தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) - 2.தோரணம்

 

தோரணம்

 

 


வாரண மாயிரம் சூழ வலம்செய்து,

நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்,

பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,

தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்.

மங்கள விழா என்றால்  வீதி முழுக்க தெரியும் வண்ணம், ஊர் முழுக்க அறியும் வண்ணம் 'தோரணம்' கட்டுவது பண்டைய காலம் முதல் தமிழர் தம் வழக்கமாய் இருந்து வருகிறது.

 

'ஜனுர்' (JANUR)

முதன் முதலில் இந்தோனேசியாவில் இந்த குருத்தோலை தோரணத்தை சாவகத்தில் (ஜாவா) திருமண மற்றும் அரசு நிகழ்வுகளில் கண்டதும் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் நாச்சியார் தோரணம் நாட்டிய  வீதிகளை கனவில் கண்ட கண்களோடு விழித்து அவள் மனதில் எழுந்த மேற்கண்ட பாசுரம் தான் என் மனதில் நிழலாடியது.

 


பெஞ்சோர் (PENJOR)

சாவகத் (ஜாவா) தீவின் கிழக்குக் கோடியில் அமைந்து இருக்கின்ற பாலி (BALI),  ஜாவா மற்றும் சுண்டா இன மக்களால் இன்றும் சமய  நிகழ்வுகளுக்கும் , திருமண நிகழ்வுகளுக்கும்  'ஜனுர்' (JANUR) என்று அழைக்கப்படும்  குருத்தோலைத் தோரணங்கள் கட்டப்படுகின்றன.  பெஞ்சோர் (PENJOR) என்று  பாலி மொழியில் அழைக்கப்படும் ஒரு வகைத்  தோரணம் நீண்ட மூங்கில் கழியில் ஒரு முனை கட்டப்பெற்று மறு முனையில் பின்னப்பட்ட குருத்தோலை தோரணமாக வீதி முழுதும் அலங்கரிக்கப்படுகிறது.  இந்த வகைத் தோரணம் பற்றி எழுத ஆரம்பித்தால்  வேறு திசைக்குப் பயணப்பட்டு விடுவோம். பாலித் தீவின் பாரம்பரிய பழக்க வழக்கங்களை பற்றி பின்னர் தனியாகப் பார்க்கலாம்.   இறைவன் அருளினால் இது பற்றி விரிவாக பார்ப்போம்.

 


'மயாங் ஜோடி ' (MAYANG  SEPASANG )

சாவகத்தில் ஓர் ஜோடி அலங்கரிக்கப்பட்ட தென்னங் குருத்தோலைத் தோரணங்கள், நுனியில் பழங்கள், மலர்கள் இவற்றுடன் அழகாக இணைக்கப்பட்டு திருமண இல்லங்களின் வாசற்புறங்களை அலங்கரிப்பது ஒரு மரபு.  இதற்குப் பெயர் 'மயாங் ஜோடி ' (MAYANG  SEPASANG ). இது இரண்டு தனி உயிர்கள் இல்லற வாழ்வில் ஒன்று கலக்கிறார்கள் என்பதைக் குறிப்பதாகும்.  இந்த வகை தோரண அலங்காரம் பாலித்தீவிலும் காணப்படுகிறது.

 

                                                  MAYANG  SEPASANG

தென்னங் குருத்தோலையின் நடு மட்டைப் பகுதியில் இலைக்காம்போடு இணைந்திருக்கும் பகுதி நீக்கப்பட்டு பல் வேறு விதங்களில் மிக அருமையான வகையில் விதம் விதமாய் இங்கே தோரணங்கள் உருவாக்கப்படுகின்றன.

 

தமிழ் நாட்டில் தோரணத்தின் தோரணை

இங்கே தமிழ்நாட்டிற்கு வருவோம்.  மங்களத்திற்கு ஒரு வகையும் துக்க நிகழ்வுகளுக்கு மற்றொரு வகையிலும் தோரணங்கள் கட்டுவது தமிழர் மரபு.

 

                                                      மங்கள தோரணங்கள்

மங்கள தோரணங்கள் நான்கு குருவிகளைக் கொண்டதாக இருக்கும். (தோரணத்தின் இடையில் மடித்து இருக்கும் பகுதி குருவி). மங்கள நிகழ்வுகளில் தோரணங்களில் குருவிகளின் தலை மேல் நோக்கியும் வால்  கீழ் நோக்கியும் இருக்கும்.

 

                                                          அமங்கள தோரணங்கள்

அமங்கள நிகழ்வுகளின் தோரணங்கள்  மூன்று குருவிகளைக் கொண்டு இருக்கும்.  தலை கீழ் நோக்கியும் வால்  மேல் நோக்கியும் இருக்கும். கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விடுவது போல தமிழர் இந்த முறையை பயன் படுத்தி உள்ளனர்.  வெளியில் இருந்தே ஒருவர் தோரணத்தின் தோரணையைக் கண்டே அந்த இடத்தின் நிலையை (மங்களமா அன்றில் அமங்களமா) என்று அறியும் வகையில் வடித்து வைத்த மரபினை எப்படிப் பாராட்டுவது ?

 

                                              மாவிலைத்தோரணங்கள்

நம்ம பகுதியில் தென்னை குருத்தோலை தோரணங்களுடன் மாவிலைத் தோரணமும் வழக்கில் உள்ளது.  ஏனெனில் பண்டிகை மற்றும் சுப நிகழ்வுகளில் கூட்டம் அதிகமாக் கூடும்.  இதனால் தொற்று நோய்க் கிருமிகள்  தோழர்கள் ஆகி விடுவார்கள்.   ஆனால் மாவிலை சிறந்த கிருமி நாசினி ஆகும்.  அதனால் தான் நமது பகுதியில் மாவிலையைத் தோரணமாகக் கட்டி விடுவதும், மற்றொரு கிருமி நாசினியான மஞ்சளைத் தண்ணீரில் கலந்து தெளித்து வைப்பதும்.  அதிலும் மாவிலை வாடிச் சருகு ஆகுமே தவிர அழுகிப் போகாது.  சருகாய் இருக்கும் மாவிலையும் தொற்றும் கிருமிகளைத் தோற்று ஓடச் செய்யும்.

சுமத்ராவின் வித்யாதரத் தோரணம் :

அரண்மனை, கோட்டை கொத்தளங்கள் வாயிலில் பொன்னால், மணியால், விலை உயர்ந்த கற்களால், விளைந்த நல்  மரங்களால் தோரணங்கள் வடிக்கப்படுவதுண்டு.   இராஜ இராஜனின் மகன் இராஜேந்திர சோழன் இன்றய இந்தோனேசியாவின் சுமத்ராவில் சிறிவிஜய நாட்டின் சங்கிராம விசயோதுங்க வர்மன் (கடார போர்) மேல் 'அலை கடல் கடந்து' போர் புரிந்த போது அவர்களின் அரண்மனையில் இருந்த,வித்யாதர தோரணம், தங்கத்தாலான கதவுகள், அழகிய மணிகள் கோர்த்த செய்யப்பட்ட கதவுகள், என ஏராளமான நிதி குவியல்கள் கப்பல் படையால் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு கொண்டுவந்து குவிக்கப்பட்டது. இதனை இராஜேந்திரனது  மெய்க்கீர்த்தி இவ்வாறு கூறும்.  ( கடார படை எடுப்பு விபரமாக பின்னாளில் பார்ப்போம்)

 

அலைகடல் நடுவுள் பலகலம் செலுத்தி

சங்கிராம விசையோத் துங்கவர்மன்

ஆகிய கடாரத்து அரசனை வகையாம்

பொருகடல் கும்பக் கறியொடும் அகப்படுத்து

உரிமையில் பிறக்கிய பருநிதி பிறக்கமும்

ஆர்த்து அவன் அகநகர் போர்த்தொழில் வாசலில்

விச்சாதிரத் தோரணமும் மொய்த்து ஒளிர்

புனைமணிப் புதவமும் கனமணி கதவமும்….

 

கொசுறு :

இதே குருத்தோலைகள், நமது தேசத்தில் உபயோகப்படுத்தப்படுவது போலேயே உணவின் சுவை கூட்டவும், கெதுபாத் (ketupat), பாக்சாங் (Bakcang) என்ற பெயர்களில் சூடு தாங்கும் தன்மைக்காகவும் சுவை கூட்டலுக்காவும் பயன் படுத்தப்படுகின்றன.



விசேட நாட்களில் தென்னை ஓலைகள்  நமது பகுதி கொட்டான்களைப் போலப்  பின்ன்னப்பட்டு அதனுள் உணவு வகைகள் வைத்து விருந்தினர் தமது இல்லங்களுக்கு கொடுத்து அனுப்பப்படுகின்றன.

 


வேகவைத்த குருத்தோலைகள் மரபு சார்ந்த மருத்துவ வழியிலும் உட்கொள்ளப்படுகிறது இங்கே.

பின்னூட்டங்கள: 

1.திரு.கம்பராமன் சண்முகம்: (கம்பன் அடிப்பபொடி திரு.சா.கணேசன் அவர்களின் பேரன், மதுரையில் இருந்து)

செட்டி நாட்டு பகுதிகளில் 

மட்டுமே தென்னை ஒலை நிழற் கூடத்தை, இரண்டு வகையான பொருளில் 

கொட்டகை என்றும் பந்தல் என்றும் கூறப் பெறும் 

கொட்டகை என்பது மங்கல காரியங்களுக்கு போடுவது 

பந்தல் என்பது அமங்கல காரியங்களுக்கு போடுவது 

(மற்ற எல்லா ஊர்களிலும் அனைத்துக்கும் பந்தல் என்றே சொல்வார்கள் )

இது போலவே நம்ம ஊர் தண்டல்காரர் தலைப்பாகை கட்டி இருந்தால் அது மங்கல காரியம் 

துண்டை இடுப்பில் கட்டி இருந்தால் அமங்கல காரியம் நாமும் இடுப்பில் துண்டை கட்டிக் கொள்வோம்

2. என்னுடன்,  தேவகோட்டை தே பிரித்தோ 10, 11 வகுப்புகள், பயின்ற அன்புக்கவிஞர் திரு. கருணாநிதி… காரைக்குடியில் இருந்து..

தெங்கின் ஓலை நயம் அதில் தெரியும் கலை நயமோ தேவர்களை இழுத்து வரும் தெய்வத்துக்கு அழைப்பு விடும்

வெளிப்பட்ட தொழில்நுட்பம் வியப்புக்கே சிகரமன்றோ

இந்தோனேஷியா ஒரு செந்தேனேஷியா.

தெரிய வைத்த தங்களுக்கு தெரிவிப்பதற்கு நன்றி என்ற வார்த்தைக்கு மேல் நாலைந்து வார்த்தை தேடும் கருணாநிதி அதில் தெரியும் கலை நயமோ தேவர்களை இழுத்து வரும் தெய்வத்துக்கு அழைப்பு விடும்

வெளிப்பட்ட தொழில்நுட்பம் வியப்புக்கே சிகரமன்றோ

இந்தோனேஷியா ஒரு செந்தேனேஷியா.

தெரிய வைத்த தங்களுக்கு தெரிவிப்பதற்கு நன்றி என்ற வார்த்தைக்கு மேல் நாலைந்து வார்த்தை தேடும் கருணாநிதி

3. சுந்தரம் சாத்தப்பன் அவர்கள்:

 மிக அர்த்தமுள்ள குருத்தோலை தகவல்கள் முத்து மணி மற்ற நண்பர்களின் கருத்துக்கள் என்னை நானும் ஊரைச்சார்ந்தவன்  என்ற ரீதியில் சிலாகித்தது. நன்றி தோழர்.

4. சரவணன்  அழகப்பன், தாய்லாந்தில் இருந்து:

முத்து முத்தான குருத்தோலை செய்தி..👍👍

5.சிறீரவீந்திர ராஜா இராசையா, சிட்னி, ஆஸதிரேலியாவில் இருந்து: இந்தோனேசியாவில் தோரணங்களுக்கு விளக்கம் அளித்தது நன்று. இலங்கையில் உள்ள சிங்கள மக்கள் தென்னைப்பூவினை அலங்காரத்துக்கு உபயோகப்படுத்துகின்றனர். தமிழர்கள் தென்னை குருத்து தோரணங்களை மங்கல, அமங்கல நிகழ்வுகளுக்கும் உபயோகிக்கின்றனர்.

தற்பொழுது பிளாஸ்ரிக் தோரணங்கள் விற்பனையில் உள்ளது. இதையும் அலங்காரத்துக்குப் பாவிக்கின்றனர்.

6.மூர்த்தி, இந்தோனேசியாவில் இருந்து:

அருமையான பதிவு

கருத்துகள்

  1. நன்று.நல்ல ஆய்வுக்கட்டுரை.ஐயா

    பதிலளிநீக்கு
  2. We do have தோரணம் but not to the grant scale of Indonesia. அங்கிருந்து தமிழகம் வந்திருக்க வாய்ப்புள்ளது!

    பதிலளிநீக்கு
  3. மிக அருமையான பதிவு
    அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
    நன்றி
    வணக்கம்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60