எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது- தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)-8. அருளா மருளா
அருளா? மருளா ?
ஆடி மாதம் என்றாலே நம்ம ஊரில் ஆடும் மாதம் தான். ஒவ்வொரு தெருவிலும் அம்மன் கோவிலில் காப்புக் கட்டுவதில் ஆரம்பித்து கரகம் எடுப்பது, பூக்குழி இறங்குவது, அலகு குத்திக் கொள்வது என்று அனைவரும் 'ஆடி' க் களிக்கும் மாதம் ஆடி மாதம். எனது பூர்வ புண்ணிய நகரம் தேவகோட்டை. ஆடி என்றாலே அம்மனின் விழாக்களால் சும்மா 'அதிரும்'. கல்லூரிக் காலம், தேவகோட்டை அழகாபுரி நகரின் மூன்று வீதிகளும், தெற்குதெரு, வடக்குத்தெரு, நடுத்தெரு என்று போட்டி போட்டு வைபவம். தினமும் இரவு சாமி ஆட்டம் தான். தெற்குத் தெருவில் நண்பர் பழனிச்சாமியும் வடக்குத்தெருவில் நண்பர் நாகராஜூவும் உடன்பிறவா சகோதரர்கள்.
வடக்குத் தெருவில் 'கொட்டுச் சத்தம்’…. (மேளச்சத்தம் ) கேட்டு விட்டால் போதும்.. நகராஜுவின் அண்ணன் மணி சாமி ஆட ஆரம்பித்து விடுவார். ஆஜானு பாகுவான தேகம், வாலிபப் பருவம், நல்ல உடல் எடை... மணி சாமி வந்து குதிக்க ஆரம்பித்தால், யாராவது பின்னல் நின்று பிடித்துக் கொள்ள வேண்டும் . இல்லை என்றால் சாமி அது பாட்டுக்கு குதித்து சுவற்றில் இடித்துக்கொண்டு அருகில் நிற்பவர் , நிற்பவை இவற்றின் மீது மோதிக் காயம் ஏற்படுத்திக் கொள்ளும். ஆனால் சாமி வந்து ஆடும் வேளை அவரைப் பிடித்துக் கொள்வது சாதாரண வேலை இல்லை. பிடிக்கிறவர் கால் நைந்து போகும் அளவுக்கு மணி ‘குதி குதி’ என்று குதிப்பார் ...பிடிப்பவர் அடுத்து ஒரு நான்கு நாட்களுக்கு அந்தப் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டார். ஆடி மாதத்தில் அழகாபுரி நடுத்தெரு நாகராஜ் (மலேசியா) அக்கா (மருமகன்கள் : குணாளன், ஆஸ்திரேலியா, முத்தையா, சென்னை, நாகு , அமெரிக்கா.. என்று இன்றைக்கு ஆளுக்கு ஒரு மூலையில் ) வீட்டில் சாயந்தரம் ஆகி விட்டால் எங்களுக்குக் குலை நடுங்கும்..'கொட்டு'ச் சத்தம் கேட்டால்...
பகுத்தறிவுக்குப் பக்கம் நில்லாத இந்த 'சாமி ஆடுவது ' எனது குல தெய்வத் கோவிலிலும் உண்டு. ஒவ்வொரு சாமியும் தனக்கே தனக்கு என்று ஒரு சாமி பேட்டி வைத்துக் கொண்டு, வந்திருப்பது, கருப்பன் டா, சோணை டா, காளி டா, என்று விடிய விடிய ஆடும். சரி இங்கே தான் இப்படி என்றால், பழனிக்குப் பாத சாரியாக காவடி தூக்கிச் செல்லும் பக்தர்கள் மேளத்துக்கும், நாயனத்தின் இசை அலைக்கும் ஜதி மாறாமல் ஆடுகின்றன. நமது நாட்டில் தான் இப்படியா என்றால், சிங்கப்பூரில், மலேசிய நாட்டில், பிஜி, மொரீசியஸ் என்று இந்த வழக்கத்தின் பட்டியல் நீளுகிறது. நேற்றெல்லாம் தொலைக்காட்சியில் செய்தி... 'காரைக்குடியில் தி.மு.க. கட்சி விழாவில், 'கருப்பன் வாரான்' என்ற பாடல் இசைக்கப்பட்ட போது பலரும் சாமி வந்து ஆடினர்' என்று. ஒரு காலத்தில் திரை அரங்குகளில் பக்திப் படங்கள் திரையில் ஓடிக் கொண்டு இருக்கும் வேளையில் பெண்கள் சாமி வந்து ஆடுவதைப் பார்த்து இருக்கிறோம். சாமி ஆடுபவர்கள் காலில் விழுந்து தனது எதிர் கால வாழ்வின் ஏற்ற தாழ்வுகளை " குறி '' கேட்டு இன்றும் நாம் நின்று கொண்டு தான் இருக்கிறேன்.
பரந்த பாரத தேசத்தில் இது போன்ற சாமி இறங்கும் நிகழ்வு தமிழகத்தில் மட்டும் அல்ல. கேரளா, கர்நாடகா ,ஆந்திரா முதலிய தென்னகத்தில் காலம் காலமாக மனிதர்களின் நம்பிக்கையாய் தொடர்வதோடு அனைத்து மாநிலங்களிலும் பல்வேறு பெயர்களில் உலவி வருகிறது.
ஆர்வமுள்ள இளைஞர்களை தமிழில் எழுத வைப்பது கவியரசருக்கு மிகவும் பிடித்தமான விஷயம். தென்றல் பத்திரிகை நடத்தி வந்த நேரத்திலும் 'வெண்பா'எழுதும் போட்டிகளைத் தொடர்ந்து நடத்தி பலரையும் வெண்பா புனைய வைத்த பெருந்தகை. எனது இளம் வயதில், 1972ஆம் வருட வாக்கில் கவியரசர் கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்து மதம்", தொடராக "தினமணிக்கதிர்" பத்திரிகையில் தொடராக வெளி வந்து கொண்டு இருந்தது. அப்போது கவியரசரிடம இருந்து ஒரு அறிவிப்பு. தமிழகத்தின் ஒவ்வொரு சிறிய குக்கிராமத்தில் ஒரு 'கிராம தேவதை' மக்களை ஆண்டு அருள் பாலித்துக் கொண்டு இருக்கிறது. சங்கிலிக் கருப்பன், கருப்பாயி, பேச்சி அம்மன், சோணை, சமயன் என்று நமக்கெல்லாம் தெரிந்த தெய்வங்களை விட, இன்னும் பலர் கிராம தேவதைகளாக மக்களோடு பன்னெடுங்காலமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அது போன்ற ஒவ்வொரு தேவதை பற்றியும், அவர்களின் பூர்விகக் கதையைப் பற்றியும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எழுதி அனுப்பலாம். பின்னர் புத்தகமாகத் தொகுத்து வெளியிடலாம் என்று அறிவித்தார். தேவகோட்டையைச் சேர்ந்த எனக்கு எங்கள் நகரின் காவல் தெய்வங்களான அருள்மிகு கோட்டை அம்மன் பற்றியும், தாழையூர் அருள்மிகு கூத்தடிப் பெரிய நாயகி அம்மன் பற்றியும் அவர்கள் கதைகளை கவியரசருக்கு எழுதி அனுப்ப ஆசை. 13 வயதில் அன்றைக்கு வாய்க்கவில்லை. கவிஞருக்கும் ஏனோ அந்தக் கனவு கை கூடவில்லை. இதை எதற்காக இங்கே பதிவு செய்கிறேன் என்றால் பாமரனின் வாழ்வோடு இந்த மண்ணில் வாழும் குட்டி தேவதைகள் நிறைய....
சாமி ஆடுபவர்கள் பெரும்பாலும் மேளச்சத்தம் கேட்டு தன்னை மறந்த இலயத்தில் ஆட ஆரம்பித்து விடுகின்றனர். அது போக கிராமப் பகுதிகளில் கீழ்கண்ட வகைகளில் சாமி இறக்கும் நிகழ்வுகள் நடை பெறுகின்றன .
1. சாமியை வர்ணித்துப் பாடி சாமியை வரவழைப்பர்.
2. உடுக்கை அடித்து
அந்த ஒலியில் மனம் இலயித்து சாமி வந்து இறங்குகிறது.
3. சிலருக்கு தன்னால் சாமி
வந்து ஆட ஆரம்பித்து விடுவார்
இந்து மதத்தில் மட்டும் என்றில்லை. தேவ தூதன் அவதாரம் எடுத்து மண்ணில் '"இறங்கி '" வந்து அனைத்து வியாதிகளுக்கும் தொடுதல் மூலமே வைத்தியம் செய்து வரும் தேவ சபைக் கூட்டங்களிலும் கூட தரையில் விழுந்து புரண்டு மயங்கி எழுந்து செல்லும் நிகழ்வுகள் இன்று வரை தொடர்கிறது. எத்தனை பகுத்தறிவுப் பகலவன்கள் உதித்தாலும் பதில் தெரியாத இந்த நிகழ்வு நமது நாட்டில் மட்டும் தானா?
இங்கே சாவகத்துக்கு (ஜாவாவுக்கு ) வாருங்கள், பாப்போம்.
நம்ம ஊரில் பொய்க்கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம், என ஆடற் கலைஞர்கள் ஆடும் கிராமியக் கூத்து நிகழ்வுகள் பார்த்து இருக்கிறோம். எமது இந்தத் தொடரில் உலகின் பெரும் பகுதியினராக வாழ்ந்து கொண்டு இருக்கும் அடித்தட்டு சமுதாய மக்களின் வாழ்வியல் முறையையும் அவர்களின் கலை உணர்வையும் தொட்டு வருகிறேன். அங்குதானே மனிதம் வாழ்கிறது.
KUDA LUMPING
இங்கே இந்தோனேசியாவிலும் பொய்க்கால் குதிரை ஆட்டம் இருக்கிறது. குதிரை ஒரு மூங்கில் தட்டியால் செய்யப்பட்டது தான். குழுவாகத்தான் ஆட்டம்.
இந்த நிகழ்வில்
உபயோகப்படுத்தப்படும் பொருட்கள் மிகவும் எளிமையானவை .
குதிரையாக
இருப்பது ஒரு சாதாரண ஒரு மூங்கில் தட்டியில் குதிரை வடிவில் வெட்டப்பட்டு
இருக்கும் வடிவம். அதற்கு பிடரி மயிர், வால் எல்லாம் வைத்து ஓட்ட
வைத்து இருப்பார்கள்.
அடுத்து சில
ஆடற் கலைஞர்கள் மரத்தில் செய்த முகமூடிகளை
அணிந்து கொள்வர் இந்த நிகழ்வில்...
அங்கே
இசைக்கப்படும் இசைக்க கருவிகள் பாமரர் தினமும் கேட்கும் மிக எளிய மக்கள் இசை.
குதிரைக்கு எதிர் அணியாக காட்டுப் பன்றி வடிவில் சிறு மூங்கில் தட்டியில் செய்யப்பட்ட வடிவங்கள்.
ஒரு ஆட்டக்குழு என்பது குதிரை ஆட்ட வீரர்கள் (ஆண்கள்), அடுத்து ஆட பெண்கள் , இசைக்கலைஞர்கள் மற்றும் இவர்களை கட்டுப்படுத்த தலைமையாய் வாரொக் (warok) எனும் மாந்திரீக தாந்ரீக விற்பன்னர்கள் இவர்களைக் கொண்டது. மலையாள மாந்திரீகம் போல இங்கே சாவகத்திலும் நிறைய நம்பிக்கை மாந்திரீகத்தின் மீது இருக்கிறது, பல நூற்றாண்டு காலமாக. இந்த மாந்திரீகர்கள் கிட்டத்தட்ட நமது மதுரை சித்திரைத் திருவிழாவில் திரி எடுத்து ஆடி வரும் கருப்பசாமி போல உடை அணிந்து இருக்கிறார்கள். முழுவதும் கரிய உடை, அதில் சிறு சிவப்பு வண்ணக் கோடு . இயற்கைக்கு அப்பாற்பட்ட திறன்களைக் கொண்டவர்கள் சிவப்புக் கோடுகள் மற்றும் அடர்த்தியான மீசையுடன் கருப்பு ஆடைகளை அணிவதன் மூலம் அவர்களின் இருப்பை அடையாளம் காண முடியும்.
முதலில் ஆண்கள் ஒரு குழுவாக ஆட ஆரம்பிக்கிறார்கள். சாவக மண்ணின் இசைக்கேற்ப குதிரை வீரர்கள் அணி வகுத்து குதிரைகளை செலுத்துவது போல ஆட்டம் ஆரம்பிக்கிறது. இப்படி ஆடிக்கொண்டு இருக்கும் போதே ஒவ்வொருவராக தன்னை மறந்து 'சாமி'' ஆடுவது போல ஒரு மருள் நிலைக்குச் சென்று, விழிகள் சொருகி மயக்க நிலையில் கை கால்கள் விறைத்து உருண்டு புரள ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த நேரத்தில் நிகழ்ச்சியின் உச்ச காட்ச்சியாக 'கண்ணாடி'த் துண்டுகளையும் இந்த ஆட்டக்காரர்கள் தின்பார்கள் . இந்த நிகழ்வு நேரத்தில் நம்ம ஊரில் பார்வையாளர்களுக்கும் சாமி வந்து இறங்குவது போல பார்வையாளர் சிலரும் TRANCE எனப்படும் மயக்க நிலைக்குள் சென்று விடுவர். ஒரு கட்டத்துக்கு மேல், இந்த மயக்க நிலையில் இருந்து இவர்களை மீட்டு எடுக்க அமைப்பாளர்களான இந்த மாந்த்ரீர்கள் வருகிறார்கள். மயக்க நிலையில் இருக்கும் ஆட்டக்காரரை அணைத்து அவர்களை ஆசுவாசப்படுத்தி ஒரு மாற்று மருந்தைக் கொடுத்து சாதாரண நிலைக்குக் கொண்டு வருவர்.
அடுத்த பகுதியான
ஆட்டம் சென்ட்ரேவே (SENTEREWE), என்பது ஆண் மற்றும் பெண் நடனக் கலைஞர்கள் சேர்ந்து ஆடுவதாக அமைகிறது.
கடைசிப் பகுதி , மிகவும் தளர்வான அசைவுகளுடன், ஆறு பெண்கள் ஆடும் பெகன் புத்ரி(Begon Putri). இது முழுத் தொடரின் முடிவான குதிரை நடனம் ஆகும்.
இந்தப்
பொய்க்குதிரை நடன நிகழ்வு சில
குறியீடுகளைக் காட்டுகிறது. குதிரை
என்பது எவ்வளவு கடுமையான அழுத்தங்களையும் தாங்கி வாழ்ந்து வரும் பிராணி. வாழ்வில் வரும் சுக, துக்க, எளிய மற்றும் கடின கால கட்டங்களைத் தாண்டி ஓடி உழைக்கும் மனித
சமுதாயத்துக்கு ஒரு குறியீடாகவே குதிரை காட்டப்படுகிறது. அதிலும் போரில் கலந்து எதிரிகளின் வாள் , வேல் , அம்பு என்று அனைத்து சவால்களையும் கடந்து போர் வீரனின் கட்டளைக்கும்
பணிந்து அவனை வெற்றி பெறச் செய்வதே லட்சியம் என ஓடிக்கொண்டு இருக்கும் குதிரை,உழைக்கும் கீழ் மட்ட சமூக மக்களுக்கு ஒரு புத்துணர்வுப் பேழை. அங்கே இசைக்கப்படும் இசைக்க கருவிகள் பாமரர்
தினமும் கேட்கும் மிக எளிய மக்கள் இசை.
பொதுவாகவே அனுமார் அருள் வந்து ஆடுபவர்கள் குலை குலையாய் வாழைப்பழங்களைச் சாப்பிடுவதையும், இளநீர்களை அருந்துவதையும் நமது நாட்டிலும் கண்டு இருக்கிறோம். அதே நிகழ்வு தான் இங்கே.
இறை
நம்பிக்கை என்பது பகுத்தறிவுக்கு எட்டாத
ஒரு பவித்ர உணர்வு. இதில் சாமி ஆடுவது உண்மையா பொய்யா என்ற வாதப் பிரதி
வாதங்களுக்கும் சென்றால் அது என்றும் முடிவுக்கு வருவதில்லை. எனக்குத் தெரிந்து
இது மனதின் அல்லது மூளையின் ஒரு நிலை. மருத்துவ உலகிலும் மூளையின் அலை
நீளத்துக்குத் தகுந்த படி எவ்வாறு மனிதனின் செயல் மாறுபடுகிறது என்பதை அளந்து
சொல்லி இருக்கிறார்கள். கெம்மா , (GEMA ), ஆல்பா (ALPHA
), பீட்டா (BETA), தீட்டா (THETA), டெல்டா (DELTA) என்று மூளையின் அலை நீளம் அழைக்கப்படுகிறது .டெல்டா அலையில் தூங்கும் உடல், தீட்டா அலையில் மயக்க நிலைக்குச்
சென்று விடுகிறது. அந்த மயக்க நிலை சாமி
ஆடும் நிலையாக இருக்கலாம். என்ன
செய்கிறோம் என்ற நினைவே இல்லாத நிலை.
மனிதர்கள்
இயல்பாக செய்ய இயலாதவற்றை
இன்னொரு ஆவி அவர்கள் உடலில் புகுந்து அமானுஸ்ய
நிகழ்வுகளை நிகழ்த்திக்காட்டுவதான ‘மருள்’ நிலையே இந்த கிராமிய நிகழ்ச்சியாகும்.
தொடர்வோம்…
Tulisan yang bagus, nyata sekali. kuda lumping adalah budaya jawa yang unik dan penuh unsur magis.
பதிலளிநீக்குGreat, mama. what an enlightment.
பதிலளிநீக்குஅருமையான தகவல் தொகுப்பு. வாழ்த்துகிறேன்.
பதிலளிநீக்குஇப்பதிவு, ஊர், மாநிலம், தேசம், மொழி, இனம் எனப் பல வரையறைகளுக்கு அப்பாலுள்ள இறைநம்பிக்கைப் புள்ளிகளை அழகாக இணைக்கும் அற்புதமான கோலம்.
பதிலளிநீக்குஇப்பதிவு, தங்கள் நினைவாற்றல், ஒப்பீட்டுப் பார்வை திறனாய்வுத் திறன் என ப் பல வண்ணக் குளம்பில் மலர்ந்த ஓவியம்.
அருமை! அருமை!கவிஞர் முத்துமணி தேவகோட்டைக்கு என்றென்றும் பெருமை!!