எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது- தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)-13 . இந்தோனேசியாயாவிலும் மகா மேரு

 

13 . இந்தோனேசியாயாவிலும் மகா மேரு

மதம் அல்ல ...பண்பாடு

இந்தோனேசியாவில் நமது பாரதப்  பண்புகளை அடையாளம் கண்டு உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இந்தத் தொடரின் நோக்கமாகும். அப்படி நாம் பயணம்  செய்யும் போது அந்தச் செய்திகளின் தொடர்பான அரசர்கள்  மற்றும் வரலாறு பற்றிய விபரங்களையும் பார்த்துக் கொண்டே நகர்கிறோம் ... அலுப்புத் தட்டாமலும் அறுவை என்று ஆகாமல் இருக்க...

ஜகார்தாவில் எழும்பி வரும் ஆலயம்

இந்தோனேசிய  நாட்டின் 87 விழுக்காடு மக்கள் இசுலாத்தைத் தழுவிய போதும் நமது பாரத இதிகாசக்  கதா பாத்திரங்கள்  இன்னும் சீர் குலையாமல் இங்கே உலவி வருகின்றன, பெயர்களில் இன்னும் இன்றும். இங்கே இன்றைக்கும் குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர்கள் :

அபிமன்யு, அர்ஜுனா, அருணா, ஆர்யா, ஆதித்யா,ஆத்மோ டிக்கோரோ, அசோகா, அபிச்சந்திரா, பீமா , அக்னி, அங்காரா, அயுத்தியா (AYODHYA), பாங்க்யு (bangyu / பானி இந்தியில்), பாஸ்கரோ , புடி ஹர்த்தோ (BUDI புத்திசாலி, ஹர்த்தா என்றால் செல்வம்), புத்ரா, சந்திரா, கிருஷ்ணா, கணேசா, கருணா, கடோத்(கதோத்கஜா), தேவா, தர்மா, க்ரோமோவிஜயோ (கிராம விஜயன்), இந்திரா ,நரேந்திரா, ராமா, ராஜா, சத்ரியோ, சத்தியவான், சுகர்தோ, சூர்யா, சுகர்ணோ (கர்ணன்),  செனோபதி (சேனாபதி), சுப்ரோப்தோ (சுப்ரபாத்), விஷ்ணு, வாஹ்யு (வாயு), வோனோபதி (வனபதி ),   யுதிஷ்த்திரா , யுதா,

சிந்தா (சீதா என்பது இங்கே சிந்தா), லக்ஷ்மி , சரஸ்வதி, மாயா,  சாவித்திரி, தேவி , பார்வதி, மர்த்தினி, நுக்ரஹோ (அனுக்ரஹா), தேவி ஸ்ரீ ( ஸ்ரீ தேவி ).   மெலாத்தி  (மல்லிகை), சித்ரா, அக்னி, ஆனந்தா, பாசுகி (நம்ம வாசுகி),ம மந்தரா (மந்தார மலர்), அங்ரயானி  (செவ்வாய்), தேவயானி ,அஸ்துதி (PRAISE/துதி) புவனோ (புவனா ), மேகாவதி, புத்ரி, வித்யா,அம்பர்வதி (அம்பர் போல மணத்தை உடையவள் )…என்று இந்தப்  பட்டியல் நீளும்.

இங்கு அதிகமாக பெண்களுக்கு வைக்கப்படும் பெயர், 'யாந்தி'.  மனதுக்குள் அறிந்த பெயர் போலவே ஒரு தோற்றம்.  ஆனால் நமது பகுதியில் 'யாந்தி' என்ற பெயர் இல்லை.  அப்புறம் கொஞ்சம் சிந்தித்ததில், இங்கு 'ஜ ' என்ற உச்சரிப்பை 'யா' என்ற உச்சரிப்பாக மாற்றி உபயோகிப்பது புலப்பட்டது. உதாரணம் : 'யோக்ய கர்த்தா' என்ற ஊரின் பெயர் 'ஜோக்ஜ கர்த்தா' என்று மாற்றி அழைக்கப்படுகிறது. 'ஜூலி' என்ற பெயர் 'யூலி' என்று மாற்றி அழைக்கப்படுகிறது. நம்ம 'ஜெயந்தி' தான் இங்கே 'யாந்தி' ஆகி இருக்கிறது.

இன்றைய இளந்தலைமுறை பல்கலை பயிலும் மாணவர்கள் 'ஹிந்து' என்பதை மதமாகப் பார்க்கவில்லை. மாறாக ஒரு பண்பாடாகப் பார்க்கிறார்கள்.  ஒருவரும் 'சனாதானம்' என்று பேசுவதில்லை. இந்தோனேசிய இசுலாமிய மதத்தினர் மட்டும் அல்ல.... இந்தோனேசிய கிறித்துவர்களும் இந்தப்  புராதனப்  பெயர்களை சூட்டிக்கொள்கிறார்கள்.  

சனாதனம் என்ற பெயரில் எதுவும் குழப்பம் இல்லை. மத விவகார அமைச்சகம் இசுலாம், இந்து, புத்த, கிறிஸ்துவ, சீக்கிய  மதங்களுக்கு அவரவர் மதங்களின் நம்பிக்கையின் படி வழிபாடு செய்யவும், வழிப்பாட்டுத் தலங்கள்  அமைக்கவும் அனுமதி வழங்குவதோடு திறப்பு விழாக்களிலும் அமைச்சர்கள், அந்தந்தப் பகுதி ஆளுநர்கள், பூபதி (மேயர் என்று கொள்ளலாம்- அந்தப் பூமிக்கு அதிபதி பூபதி ) இவர்கள் கலந்து கொள்ளும் வண்ணம் நல்லிணக்கத்துடன் செயல் படுகின்றனர்.  மக்கள் மகிழ்வுடன் வாழ்வதற்குத்தானே மதங்கள்? சண்டை இட்டுக்கொள்வதற்கு அல்லவே?

எவர் என்ன சொன்ன போதிலும், வரலாறு தனது பாதச்சுவடுகளை  விருப்பு வெறுப்பு இன்றி பதித்துக் கொண்டே செல்லும். மனிதர்கள்தான் தமக்குத் தேவையான படி வரலாற்றையும் திரித்துக்கொள்கின்றனர்.  நமது பண்டைய இதிகாசங்களின் தாக்கம் கீழ்த்திசை நாடுகளில் இன்னும் இருக்கின்றன.  இதிகாசங்கள் என்றால் அதில் வரும் பாத்திரங்கள் புராணங்களில்  சொல்லப்பட்டவை.  புனைவு என்று அறிவு சொன்னாலும் இந்தோனேசியா மட்டும் அல்ல , கீழ்த்திசை நாடுகள் முழுதும் மட்டுமல்ல ஆசியக்  கண்டத்தின் பிற மதங்களிலும் இவற்றின் செல்வாக்கு ஊடுருவி நின்று நிலைத்து இருப்பது ஆச்சரியம் தான்.  அவற்றுள் சிலவற்றை மட்டும் பார்ப்போம். இது இந்தோனேசிய கலாச்சாரம் மற்றும் நம்பிக்கை எப்படி நமது நாட்டுடன் பின்னப்பட்டு இருக்கிறது என்பதற்கு ஒரு அடையாளம் ஆகும். 

மகா மேரு என்பது நமது  புராணங்களில் இமயமலையில் இருப்பதாகவும், மந்திர மலையாகிய இதனை மத்தாகக்  கொண்டு அமரரும் அசுரரும் இரண்டு அணிகளாகப் பிரிந்து வாசுகி என்னும் பாம்பினை வடமாக்கி பாற்கடலைக்  கடைய அமுதும் நஞ்சும் வெளிப்பட நஞ்சினை உண்டு சிவன் நீல கண்டன் ஆனார்.  சரி நம்ம ஊர்லதான் இந்தக் கதை என்றால் இங்கே சாவகத்தில் இதை விட அதிகமாகவே இருக்கிறது. இங்கும் கீழைச்சாவாகத்தில் (EAST JAVA ) இருக்கிறது ஒரு மேரு மலை.  சரி, பாரதத்தில் நிலவி வரும் புராணங்களில் தான்  மேரு இருக்கிறது என்றால் இலங்கை, தாய்லாந்து, வியட்நாம், மியான்மர், மங்கோலியா, கொரியா, பிலிப்பைன்ஸ், மாலத்தீவு என்று நீக்கமற நிறைந்து இருக்கிறது இந்த மேரு மலை.  புத்த, ஜைன மதங்களும் மேருவைப் பேசுகின்றன.

பாற்கடல் கடைந்த  பர்வதம் 

சீனாவின் டாவோயிசம் (TAOISM) போன்ற இந்திய சமயங்களின் நிழலே படியாத வழிபாட்டு முறைகளிலும்  மேரு மலை குறிப்பிடப்படுகிறது.  இந்து, ஜைன, புத்த கோவில்களின் கட்டிட அமைப்பு மேரு மலையின் அடையாளமாகவே அமைக்கப்பட்டு இருக்கிறது. பியாதாட் (Pyatthat) என்று அழைக்கப்படும் பர்மிய பல்லடுக்குக்  கூர்முனைக் கோபுரங்கள், பக்கோடாக்கள்  (pagodas) தாய்லாந்தின் புத்த கோவில்கள் பாலித்தீவின் 'புரா' (PURA) க்கள் அனைத்தும் இந்த மேரு மலை வடிவினை அடிப்படையாகக்  கொண்ட வடிவில் அமைக்கப்பட்டு இருக்கின்றன. 

Pyatthat- Burmese Temple Top


PURA- BALI, INDONESIA


Depiction of Mount Meru at Jambudweep, a Jain temple in Uttar Pradesh

மேரு என்பதன் பொருளே 'அச்சு ' அல்லது முக்கிய எலும்பான முதுகெலும்பு ஆகும்.  நாபிக்கமலத்தையும் குறிக்கும்.  இந்தோனேசியாவிலும்  மேரு என்ற வார்த்தைக்கு முன்  'சு' (மேன்மையான)என்ற முன்னொட்டைச் சேர்த்து 'சுமேரு' என்ற பெயரில் கீழைச்சாவகத்தில் பெரிய மலை உயர்ந்து நிற்கிறது.  இந்த உயர்ந்த மலைக்குப் பின் நிறைய கதைகள்.  கதை கேட்க தயார் தானே ?

சரி பூகோளத்தில் இந்த மேரு எங்கே இருக்கிறது என்று தேட ஆரம்பித்தால் தலை சுற்றல் தான்.  பாற்கடலில் (COSMIC OCEAN ) இல் ஒரு பகுதியான மகா மேருவைத்தான் சூரியன் முதலான அனைத்துக் கோள்களும் சுற்றி வருகின்றன என்று சொல்கிறது 'தேவி பாகவதம்'.

ஆய்வறிஞர்கள் சிலர் இந்த மேரு மலை காரகோரம், இந்துகுஷ் , இமயமலை இவற்றின்  சாரலில் பாமீர் பீடத்தில் இருக்கிறது என்கிறார்கள்.  4 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட 'சூரிய சித்தாந்தா' (Suryasiddhanta) என்று ஒரு நூல், அண்டத்தில் சுழலும் கோள்கள் மற்றும் அவற்றின் துணை நிலவுகள் இவற்றின்  வேகம், விட்டம், பாதை இவற்றைக் கணக்கிட சூத்திரம் (FORMULA) குறித்துக் கொடுக்கிறது.  அந்த நூலின் படி மேருமலை, ஜம்புத்வீப (Jambunad/Jambudvīpa)தேசத்தில்  பூமியின் மத்தியில் (bhua -madhya )இருக்கிறது .  9 ஆம் நூற்றாண்டில் வெளிவந்த 'நரபதி ஜெயசார்ய ஸ்வரோதய (Narapatijayacharyasvarodaya) என்ற நூலும் இதே குறிப்பைக் கொடுத்து விட்டு, ஆனால் கண்ணுக்குப் புலப்படாமல் இருக்கிறது என்றும் குறிப்பிடுகிறது.  இந்திய மத நம்பிக்கையின் படி அண்டவியலின் (COSMOLOGY ) பல்வேறு பாதிப்புகள் காணப்படுகின்றன. அதில் ஒன்று மேரு மலையின் கிழக்கே மந்திராச்சல மலையும் , மேற்கில் சுபர்ஸ்வ மலையும் , வடக்கில் குமுத மலையும், கிழக்கே கைலாய மலையும்  இருப்பதாகக் கூறுகிறது.  

என்ன இப்பவே கண்ணக்கட்டுதா?  இன்னும் நிறைய இருக்கு தலைச் சுற்றல். 

இதெல்லாம் பார்த்து நமது பகுத்தறிவு, ஆரியம், சமஸ்கிருதம், புனைவு, புராணம் என்று சொல்லி ஏற்றுக் கொள்ளாது.   ஆம்.. இப்ப அப்படியே புத்த மதத்துக்குள் நுழைவோம்..

பௌத்த மேரு


ABHIDHARMA ILLUSTRATION

புத்த மத 4 ஆம் நூற்றாண்டு நூலான 'அபிதர்மகோஸபாஷ்யம்' (Abhidharmakośa-bhāsya) த்தின் படி  80,000 யோசனை அகலமும் 80,000 யோசனை உயரமும் கொண்ட  இதே மேரு உலகின் நடுவில் இருக்கிறது,  இதற்குத் தெற்கே ஜம்புத்வீபம் (பாரதம்)இருக்கிறது. புத்த மத நம்பிக்கையின் படியும் இந்த மேரு மலையைத் தான் சூரியனும் சந்திரனும் சுற்றுகின்றன.  மலையின் நான்கு புறமும் ஒவ்வொரு உலோகங்களால்  அமைந்து இருக்கிறது.  கிழக்குப் பகுதி முழுவதும் 'ஸ்படிகம்'(CRYSTAL ),  தெற்குப் பகுதி நீலம் / கோமேதகம்(LAPIS LAZULI ), மேற்கு  முழுவதும் 'சிவப்பு மாணிக்கம்'(RUBY), வடக்குப் பகுதி மலையோ முழுக்கத் 'தங்கம்' (GOLD ).

ஜைன மேரு

சரி, இந்து புத்த மதங்கள் தான் இப்படிச் சொல்கின்றன என்று ஜைன மதத்தை எட்டிப் பார்ப்போம். ஜைன மத நம்பிக்கையின் படி மேரு மலை 'ஜம்புத்வீபத்தால்' சூழப்  பட்ட உலகின் நாடு நாயகமாக 100 யோசனை விட்டமுள்ள ஒரு வட்ட வடிவாக வியாபித்து நிற்கிறது.  ஆர்யபட்டரின் (Aryabhatiya) வரையரைப்  படி 1 யோசனை தூரம் என்பது 11.5 கிலோ மீட்டர் ( 9 மைல்கள்).  ஜைன அண்டவியலின் படி, இந்த மேருமலையைச் சுற்றி இரட்டை சூரிய சந்திரர் இருக்கின்றன.  ஒர் சூரியனும், சந்திரனும் மேரு மலையைச் சுற்றி வருகின்றன, மற்றொரு இணை அமைதியாக அப்படியே நிலையாய் நிற்கிறது.

ஜைன மதத்தில் மகா மேரு

இன்னும் உங்களை விடுவதாய் இல்லை.

ஒவ்வொரு தீர்த்தங்கரரும் இந்தப் பூமியில் பிறந்த பிறகு, அவர்களின் தாயை ஆழ்ந்த உறக்க  நிலைக்குள்  ஆழ்த்தி விட்டு, குழந்தை மட்டும் மேருவின் உச்சிக்கு இந்திரனால் அழைத்துச் செல்லப்படுகிறார்.  அங்கே விலை மதிப்பில்லா செயல்களால் அந்த தீர்த்தங்கரர்கள் நீராட்டப் பெற்று இந்திராதி தேவர்களால்  அவரது பிறப்பைக் கொண்டாடி விட்டு மீண்டும் பூமிக்கு அழைத்து வரப்படுகிறார்கள்.

இந்தோனேசிய- ஜாவா  மேரு

நாம் இப்போது இந்தோனேசியாவின் சாவகத்தில் இருக்கும் சுமேரு மலையைக் கொஞ்சம் பார்ப்போமே.  இந்தத் தொடரே, '.எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய உறவைத் தேடுவது தானே'.  என்னவெல்லாம் பாரதத்தில் புராணமாக விளங்குகிறதோ அவை எல்லாம் பூரணமாக சாவகத்தில் இருக்கிறது, கொஞ்சம் 'மேம்படுத்தப்பட்ட  அல்லது திருத்தப்பட்ட பதிப்பாக'  (ADVANCED / REVISED VERSION ). 

சுமேரு மலை-கிழக்கு ஜாவா, இந்தோனேசியா

கிழக்கு ஜாவாவில் இருக்கும் சுமேரு மலை தான் சாவகத்தின் மிக உயர்ந்த மலை. இன்று வரை உயிருடன் நெருப்பை உமிழ்ந்து வரும் பல எரி  மலைகளும், பூமிப்பந்தின் அடி  வயிற்றில் இருந்து இந்த மலைகள் லாவாவினைத் துப்புவதால் வளம் மிகுந்த மண்ணாக விளங்கும் சாவகம் பூமியின் மற்ற பகுதிகளுடன் வயதில்  ஒப்பிட்டுப் பார்க்கையில் குழந்தை தான்  இன்னும்.

கெதிரி (KEDIRI ) அரசின் பழைய ஆக்கங்களைத் தழுவி சாவகத்தின் பிறப்பைக்  கூறும் நூலாக பழைய சாவாகக் கவி நடையில் ( KAWI LANGUAGE ) 15 ஆம் நூற்றாண்டின் மஜாபாஹித் அரசர் காலத்தில் வெளிவந்த  தாந்து பகலெரான்(Tantu Pagelaran ) என்னும் நூல் தெலுங்கு மறு ஆக்க (TELUGU REMAKE ) திரைப்படம் போல ஒரு கலவையைத் தெறிக்க விடுகிறது. 

சாவகத்திற்கு மேரு வருகிறது 

இந்த நூலின் படி, சாவக தீவு உருவாகி விட்டது.  முதற் கடவுளாகிய சிவன் படைப்புக் கடவுளான பிரம்மனையும், காக்கும் கடவுளான விஷ்ணுவையும் அழைத்து சாவகத்தீவை உயிர்களால் / மனிதர்களால் நிரப்புமாறு கட்டளை இடுகிறார்.  அந்த நேரத்தில் சாவகத் தீவு பெருங்கடலின் மீது மிதந்து கொண்டும் தள்ளாடிக் கொண்டும் இருக்கிறது, மிகவும் குறைந்த அடர்த்தியும்,  குறைந்த  அழுத்தமும் கொண்டு இருந்ததால் .  மிதக்கும் சாவகத்தை நிலை நிறுத்த ஒரு ஆணி அடித்தார் போல பாரத்த்தில் இருக்கும் மேரு மலையின் ஒரு பகுதியைக் கொண்டு வந்து சாவக பூமியின் மேல் இறக்கி விட வேண்டும் என்று கடவுளர் எண்ணினர் .  ஒரு பெரும் பகுதி மலையை விஷ்ணு ஆமை வடிவமாய் மாறித் தம் முதுகில் சுமந்து கொண்டார்.  வழியில் மலை உருண்டு சரிந்து விடாது இருக்க பிரம்மா ஓர் நாகமாக மாறி மலையைச் சுற்றி இறுகப்பிடித்துக் கொண்டார்.  சாவகம் வந்து சேர்ந்தவர்கள் மேற்குச் சாவகத்திலேயே பிரமாண்டமான அந்த மலையை இறக்கி வைத்து விட்டனர்.

குடை சாய்ந்த சாவகம்

அவ்வளவு பெரிய மலையை சாவகத் தீவின் மேற்கு ஓரத்தில் வைத்தவுடன் ஏற்கனவே தள்ளாடிக்கொண்டிருந்த சாவகம் மேற்குப் புறத்தில் கீழிறிங்கி கிழக்குப்புறம் மேலே உயரத்தில் தொங்க ஆரம்பித்து விட்டது .

(பாரதத்தில் வடக்கு அழுத்தப்பட்டு தெற்கு தூக்கி நின்ற கதை தான்). அடடா இவ்வளவு துன்பத்துடன் வங்காள விரிகுடாவைக் கடந்து வந்தது ஒன்றும் வேலைக்கு ஆகவில்லையே என்று வருத்தி அப்படியே மலையை நகர்த்தி கிழக்கு சாவகத்தில்  கொண்டு போய் வைத்தனர் இருவரும். அடுத்த தலைவலி. கிழக்கு ஜாவா கீழே மூழ்க ஆரம்பித்தது, மேற்கு ஜாவாவில் பாரம் குறைவாக இருந்ததால்.   என்னடா வம்பாப்  போச்சுன்னு, மலையினை  கொஞ்சம் உடைத்து ஜாவாவின் மேற்கில் இருந்து கிழக்காக ஒரு பரவலாக எரிமலைகளையும் குன்றுப் பகுதிகளையும் உருவாக்கினார்கள்.  பாரம் அதிகம் ஆகும் வேளைகளில் எரி மலை வாய் வழியாக பூமியின் வயிற்றுப்பகுதியில் இருந்து குழம்பாகத் (லாவா ) துப்பி விடலாமே!.. அடடா.. என்னவொரு 'சமநிலை அமைப்பு'? (BALANCING SYSTEM )

இப்போது கடவுளர் இன்னும்  ஒரு சிறிய முனையை வெட்டி கிழக்கு ஜாவாவின் வடமேற்கு பகுதியில் வைத்தனர். அந்த முனைதான் இன்றும் 'பவித்ர மலை' (MOUNT PAVITRA) என்ற பெயருடன்  பெனாங்குங்கான் (Mount Penanggungan) மலையின் ஒரு பகுதியாக இருக்கிறது.   மற்ற பெரிய பகுதி  சிவபெருமானின் இருப்பிடமாகக்  கருதப்படும் சுமேரு (SUMERU)மலை என்கிற சாவகத்திலேயே அதிக உயரம் கொண்ட (12,060 அடி ) எரி மலை ஆகும்.

மேற்கு முதல் கிழக்கு வரை சிந்திய மலைகள்-TOPOGRAPH

மேற்கு ஜாவாவில் இருந்து கிழக்கு ஜாவா வரை இறைவர் இருவரும் பகிர்ந்து வைத்த ( நிலம் சமன் பெறுவதற்காக ) மலைகள் தான், லாவு ( Lawu), வில்லிஸ் (Wilis),கெலுட் ( Kelud),கவி (Kawi), அர்ஜுனோ (Arjuno) மற்றும்  வெளிராங் (Welirang) மலைகளாகும்.

அடுத்த பகுதியில் ஒரு பொதிகையில் வாழ்ந்த அகத்தியரை  சாவகத்தில் சந்திப்போம் ... 

கருத்துகள்

  1. From historical point of view to linguistics features. Well written, mama.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அற்புதம்! அற்புதம்!! அற்புறம்!!!

      தகவல் மலைகளின் சிகரமாக தீர்க்கமான திறனாய்வு.

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60