அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2: பகுதி: 19; நாடகமே உலகம்
அன்புச் சொந்தங்களே ....
துணை நகரங்கள் (satellite town) என்று இன்றைக்கு அழைக்கப்படும் அருகாமை புதிய
முயற்சிகள் போல தேவகோட்டையின்
விரிவாக்கமாக அன்றே அமைந்த தனி இடம் தேவகோட்டை இராம் நகர். தேவகோட்டையின் விரிவாக்கம். தே
பிரித்தோ உயர் நிலைப் பள்ளி, கருவூலம், நீதி மன்றங்கள், பதிவுத்துறை அலுவலகம் என
அமைதியாக ஆனால் அவசியமான பணிகள் நடை பெறும்
இடம். கொஞ்சம் உள்ளே
சென்றால் அந்தக் காலத்தில் தேவகோட்டையின்
பெரும் செல்வந்தர்களுக்கு தனித்தனியாக ஆடம்பர பங்களாக்கள் அமைந்து இருந்த இடம்
இராம் நகர். மிகப் பெரும்
பங்களாக்கள்...விருந்தும்.. 'மருந்தும்'
விளையாடும்
பெருந்தனக்காரர் ஊருக்கு ஒதுக்குப் புறமாக வைத்திருந்த பங்களா வீடுகள், மலர்த் தோட்டங்கள்
.. என அழகு கொஞ்சி விளையாடிய இடம்..
இராம் நகரில் அமைந்து இருந்த நீதி மன்ற, மற்றும் ஆவணப் பதிவு மற்றும் ஆவணக் காப்பகங்களில் மனு அளிக்க வருபவர்கள்
பெரும்பாலும் கையொப்பம் மட்டும் இடத்தெரிந்தவர்கள். கல்வி அறிவு இருப்பவர்கள் கூட ஆவணம்
எழுதுவதற்கென்று உள்ள தனி நடையில் எழுத இயலாது. இதற்கென்றே இன்றைக்கும் கூட நீதி
மன்ற வளாகம், ஆவணப் பதிவாளர் அலுவலகம், வணிக வரி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், ஆட்சியர் அலுவலகம் என்ற
பகுதிகளில் ஆவணம் எழுத்துவதற்கென விபரம் அறிந்தவர்கள் இருப்பார்கள். அத்துடன் முத்திரைத் தாளும் வைத்து விற்பார்கள். அப்படி தேவகோட்டை இராம் நகரில் எழுவன் கோட்டை
செல்கின்ற சாலையில் இன்றும் ஆவண எழுத்தர்கள் இருக்கிறார்கள்.
ராம்நகர் சார் ஆட்சியர் அலுவலகம்
ஆவணம் எழுதுவது என்பது ஒரு காலை.
நமது நாயகன் நீதி அரசர் கற்பக விநாயகம் அவர்களின் தந்தையார் திருவாளர் முத்துசாமி பிள்ளை அவர்கள் இந்தக்
கலையில் கை தேர்ந்தவர். கருப்பு அங்கி
அணிந்து 'மிலார்ட்' என்று வழக்குத் தாளை கையில் பிடித்து நீட்டி ஒவ்வொரு வழக்குரைஞரும்
நீதிபதியைப் பார்த்து பேசும் தோரணையை பார்த்து தமது நான்கு மக்களும் வழக்கறிஞர்கள் ஆக வேண்டும் என்ற கனவில் இருந்தார் திரு.
முத்துசாமி பிள்ளை. மூத்தவர், திரு.பாலசுப்பிரமணியன் சட்டம் படித்துக் கொண்டு இருந்தார். நமது நாயகன் திரு. கற்பக விநாயகம் அவர்கள்
பள்ளி இறுதி முடிவுகளால் பாதிக்கப்பட்ட மன நிலையில் இருந்தவருக்கு தனக்கு
படிப்பதில் நாட்டம் இல்லாமல் இருக்கிறதே.... என்ற குழப்பதோடு தந்தையிடம் சென்று
தான் ஏதேனும் தொழில் செய்கிறனே என்று நின்றார்.
முத்துசாமி பிள்ளையும் மகன் விருப்பத்துக்கு இந்த தேவகோட்டை இராம்நகரில்
சார்- பதிவாளர் அலுவலகம் எதிரே ஒரு குடிலை அமைத்து அதில் பத்திரம்
எழுதும் தொழிலைத் தொடங்கினார்.
தந்தையுடன் அதிகம் அருகில் அமர்ந்து இருந்து பார்த்து வந்த காரணத்தால், பத்திரம் எழுதுவது திரு.கற்பக விநாயகம் அவர்களுக்கு கை வந்த கலையாக
இருந்தது.
அப்போது இராம்நகரில் சார் பதிவாளராக இருந்தவர் திரு.செல்லத்துரை என்பவர், பெரியவர் முத்துசாமி பிள்ளையை நன்கு அறிந்தவர். ஒரு நாள் தனது அலுவலகத்துக்கு எதிரே குடில்
அமைத்து ஆவண எழுத்தகம் அமைத்து இருந்த திரு.கற்பக விநாயகம் அவர்களைப் பார்த்து, ' என்னப்பா? உன் அண்ணன் வக்கீலுக்குப் படித்து வழக்குரைஞர் ஆகப் போகிறார்... நீ என்னடாவென்றால் இங்கே
உட்கார்ந்து பத்திரம் எழுதிக் கொண்டு
இருக்கிறாயே ?' என்று உண்மைக் கரிசனத்துடன் கேட்டார்.
அந்த வார்த்தை நம்மவரை என்னவோ செய்தது.. ஒவ்வொரு முறை இந்த சார் பதிவாளர்
இவரது அலுவலகத்தைக் கடந்து போகும் போதும் அவரது சாதாரணப் பார்வை கூட இவரை ஏளனமாக நோக்குவது போலவே இருந்தது. அதற்கு மேல் அந்த இடம் இவருக்கு
சுகப்படவில்லை....அடுத்து என்ன செய்யலாம்
என்பதும் அகப்படவில்லை. ஒரு மனதாக
சொல்லாமல் கொள்ளாமல் மதுரைக்கு , இன்றைய மொழியில் 'எஸ்' ஆகி விட்டார் ...அன்றைய
மொழியில் 'ஓடிப் போய்
விட்டார்'.
அந்தக் காலத்தில் குளிர் பானங்கள் உள்நாட்டு சிறு நிறுவனங்களின் தயாரிப்பு
தான். அதிலும் இரண்டே சாதி. ஒன்று சோடா...இன்னொன்று கலர்... இவற்றில் உட்
பிரிவுகள் பல உண்டு... அதிலும் அந்த கலர் குடித்து விட்டு வயிற்றுக்குள் இருந்து
மேலுழும்பி வரும் வாயு நெஞ்சு முழுவதும்
இனிக்கும்.... உள்ளூர் கோடாங்கிகளைத் தவிர வெளியூர்களில் இருந்து வரும் தரமான
பானங்கள். பகுதிக்குப் பகுதி ஒவ்வொரு நிறுவனத்தின் ஆளுமை இந்த
விற்பனையில்... காளி மார்க், வின்சென்ட், மாப்பிள்ளை விநாயகர்
என்று தென் தமிழ் நாட்டு ஆளுமைகள். அதிலும் உட்பிரிவாக 'லவ்-ஓ' மிகப் பிரசித்தம். தெருக்கூத்து மேடைகளில் 'பபூன் -காமிக்' இந்த 'லவ்-ஓ' பெயரை வைத்தே
டான்ஸ்காரியிடம் ஒரு 30 நிமிடம் 'லந்து' அடிப்பார்.
...அய்யய்யோ ... எங்கோ பாதை மாறி
போகுது பயணம்....
தகப்பனாருக்கு மிகவும் வேண்டப்பட்டவர் மூலமாக மதுரையில் இந்த 'லவ்-ஓ' கம்பெனிக்கு மதுரையில் நமது நீதியரசர் பணியில் சேர்ந்தார். குளிர்பான நிறுவனத்தில் பணியினைப் பெற்றுக் கொடுத்தாலும் நண்பர் என்ற முறையில் இந்த விபரங்களை தந்தையார் முத்துசாமி பிள்ளைக்கும் தெரியப்படுத்தினார். நாலைந்து மாதங்கள் உதவி மேலாளராக நம்மவர் பணியாற்றிய நிலையில், தகப்பனார் மகன் பற்றி கவலை கொண்டார். கல்வி கற்க வேண்டிய வயது ... தொழிலும் அமையவில்லை.. இப்படி எதிலும் காலூன்றாமல் இருப்பது முறை அல்ல என்று எண்ணி தமது நண்பரிடம் மகனை திரும்ப தேவகோட்டை அனுப்பி வைக்கும் படி கேட்டுக்கொண்டார்.
இப்போது தேவகோட்டை வந்தவர் புதிய உத்வேகத்துடன் பள்ளி இறுதித் தேர்வினை மீண்டும் எழுதி வெற்றி
பெற்று அழகப்பா கல்லூரியின் புகுமுக வகுப்பில் சேர்ந்தார். வருடம் 1964...இந்த புகுமுக வகுப்பில் தான் நமது தற்போது ஈரோடு நகரில்
வசிக்கும் மதிப்பிற்குரிய முத்துமாணிக்கம் வெங்கடாசலம் அவர்கள் நீதியரசரின்
வகுப்பில் பயின்று இருக்கிறார். நகரத்தார்
பள்ளியில் இவர்கள் வேறு வேறு வகுப்புகள்..
கல்லூரி நாடகத்தில்
கல்லூரிக் காலம் ...கனவுகளின் தேசம்..கவலை அறியாத கன்றுக்குட்டிகளாய் காரணமே இல்லாமல் துள்ளித் திரிய சொல்லும் ஹார்மோன்கள் சுரக்கும் கனாக்காலம். நம்மவருக்கு மிகவும் பிடித்த சோலை, அழகப்பா கல்லூரியும் விடுதியும்...அங்கும் நாடகம்...அதிலும் பெண் வேடம்... கற்பகம் ....கன்னியாகவே அந்த நாடக நாயகியாக மாறிப்போனார். அங்குலம் அங்குலமாக அந்தப் பெண் பாத்திரம் தனக்குள்ளே இறங்கி விட்டதைப் போல் உணர்ந்தார். அவ்வளவு ஈடுபாடு ..ஆனால், விடுதியின் நண்பர்கள் கவனித்து இவரிடம் சொன்ன பிறகுதான் இவருக்கு புரிந்தது.... ஒரு நொடியில் சுதாரித்துக் கொண்டார். உடற் பயிற்சிக் கூடம் சென்று உடலை வருத்தி, திருத்தி அழகாய் இருந்த உடலை மேலும் கவர்ச்சிகரமாக மிளிரச் செய்தார். புகுமுக வகுப்பு கடந்து இளங்கலை மூன்று ஆண்டுகள் .... அந்த மூன்று ஆண்டுகளிலும் நிகழ்ந்த கல்லூரி ஆண்டு விழாக்களிலும் நாடக மேடைகளில் இவரது ஆதிக்கம் ... என்று அழகப்பா கல்லூரி வாழ்க்கை அழகாகக் கடந்தது.
மனம் முழுவதும் எப்படியாவது சினிமாவில் நடித்து ஒரு கலக்கு கலக்கி விட வேண்டும் என்ற நினைவே நிறைந்து இருந்தது . இப்போது வீட்டில் திருமணப் பேச்சு எடுத்து விட்டார்கள்.. எப்படியோ சமாளித்து, அப்பாவின் ஆசைப்படி சென்னை சென்று சட்டம் படிக்கிறேனே என்று அனுமதி கேட்டார். மனதிற்குள், சென்னை சென்று விட்டால் எப்படியாவது நடிகராகி விடலாம் என்ற எண்ணம்... அதற்கு இந்த சட்டப் படிப்பு ஒரு போர்வை தான் அன்றைய மன நிலையில்...
சென்னைக்கும் வந்தாச்சு ...
இரண்டு வருடம் பி.ஜி.எல். மூன்றாம் வருடம் பி.எல்.முடித்தால் வழக்குரைஞராக சேவை தொடங்கலாம்.. நம்மவர் சென்னை வந்ததும் கவனம் எல்லாம் எங்கெங்கே நாடக மேடைகள் என்பதிலும், எப்படி நடிக்கலாம் என்பதிலும் தான் சென்றது. நாடக சபாக்கள் நடத்துபவர்கள் அதனால் பணம் பண்ணுவதை விட நாடகத் துறையின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக மட்டுமே தம்மை ஈடு படுத்திக் கொண்டு இருந்தனர்... அவர்களுள் ஒருவர் திரு. நஞ்சப்பா என்ற ஸ்டண்ட் நடிகர். நாடகம் போடுவது பெரிதல்ல.. நாடக மேடை அமைத்துத் தருகின்ற சபாக்களுக்கு வாடகை கொடுக்க வேண்டும், மின்சாரம், மேடை அமைப்பு, திரை, மற்ற (STAGE PROPERTIES ) தேடியாக வேண்டும், அதற்கு பணம் வேண்டும். பணத்திற்கு நாடகம் பார்க்க மக்கள் வர வேண்டும். டிக்கெட் விற்க வேண்டும்.. இந்த நிலைமையில், கல்லூரி மாணவர்களை நடிக்க வைத்தால் அவர்கள் டிக்கெட் விற்றுத் தருவார்கள் தானே .. ஆனால் நடிப்பு என்பது ஒரு கலை ஆயிற்றே... பொலிவான முகமும், வலுவான உடலும், உச்சரிப்பும், காண்பவரிடம் கருத்தை எடுத்துரைக்கும் நடிப்பு என்னும் திறமையும் வேண்டுமே.. இப்படித் தேடிக்கொண்டு இருந்த நஞ்சப்பா கண்களில் நம் நாயகன் பட்டார்.. பிடித்துப் போய் விட்டது.... பிடித்துப்போட்டு விட்டார்.
“சதி சக்தி” எனும் அந்த நாடகம் சென்னை மேடைகளிலும் இவரை முதன் முதலாகவும் கதாநாயகனாகவே காட்டியது. இதன் பிறகு இவரை ஒரு நண்பர், திரைப்பட நடிகர் ‘தேங்காய்’ சீனிவாசன் நாடகக்குழுவில் இணைய வைத்தார். அங்கும் இவரது கொடி பறந்தது. தேங்காய் சீனிவாசன் நாடகக்குழு அரசியல் நிகழ்வுகளை நாடகமாக நடத்திக் கொண்டு இருந்த்து. அந்த நாடகத்தில் தேங்காய் சீனிவாசன் பெருந்தலைவர் காமராசராக வேடமேற்றார்.
நமது நாயகனுக்கு மிகக் கொடுப்பினை… ஆம் இரண்டாவது கதாநாயகனாக, நீதியரசர் அங்கே ஏற்று நடித்த வேடம் எவருக்கும் கிட்டிடாத ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் வேடம், இந்த வரிகளே அன்றைக்கு நீதியரசரின் உடற்கட்டு முக அமைப்பு இற்றின் சிறப்பை எடுத்து இயம்பும். இதற்காகவே பொன்மனச் செம்மல் வீட்டில் இருந்து, அவர் அணிந்து இருக்கும் தொப்பி மற்றும் வேட்டி முதலியவை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன. எவ்வளவு பெரிய கொடுப்பினை இது. பல மேடைகள் நாடகம் நடந்தேறியது. இந்த மேடை நாடகங்களுக்கு இடையில் சட்டக் கல்லூரி வருகைப் பதிவேட்டிலும் நம்மவரின் பெயர் இருந்து வருகிறது. அவருக்குப் பிடித்த நாடக நடிப்பு..ஆனால், பரம்பரை பரம்பரையாக ஒழுக்கம் தவறாத பாதையில் வந்து நீதியரசரால், தேங்காய் சீனிவாசன் நாடகக் குழுவில் நடிக்கும் அனைவரும் எந்த நேரமும் ‘குடி’ போதையில் நடமாடுவது மட்டும் இவருக்கு ஒவ்வாமை யாக இருந்தது. என்னவோ மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. எவரும் இதனைப் பற்றிக் கேட்க இயலாது. ஏனென்றால், தலையான தேங்காய் சீனிவாசன் அவர்களே முழுப் போதையில் தான் காணப்படுவார். தலை சரி இல்லை என்றால் வால் எப்படி உருப்ப்படும்?. இவரது மனம் அறிந்த குழுவில் இருந்த முருகன் என்ற நண்பர், இவர் இருக்க வேண்டிய சரியான இடம் இதுவல்ல என்று அறிந்து இவரை நாடக உலகின் மிகப்பெரிய ஒரு ஆளுமையிடம் அறிமுகப் படுத்தி வைத்தார்.
நமது காரைக்குடியில் பிறந்தவர்
‘கோமல்’ சுவாமிநாதன். சிறந்த நாடக மற்றும் திரைப்படக் கதாசிரியர். இவரைப் பற்றி உடனே உங்கள் நினைவுத் திசுக்களை எழுப்பி
விட வேண்டும் என்றால், இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் வெற்றிப்படமாய்
வெளிவந்த ‘தண்ணீர்..தண்ணீர்’ திரைப்படத்தின் கதை ஆசிரியர் இவர்தான். சிறந்த இலக்கியவாதி. நாடகம், திரைப்படத்துறை, மற்றும்
இதழியல் என்று பன்முகத் திறமையாளர்.
S.V.சஹஸ்ரநாமம்..200 தமிழ்ப் படங்களுக்கு மேல் நடித்தவர். கலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்களுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டவர். கலைவாணர்" என். எஸ். கிருஷ்ணன் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை சென்று மீண்டு வரும்வரை என். எஸ். கே. நாடக சபையின் நிர்வாகியாகவும் முக்கிய நடிகராகவும், சென்னை ஒற்றை வாடை தியேட்டரில் வெற்றிகரமாக நாடகங்கள் நடத்தியிருக்கிறார். 1950க்குப் பிறகு திரைப்படங்களில் வாய்ப்புகள் இருந்த போதும் சகஸ்ரநாமம், சேவா ஸ்டேஜ் என்கிற குழுவை ஆரம்பித்துத் தமிழ் நாடகங்களுக்குத் தற்காலத் தன்மையை ஏற்றியிருக்கிறார். மேடை அரங்க நிர்மாணம், ஒளி அமைப்புகள் இவற்றிலெல்லாம் கலாபூர்வமான நூதன மாற்றத்தைப் பொருட்செலவைப் பார்க்காமல் நிறுவிக் காட்டியது சேவா ஸ்டேஜ் நாடக மன்றம்தான்.
நாடகத்தில் பின்பாட்டு உத்தியை அறிமுகப்படுத்தியதும் சகஸ்ரநாமத்தின் முயற்சிதான். சேவா ஸ்டேஜ் நாடகங்களில் முக்கியமான பாத்திரங்களை ஏற்று நடித்து அனுபவமும் புகழும் பெற்றதால் திரை நட்சத்திரங்களானவர்கள் பலர். இவர்களில் ஆர். முத்துராமன், தேவிகா, எஸ்.என். லட்சுமி முதலியவர்களைக் குறிப்பிடலாம். கொஞ்சம் உடனடியாக நினைவில் இவரைக் கொண்டு வர வேண்டும் என்றால், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.நடித்து வெளிவந்த ‘உரிமைக்குரல்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆருக்கு அண்ணனாக நடித்து இருப்பார்.
தேவகோட்டை பற்றிய பதிவில், நீதியரசர் கற்பகவினாயகம் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கும் தருணத்தில் சம்பந்தம் இல்லாமல், திரைக்கதாசிரியர் கோமல் சுவாமிநாதன், எஸ்.வி.சகஸ்ரநாமம் பற்றி என்ன ஐயா என்று கேட்கிறீர்களா?. சம்பந்தம் இருக்கிறது அன்பர்களே. இவர்கள் இருவரும் எப்படிப் பட்ட ஆளுமைகள் நாடகத்துறையில் என்று சொல்வதற்காக மட்டுமே சிறு கோடு போட்டேன்.
தேங்காய் சீனிவாசன்
நாடகக் குழுவில், இரண்டாவது கதாநாயகனாக வேடம் கிடைத்த பொழுதிலும், ஒழுக்கம் தவறா உணர்வின்
மிகுதியால், முள் மகுடம் அணிந்த அரசனாகவே உணர்ந்தார் திரு.கற்பகவிநாயகம். இந்த நேரத்தில் அந்தக் குழுவில் இருந்த முருகன்
என்பவர் திரு.கற்பகவிநாயகம் அவர்களை திரு.எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களிடம் அறிமுகப் படுத்தி
விட்டார் கோமல் சுவாமிநாதன் அவர்கள் எழுதி
‘நவாப் நாற்காலி’ என்ற நாடகத்தை அடுத்த நட்த்தும் பணிகளில் ஈடுபட்டு இருந்தார் திரு.எஸ்.வி.எஸ், துறு துறு வென நல்ல முகப்பொலிவும், சரியான தேகக்கட்டும்,
எவ்வளவு கரடு முரடான வசனத்தையும் சரியான ஏற்ற இறக்கத்துடன் உணர்ச்சி மயமாக பேசி நடிக்கும்
ஆற்றலுடன் தம் முன்னே நின்ற சட்டக் கல்லூரி மாணவரான திரு.கற்பகவிநாயகம் அவர்களை தமது
நவாப் நாற்காலி நாடகத்துக்கு கதாநாயகன் ஆக்கினார். திறமைக்குக் கிடைத்த பரிசு. இந்த நாடகம் 100 முறைகளுக்கும்
மேல் மேடை கண்டது. பாஞ்சாலி சபதம் என்ற நாடகத்தில் எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்கள் பாரதியாராய்
நடிப்பார். அந்த முக்கிய வேடத்தை இவருக்கு அளித்து நடிக்க வைத்து அழகு பார்த்தார்.
இரவுகளில் நாடகம்…. பகலில் சட்டக்கல்லூரி என்று நீதியரசரின் கல்லூரி வாழ்கை ஓய்வு இல்லாமல்
ஓடிக் கொண்டு இருந்தது. இதே ‘நவாப் நாற்காலி’
நாடகம் பின்னர் மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், லட்சுமி, நாகேஷ், எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்களின் நடிப்பில் 1972 இல் திரைப்படமாக வெளிவந்தது.
நம்மவருக்கு
மூன்றாம் வருடம் பி.எல். இந்த நேரமும் அவருக்கு எப்படியும் சினிமாவில் நடித்து விட
வேண்டும் என்பதே மனதில் பிரதானமாக ஓடிக்கொண்டு இருந்தது. அன்றைக்கு இறுதி ஆண்டு தேர்வு.. மதியம்….அதே நாள்
காலையில் ஒரு விளம்பரப் பட வாய்ப்பு. அடையாறு திரைப்படக் கல்லூரி வளாகத்தில் படப்பிடிப்பு
என்று வரவழைத்து நீண்ட நேரம் காக்க வைத்து பின்னர் மற்றுமொரு நாளில் வாருங்கள் என்று
சொல்லி விட்டார்கள். அடித்துப் பிடித்து அங்கிருந்து ஓடி தாமதமாக தேர்வு மையத்துக்குச்
சென்று எப்படியோ தேர்வு எழுதித் தேர்ந்து விட்டார்.
மனமெல்லாம்
நடிப்பின் மீது இருந்த போதும் படித்த படிப்பினை மனதில் வைத்து சென்னையில் தன்னை வழக்குறைஞராகப்
பதிவு செய்து கொண்டார். ஜூனியராக பிரபல அட்வகேட்டாக
இருந்த ஆர்.காந்தி அவர்களிடம் சேர்ந்தார். நமது நீதியரசரிடம் மிக அன்பாக இவரின் முன்னேற்றத்தினை
நோக்கி நடக்க வைத்தார். நம்மவருக்கோ வழக்கு நட்த்துவதில் எல்லாம் மனம் செல்லவில்லை. சீனியரிடம் மனம் திறந்து சொல்லி விட்டார்… தனக்கு
நடிப்பின் மேல் தான் நாட்டம் என்று….இவரின் மனதை அறிந்த சீனியர் .. சரி.. எப்போதெல்லாம்
இயலுமோ…அப்போது வந்து செல்லுங்கள் என்று சொல்லி விட்டார். நம்மவர் தொடர்ந்து சேவா ஸ்டேஜ்
நாடகங்களில் தொடர்ந்தார்.
முன்னர் தேங்காய்
சீனிவாசன் அவர்கள் நாடகக் குழுவில் எம்.ஜி.ஆர். வேடம் போட்ட்தில் இருந்து சிறு வயதில்
இருந்து சிவாஜி கணேசன் ரசிகராக இருந்த கற்பகவிநாயகம் அவர்களுக்கு எம்.ஜி.ஆர். மேல்
ஒரு மரியாதை தன்னை மீறித் தன் மனதில் வந்து அமர்ந்து கொண்டது. .வருடம் 1972. தி.மு.க.வில் இருந்து விலக்கப் பட்டார். எம்.ஜி.ஆர்.
மனதில் அமர்ந்து இருந்ததால், இந்த நிகழ்வு அவருக்குத் தவறாகத் தெரிந்த்து.. ஏதேனும்
செய்ய வேண்டும் என்று எண்ணினார். தம்முடன்
ஒத்த கருத்தினை உடைய 10 வழக்கறிஞர்களை தம்முடன் சேர்த்துக் கொண்டு தமது ஆதரவைத் தெரிவிக்க
வேண்டும் என்று எண்ணி, புரட்சித்தலைவரைக் காண அவரது தி.நகர் இல்லம் சென்றார். அந்தச் சந்திப்பு அவரது வாழ்கையில் மிகப் பெரும்
மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அப்போது அவருக்குத் தெரியாது….
ராம் நகர் பற்றிய குறிப்புக்கள் ஆர்வத்தை தூண்டுகிறது. இன்னும் எதிர்பார்க்கிறோம். நன்றி 🙏
பதிலளிநீக்குஇன வரும் பதிவுகளில் தே பிரித்தோ பற்றிப் பார்க்கும் போது, இராம்நகர் செய்திகள் நிறைய வரும்
பதிலளிநீக்குஇராம் நகர்-எழுவன் கோட்டை- ஆவண எழுத்தர் பணி தொடங்கிய நீதியரசர் கற்பக விநாயகம் இடைவிட்ட கல்வியைத் தொடர்ந்து சட்டப்படிப்பு படித்துக்கொண்டே
பதிலளிநீக்குநடிப்பின் மீதுள்ள ஆர்வமிகுதியால் நாடகக் குழுக்களில் சேர்ந்து நடித்த வரலாற்றுப் பதிவில் தேங்காய் சீனிவாசன்,சஹஸ்ரநாமம்,கோமல் சுவாமிநாதன் போன்
றோரின் நினைவலைகளூம் இழையோடியது இரசனைமிக்கதாக இருந்தது.வழக்குரைஞர் பணியிலும்,நடிப்பிலும் இணைந்த நீதியரசர் எம்.ஜி.ஆர்
அவர்களைச் சந்தித்த நிகழ்வு எதிர்பாராத திருப்பத்தை
உணர்த்தியது.அப்புறம்........
மறக்க முடியாத ஊர் ராம்நகர்
பதிலளிநீக்குஅருமை...
பதிலளிநீக்குஅன்றைய காலம் எளிமையுடன் இனிமை.கற்பகவிநாயகம் மிகவும் போராடி தலைமை நீதியரசர் பதவியை அலங்கறித்தவர்.வீ.இராமநாதன்.
பதிலளிநீக்கு