எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது- தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)-9. சண்டி

எங்கே சென்றாலும் தேடி இணைக்கும் இனிய கதை இது- தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)-9. சண்டி

 

                                 1988 மார்ச் மாதம் சண்டி கலசானில் நான் 

சண்டி

1988 ஆம் ஆண்டு இறுதி வாக்கில் மத்திய சாவகத்தின் (CENTRAL JAWA) துறைமுக நகரமான செமராங் (SEMARANG) நகரில் தங்கி இருந்து பணி புரிந்த  காலம்.  பணிக்குச் செல்லும் வழியில் மலை மீது இருக்கும் ஒரு கோவில் கண்ணுக்குள் வந்து போகும்.  லிங்க வடிவில் உயர்ந்த வட இந்திய பாணியில் பிரமிடு போன்ற கோபுரங்களைக்  கொண்ட அந்தக் கட்டிடம் கண்ணில் பட்டதுமே எதோ ஒரு அலை மனதில் தோன்றும்.  அது என்ன கோவில் என்று மகிழுந்து இயக்குபவரிடம் கேட்டேன்.  அது அந்தக்காலத்துச் 'சண்டி' என்றார் .  பின்னர் தான்  தெரிந்தது இந்தோனேசியாவில், குறிப்பாக சாவகம் முழுவதும்  இந்த 'சண்டி' என்று அழைக்கப்படும் கோவில்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பெற்ற புராதன சமயம் சார்ந்த கட்டிடங்கள்/ கோவில்கள் என்று.



அதன் பிறகு மத்திய ஜாவாவில் வசித்த காலம் முழுவதும் பல சண்டிகளை சுற்றி வந்து விட்டேன். அவ்வப்போது மனம் இன்னும் சண்டிகளுக்குள் பிரவேசமாகி விடுகிறது.   சண்டி என்ற சொல் நமது அகண்ட பாரதத்தின் சமக்கிருத மொழியில் இருந்து பெறப்பட்டதாக்கும்.  'சண்டிகா' என்பது பார்வதி தேவியின் ஒரு உக்கிர வடிவமாக, தீமைகளை அழிக்க வந்த தெய்வமாக பாரத தேச புராணங்கள் குறிப்பிட்டு இருக்கின்றன.  சும்பன்  -- விசும்பன் என்னும் அரக்கர்களை ஒழிக்க பயங்கரத் தோற்றத்துடன் திகிலூட்டும் பெண்ணாக வடிவெடுத்த சக்தியின் அவதாரமே சாமுண்டி என்று அழைக்கப்படும் சண்டி தேவதை.  சும்பன்-விசும்பனால் அனுப்பப் பட்ட  சண்டன்-முண்டன் எனும் அரக்கர்களை அழித்து  சண்டி ஆனவள் சாமுண்டி ஆனாள் .  நவராத்திரி நாயகியாக நாம் வணங்கும் சாமுண்டீஸ்வரி தான் இந் சண்டி. நவராத்திரி விழாவிற்கு முன்னர் நான் எழுதிய பாடல் இதோ :

சண்ட       முண்ட               சும்பவி           சும்பவென

அண்ட      மதிர்த்த           அரக்கரை     உதிர்த்த- சா

முண்ட     மாயவளை    முகமலர         துதிக்கும்

மண்ட      லமிந்த              மாதவத்           திரு நாளில்



இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அரித்துவாரில் காஷ்மீரத்து மன்னர் சுசத் சிங் என்பவரால் தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட சண்டி கோவில் மிகவும் பிரசித்தம்.  1928 ஆம் இந்தக் கோயில் கட்டப்பெற்ற போதிலும் 8 ஆம் நூற்றாண்டிலேயே சண்டி மூர்த்தம் தனை  'ஆதி சங்கரர்' இங்கு நிறுவி விட்டார்


CHANDI DEVI TEMPLE IN HARIDWAR-UTTARKHAND

'சண்டியர்' என்று யாருக்கும் அடங்காதவரை நாம் அழைப்பது உண்டு.  'சண்டாளன்' என்ற வார்த்தைக்கும் வேர்ச்சொல் இதுவேஇப்படிப் பல நினைவுகள் இங்கே இந்தோனேசிய சாவகத்தில் 'சண்டி' என்ற பெயரைக்  கடக்கும் போதெல்லாம்.

சண்டிகேஸ்வரர் என்று சிவ பெருமானின் சொத்துக்களை பரிபாலனம் செய்து வருபவர், சிவ ஆலயங்களின் வடக்குப் பிரகாரத்தில் அமர்ந்து இருப்பார்.  ஆழ்ந்த யோகத்தில் அமர்ந்து இருக்கும் இவரிடம், மென்மையாக அவரின் யோக நித்திரை கலைந்து விடாத வண்ணம்சிவன் சொத்தில்  இருந்து எதையும் எடுத்துச் செல்லவில்லை.. தூசிகூட..  என்று காட்டவே கைகளை உதறிக் காட்ட வேண்டும் என்ற வழக்கம் ஏற்பட்டது.. தற்போது இந்த மரபு அறியாதவர்கள் தான் அவரை எழுப்பும் வண்ணம் கைகளைத் தட்டி சப்தம் ஏற்படுதுக்கிறனர்சண்டி என்கிற வார்த்தை பாரதத்தில் எப்போதும் உலவி வந்திருக்கறது.

இந்தோனேசியாவில்  இது பற்றிய செய்திகளை அணுகி ஆராய்ந்த போது  அறிந்து கொண்ட தரவுகள் தான் இனி வருபவை.  அப்படியே கொஞ்சம் வரலாற்றுக் காலமும் அரசர் பரம்பரைகளும் வந்து போகலாம். மெதுவாகச் செல்வோம். என்ன? யாருப்பா சரித்திரம், பூகோளம் எல்லாம் படிக்கிறது என்று பயப்படாமல் உடன் வாருங்கள்.

இந்தோனேசியாவில்இந்து-புத்தா காலம்’ (HINDU -BUDHIST PERIOD) என்பது  4ஆம் நூற்றாண்டு முதல் 15 ஆம் நூற்றாண்டு வரையான காலத்தைக் குறிக்கும்.  சண்டி என்றாலே இந்து-புத்த கோவில் என்பதே பொதுவான பொருள்.  அது என்ன இந்து மதமா இல்லை புத்த மதமா?  இந்து-புத்தா என்றால் எப்படி என்று நீங்கள் குழம்பிக் கொள்வது தெரிகிறது.  இந்தோனேசியாவில் தனியாக இந்து மதம் கோலோச்சி பின்னர் புத்த மதமும் இந்தியாவில் இருந்தே இங்கே குடியேறி அதன் பின் எதுக்கு வம்பு என்று இந்து-புத்தம் என்ற  இணைவும் (FUSION ) இங்கே காலம் கொண்டு வந்து சேர்த்த கோலம்.

இந்தோனேசிய மொழியின்  அதிகாரப் பூர்வமான 'பெரிய அகராதி' (KAMUS BESAR BAHASA INDONESIA ) சண்டி என்பது, பண்டைய இந்து மற்றும் புத்த மத மன்னர்கள் மற்றும் மத குரு மார்கள் இறந்த பிறகு அவர்களைத் தகனம் செய்த சாம்பல் வைக்கப்பட்டுள்ள இடமாக  அல்லது வழிபாட்டுத் தலமாக பயன்படுத்தப்பட்ட கல் கட்டிடம் என்று பொருள் கூறுகிறது.  இந்தோனேசியத் தொல் பொருள் ஆய்வு நிறுவனமோ, சண்டி என்பது பாரம்பரிய இந்து மற்றும் புத்த மதச்  சடங்குகளும், விழாக்களும் நடை பெறும் புனிதத் தலம்  என்று குறிப்பிடுகிறது.  இருப்பினும், நகரங்களின் கோட்டை வாயில்கள், பொதுக் குளங்கள், குளிக்கும் இடங்கள், நகர்ப்புற இடிபாடுகள் போன்ற மதச்சார்பற்ற இடங்களும் 'சண்டி' என்றே அழைக்கப்பட்டன. அதே வேளையில் கல்லறை ஆலயங்கள் 'சுங்குப்' (CUNGKUP) என்று அழைக்கப்பட்டன.  இந்தோனேசியாவில் பொதுவாகவே கோவில் என்பது 'சண்டி' என்றே குறிக்கப்படுகிறது. 

சிவலிங்க சமாதிகள் :

நமது தமிழகப் பகுதிகளில் சைவத்தைப்  பின் பற்றியவர்கள் மறைந்த பின்னர் அவர்களை அடக்கம் செய்யப்பட்டு  அவர்களுக்கு எழுப்பப்படும் சமாதி மேல் சிவலிங்கத்தினை நிறுவி (பிரதிஷ்டை) ஜீவன் சிவனானது என்று குறிக்கும் பழக்கம் உண்டு.  சிவனைப்போல அருவமாகி சிவனுடன் இரண்டறக் கலந்து விட்டார் என்பதே இந்த வழக்கு.    இந்த சைவ மதக் வழக்கத்தினை  அதன் பின் வந்த புத்த மதமும் இந்தோனேசியாவில் பின்பற்றி இருக்கலாம் .

 

சமாதி மேல் நிறுவிய சிவலிங்கம்

இந்தோனேசிய புத்த மதத்தினர் 'புத்த விஹாரை' களையும் சண்டி என்றே அழைக்கிறாரக்ள் .  கூம்பு வடிவ கோபுரங்களைக் கொண்ட 'பாலி' இந்துக்களின் 'புரா' வும் சண்டி என்றே அழைக்கப்படுகிறது.  சண்டி என்று எழுத ஆரம்பித்து விட்டால் தனியாக ஒரு புத்தகமே எழுதலாம் என்கின்ற அளவுக்குச் செய்திகள் இருக்கின்றன. அவ்வளவு குறிப்புகள் எழுதாவிட்டாலும் கொஞ்சம் விவரமாக எழுதலாம் என்று உங்கள் அனுமதியைக் கேட்கிறேன். அப்போது தான் கொஞ்சமாவது செய்திகள் பரிமாறிக்கொள்ள முடியம்.

நிறைய சண்டிகளுக்கு நாம் செல்லப்போகிறோம். சிறிய சண்டிகளை முதலில் பார்த்து விட்டுப்  பின்னர் பெரிய சண்டிகளைக் காண்போம் .

சண்டி கலசான் (CANDI KALASAN):

கலசான் என்ற  ஊர் மத்திய ஜாவாவில் நான் வசித்த செமராங் நகரில் இருந்து அதிக தூரத்தில் இல்லை.  எனக்குத் தெரிந்த மேடானில் பிறந்த ஒரு 'தமிழ்' கோவில் பூசாரி, கலசான் என்ற ஊரின் பெயர்க்காரணம்  என்ன தெரியுமா என்று கேட்டார் .  அவரே பதிலும் சொன்னார். அந்த ஊரில் இருக்கும் புத்தர் கோவில் கலச வடிவில் இருக்கிறது.  'சண்டி கலசம் ' என்பதே மருவி 'சண்டி கலசான்'  ஆகி விட்டது என்கிறார்.  கலசம் என்ற தமிழ்ச் சொல் முற்றிலும் தேரின் மீதும்  கோபுரங்களின் மீதும் கீழ்ப்பகுதி அரை வட்ட வடிவில் உள்ளீடு அற்றும் மேல் பகுதி கூம்பு வடிவிலும் இருக்கும் உச்சப் பகுதியையே குறிக்கும்.  பூசை முறையிலும் மாவிலையும் தேங்காயும் வைத்த கலச பூசை நமது நடை முறை.


CANDI KALASAN

மத்திய சாவகத்தின், யோக்கியகர்த்தா சிறப்புப் பகுதி (நமது யூனியன் பிரதேசம் போன்றது) யில் 'கலசான்' மாவட்டத்தின்    'தீர்த்தோ மர்த்தினி' என்ற  கிராமத்தில் இருக்கும் இந்தக்  கோவில் புத்த மதத்தைச் சேர்ந்தது என்று வகைப்படுத்தப்பட்டு இருக்கிறது. இங்கே இந்து மற்றும் புத்த மதங்களுக்கு இடையில் அதிக வித்தியாசம் இல்லாத சடங்கு முறைகள் கடைப்பிடிக்கப் பட்டதாகத் தெரிகிறது.   நெதர்லாந்து நாட்டின் ஆதிக்கத்தில் இந்தோனேசியா காலனியாக இருந்த கால கட்டத்தில் 1927 முதல் 1929 வரை வான் ரொமாண்ட் (VAN ROMONDT ) என்ற ஹாலந்து நாட்டினர் மிகச் சிரமத்துக்கு இடையில் இந்தக் கோவிலைப் புனரைப்புச் செய்தார்.  கற்குவியலாக தனது சொந்த முகத்தை இழந்து கிடந்த இந்தக் கலசக்  கோவில் அவரது மேற்பார்வையில் சீரமைக்கப்பட்ட பின்னர் தான் தெரிந்தது இந்தக் கட்டடத்தின் 46 x 46  மீட்டர் அகலம் கொண்ட ஒரு சதுரத்தின் மீது 34 மீட்டர் உயரத்துடன் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது என்று.  இந்தக் கலசான் கோவிலுக்கு இன்னொரு பெயர் 'காளி பெனிங் ' ( KALI BENING).  காளி என்றால் ஆறு.. பெனிங்  என்றால் தெளிந்த நீர்.. ஆக  தெளிந்த நீர் ஓடும் ஆற்றின் கரையில் இது அமைந்து இருப்பதனால் அந்த இடத்தைக் குறிக்கும் வகையில்காளி பெனிங்  கோவில்’ என்றும் இது குறிப்பிடப் படுகிறது.  இதே பகுதியில் இந்தக் கோவிலில் இருந்து அதிக தூரத்தில்  இல்லாமல் 'சாரி கோவில்' (SARI TEMPLE ) அமைந்து இருக்கிறது.  இரண்டுமே நேர்த்தியும் கலை  அழகும் மிக்கவையாக இருக்கின்றன.  இரண்டு கோவில்களுமே  'வஜ்ராலேபா' என்னும் கிரிஸ்டல் மணல், கால்சைட், சால்கோபைரைட் மற்றும் களிமண் போன்ற மூலப்பொருட்களை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து வெளிப்புறப் பூச்சு மற்றும் சுதை வேலைகள் செய்யப்பெற்ற கட்டப்பட்ட கட்டிடங்களாகும் .


1988இல் நான்  எடுத்த நிழற்படம் 

இப்போது நீங்கள் கொஞ்சம் வரலாற்றுக்குள் நுழைந்து தான் ஆக வேண்டும்இந்தோனேசியாவில் இரண்டு அரச வம்சங்கள்

1.சஞ்சயா எனும் இந்து மத அரச வம்சம்  ( ஜெயம் என்ற வெற்றிதனைக் குறிக்கும் சொல் இந்த சஞ்+ஜெயா = சஞ்சயா  )

2.சைலேந்திரர் என்னும் புத்த மதம் தழுவிய அரச வம்சம் ( மலை அரசர் என்ற பொருளில் சைலம் = மலை +இந்திரர் = அரசர் )

இப்போது இது போதும். இதற்கு மேல் கொஞ்சம் கொஞ்சமாக பின்னாளில் பார்ப்போம்.

இந்து மதத்தைச்  சார்ந்த  சஞ்சய வம்ச மன்னன் தேஜா பூர்ண பனங்க  ராணா (ராக்கை பனங்கரான்), புத்த மதம் தழுவிய சைலேந்திர வம்ச மன்னனின்  வேண்டுகோளுக்கு இணங்க தனது அரசுக்கு உட்பட்ட பகுதியான கலசானில்  ஒரு கோவிலும், அருகில் சாரி என்ற இடத்தில ஒரு கோவிலுமாகக் கட்டினான்.  ப்ரநாகரி எழுத்துக்களில் , சமக்கிருத  மொழியில் பொறிக்கப்பட்டுள்ள கலசான் கல்வெட்டு (INSCRIPTION  OF  KALASAN ) இந்தக்  கோவில் நிர்மாண ஆண்டினை சக வருடம் 700 (கி .பி.778) என்று குறிக்கிறது. 

KALASAN INSCRIPTION IN PRANAGARI LETTERS

சரி எதற்காக இந்த இரண்டு பௌத்தக்  கோவில்கள், இந்து மன்னனால் நிர்மாணிக்கப்பட்டன  என்ற வினாவுக்கு  நாகப்பட்டினத்தில் 1006 ஆம் ஆண்டு ராஜ ராஜா சோழனால் சுமத்திராவின் ஸ்ரீ விஜய மன்னனான மார விஜய துங்க வர்மன் வேண்டுகோளுக்கு இணங்க கட்டப்பெற்ற புத்த விஹாரையான சூடாமணி விஹாரை எனும் புத்த கோவிலை எடுத்துக் கொள்ளலாம்.  நட்பு நாடுகளில் இருந்து வணிகம், அரசியல், தொழில், கல்வி என்று வரும் மாற்று மதத்தினரை பண்போடு நடத்தி அவர்கள் வழியில் வழி பாடுகள் நடை பெற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் மாற்று மதக் கோவில்கள் மன்னர்களால் நிறுவப்பட்டன, மற்ற மதங்கள்  மதிக்கப்பட்டன .

(TARA (FEMALE BODHI SATTWA)

ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு தேவர் அல்லது தேவி இருப்பார்கள்இந்தக் கோவில் யாருக்காக மற்றும் எதற்காக நிறுவப்பட்டது என்பது தானே நமது தேடலாக இருக்கும்.  புத்த மத்த்தில,  'போதி சத்வா' என்று ஒரு நிலைபோதி சத்வா என்பது முழுமையாகப் 'புத்தராக' தன்னை மாற்றிக்கொள்ளும் முன்னர் 10 நற்பண்புகளை கற்றுச் சிறந்து விளங்குவது ஆகும். இப்படி போதி சத்வர்களாக தன்னை பதப்படுத்திக் கொள்பவர்களில் ஆண்களும் உண்டு பெண்களும் உண்டு. நமது தமிழகத்தின் காஞ்சி மாநகர் இப்படி எத்தனையோ போதி சத்வர்களைக் கொண்டதாக இருந்து இருக்கிறதுபெண் போதி சத்வர்கள், 'தாரா' அல்லது 'ஆர்யா தாரா' (திபெத்திய மொழியில் ஜெட்ஸன் டோல்மா JETSUN DOLMA) என்ற புனிதப் பெயருடன் அழைக்கப்படுகிறார்கள்இந்தப் பெண் புத்த துறவி முறை இன்றைக்கும் திபெத்திய 'தாந்திரீக பௌத்த' வழியில் பாதுகாக்கப்பட்டு/ கடைப்பிடிக்கப் பட்டு வருகிறதுதாரா என்ற வார்த்தை, சுதந்திர ஆன்மாவினையும், வாழ்க்கையின் உண்மையான சாதனையையும் வெற்றியினையும் குறிக்கும் ஒரு சொல்தாரா என்ற தேவதை, வாழ்க்கை சூனியமானது, இந்த உலகம் நிலையற்றது என்று கற்பிக்கும் பௌத்த மதக் கொள்கையைக்  குறிப்பவள்.

தாரா தேவி எனும் பெண் புத்த சத்வாவிற்காக கலசான் கோவிலும், புத்த குருமார்கள்/ பிக்குகளுக்காக அருகில் சாரி கோவிலும் நிறுவப்பட்டதாகத் தெரிகிறது.

சரி இப்போது கோவிலுக்குள் செல்வோம்.  45 x 45 மீட்டர் என்ற அளவில் சதுர வடிவ அடித்தளம். 34 மீட்டர் உயரம். மூன்று முறை இந்தக் கோவில் புனரமைக்கப்பட்டு இருப்பது கட்டிட இடர்ப்பாடுகளில்  இருந்து தெரிகிறது.  கோவிலின் தெற்கு வாசலில் இரண்டு போதி சத்வர்களின் உருவங்கள் காணப்படுகின்றன.


TARA AT THE WALL OF CANDI KALASAN

கட்டிட அமைப்பபை அவதானித்தால், அடிப்பகுதி சதுரம், மேற்பகுதி எண் கோணம்  (Octagonal), உச்சிப்பகுதி ஸ்தூபி எனப்படும்  தம்ப வடிவம்.  தெற்கு வாசலைத் தவிர மற்ற பகுதிகள் மிகவும் மோசமாகச் சிதிலமடைந்து இருக்கின்றன. முன்பு பிரதான கருவறையில் வெண்கலச்சிலை இருந்ததாக செவி வழிச் செய்திகள் கிடைக்கின்றன. மற்ற அறைகளும் வெறுமையில் தான் பொறுமை காண்கின்றன.   


DECORATIVE MOTIF AROUND THE WALLS- CANDI KALASAN

ஆனால் அருமையான சிற்ப வேலைப்பாடுகள் அமைந்த கோவில்தேவதைகள், ஸ்தூபிக்கள், புத்தர்கள் , தேவ கணங்கள், இவற்றுடன் சீர் வரிசை போன்ற பழங்கள், உணவு  வகைகள், இவற்றைத் தலையில் தாங்கிச் செல்லும்  பெரிய தொப்பை உள்ள குள்ள மனித உருவங்கள் என்று இன்றைக்குத் திரையில் வரும் காட்சிகளையும் மிஞ்சும் வண்ணம் அந்த நாளில் வடித்து வைத்து இருக்கிறார்கள்.

 

DECORATED WALLS OF CANDI KALASAN

கலசமாக இருக்கிற மேல் தளம் மூன்று நிலைகளைக் கொண்டு இருக்கிறது.  உச்சியில் இருக்கும் கலசத்தில் மட்டும் 8 அறைகள் இருக்கின்றன. இரண்டாவது அடுக்கு எண் சதுரத்தில்  இருக்கிறது.  கீழ்ப்பகுதி 20 சதுரங்க கோவில்களைக் கொண்ட கட்டிடமாக இருக்கிறது.


MAKARAS AT THE ENTRANCE OF CANDI KALASAN

கோவிலின் வாயிலில் வாய் திறந்து நிற்கும் இரண்டு மகரங்கள். அதற்குள் சிம்மங்கள். கோவிலின் சுற்றுச்சுவர் மத்தியில் இருந்து அழகான சிற்பங்கள்உள்ளே அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனம், அங்கு ஒரு யானையின் பின்னே ஒரு சிங்கம்கோவிலைச் சுற்றி தேவதைகள் அவர்கள் கைகளில் தாமரை மலர்கள்ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் மேலே ஒரு காலா, கலையழகான தலை அலங்காரத்துடன்கூம்பு வடிவில் கூந்தல் முடிக்கப்பட்டு அதன் மேல் சூட்டப்பட்ட மலர். அந்தத் தலை தனைச் சுற்றிலும் பலவிதமான இசைக்கருவிகளை இசைக்கும் தேவ கணங்கள்..


KALA  AT  THE ENTRANCE TO THE TEMPLE- CANDI KALASAN

இன்றைக்கு நாம் கட்டடிடங்களுக்கு புதுமை என்று பேசும் ஒன்றுடன் ஒன்றாகப் பிணைக்கும் (INTERLOCK)  கற்கள், ஒன்றை ஒன்று பிடித்துக் கொண்டு இருக்கின்றன.

இனிமேல் தான் உலகின் பெரிய புத்த மதக் கோவிலான 'போரோ புடூர்' உட்பட மத்திய சாவகத்தின் மிகப்பெரிய  சிவாலயம் 'பெரம்பனான்' போன்ற கோவில்களை மன்னர்களின்  சரித்திரப் பின்னணியோடு பார்க்க இருக்கிறோம் .  ஒரே சிறிய கோவிலில் இதற்கு மேல் நேரம் செலவழிக்க வேண்டாமே.......


கருத்துகள்

  1. இவ்வளவு ஆராய்ச்சி செய்து இந்த பதிவை எழுதியிருப்பது பாராட்டுக்கு உரியது
    மிக அருமையான எழுத்து நடையில் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது
    அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அரிய விஷயங்கள்.நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி... தொடர்ந்து எம்மோடு பயணித்தால் களைப்பின்றி பயணம் இனிமை பெறும்

      நீக்கு
  2. Elaborate painstaking appreciable attempt.
    I differ in one respect. Saivites don't bury the dead but put to fire. No question of putting Linda on the grave
    You can send this article to magazine
    I am in the editorial board of Namaduchettinad monthly community journal.
    You can edit and forward to me address to chief edttor

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60