அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2; பகுதி: 17; நீதி அரசர் கற்பக விநாயகம்

 

அன்புச் சொந்தங்களே ...

எனது தொடக்க மற்றும் உயர்நிலைப்  பள்ளி மாணவப் பருவத்தில் ஒரு நண்பன்... அவர் பெயர் திரு.கோபால்.   எனது நண்பர்களும்  பின்னர் உறவினரும் ஆன  தேவகோட்டை தமிழ்க் கொண்டல் ஆ .குமார், திரு.இராஜகோபால் என்ற ஆசைத்தம்பி (மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் அங்குச்சாமியின் தம்பி) இவர்கள் எல்லாம் ஒரு குழு. இதில் எங்கள் திண்ணன் செட்டி  ஊரணிப்  பகுதியில் இருக்கும் 'மாணிக்க வித்தியாசாலை' பள்ளியின் சார்பாக கிறிஸ்துமஸ் தினத்தில் பள்ளியின் ஆண்டு விழாவைக் கொண்டாடும் முகமாக நாடகங்கள் நடத்துவார்கள்.  இதில் இந்த கோபால் மற்றும் ஆ.குமார் அதிகமான  ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள்.  நானெல்லாம் ஒத்திகையை வேடிக்கை பார்க்கிற வெட்டியானவன்.   இதில் என்ன ஒரு சிறப்பு என்றால் இந்த கோபால் மாணிக்க வித்தியா சாலையின் மாணவர் அல்ல.  ஆனால் அரங்கத்தின் ஆர்வத்தால் மட்டுமே இங்கு வந்து நடிப்பார்...  அவரது தொடக்கப்பள்ளி காந்தி ரோடில் நான் பயின்ற அதே புனித ஜான்ஸ் பள்ளி.  அவரது இல்லம் அன்றைக்கு இருந்த இடம் தேவகோட்டையில் பழைய சருகணி சாலையில் 'கல்கண்டு'  இதழ் ஆசிரியர் திரு.தமிழ்வாணன் இல்லத்துக்கு அருகில்.. அந்தக்கடைசியில் இருந்து இங்கு மாணிக்கம் வித்தியா சாலைக்கு வருவார் ...அந்த அளவுக்கு நடிப்பு எனும் கலையின் மீது அவருக்கு ஒரு ஆனந்தம்.  குமார் அவர்களும் பேச்சு நடிப்பு பாட்டு என அன்றே பாடித்திரிந்த வானம்பாடி.

பின்னர் நான் உயர் நிலைக்  கல்விக்கு தே  பிரிட்டோ பள்ளி சென்று விட்டேன்.  நண்பர்  கோபால் நகரத்தார் பள்ளி மாணவர்.  நகரத்தார் பள்ளியில் விளையாட்டு ஆசிரியர் திரு.சுப்பையா அவர்கள் ஓவ்வொரு வருடமும் கல்வி மாவட்டப்  பள்ளிகளுக்கு இடையே கூடைப்பந்து (Basket Ball ) போட்டிகள் விமரிசையாக நடத்துவார்.  அதில் நகரத்தார் பள்ளியின் சார்பில் நம்ம நண்பர் கோபால் மிக நன்றாக விளையாடுவார். அவரை ஊக்கப் படுத்துவதற்காகவே எனது பள்ளியில் இருந்து வீடு திரும்பும் போது , நேராக வீட்டுக்குப் போகாமல் நகரத்தார் பள்ளிக்குள் சென்று முழு விளையாட்டுப் போட்டிகளையும் பார்த்து நண்பர் கோபால் விளையாடும் குழுவுக்கு ஆதரவாக  கூச்சல் எல்லாம் போட்டு விட்டுத்தான் செல்வது வழக்கம்.

தேவகோட்டையில் கல்லூரி நாட்களில் ராயல் பி.காம். என்ற எங்கள் வகுப்பு சுற்றுலா சென்றோம் ஒரு மூன்று நாட்கள்.  எங்களது வகுப்பைச் சேராத போதிலும்,நட்பின் அடிப்படையில் நண்பர் கோபால் எம்முடன் அந்த சுற்றுலாவுக்கு வந்தார்.  அவருடன் BANGOS வைத்தியமும்.  அந்த 3 நாட்களும் ஆடல் பாடல் அமர்க்களம் நண்பர் கோபாலின் பாங்கோஸ் இசையின் பின்னணியுடன் தான்.  அந்த  அன்பு நண்பன் கோபால் அவர்களை கடைசியாக சந்தித்து 42 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.  முதிர்ந்த போதும்  உதிர்ந்து விடா நினைவுகள்.

பழைய சருகணி  சாலையில் இருந்து நண்பர் கோபாலின் குடும்பம் இப்போது நாம் நின்று கொண்டு இருக்கும் வெள்ளாளர் தெருவுக்கு சப்பாணி (முனீஸ்வரர் கோவில் முன்பாக) மாறி வந்து விட்டார்கள்.  இப்போது இவர்கள் குடும்பத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும்.

சிலம்பணி வடக்கு அக்ரஹாரத்தில் லட்சுமி திரையரங்கம் (பழைய கொட்டகை) பின் புறம் இருக்கும் ருக்மணி அம்மா அவர்களின் பெரிய வீட்டை இந்த தொடரின் ஆரம்பித்திலேயே பார்த்தோம்.  அந்த பெரிய வீட்டின் நடு ஹாலில் ருக்மணி அம்மாவும், பெரியவர் குற்றவியல் (கிரிமினல்) வழக்குரைஞர் L.சீனிவாச அய்யங்கார் அவர்களும் இருக்கும் பெரிய நிழற் படம் மாட்டி இருப்பதை இன்றைக்கு  50 வயதுக்கு மேல் உள்ள தேவகோட்டை வாசிகள் கவனித்து இருப்பார்கள்.  புகழ்பெற்ற குற்றவியல் வழக்குரைஞர் திரு.L சீனிவாசன் அவர்களின் இல்லம் இதே சிலம்பணி வடக்கு அக்ரஹாரத்தில் ருக்மணி அம்மா இல்லத்துக்கு மேற்கே சில வீடுகள் தள்ளித்தான். அன்றைய சிலம்பணி வடக்கு அக்ரஹாரம் வழக்குரைஞர்களாலும் அவர்களிடம் கற்றுக்கொண்டு சட்ட நுணுக்கங்கள் சிறப்பாக அறிந்த எழுத்தர் (வக்கீல் குமாஸ்தா)கலாலும் நிரம்பி ஞான வெள்ளம் பரவி ஓடும் வீதியாக விளங்கியது.  இந்த L.சீனிவாச அய்யங்காரிடம் ஒரு விபரமான குமாஸ்தா, திரு.முத்துசாமி பிள்ளை என்ற பெயரில்.  இவர்கள் இருவருக்கும் இடையில் இருந்த பந்தம் பணியின் தொடர்பை மீறிய கண்ணுக்குத் தெரியாத சொந்தம்.  ஒருவர் பால் ஒருவர் மதிப்பும், அன்பும் கொண்டிருந்தனர்.  அறந்தாங்கிக்கு அருகில் கோடக்குடி என்ற கிராமத்தில் நிலச்சுவான்தாராக, கிராம மணியமாக, பஞ்சாயத்தாராக இருந்த கருப்பையா பிள்ளையின் மூன்றாவது மகனான இந்த முத்துசாமி பிள்ளை அனைத்தையும் துறந்து தேவகோட்டை வாசியாக தனது காலில் தானே நிற்க வேண்டும் என்ற லட்சிய வேட்கை உடையவர் என்ற மரியாதையும் மதிப்பும் வழக்கறிஞருக்கு என்றுமே உண்டு. பெரிய இடத்துப் பிள்ளைக்கு கொடுக்க வேண்டிய அன்பைச் சொரிந்தார் பின்னாட்களில் திரு.முத்துசாமி பிள்ளை தனக்கு இருந்த நீதி மன்ற, நீதித்துறை, வழக்கறிஞர்களின் சங்கமத்தால் தனியாக பாத்திரங்கள் எழுதித்தரும் அலுவலகம் ஒன்றை லட்சுமி திரையரங்கம் எதிரே தொடங்கினார்.

அமரர் முத்துச்சாமி பிள்ளை


பெரிய குடும்பப்  பின்னணி, பெரிய தலைக்கட்டு என்று சொல்வார்களே.... அந்த வகை... எடுப்பான தோற்றம்... துடிப்பான நறுக்குத் தெறித்தாற் போன்ற சரியான வார்த்தைகள்.  எழுதும் பொருளினை  சுருக்கமாய்  எழுதும் பாணி என்று இவரின் திறமை இவரை மேம்பட வைத்தது.  

திரு.முத்துச்சாமி பிள்ளை பத்திர வரைவு அலுவலகம்

கலையாத கலை ஆர்வம் இவர்களது உதிரத்தில் ஊறிய ஒன்று.  தந்தை கருப்பையா பிள்ளை இன்று மறைந்தே போய் விட்ட 'புல் புல் தாரா' எனும் இசைக்கருவியை அருமையாக மீட்டுவாராம்.  இவரது மூத்த அண்ணன்  மாணிக்கம் நாடகங்கள் எழுதுவாராம்.  கலை , இசை, ஞானம் இவை எல்லாம் மரபணு சம்பந்தப்பட்டவை.  இறைவன் விதைக்குள்ளேயே விருட்சத்தின் அனைத்து தன்மைகளையும் விதைத்து விடுகிறான்.  இந்த வரிகளின் உண்மை இனி வரும் செய்திகளில் பொதிந்து இருக்கிறது.

இந்த பத்திர எழுத்தர் முத்துசாமி பிள்ளை குடும்பம் முதலில் பழைய சருகணி சாலையில் தமிழ் வாணன் வீட்டின் அருகில் இருந்தது. பின்னர் இப்போது நாம் நிற்கும் சிலம்பணி  தெற்குத் தெரு (வெள்ளாளர் வீதி)வின் கீழ் முனைக்கு சொந்த வீட்டுக்கு வந்தது. இப்போது உங்களுக்கு புரிய ஆரம்பித்து இருக்கும்.. எவரை நோக்கி நாம் செல்கிறோம் என்று?

எனது நண்பர் திரு கோபால் என்கிற கோபால கிருஷ்ணனின் தந்தையார் தான்  இந்த முத்துசாமி பிள்ளை அவர்கள்.  எமது நண்பர் கடைசி மகன்....

மூத்தவர் வழக்கறிஞர் பால சுப்பிரமணியன்.  சிலம்பணி சன்னதி வளைவின் உள்ளே நாம் முன்பு பார்த்த மருத்துவர் MV இராசகோபால் இல்லம் அருகே தனது வழக்குரைஞர் அலுவலகத்தை நடத்தி வந்தார்.  இந்த செய்திகளை எமது முந்தைய பதிவில் (2ஆம் பாகம் - பகுதி 7 இல்) குறிப்பிட்டு இருந்தோம்.  காணத் தவறியவர்களுக்காக அந்த இணைப்பு கீழே :

   

https://muthumanimalai.blogspot.com/2021/10/2-7.html

 

லெட்சுமிபுரம் அக்ரஹாரத்தில் எனது அன்பு நண்பர் கிரிக்கெட் ராஜன் அவர்களைப்பற்றி இரண்டு அத்தியாயங்களுக்கு முன்னர் பார்த்தோம்.  மறந்து இருக்க மாட்டீர்கள் என்று எண்ணுகிறேன், ஒரு ஹாக்கி குழு மற்றும் ஒரு கிரிக்கெட் குழு இருந்தது.  டி.வி.ஸ். பொட்டலில் கிரிக்கெட் மற்றும் ஹாக்கி விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.  ஹாக்கி குழுவில் இருந்த இன்னும் சிலர் : புலிகுலத்தார் வீட்டு (நீதியரசர் இலட்சுமணன் உறவுகள்) இராமு,  MNSP.சொக்கலிங்கம், நாராயணன், எனது அடுத்த வணிகவியல் பேட்ஜ் ஆன குட்டை சொக்கலிங்கம் (இவர் தான் இன்றைக்கு தேவகோட்டையில் நீதியரசர் AR.லட்சுமணன் நிறுவி இருக்கும் சீரடி சாய் பாபா ஆலயத்தைக் கவனித்து வருகிறார்) போன்ற நகரத்தார் மக்கள்.

நம்ம ராஜன் ஒரு கிரிக்கெட் குழு வைத்து விளையாடிக் கொண்டு இருந்ததால் தான் இவரது பெயரில் கிரிக்கெட் ஒட்டிக்கொண்டு, இவரை கிரிக்கெட் ராஜன் ஆக்கியது.  பள்ளி நாட்களில் இந்தத் லட்சுமிபுரம் தெருவாசிகள் எல்லாம் இந்த கிரிக்கெட் குழுவின் உறுப்பினர்கள்.  சிலம்பணி தெருவில் இருந்த சுரேஷ், ரமணி இவர்களின் டீம் தான் இந்த அணிக்கு எதிர் அணி. இவர்களை ஐக்கியப்படுத்தி நமது அட்வகேட் பாலசுப்ரமணியன் ‘தேவகோட்டை யுனைடெட் க்ளப்’ என்ற பெயரில் ஒரு கிரிக்கெட் குழுவினை அமைத்தார். விளையாட்டில் இவர்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தி, தேவகோட்டை ‘முனியய்யா பொட்டலை தேவகோட்டையின் ‘சேப்பாக்கம்’  ஆக மாற்றினார். இந்த பள்ளி இளம் வீரர்களை ஊக்குவித்து, சீராட்டி, பாராட்டி ஒவ்வொரு வார இறுதி நாட்களிலும் முனியா பொட்டலில் காலை 6 மணி முதல் மாலை வரை கிரிக்கெட் போட்டிகள் நடத்தினார்.  அனைவருக்கும், உணவு முதல் இடைவேளை தேநீர், பிஸ்கட் வரை இவர் தனது சொந்தப் பணத்தைச் செலவு செய்வார்.  இந்த டீம் காரைக்குடி டீமுடன் காரைக்குடி செஞ்சை பொட்டலில் மோதும் கிரிக்கெட் மேட்சுகள் இந்திய பாகிஸ்தான் மேட்ச் அளவுக்கு இவர்களுக்குள் பிரபலம். இன்றைக்கு இந்தப் பொட்டல்கள் எல்லாம் எங்கே என்று இந்தத் தலைமுறையினர் கேட்கலாம்.  காரைக்குடி செஞ்சை பொட்டலில் தான் உலகப் புகழ் பெற்ற சர்க்கஸ் காட்சிகள் நடைபெறும்.  அது போல தேவகோட்டை முனியா பொட்டல் புதூர் அக்ரஹாரம் வரை பரந்து விரிந்து இருந்த பெரிய மைதானம் போன்ற நில வெளி.  அவற்றை எல்லாம் கண்டு அங்கு ஓடி ஆடும் அனுபவத்தை நமது வாரிசுகள் இழந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். தற்போது வழக்கறிஞர் திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் சென்னை வாசியாகி விட்டார்.

மூன்றாவது மைந்தர் தந்தை வழியிலேயே தடம் பதித்து தேவகோட்டையிலேயே பத்திர எழுத்தராக பரிமளித்தவர்.  அவர் இயற்கை எய்தி விட்டார்.  எனது இனிய அன்பு அண்ணன் 'நகரின் நல்ல கண்ணு' என்று எல்லோராலும் போற்றப்படும் கறை அறியாக்  கரங்களுக்கு சொந்தக்காரர், மேனாள் அனைத்து  இந்திய அண்ணா தி.மு.க.வின் நகரச்  செயலாளர் SP.தனசேகரன் அவர்களின் சம்பந்தி.  இவர்தான் புரட்சித்தலைவர் 1972இல் கட்சி ஆரம்பித்த நாளில் முதன் முதலாக நகரச்  செயலராக அமர்த்தப்பட்டார்.   புரட்சித் தலைவரின் தளபதியாய்  அந்த நாட்களில் வலம்  வந்த திரு.ஜேப்பியார் அவர்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்வில் நானும் இருந்தேன்... இளைஞனாக


நீதியரசர் கற்பக விநாயகத்துடன் SP.தனசேகரன் தம்பதிகள்

 

தந்தை பெயரை இன்னும் சொல்லும் வண்ணம் திரு.இராதா கிருஷ்ணன் அவர்கள் தொடர்ந்து நட்த்தி வந்த பத்திர வரைவு அலுவலகம்  இன்றும் அதே இடத்தில்  நடந்து வருகிறது. 

திரு.இராதாகிருஷ்ணன் அவர்கள்

இந்த நான்கு  முத்துக்கு முத்தான… சொத்துக்குச் சொத்தான சகோதரர்களுடன் ஒரு கொடியின் இரு மலர்களாக கலையரசி, கோகிலா என இரு பெண்மக்கள். கலையரசி காலமாகி விட்டார்.  மற்றவர் திருமதி கோகிலா ஆன்ந்தமாக (மருத்துவர்) இருக்கிறார்.

அது  சரி… …

மூத்தவர்…. மூன்றாமவர்….. நான்காமவர்… பெண் மக்கள் என்று எழுதி இருக்கிறேனே?  இடையில் இரண்டாவது எண் எங்கே என்று நினைக்க ஆரம்பித்து விட்டீர்களா?

இரண்டாவது மைந்தர் மாட்சிமை தங்கிய நீதி அரசர் கற்பக விநாயகம் அவர்கள்.  சிலர் தமது பெயர் தெரிய வேண்டும் என்பதற்காக தம் பெயரோடு தமது ஊரின் பெயரைச் சேர்த்துக் கொள்வார்கள்... என்னை போல...




சிலரை நகரம் தம் பெயரோடு சேர்த்துச் சொல்லும்.. ஊரின் பெயரை உயர்த்திச்  சொல்வதற்காக.....

"இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது."  பராசக்தி திரைப்படத்தில் முத்தமிழ் அறிஞர் மு.கருணாநிதி வரைந்து நடிகர் திலகம் பேசும் இந்த வரிகள் என்றும் தமிழர் மனதை விட்டு விலகாது. ஆனால்.. எவரும் நினைத்தும் பாராத மிக நியாயமான, விசித்திரமான, மனிதாபிமானம் மேலிடும் தீர்ப்புகளை வழங்கியவர் நீதியரசர் கற்பக விநாயகம் அவர்கள்.

மனு நீதி ....மக்கள் நீதி ...தர்ம சாத்திரம் என்றெல்லாம் பல பெயர்கள்...

சிபிச்சக்கரவர்த்தி, மனு நீதிச் சோழன், பாண்டியன் நெடுஞ்செழியன் என்று தமிழ் கூறும் நல்லுலகில் நீதியும் நேர்மையும் உயிரினும் மேலானது என்று எடுத்து இயம்பும் பல நிகழ்வுகள் ...





தொடை அரிந்து புறாவின்
எடை   கொடுத்த சிபி ..... 

கன்றின்
சாவினை  சாடி மணியின்
நாவினை  அசைத்து எழுந்த
ஆவினை  மதித்த சோழன்....
 
ஆராயாத தீர்ப்பு கோவலனுயிருக்கு
ஊரான   கொடுமைக்கு தம்
உயிர் கொடுத்த பாண்டியன் .....

இந்த நீதி வழுவா நெறி முறையின் நிகழ்வுகளின்  களமாய்  மிக நீண்டதொரு காலமாய் விளங்கும் தமிழகம்,,, அதிலும் ஆன்றோரும் சான்றோரும் அருளாளர்களும் அன்பாளர்களும் நிறைந்த நன்னகரம், பொன்னகரம் தேவகோட்டை நீதி பரிபாலனத்துக்கு தனது பங்கை வழங்காமல் இருக்குமா ?

 

இந்த நீதி பரிபாலன முறை மன்பதைக்கு என்ன சொல்கிறது ?  சரியான தீர்ப்பு என்பது சரியான தீர்வு என்பது ஆகும். புரட்சித்தலைவர் MGR அவர்கள் தானே தயாரித்து தானே இயக்கி தானே நடித்த 'நாடோடி மன்னன்' திரைப்படத்தில்  நாடோடி யாக இருந்த எம்.ஜி.ஆர், சூழ்நிலை காரணமாக மன்னனாக நடிப்பார். ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர். பேசும் புகழ் பெற்ற வசனம் இது: ‘‘நீங்கள் மாளிகை யில் இருந்து கொண்டு மக்களை பார்க் கிறீர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையை கவனிக்கிறவன்.

 


நீதி வழங்கும் நெடிய இதயங்களும் மக்களோடு மக்களாய் வாழ்ந்தவர்களாய்  இருந்தால் அவர்கள் வழங்கும் தீர்ப்புகள் வெறும் சட்டப்  புத்தகங்ளில் அடி  ஒற்றி இல்லாது சாமானியர்களின் இதயத்தின் படியாக இருக்கும்.  நீதி என்பது தர்மத்தின் பரிபாலனம்.  அதிலும் உயர் நீதி மன்றத்தில் வழங்கும் தீர்ப்புகள் மிகவும் சக்தி வாய்ந்தவை.  அந்த தீர்ப்புகள் என்றும் மனித மாண்பை  காக்கும்படி அமைவன.  அதனால் தான் அவர்கள் அரசர்களுக்கு இணையாக நீதி அரசர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். தீர்ப்புகள்  குற்றம் புரிந்தவர் தன தவறுக்கு பிராயச் சித்தம் தேட வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை  அவர்களுள் ஒரு நல்ல மாற்றத்தைக் கொண்டு வரவேண்டும்… பாதிக்கப்பட்டவர் அதிலிருந்து மீள வேண்டும்

 

நமது நகர் வழங்கிய ஈடில்லா இரண்டு நீதி அரசர்கள் திருத்தமான, தீர்க்கமான, திருப்பமான, அற வழியில் என்றும் நிற்கின்ற தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார்கள்.  ஒருவர் நீதியரர் AR லெட்சுமணன் அவர்கள்  மற்றவர் நீதியரசர் கற்பக விநாயகம் அவர்கள். 




நாம் தற்போது சிலம்பணி தெற்குத் தெருவில் (வெள்ளாளர் தெரு) இந்த நீதியரசரின் இல்லத்துக்கு எதிரே தான் இப்போது நின்று கொண்டு இருக்கிறோம்.  கொஞ்சம்  வேடிக்கை பார்த்துக் கொண்டு இருங்களேன்… இதோ வந்து விடுகிறேன்………

 


கருத்துகள்

  1. மிகவும் அருமையான காட்சி பதிவு செய்து எங்களை எல்லாம் மகிழ செய்தமைக்கு மிகவும் நன்றி. உங்களின் ஞாபக சக்தி மற்றும் எழுதாட்டரல் அற்புதம். வாழ்க உமது தமிழ் புலமை, வளர்க உமது பெருமை

    பதிலளிநீக்கு
  2. அருமை.சம்பவங்களின் கோர்வை மிக தெளிவு.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60