எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது-தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)- 5.பொங்கலோ பொங்கல்..... தேவி ஸ்ரீ தேவி...
பொங்கலோ பொங்கல்..... தேவி ஸ்ரீ தேவி...
உங்கள் ஆதரவுடன் இந்தோனேசியா பற்றி இந்த 35 வருட இந்தோனேசியா வாழ்க்கையில் கண்டதை, கேட்டதை வாசித்து அறிந்ததை, நமது பாரத மணித்திரு நாட்டுடன் தொடர்பு இருக்கும் விவரங்களை பகிரலாம் என்று நினைக்கிறேன். நிறைய இருக்கிறது. இதில், எதை விடுவது, எதைத் தொடுவது என்று தெரியவில்லை. பாரத தேசத்திற்கும் இந்தோனேசியத் தீவுகளுக்கும் உள்ள தொடர்புகளை நான் அறிந்த வரையில் குறிப்புகளாக வரைந்து வைக்கலாம்.
இந்து மதத்தில் ஊறித்திளைத்த நாடுகள் பாரதம் மட்டும் அல்ல. தென்கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்துமே மகா பாரதம், இராமாயணம் ஆகிய இதிகாசங்கள் அவரவர் கலாச்சாரத்துக்கு ஏற்ற சிறிய மாறுதல்களுடன் என்றும் சாகா வரம் பெற்று வாழ்ந்து வருகின்றன. இராமாயண, மாபாராதக் காட்சிகளின் பிரதிகளாக வடிக்கப்பட்ட சிற்பங்களும் சித்திரங்களும் ஏராளம். இவற்றை மட்டும் எழுதினால் தமிழ் நெஞ்சங்கள் நாசியில் வடக்கு வாசனை (நெடி) நிறைய உங்கள் உரையில் இருக்கின்றதே, ஏன் தமிழர் வாழ்வும், கலாச்சாரமும் தென்கிழக்கு நாடுகளில் இல்லையா? அது பற்றி உங்கள் குறிப்புகளில் ஏன் குறிக்கவில்லை என்ற மண் வாசனைக் கேள்விகள்??.. உண்மையில் சமக்கிருத வாடை அதிகம் அடித்தாலும் தென்றமிழ்த் தென்றலும் இந்த மொழியில், கலையில் கலந்து தவழ்கிறது. எது எப்படியோ இருப்பதை நான் கண்டதை, கேட்டதை, உணர்ந்ததை அப்படியே மனதில் இருந்து வடித்து வருகிறேன்.
ஜாவா (JAVA),
சுண்டா (SUNDA), பாலி
(BALI), லொம்பொக் (LOMBOK) ஆகிய சாவகம் மற்றும் சாவகம் சார்ந்த பகுதிகளில் வணங்கி வரப்படும் பெண் தெய்வம், ஸ்ரீ தேவி ஆகும். அன்பர்கள் அனைவரும் மறந்து விடாதீர்கள், 'உலகத்திலேயே அதிக இசுலாமிய மக்கள் தொகையைக் கொண்ட நாடு, இந்தோனேசியா' என்று. மேலும் 1.5%
க்கும் கீழே பாலி போன்ற பகுதியில் மட்டுமே பழமையான இந்து மதம் வாழ்கிறது இங்கே. ஜாவா மொழியில், 'தேவி ஸ்ரீ' அல்லது 'ஸ்ரீ தேவி' எனவும், மேற்கு சாவகத்தீவின் 'சுண்டா' (Sunda) மொழியில், 'நியாய் போஷி சங்யாங் அஸ்ரி' (Niyai Pohaci Sanghyang Asri) என்றும் அழைக்கப்படும் 'தானிய தேவதை' மற்றும் 'வள தேவதை' நமது பாரத நாட்டில் வழங்கி வரும் 'சீதேவி' யான இலக்குமி தேவி தான்.
ஆசியாவின் மானுட சரித்திரத்தில் நெல் சாகுபடி செய்யும் முறைதனைப் பயின்று, மற்றவருக்கும் பரப்பி ஒழுங்கு செய்து நடைமுறைப்படுத்திய நாளில் இருந்தே தானிய/ அரிசி தேவதையை வழிபடும் வழக்கம் ஆஸ்ட்ரோசியாட்டிக் அல்லது ஆஸ்ட்ரோனேசிய மக்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம் என்பது மானுடவியல்
அறிஞர் பெருமக்களின் முடிவு. இதே போன்ற தானிய/
அரிசி தேவதைகளின் புராணங்கள் இந்தோனேசியத் தீவுகளில் மட்டும் அன்றி அண்டை நாடுகளான
தாய்லாந்து, கம்பூச்சியா போன்ற நாடுகளிலும் உலவுகின்றன. செல்வம், செழிப்பு, ஆரோக்கியம், அழகு, நல்ல அதிர்ஷ்டம்
இத்துடன் இலக்குமி தேவி இவற்றைக் குறிக்கும்
ஸ்ரீ என்ற பதமே, சமக்கிருதத்தில் இருந்து பெறப்பட்டதாகும்.
ஸ்ரீ தேவி எனும் வடிவமும் அத்துடன் தொடர்பு
கொண்ட சக்தி,விஷ்ணு வடிவங்களும் இந்தியாவின் இந்து மதத்தைச் சார்ந்தவை தான். ஆன போதிலும் இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தின் நெல்மணித்
தெய்வ வழிபாடு இந்தியத் தொடர்புகள் இங்கு ஏற்படுவதற்கும் முன்பே நடை முறையில் இருந்தன.
இந்தோனேசியத் தொல்லியற் துறையின்
ஆய்வின் படி, இங்கு காணப்படும் தேவி ஸ்ரீ வழிபாடு, இந்தியாவில் இருந்து இந்து
புத்த மதக் கோட்பாடுகள் வந்து சேர்வதற்குப் பல்லாண்டு காலம் முன்னரே நடைமுறையில் இருந்து
இருக்கிறது. இங்கு தொல்லியற் துறை கண்டு எடுத்த
கருங்கல் மற்றும் வெண்கலச் சிலைகளை ஆராய்ந்து
பாரத தேசத்தின் இலக்குமி உருவங்கள், முத்திரைகள் இவற்றின் பண்புகளை ஒப்பு நோக்குகையில் சில வேறுபாடுகளைக் காண இயலுகிறது. இந்திய தேசத்தின் இலக்குமி தேவி சிலைகள் கையில் செந்தாமரை மலரை ஏந்தி இருக்கின்றன. இந்த செந்தாமரை இங்கே இல்லை. அதற்கு மாறாக தேவதையின் கரங்களில் நெற்கதிர் ஏந்தப்பட்டு இருக்கிறது.
இதன் மூலமே இந்து பௌத்த மதம் இந்தோனேசியாவில் பரவும் முன்னரே நெல்லின் தேவதையாக,
நேர்த்தியான வல்லமையின் தேவதையாக இங்கே தேவி ஸ்ரீ என்னும் தெய்வ வழிபாடு நடந்து இருந்திருக்கிறது
என்று உறுதி செய்யப்படுகிறது.
1952 இல் வெளியிடப்பட்ட ஸ்ரீ தேவி படத்துடன் கூடிய இந்தோனேசிய ரூபியா நோட்டு
ஜாவா வின் பண்டைய சிற்பிகள் 'தேவி ஸ்ரீ'
யை விஷணுவின் மனைவியாகப் பாவிக்கவில்லை. அவர்கள் தேவி ஸ்ரீ என்று குறிப்பிட்டு வணங்கி
வருவது வயல்வெளிகளில் செழிப்பின் விளிம்பில் சிரிக்கும் நெல்மணிகளின் தேவதையை.
இதற்கிடையில் நம்ம பாரதபூமியில் நிலவும்
புராண கதைகள் போலவே இங்கே ஒவ்வொரு பகுதிக்கும், ஜாவா, சுண்டா, பாலி என்று ஒவ்வொரு புராணங்கள்
தலையைச் சுற்றும் அளவுக்கு கதைகள் வைத்து இருக்கின்றன. விஷ்ணு வருகிறார், ஸ்ரீதேவி வருகிறாள், பூதேவி வருகிறாள்,
அகத்திய முனிவர் வருகிறார், நாரதர் வருகிறார், காலன் வருகிறார்... வழக்கம் போல் பெண் மோகம், போர், மறு பிறப்பு என்று பல கதைகள்... அதை எல்லாம் சொல்ல ஆரம்பித்தால்
, உங்களை விட எனக்கு தலைச்சுற்றலும் மயக்கமும் வந்து விடும் என்று சும்மா தொட்டு வைக்கிறேன்.
ஒரு நாட்டின், இனத்தின் பண்புகளை அறிய
கீழ்கண்டவற்றை படிக்கட்டுகளாகக் கொள்ளலாம்.
சமயம்
மொழி
பண்பாடு
கலாச்சாரம்
சடங்குகள்
பழக்க வழக்கங்கள்
இவை ஒன்றில்லாமல் மற்றொன்று இல்லை...
அதே சமயம் ஒன்றோடு ஓன்று முடிச்சிடப்பட்டு உள்ளது. எனவே அங்கங்கே தொடுத்த தொட்டு வைக்கிறேன். பின்னர்
சில பல பகுதிகளில் பயணம் செய்த பின்னர் தெளிவாக விளங்கும். இப்பொழுதே எல்லாவற்றையும்
அவிழ்த்து விட்டால் குழப்பம் தான் மிஞ்சும்.
இப்போது மீண்டும் தேவி ஸ்ரீ யைத் தொடர்வோம்.. நமது நெல்விளையும் வயல் வெளிகளின் நடந்து கொண்டு...
ஜாவாவில் தேவி ஸ்ரீ நல்ல அழகான வாளிப்பான பூர்விக இந்தோனேசிய அழகுடன் கூடிய பெண்ணாக சித்தரிக்கப் படுகிறாள். அதிலும் அழகின் உச்சத்தைத் தொடும் பெதும்பை, மங்கை, மடந்தை எனும் வளர்ச்சியில் மங்கை எனும் நிலைக்கும் மடந்தை எனும் நிலைக்கும் இடைப்பட்ட பெண்ணாக சித்தரிக்கப்படுகிறாள். அமைதியான, வெண்மை நிறப் பொலிவுடன், குனிந்த தலையுடன் நிற்கும் இந்த உருவம் தான் இங்கு விளங்கும் இராமாயணத்துச் சீதையின் உருவமாகவும் சித்தரிக்கப்படுகிறது.
சடங்குகள் :
இன்றைக்கு பெரும்பான்மை இங்கே இசுலாமிய மக்கள் என்ற போதிலும் அடிப்படையில் பழைய புராதன சமயம் சார்ந்த சடங்குகள் ஆன்மிக நுண்ணுணர்வோடு செய்யப்படுகின்றன. தேவி ஸ்ரீ யை போற்றி வணங்கும் அதே சடங்குகள் இன்றும் பௌத்த, கிறித்துவ, இசுலாமிய சமயத் தழுவல்களுக்குப் பின்னும் கடைப்பிடிக்கப்படுகின்றன. இந்தோனேசியாவில் பரம்பரை மன்னர் அரண்மனைகளாக விளங்கும் 'சிறிபோன்' (Cirebon) ,'உபுட்' (Ubud) , 'சுரகர்த்தா' (Surakarta) மற்றும் 'யோக்யகர்த்தா' (Yogyakarta) இந்தப் பாரம்பரியத்தை இன்றும் வளர்த்து வருகின்றன.
'பாஸ்ரென்' (PASREAN)
'பாஸ்ரென்' (PASREAN) : பண்டைய சாவக மக்களின் வீடுகளின் மத்தியில் 'பாஸ்ரென்' என்று ஒரு பகுதி இடம்.. புனிதமாக சுத்தமாக ஸ்ரீ தேவி வாசம் செய்கின்ற இடமாகப் பாவிக்கப்பட்டு அந்த இடத்தில் ஆண் , பெண் இணையாக அமர்ந்து இருக்கும் பொம்மை/ சிலை வைக்கப்பட்டு இருக்கும். நெல் மணிகள் வயலில் இருந்து வந்ததும் வைக்கப்படும் இடம் இது தான். அதே போல, விதைப்பு எனபதும் பல சடங்குகளுடன் சேர்ந்தே நடத்தப்படுகிறது.
இப்போது நமது மேழி வாழ் உழவரின் வாழ்வு முறையை ஒப்பிட்டுப்பாருங்கள். தை பிறந்ததும் கதிர் அறுத்துக் களத்தில் போரடித்து கதிர்களை உதிர்த்து, காற்றில் விசிறி மனைக்கு நெல் மக்களைக் கொண்டு வரும் நேரம் 'வந்தாள் மகாலெட்சுமியே... இனி என்றும் அவள் ஆட்சியே’ என்று பாடி, வாழ்வளித்த வயலுக்கு நன்றி சொல்லும் தைப் பொங்கல் திருநாள் நிகழ்வுகள் உங்கள் நினைவில் நிழல் ஆடுகின்றனவா ?
நம்ம பொங்கல் தான் இங்கே தேவி ஸ்ரீ வழிபாடாக விளங்குகிறது.
அடுத்து வரும் கலாச்சாரப் பண்பாட்டு நிகழ்வுகளையும் காண்போம்
Well said, mama. it seems when it comes to India, people talk about the northern life. But it is the south that explores the world haywire and leaves cultures to be adapted by the locals who maintain them till date. Thank you for the history lesson, mama.
பதிலளிநீக்குA great, appreciative attempt from a firsthand knowledge.
பதிலளிநீக்குWith your supports, let me try to depict the Indonesian Culture and allied facts which I have been experiencing for the past 35 plus years
நீக்கு