அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 12
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 12
11-10-2017
M .G .R .படிப்பகத்தில் இருந்து நேராக தொடர்ந்து வடக்கில் நடந்தால், குளக்கால் தெரு கடந்து பவானியார் வீதி, குதிரைப்பாதையில் கொண்டு போய்ச்சேர்த்து விடும். இந்தகுளக்காலுக்குள் குழந்தை வேலன் செட்டியார் சந்து. அங்கு என் அன்பு நண்பர் திரு.வேலுச்சாமி அவர்கள் குடும்பம் வசித்தது. தற்போது அவர் நாகப்பட்டினத்தில் வசிக்கிறார் . என் வகுப்புத்தோழன் லட்சுமணன் வீடும் இந்த சந்துக்குள் தான். வாராந்திர பத்திரிகைகளில் வெளியாகும் குழந்தைகள் பாடல்களைக் கத்தரித்து ஒரு பெரிய நோட்டில் ஒட்டி வைத்து இருப்பார். இவற்றில் குழந்தைக்கவிஞர் அழ .வள்ளியப்பா அவர்களின் பாடல்கள் அதிகம் இருக்கும். வாங்கி வாங்கிப் படித்து இருக்கிறேன்.
இந்த பவானியார் வீதியில் சரவணா சுப்பு அவர்கள் இல்லம் இருக்கிறது. தேவகோட்டை தியாகிகள் பார்க் அருகில் சரஸ்வதி வாசக சாலை திருப்பத்தூர் ரோடில் சேரும் இடத்த்தில் 'சரவணா சைக்கிள் டிரேடர்ஸ் ' என்று ஜெகஜோதியான கடை நடத்தினார். எல்லோருடனும் அன்புடன் பழகும் இனியவர். இவரது மகள் என் தங்கை மாலதியின் வகுப்புத்தோழி. சஞ்சய் காந்தி யின் இளைஞர் காங்கிரசில் மிக முக்கிய இடம் வகித்தார். சஞ்சய் காந்தி மறைவுக்குப் பின் அப்படியே அரசியலில் இருந்தும் ஒதுங்கி விட்டார். அவரின் தற்போதைய நிலவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கவும்.
M .G .R .படிப்பகத்துக்கு இடது புறம் சொர்ணநாதன் தெரு. நேராக்ப் பிடித்தால் நாம் முன்னால் விட்டு வந்த தொண்டியார் வீதியைத் தொடும். தி.ராம.சாமி வீட்டில் முடியும்.இதற்கு இடையில் வருவது மாணிக்கம் நடு நிலைப்பள்ளி. இதை தன் குடும்பமாக நடத்தி வந்தார்கள்.
அந்த காலத்தில் மாணிக்க வித்யாசாலையில் பள்ளியின் பின்புறம் உள்ள மைதானத்தில் பூப்பந்து (Ball Badminton ) விளையாடுவோம். எம் விளையாட்டுத் தோழர்கள்.
திரு.செல்வம் என்ற முத்துக்கருப்பன் (Ex -Pandiyan Grama Bank),
திரு.வேலுச்சாமி, தற்போது நாகப்பட்டினத்தில் வசிக்கிறார்.
திரு .ஆசைத்தம்பி.. திரு.அங்குச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் உடன் பிறப்பு. எனக்கு பின்னர் சொந்தமானவரும் கூட ..
திரு .ஆ .குமார் (தற்போது தமிழ் கொண்டல் என்ற பெயருடன் மேடைகளில் தமிழ் மழை பொழிகிறார், நல்ல ஞானம்),
திரு.கிட்டு என்ற சொர்ணம் (Ex -Indian bank),
திரு.ஆதி சேது இராமநாதன் (மதுரையில் ஒரு கல்லூரியில் வணிகவியல் விரிவுரையாளராகப் பணி அமர்ந்தார், அதன் பின்னர் சந்திக்கவே இல்லை) எல்லோரும் மாணிக்க வித்யாசாலையில் பள்ளியின் பின்புறம் உள்ள மைதானத்தில் பூப்பந்து (Ball Badminton ) விளையாடுவோம்.
அங்கு இந்த குழுவுடன் விளையாடுவது மாணிக்க வித்தியாசாலை சகோதரர்கள்
மூத்தவர் மோகன், அச்சகம் நடத்தி வந்தார்
அடுத்தவர் ஜெயராஜ்,
கடைசி சுகுமாரன்- என் வகுப்புத் தோழனும் கூட
திரு.அருள்சாமி ஐயா தே பிரித்தோ தமிழ் ஆசிரியர் அவர்களும் எங்களோடு சின்னபிள்ளையாய் விளையாட்டில் சேர்ந்து கொள்வார் . இவரது மகள் முல்லை பின்னர் டாக்டர் ஆனார். தற்போது சென்னையில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.
திரு.அருள்சாமி ஐயா தே பிரித்தோ தமிழ் ஆசிரியர் அவர்களும் எங்களோடு சின்னபிள்ளையாய் விளையாட்டில் சேர்ந்து கொள்வார் . இவரது மகள் முல்லை பின்னர் டாக்டர் ஆனார். தற்போது சென்னையில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.
இந்த பூப்பந்தாட்டம் முடிந்த பிறகு அடுத்த கூட்டம் நடக்கும் இடம் அந்த மாவு மில்லுக்கு நேர் எதிரில் உள்ள பெட்டிக்கடை.
M .G .R .படிப்பகத்துக்கு நேர் எதிரே சுப்பிரமணியன் செட்டியார் அவர்களின் உரக்கடை. பியர்ஸ் லெஸ்லி (PIERCE LESLIE ) பிராண்ட் உரங்களின் டீலர் இருந்தார். PL BRAND உரங்கள் என்று தென்னை, வாழை, நெல் பயிர்களின் படங்கள் அழகாக வரையப்பட்ட சுவர்கள் பசுமையாக இருக்கும். இதன் முன்னே ஒரு பெட்டிக்கடை. பெட்டிக்கடை என்றால் உண்மையிலேயே பெட்டியினால் ஆன கடை.
எங்கள் ஜமாத் அங்கு தான் கூடும். நகரக் கோட்டையம்மன் கோவிலுக்கு பின்னால் காந்தி பார்க்குக்கு முன்புறம் எங்கள் அடுத்த மைதானம். இங்கும் பூப்பந்தாட்டம் உண்டு. இங்கு எனக்கு மிகவும் பரிச்சயமான இடம். திண்ணன் செட்டி ஊரணி மேல்கரையில் அமைந்து இருக்கும் 'காந்தி பூங்கா'. கல்லூரி நாட்களில் அமைதியாகப் பாடங்களை மனனம் செய்யவும், மீள் பார்வை பார்க்கவும் இதனுள் சென்று ஏகாந்தமாய் அமர்ந்தது உண்டு. இந்த காந்தி பூங்கா மிகவும் பழமையானது.
அமரர் தெய்வத்திரு.சுப.பெரியகருப்பன் அம்பலார் அவர்கள்
அமரர் தெய்வத்திரு.பெரி,சுப்பையா அம்பலம் அவர்கள்
ஆங்கிலேயர் காலத்தில் நகராட்சியில் எமது மதிப்பிற்குரிய ஐயா அமரர். சுப.பெரிய கருப்பன் அம்பலம் அவர்களின் தந்தையார் திரு.ரெ.சுப்பராயன் அம்பலம் அவர்கள் தேவகோட்டையின் நகர்a மன்றத் தலைவராய் இருந்த காலத்தில் 1944 இல் திறந்து வைக்கப்பட்டது. அன்பு அண்ணன் அமரர்.பெரி.சுப்பையா அவர்கள், ஐயா. பெரியகருப்பன் அம்பலம் அவர்கள் எங்கள் குடும்பத்தின் மேல் மிகுந்த அக்கறையும் அன்பும் கொண்டவர்கள். திரு.பெரி.இரகுநாதன் எமது பள்ளித் தோழர். திரு.பெரி.கதிர்வேல் என்னிடம் Accountacy பயின்றவர்.
பிரிட்டிஷ் இந்தியாவாய் நாடு இருந்த காலத்தில் 'ரேடியோ அறையுடன் கட்டி மக்களுக்காக அமைக்கப்பட்டு இருந்த இந்த பூங்காவின் பெயர், 'விக்டரி பார்க்'. .பிரிட்டிஷ் மஹாராணியின் பெயரில். இந்த இடத்தை இலவசமாக பொதுத்தேவைக்காக வழங்கியதோடு பண உதவியும் அளித்தவர் ஜனாப்.M.E.முகமது கனி சாஹிப் பகதூர் அவர்கள்.
.பெரி
சுதந்திரத் தின விழா, மற்றும் குடியரசு தின விழா நாட்களில், இந்தப் பூங்காவில் நுழைவு வாயிலில் இருக்கும் காந்தி சிலைக்கு வண்ணம் பூசி, மாலை அணிவித்து, அதன் முன்னர் அமைந்து இருக்கும் திடலில் தேசியக் கொடியை ஏற்றுவித்து பின்னர் கபாடிப் போட்டிகள் நடத்திய அருமையான கனாக் காலம் அது.
இங்கு தேசிய நிகழ்வுகளான இந்திய சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் உண்மையான இந்திய தேச பக்தர்கள் ஆகி விடுவோம். இந்த குழு (Team ) தனி. இதில் ...
திரு.முத்துராமலிங்கம் - முன்னாள் ராணுவ அலுவலர், பின்னாள் தபால் தந்தி அலுவலர் . தேவகோட்டை தலைமை தபால் தந்தி அலுவலகத்தில்,தந்தி அடிக்கும் இடத்தில் இவரைப் பார்த்து இருப்பீர்கள். டெலிகிராப் கண்டு பிடித்த சாமுவேல் மோர்ஸ் இவரிடம் வந்தால் இவரது வேகத்துக்கு முன்னால் கை கால் தந்தி அடிப்பார். அவ்வளவு வேகமாக நம்முடன் உரையாடிக்கொண்டே 'கட்டு.. கட ..கட் " என்று அடித்துத் தள்ளுவார் மனிதர். விழா நடக்கும் நாட்களில் ஒலி வாங்கியை கையில் கொடுத்து விட்டால் போதும், அறிஞர் அண்ணா, கலைஞர், நடிகவேள், திருமுருக கிருபானந்த வாரியார் அனைவரும் அவர் குரல் வளையில் வந்து தங்கி விடுவார்கள். நான் சிவகங்கை சேதுராமனுக்கு முன் பார்த்த பல குரல் மன்னன். இப்போது அவர் எப்படி இருக்கிறார் என்று அறிய ஆவல். தெரிந்தவர்கள் பின்னூட்டம் கொடுங்கள்.
அண்ணன் முத்துராமலிங்கம் அவர்கள், மேனாள் இராணுவத்தினர், மற்றும் இந்தியத் தபால் தந்தி அலுவலர்
திரு.ஆ.இராசேந்திரன். நகர் மன்ற உறுப்பினர். நல்ல திறமை சாலி . மைக் கொடுத்தால் பேசுவதை கேட்டுக்கொண்டே இருக்கலாம் . திரு.ஆ .குமார் , தமிழ்கொண்டல் அவர்களின் தமையனார்.
திரு.S.P.ராஜா என்கிற புயல் ராஜன். ஒரு சகோதரனைப் போல இவரும் அடுத்து வரும் நண்பரும். இவரது தம்பி பன்னீர் செல்வம் எனது கல்லூரி வகுப்புத்தோழன். பெரிய வயது வித்தியாசம் இல்லை. ஆயின் இராஜா எனக்கு அதிக நெருக்கம் பன்னீரை விட. மாலை என்றால் ஆற்றோரம் மணலெடுத்துத்தான். ஒரே கபடி விளையாட்டு.
திரு.அப்துல் ரஷீத்...தேவகோட்டை திருப்பத்தூர் ரோட்டில் 'நஸீர் க்ளாஸ் ஹவுஸ் என்ற பெயரில் நடத்தி வந்தார் . இவரது அண்ணன் நவாப், திரு.ஆதி .ஜெயபாலன் என் சித்தப்பா பவளம் எல்லாம் ஒரு செட். அந்த வகையில் இந்த குடும்பத்துடன் உறவு. அதிலும் திரு.நவாப் அவர்கள்தான் எங்களுடன் நெருக்கமாக இருந்த, நான் பார்த்த முதல் பட்டதாரி. மதுரை வக்ப் போர்டு கல்லூரியில் அவர் படிக்கும் காலத்தில் இருந்தே எங்கள் வீட்டில் ஒருவராக இருந்தவர். இந்த அன்பு ரசீத் சித்தார் கோட்டையில் அவரது மூத்த அண்ணன் வீட்டில் படித்து விட்டு 9அம வகுப்பில் தேவகோட்டையில் படிப்பைத் தொடர வந்தார். நான் கல்லூரி புகுமுக வகுப்பில் புகுந்து இருந்த சமயம். நான் தான் நகரத்தார் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து விட்டேன் . எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் செல்வோம். பின்னர் அரபு அமீரகத்தில் பணி புரிந்தார். பின் தேவகோட்டையில் தொழில் ஆரம்பித்தார். அனைவருக்கும் உதவும் அன்பு மனம் கொண்ட தோழன். 2015 ஆம் ஆண்டு நோயின் வாயில் அகப்பட்டு மண்ணுலம் நீத்து விட்டார். கனத்த மனதுடன் இந்த பதிவில் நண்பனை நினைவு கொள்கிறேன். அன்பன் S.P.இராஜா தான் உற்ற துணையாக நண்பனுடன் கடைசி வரை இருந்திருக்கிறார்.
இந்த விழாக்களில் கபடிப்போட்டி நடத்துவோம். ஒரு மாதம் முன்பாகவே 40 பக்க நோட்டை எடுத்துக்கொண்டு கடை கடையாய் வசூல் செய்வோம். அதிகமாக நன்கொடை கொடுத்தவர்களின் பக்கத்தை மட்டும் அடுத்து கொடுப்பவர்களிடம் காட்டுவோம். அதை பார்த்து சுய கௌரவத்துக்காக கொஞ்சம் அதிகம் கொடுப்பார்கள் என்ற சைக்காலஜி ... இதில் ஆபத்பாண்டவர், அனாத ரட்சகர் டாக்டர் இராசகோபாலன் அவர்கள் தான். அவரது மகன் விஜய கிருஷணன் என்னுடன் தே பிரித்தோ பள்ளியில் பயின்றார். அப்புறம் சந்திக்கவே இல்லை.
கபடி இறுதிப்போட்டி நடக்கும் வரை கூட வசூல் ஆகாமல் எப்படி வெற்றி பெரும் அணிக்கு பரிசுத்தொகைதனை அளிக்கப்போகிறோம் என்று மயங்கி இருக்கிறோம். அந்த நேரங்ககளில் டாக்டர்.இராசகோபாலன் அவர்கள் தான், எவ்வளவு தம்பி குறைவாக இருக்கிறது என்று கேட்டு முகம் சுளிக்காமல் வழங்குவார். சில சமயங்களில் அவரின் கிளினிக்கிலேயே காவல் காத்து இருக்கிறோம். இங்கு கபடி போட்டி நடந்து கொண்டு இருக்கும்.. அங்கே அவரின் கிளினிக்கில் எங்களில் ஒருவர் தேவுடு காத்து இருப்போம். நோயாளி யாரும் வந்தால் அந்த பீஸை அவர் வாங்கி அப்படியே எங்களிடம் தந்து இருக்கிறார்.
இன்னும் பல கபடி சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. பின்னர் பார்ப்போம் அடுத்த பகுதிகளில் ..
கருத்துகள்
கருத்துரையிடுக