அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 20


அசை  போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 20
31-10-2017

தேவகோட்டையில் வட்டாணம் ரோடில் பெரிய பள்ளிவாசலுக்கு எதிர்புறம் சுவர்ண வள்ளி பங்களாவை ஒட்டி இருக்கிற பெரிய வீடுதான் 'திருச்சுழியார் வீடு'. 

இந்த திருச்சுழியார் வீட்டில் வலது புறம்
திரு.அண்ணாமலை செட்டியார்   அவரது உடன் பிறந்த தம்பி
திரு .சுந்தரேசன் செட்டியார்   மற்றும் இவர்களது பங்காளி
திரு.வீரப்ப செட்டியார்
இடது புறம்
திரு.பூமிநாதன் செட்டியார்
திரு.திண்ணப்ப செட்டியார் மற்றவர்
குச்சி கம்பெனி செட்டியார் அண்ணாமலை @ ஆவியூர் சொ (சொக்கலிங்கம் )

கிழக்குப் பார்த்த வாசல்.  உயர்ந்த வாயால் படிக்கட்டுகள், செம்பாறாங்கற்களினால்.  படிகளின் இரு ஓரங்களிலும் யானை தும்பிக்கையை நீட்டி இருப்பது போன்ற ஒரு வேலைப்பாடு.  ( அப்புறம் ஹை வேய்ஸ் சாலை அகலப்படுத்த வேண்டும் என்று படிக்கட்டுக்களை பாதி இடித்து விட்டார்கள்).  இந்த வீட்டின் ஒவ்வொரு அங்குலமும் எனக்கு அத்துப்படி.


ஒவ்வொரு நகரத்தார் வீட்டுக்கும் வீட்டின் பின் பகுதியிலோ அல்லது பக்க வாட்டிலோ உபரி இடம் வைத்து இருப்பார்கள்.  சில வீடுகளுக்கு தனியாகவும் உண்டு.  இது போல திருச்சுழியார் வீட்டுக்கு இந்த வீட்டின் எதிர் புறம் எண்  19 இல் இருந்தது தோட்டம்.  இந்த தோட்டம் வண்டி மாடு வைத்து இருக்க பயன் படும் பெரும்பாலும். 

முன்பு மாட்டு சந்தைக்கு எதிர்புறம் இருந்த கொச்சி அம்மா வீட்டு தோட்டத்தில் குடி இருந்தோம் என்று குறிப்பிட்டு இருந்தேனா.  இது ஏறத்தாழ 1964 ~65 ஆம்  வருடங்களில்.  அப்போது எனக்கு 5~ 6 வயது.  சிவாஜி கணேசனின் 'புதிய பறவை' படம் வெளியாகி சக்கைப் போடு போட்ட நேரம். அந்த படத்தின் பாடலான 'சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து'  பாடலை பழனிச்சாமி டாக்டரின் மகள் பாடும்.  அந்த ஞாபகத்தில் தான் வருடம் சரியாகக் கணிக்கிறேன்.  இந்த கொச்சியம்மா வீட்டுக்கு வரும் முன் இந்த தோட்டத்தில் 1963 ஆம் வருடம் எங்கள் குடும்பம் வசித்து இருக்கிறது. எனக்கு நினைவில் உள்ளது. 

இந்த தோட்டத்தில் உரிமையுள்ளவர்கள் திருச்சுழியார் வீட்டின் வலது புறம் உள்ள திரு.அண்ணாமலை செட்டியார், அவரது தம்பி சுந்தரேசன் செட்டியார் மற்றும் அவரது பங்காளி திரு.வீரப்ப செட்டியார்.  இதில் 1963 ஆம்  வருட வாக்கில் திரு.அண்ணாமலை  செட்டியார் அவர்களின் பங்கில்  உள்ள இடத்தில் இருந்து விட்டு பின்னர் என்ன காரணத்துக்காகவோ கொச்சி அம்மா தோட்டத்தில் குடி மாறி இருக்கிறார்கள். 

இந்த கால கட்டத்தில் திரு.சுந்தரேசன் செட்டியார் அவர்கள் இந்த தோட்டத்தில் மாட்டுப் பண்ணை உருவாக்கி இருக்கிறார்.  இந்த மாடுகளுக்காக பெரிய ஷெட்டுகள்,  தண்ணீர் தொட்டிகள் என்று கட்டி நடத்தி பார்த்து இருக்கிறார்.  வணிக ரீதியில் ஒன்றும் சரியாய் அமைய வில்லை.  எனவே அப்படியே கொஞ்சம் கொஞ்சமாகக்
குறைந்து கடைசியில் தோட்டம் காலியாக இருந்தது.  இந்த சமயத்தில் எங்கள் குடி அங்கு மீண்டும் திரு.சுந்தரேசன் செட்டியார் அவர்கள் இடத்தில் நகர்ந்தது.  என் அப்பாவும், சித்தப்பாவும் மற்றவர்களும் சேர்ந்து சுவர் எழுப்பி, மூங்கில் கதவு தயார் செய்து அந்த ஷெட்டின் ஒரு பகுதியை வீடாக மாற்றினார்கள். 

இங்கு நான் ஒன்றை மனம் நிறைந்து குறிப்பிட்டு ஆக வேண்டும்.  என் சித்தப்பா திரு.பவளம்   அவர்கள் எனக்கு மிகவும் பிரியமானவர்.  எங்கு சென்றாலும் என்னை கூட்டிகொண்டே செல்வார்.  அவருக்கு நான் செல்லம்.  முதல் நாள் நான் என் சித்தப்பாவுடன் அந்த தோட்டத்துக்குச் சென்ற காட்சி இன்னும் மனதில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. இங்குதான் பின்னர் 1985 வரை குடி இருந்தோம்.  20 முழு வருடங்களுக்கும் மேலாக. 

இந்த தொடர் தேவகோட்டை பற்றி எழுதுவது.  எந்த வகையிலும் இது தான் வரலாறாகத் திரிந்து விடக்கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.  எனக்கு அதில் விருப்பமும் இல்லை.  ஆனால் சில நேரங்ககளில் என்னைப்  பற்றியோ குடும்பம் பற்றியோ சொல்லாமல் தவிர்க்க இயலாமல் ஆகி விடுகிறது. அன்பர்கள் புரிந்து கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன்.  தற்போது சென்னை, காரைக்குடி ,தேவகோட்டை நகரங்களில் இல்லங்கள் இருந்த போதும்,  தற்போது ஜகார்தாவில் என் தனி அறையில் அரைப்பகுதி அளவு கூட இல்லாது  இருந்த அந்த வட்டாணம் ரோடு வீட்டில் தான் என்னையும் சேர்த்து 6 உடன் பிறப்புக்கள், தாய், தந்தை, சித்தப்பா, சித்தி, அவர்களின் குழந்தைகள், நண்பர்கள் கூட்டம், உறவினர் கூட்டம் என்று குதூகலத்துக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத வாழக்கை வாழ்ந்து இருந்தோம்.  அந்த வாழ்க்கையின் சுகத்துக்கு முன் எந்த உல்லாச உலகமும்,  பங்களாக்களும் , மகிழுந்துகளும், அந்நியச் செலாவணி வங்கி கணக்குகளும் அர்த்தமற்றவை,  அழகிழந்தவை..

இந்த 19,வட்டாணம் ரோடு L வடிவில் அமைந்த நீண்ட பெரிய இடம்.   எவ்வளவு பெரிய இடம்.   பெரிய இரும்புக்கம்பிகள், மரச்சட்டங்கள் மற்றும் துத்தநாக தகடு இவற்றால் செய்யப்பட்ட உயர்ந்த கதவு ( You can  say as GATE ).  இந்த இடத்தின் வலது புறம் ஒரு பெரிய வீடு.  பின்னர் இதனை திரு.அண்ணாமலை செட்டியார் அவர்களின் மகன் இராம் நாதன் எனும் திருச்சபை அண்ணன் வாங்கினார். (நாங்கள்  அண்ணாமலை செட்டியார் மக்களையும், சுந்தரய்யா மக்களையும் ' அண்ணே' 'ஆச்சி' என்று தான் அழைப்போம்.  அவ்வளவு உரிமை எங்களுக்கு அங்கு இருந்தது )


கேட்டின் இடது புறம் மீனாட்சி ஐஸ் கம்பெனி.  24 மணி நேரமும் விடாமல் ஓடிக்கொண்டு இருக்கும்.  இதன் உரிமையாளர் 'லண்டன் தீனா '  என்று அழைக்கப்படும் திண்ணப்பன் செட்டியார்.   திருச்சுழியார் வீட்டிலும் ஒரு திண்ணப்ப  செட்டியார் இருக்கிறார்.  இவர் தான் எனக்கு தெரிந்து முதன் முதலில் தேவகோட்டையில் இருந்து 'அய்யப்பன் கோவில் சபரி மலை'  சென்ற குழு. பின்னர் பாப்போம்.  இந்த ஐஸ் பாக்டரியின் பின்புறம் (along with the length passage of our premises )  அரிசி  அரவை ஆலை .  அப்போது நெல் ஊற வைத்து புழுங்கல் அரிசி தயார் செய்வது இந்தப்பகுதி இசுலாமிய சகோதரர்களால்  நடத்தப்பட்டு வந்த தொழில்.     அப்படியே எங்கள் தோட்டம் ஒரு U டர்ன் அடிக்கும், அங்குதான் எம் இனிய கூடு . இதன் பின் பக்கம் ஒரு பகுதி இஸ்லாமிய அன்பர்களின் 'கபர்ஸ்தான்' என்கிற கல்லறைத்தோட்டம்.   இன்னொரு  பகுதியில் அசரத் வீடு .  'சுலைமான்' அசரத்.    எங்கள் வீட்டின் வலது புறம் பெரிய பள்ளி வாசல் வந்து விடும்.  வீட்டுக்கும் பள்ளி வாசலுக்கும் இடையே ஒரு சுவர் தான்.  சரியாகச் சொன்னால் தற்போதைய 'சுகம் மருத்துவமனை' க்கு நேர் பின் புறம்.
j

என்ன ஒரு வரம் இறைவன் தந்தான்?

இந்த இடத்தில் எவ்வளவு கற்றுக்கொண்டேன் !!??  

நகரத்தார் பெரு மக்கள், இசுலாமிய சகோதரர்கள்,  அக்ரஹார அந்தணர்கள், ஓதுவார்கள், குருக்கள்கள், அடிப்படை தொழிலாள தோழர்கள் என்று எத்தனை வகை இனிய வகை மக்கள் !!  அவ்வளவு பேரும்  எவ்வளவு அன்புடன் என்ன ஒரு ஒற்றுமையுடன் ஒரே சமுதாயமாக வாழ்ந்தார்கள்.  அதனால் எனக்கு 'வெ' வீடும் தெரியும்,  வேலாயி வீடும் தெரியும்.  மானம் பெத்தார் மருமகள் சைபுன்னிஷா வையும் அறிவேன் மரகத வள்ளி டீச்சரையும் அறிவேன். 

மனம் விட்டு அன்பவித்து இத்தனை வயது காலம் பல ஊர், பல தேச  தண்ணீர் குடித்து விட்டுச் சொல்கிறேன்..   தமிழகத்தில் அன்று இருந்த ஜாதி, மத  நல்லிணக்கம்,  ஏழை பணக்காரன் என்ற பேதமை இல்லாத சமுதாயம் இன்று இல்லவே இல்லை.  நாங்கள் அங்கிருந்த நாள் வரை யாரும் பணம் இல்லாதவன் என்று தரம் தாழ்த்தியது இல்லை..  நடுத்தர வர்க்கம் என்று நாலு பேர் முன் பேசியதில்லை.. 

இவன் அக்ரஹாரத்தில் வளர்ந்த கழுதை .... ஆனால்
'கற்பூர வாசம் அறிந்த கழுதை'

இப்பொது அறிகின்ற, படிக்கின்ற செய்திகளை கண்டு மனம் வெம்புகிறது.
சாதிக்க வேண்டியவர்களை சாதி கொல்கிறது. 
பணம் படைத்தவர் மேலும் மேலும் மேலே மேலே ...


பள்ளிவாசலின் 'ஐந்து வேளை'  தொழுகை தான் எங்களுக்கு கடிகாரம்.  தக்பீர் எனப்படும் பாங்கு ஓதும் ஒலி, ஒலி பெருக்கி இல்லாத காலத்திலேயே கெட்டவன் நான் . இடையில் ஒரு சுவர் தானே.  'சுபு எனப்படும் 4:45 பாங்கின்  ஒலி யில் இருந்து 12:40 மணி ஜூகுர் ; 3:45 அசார்; 4:45 மஹ்ரிப் ; 6:45 இஷியா வரை பாங்கின் ஒலி  கேட்டு வளர்ந்தவன். 

என்ன ஒரு ஆச்சரியம் என்றால் ,  திருச்சுழியார் வீடு அண்ணாமலை ஐயாவுடன் திருப்பள்ளி எழுச்சிக்கும் சென்று இருக்கிறேன்,  பள்ளி  வாசலில் நடக்கும் 'மீலாது நபி' விழாவையும் கேட்டு ரசித்து இருக்கிறேன்,  யக்னேஸ்வர அய்யருக்கு 'சந்தியாவந்தனம்'  செய்ய 'பஞ்ச பாத்திரமும்' எடுத்து வைத்து இருக்கிறேன்.. புனித ஜான் பள்ளியில் பயில ஆரம்பித்ததால் 'நற் கருணை வீரன்'  உம்  படித்து இருக்கிறேன்.  சைவப்பிரகாச வித்தியாசாலையில் வகுப்புகள் ஆரம்பிக்கும் முன் பயிற்றுவிக்கப்படும் தேவாரம் ஓதுவார் உடன்

 கைத்தல நிறைகனி யப்பமொ டவல்பொரி
   கப்பிய கரிமுக  னடிபேணிக்
கற்றிடு மடியவர் புத்தியி லுறைபவ
கற்பக மெனவினை  கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடு மரன்மகன்
   மற்பொரு திரள்புய  மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
   மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
    முற்பட எழுதிய    முதல்வோனே
முப்புர மெரிசெய்த அச்சிவ னுறைரதம்
   அச்சது பொடிசெய்த அதிதீரா
அத்துய ரதுகொடு சுப்பிர மணிபடும்
    அப்புன மதனிடை   இபமாகி
அக்குற மகளுட னச்சிறு முருகனை
   அக்கண மணமருள் பெருமாளே.

என்று திருப்புகழும்  ராகம் போட்டு பாடி இருக்கிறேன்.  இந்த மண்ணுக்கு எப்படி நன்றி சொல்வது?
அருள் கூர்ந்து இந்த பதிவுகள் யாவும் நாம் கண்ட தேவகோட்டை தனை விவரிக்க மட்டுமே, சுய புராணம் அல்ல என்று அன்பர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

இது இந்தப் பகுதியின் ஒரு முதல் அறிமுகமே..

இந்த புவியமைப்பு விளக்கம் தேவைப்படுகிறது, ஏனெனில் பல தரப்பட்ட மக்கள் வாசித்த நகரின் பழம் பகுதி இது.  இனிமேல் தான் இங்கு வாழ்ந்த முக்கிய புள்ளிகள், அந்த கால கட்டத்தின் தேவகோட்டை நிகழ்வுகளை குறிக்க வேண்டும்.  இயன்றவரை நினைவுகளைக் காட்சிப் படுத்த முயல்கிறேன் ... அடுத்த பகுதிகளில்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60