எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது- தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)-7.கல்யாணமாம் கல்யாணம்


கல்யாணமாம் கல்யாணம்

 

குடும்பத்திலோ, நட்பு வட்டாரத்துடனோ, கல்லூரி வகுப்புத் தோழர்களுடனோ, ஒரு குழுவாக நிழற்படம்  (GROUP PHOTO ) எடுத்து அது உங்கள் பார்வைக்கு வந்தால்... முதலில் உங்கள் கண்கள் தேடும் உருவம் யாராக இருக்கும்.   சத்தியமாக உங்கள் மனமும் கண்களும் அத்தனை பேர் மத்தியிலும் உங்கள் உருவத்தைத் தான் தேடும்அதுபோலத் தான் இந்தத் தொடரிலும் எங்கே எதனைப் பார்த்தாலும், உடனே மனம் நினைப்பது எனது தாய் மண் தமிழகத்தைத் தான்.




பயணக் கட்டுரைகளின் முன்னோடிகள் பலர். உலகம் சுற்றிய தமிழன், இதயம் பேசிய மணியன் என்று இமயமாய் நிற்பவர் முன் எவரும் சிற்றெறும்பே!!.  இங்கேயே ஆண்டுகள்  கணக்கில் தங்கி விட்டதால், அவ்வப்போது மனதில் பதிந்த காட்சிகளை, எண்ணத்தில் ஓடி உறங்கிய நினைவுகளை என் திரு நாட்டு நினைவுகளோடு மீள் பார்வையாகப் பார்க்கிறேன்.. உங்கள் அன்பும் அரவணைப்பும் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.

வரலாற்றில்  ஆர்வம்இங்கிருந்த பழங்கால அரசுகளைப் படித்து இருக்கிறேன். அவர்கள் ஆண்ட, வாழ்ந்த சில பகுதிகளில் கால் பாவி இருக்கிறேன்எச்சமாக அவர்கள் விட்டுச் சென்ற கலைகளை,  கட்டிடங்களைக் கண்டு மனதில் அவற்றின் வேர் அல்லது நீட்சி எந்தைத் திருநாட்டில் எங்கே எப்படி என்று சில நூல்களைத் தேடி இருக்கிறேன்.. அந்தப் பகுதி மக்களோடு கலந்து உரையாடி இருக்கிறேன்

பார்த்த இடத்தில் எல்லாம்

உனைப் போல்

பாவை தெரியுதடி ....

என்ற கதை தான்..

திருமண வைபவங்களை இங்கே சாவகத்தில் காணும் பொழுது பாரம்பரியம் மிக்க நமது தமிழக திருமணச் சடங்குகள்  மனதில் நிழலாடுகின்றன.  உலகின் மிகப்பெரிய இசுலாமிய மக்கள் தொகை கொண்ட நாடாக இந்தோனேசியா இருக்கின்ற போதும், அவர்களின் பழைய பாரம்பரியத்தை விட்டு விடாமல் தொடர்கிறார்கள்.  கொஞ்சம் கொஞ்சமாக சில, பல சடங்குகள் சம்பிரதாயங்கள் விடுபட ஆரம்பித்து விட்ட போதிலும் மொத்தமாக தொலைத்து விடவில்லை.  கிராமப் பகுதிகளில் இன்னும் அப்படியே பாரம்பரியம் தொடர்கிறது.  பரந்து கிடக்கும் இந்தோனேசியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு கலாச்சாரம் இருந்த போதிலும், இந்து பௌத்த மதங்களே 13 ஆம் நூற்றாண்டு வரை மக்களிடையே இருந்து இருக்கிறது. இத்தனை நூற்றாண்டுகள் கடந்து விட்ட போதிலும் பல சடங்குகளின் சாயல் நமது தேசத்தையே நினைவு படுத்துகிறது.  அதிலும் குறிப்பாக சாவகம் முழுவதுமே.

இன்றைக்கு ஒரு சாவகத் திருமண நிகழ்வுக்குச் செல்வோம்.  மண விழா சடங்குகள் நமது கலாச்சாரத்தோடு எப்படி ஒத்துப் போகிறது என்று  நீங்களே கண்டு கொள்வீர்.

பண்டைய தமிழகத்தின் பாரமபரியம் போலவே, களவு மணம்  என்னும் காதல் மணம்  தான் இங்கே இந்தோனேசியாவில் .  பெற்றோர் வரன் பார்த்து பேசி முடிக்கும் கதை எல்லாம் இங்கே கிடையாது.  அதிலும் சாதி என்ற தீ இங்கே பரவாததால், நமது நாட்டில் நடக்கும் இன்றைய அவலங்களுக்கு இங்கே வேலை இல்லை.  மணமக்கள் ஒருவரை ஒருவர் கண்டு, காதலாகி கசிந்து உருகி, பெற்றோரிடம் சொல்கிறார்கள்.  பின்னர் இரு வீட்டாரும் இணைந்து திருமணத்தை நடத்தி விடுகிறார்கள்.  திருமணம் நிகழ்வதற்குள் ஒத்து வராமல் கழற்றி விடப்படுவதும் சாதாரணம். 

மாப்பிள்ளை

நம்ம ஊரில் மணமகனை , 'மாப்பிள்ளை' என்றும்  மண மகளை 'மணப்பெண்' என்றும் அழைக்கிறோமா .  ஜாவனீயர், மணமக்களை  (இருவரையும் ) ஒரே பெயரில் அழைக்கிறார்கள்.  எப்படி?  'மெம்பெளை' என்று. 'மெம்பெளை' சோவோ என்றால் மணமகன், 'மெம்பெளை' செவெ' என்றால் மணப்பெண். (மாப்பிள்ளை = மெம்பள)

1.தாரூப் கட்டுதல் ( PASANG THARUB )/ தென்னை, வாழை, கமுகு




தாரூப் என்பது மணவிழா நிகழ்வின்  முதல் நிரல் ஆகும்.  நம்ம ஊரில் பந்தக்கால் நாட்டி , வாழை , கமுகு மற்றும் குருத்தோலை தோரணம் கட்டி திருமண இல்லங்களை பொலிவு படுத்தும் சடங்கு ஆகும். திருமண வீட்டின் வாயிலின் இருபுறமும் மஞ்சள் நிறத்துக்  குருத்தோலையை அழகிய தோரணமாக கட்டி விழா நிகழ் விடத்தை ஒரு உருவமாக தயார் செய்கிறார்கள்.  'தரூபம்' என்ற வார்த்தைக்கு 'உருவம்' என்று பொருள் கொள்ளலாம். மொத்தத்தில் 'மணப் பந்தல்' அமைப்பதே சாவகத் திருமண விழாக்களின் முதல் நிகழ்வு.

 


தமிழகத்தில் இருப்பதைப்  போல இந்த தோரண வாயில் அலங்காரத்துக்கு ஏதேனும் பூர்வாங்க பொருள் பொதிந்து இருக்கிறதா என்று அறிந்து கொள்ள கொஞ்சம் ஆய்வில் இறங்கினேன். 



Kejawen book Journal of Culture (2006) by Mulyana

என்ற புத்தகம் சாவகத்தின் கலாச்சாரத்தை பதிவு செய்து இருந்தது.  அட நம்ம தமிழகத்து கலாச்சாரம் அப்படியே பிரதி எடுத்த மாதிரி... பாருங்களேன்,  சாவகத்தின் கலாச்சாரத்தை:

மணவீட்டின் பந்தலில் கட்டப்படும் பொருட்களும் அதன் காரணங்களும்/ உட் பொதிந்த பொருளும் :

ஆல் இலைமணமக்கள் ஆல் போல நிலைத்து நீண்ட காலம் வாழவும், தங்கள் சந்ததியினருக்கு நிழலாய் நிற்கவும்.  'ஆல் போல் தழைத்து' என்ற வாக்கியம் நினைவில் வந்து போகிறதா?

கரும்பு : திருமணம் கொள்ளும் இரு மனமும், அடுத்து வரும் சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக விளங்கவும், வாழ்க்கை கரும்பாக இனிக்கவும்.

வாழை :  மண நாளில் மண மக்கள் அரச குடும்பத்தினரைப் போல மகிழ்வாகவும், மகிமையுடனும் வாழும் குடும்பத்தை வாழை அடி வாழையாக உருவாக்கி மகிழ

ஈரப்பலா (BREADFRUIT) : பரந்த பெருமை மற்றும், நுண்ணறிவை மணமக்கள் பெற வேண்டும் என்று குறிக்கவே ஈரப்பலா இலைகள்.

நாணல் புல் : தடைகளை வளைந்து களையும் தரத்தை வளர்ப்பதற்காக

செவ்விளநீர் (படத்துடன் ):  செங்கீர் (Cengkir)

இரண்டு செவ்விளநீர்கள் 'ரதி-மன்மதன் ' படங்கள் வரையப்பட்டு அவையும் பந்தலில் கட்டப்படுகின்றன.  சம்சார சாகரத்தை இருவரும் சேர்ந்து ஒன்றாகக்  கடக்க வேண்டும் என்று குறிக்கவே இது.

 


குருத்தோலை (தோரணம்):இளம் குருத்தாய் இல்லற வாழ்வில் இணையும் மண மக்கள் மேல் நோக்கி வளர்ந்து இறை அருள் பெற வேண்டும் என்பதைகே குறிக்கவே தென்னை ஓலை (குருத்து) காட்டப்படுகிறது.

2.செரா செரா (SERAH SERAHAN) (சீர் வரிசை):

முதலில் மணமகன் வீட்டார் சீர், செனத்தி யோடு மணமகள் வீட்டுக்கு பண்ட பாத்திரங்கள். உடைகள், ஆபரணங்கள் சகிதம் வருகிறார்கள்.  இந்தோனேசிய மொழியில் தமிழைப்  போலவே 'பன்மையை'குறிக்க ஒரே சொல் அடுக்குத் தொடராகப் பயன்பாட்டில் இருக்கிறது. வாழை 'சீப்பு சீப்பாய் ' காய்த்து இருக்கிறது.  அதே போல இங்கே 'செரா செரா' என்ற சொற் பழக்கம்.  'செரா' என்றால் 'கொடு' (திரும்பக் கேட்காமல்) என்று பொருள்.  நமது 'சீர்' என்ற வார்த்தை இங்கே 'செரா' வாகி இருக்கலாம்.  சீர் பல பொருட்களின் தொகுப்பாக இருப்பதால்  'செரா செரா' என்ற அடுக்குத்தொடர் ஆகி இருக்கலாம்.  

 


3.சிரமான் (SIRAMAN)- புனித நீராட்டு

திருமண நாளுக்கு முந்தைய இரண்டு நாட்களில் மணமக்கள் இருவருக்குமே புனித நீராட்டு நடக்கிறது. நீரில் பல் வகை மலர்களை போட்டு  அந்த நீரில்தான் இந்த முழுக்கு நடைபெறுகிறது. திருமணத்துக்கு முன் தனியராக இருந்தவர்கள் இணையர்களாக கூடப் போகிறார்கள் என்பதனை மனதளவிலும், உடல் அளவிலும் சுட்டும் பல குறியீடுகள் இந்த நிகழ்வில் காட்டப்படுகிறது. நீர் வார்க்க நம்ம ஊரில் வழக்கு ஒழிந்த  'கெண்டி' என்னும் மூக்கு நீண்ட கமண்டலப் பாத்திரமே உபயோகப்படுத்தப் படுகிறது.  இந்தோனேசிய மொழியிலும் 'கெண்டி' என்ற பெயர் தான். பெற்றோர்களும் பெரியவர்களும் இந்த புனித நீராடலை நடத்துகிறார்கள்.



நமது பகுதியில் மணப்பெண்ணுக்கு புனித நீராட்டுச் சடங்கு பல இல்லங்களில் திருமண நாளுக்கு முன்னதாக நடத்தப் பெறுவது உண்டு.  அதே போல மணமகனுக்கு அத்தை/ மாமி முறை, வயது முதிர்ந்த பெரியவர்கள் புனித நீரைத் தெளித்து தோஷம் கழிப்பார்கள்.

மொத்தத்தில் திருமணம் ஆகப்போகிறது என்று 'தண்ணீர் தெளித்து' விட்டு விடும் நிகழ்வு இங்கும் அங்கும் ஒன்றே தான்.

4.மிடோடாரணி :

இது  திருமண நாளுக்கு முதல் நாள்  நிகழ்வு.  மண மகள் தனது இல்லத்தில் கன்னியாக  வாழ்கின்ற கடைசி நாள். நள்ளிரவு வரை தொடரும் இந்த நிகழ்வில், மணமகள் எங்கும் வெளியே செல்லக்கூடாது.  மணமக்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளக் கூடாது. 'மணமகளின் பெற்றோர் அடுத்த நாள் நிகழ்வு நல்ல முறையில் நடந்தேற வேண்டும் என பிரார்த்தனை செய்வர். தனது மகளுக்கு செல்லமாய் உணவு வகைகளை ஊட்டி விடுவார். 'விடோரி' என்னும் தேவதை விண்ணில் இருந்து இறங்கி வந்து மணமகளை ஆசீர்வதிப்பதாக  சாவகத்தில் ஒரு நம்பிக்கை. அந்த ‘’விடோரி’’ யின் பெயரால் தான் இந்த நிகழ்வு மிடோடாரணி எனப் பெயர் பெற்றது.

உண்மையில் இந்த நிகழ்வின் சூக்குமம் என்ன என்றால், அடுத்த நாள் திருமணம் செய்ய இருக்கின்ற மணப்பெண் உடல் அளவிலும், மன அளவிலும் தயாராக இருக்கிறாளா அப்படி ஏதேனும் மன  அழுத்தத்தில் இருந்தால் அதனை நிவர்த்தி செய்யும் விதமாகவே அமைக்கப்பட்டு இருக்கிறது இந்த சடங்கு.

இதனை அடுத்த நிகழ்வு, அதிகாரப்பூர்வமாக திருமணம் பற்றி பெரியவர்கள், பொது மக்கள், உற்றார் உறவினர் முன்னே அறிவிக்கப்படுவதாகும்.

 

மல்லிகை ,வெற்றிலை,கொண்டை


மல்லிகை  மலரும், வெற்றிலையும் முக்கியமாகத் திருமண நிகழ்வில் இடம் பெறுகின்றன .   மணப்பெண் தலையில் வைத்திருக்கும் மல்லிகையுடன், ஒரு மாலையாகவும் மல்லிகைப்பூ மணக்கிறது. மணமகன் கழுத்திலும் ஒரு மல்லிகை மாலை.   இசுலாத்தைத் தழுவிய போதும், திருமணப் பெண் அலங்காரத்தில் நெற்றித்திலகமும், கூந்தலில் மல்லிகையும் அவசியம்.  கொண்டை என நாம் அழைக்கும்  பெண்ணின் சிகை அலங்காரத்துக்கு இங்கும் பெயர் 'கொண்டை 'தான் .

 5.பாங்கி (PANGGI )

இந்த நிகழ்வு அப்படியே நமது பகுதியைக் கண் முன் நிறுத்துகிறது. மணமகன் மணப்பெண் மீது சுருட்டி வைத்து இருக்கும் வெற்றிலையை வீசுகிறான்.  மணப்பெண் நாணிக் கோணி தன் கைகளில் இருந்தும் வெற்றிலைச் சுருள் மணமகன் மீது வீசுகிறான்.

 


மணமகனிடமிருந்து எறிதல் என்பது உயர்ந்த இலட்சியங்களை அடைவதற்கான வழிகாட்டுதல் மற்றும் பொறுப்புணர்வு மற்றும் குடும்பத்தின் பாதுகாவலனாக இருப்பது.  மனைவியும்  புனிதமான அன்பு நிறைந்த பக்தி எறிதலுடன் பதிலளிப்பார், மென்மையான பூப்போல் வெற்றிலைச்சுருளை எறியும் பாவனையில்.

அடுத்து மணமகளின் தந்தை தனது மடியில் மணமக்கள் இருவரையும் அமர வைத்து உட்கார்ந்திருக்கிறார்.  மணப்பெண்ணின் தந்தை தன் மருமகனையும்  நன்றாகப் பெற்று, அவனைத் தன் சொந்தக் குழந்தையாகக் கருதியதன் அடையாளம் இது.  பிறகு மணமக்களை அமர வைத்து இருவரின்  தோள்பட்டைகளையும் மணமகளின்  தந்தை அழுத்துகிறார், அதாவது மணமகனும், மணமகளும் நல்ல சந்ததியைக் கொடுப்பதோடு நல்ல பெற்றோராகவும் இருக்க வேண்டும் என்கிற ஆசிகளோடு.


கச்சார் குச்சுர் /KACAR KUCUR (வருமானத்தை வழங்குதல் )

கசார்-குசுர் என்பது சிவப்பு பயறு, பச்சைபி பயறு,வேர்க்கடலை, சோயாபீன்ஸ், மஞ்சள் அரிசி மற்றும் உலோகம் போன்ற வடிவங்களில் குறிக்கப்படும் வருமானத்தை (தானியங்களை) மனைவிக்கு அளிக்கும் மணமகன்.

 


செல்வத்தை மனைவி கைக்குட்டையால் பெற்றுக்கொள்ள வேண்டும், சிதறாமல் இருக்க வேண்டும். மனைவி அதை சிக்கனமாகவும் கவனமாகவும் பயன்படுத்த வேண்டும் என்பதற்கான குறியீடு இது.

வீட்டிற்கு வந்த மணப்பெண்ணிடம் நெல் மற்றும் அரிசியினை வழங்கி இன்று முதல் அனைத்து வரவு செலவும் உன்னைச்  சேர்ந்தது என்று குறிப்பிடும் இந்த சடங்கு இன்றும் தென்னகத்தில் நடை முறையில் இருக்கிறது.

அடுத்து நம்ம ஊரில் பாலும் பழமும் வழங்குவது போல மணமக்கள் ஒருவருக்கு ஒருவர் உணவினை ஊட்டிகே கொள்கிறார்கள்.

 SUNGKEMAN /சுங்கேமான் (பெரியர்வர்க்கு மரியாதை )

கடைசி நிகழ்வாக பெற்றோரை மேலே அமர வைத்து மணமக்கள் அவர்களை வணங்கி தங்கள் மரியாதையையும், நன்றியையும் செலுத்துவதோடு மண  விழா நிறைவு பெறுகிறது.

 


பல்வேறு வகையான பழக்க வழக்கங்களைக் கொண்ட இந்தோனிசியாவின் சாவக (JAVA ) திருமண நிகழ்வை மட்டும்தான் இங்கே பார்த்தோம். ஏனெனில் கலாச்சாரத்திலும் சடங்குகளிலும் சாவகமும் தமிழகமும் பன்னெடுங்காலமாகவே தொடர்பில் இருக்கும் பகுதிகள்.

அடுத்து அடுத்து இது போல பல தகவல்களை பார்ப்போம்.,,, உங்களுக்கு ஆவல் இருந்தால் .....

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60