அசை போடும் தேவகோட்டை நினைவுகள்- பாகம் 2: பகுதி: 24
மறந்தே போச்சு... ரொம்ப நாள் ஆச்சு...
அசை போடும் தேவகோட்டை நினைவுகள்- பாகம் 2: பகுதி: 24
மறந்தே போச்சு... ரொம்ப நாள் ஆச்சு...
மடிமேல் விளையாடி
நாம் மனம் போல் உறவாடி...
என்று ஒரு படப் பாடல்.. 1974 ஆம் ஆண்டு வெளி வந்த 'அத்தையா .. மாமியா' என்ற திரைப்படத்தில். அந்தப் பாடல் தான் இதை 8 மாத இடை வெளிக்குப் பின் எழுத முயற்சிக்கும் பொது நினைவுக்கு வருகிறது. என்ன பண்றதுங்க .. இடைவிடாத அலுவலகப் பணி எல்லாவற்றையும் சாப்பிட்டு விடுகிறது.
கடைசியில் நீதியரசர் கற்பக விநாயகம் அவர்களின் இல்லம் அருகில் உலாவினோம்... சப்பாணி முனீஸ்வரரை தரிசித்தோம். இந்த தெருவில் இருந்து சிலம்பணி சன்னதி தெருவுக்கு ஒரு சிறிய சந்து பிரியும். ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த இடத்தில் இருந்த ஒரு வீட்டில், கணவர் மனைவி மீது சந்தேகம் கொண்டு மனைவியைத் தீர்த்துக் கட்டி விட்டார். தடுக்க வந்த 2 பெண் மக்களும் பலியானார்கள் . ஆண் என்றால் குடும்பத்தின் உரிமையாளர் என்ற எண்ணம் மேலோங்கி இருந்த காலம். இன்றும் நீடிக்கிறது சில இடங்களில் ...ஒரு வேகத்தில் மூன்று கொலைகளை செய்து விட்டார். அடுத்து என்ன செய்வது என்றே புரியவில்லை. கொலை செய்யும் போது எழுந்த கோபாவேச உணர்ச்சி அலை அடங்கி சோகம் கப்பிக் கொண்டது. நான் தான் கொலை செய்தேன் என்று வெளியில் சொல்லும் தைரியம் கொஞ்சம் கூட இல்லை. ஒரு பிணத்தை மறைப்பதே கடினம். மூன்று சடலங்களை என்ன செய்வது ?
அன்றைய வீடுகளில் விறகு மழையில் நினையாது இருப்பதற்காக வீட்டின் உள்ளேயே ஒரு பகுதியைத் தடுத்து அதனுள் அடுக்கி வைத்து இருப்பார்கள். ஒளிப்பதற்கு
வேறு இடம் 'தோது'படவில்லை. எதைப்பற்றியும் சிந்தனை செய்யும் நிலையிலும் அவர் இல்லை. அந்த விறகு அடுக்கும் அறையில் மூன்று சடலங்களை விறகோடு விறகாக அடுக்கி வைத்து விட்டார். 'கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்து தானே 'ஆகணும்' என்பார்கள். பிணம் எதுவும் பேசாமல் சவமாய்க் கிடந்தாலும்,
'செத்தால் தெரியும் செட்டியார் நாத்தம்' என்பது போல அந்தப் பகுதி முழுவதும் தாயும் மகள்களும் வாடையாக வலம் வர ஆரம்பித்து அக்கம் பக்கத்தவர் நாசிகளில் தங்களின் மரணச் செய்திதனை அறிவித்து விட்டார்கள். பிறகு என்ன ? காவல் துறை வந்து கதையை முடித்து வைத்தது. அந்த வீடு ரொம்ப நாள் யாரும் குடி இருக்காத 'நானே வருவேன்' இல்லமாக இருந்தது... (இந்தக் கதை எமது அன்பு நண்பர் மருது பாண்டியர் போக்கு வரத்துக் கழகத்தில் எம்முடன் பணியாற்றிய திரு.வெங்கடாசலம் அவர்கள் எனக்கு கூறியது. தேவகோட்டை பற்றிய பல செய்திகளையும், படங்களையும் எம்முடன் பகிர்ந்து கொள்ளும் பண்பாளர்.. உங்கள் அனைவரின் சார்பாகவும் அவருக்கு நன்றி).
இப்போது வேற எங்கேயும் போகாமல் லட்சுமிபுரம் மேற்குத் தெருவைப் பிடித்து தெற்கில் நடந்தோம் என்றால் அன்றைய டி.வி.எஸ். (TVS ) பொட்டல் வரும். இந்த டிவிஎஸ் தான் இன்றைய அரசு போக்கு வரத்துக் கழகத்துக்கு முன்னோடி. இந்தப் பேருந்துகள் அரசுடமை ஆக்கப்பட்டு 'பாண்டியன் போக்குவரத்துக்கு கழகம்' ஆனது. பின்னர் பல பேருந்து முதலாளிகளிடம் இருந்து (ஆண்டவர் டிரான்ஸ்போர்ட் ) பேருந்துகள் பிடுங்கப்பட்டன . பாண்டியன் போக்கு வரத்துக்கு கழகம் பின்னர் கரைக்குடியைத் தலைமை இடமாகக் கொண்டு 'மருது பாண்டியர் போக்கு வரத்துக் கழகம் ' ஆனது... அந்தந்தப் பகுதிகளின் தலைவர்களின் பெயர்களில் பல கழகங்கள் உருவாகின. இந்த 'கழகங்களின்' பெயர்கள் எல்லாம் 'கலகங்களாகத்' தோன்றியதால் பின்னர் ஒரு வழியாக 'அரசு பேருந்துக் கழகம்' என்ற பெயரில் பொலிவிழந்து நட்டத்தில் இயங்கிக் கொண்டு இருக்கின்றன. அரசின் கைங்கர்யம். அத விட்டுடுவோம்.... இப்ப இந்த டிவிஎஸ் பொட்டலுக்கு வருவோம்.
ஆட்டோ ரிக்ஸாவில் இருந்து ஆகாய விமானம் வரை பெண்கள் இயக்குகின்ற காலத்துக்கு நாம் வந்து விட்டோம். போர் விமானியாகக் கூட பெண்கள் சேர்ந்து விட்டார்கள் இப்போது. ஒரு 55 வருடங்களுக்கு முன்னர் பெண் மிதிவண்டி (bicycle) ஓட்டுவதை வாயைப் பிளந்து பார்த்திருக்கிறார்கள் என்றால் நம்புகிறீர்களா ? நான் பார்த்து இருக்கிறேன். இந்த டிவிஎஸ் பொட்டலில் அவ்வப்போது
10 நாள் 15 நாள் விடாமல் சைக்கிள் ஓட்டும் 'மினி கின்னஸ்' சாதனைகள் நடத்தப்படும். அந்த மைதானத்தைச் சுற்றி எல்லையாக கயிறு கட்டப்பட்டு வட்ட வடிவ மைதானம் தயார் செய்யப்பட்டது இருக்கும்.
ஒருவர் சைக்கிளில் சுற்றிச் சுற்றி விடாமல் ஒட்டி வருவார். பொதுவாக பகல் நேரங்களில் இவரை எவரும் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை. மாலை 5 ~ 6 மணி ஆகிவிட்டால் கூட்டம் வட்ட வடிவில் கயிரோடு கரை கட்டி நிற்கும். பொழுது போகணுமில்ல.. பெரிசுகள் முதல் சிறுசுகள் வரை வந்து நிற்கும். ஒருவர் மிதி வண்டியில் சும்மா சும்மா சுற்றி வருவதை எவ்வளவு நேரம் தான் கூட்டம் வேடிக்கை பார்க்கும். இதற்காக இடையில் ஒரு பெண்மணி சேலை கட்டிய கோலத்தில் சைக்கிளை ஒட்டி வருவார். அவரும் தொடர்ந்து இடை விடாது சைக்கிள் ஓட்டுவதாக சொல்லிக் கொள்வார்கள். பெரிசுகள் வாய் பிளந்து கண்கள் விரியக் கவனித்துக் கொண்டு இருக்கும்.
இடையில் 'பட்ட வாத்தி' வருவார். பல வித்தைகள் செய்வார். எனக்கு சிறு வயதில் பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. சைக்கிளை ஒட்டிய படியே தலையில் ஒரு நீர் நிறைந்த குடத்தை நிறுத்தி வலம் வருவார். அப்படியே குடத்தை பல்லில் கடித்து கொண்டு சைக்கிளை ஓட்டுவார். அந்தக் காலங்களில் சைக்கிளில் வித்தைகள் செய்வோர் இருந்தனர். இதில் பட்டவாத்தி 'ஹீரோ'. இடையில் சைக்கிளை நிறுத்தி வைத்து விட்டு அடி வயிற்றில் ஒரு கயிரைக் கட்டுவார். பின்னர் தவளைக் குஞ்சுகளை ஒன்றன் பின் ஒன்றாக விழுங்குவார். இன்னொரு ரவுண்டு சைக்கிளில் சுற்றி விட்டு பின்னர் வாயைத் திறந்து ஒவ்வொரு தவளையாக வெளியே கொண்டு வருவார். கூட்டம் ஆர்ப்பரிக்கும். இதன் உச்ச கட்டமாக ஒரு தண்ணீர்ப் பாம்புக் குட்டியினை இதே பாணியில் விழுங்கி பின்னே வெளியே கொண்டு வருவார்.
யார் இந்த பட்ட வாத்தி . தேவகோட்டை இவரை எப்படி சுவீகாரம் செய்து கொண்டது என்பது சுவையான வரலாறு . இவரது உண்மையான பெயர் இவரைத் தவிர வேறு எவருக்கும் தெரியாது. சிவகாசிப் பக்கத்தை பூர்விகமாகக் கொண்டு பட்ட வாத்திக்கு தெலுங்கு தான் தாய் மொழி. தேவகோட்டையில் 'சரஸ்வதி வாசக சாலை'யின் கடைசியில் இருக்கும் முனியய்யா பொட்டலில் அவ்வப்போது சிறிய சர்க்கஸ் கம்பெனிகள் வந்து போகும். இந்த சர்க்கஸ் கம்பெனி ஒன்றில் பணியாளராக வந்தவர் தான் நம்ம பட்ட வாத்தி.
அப்போது தேவகோட்டை நகராட்சியில் துப்பரவு தொழிலாளர் ஒரு பகுதி இதே சரஸ்வதி வாசக சாலையில் குடிசை போட்டு வாழ்ந்து வந்தனர். சர்க்கஸ் கம்பெனியில் சிறிய வேலைகளோடு வித்தைகளைப் பழகி விளையாட்டுப் பிள்ளையாக வலம் வந்த பட்ட வாத்தி இந்தக் குடிசை வாசிகளில் ஒரு பெண்ணிடம் தனது வித்தையைக் காட்டி விட்டார். தேவகோட்டை ஆளுங்க சும்மா விடுவார்களா? அப்படியே பிடிச்சு கட்டி வச்சுட்டாங்க. சர்க்கஸ் கூடாரம் காலி செய்து விட்டு புறப்பட்டு விட்டது. நம்மாளு இங்கே 'தேனிலவில்' இருந்து விட்டார். செல்ல முடிய வில்லை.
இடையில் இப்படி டிவிஎஸ் பொட்டலில் நடக்கும் மேற்கூறிய 'மினி கின்னஸ்' சாதனை நிகழ்வுகளில் கலந்து கொண்டு தமது பராக்கிரமத்தை வெளிப்படுத்துவார். பின்னர் அவரும் தேவகோட்டை நகராட்சி தொழிலாளி ஆகி விட்டார். நகராட்சியில் என்ன வேலை என்றாலும் பார்ப்பார். டிராக்டர் ஓட்டுவதில் இருந்து 'மெக்கானிக்' வரை.
எனக்கு இந்த பட்டவாத்தி எப்படி இருக்கிறார் தற்போது என்று அறிந்து கொள்ள ஆவலாய் இருந்தது. நம்ம MPTC வெங்கடாசலம் அண்ணன் அவர்களிடம் தான் கேட்டேன் . ஒரு 10 மாதங்களுக்கு முன்னரே படத்துடன் தகவல்கள் அனுப்பி இருந்தார். எனக்குத்தான் நேரம் இப்போது கிட்டியது. மன்னிக்கவும். அந்த பட்டவாத்திக்கு வயது மிகவும் ஆகி மூப்பின் முதிர்ச்சியை நினைவு தடுமாறி விடுகிறது அவ்வப்போது. யாராவது தேநீர் வாங்கிக் கொடுத்தால் அப்படியே குடித்து விட்டு அங்கேயே அமர்ந்து விடுகிறாராம். அவரிடம் பேசி அவரது நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள முடியவில்லை.
காலம் எத்தனையோ மனிதர்களின் நினைவுகளைப் பின்னுக்குத் தள்ளி முன்னோக்கி ஓடிக்கொண்டே இருக்கிறது.
தொடர்வோம்
வெகு நாட்களுக்குப்பின் செல்ல மைந்தன் பதிவை பார்க்க
பதிலளிநீக்குமகிழ்ச்சியாகவம நெகிழ்ச்சியாகவும் உள்ளது. ரொம்ப சந்தோஷம்.
1970s கால கட்டத்தில் சென்னையில் வபழனி முதல் விருகம்பாக்கம் வரை பயணித்திருக்கிறேன். அந்த வண்டி ஓடும் பொழுது அதன் ஓசை மிக இனிமையாக இருக்கும்.நினைவுபடுத்தமைக்கு மிக்க நன்றி. கட்டுரை அருமை. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு