17.புத்தம் சரணம் கச்சாமி....தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)
17.புத்தம் சரணம் கச்சாமி....
தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்)
எங்கே சென்றாலும்
தேடி இணைக்கும் இனிய கதை இது-
அன்புத்
தமிழ்ச் சொந்தங்களே .....
இன்றைய இந்தோனேசியாவினுடனான அன்றைய பாரத, தமிழகத் தொடர்புகளை மிகச் சுருக்கமாக அறிவதற்கு இரண்டு பூகோளப்பகுதிகளின் சரித்திர நிகழ்வுகளையும், அந்தந்தக் கால கட்டத்தின் அரசுகளைப் பற்றியும், கிடைக்கும் ஆவணங்கள், அகழ்வாய்வுத் தகவல்கள் இவற்றைக் கொண்டு மீளவும் அந்தக் காலத்திற்கும் தூரத்துக்கும் பயணப்படுவதே இந்தத் தொடர். இயன்றவரை மிகக்குறைவாகவே நிகழ்வுகளின் நிழல்களைத் தொட்டு வருகிறோம்... தலைவலி வராமல் தவிர்க்கும் முகமாக..
இன்றைக்கு
நாம் காண்பது போல அல்லது இடைக்காலத்தில் நடைமுறையில்
இருந்தது போல பல்வேறு மதங்கள் மக்களிடம் அன்று இல்லை. மதம் என்னும் மதம் பிடிக்காத இயற்கையோடு இயைந்து
வாழ்ந்தவர் தென்னாடு என்னும் பொன்னாடு பெற்ற தமிழர். வடக்கிலிருந்து வழுக்கி இங்கே தென்னாடு சேர்ந்த
மதங்கள், 1.பிராமண மதம், 2.சிரமண மதம் என்று இரண்டு பெயர்களில் வழங்கப்பட்டது. பிராமணம்
என்பது வைதீக மதம். வைதீகம் (பிராமணம் ) அல்லாத
பௌத்தம் (BUDHISM )மற்றும் ஜைனம் (JAINISM ) இரண்டையும் குறிக்கும் சிரமணம் என்பதே
'சமணம்' என்று ஆயிற்று.
சமணர்கள், தமது/ தாமறிந்த கருத்துக்களை சாமானிய Mr.பொது ஜனமும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற பெரு நோக்குக் கொண்டவர்களாக இருந்தனர். பிராமண மதத்தினரோ தாம் மட்டும் உண்டால் போதும், பிறர் அறியக் கூடாது என்று குறுகிய எண்ணத்துடன் பாமரன் அறியாத சமக் கிருத மொழியில் எழுதி வைத்துக் கொண்டதோடு, அவற்றைப் பிறர் வாசிப்பதோ , மற்றவர் வாசிக்கும் போது அதனைக் கேட்பதோ தண்டனைக்கு உரிய குற்றம் என்று சட்டமும் வடித்து வைத்தனர்.
மேலே
காணும் கருத்துக்கள் என்னுடைய கற்பனை அன்று.
மயிலை திரு.சீனி.வேங்கடசாமி அவர்களின் ஆய்வுக் கட்டுரையின் பதிவு
ஆகும். ( குறிப்பு: நூல்: பௌத்தமும் தமிழும் .. பதிப்பு ஆண்டு: 1940... அத்தியாயம் 9).
திருக்கோட்டியூர்
நம்பியிடம் எவருக்கும் தெரியக்கூடாது என்ற இரகசியக் காப்புப் பிரமாணதின் மேல் தாம்
பெற்றுக் கொண்ட எட்டெழுத்து மந்திரத்தின் பொருளை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்
என உயர்ந்த கோபுரத்தின் மீதேறி அனைவரும் கேட்கும்
படி உபதேசித்த இராமானுஜர் 'நரகம் புகுவார்' என்று சபிக்கப் பட்டார், என சரித்திரம் சொல்லுகிறது.
பாளி
மொழியில் ஒரு பௌத்த மதக் கதை. இரண்டு பார்ப்பனத் துறவிகள் புத்தரிடம் சென்று கௌதமரின் வாய் மொழிகள் 'சந்த' மொழியில் மட்டுமே
இருக்க வேண்டும். அதனை விடுத்து வெவ்வெறு நாடுகளுக்குச்
சென்று புத்த மதத்தை போதிக்கும் தேரர்கள் அந்தந்த நாட்டின் மொழியிலேயே உபதேசம் செய்கின்றார்கள்
என்று 'வத்தி' வைத்தார்களாம். 'சந்த' மொழி
என்பது தமக்குள் மட்டுமே அறியும் படியாக வைத்து இருந்த சம்ஸ்கிருதம்'. அதற்கு பகவன், பௌத்தம் போதிக்க வேற்று நாடுகளுக்குச்
சென்றவர்கள் செய்வது 'சரியே. நீங்கள் புத்தரின்
வாய்மொழிகளைச் சந்தபாஷையில் அமைத்து எழுதக்கூடாது; அப்படிச் செய்கிறவர் யாராயிருந்தாலும்
தீங்குசெய்த குற்றத்திற்குள்ளாவர். புத்தரின் வாய்மொழிகளை ஒவ்வொருவரும் அவரவரது தாய்மொழியிலேயே
அறிய வேண்டும்" என்றாராம்.
இதே
போல, ஜைன மதக் கொள்கைகளும் அந்தந்த நாட்டினரின் தாய் மொழியின் வாய் மொழியாகவே பரப்பப்
பட்டதாக, சித்தசேன திவாகரர் எனும் ஜைன குருவின் கதை கூறுகிறது. இவ்வாறாக சிரமண மதத்தினர் எங்கெங்கு தங்கள் கொள்கைகளைப் பரப்பச்
சென்றனரோ அங்கெல்லாம் அந்தந்த மண்ணின் மொழியில் படைப்புகளைச் செய்தனர். தமிழ்த் தாய்க்கு அணிகலன்களாக மணி மேகலை மற்றும்
குண்டலகேசி இவற்றை ஜைனரும், சிலம்பு, 'வளை'யாபதி, சீவக 'சிந்தாமணி' இவற்றை ஜைனரும்
படைத்து அளித்தனர்.
எதற்காக
இந்த ஆன்மிக பின் பற்றாளர்களின் மொழி ஆளுமை
இங்கே குறிப்பிடுகிறோம் என்று தானே நினைக்கிறீர்கள்? இந்த ஆன்மீகப் பரவல் அல்லது புதிய மதத்தின் தழுவல்கள்
அந்தந்த நாடுகளின் தாய் மொழியிலேயே அமைந்து இருந்தமை தான் தென் கிழக்கு ஆசிய நாடுகளில்
நமது பாரத/ தமிழகத் தொடர்புகள் முளை விட விதைகளாக
அமைந்தன. கி.மு. 4 நூற்றாண்டுக்கு முந்தைய
காலத்தைய மட்பாண்ட, பீங்கான் பொருட்கள் தென் கிழக்குச் சீமையில் கிட்டுவது என்பதே,
இந்தக் கால கட்டத்திலேயே கடற்கரைக் குடியிருப்புகள்
அமைக்கப்பட்டு கடல் வணிகம் சிறப்புற்று விளங்கி இருக்கிறது என்பதற்குச் சான்று.
KALUGUMALAI-THOOTHUKUDI JAIN COMMUNITY
பாரத
அரசாட்சி அமைப்பு முறைகள் மற்றும் மதம் பற்றிய கருத்துக்களைத் தழுவிய தென் கிழக்கு
ஆசிய நாடுகளின் ஆட்சியாளர்களால் இந்தியக் கலாச்சாரம் மெல்ல இந்தப் பகுதிகளில் வேர்
பிடிக்க ஆரம்பித்தது. இதுவும் அவர்கள் இந்து
மதத்தைச் சார்ந்தவர்களா அல்லது பௌத்த வம்சாவளியினரா
என்பதை பொறுத்தே அமைந்தது. ஆகவே இந்த மதங்களின்
பரவல் மற்றும் மதங்களுக்கிடையே அவ்வப்போது ஏற்பட்ட மோதல்கள் இவற்றைப் புரிந்து கொள்ளத்தான் இந்த மதங்களை
பற்றிய குறிப்புகள் தேவைப்படுகின்றன.
மௌரியப்
பேரரசைத் தவிர்த்து பாரதத்தின் சரித்திரம் முழுமை பெறாது. சந்திர குப்தா மௌரியரின் பேரனான மகா அசோகர்
2300 ஆண்டுகள் கடந்து இன்றும் வாழும் சரித்திரம்.
அதே போல கலிங்கம் தமிழகத்துக்கும், ஏன் இந்தோனேசியாவுக்கும் என்றும் தொடர்பில் இருந்த பாரதப் பகுதி. கலிங்கத்தின் தொடர்பு தஞ்சைத் தரணிக்கு மட்டும் அல்ல இங்கே சாவகத்திற்கும்
மிக நெருக்கத்தில் இருந்து இருக்கிறது என்ற செய்திகளை அடுத்து வரும் பகுதிகளில் அலசுவோம். அசோகரின் காலம்
பொது ஊழிக்கு முன் 302 முதல் பொ .ஊ .மு.232 ஆகும். 2023 இல் வாழ்கிறோம் என்ற நினைவைக் கொஞ்சம் மறந்து
2,300 ஆண்டுகளுக்கு பின்னோக்கிப் பயணித்து அன்றைய கால
கட்டத்தின் மத வழிபாட்டு முறைகளை மனதில் நிறுத்திக் கொண்டால் தான் நமக்கு விளங்கும்.
இரத்தம் ஆறாக பிடித்த கலிங்க நாட்டின் மண்ணெல்லாம் செந்நிறமாய் குற்றுயிர்களின கூக்குரல்களின் எதிரொலியாய் எங்கும் கேட்க, வல்லூறுகள் வட்டமிடும் அந்த பூமி அசோகருக்கு களிப்பைத் தராமல் குற்ற உணர்வின் கொடுமையையே கொடுத்தது. ஆடி அடங்கும் அவல வாழ்கை இது என்று அறிந்த மனதுக்கு மருந்திட்டது கவுதம புத்தரின் 'ஆசையே துன்பத்துக்கு காரணம்' என்ற அன்பின் சூத்திரம்.
இந்த புத்த சங்கத்தில் இனி வரும் உயிர்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்று உறுதி எடுத்து புத்த மதத்தை எங்கும் பரப்ப ஏற்பாடு செய்தார் அசோகர். தம்மம் சரணம் கச்சாமி என்று புத்த தர்மத்தை நிலை நாட்ட விழைந்தார். அசோகரின் ஆணையின் படி அவரது தம்மம் (தர்மம்) ஒரு மதமோ அல்லது மத அமைப்போ அல்ல.ஆனால் ஒரு தார்மீக சட்டம் (ஒரு பொதுவான நடத்தை விதி).
ஒன்பது தேசங்களுக்கு கொள்கை பரப்பிகளை அனுப்பி வைத்தார். மொகாலி புத்த திஸ்ஸா (Moggaliputta-Tissa) எனும் மூத்த துறவியின் தலைமையில் பௌத்த கொள்கைகளை பூமியின் அனைத்துப் பகுதிகளிலும் பரப்ப தர்ம தூதர்களை (தம்ம தூதா) அனுப்பி வைப்போம் என்று அசோகரது ஆட்சிக்காலத்தில் பாடலிபுத்ரத்தில் கூட்டப்பெற்ற மூன்றாவது பௌத்த மாநாட்டில் எடுக்கப்பட்டது.
1.காஷ்மீரம்
காந்தாரம் (Kashmir and Gandhara)=மஹா யாந்திகா (Majjhantika/Mahyantika)
2.மஹிஷ்
மண்டலா (Mysore Mandala )= மஹா தேவ தேரர் (Mahadeva Thera)
3.வனவாசி/
வட கனரா (Vanavasi/(Northern Kanara)= ரக்ஹித
தேரர் (Rakkhita Thera)- தமிழகப்
பகுதிகளுக்கும் சேர்த்து
4.அபராந்தகம்
(Northern Gujarat Kathiawar, Kachchh and Sindh)=யோன தம்ம ராக்ஹிதா (Yona
Dhammarakkhita)
5.மராத்தா(Maharashtra)=மஹாதம்மராக்ஹிதா
(Mahadhammarakkhita)
6.யவனம்
(Greece ) =
மஹா ரக்ஹிதா (Maharakkhita)
7.ஹிமாவந்தா
(Himalayan Region) = மஹிமா (Majjhima)
8.சுவர்ணபூமி
(Myanmar/Thailand) = சோனா மற்றும் உத்தரா (Sona and Uttara)
9.இலட்சத்தீவு/இலங்கை
(Lakshadweep & Srilanka)=மஹிந்திரா மற்றும் சங்கமித்திரை ( Mahindra and Sanghamitra).
மஹாபாரதத்தில்
காந்தாரி யின் சொந்த ஊராகக் காட்டப்படும் காந்தாரம் இன்று கந்தஹார் (Kandahar). இன்றைக்கு
தாலிபான் வசம் இருக்கும் ஆப்கானிஸ்தானின் தென் பகுதி மாநிலம். அன்றைய நாட்களில் புத்த மதத் துறவிகளால் நிறைந்து
அவர்கள் பாரத தேசத்துக்கும் நமது தமிழத்தின் காலடியில் கிடக்கும் இலங்கைக்கும் ஆன்மிகச்
சுற்றுலா வந்த காலம்.
அசோகரின்
ஏற்பாட்டில் மூன்றாவது பௌத்த மாநாடு கூட்டப்பட்டது. வழக்கம் போல் மாநாடு, கூட்டம், கலந்தாய்வு என்றால்
சச்சரவு வராமல் இருக்குமா. இந்த மூன்றாவது
பௌத்த மாநாட்டிலும் இரு பிரிவுகளாக கொள்கை ரீதியாக பிளவு வெடித்தது. பழைய (ordhodox) கருத்துகள் கால மாற்றத்திற்கு ஏற்றார்
போல மாற்றப்பட வேண்டும் என ஒரு பிரிவினர் வாதிட்டனர். கௌதம புத்தரின் கோட்ப்பாடுகளை மாற்றுவது சரி அல்ல
என்று பழமை விரும்பிகள், முதிய துறவிகள் அடம்
பிடித்தனர். மாற்றி அமைக்கப்பட்ட கொள்கைகளை
பின் பற்றுபவர்களின் மதம் 'மஹா யான' புத்தம். புதிய கொள்கை வடிவமைப்பை ஆராய்ந்து பார்க்காமல்
இருந்த பழைய பிரிவு 'தேரா வாத' புத்தம். நம்ம
தமிழ் மொழி எவ்வளவு அரிய செம்மொழி என்பதற்கு
இந்த இரண்டு 'மஹாயான' மற்றும் 'தேரவாத' புத்தம் எனும் வார்த்தைகளே சான்று.
ஆனை (ELEPHANT) எனும் தமிழ்ச் சொல் திரிந்து 'யானை' ஆனது. நமக்கெல்லாம் தெரியும் ஆனை என்பது அம்பாரி வைத்து பயணம் செய்யப் பயன்படுத்தப் படும் 'வாகனம்'. நம்ம தமிழின் 'யானை'யை சமக் கிருதம் கடன் வாங்கி 'யானா' என்று வாகனத்தை குறிக்கும் சொல்லாக்கிக் கொண்டது. மஹா யானா என்றால் புத்த மதத்தில் மேன்மையடையப் பின் பற்ற வேண்டிய பெரிய (மஹா) வாகனம் (யானா).
தேரா மன்னா ...செப்புவது உடையேன்
சிலப்பதிகாரத்தில், கணவனை ஆராயாது கொன்று விட்ட மன்னனை நோக்கி கண்ணகி கோபாவேசத்தோடு, தேரா மன்னா ...செப்புவது உடையேன் ..அதாவது தேரா (ஆராயாத மன்னா... நான் சொல்வதைக் கேள்) என்பாளே ... அந்த 'ஆராயாத' , தேரா எனும் தமிழ்ச் சொல் தான், காலத்தின் மாற்றங்களை அறியாது, பழமையைப் பிடித்துக் கொண்டிருக்கும் பழைமைவாதிகளின் வாதத்தைக் குறிக்கும் வகையில், 'தேரா வாதம்' என்று ஆயிற்று. இந்த தேரா வாதத்துக்கு இன்னொரு பெயர் 'ஹீன யானம்'..அதாவது 'ஈன வாகனம்'. தமிழர்களுக்கு 'மானம் ,.ஈனம்' என்ற உணர்வுகள் உயிரினும் மேலானவை.. மானம் அழிவது ஈனம் என்று வாழ்பவர். மஹா யானத்தைப் பின் பற்றுபவர்கள், பழமை வாதிகளின் தேரா வாதத்துக்கு (அவர்கள் வாதம் தேரா வாதமாம் ) வைத்த இன்னொரு பெயர் தான் 'ஈன வாகனம்''.. இது சமக் கிருதமாகி. 'ஹீன யானா ' என்றாகி விட்டது.
தம்மம்
(தர்மம்) சரணம் கச்சாமி
சங்கம்
சரணம் கச்சாமி…
எல்லாமே தமிழ் மயம் தான் ...
என்னடா
இது இந்தோனேசியாவைப் பற்றிப் பேசுவோம் என்று சொல்லி விட்டு தமிழ்ப் பெருமை பீற்றிக்
கொண்டு இருக்கிறேன் என்கிறீர்களா?. இவை எல்லாம் எவ்வாறு தமிழும், தமிழரும் கிழக்கு ஆசிய
நாடுகளின் புத்த மதத்திலும் இரண்டறக் கலந்து இருக்கிறது என்பதன் முன்னோட்டம்
தான். இனிக் காணப்போகும் இந்தோனேசியா புத்த
மத அரசுகள், புத்த ஆலயங்கள் அவற்றின் தமிழக பாரதத் தொடர்புகளை அறிவதற்கு இந்த வரலாறு நமக்குள் பதிந்து
ஆக வேண்டும்.
இப்போதைக்கு
அசோகச் சக்கரவர்த்தி வெளியே அனுப்பி வைத்த
சமயப் பரப்பாளர் பட்டியலில் மற்றவர்களை மறந்து விட்டு சுவர்ணபூமி என்று குறிப்பிடப்பட்டு
இருக்கும் இன்றைய மியன்மர் (பர்மா) தாய் லாந்து, மற்றும் இந்தோசீனப் பகுதிகளுக்கு சோனா
மற்றும் உத்தரா இவர்களுடன் பயணம் செய்வோம்.
கவனமாக உடன் வாருங்கள் தோழமைகளே ...
Great and Nice Post 🌹
பதிலளிநீக்குVery interesting your history research.congrats.
பதிலளிநீக்குThank you dear good friends.. Your comments would ignite to research more and write a lot.
பதிலளிநீக்குYour articles evoke lot of interest in history . In Maundeeswara temple,Thiruvanmiyur , one Budda statue is in outer prakaram in dilapidated condition on the ground.There are similar jain,budda traces in many old temples.Probably, Bhakthi cult replaced the old belief of Jainism and Buddhism from Tamil landscape from 7 th century BCE.
நீக்கு