அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 11
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 11
10-10-2017
திண்ணன் செட்டி ஊரணி ஏரியாவை விட்ட வரவே முடியல. எப்படியாவது நேற்றோடு அந்த இடத்தை விட்டு தொண்டியார் வீதியில் இருந்து பயணம் தொடரலாம் என்று பார்த்தால் ஏதாவது ஒன்று விட்டுப்போய் விடுகிறது. இன்னும் கொஞ்சம்...திண்ணன் செட்டி ஊரணி மேல் கரையில்..
திரு.பூவநாதன்கடையில் ஒரு சிக்கரி கலந்த காபித் தூள் (BrookBond என்று தான் நினைக்கிறேன்)கோமதி அம்மா வாங்கி வரச்சொல்லவார்கள். ஈபிள் டோவர் (Eiffel Tower) படம் போட்டிருக்கும். 20% சிக்கரி என்று நினைக்கிறேன். வாங்கிக் கொடுத்த உடன் கோமதி அம்மா பில்டரில் ஒரு காபி போட்டுக் கொடுப்பாங்க பாருங்க... மனதில் ஒட்டியிருக்கும் பழைய ஞாபகங்கள் போல , ஈரமாய் இன்னும் நாவில் அந்த சுவையும், மணமும் , கோமதி அம்மாவின் அன்பு கலந்த தாய் அன்பும் என்னவோ செய்கிறது இப்போதும் ... என்ன ஒரு அநியாயம்!! கடைசி காலத்தில் நான் கோமதி அம்மாவைச் சென்று பார்க்கவே இல்லை. குற்றவாளியாய் மனச்சாட்சி குறுகுறுக்கிறது... யாருக்கும் திரும்பச் செய்ய வேண்டிய மரியாதையை சமயம் வாய்க்கும் பொழுதே செய்து விடுங்கள். மனித வாழ்கை ...மிகக் குறைந்தது...
இப்போது வைரம் குழுமம் (VAIRAM GROUP ) பராமரிப்பில் இருக்கும் அருள்மிகு பைரவர் கோவில் அமைத்திருக்கும் இடத்தில் ஒரு மிளகாய், மாவு அரவை ஆலை (MILL ) இருந்தது. ஒத்தக்கடை, தி.ஊரணி மற்றும் அந்தப் பகுதி மக்கள் கண்டிப்பாக கால் வைக்காமல் இருந்திருக்காத இடம். அந்த huller Plate ஐ திருகும் போது ஒரு சப்தம் எழுப்பும் பாருங்கள்.... மிளகாய் நெடியோடு , அரிசி மாவின் வெண்மை, மஞ்சளின் வண்ணம், மிளகாய்ச் சிவப்பு, மல்லியின் காக்கி வண்ணம் என ஒரு வர்ண மிளிர்வோடு ஹோலி கொண்டாடிய இளைஞனைப் போல காட்சி தந்த அந்த மாவு மில் இப்போது இல்லை.
அடுத்து தமிழ்நாடு மெட்டல் இண்டஸ்ட்ரீஸ் (TAMIL NADU METALS ) என்று ஒரு எவர் சில்வர் பட்டறை. அன்றைய கால கட்டத்தில் எவர்சில்வர் பாத்திரத் தொழிலில் தேவகோட்டை கொடிகட்டி பறந்தது. தேனம்மை ஊரணி, பெருமாள் கோவில் பின்புறம் என்று ஏகப்பட்ட எவர் சில்வர் பட்டறைகள். இந்த தமிழ் நாடு மெட்டல் போல அன்று கனகா மெட்டல்ஸ், அமுதா மெட்டல்ஸ் என்று நிறைய மெட்டல்ஸ்கள்..பாதியில் படிப்பை தொலைத்த மற்றும் குடும்பச்சுமை உள்ள இளைஞர்களுக்கு அது ஒன்றே புகலிடம். அந்தத் தொழிலும் நசிந்து விட்டது பின்னர்.
தமிழ் நாடு மெட்டல்ஸ் அவர்களின் மகன் பாஸ்கரன், குட்டை பாஸ் என்று அழைப்போம். எனக்கு முந்தைய செட் . ஜான்ஸ் பள்ளியில் படிக்கும்போது அழகப்பனின் செட். பின்னர் கல்லூரியிலும் சீனியர். படித்து விட்டு 3 வருடங்கள் வேலை இல்லாத பட்டதாரியாக திரிந்த காலங்களில் உற்ற நட்பு. அங்கு நான் மருது பாண்டியர் போக்கு வரத்து கழக தலைமை அலுவலகத்தில் கொள் முதல் பிரிவு உதவியாளராக பணி ஆற்றிய போது நண்பர் பாஸ்கரன் காரைக்குடியில் காவல்துறை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில் (Camp Office )ல் பணி புரிந்து கொண்டு இருந்தார் . நாட்டை விட்டு வந்த பின் அப்படியே தொடர்பு அறுந்து போய் விட்டது. இரண்டு வருடங்களுக்கு முன் தாயகம் செல்லும் போது முயன்று சிவகங்கையில் பதிவு அலுவலகத்தில் பணி புரிகின்றார் என அறிந்தேன். எங்கள் குல தெய்வக் கோவில் சிவகங்கையிலிருந்து மேலூர் செல்லும் சாலையை ஒட்டி உள்ளது. குடும்பத்துடன் சென்ற போது அந்த பதிவு அலுவலகம் சென்று அவரைப் பார்க்கலாம் என்று சென்றேன். அன்றைய தினம் அவர் மருத்துவ விடுப்பில் இருப்பதாக தகவல் அளித்தார்கள் . நம்ம போறதே ஒரு நாள் கூத்து... பார்க்க இயலாமலேயே திரும்பி விட்டேன். சென்ற வாரம் நட்பு வட்டாரத்தில் விசாரித்த போது திரு பாஸ்கரன் இவ்வுலக வாழ்வை நீத்து விட்டார் என்ற செய்தி கேட்டு மனம் கலங்கினேன்.
இப்போது மீண்டும் தி.ஊரணி மேல்கரை. அடுத்து ஒரு உயரமான படியேறி உள்ளே செல்லும் வீடு இருக்கும். அதில் சாண்டோ என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் முன்னாள் சாண்டோ (செட்டியார் ) இருப்பார். அதை அடுத்து வருவது M.G.R.படிப்பகம். அந்தகால கட்டத்தில் தமிழை வளர்த்தது தினத்தந்தி சி.பா.ஆதித்தனார் என்று சொல்வார்கள். ஏனென்றால் எளிய தமிழில் கவர்ச்சிகரமான தலைப்புக்களுடன் குறைந்த விலையில் தினத்தந்தி வெளியானது. ஆனாலும் தமிழை பாமரனுக்கு எடுத்துச் சென்றதில் இந்த திராவிட இயக்கங்களுக்கு பெரிய பங்கு உண்டு. இன்றைய திரைப்பட ரசிகர் மன்றங்கள் எத்தனையோ சமூக சேவைகளை செய்து வரலாம். ஆயின் திராவிட இயக்கத்தை சார்ந்த ரசிகர் மன்றங்களால் நடத்தப்பட்ட இந்த படிப்பகங்கள் வாசிக்கும் மனத்தினையும் , தமிழை நேசிக்கும் குணத்தையும் வளரச்செய்தன. என் போன்ற சிறுவர்களுக்கு யார் தினசரி, வாராந்திரிகளை வாங்கித் தருவார்கள் அந்தக்காலத்தில்? இந்த M.G.R. படிப்பகம் புரட்சித் தலைவர் அவர்களால் அளித்த மானியம் மூலமாக நடந்து கொண்டிருந்தது . என் உறவினர் S.அங்குச்சாமி (முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ) அவர்களின் அந்தக்கால புனைப்பெயர் புரட்சித்தம்பி. M.G.R.திரைப்படங்கள் வெளியாகும் போது நகர்வலம் சென்றவர். இவரது இல்லம் இந்த இடத்துக்கு மிக அருகில். இவர்கள் அனைவரின் உதவிகளோடு M.G.R.படிப்பகம் நீண்ட காலம் சேவையில் இருந்தது.
M.G.R., எம்.ஜி.இராமச்சந்திரன் என்று கையெழுத்து இட்ட ரசிகர் மன்ற அட்டை frame செய்யப்பட்டு தொங்கும். இங்கு நான் நிறைய படித்து இருக்கிறேன். சினிமா விஷயங்கள் அல்ல. படிப்பகத்தில் சில பெரியவர்கள் செய்தித்தாள் படித்துக்கொண்டு இருப்பார்கள். எப்போதுமே படிக்க செய்தித்தாள் கிடைத்து விடாது. பெரியவர்கள் ஆளுக்கு ஒரு தாளாக பிரித்துப் படித்துக் கொண்டிருக்கும் போது என்னைப் போன்ற சிறுவர்களுக்கு கிடைப்பது சுதேசமித்திரன் சிறுவர் மலர், கல்கண்டு, குமுதம், ஆனந்தவிகடன் போன்ற வார இதழ்கள்தான். இருந்தும் எது கிடைத்தாலும் படிக்கும் நிலையில் இருந்த எனக்கு அந்த இடம் சொர்க்கமே. நன்றாக நினைவு இருக்கிறது, குமுதம் வார இதழில் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் கவிதை ,
ஒரு கிண்ணத்தை ஏந்துகிறேன்
பல எண்ணத்தில் நீந்துகிறேன் என்று ..
இது கவிஞரின் தனிப்பாடல். சினிமாவுக்காக எழுதப்பட்டது அன்று . பின்னர் வெளியான 'வசந்த மாளிகை' படத்தில் இந்தப் பாடல் வந்ததும் தான் தெரிந்தது. கவிஞர் தனியாக எழுதிய கவிதை திரைப்படத்தில் பின்னர் உபயோகிக்கப் பட்டது என்று.. இது போன்று மனதின் வழியே புத்தியில் பதிந்த எத்தனையோ விஷயங்கள்...
இந்தப் படிப்பகத்துக்கு எதிரில் திரு.சுப்ரமணியன் என்று ஒரு முடி திருத்துபவர் கடை நடத்தி வந்தார் . உதயசூரியன் முடி திருத்தகம் என்று நினைவில் உள்ளது. தவறாக இருந்தால் தெரிந்தவர்கள் தெரிவிக்கவும். இவர் தன் முடி திருத்தும் கடையில் இருந்து இந்த பதிப்பகத்தை கண்காணித்துக் கொண்டு இருப்பார். யாரும் புத்தகங்களை எடுத்து கொண்டு போகிறார்களா என்று..
இது போல கீழ பஜார் வீதியில், 'அண்ணா படிப்பகம்' என்று இருந்தது. கருதா ஊரணியின் தென் கரையில் முன்னாள் நகர் மன்றத்தலைவர் இராம வெள்ளையன் அவர்களால் நடத்தப்பெற்ற படிப்பகம் ஒன்றும் இருந்தது. நான் அங்கங்கே தேர் மண்டகப்படி மாதிரி இந்த இடங்களில் தங்கி விடுவேன், போன வேலையை மறந்து ....
நகர் வலம் தொடரும்.....
கருத்துகள்
கருத்துரையிடுக