சிலம்பணி சிதம்பர விநாயகர்-அசை போடும் தேவகோட்டை நினைவுகள் -பாகம்: 2; பகுதி: 13

 அன்பு சொந்தங்களே ...

சிலம்பணி சிதம்பர விநாயகர் சன்னதியை விட்டு ஏனோ அகல முடியாவில்லை . எவ்வளவு சுருக்கமாகச் சொல்ல முற்பட்டாலும், 'கடுகினைத் துளைத்து கடலினைப் புகுத்திய வகையில் ஒண்ணே முக்கால் அடியில் உலகத்தையே காட்டும் வள்ளுவன் குறள் போல ஏகப்பட்ட வரலாற்றுச் செய்திகளையும் ஆளுமைகளையும் இந்த சன்னதி தெரு தன்னுள் அடக்கி வைத்து இருக்கிறது. ஆதலால் தான் எளிதாகக் கடந்து சென்று விட இயலவில்லை. முடிந்த வரை சுருக்கமாகவும், முக்கிய செய்திகள் விடுபட்டு விடாமலும் பார்த்துக்கொள்கிறேன்.



சிலம்பணி சிதம்பர விநாயகர் ஆலயம்

இப்ப சிலம்பணி சன்னதி தெருவில் இருந்த மக்களை ஓரளவு பார்த்தோம். இந்தச் சன்னதியின் சந்தோசமாய், சங்கடம் தீர்க்கும் சக்கரவர்த்தியாய், சகலரும் வணங்கும் சிலம்பணிந்த பாதம் கொண்ட சிதம்பர விநாயகர் பற்றிய செய்திகளை அசை போட்டு விட்டுக் கடப்போமே...
தனுசுகோடியில் "வீ யார்' VR சத்திரம் என்று மிக வசதிகளுடன் கூடிய 24 மணி நேரமும் அணையா அடுப்புடன் விளங்கி இராமேசுவரத்திற்கு , இராமன் வழிபட்ட ஈசுவரனை தரிசிக்க வருகின்ற பக்தர்களுக்கு அன்னதானம் சுவையுடன் வழங்கி வருவதற்காக நிர்மாணிக்கப் பட்டது 165 ஆண்டுகளுக்கு முன்னதாக . கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்த சத்திரம் 300 ஆண்டுகள் பழமையானது என்று பதிவிட்டு இருந்தேன்.
நமது அன்பர்கள் மிகக் கூர்மையான நினைவாற்றலும்,பதிவுகளில் தவறுகள் ஏற்பட்டு விடக்கூடாது என்ற பொறுப்புணர்வும் விழிப்புணர்வும் கொண்டவர்கள். அன்புக்குரிய நண்பர் நலந்தா ஜம்புலிங்கம் அவர்கள் மிகுந்த அக்கறையோடு இந்தப் பதிவினைக் கண்ட மறு கணத்தில் தான் தேவகோட்டையை விட்டு பணி நிமித்தமாக வெளியூரில் இருந்த போதும் மிக அதிகாலையிலேயே நண்பர் சபாரெத்தினம் அவர்களை விசாரித்து எனது தோலைபேசி எண்ணைப் பெற்று தவறினைச் சுட்டினார். அதாவது இந்த வீயார் சத்திரம் பற்றிய பழமையான ஆவணங்களில் பதிவான ஆண்டு 1879. அந்த ஆவணத்தில் வீயார் சத்திரம் இந்த 1879 ஆம் ஆண்டு பதிவாகி இருக்கின்ற ஆவணத்தில் அதற்கு 25 ஆண்டுகளுக்கு முன்னர் சத்திரம் தொடங்கப்பட்டதாகக் குறிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வீயார் சத்திரம் தொடங்கப்பட்ட ஆண்டு 1854 ஆகத் தான் இருக்க முடியும்... அதுதான் சரி என்று விளக்கினார். மேலும் சத்திரத்தைத் தொடங்கியவர், வீர. ராம.நாராயணன் செட்டியார். வீர.ராமநாதன் செட்டியாருக்கு 5 மகன்கள். அவர்களில் ஒருவரே இந்த நாராயணன் செட்டியார். தான் செய்த இநதப் பொதுக் காரியத்துக்கு தன்னுடைய பெயரை மட்டும் வைத்துக் கொள்ளாமல் தம் குடும்பப் பெயருடன் அனைத்துச் சோதரர்களின் பெயரையும் சேர்த்துக் கொண்டார். அவ்வளவு சோதர ஒற்றுமை அனறு. இவ்வாறு அதிகப்படியான தகவல்களையும் வழங்கினார் அன்பர் நலந்தா ஜம்புலிங்ஙம். இவர் போன்ற பொறுப்பு மிக்கவர்கள் தொடர்ந்து அவதானித்து வருவதாலும், பிழைகள் நிகழும் போது சரிபார்த்துத் திருத்தவதாலும் தான் இந்தத் தொடர் எதிர்காலச் சந்ததிக்கு நல்லதொரு நம்பகம் மிகுந்த ஆவணமாய் விளங்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. அன்பர் நலந்தா ஜம்புலிங்கம் அவர்களுக்கு நம் அனைவரின் சார்பிலும் நன்றியினைத் தெரிவித்துக் கொள்வோம்.
(1854 தனுசுகோடியில் 150ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டே இரண்டு சத்திரங்கள் தான். ஒன்று 'முகுந்த ராயர் சத்திரம்' மற்றொன்று இந்த 'வீயன்ரானா' சத்திரம். ( இன்றைக்கு இராமேஸ்வரத்தில் இருக்கின்ற நகரத்தார் சத்திரம் வேறு).
ஒரு 150 வருடங்களுக்கு முன்பு மைசூர் மஹாராஜா குழந்தை வரம் வேண்டி இராமேஸ்வரத்தில் யாகம் நடத்த வேண்டி தனது படை பரிவாரங்களோடு வந்து தங்கி இருந்து இருக்கிறார். யாகத்தில் பிள்ளையார் பிடிக்க பசுவின் சாணம் தேவைப்படவே நல்ல காராம் பசுவினை மஹாராசாவின் சேவகர்கள் தேடி இருக்கிறார்கள். அவர்களுக்கு இராமநாத சாமி கோவிலின் தென்மேற்கே தனுசுகோடி செல்லும் சாலையில் சித்தி விநாயகர் கோவிலுக்கு அருகில் தேவகோட்டை செட்டி சத்திரம் இருக்கிறது. அங்கு சென்றால் நல்ல சாதிப் பசுவின் சாணம் கிடைக்கும் என்று கேள்விப் பட்டு அங்கு சென்று அதனைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
அவர்கள் மூலம் வீயார் சத்திரத்தின் அன்னமிடும் பாங்கினை அறிந்து தானே நேரில் சென்று பார்த்து வர நினைத்து மைசூரு மகாராசா அங்கு சென்று இருக்கிறார். பார்த்தால் , வந்து போகும் பக்தர்களுக்கு தெற்கு வடக்கு என்ற பேதம் பாராது அனைவருக்கும் இல்லை என்று சொல்லாது மூன்று வேளையும் , காலையில் இட்லியில் ஆரம்பித்து, பகல் உணவு மற்றும் இரவு உணவு வரை இடை விடாது வழங்கப்பட்டு வந்ததைக் கண்டு அசந்து போய் விட்டாராம். போட் மெயில் (BOAT MAIL ) என்றழைக்கப்படும் இலங்கை வரை இணைக்கும் புகை வண்டி கூட இல்லாத அந்தக் கால கட்டத்தில் இராமநாதபுரத்தில் இருந்து மண்டபம் வழியாக உணவு சமைக்க அன்றாடம் நாட்டுப்படகுகளில் காய்கறிகள், பழங்கள் என அனைத்தும் கொண்டு வரும் மேலாண்மை அவர் மனதை மிகவும் கவர்ந்து இருக்கிறது.
போட் மெயில் பற்றிய செய்திகளை அறிந்து கொள்ள எமது முந்தைய பதிவுகளில் அத்தியாயம் 54 ஐ பாருங்கள். வாசிக்காதவர்களுக்காக கீழே அந்தப் பகுதியின் இணைப்பு கொடுக்கப் பட்டுள்ளது
அதுவரை மற்றவர்கள் நகரத்தாரை அழைக்கும் போது 'செட்டி' என்று தான் அழைத்து இருக்கிறார்கள். அன்றைக்கு மைசூரு மகாராசா இந்த சித .வீரப்பன் அவர்களின் மேல் மரியாதை கொண்டு 'செட்டி'யார்' ' என்று அனைவராலும் அழைக்கப்பட வேண்டும் என்று சொல்லி விட்டுப் போனாராம். இன்றைக்கு எல்லோருமே செட்டி'யார்' என்றே பெயரிட்டுக் கொள்கிறார்கள்.

வரலாற்றுக் காலத்திலும், பிரிட்டிஷ் இந்தியாவிலும் வணிக மையமாக விளங்கிய துறைமுக நகரம் தனுஷ்கோடி. 1964 டிசம்பர் 23 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான புயல் நள்ளிரவு 12.30.க்கு ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ஆயிரக்கணக்கானோர் உயிரை பறித்தது. மறுநாள் அதிகாலை வரை நீடித்த 120 கி.மீ. வேகத்தில் வீசிய புயலால் கடல்நீர் ஊருக்குள் புகுந்து தனுஷ்கோடியை அழித்தது.




புயலுக்குப் பின் தனுஷ்கோடி

இராமேசுவரம் –தனுஷ்கோடிப் பகுதியினை உருக்குலைய வைத்த அந்தப் பெரிய புயலில் ( 1956)பல உறுதியான கட்டிடங்கள் காணாமல் போயின, எஞ்சிய சிலவும் பலமிழந்தன. அடுத்து வந்த 1964 புயலில் ஆழிப்பேரலையின் ஆட்டம். தனுஷ்கோடி என்ற ஒரு தீவையே கபளீகரம் செய்து விட்டுத்தான் தன் கோர நாக்குகளை சுருட்டிக் கொண்ட்து. இந்தப் புயல்களிலே பலரின் பசியினையும் ஆற்றிய ‘வீயார்’ சத்திரம் இயற்கையின் பசிக்குத் தன்னையே உணவாகக் கொடுத்து மறைந்து போனது.


சிதைந்த அஞ்சல் அலுவலகம்


இந்த சத்திரம் ஆரம்பித்த குடும்பத் தலைவர் வீர.ராமநாதன் செட்டியாருக்குத்தான் சிலம்பணி ஊரணியின் தெற்கு பகுதியில் கொஞ்சம் உள்ளே வந்தால் ஒரு சமாதி இருக்கும். அந்த இடத்தில் தற்போது ஒரு அய்யப்பன் கோவில் கட்டிடத்திற்கு வாடகைக்கு சிலம்பணி தேவஸ்தானம் வழங்கி இருக்கிறது. அருகில் முன்னர் அண்ணாமலை முதலியாரின் அரிசி ஆலை இருந்தது. இப்போது நூதனம் அங்காடிக்கு வாடைகைக்கு விடப்பட்டுள்ளது.



ஐய்யப்பன் ஆலயம்

அது சரி.. சிலம்பணி சிதம்பர விநாயகர் கோவில் பற்றி பேசுவோம் என்று சொல்லி விட்டு யாரோ தேவகோட்டை செட்டியார் பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம் என்று நினைக்கிறீர்களா? தொடர்பு இருக்கிறது. இந்த செட்டியாரின் முன்னோர் தான் தொந்தியுடன் தேவகோட்டை சிதம்பர விநாயகர் கோவிலில் அந்த சிலம்பணிந்த சிவன் மகன் பாதம் நோக்கி இரு கரம் கூப்பி சிலையாய் நிற்பவர்.


சிலம்பணி சிதம்பர விநாயகர் உள் சன்னதி


இந்த சிதம்பர விநாயகர் ஆலயம் தனுசுகோடியில் அழிந்து போன இந்த தேவகோட்டை வீயார் சத்திரத்துக்கு முந்தையது. வீயன் ரானா (VR ) அள (AL ) பங்காளிகளுக்கு பாத்தியப்பட்டது. வீயார் . AL குடும்பத்து வாரிசுகள் தான், AL.AR , AL.VR , AL.ST ,AL.SP. என்று வளர்ந்து வந்த சந்ததியினர். VR சந்ததியாக VR.RM. இந்தக் குடும்பத்தில், நான் இளம் வயதில் ஓடித்திருந்த வட்டாணம் ரோடில் " கீழ வீடு, மேல வீடு" என்று இரண்டு கிளைகளாய் முளைத்தது.
இவர்கள் அனைவரின் பராமரிப்பில் தான் இந்த சிதம்பர விநாயகர் ஆலயமும் அந்த விநாயகரின் பெயரில் இருந்த மிகப்பெரும் சொத்துக்களும் இருந்தன. வழக்கம் போல் அணைத்துச் செல்லும் தன்மை இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு மேல் செல்லுபடியாகாத மனித வழக்கப்படி இவர்களுக்குள்ளும் ஆலய நிவாகத்தின் ஆளுமையில் போட்டி மனப்பான்மை பற்றிக் கொண்டு வழக்கு வியாஜ்ஜியம் என்று விரிந்து, கடைசியில் உனக்கும் இல்லை எனக்கும் இல்லை என்று அரசாங்கத்தின் அறநிலையத் துறையின் கைக்குச் சென்று விட்டது. கோவில்களில் இன்று பொது உண்டியல் என்று இருந்தாலே இந்த அறநிலையத் துறையின் கண்களை உறுத்துகிற காலம் இன்று.... அன்றைக்கும், வசதியான பல கோவில்கள் இப்படித்தான் அறநிலையத்துறைக்கு அடி பணிய வேண்டியதாயிற்று.


சிலம்பணி ஊரணி

தமது சொத்து மீது பல வழக்குகளை பல் வேறு கால கட்டத்தில் அமைதியாகப் பார்த்து வருபவர் சிலம்பணி சிதம்பர விநாயகர். இந்த்த் தொடரை வாசிக்கும் எவருக்கேனும் வழக்குகள் பற்றிய ஆர்வம் இருந்தால், ஒரு சான்றுக்காக ஆங்கிலேய நீதிபதிகள் தீர்ப்பளித்த ஒரு வழக்கை சுட்டுகிறேன். இந்த வழக்கு விபரங்களுக்கும் புகுந்தால், நாம் சிலம்பணி சன்னதியை விட்டு வெளியே வரவே முடியாது, ஆகவே வழக்கின் தீர்ப்பு வேண்டுபவர்கள் தனியே இது பற்றி ஒரு ஆய்வே மேற்கொள்ளலாம். முனைவர் பட்டத்துக்கும் முயற்சிக்கலாம்.
Sri Silambani Chidambara Vinayagar Devasthanam, Devakottai, through its Special Receiver S. Krishna Ayyar & Others v/s V.R.L.S.T.R.M. Chidambaram Chettiar
Appeal No. 44 of 1938
Decided On, 27 April 1943
At, High Court of Judicature at Madras
By, THE HONOURABLE MR. JUSTICE WADSWORTH & THE HONOURABLE MR. JUSTICE HORWILL
For the Appellants: Messrs. V.V. Srinivasa Ayyangar, P.S. Sarangapani Ayyangar, Advocates. For the Respondent: Messrs. K.V. Krishnaswami Ayyar, T.V. Ramaiah, Advocates.
Judgment Text
(Prayer: Appeal (disposed of on 27-4-1943) against the decree of the Court of the Subordinate Judge of Devakottai dated 28th July 1937 in O.S. No. 77 of 1935.)
Horwill, J.

இன்றைக்குக் கூட உலகம் முழுவதும் நிறுவப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வரும் நகரத்தார் கோவில்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் நகரத்தாரின் மேலாண்மையில் இருந்து நழுவாமல் வைத்து இருக்கிறார்கள் . அதுவே அவர்களின் நிர்வாகத் திறமைக்கு சான்று. இந்த கோவில் நிர்வாகம் அறநிலையத் துறையின் முழுக்கட்டுப்பாட்டுக்கும் வந்து விட்டால் நகரத்தார் இல்லாத இனத்தவர் கரங்களுக்கு கோவிலின் நிர்வாகப் பொறுப்பு போய்விடுமே என்ற எண்ணம் மேலிட்டது. ஆஹா ...நமது பாட்டன், பூட்டன் சம்பாதித்து இறைப்பணிக்கு என்று எழுதி வைத்த ஆலயத்தில் அவரது வாரிசுகள் யாரோ எவரோ போல எந்த ஒரு உரிமையும் இல்லாமல் இருப்பதா என்று பங்காளிகள் ஒன்று கூடி ஆலோசனை செய்து அன்றைய குடும்பப் பெரியவர் ஐயா ST .MR .VR .முருகப்ப செட்டியார் அவர்கள் வழக்காடு மன்றம் சென்று போராடி வெற்றி பெற்று அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் வீர.ராம (VR.RM ) மற்றும் வீர.அள (VR.AL) இவர்களின் வாரிசுகள் அடங்கிய (கீழ வீடு, மேல வீடு பங்காளிகள், AL.AR , AL.VR. பங்களிகள் ) மூவர் அடங்கிய பரம்பரை அறங்காவலர் குழு அமைத்து அதில் பெரியவர் ஐயா ST .MR .VR .முருகப்ப செட்டியார் அவர்கள் பரம்பரை அறங்காவலர் குழுவின் தலைவராக 40 ஆண்டு காலம் இருந்தார்கள். இவர் நமது அன்பு நண்பர் சண்முகநாதபுரம் திரு.பெத்தாச்சி செட்டியார் அவர்களின் தந்தை வழிப் பாட்டனார். நகர சிவன் கோவில் பகுதியில் எமது பால்ய நண்பர். நிறைய செய்திகளை எந்த நேரமும் வரலாற்றுப் பூர்வமாக எம்மோடு பகிர்ந்து கொள்பவர். அவருக்கு மீண்டும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வோம் உங்கள் அனைவரின் சார்பிலும்.

AL.AR.வளவு

தற்போது மூன்று அங்கத்தினர் என்று இருந்த அறங்காவலர் குழு (TRUST BOARD ) ஐந்து அங்கத்தினர் என்று உயர்த்தப்பட்டு உள்ளது. அவர்களுள் ஒருவர் தலைவராகத் தேர்வாகிறார். தேவகோட்டை கோவில்களில் சிதம்பர விநாயகர் சிலம்பணிந்த விநாயகர் மட்டும் அல்ல. செல்வம் மிகுந்த விநாயகரும் கூட..தேவகோட்டையில் வருமான வரி தாக்கல் (INCOME TAX ASSESSEMENT) இல் அதிக வரி செலுத்துபவர் நம்ம சிதம்பர விநாயகர் தான். தேவகோட்டை நகராட்சிக்கும் வரியாக பெரிய தொகையை சிதம்பர விநாயகர் தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கிறார். வேறு எந்த செல்வந்தரும் அவ்வளவு வரி செலுத்துவதில்லை . ஏனென்றால் அவருக்கு அவ்வளவு சொத்து.



வெ.ஊரணி கலங்காத கண்ட விநாயகர்

தேவகோட்டை சுற்று வட்டக் கிராமங்கள் தவிர வெள்ளையன் ஊரணி 'கலங்காத கண்ட விநாயகரும்' அவரைச் சுற்றிய வெள்ளையன் ஊரணி மார்க்கெட், நான்கு வீதிகளிலும் 'ஜே ஜே' என்று இருந்த கடைகள் அது தவிர ஆர்ச்சில் இருந்து கோவில் வரை இருந்த அந்த பெரிய நிலப்பரப்பு இவ்வளவுக்கும் சிலம்பணியானே உரிமையாளராய் இருந்தார்.
தற்போது கோவிலின் இடது புறம் இருக்கின்ற தேவஸ்தான அலுவலகம், அந்த திருமண மண்டபம், குருக்கள், சுயம்பாகி வீடுகள், அண்ணா அரங்க மேடை இவை பிள்ளையாரது ஆளுமையில் இருக்கின்றன. கோவில் ஊரணியைச் சுற்றிலும் பல இடங்கள் சிதம்பர விநாயகரின் சொத்துக்கள் தான் . வெள்ளையன் ஊரணி தெற்கும் மேற்கும் சந்திக்கும் இடத்தில் சீனிவாசா பள்ளி இருக்கும் பார்த்து இருப்பீர்கள். அதைச் சுற்றி இருக்கும் கடைகள் எல்லாம் 19 பஜார் என்று சொல்வார்கள்.. அந்த இடம் முழுவதும் சிலம்பணி விநாயகரின் சொத்துக்கள் தான். அது போக ஆறாவயல் அருகே பேராட்டுக்கோட்டை கிராமத்தில் சரி பங்கு (கண்டதில் பாதி என்பார்களே) ஒரு பாதி சிதம்பர விநாயகருக்கும் இன்னொரு பாதி மாத்தூர் கோவிலுக்கும் உரிமையானது. ஆனையடி வயல், (ஆன்றிவயல்) போன்ற பல கிராமங்கள் சிலம்பணி விநாயகருக்கு இறையிலியாக வழங்கப்பட்டு இருந்தன.


இத்தனை சிறப்புகள் உடைய பிள்ளையை நகரின் முக்கிய இடத்தில் அமர வைத்து நமது நகர மக்கள், நகரின் எல்லையைக் கடக்கும் முன், அது பழனி பாத யாத்திரையாக இருந்தாலும் சரி, சபரி மலை ஐய்யப்பனை இரு முடியோடு சென்று வழிபட்டு வரும் நிகழ்வாக இருந்தாலும் சரி, இவரிடம் அனுமதி வாங்கிய பிறகே மக்கள் நகரை விட்டு நீங்குகிறார்கள். நகரின் கிழக்கு எல்லையில் கோட்டை அம்மன் என்றால், நகர மையப்பகுதியில் சிலம்பணி விநாயகர். ( தற்போது நகரம் விசாலம் அடைந்து விரிந்து கொண்டு இருக்கிறது என்பது காலத்தின் கட்டாயம்)

கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்வோமா?

கருத்துகள்

  1. நல்ல நினைவுகள்.நெடு நாட்கள் நம்மிடம் பயணம் செய்யும். தங்களுக்கு நல்ல நினைவு ஆற்றல். வாழ்க வளர்க.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60