அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்- பகுதி:13
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 13
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 13
17-10-2017
கோட்டையம்மன் கோவிலுக்குப் பின்புறம் நின்று கொண்டு இருந்தோம். வெள்ளையன் ஊரணிக்கரைக்கு செல்லவே இயலவில்லை . இடையில் பணி நிமித்தம் சிங்கப்பூர் சென்று விட்டதால் ஒரு இடை வெளி விழுந்து விட்டது. அன்பர்கள் அருள் கூர்ந்து அடியேனை மன்னிக்க வேண்டும். இப்ப நாம் MGR படிப்பக்கத்திலிருந்து மாணிக்க வித்தியாசாலை வழியாக தி.ராம. சாமி வீட்டுக்கு வருவோம் . இங்கிருந்து நம்ம வெ .ஊரணி, அட அதுதாங்க வெள்ளையன் ஊரணி பயணத்தைக் தொடங்குவோம். எனக்கு நினைவு தெரிந்த நாளில் வே.ஊரணி தான் தேவகோட்டையின் நடு சென்டர். என்ன 'நடு' னு ஒரு வார்த்தை, அப்புறம் 'சென்டர்'னு ஒரு வார்த்தை ...இரண்டும் ஒன்று தானே என்று பார்க்கிறீர்களா ? நான் தேவகோட்டையான் என்று உறுதிப்படுத்த வேண்டாமா? தேவகோட்டையில் தானே ஆர்ச் (arch) வளைவு இருக்கிறது ? ஆர்ச் வேற வளைவு வேற என்று சொல்லாதீர்கள், நீங்கள் தேவகோட்டையரை இருந்தால்...
தி.ராம.சாமி வீட்டுக்கு நேர் எதிரில் நகரின் தலமைத் தபால் தந்தி நிலையம் இருந்தது. உறுதியான பழைய கட்டிடம். முழுவதும் இரும்பு வேல்கம்பு ஊன்றிய வேலி போடப்பட்டிருக்கும். வெள்ளைக்கல் அடி மனை...இன்றைய மதிப்பில் அந்த வேலியின் விலை மதிப்பே எவ்வளவோ இருக்கும்.. அதை ஒட்டி வரிசையாக திண்ணை போன்ற உயரமான தளம் அமைந்த கடைகள். எந்நேரமும் பெண்கள் கூட்டம் 'ஜே ...ஜே'..என்று இருக்கும். ஏனென்றால், வரிசையான வளையல் கடைகள். நீளமான மரப்பெட்டிகளில் வாய்க்கால் வெட்டியது போல வரிசையில் அடுக்கப்பட்டிருக்கும். கண்ணாடி வளையல்கள், இரப்பர் வளையல்கள்.... அதிலும் இந்த தீபாவளி, பொங்கல், தமிழ் வருடப்பிறப்பு என்றால் பெண்கள் கூட்டம் அலைமோதும். பெண்களின் கையை இந்த வளையல் காரர் பிடித்து ஒரு நூல் கயிற்றின் உதவியுடன் எவ்வளவு சிக்கலான பரிமாணம் உள்ள கைக்கும் வளையல்களை அணிவித்து விடுவார். பார்க்கவே அழகாக இருக்கும். நான் சொல்லுவது வளையல் அணிவித்து விடுவதை அன்பர்களே!!
அடுத்து அந்த கட்டிடத்திலேயே ஒரு டீ கடை இருக்கும். வாசு என்கிற கேரள மலையாளி நடத்தி வந்தார். இவர் ஒத்தக்கடை நாராயணன் உணவகத்தில் அதன் முன் இருந்தவர். அவர்களின் உறவினர். இதே கட்டிடத்தில் 'முருகன் நுட வைத்திய சாலை' இருந்தது. முருகனுக்கு திருப்பத்தூர் சாலை, நகராட்சி ஆயுர்வேத மருத்துவமனைக்கு கொஞ்சம் முன்னால் வீடு. அது தலைமையகம், இந்த வெ.ஊரணி கிளை அவருக்கு. நல்ல கை ராசிக்காரர். எனக்கு இவரிடம் முறிந்து போன மணிக்கட்டுக்கு வைத்தியம் பார்த்த அனுபவம் உண்டு. என்ன ... அனெஸ்தீசியா என்று எதுவும் கிடையாது... வழியைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
இந்தக்கட்டிடத்துக்கு முன்புறம், தி.ராம.சாமி வீட்டுக்கு வலது புறம் ஒரு மாவு மில் இருந்தது போல ஓரு ஞாபகம். (faded memory ). தெரிந்தவர்கள் சரி செய்யவும். அடுத்து வரிசையாக தையல் கடைகள். 'கொண்டல்' என்று ஒரு டைலர் இருந்தார். தமிழ் கொண்டல் குமார் .... ஞாபகம் இருக்கிறதா? பெண்கள் ரவிக்கை தைப்பதில் கைதேர்ந்த கலைஞர் என்று சொல்வார்கள். இடையில் ஒரு மரச்செக்கு ஒன்றும் இருந்த ஞாபகம்...அப்படியே வடக்கு நோக்கி நடந்தோம் என்றால் கட்ட வெள்ளையன் செட்டியார் தெரு வெ .ஊரணி தெற்கில் வந்து நிற்கும். அந்த இடத்தில் ஒரு சப்பாத்தி கடை.. மாலை என்றால் சுடச்சுட சப்பாத்தி குருமா அந்த ஏரியாவே மணக்கும். அவர் மகன் வங்கியில் சீட்டு வசூல் செய்து கொண்டு இருந்தார். முகம் நினைவில் உள்ளது. பெயர் மறந்து விட்டது. பிற்சேர்க்கை: அன்பர்களின் பின்னூட்டம் மூலமாக:
அப்படியே இன்னும் கொஞ்சம் நடந்தால் அதிகாலை நேரத்தில் தயிர் விற்கும் தாய்மார்கள் வரிசை கட்டி தயிர் பானைகளுடன் வியாபாரத்தில் படு சுறுசுறுப்பாக இருப்பார்கள். அதிலே நம்ம ஆச்சிகள் தயிர் வாங்கும் அழகை ரசித்துக்கொண்டே இருக்கலாம். வாங்க வருவது ஒரு ஆழாக்கு அல்லது இரு ஆழாக்கு. கையில் ஒரு தூக்குச்சட்டி தொங்கும். வரிசையில் இந்தக் கடைசிப்பெண்ணிடம் உள்ளங்கையை நீட்டுவார்கள்.. சாம்பிள் வாயில் ருசி பார்க்க... ஹும் .....தயிர் ஒரே புளிப்பாய் இருக்கின்றதே ......அப்படியே நகர்ந்து அடுத்து ... இப்படியே சமயங்ககளில் கடைசிப் பானைக்கு வந்து விடுவார்கள். அப்படி ருசித்து இன்று விற்கும் பாக்கெட் தயிர் வாங்க இயலுமா என்று எண்ணிப்பார்க்கிறேன்...
இந்த ஓரம் முழுவதும் , கடைகள், கடைகள் ,கடைகள் தான்.. சுப்பிரமணியன் தேங்காய்கடை ரொமப பிரபலம். இதே வரிசையில் கலங்ககாத கண்ட விநாயகர் ஆலய வாசலுக்கு எதிரே ஒரு சந்து போகும். இதில் ஐங்கரன் பாத்திரக் கடை இருக்கும். இதன் உரிமையாளரின் மகன் மணி என்கிற சுப்ரமணியன் என்னுடன் பள்ளியில் படித்தவர் . அடுத்து மளிகை கடைகள். அழகு செட்டியார் கடை அதிகம் பேர் அறிந்தது. இவரது மகன் வயிற்றுபிள்ளை இரவிச்சந்திரன் எம்மோடு கல்லூரியில் அறிவியல் இளங்கலை பயின்றார். பின்னர் ஆடிட்டர் ஆனார். தற்போது எங்கு உள்ளார் என்று அறியேன்.
கலங்காத கண்ட விநாயகர் தேவகோட்டையின் எத்தனையோ காட்சிகளை கண்ட விநாயகராக வீற்றிருக்கிறார். இவருக்கு இடப்புறம் நீண்ட வரிசையில் 'சேது பூக்கடை' . சேது பூக்கடை அறியாத தேவகோட்டையினர் சாக்கடை... மிகப்பெரும் கீர்த்தி பெற்ற பூக்கடை வரிசை அது. கீழே கூண்டுகளில் புனுகுப் பூனை பரபரப்ப்பாய்...குறுக்கும் நெடுக்குமாய் ... அயுள் கைதியாய் ..அலைந்து கொண்டு இருக்கும். இதை வேடிக்கை பார்ப்பதே எமது சிறு வயது வாடிக்கை..
விநாயகருக்கு வலது புறம் தேங்காய் கடைகள் ...அப்படியே அவருக்கு வலது பக்க வாட்டில் நடந்தால் மாணிக்கம் பிள்ளை ஜவுளிக்கடை. மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட சிறிய ஜவுளிக்கடை. ஆனால் நீண்ட கால வாடிக்கையாளர்களைக் கொண்டது. பின் நான் அப்பா என்று அன்புடன் அழைத்த திரு.மாணிக்கம் பிள்ளையின் மகன் திரு.மா.துரைராஜ் பிள்ளை அவர்களால் தந்தையாரின் அடிச்சுவட்டில் நடத்தப்பெற்றது. என் அன்பு உடன் பிறவா சகோதரன் D.பழனிச்சாமி (Ex -ICICI bank ) அவர்களின் தந்தைதான் இந்த துரை ராஜ் பிள்ளை. தற் போது இந்தக்கடை பேருந்து நிலையத்துக்குப் பின்புறம் உள்ள பழனியப்பா சந்தில் இவரது அடுத்த மகன் இராசமாணிக்கம் நடத்தி வருகிறார்.
இந்தக்கடைக்கு அடுத்து P.S.மணி விலாஸ் பிஸ்கட் பேக்கரி என்று இருந்தது . இதை அடுத்து வரும் வழியில் உள்ளே சென்றால் காய் கனி மார்க்கெட் உள்ளே கொண்டு போய் சேர்த்து விடும். இந்த இடத்துக்கு நேர் எதிரில் உள்ள சந்தில் சென்றால் R.M.S.சவுண்டு சர்வீஸ். உண்மையிலேயே மிகப்பெரும் பாரம்பரியம் கொண்ட நிறுவனம். இவர்களை அறியாதவர்கள் யாரும் தேவகோட்டை பகுதியில் இருக்க முடியாது.
அடுத்து வெ .ஊரணி தெற்கு ஆரம்பம். இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நிறுவனம் மெ .வ.மா .ஜவுளி ஹால். தீபாவளி நேரம் என்றால் தென் கரையில் மெ.வ.மா.வன்னா ஜவுளி ஹாலுக்கும் வட கரையில் செல்லம் ஜவுளி ஹாலுக்கும் இடையில் தான் , 'சபாஷ் ...சரியான போட்டி '.
தென்கரையில் சில அலுமினிய, இரும்புப் பட்டறைகள் இருக்கும். இதில் காசி இரும்புக்கடை பிரசித்தம். ஐஸ் புரூட் குழாய்கள் பற்ற வைப்பு வேலைகள் நடக்கும். இன்னும் கொஞ்சம் நடந்தால் சிவரக்கோட்டையார் வீதி. இதை அடுத்து ஒரு வீட்டில் சிமெண்ட் வியாபாரம் நடக்கும். அடுத்து சீனூஸ் காபி... காபிக்கொட்டை அரைக்கும் வாசனை காற்றெல்லாம் நிறைந்து இருக்கும். அடுத்து வருவது சீனிவாசா பள்ளி. இந்த பள்ளியின் முன் அடிக்கடி கொட்டகை போட்டு விழாக்கள் நடக்கும். இங்கு நடந்த ஒரு விழாவில் தான் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அவர்களை முதன் முதலில் பார்த்தேன். 1969 ஆம் வருடம். அப்போது அவர் பொதுப்பணித்துறை அமைச்சர். அந்தக்கதை அப்புறம்..
அப்படியே தியாகிகள் ரோடு ஆரம்பம்... இப்போது மீண்டும் வெ.ஊரணி மேல்கரைக்கு வந்து விடுவோம். அங்கு பானை சட்டிக் கடைகள். இரவெல்லாம் காவல் இல்லை என்றாலும் யாரும் தொட மாட்டார்கள். அடுத்து அரங்கநாதபி பெருமாள் கோவில்.. அப்புறம் அனுமார் கோவில் .. பிறகு பெருமாள் கோவில்...இதை பணக்கார பெருமாள், ஏழைப் பெருமாள் என்று தனித்தனியாக அழைப்பர். இந்தக் கோவிலில் கண்ணன் வெண்ணைத்தாழி மிகப் பிரபலம். தேவகோட்டையில் தேர்த் திருவிழா என்றால் அது பெருமாள் கோவில் தேர்தான்.
இங்குள்ள திடலிலும் அடிக்கடி இன்னிசை, நாடக, பேச்சு மேடைகள் நடை பெறும். இதை அடுத்து உள்ள ஒரு பெரிய கட்டிடத்தில் இராமநாதபுரம் (then ) கூட்டுறவு சங்க அங்காடி நடந்து வந்தது. இப்பொது நாம் வடகரை வந்து விட்டோம். அங்கு கண்ணப்பா பைனான்சியர் உட்பட சில, பல வட்டிக்கடைகள் இருந்தன . தேர் முட்டி என்று இந்த இடத்தை குறிப்பார்கள். அப்படியே கிழக்கு நோக்கி வந்தால் அன்பு நண்பன் அமரன் ரூஸோ அவர்களுக்கு சொந்தமான் பாத்திமா நாயகி ஜவுளி ஹால். இந்த இடத்தில்தான் அன்பு நண்பன் ரஷீதுவின் தந்தையார் தையல் கடை வைத்து இருந்தார். பாவா ராவுத்தர் கடை இருந்தது. அப்புறம் செல்லம் ஜவுளி ஹால், குப்புசாமி ஜவுளிக்கடை ,, அப்புறம் ஒரு பார்க்கும் இருந்தது. அப்படியே டெய்லி மார்க்கெட். வெற்றிலை பாக்கு கடையில் ஆரம்பித்து, கடலைக்கடையில் சென்று காய்கறிக்கடைகளில் நுழையும்.
இன்னும் கிழக்கில் வந்தால் R.M. கனக சபாபதி தமிழ் மருந்து கடை . இவரும் என் மாமா மஹாலிங்கம் அவர்களும் பால்ய நண்பர்கள். பின்னர் மேல பஜார் வீதியில் சிவா மெடிகல்ஸ் என்று ஆரம்பித்தார்கள்.
வெ .ஊரணியை ஒரு வலம் வந்து விட்டோம்.
பயணம் தொடரும்
கருத்துகள்
கருத்துரையிடுக