூர் நாடக மன்றத்தாரால் நாடகமாக அரங்கேற்றப்பட்டது. "ஜீவபூமி" தொடருக்குப் பிறகு, "மலைவாசல்" என்ற தொடரை எழுதினார். "மலைவாசல்" புதினத்துக்குக் கிடைத்த வாசகர்களின் வரவேற்பால், பல வரலாற்றுப் புதினங்களை எழுத அவருக்கு உற்சாகம் ஏற்பட்டது.
கன்னிமாடத்தில் தொடங்கி, கடல்புறா (மூன்று பாகங்கள்), யவனராணி முதலிய பிரம்மாண்டமான நாவல்களை எழுதினார். சரித்திரக் கதை சக்கரவர்த்தி சாண்டில்யன், இசை வல்லுனரும் கூட. சபாக்களில் கச்சேரிகளை விமரிசனம் செய்வதில் 'சுப்புடு' வுக்கு மூத்தவர். ஆனால் எழுத்தில் தன்னை இணைத்துக் கொண்டதால் இசை விமர்சனத்தை விலக்கி வைத்துக் கொண்டார். அதெல்லாம் சரி... தேவகோட்டை நகரைப் பற்றி அசை போடுகிறேன் என்று ஆரம்பித்து விட்டு என்னவோ சரித்திர கதை ஆசிரியர் என்று கதை விட்டுக் கொண்டு இருக்கிறீரே என்று கேட்கிறீர்களா? ..
ம்.ம்.. எங்கே விட்டோம்?? சிலம்பணி சன்னதி தெருவில் தானே. தமிழ் இலக்கிய உலகில் பெரும் புகழ் பெற்ற ஆளுமையான ஒருவருக்கு இந்த C.S என்ற அட்வகேட் C .ஸ்ரீனிவாசன் அவர்களுடனான தொடர்பு இருக்கிறது.. பின்னர் சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா ?
இந்த CS நமது அன்பார்ந்த பெரியவர் தேவகோட்டை வழக்கறிஞர் வெங்கடபதி அவர்களின் அத்தையின் கணவர்.இவர்களது மகள் நமது தேவகோட்டை சிலம்பணி சன்னதி தெருவில் பிறந்து வளர்ந்த சுசிலா அம்மையார்.
சாண்டில்யனுக்கு இரு குமாரர்கள், மூத்தவர், சடகோபன் பேராசிரியர். மதுரைக் கல்லூரியில் 'பொருளாதாரம் மற்றும் வரலாறு' என்று இரு துறைகளிலும் DEMONSTRATOR பதவியில் இருந்தார். அந்த கால கட்டத்தில் இவர் நமது தேவகோட்டையில் பிறந்து வளர்ந்த சுசிலா அவர்களை மணந்து கொண்டார். அதாவது சாண்டில்யனின் மாட்டுப்பெண் நம்ம சிலம்பணி சன்னதி தெருவில் இருந்து சென்றவர். சடகோபன் சுசிலா இவர்கள் திருமணம் 1965 ஆம் ஆண்டு நடை பெற்று இருக்கிறது. திருமணம் ஆன புதிதில் வார இறுதி நாட்களில் புது மாப்பிள்ளையாக சிலம்பணி சன்னதியில் இருக்கும் தனது மாமனார் இல்லத்துக்கு வருவாராம். அனைவரிடமும் மிக நெருக்கமாக எந்த ஒரு பெருமையும் இல்லாமல் பழகுவார் என்று அன்றைக்கு தேவகோட்டை சிலம்பணி அக்ரஹாரத்தில் வாழ்ந்தவரும் 1965 ஆம் ஆண்டுக்குப் பிறகு சென்னை வாசியுமாகி விட்ட திரு.நாராயணன் ஸ்ரீநிவாசன் அவரது மலரும் நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
அது தவிர, சாண்டில்யனுக்கும் தேவகோட்டையைச் சேர்ந்த வானதி திருநாவுக்கரசு அவர்களுக்கும் இடையே இருந்த நட்பு, திரையுலகில் மக்கள் திலகத்துக்கும் சாண்டோ M.M.A. சின்னப்ப தேவருக்கும் இடையே இருந்த நட்பைப் போலவே தொழிலிலும், மனதிலும் இருந்தது. சாண்டில்யனின் சரித்திரப் புதினங்கள் வானதி பதிப்பகத்தாரால் மறு பதிப்பாக பல முறை பதிப்பிக்கப்பட்டு உள்ளது.
வானதி திருநாவுக்கரசு
சடகோபன் மதுரை கல்லூரியில் பணி புரிந்த நாட்களில் தேவகோட்டைக்கு தன் மாமனார் இல்லத்துக்கு அடிக்கடி வர போக இருந்தார். பின்னர் சென்னை வைஷ்ணவா கல்லூரியில் வரலாற்று துறையின் தலைவராக பணியில் அமர்ந்த உடன் தி.நகரில் வசித்து வந்த தமது தந்தை சாண்டில்யனுடன் வசிக்க ஆரம்பித்தார். தனது தந்தையாருக்கு சரித்திரம் சம்பந்தமான அரிய புத்தகங்களைத் தேடி எடுத்துக்கொடுக்கும் தலையாய பணியினைச் செய்து வந்தார் . தேவகோட்டையில் மாமனார் இல்லத்தில் நிகழும் விசேட நிகழ்வுகளுக்குத் தவறாமல் வந்து கொண்டு இருந்தார்.
அமரர் சாண்டில்யன் தேவகோட்டை நகரத்தார் பெருமக்களுடன் நல்ல தொடர்பில் இருந்தார். காரைக்குடி கம்பன் அடிப்பொடி ஐயா சா.கணேசன் அவர்களுடன் இணைந்து நட்புடன் இருந்து இருக்கிறார். இவர்கள் எல்லாம் ஒரு குழுவாக செயல் பட்டு இருக்கிறார்கள்.
சாண்டில்யனின் குடும்பமே இசைப்பாரம்பரியம் மிகுந்தது. சாண்டில்யனின் ஒரே மகளான திருமதி .பத்மா அவர்கள் தனது சகோதரன் சடகோபனுடன் தேவகோட்டை வந்து சிலம்பணி சிதம்பர விநாயகர் சன்னதியில் நடை பெற்ற தியாக பிரம்ம உத்சவத்தில் இசை நிகழ்ச்சி வழங்கி உள்ளார். இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர் நமது மனதிற்கினிய ஆசிரியர் அமரர் DPS என்ற பத்மநாபன் சார் ஆவார் . அதே போல இந்த பத்மா அம்மையார் தேவகோட்டை கந்தர் சஷ்டி விழாவிலும் கச்சேரி நடத்தி இருக்கிறார். சடகோபன் சாண்டில்யன் கடந்த கொரோனாவின் முதல் அலையில் தொற்றுக்கு ஆளாகி அண்மையில் தான் காலமானார். நம்ம தேவகோட்டை மாப்பிள்ளைக்கு நமது அஞ்சலிகள்.
இளையவர் கிருஷ்ணன், வைஷ்ணவ கல்லூரி முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர்.
திருமதி பத்மா சாண்டில்யன்
மகள்களுள் ஒருவரான பத்மா சாண்டில்யன், இசையில் மிகவும் சிறந்து விளங்குகிறார். இந்த திருமதி பத்மா சாண்டில்யனின் கணவர் பிரபல மிருதங்க கலைஞர் ஸ்ரீ முஷ்ணம் ராஜா ராவ். செம்மங்குடி சீனிவாச அய்யர், புல்லாங்குழல் மாலி, பாலமுரளி கிருஷ்ணா , T.பிருந்தா, ML.வசந்தகுமாரி, உஸ்தாத் ஜாஹிர் ஹுசேன், மாண்டோலின் சீனிவாசன் என இவரது இணையர்கள் மிக மிகப் பிரபலங்கள்.
ஸ்ரீ முஷ்ணம் ராஜா ராவ்
திருமதி பத்மா சாண்டியனும் தமது சென்னை தி.நகர் இல்லத்தில் இசை வகுப்புகள் நடத்துகிறார்.
இவர்களது மகன் இன்னும் வீச்சு அதிகம். ஷான் ரோல்டன் ( Sean Roldan ) என்ற பெயரில் கர்நாடக இசையைத் தாண்டி திரை இசையிலும் கலக்கி வருகிறார். இராகவேந்திரா என்ற இயற் பெயரையுடைய இவர் ஷான் ரோல்டன்(Sean Roldan) எனும் பெயரில் இசைக்குழு (BAND ) நடத்தி வந்தார் .
ஷான் ரோல்டன்(Sean Roldan) நடிகர் தனுசுடன்
அதனையே தனது திரை இசைப் பெயராக வைத்துக்கொண்டு 2014 ஆம் ஆண்டு முதல் பல திரைப்படங்களுக்கு இசை அமைத்தும் பின்னணி பாடியும் வருகிறார். இவர் இசையில் வெளி வந்த படங்கள்.
வாயை மூடிப் பேசவும் , சதுரங்க வேட்டை ,முண்டாசுப் பட்டி ,ஆடாம ஜெயிச்சோமடா ,144,ஜோக்கர் , பா பாண்டி, நெருப்புடா, கதா நாயகன்,வேலையில்லா பட்டதாரி2, காத்திருப்போர் பட்டியல் , மெஹெந்தி சர்க்கஸ், ராட்சசி, தாராள பிரபு, கசட தபர, ஜெய் பீம் என நீண்டு கொண்டே போகிறது.
இப்படி பல ஆளுமைகள் தொடர்ந்து தொடர்பில் இருந்ததும் பல விருட்சங்களின் வித்தாகவும் விளங்குகிற நகரம் தான் நம்ம தேவகோட்டை. இத்தோடு சிலம்பணி சன்னதி தெருவின் வடக்குத் தொகுப்பின் சுற்றி வீடுகளுக்குள் புகுந்து மருத்துவரில் ஆரம்பித்து, வங்கிக்குள் நுழைந்து, பிராமணாள் ஸ்டோர்ஸில் அப்பளம்,வடாம் ஷாப்பிங் செய்து, குருக்களிடம் ஆசி பெற்று ஸ்வயம்பாகியிடம் சுண்டல் வாங்கி சுவைத்து பழனி பாத யாத்திரீகர்களுடன் பஜனை பாடி, EO வைப் பார்த்து, சாண்டில்யன் கதைகள் படித்து தியாகப்பிரம உற்சவம் ரசித்து சிதம்பர விநாயகரின் சிலம்பணிந்த பாதங்களை வேண்டி நிற்கின்றோம்.
திரு.சபா ரெத்தினம் அவர்கள்
தொடரின் சென்ற பகுதியில் EO நாகாடி சுப்பிரமணியன் அவர்களைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொண்டோம். அவரது மகன்களில் மூத்தவர் எவர் இளையவர் எவர் என்ற ஒரு செய்தியினை அன்புத் தோழர் (என் மாப்பிள்ளை), மேனாள் பாண்டியன் கிராம வங்கி REGIONAL MANAGER, சபா ரெத்தினம் அவர்கள் பின்னூட்டமாகப் பதிவிட்டு தவறில் இருந்து பதிவைத் தடுத்தாட் கொண்டார்.
அதே போல எமது அன்புத்தம்பி, திரு.பெத்தாச்சி அவர்கள் (எமது நகரச் சிவன் கோவில் பால்ய நண்பர் இவர், சண்முகநாதபுரம் பிள்ளையாகி விட்டவர்).
திரு.பெத்தாச்சி அவர்கள்
கீழ்க்கண்டவாறு E.O. பற்றிய தமது நினைவலைகளை எமக்கு அனுப்பி இருந்தார். இதோ…..
EO நாகாடி சுப அவர்கள் குடும்பம் எங்கள் குடும்பத்துக்கு மிகவும் அந்நியோன்னியமானது..அவரது 4வது மகன் பெயர் ரெத்தினம். ஒரு மகள் பெயர் கோமதி இன்னொரு மகள் பெயர் மறந்துவிட்டது. எங்கள் பாட்டனார் ST MR VR முருகப்ப செட்டியார் அவர்கள் சிலம்பனி கோவில் அறங்காவலராக சுமார் 40 ஆண்டுக்கும் மேல் இருந்தார்கள். அவர்களுடன் எங்கள் வீட்டு மாட்டுவண்டியில் அடிக்கடி சிலம்பனி செல்வேன் அப்போதெல்லாம் எனக்கு EO சுப்பிரமணியன் அவர்கள் வீடு தான் விளையாடும் இடம். EO அவர்கள் லைசென் சுடன்இரட்டைக்குழல் துப்பாக்கி ஒன்று வைத்திருப்பார்கள் அதை பல முறை தூக்கிப்பார்த்து தூக்கமுடியாமல் ஏமாந்து இருக்கிறேன். அவர்கள் வீட்டில் தான் நான் அசைவ உணவை விதம் விதமாய் சாப்பிட்டு இருக்கிறேன்.
என்னால் அவர்களை மறக்கமுடியாது.
ஆக இந்த்த் தொடர் மூலம் அன்றைய மாமனிதர்கள் எல்லாம் நம்மோடு இன்று உலவுகிறார்கள், உறவாடுகிறார்கள் என்ற வகையிலே நம் அனைவருக்கும் மகிழ்ச்சி என்பதில் ஐயமில்லை.
தெற்கு வரிசையில் சில இடங்கள் விட்டு விட்டன. அதை அடுத்து பார்த்து விட்டு அப்படியே சன்னதியின் வலப்பக்கம் திரும்பி வெள்ளாள வீதியிலும் ஒரு வெள்ளோட்டம் விட்டு விடுவோம். இன்னும் நிறைய இடங்கள் பாக்கி. பலரும் நினைக்கலாம் தேவகோட்டை சிறிய ஊர் என்று. விபரம் தெரியாதவர்களின் விவாதம் அது.
கொஞ்சம் பொறுமையா கூட வாங்க செல்லங்களா
ஆஹா எத்தனை தேடல்கள். சாண்டிலியன் 110 வருடம் கடந்தும் இன்றும் பேசப்படுகின்றார் என்றால் நீங்கள் அவரைப் பற்றி எழுதிய தன்மைகள்தான் காரணமாக இருக்கின்றன. தேவக்கோட்டை உடன் இவர்களின் தொடர்பை அழகாக எடுத்து வந்து இருக்கின்றீர்கள். உங்கள் கட்டுரைகளை பார்க்கின்றபோது தேவகோட்டையில் நீங்கள் பிறந்ததே ஒரு பாக்கியம் என்று நினைக்கின்றேன் இந்த ஊருக்கு எத்தனை சிறப்புகள் இருக்கின்றன. அவருக்கு உள்ள தொடர்பு அவருடைய பிள்ளைகளுக்கு உள்ள தொடர்பு இப்போது அவர்கள் எப்படி பிரகாசிக்கின்றார்கள் என்றெல்லாம் அற்புதமாக சொல்லி இருக்கின்றீர்கள் வாழ்த்துகள்
பதிலளிநீக்கு1960 நிகழ்வுகள் தேவகோட்டை மக்களின் அற்றைய நிகழ்வுகளை படம் பிடித்து காட்டுகின்றன. எடுத்து சொன்ன முறை நயம்படவுள.
பதிலளிநீக்குதமிழ்சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்த தேசிகன் (தயிர்வடை) திரு.சாண்டில்யனுக்கு உதவியாளராக இருந்தார்.
பதிலளிநீக்குதிரு.சாண்டில்யன் வைணவ நெறியிலும் மிகுந்த ஈடுபாடு இராமனுசர் குறித்த ஒருநாள் எழுதியுள்ளார்.