எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது- தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)-10. சிலைகள் சொல்லும் கதைகள்

 

எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது- தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)-10. சிலைகள் சொல்லும் கதைகள்

 

இராமாயணமும், மகாபாரதமும்

பாரதத் திருநாட்டில் பல காலம் நின்று நீடூழி வாழும் இதிகாசங்கள்  இராமாயணமும், மகாபாரதமும்.  மனித குலத்துக்கு மரபையும் மாண்பையும் கற்றுக்கொடுக்கும் பல சம்பவங்கள் நிறைந்த கதைகளை இருப்பதனாலேயே என்றும் வாழுகின்றன இந்த இதிகாசங்கள்.  கட்டிய கதைகளாய் இவற்றைச் சுட்டிய போதிலும் அகண்ட பாரதம் முழுவதும் ஆட்சி புரிந்த இவை இன்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து. கம்பூச்சிய  பகுதிகளில் பரம்பரையாய் வாழ்கின்றன. புராண கதா பாத்திரங்கள் இல்லாமல் இந்த இதிகாசங்கள் இல்லை. வால்மீகி வாக்கில் வந்த கதைக் கட்டங்கள் கம்ப நாடன் கவிதையில் காவியமான போது தமிழகத்தின் பண்பாடுக்கு  ஏற்றபடி எவ்விதம் சில மாற்றங்களை தன்னுள் ஏற்றிக்கொண்டதோ அதே போல இங்கே தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் அந்தந்த  மண் மணம்  வீசுவது போல மூலம் குறையாமல் காலம் வடித்து இருக்கிறது.

சிரஞ்சீவி மாருதி

நமது கதைகளில் வரும் பாத்திரங்களில் 'ஹனுமான்' எவரையும் கவரும் ஒரு வடிவம், விநாயகரைப் போலவே..




என்றும் வாழும் சிரஞ்சீவி என மாருதி யான அஞ்சனை புத்திரன், வாயு மைந்தன்    வாழ்வதாக ஒரு ஐதீகம்.  எனது சொந்த ஊரான தேவகோட்டையில் 'அனுமார் சுந்தரம் அய்யங்கார்' என்று எனக்கு தெரிந்த இராம பக்தர்... நூறு வயதுக்கும் மேல் வாழ்ந்தவர்.  இராம காதை நிகழும் இடங்களில் 'அனுமனாக' வேடம் தரிப்பார். அந்த நேரத்தில் தானே அனுமாக மாறிவிடுவார்.  80 ~ 90 வயது கடந்த காலத்திலும் அனுமார் வேடம் ஏற்று அனுமனாக மாறிய வேளைகளில் சாதாரணமாக மனிதனால் உண்டு முடிக்க இயலாத அளவில் குலை குலையாய் இளநீர்களையும், சீப்புச் சீப்பாய்  வாழைப்  பழங்களையும் ஒரே மூச்சில் தின்று தீர்த்து விட்டு மீண்டும் என்ன இருக்கிறது உண்ண  என்று தேடுவார். 

அதே  போன்ற அனுமனின் ஆட்டத்தை இங்கே இந்தோனேசியாவில் கண்டு இருக்கிறேன். பாலித் தீவில் உபுட் (UBUD) பகுதியில் மாலை மயங்கும் வேளைகளில் கடலை நோக்கி அமைந்து இருக்கும் பாறை மேடையில் இயற்கை வெளிச்சத்துடன் நடை பெறும் 'கெச் சாக்' (KECAK DANCE) நடனம் என அழைக்கப்படும் இராமாயணத்தில் வரும் அனுமன் இலங்கையில் வலம்  வரும் காட்சிகளை ஒரு வரியில் சொல்ல மனம் வரவில்லை.  பின்னர் தனியாக, விபரமாகப் பார்க்கலாம்.

சாவகம் முழுவதுமே அனுமனின் சிலைகள் ஆங்காங்கே கிடைக்கின்றன.  அனுமன் பற்றிய ஒரு கதை நிலவுகிறது.  சீதா தேவியை இலங்காபுரியில் இருந்து மீட்டு வந்த இராமன் அயோத்தியில் அரசுக் கட்டிலில் அமர்கிறார். அந்த பட்டமேற்பு  நிகழ்வுகளில் அனுமன் உடன் இருப்பதாகவும், தன்னை ஆதரித்த சடையப்ப வள்ளலின் மூதாதையர் அங்கே நின்றதாக  கம்பன் தனது நன்றியுணர்வையும் சேர்த்து அங்கே  படைத்திருப்பான் இப்படி :

 அரியணை அனுமன் தாங்க, அங்கதன் உடைவாள் ஏந்த

பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி பற்ற

விரை செறி கமலத் தாள்சேர் வெண்ணெய்யூர்ச் சடையன் தங்கள்

மரபுளோர் கொடுக்க வாங்கி, வசிட்டனே புனைந்தான் மெளலி!



அனுமனின்  பணி  ஓய்வு 

ஆயிற்று.. லவ குசர் என்னும் இராமனின் வாரிசுகளும் பிறந்து வளர்ந்து விட்டார்கள். வீரப்பிரதாபனாக கடல் தாண்டிக் குதித்து மலை பெயர்த்துச் சுறுசுறுப்பாய்  இருந்த அனுமன் வயதானவர் ஆகி விட்டார்.  அவருக்கு அபே ப்ப்பின் (RETIREMENT )காரணமாக ஓய்வு தேவைப்படுகிறது என்று நினைத்தாராம் இராம பிரான்.  எனவே அனுமனிடம், எமக்காக உழைத்தது போதும், கீழ்த்திசையில் 'சாவகம்' (JAVA) எனும் பெரிய தீவுப்பகுதி உங்களின் ஓய்வுக்காலத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அங்கு சென்று ஓய்வு எடுத்துக்கொள்ள வேணடும்  என வேண்டினாராம்.  அது போலவே அனுமான் இங்கே சாவகத்தில் வந்து ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறாராம்.

இது கதை என்ற கேட்ட போதிலும் , இந்த சாவக பூமியில் எண்ணற்ற பழ  வகைகள் கிடைக்கின்றன.  அனுமனுக்ககாவா?  அதை விட ஒன்றை இங்கே குறிப்பிட வேண்டும்.  சாவகத்தில் நான் பார்த்த அனுமனின் சிலைகள் பெரும்பாலும் அவரை வயதான தோற்றத்திலேயே காட்டுகின்றன

காலத்தைக்  காட்டும் சிலைகள்:

சிலைகள் ஏன் ஆராயப்  படுகின்றன ?  முப்பரிமாணத்தில் கண்களில் கண்டதை, கருத்தில் விரிவதை சிலையாக வடித்து வைக்கும் வழக்கம் வரலாறு பதிவான காலத்துக்கு முன்பே தொடங்கி விட்டது.  அந்தச் சிலை வடிவங்கள், அவை வடிக்கப்பெற்ற காலங்களின் மனித நாகரிக வரலாற்றை, தொன்மையை, பொருளாதார நிலைமையை, அன்றைய வாழ்கை முறையை, அணி கலன்களை, அரச பரம்பரை என இன்னும் பல செய்திகளை அறிய நமக்கு சாட்சியாய் விளங்குகின்றன .  பண்பாட்டின் எச்சமாக, நாகரீக  உச்சமாக, காலத்தின் மிச்சமாக வருபவை மண் பாண்டங்களும், சிலைகளும் மட்டுமே.  சிலைகள் சொல்லும் கதைகள் ஏராளம்....

இங்கே கிடைத்த ஒரு பழமையான அனுமன் சிலையை மட்டும் பார்த்து விட்டு இந்த அத்தியாயத்தை முடிப்போம்.  திருமதி .மரிஜ்கே ஜே.க்ளோக்கே (MARIJKE  J.KLOKKE ) எனும் டச்சு ஆய்வாளர், லெய்டன் பல்கலைக்கழகத்தில்  (LEIDEN UNIVERSITY ) கிழக்கு சாவகத்தில் அனுமன் (HANUMAN IN  THE ART OF EAST JAVA ) என்ற பெயரில், கிழக்கு சாவகத்தில் கிடைத்த அனுமன் சிலையைப் பற்றி ஒரு ஆய்வறிக்கை சமர்ப்பித்து இருக்கிறார்.


தனது தேடல்களில் ஒரே மாதிரியான 3 அனுமன் சிலைகளைக்  கண்டதாகத் தெரிவிக்கிறார்.  அமெரிக்காவில் ஒரு தனியாரின் பழங்காலச் சேகரிப்பில் இந்த அனுமனின் 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலையைக் கண்டதும் அவருக்கு திகைப்பு மேலிட்டது. ஏனெனில் இதனை ஒத்த  இரு வேறு சிலைகளை தனது ஆய்வில் இங்கே இந்தோனேசியாவில் ஏற்கனவே கண்டு இருக்கிறார்.   கிழக்கு ஜாவாவில் (கீழைச் சாவகத்தில்), மோஜோகர்தோ எனும் ஊரில் இருந்த சிறிய அருங்காட்சியகக்தில் 1985 இல் இதே போன்ற சிலையைக் கண்டு இருக்கிறார்.  மஜாபாஹித் அரசர்களின் தலை நகர் அமைந்து இருந்த பகுதியான த்ரோவுலான் பகுதியில் இருந்து அப்போது இது தோண்டி எடுக்கப்பட்டு இருந்தது.   இரண்டாவது சந்திப்பு இதன் அச்சு அசலான இன்னொரு சிலையுடன் நிகழ்ந்தது சுரபயா (SURBAYA ) நகரில் ‘ம்பு தந்துலார்’ (MPU TANTULAR MUSEUM ) அருங்காட்சியகத்தில்.  இந்தச் சிலை 'ம்பு தந்துலார்' எனும் ஊரின்  அருகில் அஞ்சனி என்ற கிராமத்தில் இருந்து கிடைக்கப் பெற்றது. அஞ்சனை என்பவள் அனுமனின் தாயின் பெயர்  என்பதை நினைவு கொள்ளுங்கள்.இது துலுங் அகுங் மாவட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்டது.  அதே இடத்தில் எடுக்கப்பட்ட இந்த மூன்றாவது சிலை தான் அமெரிக்காவில் இருக்கிறது.

கி.பி.1293 முதல் கி.பி.1500 வரை மஜாபாஹித் என்ற கீழைச்சாவக வம்சம் பெரும் புகழுடனும் , கீர்த்தியுடனும் சாவகம் மட்டும் இன்றி, மலேஷியா (MALAYSIA), களிமந்தான் (KALIMANTAN), சுமத்ரா (SUMATRA ) பாலி (BALI ) சுலவேசி (SULAWESI ), சுலு தீபகற்பம் (PHILIPPINES), சலுண்டுங் (MANILA ) மற்றும் பாப்புவா (PAPUA) என்று இன்றைக்கு இருக்கும் பெரும் நிலப்பகுதியை மாட்சியுடன் ஆட்சி செய்து வந்தனர்.  நமது தமிழகத்தின் சோழ சாம்ராஜ்யத்துக்கு நிகரான பொற்கால ஆட்சி இவர்கள் காலம்.  இவர்கள் பற்றி அடுத்த நாம் பார்க்க வேண்டிய செய்திகள்  நிறைய இருக்கின்றன.  அதற்கு முன்னோட்டம் தான் இந்தச் செய்தி.  இவர்களது காலத்தைச் சேர்ந்த இந்த ஒரே மாதிரியான அனுமன் சிலைகளும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட, புதிரனான பின்னணியைப்  படம் பிடித்துக் காட்டுகின்றன.

பின் புலத்தில் கற்பலகை இருக்க நின்ற நிலையில் இருக்கின்ற இந்த ஆஞ்சநேயரின் நான்கு கரங்களின் இருபுறமும் மலர்களால் நிரம்பிய குவளைகள் செதுக்கப்பட்டு இருக்கின்றன.  தலையில் கூம்பு வடிவில் அமைக்கப்பட்ட மகுடம் அணிந்திருக்கிறார் அனுமன். மகுடமும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.  அதிலிருந்து மாலையாக தொங்கும் மலர்கள் தடந்தோள் வரை தொடர்ந்து இருக்கிறது.  வானர முகத்துடன், வெளியே  பெருகும்  விழி மலர்களுடன், குட்டையான அகலமான நாசியுடன்,நீண்ட கூரிய  பற்களுடன் அனுமனின்  முகம் காட்சி அளிக்கிறது.  நீண்ட காது மடல்களில்  பெரிய பூவின் வடிவிலான காதணிகள்.  கழுத்தில்  மார்பு வரை தவழும் ஆரம் , ஆபரணமணிந்த முன் கை மற்றும் பின் கை  அணிந்த பட்டைகள். பாதம் வரை நீண்ட வேட்டி (கவனியுங்கள் அன்பர்களே) அணிந்திருக்கும் இடுப்பில் குஞ்சங்கள் கொலுவிருக்கும் விதம் விதமான அரைக் கச்சைகள்.  இந்த நின்ற கோலத்தை ஒரு இரட்டைத் தாமரை மலர் பதங்களைத் தாங்கி நிற்கிறது.

 


முகத்தைக் கவனித்து விட்டு கொஞ்சம் கீழே பார்வையைத் திரும்புவோம்.  புதிரான பகுதி அவரது நான்கு கரங்களில் தொடங்குகிறது.  உயர்த்திய பின் வலது கரத்தில் செப மாலை, பின் இடது கரத்தில் மூடிய சிறிய பாத்திரம், அமிர்தமாய் இருக்க வேண்டும்.. முன்னிரண்டு கரங்களும் அவரது மார்பின் நேரே ஒன்றையொன்று பற்றி நிற்கின்றன.  இது புத்த சமயத்தின் யோக முத்திரை ஆகும்.  பற்றிய இரு கரங்களும் ஒரு சிறிய பெட்டியைத் தாங்கி நிற்கின்றன, அனுமனின் கைக் கட்டை விரல்களின் அரவணைப்பில்.. பெட்டியின்  மூடி குழிவாக இருக்கிறது. பெட்டியின்  மூடி குழிவாக இருக்கிறது. கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், குழிவான மேற்பரப்பை உடைய இது பெட்டி  அல்ல,  லிங்கம் அமர்ந்து இருக்கும் பீடமான 'யோனி' என்பது விளங்குகிறது.

அனுமனின் பின்னால் இருக்கின்ற கற்பலகையின் மறு புறம் ஆய்ந்து கவனித்தால், அனுமனின் வால்  அந்தக் கற்பலகையைக் குடைந்து பின்புறமாக நிமிர்ந்து நிற்கிறது.  அதன் ஒரு புறத்தின் இரட்டைக் கோடுகளும், மற்றொரு புறத்தின் விட்டக்கோடுகளும் செதில்களை உடைய பாம்பினைக்  காட்டுகின்றன. அந்த வால் புறப்படும் இடம் ஒரு முக்கோண வடிவில் இருக்கிறது.  இது மஜபாஹித் அரச ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தது என்பதற்கு ஆதாரம் இதுதான்.

இந்தச் சிலை கூறும் கதையும் காலமும் என்ன என்றால்...

மஜபாஹித் அரசாட்சிக் காலத்தில் ஹிந்து மதத்தில் வைணவத்தின், இராம கதையின் முக்கிய பத்திரமான அனுமன் சைவ வடிவினனாக் காட்டப்படுகிறார்.  வால் பகுதியில் இலிங்க வடிவினையும், கரங்களில் யோனியையும் சுமந்து இருக்கிறார். ஆனால் அவரது கர  முத்திரை புத்த மதத்தினருக்கு உரியதாக இருக்கிறது.

வேற்றுமையில் ஒற்றுமை என்பது நமது பாரதத்தின் கொள்கை என்று நினைக்கிறோம்.  பல்வேறு இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட  இந்தோனேசியப்  பெரும் நிலப்பரப்பில் 'வேற்றுமையில் ஒற்றுமை' எனும் இந்த தேசத்தின் கொள்கையை எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னமே நிகழ்த்திக் காட்டியது மஜபாஹித் அரசு.

தொடர்வோம்...


கருத்துகள்

  1. Superb, mama. You greatly show The flow of Barath history in Indonesia. Thank you, mama.

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. Narration touches native, Devakottai -Anumaar Ayyangar's feats as Anjaneyar.Anuman depicited by Kamban in Ramar Pattabisekam. (?Before retirement).Indian culture adapted by SE Asian Kingdoms and their religious tolerence.

      Superb, Muthumani.

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60