அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2: பகுதி: 18; சத்திய சோதனை
அன்புச் சொந்தங்களே ....
அந்த மாணவனுக்கு கல்வி என்ற பெயரில் நெட்டுருப் போட்டு, ஏட்டில் இருப்பதை மூளைக்குள் பதிவு செய்து வேண்டிய பொழுது விடைகளாக தேர்வுத்தாளில் வாந்தி எடுத்து நல்ல மதிப்பெண் வாங்கி நல்ல மாணவன் என்ற பெயர் எடுக்கும் நடை முறை கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை. கல்வி என்பது கலைமகள் கைப்பொருள் என்றால் மற்ற கலைகள் என்ன மாற்றான் தாய் மக்களா? என்ற எண்ணம். வானம்பாடியாய் பறந்து, குயிலாய்ப் பாடி, மயிலாய் ஆடி, ஒயிலாய் நடக்கும் நடிப்பு ஒன்றே மனத்துக்குப் பிடித்து இருந்தது. தேவகோட்டை நகரத்தார் உயர்நிலைப்பள்ளி... அறிவாற்றல் மிகுந்த பல மாணாக்கர்களுக்கு மத்தியில் இந்த மாணவனுக்குள் மரபணுவில் உறங்கிக் கொண்டிருந்த கலைஞன் எழுந்து உட்கார்ந்து படிப்பில் கவனம் செல்ல இயலாமல் பாடாய்ப் படுத்திக்கொண்டு இருந்தான்.
நான் 1969 ஆம் வருடம் தேவகோட்டை சைவப்பிரகாச வித்தியா சாலையில் நான்காம் வகுப்பு மாணவன். அப்போது தேவகோட்டை மாணவர்ள் கல்லூரிப் படிப்பிற்காக காரைக்குடி தான் சென்றாக வேண்டும். தேவகோட்டையில் கல்லூரி அப்போது தொடங்கப்படவில்லை. தேவகோட்டையில் இருந்து அழகப்பர் கல்லூரி சென்று பயின்று வந்த தேவகோட்டை மாணவர்கள் வள்ளல் அழகப்பருக்கு நன்றி பகரும் விதமாக தேவகோட்டையில் கந்தர் சஷ்டி விழா நிறைவு பெற்ற அடுத்த நாளில் அதே மேடையினை பயன்படுத்தி விழா நடத்தினார்கள். 50 ஆண்டுகள் கடந்து இன்றும் அந்த நிகழ்வு தொடர்கிறது என்று நினைக்கிறேன்.
தேவகோட்டையின் அழகப்பா கல்லூரி மாணவர்கள் நடிக்க நகரத்தார் பள்ளியின் ஆசிரியர் அரு .சோமசுந்தரம்
அவர்கள் 'மனம் இருந்தால் வழி பிறக்கும்' என்ற
நாடகத்தை எழுதி இயக்கி இருந்தார்.
எனது வகுப்பு தோழர் போட்டோ கிராபர் ஏகப்பன் அவர்களின் இளைய மகன் சிதம்பரம் எனது வகுப்புத் தோழன். அவரது தமையனார் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் இளங்கலை மாணவர். அவர் அந்த நாடகத்தில் ஒரு போலீஸ் காவலராக நடித்து இருந்தார். சைவப்பிரகாச வித்தியாசாலைக்குப் பின் புறமாக நண்பர் ஏகப்பன்.சிதம்பரம் இல்லம் இருந்ததாலும் அவர் மனதிற்கினிய நண்பர் என்பதாலும் அவர் இல்லத்திற்கு தினமும் சென்று வருவேன் . நாடகம் நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்னரே அந்த போலீஸ் காவலர் வேடத்துக்கு உரிய தொப்பி மற்றும் உடுப்பு நண்பர் சிதம்பரத்தின் அண்ணன் ரெடியாக வைத்து இருப்பதை வேடிக்கை பார்த்த நினைவுகள் வருகின்றன. இந்த நாடகத்தின் ஒத்திகையை எல்லாம் வேடிக்கை பார்த்த காரணத்தால் இது அரங்கம் ஏறும் போது அருகில் நின்று பார்த்தேன். ஆசிரியர் அரு .சோமசுந்தரம் அவர்கள் கலை வல்லுநர். சிறந்த நாடக ஆசிரியர்.
இந்த அரு சோமசுந்தரம் அவர்கள் தான் நம்ம மாணவனுக்கு நகரத்தார் பள்ளியில் எட்டாம் வகுப்புக்கு தமிழ் மற்றும் வகுப்பு ஆசிரியர். மாணவர்களிடம் மிக அன்பாக நடந்து கொள்பவர். மாணாக்கரிடம் இருக்கும் கலை ஆர்வத்தை மதிப்பவர். அந்த வகையிலே நம்ம கதாநாயகன் மீது அவருக்கு கனிவு அதிகம்.. எல்லாப் பாடங்களும் தேர்ச்சி பெறுகின்ற அளவுக்கு மதிப்பெண் வாங்கி விடுவார் நம்மாளு ...ஆனா ....கணக்குதான் பிணக்கு செய்கிறது ...எட்டிக்காயாய் கசக்கிற கணக்குப் பாடம் அவரை எட்டியே வைத்து இருந்தது . வருடம் முடிந்தது...உழுகின்ற நாளில் ஊருக்குப் போனால்....அறுக்கிற நாளில் ..? எட்டாம் வகுப்பை இன்னொரு முறை படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.... ஆனால் இந்த முறை அன்பு ஆசான் அரு.சோமசுந்தரம் இல்லை. வேறொருவர் ஆசிரியராய் இருந்தார். இரண்டாவது முறை அதே வகுப்பின் மாணவராய் இருந்த நமது மாணவனைக் கண்டால் கணக்கு ஆசிரியருக்கு கொஞ்சம் இளக்காரம் தான் . ஒரு நாள் தண்டனையாக வகுப்பறைக்கு வெளியே நிறுத்தி விட்டார். அந்தப் பக்கம் நடந்து சென்ற ஆசிரியர் அரு.சோமசுந்தரம் தனது அன்பு மாணவர் வெளியில் நிற்பதைக் கண்டு விசாரித்து நிகழ்ந்ததை அறிந்து கணக்கு ஆசிரியரிடம், "இந்தப்பையன் குணத்தில் நல்ல பையன் ....சரியாகி விடுவான்... பார்த்துக் கொள்ளுங்கள்..." எனக் கூறிச் சென்று உள்ளார். ஆனாலும் கணக்கு ஆசிரியரின் கண்டிப்பு குறையவே இல்லை. "குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில்" என்பார்கள். குழந்தையும் அல்லாமல் பெரியவனும் அல்லாமல் இரண்டாங் கெட்டான் வயது இந்த பதிண்மப் பருவம். பாராட்டினால் பனையாக உயர்வார்கள்... மட்டம் தட்டினால் மண்ணாகி விடுவார்கள்....நம்மவருக்கு நாள் செல்லச் செல்ல பள்ளி என்றாலே பிடிக்காமல் போக ஆரம்பித்தது... ஆனால் ஒழுக்கம் மிகுந்த கறாரான தந்தையார். பார்த்தார்... பள்ளிகூடப் பையும், மதிய உணவுத் தூக்குமாக பள்ளிக்குச் செல்வது போல்... அப்படியே அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் இருக்கும் வள்ளியப்ப செட்டி ஊரணிக்கு சென்று விடுவார்.
சிலம்பணி ஊருண்ணியைப் (ஊரணி ) போலவே இந்த வள்ளியப்ப செட்டியார் ஊரணியும், அம்மச்சி ஊரணியும் மக்கள் தாகம் தீர்க்கும் நல்ல குடிநீர்த் தடாகமாய் விளங்கியது. ஆடி பதினெட்டாம் பெருக்கு நாளில் அக்ரஹாரத்து மாமிகள் இந்த படித்துறையில் குடும்பங்களுடன் சித்ரான்னப் பொட்டலங்கள் சகிதம் வந்து இருந்து அமர்க்களம் செய்த காலங்கள் உண்டு. சில வழக்கறிஞர்கள் மாலை வேளைகளில் காலாற நடந்து அந்தப் படித்துறையில் அமர்ந்து கதை பேசிய தருணங்கள் அன்று உண்டு. இன்றைக்கு அந்த படித்துறை அழுக்கில் அழுந்திக் கிடப்பது அவலம் தான். தேவகோட்டை வ.பெரி.மு. வீதியில் அயோத்தி ராமன் செட்டியார் என்று ஒருவர். மேனாள் தேவகோட்டை நகரசபைத் தலைவராக இருந்த இன்னொருவர் MV .இராமநாதன் செட்டியார். இவர்களோடு சேர்த்து மொத்தம் 7 குடும்பங்கள் இந்த வள்ளியப்ப செட்டியார் ஊரணி மற்றும் வள்ளி விநாயகர் கோவிலின் அறங்காவலர்களாக இருந்தார்கள்.
குளிர் நீர் கொண்ட ச் செட்டியார் ஊரணிக் காற்று குமைந்து கொண்டு இருந்த மனதின் வெம்மைக்கு ஆறுதலாய் இருந்தது. மதியம் பசி எடுக்கும் நேரம் தூக்குச்சட்டியின் உணவு உள்ளே செல்லும்... நல்ல மரங்கள் சூழ்ந்த அந்த ஊரணித் தண்ணீரை உண்டு சீரணித்து வரும் தென்றல் தாலாட்ட மரத்தடியில் அயர்ந்து விடுவார்.. இப்படியே ஒரு வாரம் தான் கழிந்திருக்கும் ... ஆனால் மனதில் மகிழ்ச்சி இல்லை ... எதை யாரிடம் மறைக்கிறோமோ அதுதான் அனைவருக்கும் முன்னதாக அவருக்கே தெரிய வரும்...எப்படியோ வள்ளியப்ப செட்டியார் ஊரணி வாசம் காற்றில் தவழ்ந்து தகப்பனாரின் காதில் போய் விழுந்தது...
தந்தையார் மகனைத் தேடி சைக்கிளை மிதித்து வள்ளியப்ப செட்டியார் ஊரணி வந்து மகனை, ஓடி விரட்டிப் பிடித்து, பள்ளிக்கு கொண்டு வந்து நிறுத்தி, இனிமேல் இது மாதிரி நிகழாது... என்று கல்விதனைத் தொடர வைத்தார். இந்த நிகழ்வு நம்மவர் மனதில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து 8, 9, 10 என்று வகுப்புகளில் முன்னேறி 11 ஆம் வகுப்பும் வந்தாயிற்று.
இப்போது பள்ளியின் ஆண்டு விழா நாடகம்.. ஆசிரியர் அரு .சோமசுந்தரம் 'வேலின் முனை' என்ற நாடகத்தை எழுதினார்.. பள்ளி மாணவர்கள் நடிக்கிறார்கள். நீலா என்ற பெண்ணின் பாத்திரத்துக்கு எவரை தெரிவு செய்யலாம் என்று எண்ணிய வேளையில் நம்மவரின் அழகிய முகம் அச்சுப் பிசகாமல் ஒத்துப்போனது. முதல் நாடக வேடமே பெண் வேடம்... நடிப்பின் திறமைகளை வெளிக்கொணர ஏதுவான வேடம். இயல்பிலிலேயே உடன் பிறந்து வருகின்ற அழகான உச்சரிப்பு முறையும், உடல் மொழியும் நடிப்பில் இவருக்கு இருந்த திறமையை வெளிப்படுத்தின.. அகம் மகிழ்ந்தது.. ஆயிற்று ... பள்ளி இறுதி வருடத் தேர்வும் வந்து போனது. தேர்வு முடிவுகள் பத்திரிகையில் வெளி ஆயின. (அன்றைக்கு ஏது வலைத்தளம் எல்லாம்?). நம்மவரின் எண்ணை பத்திரிகை தேர்வு முடிவு அறிக்கையில் எங்கு தேடினினும் கண்டு பிடிக்க இயலவில்லை. ஆம் இவர் தேர்வாகவில்லை.
நொறுங்கிப் போனார்...இவர்...இனி வாழ்வதில் பொருள் இல்லை ....உயிரை மாய்த்துக் கொள்வதே உத்தமம் என்ற எண்ணம் மேலோங்கியது.... விரைவாக சாவதற்கு வழி என்ன என்று மனம் யோசித்தது... ஓடும் இரயில் முன் பாய்ந்தால் ஒரு நொடியோடு வலி தீர்ந்து விடும்...என்ற முடிவு எடுத்த மூளை... அடுத்து எங்கே ? எப்போது ? என்ற கட்டத்துக்கு சென்ற சிந்தனை தஞ்சாவூர் ஜங்சன் என்றால் நல்லது என்று முடிவு செய்தது.. ஏனென்றால் தேவகோட்டை ரஸ்தா ஒற்றை தண்டவாளம்... தஞ்சை என்றால் பல தண்டவாளங்கள் மற்றும் பல இரயில்கள்... இன்னும் ஒரு படி மேலே போய் இரயில்வே கால அட்டவணை பார்த்து தான் பாயப்போகும் இரயில் எண் , வழித்தடம், நேரம் எல்லாம் பையன் முடிவு செய்து கொண்டார். அன்று வெள்ளிக்கிழமை. ஒரு மூன்று நாட்கள் கடக்கட்டும்...வெள்ளி...சனி...ஞாயிறு முடிந்து திங்கட் கிழமை சாகலாம் என்று மனதில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. சரி அந்த மூன்று நாட்களில் என்ன செய்யலாம் ? தூக்கு கயிற்றினை முத்தம் இடும் வரை நல்ல புத்தகங்களை வாசித்துக் கொண்டிருந்த பகத்சிங் நினைவுக்கு வந்தார். நல்ல புத்தகம் ஒன்றை வாசிக்கலாமே... தேவகோட்டை நூலகம் சென்றார்.. நூலகரிடம் நல்ல நூல் வேண்டும் என்று கேட்டார். ஒரு முறை வாசித்த அந்த நூல் மறு முறை வாசிக்க வைத்தது... மீண்டும் ஒரு முறை... மீண்டும் .... மீண்டும்...மூன்றாம் முறை வாசித்த போது திங்கட்கிழமை ஆகி விட்டு இருந்தது... நூலில் கொஞ்சம் மீதம் இருந்தது....திங்கட் கிழமை அந்த மீதியையும் வாசித்து விட்டு சுவாசித்தலை நிறுத்தலாமே என்ற எண்ணம் ஓடியது... ஒரு நாள் சாவினைத் தள்ளிப் போட்டார்.
அந்த நூல் இப்போது இவரின் அடி மனதில் புகுந்து கொண்டு என்னென்னவோ செய்தது ....புத்தகத்தை மூடித் தன் புது அகத்தைத் திறந்து பார்த்தார்... தற்கொலை எண்ணம் தற்கொலை செய்து கொண்டது...
அந்தப்
புத்தகம் : அண்ணல் மஹாத்மா காந்தியின் 'சத்திய
சோதனை'
அந்தப் பையன் : நீதி அரசர் கற்பக விநாயகம், மேனாள் ஜார்கண்ட் உயர்
நீதிமன்ற முதன்மை
நீதிபதி மற்றும் மின்சார,
பெட்ரோலிய மற்றும் இயற்கை
வாயு தீர்ப்பாயத்
தலைவர்...இன்றைய
பாரத உச்ச நீதி மன்ற சிறப்புறு
வழக்கறிஞர்...
பள்ளிப் பருவத்தில் நீதியரசர் கற்பக விநாயகம் எப்படி இருந்து இருப்பார் என்று அவருடன் பழகியவர்களைக் கேட்கலாம் என்று எனது வழக்கமான பாணியில் தேடினேன். மரியாதைக்குரிய அண்ணன் முத்துமாணிக்கம் வெங்கடாச்சலம் அவர்கள் நகரத்தார் பள்ளியில் மட்டும் அல்ல, காரைக்குடி அழகப்பா கல்லூரியிலும் புகுமுக வகுப்பு வரை நீதி அரசரோடு வகுப்புத் தோழராய் பயணம் செய்தவர். பலரையும் போல எத்தனையோ பேர் தேவகோட்டை விட்டு தொழில் நிமித்தம் சென்று விட்டாலும் , இன்றும் அவர்கள் மனத்தால் தேவகோட்டை வாசிகளே. அவர்களில் ஒருவர் நமது முத்து மாணிக்கம் அவர்கள். பல பத்தாண்டுகளாக ஈரோடு நகரில் வசித்து வருகிறார். ஆயினும் தேவகோட்டை அவரது உயிரில் கலந்த உறவு..
அவர் தமது பள்ளி நாட்களை மிகத் தெளிவாக நினைவு கூர்ந்தார். ஆசிரியர்கள், அரு. சோமசுந்தரம், வழக்கறிஞர் வெங்கடபதி, 'லம்பா' ராஜகோபால், சர்மா, வித்வான் நாராயணசாமி இவர்களை எல்லாம் பற்றி பேசி பள்ளிப் பாலகனாகவே மாறி விட்டார். பள்ளி பற்றி இப்போது பேச ஆரம்பித்தால் நமது பாதை மாறி விடும். அந்தப் பகுதிக்கு நமது பயணம் சென்று சேரும்போது அந்த நினைவுகளை அசை போடுவோம்.
நீதி அரசர் கற்பக விநாயகம் பற்றிக் கூறுகையில் ,
'சுருள் சுருளான முடியுடன் நல்ல முகக்கட்டுடன் இருபார். உடை சுத்தமாக பளிச் என்று தான் அணிவார், நன்றாகப் பாடுவார்; என்று அந்த நாள் நினைவுகளில் மூழ்கினார். இவரைப் போலவே இவரது உடன் பிறப்பு திரு. இராதா கிருஷ்ணன் அவர்களும் மிக அருமையாகப் பாடுவாராம். எனது மனத்திரையில் இவர்கள் அனைவருக்கும் இளவலான எனது நண்பர் கோபால் 'பாங்கோஸ்' வாத்தியதுடன் உடன் வந்து பாடுகின்ற காட்சி ஓடியது..
இவர்களது பாட்டனார் புல் புல் தாரா வாசிப்பதையும் , இவர்களது தந்தையுடன் பிறந்த திரு.மாணிக்கம் அவர்கள் நாடக ஆசிரியராக இருந்த செய்திகளும் தானாக ஆழ் மனதின் நினைவுகளில் இருந்து மேலே வந்து தலை காட்டின. 'விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா முளைக்கும் ?'
இந்தப்
பகுதியில் நீதி அரசர் பற்றி சுருக்கமாக.. “சொல்ல வந்த செய்திகளை” ஒரு பாதி அளவாவது
குறித்து விடுவோம் என்ற குறியோடு எழுத ஆரம்பித்தேன்.. ஆனால் நீளம் அதிகம் ஆயின் உங்களுக்கு
வாசிக்க சிரமம் ஏற்படும்... அதற்காக முக்கிய நிகழ்வுகளின் சாரத்தைக் குறைத்து விடக்
கூடாது என்பதற்காக இத்துடன் முடிக்கிறேன்...
அவருடன்
பயணிப்போம் ....அடுத்த பகுதியில்.....
இளமைப்பருவ நினைவுகளை எழுத்தாளர் முத்துமணி திறம்பட எழுதியுள்ளார். இன்றைய கணினியுகத்தில் மாணவமணிகளை பெற்றோரும் ஆசிரியர்களும் நல்வழியில் கொண்டுசெல்ல வேண்டும். வீ.இராமநாதன்.
பதிலளிநீக்குமிகவும் தெளிவாக தேவகோட்டை நினைவுகளை ஆசிரியர் முத்துமணி விளக்கியுள்ளார். வீஇராமநாதன்
பதிலளிநீக்குமிக நேர்த்தியான பதிவு. அருமை! அருமை!!
பதிலளிநீக்குந்ல்ல பதிவு. திரு. கற்பகவிநாயகம் பள்ளியில் எனக்கு ஜுனியர். ஆதலால் அவர் பிரேயர் .மாத்திரம் தெரியும்.
பதிலளிநீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்கு