அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2; பகுதி: 21 முள்ளிக்குண்டு பேருந்து எரிப்பு வழக்கு

 

அன்புச்  சொந்தங்களே ....

சென்ற பகுதியில் நமது நகர் நீதி அரசரை மற்றும் அவரது வழக்கறிஞர் குழாம் தன்னை மக்கள் திலகம் அவர்களது தி.நகர் இல்லத்தில் அமர வைத்து விட்டு வந்து விட்டோம்.  இப்போது அங்கு செல்வோம்.  இவர்கள் எல்லோரும் தி.நகர் இல்லத்தில் அமர்ந்து எம்.ஜி.ஆருக்காக காத்து  இருந்த போது அவர் திருப்பரங்குன்றம் கிளம்பிக் கொண்டு இருந்தார்.  அரசியல்  வாழக்கையில் உச்சகட்டக்  காட்சியாக பல ஆண்டுகள் இணைந்து பணியாற்றி  மிகப்பெரும் தனிக்கட்சியாக ஆட்சிக்கட்டிலில் 'தனிக்காட்டு ராஜாவாக' நின்ற தி.மு.க. என்னும் பெரிய கோட்டையில் இருந்து அவர் தூக்கி எறியப்பட்ட நேரம்...

 

அவரது இரசிகர்களை தொண்டர்களாக மாற்றிய காலம்.  இவர்கள் தனக்காக காத்திருந்ததைக் கண்டு அவர்களுடன் அமர்ந்து உரையாடினார்.  வழக்கறிஞர்கள் எல்லோரும் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு நீக்கப் பட்டதற்கு கன்டனம் தெரிவிக்கும் வண்னம்  சென்னை அண்ணா சிலை அருகே உண்ணா நோன்பு இருக்கப் போவதாக அவரிடம் தெரிவித்தனர்.  தனக்காக யாரும் சிரமப்பட வேண்டாம் என்பதில் எம்.ஜி.ஆர். கவனமாக இருந்தார்.  அதனால்அப்போது கூட மக்கள் திலகம், தான் கட்சியை விட்டு நீக்கப்பட்டது காரணமாக இருக்க வேண்டாம்.. ஊழல் பற்றிய விசாரணை நடத்தக் கோரி உண்ணா விரதம் அமையட்டும் என்றார்.  அப்போதுதான் திரு.கற்பக விநாயகம் அவர்கள் தான் மேடை நாடகங்களில் நடிப்பதை பற்றியும் தேங்காய் சீனிவாசன் குழுவின் நாடகத்தில் எம்.ஜி.யாராகவே அவரது உடைகள் மற்றும் தொப்பியை அணிந்து நடைத்தையும் அவரிடம் குறிப்பிட்டார்.  எம்.ஜி.ஆர் .. 'ஓ அப்ப நீங்கள் முழுக்க முழுக்க நம்ம ஆளுதான்' என்று தட்டிக் கொடுத்து பயணம் மேற்கொண்டார்.

  

இந்த வழக்கறிஞர் குழு உண்ணா விரதப் போராட்டம் மேற்கொண்டது.. வழக்கம் போல் சிறையில் அடைக்கப்பட்டது. 

 

குற்றவாளிகளுக்கு சிறைத் தண்டனை வழங்குகின்ற நீதிபதிகள் ஏதாவது விழாக்கள் காரணமாக சிறைச்சாலைக்குள் சென்று மேடையில் அமர்ந்து பேசி விட்டு இனிப்புகளையோ பரிசுகளையோ வழங்கி விட்டு வந்து இருப்பார்கள்.  சிறைக்கு குற்றவாளிகளை அனுப்பும் எத்தனை நீதிபதிகளுக்குத் தெரியும் சிறை வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ?... ஆனால் நமது நகரில் பிறந்து இன்று நாட்டின் தலை நகரில் பெயர் சூடி இருக்கும் நீதி அரசர் கற்பக விநாயகம் அவர்களுக்குத் தெரியும் சிறை வாழ்க்கை எப்படிப் பட்டது என்று ..

 

தேவகோட்டையில் இருந்து சென்னைக்கு சென்று படித்து வழக்கறிஞர் ஆகி இளம் காளையென நின்று இருந்த நீதி அரசருக்கு அன்று சிறைக்குச் சென்றால் ஜாமின் கொடுத்து வெளியே கொண்டு வர யார் இருக்கிறார்கள் என்ற எண்ணம் கூட வரவில்லை.  5 நாட்கள் சிறையில் கழிந்தது எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி.  அந்த நிலையிலும் சிறையில் வழங்கிய சுண்டல் சுவை மிகுந்ததாக இருந்தது என்றும், இன்றைக்கும் கூட அந்த சுண்டலின் மணம்  நாவின் சுவை மொட்டுக்களில் நர்த்தனமாடுகிறது என்று அடிக்கடி குறிப்பிடுகிறார் நீதி அரசர். 

 

 ஐந்தாம் நாள் யாரோ வந்து இவர்களைச்  சந்தித்தார்கள்.  இன்னும் சிறிது நேரத்தில் மக்கள் திலகம் அங்கு வருவார்கள். அவர்களை எல்லாம் 'ஜாமீனில்' எடுப்பார்கள் என்று செய்தி சொல்லிச் சென்றார்.  அவர் சொன்னது போலவே மக்கள் திலகம் வந்தார். இவர்களைப்  பார்த்து, எனக்காக இவ்வளவு துன்பம் மேற்கொண்டு இருக்கீர்களே என்று கண் கலங்கினார்.  என்றும் இந்த நன்றியை மறக்க மாட்டேன் என்று அவர் சொன்ன போது  அவரது குரல் தழு தழுத்தது. 

 

அத்துடன் நிற்கவில்லை. அன்று மாலையில் உங்களை திருவல்லிக்கேணி காவல் நிலையம் அழைத்து வந்து அங்கிருந்து வீட்டுக்கு அனுப்புவார்கள்.  அங்கு நானே வந்து உங்களை வழி அனுப்புவேன் என்று சொல்லி மேலும் நெகிழ வைத்தார்.  தனது வார்த்தையை எவ்வளவு பணிச்சுமை இருந்தாலும் காப்பவர் சொன்னபடி மாலையில் திருவல்லிக்கேணி காவல் நிலையம் வந்து இவர்களுடன் உரையாடிக்கொண்டு இருந்தார்.  மற்றவர்களை விட கற்பக விநாயகம் அவர்கள் புரட்சித்தலைவரின் மனதில் நெருங்கிய இடம் பிடித்தார் என்பது, கற்பகவிநாகம் அவர்கள் 'புரட்சித் தலைவர் ... வாழ்க' என்று உயர்திக் குரல் எழுப்பியதும், சிறையின் அழுக்கு வாசத்தோடு இருந்த கற்பக விநாயகம் அவர்களை எம்.ஜி.ஆர். கட்டிபிடித்து கொடுத்த முத்தத்திலேயே  தெரிந்தது. 

 இதற்கிடையில் இங்கே முள்ளிக்குண்டில் பேருந்தை எரித்த வழக்கு என்ன நிலையில் இருக்கிறது என்று பார்க்க சென்னையில் இருந்து தேவகோட்டை செல்வோமா?. இந்த வழக்கு பற்றி இரத்தினச் சுருக்கமாக பார்க்க வேண்டுமானால் 1973 ஆம் ஆண்டு பேருந்து எரிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 11 பேர்கள், குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்த இறுதி நீதி மன்ற ஆணையின் நகலை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.  இதிலிருந்தே முழு விபரமும் அறிந்து கொள்ள இயலும். (இயன்ற வரை எவ்வளவு சுருக்க முடியுமோ அவ்வளவு சுருக்கித் தரத்தான் முயல்கிறேன்.   ஆனால், நிகழ்வுகளும் செய்திகளும் நிறைய நிறைய இருக்கின்றன..  அவ்வளவையும் வழங்கி விட இறைவன் அருளும் உங்கள் ஆசிகளும் வேண்டும்).




வழக்கின் விபரம்:

 

 

இராமநாதபுரம் செஷன்ஸ் நீதிமன்றத்தின் தேவகோட்டை கிளை (ஆகஸ்ட் செஷன்)

 

முன்னிலை: துணை செஷன்ஸ் நீதிபதி திரு.T.பாலகிருஷ்ணன், B.A., B.L..,

 நாள்: திங்கட்கிழமை, 6-8-1973

செஷன்ஸ் வழக்கு எண்: 66 / 1973

குற்றவாளிகள் என்று வழக்கில் இணைக்கப்பட்டவர்கள்.

 1.    SP.தனசேகரன்

2.    நாராயணன்

3.    தேவதாஸ்

4.    பக்தவச்சல மூர்த்தி

5.   D.இராஜேந்திரன்

6.    கணேசன்

7.    பாலகிருஷ்ணன்

8.    சுப்பாராஜ்

9.    A.இராஜேந்திரன்

10. இராதா என்ற இராத கிருஷ்ணன்

11. ஜகன்னாதன்

 இவர்களுக்காக ஆஜராகும் டிஃபன்ஸ் வழக்கறிஞர், திரு.S.மெய்யப்பன் அவர்கள்.

 சாட்டப்பட்ட குற்றங்கள்:

 1.    இ.பி.கோ. 148 ஆவது பிரிவின் படி தண்டிக்கப்பட வேண்டிய குற்றமான, “பயங்கரமான ஆயுதங்களுடன் கலவரம் செய்தல்” –குற்றவாளி 1 முதல் குற்றவாளி 11 வரை.

 2.    இ.பி.கோ.341:  தவறான கட்டுப்பாடு இழந்த நடவடிக்கை- குற்றவாளி 1 முதல் குற்றவாளி 11 வரை.

 3.    இ.பி.கோ.435 மற்றும் 149…: ரூ.18,000 மதிப்புக்கு சேதம் விளைவிக்கு,ம் வண்ணம், பொறுப்பற்ற குறும்புச் செயல்களில் ஈடுபடல்… குற்றவாளி 1 முதல் குற்றவாளி 11 வரை.

 4.    இ.பி.கோ.307 (பகுதி 1) இன் படி, கொலை முயற்சியில் ஈடுபடல்……குற்றவாளி 1 மற்றும் குற்றவாளி 2 பேரின் மீது..

 5.    இ.பி.கோ.307 (பகுதி 1) இன் படி, கொலை முயற்சியில் ஈடுபடல்……குற்றவாளி 5 மற்றும் குற்றவாளி 7 இவர்களின் மீது..

 குற்றம் சாட்டப்பட்டவர்களின் மேல் முறையீடு:

 “குற்றமற்றவர்கள்”

நீதிபதியின் பார்வை: குற்றம் சாட்டப்பட்டவர்கள்…. குற்றமற்றவர்கள்.

 தீர்ப்பு: குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்ற வழக்கு நடவடிக்கைகளில் இருந்து விடுவிக்கப் படுகிறார்கள்.

கிராமங்களின் நிர்வாகம், கர்ணம்/ கணக்கப்பிள்ளை என்ற ஒரு வர்க்கத்தினரின் கையில் பரம்பரைச் சொத்தாக இருந்த நிலையில், தகுதி உடைய எவரும் கிராம நிர்வாக அதிகாரி ஆகலாம் என்ற நிலைக்காக, ‘கிராம நிர்வாக அதிகாரி என்ற ஒரு பதவியை உருவாக்கி, பல குடும்பங்களில் விளக்கேற்றி வைத்த புரட்சித் தலைவரை மறக்காமல், தமிழகத்தின் அனைத்து கிராம நிர்வாக அதிகாரிகளையும் ஒன்று இணைத்து ஒரு மாநிலம் தழுவிய சங்கமாக நடத்தி வருபவர்  நமது நகர் திரு.போஸ், V.A.O. அவர்கள். 


 திரு.போஸ், V.A.O.

தான் ஒரு கர்ணம் ஆக கிராம நிர்வாக அதிகாரி எனும் பதவி தோற்றுவிக்கும் முன்னரே பாரம்பரியமாக இருந்த போதும், புரட்சித்தலைவரின் இந்த மக்கள் சேவையை மனதில் வைத்து பேருந்து எரிந்த இதே இட்த்தில் எம்.ஜி.ஆருக்கு சிலை நிறுவி அந்த இட்த்தை பேணிப் பாதுகாத்து வருகிறார்.  திரு.போஸ் அவர்கள் பற்றிய செய்திகளை பின்னர் தனியாகப் பார்ப்போம்.

மேலே கண்ட இரண்டு நிகழ்வுகளுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.  தேவகோட்டை முள்ளிக்குண்டு பேருந்து எரிப்பில் முதல் குற்றவாளி என்று குற்றம் சாட்டப்பட்டவர் திரு.SP.தனசேகரன்.   இவர் நீதியரசர் திரு.கற்பக விநாயகம் அவர்களின் சகோதர்ர திரு.இராதாகிருஷ்ணன் அவர்களின் சம்பந்தி ஆவார்.


இப்போது நாம் சென்னைக்குத் திரும்புவோம்… நீதி அரசர் கற்பக விநாயகம் அவர்களை அங்கே விட்டு வந்து இருக்கிறோம் அல்லவா?

 

எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட தொடர்பு தொண்டர்களின் அயோத்தியாக விளங்கிய இராமாவரம் தோட்டம் நோக்கி அடிக்கடி கற்பக விநாயகம் அவர்களின் கால்களை நகரச் செய்தது., மற்றவர்களிடம், 'கற்பகம் ஏன் இன்னும் வரவில்லை? ? என்று தலைவரே கேட்கும் அளவுக்கு இவருக்கு முன்னுரிமை வழங்கினார் அவர்.

அதன் பிறகு அ.இ.அ.தி.மு.க.வினர் மேல் போடப்பட்ட பல வழக்குகளில் இவர் வாதாடி வெற்றி பெற்றுத் தந்து புரட்சித்தலைவருக்கு மிகவும் நெருங்கியவராக ஆகி விட்டார்.  அரசியல் வானில் பொன் மனச்செம்மல்  விடி வெள்ளியாகச் சுடர் விட்டு தான் வாழ்ந்த காலம் வரை இவரை எதிர்த்தார் வீழ்ந்தார் என்ற நிலையில் இருந்தார்.

இதற்கு மேல் என்னங்க  வேணும்நம்ம நீதி அரசருக்கோ எப்படியாவது தனது கனவான வெள்ளித்திரையில் தனது திறமையைக் காட்டி விட வேண்டும் என்பதே குறியாக இருந்தது. ஒரு நாள் தனது ஆசையை மெதுவாக எம்.ஜி.ஆரிடம் வெளியிட்டார். தான் படிக்க வந்ததே நடிக்க வேண்டித்த்தான் என்று.  எம்.ஜி.ஆர். அவரின் ஆசையை வெளிப்படையாக முளையிலேயே கிள்ளி விடாமல், எந்த வேடம் வந்தாலும் ஒப்புக்கொள்ளாதீர்கள்.  வாய்ப்பு வரும் போது  என்னிடம் சொல்லுங்கள். என்ன வேடம் என்று பார்த்து அதன் பிறகு ஓப்புக்கொள்ளலாம் என்று சொல்லி விட்டார்.  எனவே வந்த சிறு சிறு வாய்ப்புகள் எல்லாம் புறந்தள்ளப்பட்டன.  ஆனால் எம்.ஜி.ஆர். இவருக்கு எதுவும் இது சம்பந்தமாக உறுதி கொடுக்கவில்லை.   தன்னை நம்பியவர்களை எப்படி அவர்கள் வாழ்வில் முன்னுக்கு வர வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர். மிக்க தீர்க்க தரிசனத்தோடு இருந்தார்.  இதே போன்ற ஒரு நிகழ்வை நமது முந்தைய அத்தியாயங்களில் தேவகோட்டை மருத்துவர் ம.வ.ராஜகோபால் அவர்களின்  வாழ்க்கையிலும் கண்டு இருக்கிறோம்.

 

 திரைத்துறையின் அத்தனை  ஏமாற்றங்களையும், துன்பங்களையும், குறிப்பாக அவமானங்களையும் தாங்கித் தான் புரட்சி நடிகர் என்ற நிலைக்கு உயர்ந்தவர் அவர்.  படித்தவர்களை மிகவும் மதிக்கும் பண்பாளர். அதிலும் துறை வல்லுநர்கள்  ( PROFESSIONALS )  திரைப்  படத் தொழிலுக்கு வந்து துன்பமோ அவமானமோ படக் கூடாது என்பது அவரின் பட்டறிந்த அறிவும் சிந்தனையும் ஆகும்.

 

சிலருக்கு மட்டும் தீர்க்க தரிசனம் என்னும் தொலை  நோக்குப் பார்வை உண்டு. அவர்களே தலைவர்கள் ஆனவர்கள்.  திரைத் துறையில் எத்தனையோ பேர்களை ஏற்றி விட்ட எம்.ஜி. ஆரால் இவருக்கு ஒரு வாய்ப்பு வாங்கித் தருவது எளிதினும் எளிதான காரியம்.  ஆயின் அவர் இவரை அந்தத் துறையில் ஈடுபட விடவில்லை. 

 

இந்த நிலையில் தனது தகப்பனார், முத்துசாமி பிள்ளை உடல் நிலை கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார் என்ற செய்தி கேட்டு தேவகோட்டைக்கு விரைந்தார்.  தன்னுடன் இருக்கும் வரை தகப்பனாரின் அருமை பிள்ளைகள்  உணர்வதில்லை.  உணர்வில் இருந்தாலும் வெளியே  வருவதில்லை.  வேர் இன்றி விளைவு ஏது ஓடிச் சென்றாலும் தந்தையின் வாடிக்கிடந்த உடலை மட்டுமே காண இயன்றது.  அங்கிருந்தே எம்.ஜி.ஆருக்கு தந்தையின் மறைவினை தந்தி மூலம் தெரியப்படுத்தினார்.  தலைவரிடம் இருந்து பதில் தந்திக் கம்பிகள் மூலம் வந்தது ....'கவலைபடாதீர்கள்  கற்பகம்.. நான் இருக்கிறேன்என்று   தந்தையாரின் இறுதிக் காரியங்கள் முடித்து சென்னை திரும்பினார்.  தனது ஆதரவாய் இருந்த தலைவரைத்  தன்  தலை வேரை  காணத்  தோட்டம் சென்றார்.

 

அன்று தோட்டத்தில் நிறைய கூட்டம்.  நம்மவரால் மிக அருகே செல்ல இயலவில்லை.  இவரும்  சோகம் முற்றும் குறையாத மன நிலையில் இருந்தார்.  எம்.ஜி.ஆர்.  வெளியே  கிளம்பிக் கொண்டு இருந்தார். கற்பக விநாயகம் அவர்கள் நிற்பதை பார்த்தும் பாராதவர் போல  நேராக காரில் சென்று அமர்ந்தார்.  காரில் இருந்த படி,  'கற்பகம் ... காரில் வந்து ஏறுங்கள்என்று கையை காட்டி அழைத்தார்.  கற்பக விநாயகம் காரில் சென்று தலைவர் அருகில் அமர்ந்தார்.   எங்கிருந்து வந்ததோ அத்தனை சோகம்... தன்னை மறந்து எம்.ஜி.ஆரின் மடியில் தலையைக் கவிழ்த்து தாயின் மடியில் கிடக்கும்  மழலையைப் போல விக்கி விக்கி கண்ணீர் மல்க கரைந்து அழுதார்.   அப்படியே ஒரு தந்தை போல மடியில் கிடத்தி கவலைப்படாதீர்கள் கற்பகம், 'இனி நான் தான் உங்களுக்கு சித்தப்பா' என்றார்.  அது தான்  பொன்மனம். தன்னை நம்பி இருப்பவர்களின் மனதை அறிந்து அவர்களுக்கு தன்னால் என்ன செய்ய முடியும் என்று எண்ணிப் பார்க்கின்ற நன் மனம் அவரின் பொன்மனம். 

இன்ன்ன்ன்னும் இருக்கு...........

 

கருத்துகள்



  1. பொன்மனச் செம்மலை அழகாகச் சொல்லாயிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. Surprised again and sgain by seeing your portrait of events as if happening now and also linking all the activity from Vhennai as well at Devakottai without missing the continutiy

    பதிலளிநீக்கு

  3. நீதியரசர் ஐயா கற்பகவிநாயகம் அவர்களை பற்றி அறியாத பல தகவல்களை பதிவிட்டமைக்கு நன்றி அண்ணா !🙏🙏🙏

    பதிலளிநீக்கு
  4. என் தகப்பனார் தனது 94-ம் ஆண்டில கீழே விழுந்து சப்ளையில் அடி பட்டு நடக்க முடியாமல் படுத்த படுக்கையில் ஒரு மாதம் இருந்து தவறி விட்டார். கடைசி ஒரு மணி நேரம் வரை நல்ல ஞாபகம் இருந்தது. அவர் தவறுவது 4 நாட்களுக்கு முன் அப்போது தேவகோட்டை வந்திருந்த நீதிபதி கற்பக விநாயகம், அப்பாவின் நிலையைப் பற்றி கேள்விப்பட்டு எனக்கு ஃபோன் செய்து அப்பாவை பார்க்க வரலாமா என்று கேட்டு நான் மகிழ்வுடன் வரச் சொன்னதை அடுத்து என் வீட்டிற்கு வந்து என் அப்பாவை பார்த்து கீழே விழுந்து வணங்கி அவருடன் 15- 20 நிமிடங்கள் பேசி ஆசி பெற்றுக்கொண்டு
    சென்றார். இதை ஆங்கிலத்தில் MI ஃபோன் பதிவிட்டது வர வில்லை.
    மேலும் அவர் பற்றிய என் சில அனுபவங்களை உடல் நிலை சரியானதும் பதிவு செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. மிக அருமையான பதிவு
    நெகிழ்வான தருணங்கள்.

    பதிலளிநீக்கு
  6. நெகிழ்வான தருணங்கள்
    மிக அருமையான பதிவு

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60