தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)-3.அட... நம்ம 'பல'காரங்கள்

 

அட... நம்ம 'பல'காரங்கள்

                                            

மல்லிகைப்பூ இட்லி, மணக்கும் சாம்பார்.... நான் நாக்கை நம்பி வாழும் ஜீவன் அப்பா என்று 'அன்பே வா'  திரைப்படத்தில் நாகேஷின் பின்னால் இட்லி சாம்பாருக்காக அலையும் நடிகர் T .R.இராமச்சந்திரனைப்  பார்த்தால் சூடான இட்லி, அதற்குத் துணையாய் சாம்பார், பக்கத்திலேயே சட்னி என்று நமது தமிழக உணவு எவ்வளவு நம் உணர்வோடு கலந்து விட்டது என்பது தெரியும்.  எண்ணெய் படாமல் ஆவியில் வெந்து நம் ஆவியில் கலந்து விட்ட இட்லி நமது பாரம்பரிய உணவு என்று இறுமாந்து இருந்த எனக்கு, இங்கே இந்தோனேசியா தான் இட்லியின் பூர்விகம், இந்தோனேசியாவைப் பிறந்த இல்லமாகக் கொண்ட 'கெட்லி' தான்  ஊர் மாறி பேர் மாறி இங்கே 'இட்லி' ஆகி விட்டாள்  என்ற  'உணவு வரலாற்று ஆசிரியர் திரு.K.T.ஆச்சார்யா' அவர்களின் கூற்றை இட்லி மேல் கொண்ட மோகத்தாலும், அவள் நம்மவள் என்ற 'உடமை உணர்வாலும்' ஏற்றுக்கொள்ள இயலவில்லை..


                LONTONG- INDONEISAN RICE CAKE

ஆனால் கி.பி. 800 முதல் 1,200 இடைப்பட்ட காலம் தான் 'கெட்லி' இந்தோனேசியாவில் இருந்து கப்பல் ஏறி பாரதம் நோக்கி பயணப்பட்ட காலம் என்கிறார்  கே.டி.ஆச்சார்யா .    ஆச்சார்யா, ஆச்சரியம் ஊட்டினாலும் , எம்மை ஊட்டி வளர்த்த இட்லியின் பிறப்பை அவ்வளவு சீக்கிரம் பிறருக்கு விட்டுக் கொடுத்து விட முடியுமா?  என்னதான் முப்பத்தைந்து ஆண்டுகள் இந்தோனேசியாவில் வாழ்ந்தாலும் 'நம்ம ஊரப்  போலாகுமா ?'.  ஆராய்ச்சி மனம் தேடலில் இறங்கியது.. வீடு வரை வந்த உணவு வகைகளை இந்தோனேசிய  வீதி வரை தேட ஆரம்பித்தேன். 

 

      
K. T. ACHAYA, THE INDIAN CHEMIST AND FOOD HISTORIAN

                 Dr. Konganda Thammu Achaya-1923-2003

ராகேஷ் ரகுநாதன் என்றொரு உணவியல் வரலாற்று ஆசிரியர்  கன்னடத்தில் கி.பி.920 இல் சிவகோட்டி ஆச்சார்யா அவர்களால்  எழுதப் பெற்ற ஜைன மத நூலான  'வட்டா ஆராதனை' (VADDARADHANE) யில் குறிக்கப்பட்டிருக்கும் 'இடாலேஜ்' (IDDALAGE) மற்றும் சாளுக்கிய அரசர்  மூன்றாம் சோமேஸ்வரா அவர்களால் கி.பி.1130 இல் இயற்றப்பட்ட  சமஸ்கிருத நூலான ' மானஸ ஸோல்லஸா' (Manasollasa) என்ற நூலில் குறிப்பிட்டிருக்கும் 'இடாரிகா' (IDDARIKA) போன்ற உணவு வகைகள் இட்லி போன்றவையே அன்றி இன்றய இட்லியைப்  போல உளுந்தம் மாவுடன் சேர்த்து புளிக்க வைக்கப்பட்ட மாவில் செய்யப்பட்டவை அன்று.

 


இன்றைக்கு வேண்டுமானால் (ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்) இந்தோனேசியா என்று ஒரு நாடாக இந்தப் பகுதி இருக்கலாம்.  ஆனால் அன்றைக்கு இவையும் 'இந்து' நாடுகளே.  அதிலும் பல்லவர் பூமியான காஞ்சி இந்து மற்றும் பௌத்த சமயம் கீழ்த்திசை நாடுகளில் பரவி விரவிக் கிடந்த கால கட்டத்தில் மிக முக்கியமான நகரமாகத் திகழ்ந்த வரலாறையும் மனதில் கொள்ள வேண்டி இருக்கிறது.  ஒரு 400 வருடப் பாரம்பரியம் கொண்ட 'காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் இட்லி' என்ற வகை 'குடலை இட்லி' என்று அழைக்கப்பட்டு இருக்கிறது.   குறைந்த பட்சம் ஒவ்வொரு இட்லியும் 3 கிலோ எடைக்கு குறையாமல் இருக்குமாம். இந்த வகை இட்லிகள் மூங்கில் கூடையில் வைத்து அவிக்கப்படும்.

 

                  காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் இட்லி

ஆக ஆச்சார்யாவின் கூற்றுப்படி, 9 முதல் 13 ஆம் நூற்றாண்டு வரை இந்தோனேசியாவில் சாவகம் (ஜாவா) மற்றும் சுவர்ணதீவு (சுமத்ரா) பகுதிகளை ஆட்சி செய்து வந்த 'சைலேந்திர' , 'ஈஸ்யான', சஞ்ஜெய மற்றும்   'ஸ்ரீ விஜய' அரசர்கள் அடிக்கடி பாரதம் நோக்கி பயணத்தில் இருந்தனர்.  அங்கிருந்து அவர்களுடன் வந்திருந்த சமையற் கலைஞர்கள் மூலமாக கெட்லி  என்னும் உணவு நமது தேசத்தில் காலூன்றி கொஞ்சம் கொஞ்சமாக உரு மாறி இன்றைய 'இட்லி ' ஆவி , மன்னிக்கவும் 'இட்லி ' ஆகி 'முருகன் இட்லிக் கடை' என்றெல்லாம்  வணிகத்தில் தன் பெயரைச் சேர்த்து கொண்டு இருக்க வேண்டும்.                                              

ஒரு வகையில் இந்தக்  கூற்று சரியே என்று படுகிறது.  புளிக்க வைத்த(FERMENTED) பொருட்களில்  இருந்து பதார்த்தங்கள் படைப்பது இந்தோனேசியாவில் இன்று வரை தொடர்கிறது.   சோயா அவரைப் பயற்றினை ஊற வைத்து புளிக்க வைத்து (fermentation) அந்தக்கலவையில் இருந்து 'தெம்பே' (TEMPE ) எனும் உணவு தயாரிக்கப்படுகிறது.  இதே கலவையை நன்றாக அரைத்து 'தாஹூ' (TAHU ) எனும் தோபூ தயாரிக்கப்படுகிறது.  இந்த இரண்டு உணவு வகைகளும்  இந்தோனேசியாவில் தினசரி உணவில் தவிர்க்க இயலாத இடம் பிடித்து இருக்கின்றன.   சோயா பயறு இங்கே 'கடலை' என்றே அழைக்கப்படுகிறது. 

 

                                               TEMPE -INDONESIAN SOYA CAKE

அதே போல கவுனி அரிசியைப் புளிக்க வைத்து அந்த புளித்த வாடையுடன் தயார் ஆகும் தின் பண்டங்கள் ஏராளம் இங்கே.  வெள்ளைக் கவுனி அரிசி மற்றும் மரவள்ளிக் கிழங்கு  புளிக்க வைக்கப்பட்டு, வாழை இலையோ , கொய்யா இலையோ சுற்றப்பட்டு அதன் உள்ளே  (Yeast உருவாக்கப்பட்டு) தாபே (TAPAI) என்று ஒரு பண்டம்.  'தா'ப்பா, 'தா'ப்பா என்று கேட்டுக் கேட்டு வாங்கி உண்ணுகிறார்கள்.  கள் வாடை அடிக்கிறது அதில்.

                                      TAPAI CASSAVA

எது எப்படியோ,  உணவின் மூலப்பொருட்களைப்  புளிக்க வைத்து அந்தக் கலவையில் இருந்து உருவாகும் உணவு வகைகளை உண்ணும் பழக்கம் ஜாவா மற்றும் அனைத்து இந்தோனேசியத் தீவுகளிலும் வழக்கமாய் இருக்கிறது. இது இட்லி செய்யும் முறைக்கு ஒத்து வருகிறது. ஆக, இந்தோனேசியாவின் 'கெட்லி' இங்கே 'இட்லி' ஆனது என்கிறது இட்லி மாகத்மியம்.

சரி இதில் கொஞ்சம் கவலை.. அதே போல நமது பகுதியில் இருந்தும் சில, பல உணவு வகைகள் இந்தோனேசியாவுக்குச் சென்றிருக்க வேண்டும் அல்லவா?  கொஞ்சம் காலரைத் தூக்கலாம் இல்லையா என்று உணவு வேட்டையில் இறங்கினோம்.  சிக்கின பல...

அடுத்த பகுதியில்  பார்க்கலாம்.. கொஞ்சம் பசி வரட்டும்..உங்களுக்கு... பசிக்காமல் எதுவும் ருசிக்காது ....

கருத்துகள்

  1. பதில்கள்
    1. மிக்க நன்றி நடப்புறவே. விரைவில் சந்திக்க வேண்டும் தங்களை..
      தமிழ் ஆர்வலர் என்பதையும் தாண்டி,

      நீக்கு
    2. நல்ல விளக்கம் மிக்க நன்றி

      நீக்கு
  2. முன்பு இந்தோனேசியாவும் தென் இந்தியாவும் ஒன்றாக இருந்த காலம் . ஆகவே இண்டினேசியாவிலிருந்து இட்லி தென் சென்னைக்கு வந்ததா என்று ஆராய்ச்சி செய்ய யத்தேவை இல்லை. தென் இந்தியாவிலே தமிழ்நாட்டில் செய்யும் இட்லியும் கன்னடத்திலும் ஆந்திராவிலும் இட்லி ருசி வித்தியாச படுகிறது. சென்னை இட்லியும் மதுரை, திருநெல்வேலி போன்ற இடத்தில் செய்யும் இட்லியும் சுவையில் வித்தியாசப்படுகிறது . நம் வயிற்றுக்கும் பசிக்கும் ஏற்ற வாறுஇருந்தால் சரி. நான் இந்தோனேசியாவில் 20 வருடம் வாழ்தேன் ஆனால் இன்று வரை நூடுல்ஸ் எனக்கு ஒத்து வரவில்லை. என் மனைவி, மகள்கள் மற்றும் பேரப்பிள்ளைகள் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  3. அடடா...
    இட்லி ஆராய்ச்சி அருமை அண்ணா...

    நம் ராஜராஜ சோழன் ஆண்ட பகுதிதான் இவையெல்லாம் என படித்த நியாபகம்.ஆதலால் இங்கிருந்து கூட அங்கு சென்றிருக்கலாமேண்ணா.

    இருந்தாலும் தேடலில் தான் சுகமுண்டு.
    தேடல் தொடரட்டும்ணா....

    மனமார்ந்த வாழ்த்துக்கள்.
    ச.கா.செல்வலிங்கம்,செல்வகுமரன் நர்சரி.
    குன்றக்குடி

    பதிலளிநீக்கு
  4. சிறப்பான ஆராய்ச்சி. இட்லிக்கு எத்தனை பெரிய வரலாறு என்பது ஆச்சரியமாக இருக்கிறது. தொடர்ந்து மற்ற பலகாரங்கள் குறித்தும் எழுதுங்கள் அண்ணன்.

    பதிலளிநீக்கு
  5. வாழ்க. அருமை. தேடலில் இன்னும் பல இனிய பலகாரங்கள் கிடைக்கும். நாகேஷை நாகேசு என்று வடவெழுத்தைத் தவிர்த்து எழுத இயலும். வாழ்த்துகிறேன் ஐயா.

    பதிலளிநீக்கு
  6. வித்தியாசமான உணவு வகைகள்.
    எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அவர்களது
    உணவு வகைகளை கண்டறிந்து அவற்றை நம் நாட்டு உணவு வகைகளுடன் ஒப்பிட்டு பார்ப்பது நம் வழக்கம்.
    நல்ல சுவையாக இருந்தால் போதும்.
    இரசித்து நேசிப்போம்
    மிக அருமையான பதிவு வணக்கம்

    பதிலளிநீக்கு
  7. பலவகை உணவுகனை முக்கியமாக இட்டிலியில் இந்தோனேஷியா, இந்திய முக்கியமாக தமிழ்நாட்டு வரலாற்று இணைப்பை வெளிர்கொணர்ததற்க்கு மிக்க நன்றி. இருந்தாலும் இதில் தமிழர் அல்லாதவர்களின் சான்றுகளை மேற்கோள் காட்டியது போல் தமிழ் அறிஞர்களின் சான்றுகளையும் எடுத்து ஆய்வு பயணத்தில் பயன்படுத்த வேண்டுகிறேன் ஐயா. நன்றி உங்கள் பயணத்தில் நான் உடன் பயணியாக. மரு.கண்ணன், ஜெர்மனி.

    பதிலளிநீக்கு
  8. இட்லியில் இவ்வளவு வரலாறு உள்ளது என்பது நமக்கு தெரியாது. மிகச் சிறப்பான ஆராய்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள்

    பதிலளிநீக்கு
  9. அருமையான குறிப்புகள் . மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  10. Wow. Thank you for this reminder, mama. we still prepare idli, thosai, vadai and other traditional foods. the ingredients may vary depeding on the availableness. but, they are not served on daily basis because of work load.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60