அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 15
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 15
21-10-2017
இந்த பூமி
எத்தனையோ வகையான
மனிதர்களை கருவாக்கி,
அறிவுடன் உருவாக்கி,
சிலரை திருவோடு ஏந்தித்
தெருவோடு சருகாக்கி
சிலரை திருவாக்கி, பலரை
வருவோர்க்கு எருவாக்கி
பின் உருத்தெரியாமல்
மண்ணோடு மண்ணாக்கும்
ரசவாதம் செய்து கொண்டே இருக்கிறது .
ஒரு நிமிடம் ஆழ்ந்து எண்ணிப்பார்த்தால் நினைவுகள் மட்டுமே வாழ்வின் மிச்சம் . அதுவும் மனிதன் நினைவிலே நிற்கின்ற வரைதான்... அனைத்தும் மாயா...மாயா..மாயா...திரைப்படம் போல்
விளக்கை போட்டு , படச்சுருளை ஓடவிட்டால் வெறும் திரையில் வந்து ஆடி, பாடி, ஓடி கொண்டிருக்கும் பிம்பங்கள் தான்
நாம் அனைவரும். விளக்கை அணைத்து விட்டால் வெண்திரை தான்
மிச்சம். ஒன்றும் இல்லை சொச்சம்.
சிறு வயதில் இருந்தே ஊரின் எல்லையான ஆற்றங்கரைப் பகுதியான ஒத்தக்கடை, வட்டாணம் ரோடில் வாழ்ந்தவன். புரட்டாசி மாதக் கடைசியிலேயே மழை பெய்து குளக்கால்கள் வழி
நீர் ஓடி
குளங்கள் நிறையும். குளத்தில் இருந்து உபரி
நீர் வெளியேறி கண்மாய் நிறைக்கும். கண்மாய் நிறையும் நேரங்ககளில் மதகு
திறக்கப்பட்டு (கோட்டை அம்மன் கோவில் அருகில்) ஆற்றில் நீர்
போய்ச் சேரும்.
வெள்ளத்து அனைய
நீர்
மட்டம்
மாந்தர்தம்
உள்ளத்து அனைய உயர்வு
என்று சொல்வதை நேரில் கண்ட
நேரம் அது
. நகரச் சிவன் கோவில் குளம் சித்திரை மாதத்திற்கு பின்
நீர் மட்டம் சுருங்கி உள்ளே போய் அரு
நீர் பறவைகள் அற்ற
குளமாக இருக்கும். தாமரை கொடிகள் அளவில் குறைந்து அந்தக் குட்டையிலும் குடியிருக்கும் சோபை இழந்து... புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் மழை கொட்டி சிவன் கோவிலுக்கு வடக்கில் இருந்து குளக்கால் வழி
தண்ணீர் பெருகி குளத்தை நிரப்பும். நீர் மட்டம் உயர
உயர ஒட்டிய உறவோடு ஒன்றிய தாமரை உறவாடி உயரும். கெண்டை மீன்களுக்கு ஒரே
சந்தோசம் தான்.
இதே போல
திண்ணன் செட்டி ஊரணிக்கு மேற்குப் புறத்தில் இருந்து முளைக்கொட்டு திண்ணை வழியாக நீர்
வரத்து. கருதா ஊரணிக்கு மேற்கில் இருந்தது குளக்கால். தமிழ் என்ன
ஒரு அருமையான மொழி
பார்த்தீர்களா? நாம்
நடப்பதற்கு பயன்
படுத்தும் உறுப்பு 'கால்' ஒரு
இடத்தில இருந்து பெயர்வதற்கு உபயோகப் படுவது கால். குளத்தின் கால்
'குளக்கால்'.. அதனால்தான் 'காற்று ' தமிழில் 'கால்' என்றும் அழைக்கப்படுகிறது.
வட்டாணம் ரோடில் பெரிய பள்ளிவாசலுக்குப் பின் உள்ளது 'மூட்டாங்குண்டு'. இப்படித்தான் எல்லோரும் அழைப்போம். நம்ம தேவகோட்டை தமிழ் கொண்டல் ஆ.குமார் தான்
அதனை அழகாக 'அருணாச்சல பொய்கை' என்று சொல்லச் சொல்வார். அருணாச்சலப்பொய்கை ஜமீந்தார் குடும்பத்தால் உருவாக்கப்பட்டு ஊருக்கு கையளிக்கப்பட்டது. இதற்கு குளக்கால் மேற்கில் இருந்து வரும். இப்போது அதன்
மீது பெரிய வீடுகள் கட்டப்பட்டு இருக்கின்றன. தண்ணீர் எங்கிருந்து எப்படி வரும்?. அதை விட
ஒரு civil ஆச்சரியம் என்னவென்றால், தண்ணீர் நிறைந்து குளத்தின் விளிம்புக்கு மேல்
வரும் காலங்களில் பொய்கையின் கிழக்குப் பகுதியில் ஒரு
திறப்பு வாய்க்கால் இருக்கும். இதன்
வழியாக, உபரித்தண்ணீர் இறகு
சிரை (இரவுசேரி ) கண்மாய்க்குள் தானாக ( by
default / automatically ) சென்று விடும். யாரும் தனியாக எதுவும் செய்ய வேண்டியது இல்லை. இப்போது அந்த
கால்வாய் மேல்
தான் அரிசி ஆலை இயங்குகிறது. அதனால் தண்ணீர் வரும் வழியும் இல்லை, உபரிக்கும் வேலை
இல்லை. அதே போல
சிலம்பணி ஊரணிக்கு மேற்கிலும் குளக்கால். தெற்கில் உபரி
வடி நீர்
வழி. அருமையான நீர்
வழித்தடம் அமைந்த ஊர்
தேவகோட்டை.
அருமையான நீர்
வழித்திட்டம் திட்டம் (Plan ) அமைந்த ஊர்
தேவகோட்டை. பூகோள ரீதியாகவே மேற்கில் மேடாகவும் கிழக்கில் வர
வர நில
மட்டம் இறங்கி அமையப்பெற்ற ஊர். ஊரின் மேற்கில் இருந்து நீர்
கிழக்கு நோக்கி வடிகின்ற வண்ணம் அந்தக் காலத்திலேயே கால்வாய்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு பார்வை பார்ப்போமா?
சிலம்பணி ஊரணிக்கு நீர் வரத்து கல்லாம் பிரம்பு காட்டுபகுதியில் மழைக் காலங்களில் ஓடி வரும் நீர் வந்து சேரும். சிலம்பணி ஊரணியில் இருந்து உபரியாக வரும் தண்ணீர், வெள்ளாளர் வீதி வழியாக தியாகிகள் ரோடு வரும். அதே
போல லட்சுமி திரை
அரங்கம் இடது
புறம் ஒரு
கால்வாய் புறப்பட்டு தற்போதைய ராமச்சந்திரன் டாக்டரின் அன்பு மருத்துவ மனை
ஓரமாக வந்து அந்த
சிலம்பணி ஊரணி
உபரியுடன் கலக்கும். இப்போது இரண்டும் சேர்ந்து தியாகிகள் ரோடு
கடந்து பேருந்து நிலையம் பின்புறம் (சந்தை) வழியாக வாடியார் வீதியை கடக்கும். இன்னும் மழை நீர்
வரும் வழியில் சேர்ந்து பழைய
நகராட்சி மருத்துவமனை பின்புறமாக குளக்காலாக ஓடி, அப்பு லேனா
வீதியை கடந்து குதிரைப்பாதையை வெட்டி, பவானியார் வீதி
கடந்து வட்டாணம் ரோடு
கடந்து இன்னும் கிழக்கே ஓடி
கீழக்குடியிருப்பு கண்மாயில் சேரும்.
இப்பொது இது எல்லாம் மண்
மூடிப்போய் விட்டது, மனிதர்களின் கண்மூடித்தனத்தால் .
தொடரும்…
கருத்துகள்
கருத்துரையிடுக