அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2..பகுதி: 8 MGR ம்....MVR ம்...

 

அசை  போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2

 பகுதி: 8

 MGR ம்....MVR ம்...

 அன்பு உடன் பிறப்புக்களே,

  செஞ்சோற்றுக் கடன் என்று கேட்டு இருக்கிறோம்.  யாரேனும் ஒருவர் தான் வாடும் காலங்களில் ஆதரித்தால் அதிலும் முக்கியமாக உணவு அளித்தால், அவருக்கு அந்த நன்றியை மறவாமல் விசுவாசமாக இருப்பதை செஞ்சோற்றுக்கடன் என்றுதான் இதுவரை நினைத்து இருந்தேன்.  நம் தேவகோட்டை மக்கள் அதற்கெல்லாம் ரொம்ப ரொம்ப மேலே…

 ஆர்ச் வளவை ஒட்டி திரு.ராம் ஐயர் சிற்றுண்டிக்கடை ஒன்று இருந்து இருக்கிறது.  மிகவும் குறைந்த விலையில் நல்ல ருசியில் தரமான இட்லி, மொச்சை மற்றும் இவரது கார சட்டினி மிகவும் பிரியமானதாம்.. உண்மையில் அந்தக் கடை நினைவில் இருந்தது, ஆயின் அதிகமாக இழுக்க வேண்டாமே என்று அதை விட்டு விட்டேன்.  அந்த உணவின் ருசியின் நன்றியில் இருந்த நம் அன்பர்களால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  என்னை ஐந்து ஆறு பேர் உரித்து எடுத்து விட்டார்கள்..   ஆய்ஞ்சு விட்டார்கள்.  இன்னொருவர், இதன் எதிரே இருந்த கணேச பவன் விடுபட்டு விட்டதே என அங்கலாய்த்து இருந்தார்.   காசு கொடுத்து சாப்பிட்ட இடங்களுக்கே இவ்வளவு விசுவாசிகளாக செஞ்சோற்று கடன் நினைக்கும் தேவகோட்டை 'நா' வரசர்களுக்கு  நன்றியோடு,  இந்தப் பகுதியை ஆரம்பிக்கிறேன்.  ஐயா, ராம் ஐயர் கடை நம் பதிவில் ஏற்றப்பட்டு விட்டது..  என் பணி முடிந்தது… இனி உங்கள்  பணி … பின்னூட்டத்தில் இட்லியில் ஆரம்பித்து கார சட்னி வரை நாவின் சுவை முடிச்சுகளை வருடி நினைவு கூறலாம்.. காத்திருக்கிறோம்.

 நேராக விஷயத்துக்குப்  போய்  விடுவோம். சிலம்பணி சன்னதி தெரு, எதிர்பார்த்ததற்கும் மேலான நேரத்தை எடுத்துக்கொள்ளும் போலத்  தெரிகிறது.  இங்கு இருந்த ஆளுமைகள் அப்படி.  அவர்கள் நகரின் பல பாகங்களில் மட்டுமல்ல, நாட்டின் பல பாகங்களுடனும் தொண்டால், சேவையால், உறவால் நெய்யப்பட்ட உயிர் இழைகள். 

 

இப்போ சன்னதி தெரு 53 ஆவது இல்லம்.  இந்தப்பகுதியில் இருக்கும் 60 வயதைக் கடந்த பலருக்கும் கூட இந்த இல்லத்தில் ஆயுவேத வைத்தியர் டாக்டர். நரசிம்மன் அவர்கள் இருந்து தேவி நகர் மக்களின் மருத்துவச் சேவை செய்து வந்தார் என்பது தெரியவில்லை.  இவரை நான் சிறு வயதில் கேள்விப்பட்டு இருக்கிறேன்.  என் நினைவு சரியானது என்றால் இவர் 1969 ஆம் ஆண்டு வரை நம் நகரில் மருத்துவ சேவையில் இருந்தார். இவர் பற்றிய பல அரிய  தகவல்களை நமது வழக்கறிஞர் வெங்கடபதி ஐய்யா அவர்கள் நினைவுகளின் ஆழ் கடல் முத்துக்களுக்காக அள்ளி  வழங்கினார்கள் .  அவருக்கு உங்கள் அனைவரின் சார்பாகவும் இந்த வேளையிலே நன்றி செலுத்துகிறேன்.

 

இந்த நரசிம்மன் டாக்டர் மகப்பேறு மருத்துவத்தில் மிகவும் கை ராசிக்காரராக விளங்கினார்.  தற்போது தியாகிகள் பூங்காவுக்கு வடக்கே திருப்பத்தூர் சாலையில் இயங்கி வரும் நகராட்சி அலுவலகம் புதூர் அக்கிரகாரத்தில் இயங்கி வந்தது.  இது பற்றிய எமது செய்திகளை விரிவாக முதல் பாகத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன் . 

  

இவரது உதவியாளராக (midwife ) ஆக இருந்து மகப்பேறு மருத்துவத்தில் தேவகோட்டையில் புகழ் பெற்று இருந்தவர் தான் திருமதி ருக்மணி அம்மாள் .  நமது 'அசை  போடும் தேவகோட்டை நினைவுகள்' தொடரின் முதல் பகுதியே நவராத்திரி விழாவில் இவரது இல்லத்தில் நடைபெறும் கொலு பற்றிய செய்திகளோடு தான்.  லட்சுமி பிக்சர் பேலசுக்கு பின் புறம் சிலம்பணி வடக்கு அக்ரஹாரத்தின் கிழக்கில் முதல் வீடு இவருடையது தான் என்பது ஊரே அறிந்த செய்தி.  இந்த ருக்மணி அம்மாவின் இல்லம் நமது வழக்கறிஞர் வெங்கடபதி அவர்களின் சகலையான திரு.விஜயராகவன் அவர்களின் தந்தை அட்வகேட்  திருவேங்கடம் அவர்களிடம் இருந்த வாங்கப் பெற்றது.  ருக்மணி அம்மையார் அவர்களின் மகன் திரு.முருகேசன் இலட்சுமி பிக்சர் பேலஸ் என்று பெயரிடப்பட்டு இருந்த பழைய சினிமா கொட்டகையின் 'பட வீழ்த்தி இயக்கி'  யாக இருந்தவர்.  என்ன, புரியவில்லையா?  சில ஆங்கில பதங்களுக்கு சரியான தமிழ்ப் பதம் தேடினால் விளங்க நேரம் பிடிக்கும். தொடர்ந்து ஆங்கிலச் சொல்லையே பயன் படுத்தி வந்ததானால் தான் தமிழில் மாற்றும்போது அதனை புரிந்து கொள்ள  மூளை நேரம்  எடுத்துக் கொள்கிறது.  ஆயின் தொடர்ந்து தமிழில் கொஞ்சம் சிரமத்துடன் புழங்கி வந்தால் அப்படியே மனதில் பதிந்து விடும்.  செந்தமிழும் 'நா'ப்பழக்கம்.

 

இந்த நரசிம்மன் டாக்டரின் மகன் ஸ்ரீதரன், தமிழ் விற்பன்னர் சொ .சொ .மீ  சுந்தரம் ஐயா அவர்கள், நமது நினைவுச் சுரங்கம் வழக்கறிஞர் ஐயா வேங்கடபதியின் தாய் மாமா மகன் இராமசாமி , மாநிலத்தில் முதலாவது மாணவராக விளங்கிய சம்பத், ( இவர் பெயரே STATE FIRST சம்பத் ), மாமாங்கத்தார் இராமநாதன் என்ற செந்தில், நீதியரசர் A.R .இலக்குவனார் அனைவரும் ஒன்றாக நமது நகரத்தார் உயர் நிலைப்பள்ளியில் பயின்றவர்கள்.  


சொ.சொ.மீ.சுந்தரம் ஐயா

இதில் டாக்டர்.நரசிம்மனின் மகன் ஸ்ரீதரன் உயர் கல்விக்கான ஸ்காலர்ஷிப் பெற்று முதுகலை முடித்து புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பேராசிரியராக பணி ஆற்றினார்.  தேவகோட்டை  மண் வளம் எத்தகைய மனித வளம் கொண்டது என்பதற்கு காட்டாகவே இதனைக் குறிப்பிடுகிறேன்.

 

JUSTICE AR.LAKSHMANAN WITH PRESIDENT 

இந்த நரசிம்மன் டாக்டர் தேவகோட்டை நகராட்சி சார்பில் நடத்தப்பட்ட ஆயுர்வேத மருத்துவமனையின் மருத்துவர்.  அந்தக் காலத்தில் சென்னை மருத்துவக் கல்லூரியில் டாக்டர் ஸ்ரீ ஹரி என்பவர் புகழ் பெற்ற மருத்துவப் பேராசிரியர்.   இவர் நமது நகரில் பல்லாண்டு காலம் பணி  புரிந்த டாகடர் இராசகோபால் அவர்களுக்கு தாய் மாமா.. மூதறிஞர் இராஜாஜி, எம்.எஸ்.சுப்புலட்சுமி,பால முரளி கிருஷ்ணா போன்ற பிரபலங்களுக்கு இந்த டாக்டர் ஸ்ரீஹரி தான் மருத்துவர்.  



மருத்துவப் பேராசிரியர் ஸ்ரீஹரி மூதறிஞர் இராஜாஜியுடன்

மருத்துவப் பேராசிரியர் ஸ்ரீஹரி, மருத்துவர் MVN.இராகவனுடன் ,(மருத்துவர் இராசகோபால் அவர்களின் அண்ணன்)

தமிழக அரசின் முன்னாள் அமைச்சர் H .V.ஹண்டே, இந்த நரசிம்மன், மருத்துவர் இராஜகோபால், அவரின் உடன்  பிறந்த அண்ணன் இன்னும் பலர் இந்த மருத்துவப்  பேராசிரியரின் மாணவர்கள்.   


டாக்டர். H.V.ஹண்டே

டாக்டர்.இராசகோபால் வயதில் இவர்களுக்கு  இளையவர்.   முதலில் குறிப்பிட்டு இருந்த படி தேவகோட்டை நகரில்   1950~60 களில் மருத்துவர் நரசிம்மனை கை ராசி மருத்துவர் என அனைவரும் அறிவர்.

 

பால முரளி கிருஷ்ணா

மருத்துவர் நரசிம்மன் வாழ்ந்து வந்த சிலம்பணி சிதம்பர விநாயகர் சன்னதி தெரு, கதவு இலக்கம் 53க்குத்தான் தேவகோட்டை நகராட்சியின் மருத்துவராக  மரு.நரசிம்மனுக்குப் பிறகு வந்த மரு.இராசகோபால் வந்தார். மதுராந்தகம் வரதராஜன் ராஜகோபால் தான் நமது மருத்துவர் M .V .இராசகோபாலன் அவர்களின் முழுப்பெயர்.  இப்போது அவர் பற்றி சில சுவை மிகுந்த சம்பவங்கள்.

 ஒவ்வொருவர் வாழ்வினையும் அவரவர் இளம் பிராயத்தில் கடந்து வந்த துன்பங்களும் வலிகளும் கேளிக்கைகளுமே வடிவமைக்கின்றன .  இளமையில் வாழ்வில் போராடியவனுக்குத்தான் செல்வந்தன் ஆன பிறகும் வாழ்வில் பணத்தின் அருமை தெரியும்.  கல்வி கற்க இயலாத கர்ம வீரர் தான் தமிழகமெங்கும் பள்ளிகளைத் திறந்து வைத்து இருள் கவிழ்ந்த ஏழைகள் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்தார்.   பசி என்று இளமையில் அறிந்திருந்த புரட்சித் தலைவர் மக்கள் திலகம் அவர்களால் தான் செவிக்குணவோடு வயிற்றுக்கும் ஈய  வேண்டிய அவசியம் உணரப்பட்டது.  அதே போல இளம் பிராயத்தில் நாம் எவருடன் இணக்கமாக இருக்கிறோமோ அவர்களின் குணம் தான் நமக்கும் ஒட்டிக் கொள்ளும்.. நல்லவர் நட்பு வல்லவர் ஆக்கும். கூடா நட்பு கேடாய் முடியும்.

 

டாக்டர்.M.V.இராஜகோபால்

மரு .இராசகோபால் அவர்களை பற்றி  அட்வகேட் வெங்கடபதி அவர்கள், தேவகோட்டை MGR என்று குறிப்பிட்டு இருந்தார்.  ஆம் எனது தேவகோட்டை  வாழ்க்கையிலேயே, நிறைய பார்த்து இருக்கிறேன் மரு .இராசகோபால் அவர்களின் வள்ளன்மையை, எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை  எமது 'தேவகோட்டை நினைவுகள்' பாகம் 1 இல் 12 ஆம்  பகுதியில் குறிப்பிட்டு இருக்கிறேன்.  அதை வாசிக்காதவர்களுக்காக அந்தப் பகுதியின் இணைப்பு இதோ...

 https://muthumanimalai.blogspot.com/2018/04/12.html

 அடித்தட்டு மக்களின் தேவைகளுக்கு 'இல்லை' என்று சொல்லத்  தெரியாதவர் இந்த MVR.  மிதி வண்டிப் பந்தயம், மாட்டு வண்டிப் பந்தயம், ஏழை  மாணவர்களுக்கு கல்விக்கான கட்டணங்கள், புத்தகங்கள் என்று இயலாதவர்கள், கேட்டு வருபவர்களுக்கு உடனே செய்து விடுவார். இந்தக் குணம் ஒன்று உயிரணுவில் (genes) இல் கலந்து  இருக்க வேண்டும், மற்றும் உறவாடிய உத்தமர் தம் தொடர்பால் ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டும்.

 MVR க்கு இந்த தாராள குணம் கருவிலும் உருவாய் இருந்தது, களத்திலும் உறவாய் இருந்தது.  நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்து இருந்து செல்வ நிலையில் உயர்ந்து இருந்த போதும், இடையில் இவரின் தந்தையார் சிலரால் ஏமாற்றப்பட்டு குடும்ப செல்வ நிலை கீழே வந்தது. தனது நீண்ட நாள் நண்பர் ஒருவருக்கு அவரது தொழிலுக்காக ஜாமீன் கொடுத்து இருக்கிறார்.  குறித்த தவணையில் அந்த நண்பர்,  தான் பெற்ற  கடனைத் திருப்ப செலுத்த இயலாமல் போகவே, கடன் கொடுத்தவர்கள் MVR அவர்களின்  தந்தை  பிணையமாக கொடுத்த சொத்துக்களை விற்று கடனை அடைக்க அழுத்தினர்.  அவ்வளவு தான்....  ஒரே நாளில் நிலைமை தலை கீழ் ஆனது. அதே நேரத்தில் MVR மற்றும் அவரது அண்ணன்  இருவரும்  படித்துக் கொண்டு இருந்தார்கள்.  இரண்டு பேர் படிப்புக்கு எந்த அரசு உதவியும் இல்லாத மேட்டுக்குடியில் இருந்தவர் பொருளாதார சிக்கலை சந்தித்து இருப்பர்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. 

  சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து கல்லூரிக்கு நடந்தே சென்று வந்தாராம் MVR.  அந்த அனுபவம் தான் அவரை கல்விக்கென எவரும் உதவி என்று கேட்டு வந்தால் இல்லை என்று சொல்லாமல் உடனே உதவி செய்யக்கூடிய மனதை அவருக்கு அளித்தது.

 அந்த சமயத்தில் MVR அவர்களின் அண்ணன் மருத்துவம் படித்துக் கொண்டு இருக்கிறார்.  திரு MVR லயோலா கல்லூரியில் இண்டர் மீடியட் படித்துக் கொண்டு இருக்கிறார்.  அதற்கடுத்து இவருக்கும் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற அவா. மருத்துவர்களுக்கு பாடம் நடத்தும் ஸ்ரீஹரி குடும்பத்தில் பிறந்து மருத்துவம் படிக்க இயலாத நிலை என்றால் மனம் எப்படி ஏற்றுக்கொள்ளும் ?   இண்டர்மீடியட் முடித்து ஸ்காலர்ஷிப்பை பெற்று மருத்துவம் சேர்ந்து விட்டார்.  ஆனால் பணம் ?  நண்பர்கள் ஆதரவுக் கரம் நீட்டி இருக்கின்றனர்.  திரு.ஹோல்லா என்ற கன்னட நண்பர், இன்னொருவர்  விஜய கிருஷ்ணன்.. 

திரு.M.R.விஜயகிருஷ்ணன் இராசகோபால், சுசிலா அம்மாவுடன்

இந்தப் பெயரை மறக்காமல் இருக்க தனது மகனுக்கும் ( எனது பள்ளித் தோழர்) அதே பெயரை வைத்து, மகனிடம் ஒரு உறுதியும் பெற்று இருக்கிறார்.  எந்த காரணத்துக்காகவும் இந்தப் பெயரை மாற்றி விடாதே என்று.. (இவை யாவும் நண்பர் விஜய கிருஷ்ணன் எம்மிடம் நட்பில் பகிர்ந்தவை).  போராடி வெற்றி பெற்று மருத்துவப் படிப்பை முடித்து சென்னை ஆலந்தூர் நகராட்சி மருத்துவமனையில் மருத்துவராக பணியில் அமர்ந்து விட்டார்.

 

அடுத்து பொன் மனச்செம்மல் வள்ளல் MGR அவர்களோடு இவருக்கு இருந்த நட்பு. மருத்துவக் கல்லூரியில் பயிலும் காலத்திலியே MVR அவர்கள் சிறந்த விளையாட்டு வீரர். இது தவிர மேடை நாடகங்களில் அதீத நாட்டம். அடிக்கடி மேடைகளில் நடித்தவருக்கு திரையில் நடிக்கும் எண்ணம் ஏற்பட்டது.  அதற்கேற்ற நல்ல உடற்கட்டும், நல்ல நிறமும், வசீகரத் தோற்றமும் கொண்டு இருந்தார்.  இவரது நெருங்கிய நண்பர் வில்லன் நடிகர் S.A.அசோகன்.  நண்பர் அசோகன் ஒருநாள் MVR அவர்களை மக்கள் திலகத்திடம் தோட்டத்துக்குத் தன்னுடன் அழைத்துச் சென்று அவரிடம் அறிமுகம் செய்து இருக்கிறார். 

திரைப்பட  நடிகர் S.A.அசோகன்

MVR க்கும் MGR க்கும் நல்ல நட்பு மலர்ந்தது.   மெதுவாக தலைவரிடம் MVR தனது திரைப்பட நடிப்பு ஆசையை சொல்லி இருக்கிறார். தலைவர் அமைதியாக MVR ஐ அருகில் அழைத்து, நீங்கள் மக்களின் உயிரைக்  காப்பாற்றும் உன்னதப் பணியில் இருக்கிறீர்கள்.  'இறைவனாகவே' மக்கள் பார்க்கும் மருத்துவராக மதிக்கப்படும் நீங்கள் மக்கள் சேவையில் இருப்பது எவ்வளவு பெரிய சேவை. அதை விட.... இந்தத் திரை உலகம் எவரை  எப்போது தூக்கும், வரை எப்போது தாக்கும் என்று எவருக்குமே தெரியாது.  என்னுடைய உரிமையான அறிவுரை... நீங்கள் மக்களுக்குச் சேவை செய்யும் இந்த மருத்துவப் பணியிலே ஈடுபட்டு நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதே.. திரை உலகின் ஆளுமையே  இப்படிச் சொன்ன பிறகு வேறு அப்பீல் ஏது ?  ஆனால் தோட்டத்துக்கு எப்போது வேண்டுமானாலும் உரிமையுடன் செல்கின்ற அந்த நட்பு இருவர் இடையே தொடர்ந்தது. 


MGR ம்...MVR ம்...

இதே போன்ற ஒரு நிகழ்வு... நமது நகருக்கு அணி சேர்க்கும் நீதியரசரர் கற்பக விநாயகம் அவர்களின் நடிப்புக் கனவும் புரட்சித் தலைவரால் கலைக்கப்பட்டது.  இது பற்றி நீதியரசர் குறிப்பிடும் போது புரட்சித் தலைவருக்கு யார் எந்தத் துறையில் ஒளிர்வார் என்கிற தீர்க்க தரிசனம் இருந்தது என்றார்.  (நீதி அரசர் பற்றி ஆர்ச் வெள்ளாள தெருவுக்கு நகர் வலம்  செல்லும் போது  விபரமாக பார்ப்போம்).

 அப்போது ஆலத்தூர் நகராட்சியின் தலைவராக இருந்தவர் காங்கிரஸ் பேரியக்கத்தைச் சேர்ந்த T .L . ரகுபதி .  இவர்தான் MGR க்கு எதிராக காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர். ( பின்னர் இதே ரகுபதி அவர்கள் MGR  முன்னிலையில் தம்மை அ .தி.மு. க. வில் இணைத்துக்கொண்டது தனிக்கதை. ) அவரது ஆளுமைக்கு உட்பட்ட நகராட்சியின் மருத்துவமனையில் பணி  புரியும் ஒருவர் தம் எதிர் முனையினரான மக்கள் திலகத்துடன் நட்பில் இருக்கிறார் என்றால் அவரால்  எப்படித் தாங்கிக் கொள்ள இயலும் ?  MVR அவர்களை அழைத்து  இப்படி எல்லாம் கட்சி வேலை செய்வது என்றால் வேலையை விட்டுத் தூக்கி விடுவேன் என்ற தொனியில் பேச ஆரம்பித்து இருக்கிறார்.  நம்மாளு சுதாரித்துக் கொண்டார்.  நீர் என்ன எம்மை பணியில் இருந்து தூக்குவது. அதற்கு முன்னர் நான் இந்த வேலையை ராஜினாமா செய்கிறேன் என்று கடிதத்தை நீட்டி விட்டார்.

 

கடினப்பட்டு மருத்துவருக்கு படித்து அமர்ந்து இருந்த அரசுப் பணியை ஒரே நொடியில் உதறியாகி விட்டது.. அப்புறம்...

 

அடுத்த பகுதி வரை பொறுமை காப்பீர்கள் தானே ?  ....

 

கருத்துகள்

  1. இவ்வாறான பதிவுகளே நாளைய உலகிற்கு சரித்திரம் கூறும். யாரையும் விடாமல் விளக்கமாக படங்களைத் தேடி எடுத்து இப்பதிவை செய்த உங்கள் உழைப்புக்கு தலை வணங்குகின்றேன். தேவக்கோட்டை உங்கள் மூலம் உலகுக்கு வெளிச்சமாகிறது. தொடருங்கள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. So so meenachisundaram, Sampath sritharan Padmanaban and Ramanathan who became nsmvps secretary and myself were classmate and came from VI form A section (algebra)
    Ar Lakshmanan was in VI form C section in 58.
    I have visited rukmani ammal koil
    Rm shanmugam chettiar aravayal

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60