தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)- 4.குழாய் புட்டு, நம்ம இடியாப்பம்- இந்தோனேசியாவில்
தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)- 4.அட... நம்ம 'பல'காரங்கள்-
இந்தோனேசியாவில்
விட்டேனா பார்... விட்டதைப் பிடிக்கிறேன் பார் என்று மூணு சீட்டு ரேஞ்சில், இட்லியில் விட்டதை ( எம் குலப் பெருமையை ) ஏதில் பிடிப்பது என்றும் மாவைப் பிசைந்து மன்னிக்கவும் கையைப் பிசைந்து கொண்டிருந்த என் காதில், தெருவில் 'உஊஊ' என்ற விசில் சத்தத்துடன் புட்டு விற்பவர் என் வீட்டு வாசலைக் கடந்து கொண்டு இருந்தார். ஆஹா.. இந்த புட்டு எங்கள் மண்ணின் மறுதலிக்க இயலாத அசல் உணவுக்கும் என்று மனம் நிம்மதி அடைந்தது.
குழாய் புட்டு
நரியைப் பரியாக்கி நாடகம் ஆடிய எங்கள் மதுரைச் சொக்கன், திருவாதவூரர் பாண்டிய மன்னனால் தண்டிக்கப்பட்டு அந்தத் தண்டனை அவரை வைகை நதியின் வறண்ட மணற் பரப்பில்( எப்போதாவது தானே வகையில் வெள்ளம் வரும்) கடும் வெயிலின் சுடும்படி கிடத்துமாறு ஆணை இட்டான். ஆடல் வல்லான் அமைதியாய் இருப்பாரா? வைகை ஆற்றில் வெள்ளத்தைப் பெருக்கி விட்டார். கரை உடைத்து வெள்ளம் நகருக்குள் புகாமல் இருக்க (நூறு நாள் வேலைத் திட்டம் இல்லாத அந்நாளில்) வீட்டுக்கு ஒருவர் வைகைக் கரையை அடைக்கும் பணியில் இடம் பெற வேண்டும் என்று வந்தது அரச கட்டளை.
கண்காணிப்பில் இருந்த காவலர் அரசனிடம் 'போட்டுக் கொடுத்தனர்'. வெள்ளத்தின் மீது ஏதும் செய்ய இயலாத கொற்றவனின் கோபம் கூலியாய் நின்ற கூடல் தலைவன் மேல் பாய்ந்தது. எடுத்தான் பிரம்பை, வைத்தான் அடியாய் பரமனின் முதுகில்... பிட்டுக்கு மண் சுமந்து உறங்குவது உலகைக் காக்கும் பரம்பொருள் அல்லவா! எல்லா உயிர்களின் மீது அதே பிரம்படி சுளீர் என பட்டது. ஈசனின் திருவிளையாடல் இது வென்று அறிந்து பதறிக் கதறி திருவாதவூரரையும், வந்தியம்மையையும் போலத் தன்னையும் ஆட் கொள்ள வேண்டும் என சொக்கனிடம் இறைஞ்சினான்.
பரிதியு மதியும் பாம்புமைங் கோளும் பன்னிறம் படைத்த நாண்மீனும்
இருநிலம் புனல்கால் எரிகடுங் கனல்வா னென்னும் ஐம்பூதமும் காரும்
சுருதியும் ஆறுசமய வாணவருஞ் சுரர்களும் முனிவருந் தொண்டின்
மருவிய முனிவர் கணங்களும் பட்ட மதுரைநாயகனடித் தழும்பு
இங்கே குழாய் புட்டு மிகப் பிரபலம். மூங்கில் குழாய்கள் புட்டு அவிக்கப்பயன் படுகின்றன. நமது பகுதியில் தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் இலங்கை புட்டுக்கு பெயர் பெற்றவை. மலேஷியா, சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவில் ஜாவா, பாலி மற்றும் சுமத்ராவில் புட்டு மிகப் பிரபலம். வெல்லத்துடன், தேங்காய் சேர்த்து ஆவி பறக்க புட்டு இங்கே கிடைக்கிறது. அதில் ஒருவர் ஜாவா மொழியில் 'புத்து' என்றால் வட்ட வடிவைக்குறிக்கும். மூங்கிலின் வட்ட வடிவ குழாய்க்குள் இது வைக்கப்படுவதால் இதன் பெயர் புட்டு என்றார் . அந்தக்கதை எல்லாம் எங்களிடம் விடாதீர்கள். 'பிட்டு' ப் 'பிட்டு'த் தின்பதால் தான் அதன் பெயர் பிட்டு. பிட்டு என்பது பேச்சு வழக்கில் புட்டு என்று சொல்லப்படுகிறது. உண்மையை விளக்கிச் சொல்பவர்களை 'புட்டு' ப் 'புட்டு' வைக்கிறான் பார் என்று இதனால் தான் சொல்கிறோம் என்று சொல்லி, நம்ம மதுரை திருவிளையாடல் கதையையும் சொல்லி முடித்ததோம். அத்துடன் இங்கு திருவிழாவாக எங்கள் மதுரையில் வைகைக் கரை புட்டுத்தோப்பு என்ற இடத்தில் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது என்று விபரம் எல்லாம் சொல்லி புட்டு எங்கள் தமிழகத்தைச் சேர்ந்தது என்று உறுதியாக அவர்களிடம் சொன்னேன்.
புட்டு என்ற பெயரில் நிறைய பரிணாம வளர்ச்சி மாறுபாடுகளுடன் கூடிய பண்டங்கள் இங்கு இந்தோனேசியாவில் இருக்கின்றன. ஆனால் அடிப்படை அரிசி மாவு, தேங்காய், வெல்லம் இவை ஆவியில் வேக வைக்கப்படுவது தான்.
அடுத்து 'புட்டு மயாங்' என்று ஒரு பதார்த்தம் . எதார்த்தமாக இது என்ன பதார்த்தம் என்று பார்த்தால், அட நம்ம இடியாப்பம், கொஞ்சம் வண்ணமும் கொடுக்கப்பட்டு ஈஸ்ட் மென் கலரில் தேங்காய்ப் பாலில் மிதக்கிறது. அப்பு... இதுவும் எங்க ஊரில் இருந்துதான் இறக்குமதி ஆகி இருக்கு என்கிறோம் கொஞ்சம் மார்பை நிமிர்த்தி .. (‘மயாங்’ என்பது தேங்காயையும் குறிக்கும் இந்தோனேசியா மொழியில்..)
சீயம் -
ஒண்டே ஒண்டே
நம்ம ஊரில் 'சுவீயம்' அல்லது 'சீயம்' என்று ஒரு தின்பண்டம். எங்கள் தென் தமிழ் நாட்டுப்பகுதி தேநீர் கடைகளில் கிடைக்கும், சூடாக.. தீபாவளிக்கு கண்டிப்பாக வீடுகளில் உள்ள 'எண்ணெய்ப் பலகாரத்தில்' ஒன்றாக அணி வகுக்கும். வெல்லத்தைப் பூர்ணமாகக் கொண்டு செய்யப்படும் ஒரு இனிப்புப் பண்டம். இதே சீயம் இங்கே 'ஒண்டே -ஒண்டே' என்ற பெயரில் தன் உடம்பு முழுவதும் ‘எள்ளை’ப் பூசிக்கொண்டு சிரிக்கிறது. ஒரு வேளை உருண்டை உருண்டை என்பதுதான் மருவி ஒண்டே ஒண்டே ஆகி விட்டதோ என்னவோ!
நம்ம ஊர் ஆப்பம் பெயரே மாறாமல் அப்படியே 'ஆப்பம்' தான் இங்கேயும்.
இந்தோனேசிய 'ஆப்பம்'கொழுக்கட்டை/ KOLAK
தேங்காய்ப் பாலும், பனை/ நாட்டு சர்க்கரையும் கலந்து தமிழகத்தில் பால் கொழுக்கட்டை செய்யும் அதே பக்குவத்தில், சிறிது வாழைப்பழத்தை சேர்த்து கொலக் என்ற பெயரில் உபவாச (புவாசா) காலத்தில் அதிகமாக உண்ணப்படுகிறது. நம்ம ஊர் பால் கொழுக்கட்டை தான் இங்கே 'கொலாக்' ஆகி இருக்கிறது. 'உபவாசம்' (உண்ணா நோன்பு) என்ற சமக்கிருத வார்த்தை இந்தோனேசியா மொழியில் '(உ)புவாசா' (PUASA) ஆகி இருக்கிறது.
KOLAK-Indonesia
"பழம் பொரி" என்ற வாழைப் பழமும் மைதா மாவும் கலந்து தேங்காய் எண்ணெய்யில் பொரிக்கப்படும் சிற்றுண்டி வகை இன்றும் கேரளாவில் மிகப்பிரபலம். மாலையில் தே நீருடன் இது சூடான பக்குவத்தில் உண்ணப்படுகிறது. இதே பதார்த்தம் தான் இங்கு இந்தோனேசியாவில் பிசாங் கோரெங்க் (PISANG GORENG) என்று கிடைக்கிறது. கேரளாவின் ஒரு பகுதிக்குப் பெயர் மலபார் என்று பெயர். இந்தோனேசியாவில் மேற்கு ஜாவாவின் பாண்டுங்க் மாவட்டத்தில் உள்ள மலைப்பிரதேசமாகிய பாங்கலெங்கான் (Pangalengan) பகுதியும் மலபார் என்றே அழைக்கப்படுகிறது. என்ன ஒரு ஒற்றுமை!
PISANG GORENG- INDONESIA
தொதல்/ DODOL
இலங்கைத் தமிழர்களிடம் மிகப் பிரசித்தி பெற்ற தொதல், தேங்காய்ப்பால், வெல்லம், அரிசி மாவு சேர்த்து செய்யப்படுவதாகும். இந்தியாவில் கோவா பகுதிகளிலும், கடற்கரையோர ஊர்களிலும் இது செய்யப்படுகின்றது. இந்தோனேசியாவில் மிகவும் சாதாரணமாகக் கிடைக்கும் இனிப்பு வகையாகும்.
DODOL-INDONESIADODOL-SRI LANKA
சாப்பாடு வகைகள் இதற்கு மேல் நிறைய இருக்கின்றன. குறிப்பாக மேற்கு சுமத்திராவின் 'அட்சய முனை' (ACEH) மற்றும் பாடாங் (PADANG ) உணவு வகைகள் நல்ல கார சாரமாக நம்ம ஊர் குழம்பு போலவே ருசிக்கின்றன. அட்சய முனை தான் நமது தமிழ் கடலோடிகளும், மன்னர்களும் வந்து இறங்கிய சுமத்ராவின் (சொர்ணத்தீவு ) கடற்கரை.
எல்லாம் தேங்காயும், வெல்லமும் அதிகமாக இருக்கிறது. எனவே இத்துடன் சாப்பாட்டு வேலையைக் கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு கலாச்சாரத் தொடர்புகளைப் பார்ப்போமே.
ரகமாக இருக்கிறது இந்தப் பதிவு. நம் செட்டிநாட்டில் வாழ்ந்ததால் உணவை ரசிக்கும் நிலையுடன் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
பதிலளிநீக்குஇந்தப் பதிவு, கவிஞர் முத்துமணியின் எழுத்துக்களில் மற்றொருமொரு முத்திரைப் பதிவு. சுவையும் கதையும் மிகச் சரியான விகிதத்தில் கலந்த ரசவாதம்.
பதிலளிநீக்கு