தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 23-ஐநூற்றுவர்
ஐந்நூற்றுவர்
இந்திய மொழிகள் மற்றும் உரைகள் எழுதப்பட்ட
பழைய கல்வெட்டுகள் தென்கிழக்கு ஆசியாவில் அதிக அளவில் உள்ளன. இந்து மற்றும் பௌத்த மதக்கருத்துக்கள்
தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மன்னர்களால் சமஸ்கிருத மற்றும் பாலி மொழிகளில் இறக்குமதி
செய்யப்பட்டாலும், அவை தென் தமிழ் நாட்டின் கிழக்குக் கடற்கரையிலிருந்து தனி நபர்கள்
அல்லது குழுக்கள் மூலமாகத்தான் பெறப்பட்டன.
காஞ்சியும், மதுரையும் சமண, புத்த மதங்களில் திளைத்திருந்த காலமும் தமிழகத்தில்
உண்டு. (உதாரணம்:'போதி தர்மர்" நிறுவிய
Shaolin Temples. ) ஆயினும் தமிழ் மொழியில்
எழுதப்பட்ட இடைக்கால கல்வெட்டுகள் சுமத்ரா மற்றும் தீபகற்ப தாய்லாந்து, தென்கிழக்கு
ஆசியா, சீனாஆகிய நாடுகளில் காணப்படுகின்றன.
இவற்றின் மூலம் தமிழ் வணிகர் சங்கங்கள், இந்த நாடுகளில் நிரந்தரத் தமிழ் குடியிருப்புகளை
நிறுவிய பொருளாதார வரலாற்றில் ஒரு முக்கியமான காலகட்டத்தையும் பொருளாதாரம்,
அதிகாரம் மற்றும் அரசியல் இவற்றில் கீழ்த்திசை நாடுகளில் கோலோச்சிய உயரிய நிலையையும்
அறிந்து கொள்ள முடிகிறது
ஒன்பதாவது
நூற்றாண்டில் இறுதியில் மலபார் கடற்கரையில் கொல்லம் (Quilon) அருகே கண்டுபிடிக்கப்பட்ட
கோட்டயம் (ஸ்தாணு ரவி) செப்புத் தகடுகளில் மணிக்கிராமம் (Manigramam) என்கிற தென் இந்திய
வணிகர் சங்கம் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் பாரசீக வளைகுடாவிலிருந்து மலபார் பகுதியில் குடியிருக்க அனுமதிக்கப்பட்ட
கிறிஸ்துவ வாணிப சங்கங்கள் கோட்டைப்பகுதி சந்தையில் இயங்கும் மணிகிராம சங்கத்திடம்
இருந்து வரி விலக்குடன் பொருட்களை வாங்க அனுமதி வழங்கப்பட்டதாகப் பதிவு செய்ய்யப்பட்டிருக்கிறது.
இது கிட்டத்தட்ட இன்றைய (Duty Free zone/ Special Ecoonomic Zone) சுங்க வரி விலக்கிய
பகுதியாகும். (1) இந்த வணிகர் சங்கங்கள் இதே
சலுகைகளை சேர நாட்டு அரசர்களின் ராசாங்க உறவுகளைப்
பயன்படுத்திக் கிழக்குக் கடற்கரையிலும் விரிவுபடுத்தின.
அதே காலத்தில் மேற்கு தக்காணத்திற்கு
வடக்கே கொங்கன் கடற்கரைக்குப் பின்னால் சாளுக்கியரின் மையப்பகுதியில் உள்ள ஐஹோல்
(சமஸ்கிருதத்தில் Aryapura, கன்னடத்தில் Ayyavole எனஅழைக்கப்படும் வாணிக அமைப்பு ஏற்பட்டது.(2) அவர்கள் எட்டாவது அல்லது ஒன்பதாவது நூற்றாண்டிற்குப்
பிறகு, பொதுவாக ஐநூற்றுவர் Ainnurruvar ("ஐந்து நூறு") என அறியப்படுகிறார்கள்.
மணிக்கிராமம் மற்றும் நானாதேசி வணிக அமைப்புக்ள் பின்னர் ஐநூற்றுவர் அமைப்புடன் தம்மை
இணைத்துக் கொண்டன. இதன் உச்சமாக மற்ற கைவினைஞர்கள்
மற்றும் கடல் மாலுமிகள் சங்கங்கள் உட்பட, நாற்பத்துஆறு பிற தொழில்முறை அமைப்புகள்
தங்களை ஐநூற்றுவர் அமைப்புடன் இணைத்து ஒரு மேலாதிக்க நிலையை ஆக்கிரமித்தது தெரிகிறது.(3)
சாவக
(ஜாவா) ஆவணங்கள் குறிக்கும் தமிழக வணிக சங்கங்கள்
மத்திய ஜாவாவின் கெடு ( Kedu ) பகுதியில் காலிருங்கன் ஏடுகள் (Prasasti Kalirungan) கி.பி. 883ல் பொறிக்கப்பட்டது. இதில் பகுதி வாரியான வெளி நாட்டு வாணிகர்களின் பட்டியல் காணக்கிடைக்கிறது. இப்பட்டியலில் சம்பா (Campa), ரமணீய தேசம் (பர்மா), Remman (Ramanyadesa) மற்றும் கம்போடியா (Kmira) க்லிங்க் (Kling/கலிங்கா) ஆரியா Aryya (Aryapura / Ayyavole), பாண்டிகிரா Pandikira (Pandiyas?), சிங்களா Singhala (இலங்கை) என்ற இனங்கள் குறிக்கப்படுள்ளன. (4). மேடியன் Madiun (5) அரிகே சோலோ (solo) நதிக்கரையில் கி.பி.927 ல் பொறிக்கப்பெற்ற (the Palebuhan charter of 927 A.D) துறைமுகக் குறிப்பிலும் (6) இதே வணிகக்குழுமங்கள் காணக்கிடைக்கின்றன. சாவகத் துறைமுகங்களில் 9 மற்றும் 10 ஆம் நூற்றாண்டுகளில் வணிகக் குடியிருப்புகளாக இருந்த இந்தியர்கள் அய்யாவொளிக் குழுமத்தைச் சேர்ந்த தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் மற்றும் தெற்கு ஒரிசா, என்ற கிழக்குக் கடற்கரை மாவட்டங்களில் இருந்தும் மற்றும் மேற்கு கொங்கன் கடற்கரை பகுதியில் இருந்தும் வந்த சங்க அமைப்புகளைச் சேர்ந்தவர்களேயாகும். குறிப்பாக கலிங்க "Kling" என்ற சொல் பரவலாக இந்தியப் பெருங்கடலில் இருந்து வந்த அனைத்து தென் ஆசியர்களையும் உள்ளடக்கியது. முதலில் மேடானில் (மேடான் என்ற பெரு நகரம் இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவைச் சேர்ந்த நிறையத் தமிழர் வாழும் பகுதி) தமிழர் வசித்த பகுதிகள் இன்றும் காம்புங்க் க்லிங்க் (Kampung King ) என்றே அழைக்கப்படுகிறது.
கிழக்குச் சாவகத்தின் Brantas டெல்டா
பகுதியில் இருந்து 1021 ல் பொறிக்கப்பட்ட பிரம்பு (Cane inscription of 1021 A.D.,
from the Brantas delta) எழுத்துக்கள் (7), Kling, Aryya, Singhala, Pandikira,
Drawida, Campa, Remen, மற்றும் Kmir என்று வெளிநாட்டவர்களை பட்டியலிடுகிறது. அதே மாவட்டத்தில் இருந்து Patakan Prastasi
(8), யில் இதனை ஒத்த ஒரு பட்டியலில் இடம் பெற்றிருந்தது. இந்த இரண்டு பட்டியல்களில்
புதிய பெயர், Drawida, சோழர்கள் ஒன்பதாம் நூற்றாண்டில் பல்லவர்களை அகற்றி இலங்கை,
மாலத்தீவு மற்றும் லட்சத்தீவுகளில் Laccadives தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்தி கிழக்குக்
கடற்பகுதியின் மிகப்பெரும் சக்தியாக விளங்கினர் என்பதன் வரலாற்று ஆவணமாக இவை கருதப்படுகின்றன.
சுமத்ரா ஆவணங்கள்
லோபு
துவா தமிழ் கல்வெட்டு (சுமத்ரா, இந்தோனேசியா)
இன்றைய இந்தோனேசியவின் வடக்கு சுமத்ராவின் மத்திய தப்பானுலி பகுதியின்
(Central Tapanuli Regency), அந்தம் தேவி மாவட்டம் (Andam Dewi District), பாரூஸ்
(BARUS) என்ற பகுதிக்கு அருகில், லோபு துவா கிராமத்தில் (Lobu Tua Village), 1873 ஆம்
ஆண்டு கண்டு பிடிக்கப்பட்ட ஒரு கல்வெட்டு, அனைவரும் அதிசயிக்கும் வகையில் தமிழில் எழுதப்பட்டு
இருந்தது. தமிழ் எழுத்துக்களுடன் கூடிய கல்வெட்டு இந்தோனேசியத் தீவுக்கூட்டத்தில் அரிதிலும்
அரிதானதாகும். பாரூஸ் எனும் நகருக்கு அருகில் கண்டு பிடிக்கப்பட்டதால், இந்தோனேசியத்
தொல்லியல் துறை இந்தக் கல்வெட்டிற்கு பாரூஸ் கல்வெட்டு என்றும் (BARUS
INSCRIPTION), அந்தக் கிராமத்தின் பெயரில் (LOBU TUA INSCRIPTION ) என்றும் அழைக்கப்பட்டு
தற்போது இந்தோனேசியத் தலைநகர் ஜகர்தாவின், தேசிய அருங்காட்சியகத்தில் (NATIONAL
MUSEUM) D42 என்ற எண்ணில் வகைப்படுத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
1873 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டவுடன், இந்தக் கல்வெட்டின் விபரங்கள்
ஆராயப்பட்டு, இந்தியாவை தளமாகக் கொண்ட ஆங்கில கல்வெட்டு நிபுணரான இ. ஹல்ட்ஸ்ச் (E
Hultzsch) என்பவரால் 1891-92 ஆம் ஆண்டு மெட்ராஸ் கல்வெட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
சிறந்த வரலாற்றாசிரியரும் கல்வெட்டு ஆசிரியருமான ஒய். சுப்பராயலு, த(மிழ் பல்கலைக்
கழகம், தஞ்சை) இந்தக் கல்வெட்டு தமிழகத்தின்
முதலாம் குலோத்துங்கச் சோழனின் ஆட்சிக் காலத்தைச்(கி.பி. 1088) சேர்ந்தது என்று நிறுவி
இருக்கிறார்.
1873 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டபோது, லோபு துவா கல்வெட்டு கல் துண்டு
துண்டாக உடைந்து கிடந்தது. இப்போது, அந்த துண்டுகள் மீண்டும் ஒன்று சேர்க்கப்பட்டு,
92 செ.மீ உயரமும் 30 செ.மீ விட்டமும் கொண்ட ஒரு ஒழுங்கற்ற அறுகோண தூணை உருவாக்க மீண்டும்
ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன
பழைய லோபு கல்வெட்டின் உள்ளடக்கங்கள் முழுமையாக தமிழ் எழுத்துக்கள் மற்றும்
மொழியில் எழுதப்படவில்லை. அதன் சில உள்ளடக்கங்கள் சமஸ்கிருத சொற்களுக்காக கிரந்த எழுத்துக்களில்
எழுதப்பட்டுள்ளன. ஏனெனில், சில வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, தமிழ் எழுத்துக்கள்
பிராமியிலிருந்து கிரந்த எழுத்துக்கள் மூலம் பெறப்பட்டன.
இந்தியப் பெருங்கடலின் கரையில் உள்ள ஒரு சிறிய நகரமான இது இரண்டாம் நூற்றாண்டிலிருந்து
கற்பூர உற்பத்தியாளராக புகழ்பெற்றது. கற்பூரத்தின் தனித்துவமான வாசனை நீண்ட காலமாக
உலகம் முழுவதிலுமிருந்து வாசனைப் பொருட்கள் வேட்டைக்காரர்களை இந்தோனேசிய தீவுக்கூட்டத்திற்கு
ஈர்த்துள்ளது. போர்னியோ கற்பூர மரத்திலிருந்து வரும் எண்ணெய் அல்லது போர்னியோல்
(borneol) அழற்சி மருந்து மற்றும் வலி நிவாரணி மருந்துகள் (வலி நிவாரணிகள்) மற்றும்
உணவு சேர்க்கைகளாக பயனுள்ளதாக இருக்கும். பாரூஸ் சூட மரம்(Dryobalanops aromatica)மற்றும்
கற்பூர மரங்கள் (Cinnamomum camphora)அதன் வெள்ளை மற்றும் வெளிப்படையான நிறம், அனுபவ
ஞானத்தால் மட்டுமே கொள்முதல் செய்ய இயலும். ஒரு கற்பூர மரத்தின் சரியான வளர்ச்சிக்காக
காத்திருக்க கூடுதல் பொறுமை தேவை. நல்ல தரத்துடன் முதிர்ந்த போர்னியோ கற்பூர மரத்தைப்
பெற்று அதை அருமையான விலையில் விற்க சுமார் 50 ஆண்டுகள் ஆகும். சீனாவில் இருந்து கிடைக்கும்
கற்பூரத்தை விட பல மடங்கு மதிப்பு மிகுந்ததாக சுமத்ராவின் இந்த பாரூஸ் கற்பூரம் திகழ்ந்து
இருந்திருக்கிறது. அந்த கற்பூரத்தோடு மற்றும் பல நறுமணப் பொருட்கள் பாரூஸ் துறை முகத்தில்
இருந்து நமது கடல் வணிகர்கள் கொண்டு வந்து செல்வம் குவித்து இருக்கிறார்கள். இந்தப்
பொருளுடன், பாருஸ் செழித்து வளர்ந்து ஒரு பிராந்திய வர்த்தக வலையமைப்பின் ஒரு பகுதியாக
மாறியது. இது அரேபியர்கள், இந்தியர்கள், சீனர்கள் மற்றும் நிச்சயமாக தமிழ் வணிகர்கள்
உள்ளிட்ட சர்வதேச வர்த்தகர்களுக்கு இலக்காக மாறியது. இந்தத் தமிழ் வர்த்தகக் கூட்டணி
பாருஸில் ஒரு குடியேற்றத்தை நிறுவி இறுதியில் கி.பி பதினொன்றாம் நூற்றாண்டு வாக்கில் பாரூஸ் நகரம் நம்மவர்களால் 'வரோச்சி' என்ற பெயரில்
வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த வரோச்சி சூடம் புகழ் பெற்றதாக விளங்கி இருக்கிறது.
11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த லோபு துவா
கல்வெட்டு அன்றைய தமிழ் வணிகர்கள் தொடர்பான வரி விதிமுறைகளைக் கொண்டுள்ளது.
மொத்தம் கிடைத்து இருக்கிற 26 வரிகளை கீழே கொடுத்து இருக்கிறோம்.
1.
ஸ்வஸ்தி ஸ்ரீ சகரை
2.
ஆண்டு ஆயிரத்து[ப்ப]
3.
த்துச் செல்லாநி[ன்]
4.
ற மாசித் திங்கள்
5.
வாரோசாந மாதங்
6.
கரி வல்லவத் தேசி உ
7.
ய்யக் கொண்ட பட்
8.
டி நத்து வேளாபுரத்து
9.
கூடி நிரந்த தே[சித் திசை]
10.
விளங்கு திசை ஆயி
11.
த்தைஞ்ஞூற்றுவரோ
12.
ம் நம்மகநார் நகர ஸேநாப
13.
தி நாட்டுசெட்டி
14.
யார்க்கும் பதிநெண்பூமி
15.
தேசி அப்பர்க்கு மா[வெ]த்
16.
துகளுக்கும் நா வைத்துக்
17.
குடுத்த பரிசாவது மரக்க
18.
ல... ... ...
19.
ல மரக்கல நாயநுங் கேவி
20.
களும் கஸ்தூ[ரி] விலை மு[தல]கப்ப[ட]
21.
அஞ்சு துண்[டா]யம் பொன்னும் கு[டு]
22.
த்துப் பாவாடை ஏறக்கடவதாகவும்
23.
இப்படிக்கு [இ]க்கல் எழுதி நாட்டி
24.
க் குடுத்தோம் பதிநெண்பூமி தேசித் திசை விள
25.
ங்கு திசை ஆயிரத்தைந்த்நூற்றுவரோம் அ
26.
றமற வெற்க அறமேய் துணை.
இந்தக் கல்வெட்டின் விளக்கம் :
பாரூஸ் நகரம் நமது வணிகப் பெருமக்களால் 'வாரோச்சி' என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. அந்த 'வாரோச்சி' துறைமுகப் பட்டினத்திலும் அதனைச் சுற்றி அமைத்து இருந்த ஊர்களிலும் நிரந்தர மற்றும் தாற்காலிகக் குடி அமர்ந்து இருக்கிறார்கள். அப்படிக் குடியமர்ந்த ஊர்களில் ஒன்று 'வேளாபுரம் '. அங்கு அனைத்து வணிகர்ளும், திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் மற்றும் நாட்டுக்கோட்டை செட்டியாரின் குழுவில் அங்கம் வகித்து இருப்போர் (நம்மகனார் நகர சேனாபதி நாட்டுக்கோட்டை செட்டியார்க்கும்)க்கும் , பதினெண் பூமி தேசி அப்பர்க்கும், மாவெத்துக்களுக்கும் (யானைகள் மூலம் சரக்குகள் ஏற்றி இயக்கப்படுவதால் அந்த யானைகளை இயக்கும் மாவுத்தர்களுக்கும்) சரக்குகள் கப்பலில் ஏற்றப்பட்டு புறப்படத் தயார் ஆவதற்குக் கப்பலின் பாய் மரங்களின் பாய்கள் (பாவாடை) ஏற்றப்படுவதற்கு முன்னதாகக் கப்பலின் தலைவர்களும் ( மரக்கல நாயனும்) மாலுமிகளும் (கேவிகளும்) கப்பலில் ஏற்றப்படும் சரக்குகளின் மதிப்பிற்குத் தகுந்த மாதிரி (ஏற்றுமதி பொருட்களுக்கு ஒரு குறிச்சொல்லாக கஸ்தூரி என்று குறிக்கப்பட்டு இருக்கிறது ). மாதங்கரி என்ற பெயர் சிவனையும் குறிக்கும் (யானையை அழித்தோன் சிவபிரான்). மாதங்கி என்ற பெயர் துர்கா தேவியைக்யும் குறிக்கும். எனவே கல்வெட்டுச் சாசனத்தின் முதலிலேயே 'மாதங்கரி வல்லவதேசி உய்யக்கொண்ட பட்டினத்து வேளாபுரத்தில் கூடி' என்று குறித்து இருக்கிறார்கள். இந்த 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் அன்வறைய வழக்கப்படி ஒரு மன்னனின் பெயரில் ஆரம்பிக்கும். ஆயின் இந்தச் சாசனத்தில் அப்படி எந்த ஒரு அரசனின் பெயரும் குறித்திருக்கப் படவில்லை. மாறாக, இக்கல் எழுதி நாட்டிக்கொடுத்தவர், பதினெட்டு நாட்டைச் (தேசங்களை) சேர்ந்த (பதினெண் பூமி தேசி) திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் (திசை விளங்கு திசை ஆயிரத்தைந்த்நூற்றுவரோம்) என்று முடிவதால் இந்த வணிகக் குழுக்கள் தன்னாட்சி (autonomous) யுடன் பலமும் செல்வாக்கும் கொண்டு விளங்கியதாகக் கணிக்க இயல்கிறது.
அதாவது ,நிகழும் சக வருடம் ௧0௧0 (1010) மாசி மாதம்..,
நாங்கள் ஆயிரம் திசை ஐந்நூற்றுவர் மாதங்கிரி வல்லவ தேசி உய்யக் கொண்ட பட்டினம் எனப்படும் வாரோச்சி (Barus) ய்லு ள்ள வேளாபுரத்தில் சந்தித்து, திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர் மற்றும் நாட்டுக்கோட்டை செட்டியாரின் குழுவில் அங்கம் வகித்து இருப்போர்க்கும், எங்கள் பிள்ளைகளான பதினெண் பூமி தேசி அப்பர்க்கும், யானைகளை இயக்கும் மாவுத்தர்களுக்கும், சரக்குகள் கப்பலில் ஏற்றப்பட்டு புறப்படத் தயார் ஆவதற்குக் கப்பலின் பாய் மரங்களின் பாய்கள் ஏற்றப்படுவதற்கு முன்னதாகக் கப்பலின் தலைவர்களும் மாலுமிகளும் கப்பலில் ஏற்றப்படும் சரக்குகளின் மதிப்பிற்குத் தகுந்த மாதிரி, அஞ்சு துண்டையம் தங்கம் செலுத்திவிட்ட பிறகுதான், பாய்மரம் ஏற்ற வேண்டும்.
நேசு, அக்ஷ்யமுனை
அடுத்து.. நேசு, அக்ஷ்யமுனை ( Neusu Aceh, North Sumatra) யில் கிடைத்த கல்வெட்டு:
இந்தோனேசியத் தீவுத் தொகுதிகளில் தென்னிந்தியாவில் இருந்து கீழ்த்திசை
நோக்கிக் கடற் பயணம் செய்யும் வழியில் முதலில் கரை தெரிவது நக்காவரம் தீவுகள் . இன்றைக்கும்
இந்தியத் துணைக் கண்டத்தின் ஆளுமைக்குள் இருக்கும் தூரத்து தீவுகளான அந்தமான் நிகோபார்
தீவுகள் தான் இவை.
தமிழில் நக்காவரம் என்பது இன்றைய நிகோபார். காற்றின் பாய் விரித்து கலம்
செலுத்தும் கடல் மாலுமிகள் நீண்ட கடற்பயணத்திற்குப் பின் கரை காணும் நக்காவரத்தில்
குடி நீர், உணவு நிரப்பிக்கொள்ளுதல் மற்றும் கலங்களின் பழுது நீக்கும் பணிகளை இங்கே
மேற்கொள்வர். அடுத்து கப்பல் இன்னும் கிழக்கு நோக்கிப் புறப்பட்டால் சொர்ணத் தீவின்
மேற்கு கரையின் அட்சய முனையைச் சென்று சேரும். சொர்ணத் தீவு என்பது தான் இன்றைய இந்தோனேசியாவின்
பெரிய தீவான சுமத்ரா ஆகும். இந்த அட்சய முனையின் இன்றைய பெயர் பண்டா அச்சே (Banda
Aceh).
இந்தோனேசியாவின் மிகப் பழமையான அருங்காட்சியகங்களில் ஒன்றானது பண்டா ஆச்சே
(Banda Aceh) அருங்காட்சியகம். இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய ஈர்ப்பு 11 ஆம் நூற்றாண்டின்
தமிழ் கல்வெட்டு அல்லது நியூசு கல்வெட்டு ஆகும்.
இந்த
நேசு கல்வெட்டின் அருகில் நிறுவப்பட்டு இருக்கிற தகவல் பலகையில், கீழ்க்கண்டவாறு பொறிக்கப்பட்டு
இருக்கிறது.
நேசு
கல்வெட்டு என்பது தமிழ் மொழியில் கிரந்த எழுத்துக்களுடன் (கல்லில் எழுதப்பட்ட) ஒரு
கல்வெட்டு ஆகும். இந்தக் கல்வெட்டு டிசம்பர் 3, 1990 அன்று நேசு ஜெயா (பண்டா அச்சே)
கிராமத்தில் அச்சேவின் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் பிராந்திய அலுவலகத்தால்
கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கல்வெட்டு கி.பி 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அன்டோசைட்
கல்லால் ஆன ஒரு பண்டைய தமிழ் நினைவுச்சின்னமாகும்.
சரியான தகவல் இல்லாததால், இந்தக் கல் ஒரு காலத்தில் ஆறுகளில் துணிகளைத்
துவைப்பதற்கும் , மசூதியின் வாசலில் நுழைவதற்கு முன்பு கால் பதிக்கும் இடமாகவும் பயன்படுத்தப்பட்டது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தோனேசியத் தீவுக்கூட்ட நாடுகளில் பண்டைய தமிழ் சமூகங்கள்
மற்றும் தமிழ் வணிகர் சங்க நிறுவனங்கள் இருந்ததற்கான சான்று
இந்தக் கல்வெட்டு.
கல்வெட்டின் விபரம்:
01
... ...
02
வும் போவா ..
03
கவும் போக்கிவு
04
ள்ளது கைக்
05
கொள்ளக் கட
06
வதல்லதாக
07
வும் இதுக்கு
08
உரய்வ[ருந் த]
09
ங்கல்லை[வா]
10
கல் கம்மயலா
11
ர் உள்ளிட செ
12
வித்துண்பவர்
13
கள் வந்து கொ
14
டு போக கடவர்
15
களாகவும் பொ
16
லிசை கொள்ளக்
17
கடவர்களல்
18
லவாகவும் பிற
19
கும் நம்மக்க
20
ள் இக்கல்வெ
21
ட்டுக்கு கொக்
22
கச் செய்யக்
23
கடவர்கள்
24
ஸூ பமஸ்து
இந்தக்
கல்வெட்டு 12ஆம் நூற்றாண்டை சேர்ந்ததாகக் கணிக்கப்பட்டு இருக்கிறது. கல்வெட்டின் முன்
பகுதி சிதிலமடைந்து விட்டது. கிடைத்த வாசகங்களைக் கொண்டு நோக்கும்போது, இவை வணிகத்தில்
நட்டம் ஏற்படும் போது வணிகக்குழுவினர் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளைப் பட்டியல்
இடுகிறது.
தமிழர் கடல் வழியைக் காணுங்கால், அவர்தம்
ஆற்றல் புலப்படும். ஆயிரக் கணக்கான் ஆண்டுகளுக்கு
முன்பே எந்த விஞ்ஞான சாதனுமும் இல்லாமல், கடலில் ஆளுமை செலுத்திய தமிழன் பெருமையை இன்று
தமிழன் உணர வேண்டும்.
இந்த ஆய்வுக்கட்டுரையின் சுருங்கிய வடிவம் 06-11-2025 தேதியில், 'தின மலர் '- மாணவர் பதிப்பில் வெளிவந்து இருக்கிறது.
1.Meera Abraham, Two Medieval
Merchant Guilds of South India (Delhi: Manohar, 1988), pp. 5, 19-24, 29, 110;
E.P.N. Kunjan Pillai, Studies in Kerala History (Kottayam, Kerala: National
Bookstall, 1970), pp. 370-77.
2.Abraham, Two Medieval Merchant
Guilds, pp. 41-42.
3. For discussions of the various
associated merchant, craft and mercenary groups, see for example: S.R.
Balasubrahmanian, "The Tisai Ayirattainurruvar and the Municandai
Record", Tijdschrift voor Indische Taal-, Land-, en Volkenkunde 74 (1934):
613-18; K.R. Venkatarama Ayyar, "Medieval Trade, Craft and Merchant Guilds
in South India", Journal of Indian History 25,3 (1947): 269-80; K.A.
Nilakanta Sastri, The Colas, 2nd revised edition (Madras, 1955); Burton Stein,
"Coromandel Trade in Medieval India", in Merchants and Scholars:
Essays in the History of Exploration and Trade, ed. J. Parker (Minneapolis:
University of Minnesota Press, 1965), pp. 49-62; K. Indrapala, "Some
Medieval Mercantile Communities of South India and Ceylon", Journal of
Tamil Studies 2,2 (1970): 25-39; Abraham, Two Medieval Merchant Guilds.
4. M. Boechari, "Prasasti
Kalirungan" (unpublished ms.).
5. H.B. Sarkar, Corpus of the
Inscriptions of Java (Up to 928 A.D.), two volumes (Calcutta: K.L.
Mukhopadhyay, 1971), inscription xciii.
6. S.D. Goitein, Letters of
Medieval Jewish Traders (Princeton: Princeton University Press, 1973), pp.
175-229; S.D. Goitein, "From Aden to India", Journal of the Economic
and Social History of the Orient 23,1&2 (1980): 46; R. Chakravarti, "Merchants
of Konkan", The Indian Economic and Social History Review 23,2 (1986):
215.
7. J.L.A. Brandes, Oud-Javaansche
Oorkonden, nagelaten transscripties van wijlen Dr. J.L.A. Brandes, uitgegeven
door Dr. N.J. Krom (The Hague: Martinus Nijhoff, 1913), inscription lviii.
8. Brandes Oud-Javaansche
Oorkonden, inscription lix. The Kaladi inscription - for which, see A.M.
Barrett Jones, Early Tenth Century Java from the Inscriptions (Dordrecht:
Foris, 1984), pp. 178-94 - from the same region, which is dated 909 A.D., but
which survives only as a later reissue, preserves an anachronous list identical
to those of the Cane and Patakan inscriptions.
கருத்துகள்
கருத்துரையிடுக