அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 24


அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 24
09-11-2017
யாசின் டீ க்கடையில் இன்னும் சில விட்டுப்போன நினைவுகள் பகிர வேண்டியுள்ளது. 

வாழ்க்கையின் உயரத்தில் இருப்பவர்களை மட்டுமா பார்க்க வேண்டும்.  என் சிறு பிராயத்தில் அனைத்து தட்டு மக்களையும் பார்த்து இருக்கிறேன். அவர்களுள் ஒருவராக இருந்து இருக்கிறேன். 

இறைவன்        பார்வையில் 
இயற்கையின் கோர்வையில்
மறையவர்    ஆயினும்
மதியிலி         ஆயினும்
அனைத்து     உயிரையும்
நினைப்போம் ஒன்றாய்

இந்த கடையில் யாசின் அவர்களுக்கு அசிஸ்டன்ட் அவரது மைத்துனர் சாஹுல்.  அடுத்து இரண்டாம் நிலை உதவியாளராக பகுதி நேர வேலை பார்த்து வந்தவர் திரு.கிருட்டிணன் என்பவர்.   'வசந்தா  பிரஸ்' இல்  ( கல்லூரி நண்பர்ICICI வங்கியில் உயர் அதிகாரியாக பணியாற்றிய  கதிரேசன் குடும்பத்துக்கு சொந்தமானது) பைண்டர் ஆக  வேலை பார்த்து வந்ததால் அவரை அனைவரும் 'அச்சாபீஸ்'  என்று அழைப்பார்கள்.  க்ளாஸ் கழுவி வைப்பது, அதிகம் சர்க்கரை கேட்பவர்களுக்கு போடுவது என்று ஓடி ஆடிகொண்டு இருப்பார்.  நாங்கள் குடியிருந்த தோட்டத்தின் ஒரு பகுதிக்கு பின்னர் குடிவந்தார்.  ரெத்தினம் அக்கா என்று ஒரு அம்மா இருந்தார்கள். அவர்கள் வீட்டில் பேயிங் கெஸ்ட் ஆக இருந்தார்.  யாரும் உறவு என்று சொல்லிக் கொள்ள இல்லை. 

உள்ளோர்க்கு செல்வங்கள் சொந்தம் - அது
இல்லார்க்கு உள்ளங்கள் சொந்தம்
இல்லாத இடம் தேடி வருவான் - நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன் இறைவன்  

கண்ணதாசன் பார்த்தால் பசி தீரும் படத்தில் மேலே கண்ட  பாடலை எழுதி இருப்பார் .  அனுபவித்து கவிதை எழுதுகிற அதி மேதாவி அல்லவா அவர் ?


அப்புறம் ஹனிபா என்று இரண்டு கண்களும் அம்மை நோயினால் இழந்து விட்டவர்.  ஆனால் நம்பிக்கை இழக்காதவர்.  மூட்டங்குண்டு  என்றழைக்கப்படும் அருணாச்சல பொய்கையின் படித்துறை நீர் நிரம்பிய காலங்களில்  பாசி படர்ந்து வழுக்கும்.  நன்றாக கண் தெரிந்தவர்களே பார்த்துப் பார்த்து கால் வைத்து மடால்  என விழுந்து எழுவதை பார்க்கலாம்.  ஆனால் இந்த ஹனிஃபா எந்த தங்கு தடையும் இன்றி அழகா இறங்கி குளித்து வருவார்.  முன் குறிப்பிட்ட ரைஸ் மில்லில் நெல் அவியல் வேலைகளையும் பார்ப்பார்.  நெல் ஊற வைக்கும் ஆளுயர தொட்டிகளில் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்து நிறைப்பார். இந்த யாசின் கடை தானே அங்கு எல்லோருக்கும் 'ஒயாசிஸ்'!  ('பாலைவன சோலை ).   களைப்பு தீர யாசின் கடைக்கு வருபவர்கள் முட்டைகோசோ,  கேக்கோ கடித்து,  தேனீரை குடித்து, கொஞ்சம் அரட்டை அடித்து பொழுது போக்குவார்கள்.  இந்த ஹனிஃபா வந்து விட்டால் நாகூர் ஹனிஃபாவின் பாடல்கள்  அப்படியே   அங்கு முழங்கும்.  அந்த சாப்பாடு மேஜையில் கைகள் தாளம் இசைக்க தன்னை மறந்து நாகூர் ஹனிஃபாவின்  பாடல்களை இந்த ஹனிஃபா பாடுவார்.  நான் நாகூர் ஹனிபாவின் கீழ் கண்ட  பாடல்களை இவர் பாட அடிக்கடி கேட்டு இருக்கிறேன் .

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை .....

அல்லாஹ்வை நாம் தொழுதால் சுகம் எல்லாமே ....

எல்லாப் புகழும் இறைவனுக்கே  .....

தக்பீர் முழக்கம் ......கேட்டால் உள்ளம் ....

மவுத்தையே நீ மறந்து இங்கு வாழாலாகுமா ?......


இதற்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கும் ,  அடியேன் உட்பட...

அப்புறம் இன்று மிக சிரமப்பட்டு நண்பர் ஆசைத்தம்பி அவர்களுடன் தொலை பேசியில் தொடர்பு கொண்டு பேசி மகிழ்ந்தேன்.  அவர் நான் முந்தைய பகுதியில் குறிப்பிட்டிருந்தது போல B .D .O. ஆக  இல்லை. அவர் இந்தியன் வங்கியில் பணி புரிந்து விட்டு விருப்ப ஓய்வு பெற்று மதுரையில் வசிக்கிறார்.  இந்த மரகத வள்ளி டீச்சர் குடும்பம் காரைக்குடி ஸ்ரீராம் நகரில் வசிக்கிறார்கள்.  அவரது புதல்வர் மும்பை வாசி ஆகிவிட்டார்.

இந்த பெரிய குடும்பம் இந்த வீட்டுக்கு குடி புகுமுன் வீட்டின் தோட்டத்தில் காட்டுக்கருவேல மரங்கள் மட்டுமே மண்டி கிடந்தன.  ஒரு கிணறு உண்டு.  இவர்கள் வந்ததும் அந்த பெரிய இடத்தையும் அப்படியே பச்சை பரவிய காய்கறித் தோட்டம் ஆக்கி  விட்டார்கள்.  அப்படிப்பட்ட உழைப்பு.  ஆம் , பிஞ்சு குழந்தைகள் எனும் நிலத்தில் எண்ணும் எழுத்தும் விதைத்து வளர்த்து வரும் ஆசிரியர் குடும்பம் அல்லவா?  மண்ணில் விதை வளர்க்க அவர்களால் முடியாதா  என்ன?

இந்த வீட்டிலும் திட்டி வாசல்படி ஒன்றும் இதை அடுத்து ஒருவண்டி நிறுத்துவதற்கு என தனியாக செட் போட்ட கேட்டும்  உண்டு.  இந்த கேட் வழியாக அவுட் ஹவுஸ் வருவது போல தனி கொட்டகை அமைப்பு.  இந்த கேட் பகுதியை மட்டும் தனியாக எனது நண்பன் ஹைதர் அலி, அவரது தம்பி சுல்தான் அவர்களின் குடும்பம் வாடகையில் தங்கி இருந்தது .   நண்பன் ஹைதர் அலி, சுல்தானின் தந்தையார் இயல்பு கவிஞர்.  சாதாரணமாக பேசும்போது எந்த ஒரு வார்த்தையானாலும் உடனே அதற்கு எதுகையோடு அடுத்த வார்த்தையை மின்னல் வேகத்தில் அமைத்து பேசுவார்.  அதனால் அவரது பெயர் 'நிமிஷ கவி'.   அங்கு குடும்பத்துடன் வசித்து வந்தார்கள். நண்பர்கள்  ஹைதர் அலி/ சுல்தான் அவர்களின் தாய் மாமா ஜனாப். மஜீது அவர்கள்.  அவர் குள்ளமாக இருப்பார், அதனால் குட்டை மஜீது என்றால் அங்கு அனைவருக்கும் தெரியும்.  அவர்கள் மலேயா குடி உரிமை கொண்டவர்கள்,  தலைமுறைகளாக... இந்த ஹைதர் அலி மற்றும் சுல்தான் மாமாவின் குடும்பத்துடன் மல்லையாவிற்கு சென்று விட்டார்கள்.


இந்த நிமிசகவி அவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.  சும்மா எதுகை மோனையோடு மட்டும் அல்ல... அந்த வார்த்தை களுக்கு ஆழ்ந்த பொருளும் இருக்கும்.  சும்மா

கூந்தல் கருப்பு
குங்குமம் சிவப்பு

என்று ஒலி நயத்தில் பொருள் இன்றிப் பேசுபவர் அல்ல.  அங்கு பள்ளி வாசலுக்கு புனித குர் ஆன் ஓத வரும் குழந்தைகள் விரும்பும் வண்ணம் திரைப்பட பாடல் மேட்டில் இஸ்லாமிய கீதங்கள் புனைவார்.  அப்போது வெற்றிகரமாக திரை தொட்ட காவியமான புரட்சி நடிகரின் 'நம் நாடு' திரைப்படம்.  


தேவவகோட்டையில்  (லட்சுமி டாக்கீஸில்) 50 நாள் ஓடிய ஒரே திரைப்படம். இந்தப்படத்தில் குழந்தைகளாய்  இருக்கும் ஸ்ரீ தேவியையும், குட்டி பதமினியையும் தூக்கி வைத்து கொண்டு பாடுவார் :


நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே -நம்நாடு என்னும்
தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே!...
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே..


இதே மெட்டில் நிமிஷ கவி அவர்கள் எழுதியிருந்தார் இஸ்லாம் குழந்தைகைளின் குதூகலத்துக்காக:

தீன் வழியில் நடக்க வேண்டும் செல்லங்களே ......


இப்படி எத்தனையோ பாடல்கள்... இவர்களை  எந்த சீமானும் ஆதரிக்கவில்லை,  இவர்களின் திறமையை  எந்த அமைப்பும் அங்கீகரிக்கவில்லை... எதையும் இவர் போன்றவர்கள் எதிர் பார்க்கவும் இல்லை.  இன்று T .ராஜேந்தர் பேசும் PUN எல்லாம் இது போன்ற இயற்கை கவிகளுக்கு முன்னால் அர்த்தமற்றவை.  இவர்களின் தமிழை எல்லாம் கேட்டதனால் தானோ என்னவோ என்னாலும்  கொஞ்சம் எழுத முடிகிறது...

இதற்கு அடுத்து அடுத்து வரிசையாக தி ஊரணி வரை இஸ்லாமிய குடும்பங்கள் தான்  வரிசையாக ... இந்த பகுதியின் பின்புறம் 'இடையர் தெரு'  அப்படியே தெற்கில் போனால் கீழக்குடியிருப்பு.. இதன் பின்னே கண்மாய் என்று ஊர் முடிந்து விடும்.  இந்த இடையர் தெருவில் இருந்துதான் ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி அலுவலக ஊழியர்கள் திரு.ராஜாமணி, திரு.சிங்கமுத்து (தற்போது இவர் ரியல் எஸ்டேட் முகவர்)  ஆகியோர் வருவார்கள். 

அப்புறம் ஒத்தக்கடை -கீழக்குடியிருப்பு பகுதி...குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்...

எங்க மாமா மருது பாண்டியன் கடை வைத்து இருந்தார்.  என் சித்தப்பா பவளம் வைத்து கொடுத்தார் .என்ன கடை என்று மொட்டையா சொல்றேன் என்று பார்க்கிறீர்களா ?  அது ரொட்டிக்கடை கம் பெட்டிக்கடை.   நாங்கள் கடை வைக்கும் முன் 'மஹபூப் பேக்கரி' என்று அன்பர் இப்ராஹிம்ஸா அவர்களின் தந்தை ரொட்டிக்கடை வைத்து இருந்தார்.  இது கடை.. தயார் செய்யும் பேக்கரி நகர காவல் நிலையத்துக்கு பின்புறம் மாட்டு சந்தைக்கு போகும் வழியில் இருந்தது.   என் மாமா மேலைச்சிவபுரி  கணேசர் செந்தமிழ் கல்லூரியில் பணி கிடைத்து அங்கு சென்றவுடன் இந்தக்கடையை என் தந்தை நடத்தி வந்தார்.  முக்கியமா பிஸ்கட் தான் அதிகம் இருக்கும்.  அதோடு கடலை மிட்டாய் , வெற்றிலை பாக்கு, சிகரெட் என்று பங்க் கடை வியாபாரமும் உண்டு .



நான் தான் purchase person.  காரைக்குடி ஜெமினி ஸ்டோரில் ( 2 ஆவது பீட், இன்னும் இருக்கிறது  ) மாரி பிஸ்கட் டின், மற்றும் பல ஐட்டங்கள்   வாங்கி பேருந்துக்கு நின்றால்  ஒரு பேருந்தும் அந்த இடத்தில்  நிற்காது.  கொப்புடையம்மன் கோவில் வாசல்/ மணிக்கூண்டு வரை நடக்க வேண்டும் . மாரி பிஸ்கட் 'டின்' னை தோளில் வைத்து நடக்க கூச்சமாக  இருக்கும். ஆனால் அந்த டின்னின் சைசுக்கு மற்ற பொருட்களுடன் கையில் நிற்காது .  ஒரு மாதிரி கையிலும், தோளிலும்  மாற்றி மாற்றி வைத்து கொப்புடையம்மன் கோவில் வாசல் வந்து சேர்ந்து விடுவேன்.  அப்புறம் தான் நெய்னார் அலி ஸ்டோரில் இன்னும் பல சாமான்கள் வாங்க வேண்டுமே என்ற ஞாபகம் வரும்.   அப்படி காமிராவை இடது புறம் திருப்பினால் பேக்கரி டி  சோட்டா கடை... அதன் பக்கத்தில் 'பேமஸ் டைலர்ஸ்'  இருக்கும்.  இந்த பேமஸ் டைலர்ஸ் கடையில் நான் மாமு என்று அழைக்கும் திரு.சாகுல் அவர்கள் முன்பு வேலை பார்த்தார்.  பின்னர் அரபு நாடுகளுக்கு வேலைக்கு சென்று விட்டார். அதனால் கடையில் முதலாளி முதல் காஜா எடுப்பவர் வரை நல்ல பழக்கம்.  அப்படியே பிஸ்கட் டின், மற்றும் பொருட்களை அங்கே வைத்து விட்டு அடுத்த ஷிப்ட் கொள்முதலுக்கு நயினார் அலி ஸ்டோர் சென்று வருவேன்.   அப்புறம் சித்தப்பா பவளம் அவர்கள் பணி  புரிந்த ராஜ் குமார் ரோடு வேஸ்  பேருந்து வரும் நேரமாக இருந்தால் காத்திருந்து அதில் பயணித்து வந்து ஒத்தக்கடையில் கடை வாசலிலேயே இறங்கி விடுவேன்.  அப்படி எல்லாம் வாங்கினால் தான் கொஞ்சமாவது மார்ஜின் இருக்கும்.

என் தகப்பனார் சாப்பிட வரும் இடை வெளிகளில் என் தங்கை (மிகச்சிறுமியாக ) மாலதி கடையை  பார்த்து கொண்டு இருப்பார்.  எனக்கு படம் பார்க்க மற்றும் திருட்டு தம் அடிக்க காசு வேணுமே. சரியா  தங்கை கடையில் இருக்கும் நேரம் பார்த்து போய் ,  அண்ணனுக்கு காசு குடும்மான்னு நிப்பேன்.  பாவம் அது முழிக்கும். பாசக்கார அண்ணனுக்கு இல்லை என்றும் சொல்ல முடியாது... கல்லாவில் கள்ளத்தனம் பண்ணினா அப்பா வந்து என்ன காசு குறையுதேன்னு கண்டு பிடிச்சுட்டா ??  முதல்ல எப்படி எடுக்கிறது என்ற தயக்கம்!!! அப்புறம் எவ்வளவு எடுக்கிறது என்ற மயக்கம் !!  எப்படியோ ஒரு 2 ரூபாய் வாங்கிறதுக்குள்ள  மாநில அரசு மத்திய அரசிடம் இருந்து மானியம் வாங்கிறது மாதிரி  ஒரு வழியாகி  விடும்.

இதன் பிறகு சித்தப்பா பவளம் அவரது பேருந்து நடத்துனர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் இந்த கடையை நடத்தினார். சரியாக ஒத்தக்கடையில் பேருந்து நிற்கும் இடத்தில இந்த கடை.  கடை வாசலில் ஒரு .தி.மு.. கொடி  கம்பம்,  தொண்டர்கள் துண்டு ஏந்தி திட்டுகள் சேர்த்து உருவாக்கிய கொடிக்கம்பம்.  முக்கியமாக மாமா ஆதி .ஜெயபால், அண்ணன் நவாப் B .A .,மற்றும் பல உண்மை விசுவாசிகள் இவர்களின் உழைப்பு.   எத்தனையோ முறை புரட்சித்தலைவர், மக்கள் திலகம் இந்த கொடியினை தனது வாகனத்தில் நின்று கொண்டே ஏற்றியிருக்கிறார். நான் அவருக்கு மாலையிட்டு சிவந்த கரம் பிடித்து பார்த்து இருக்கிறேன். நான் உட்பட சாமான்ய மக்கள் கொடுத்த வரவேற்பை மனம் நிறைய அனுபவித்து இருக்கிறார்.  பின்னர் நேரம் இருந்தால் அது பற்றி பார்ப்போம்.

அப்புறம் தொந்தி செட்டியார் கடை எனும் பரம்பரையாக நடந்து வரும் மொங்காரி கடை.  இவரது தாத்தா பெயர் தொந்தி செட்டியார்.  அடுத்தடுத்த தலைமுறையாய் இந்தக்கடை நடத்தி வருகிறார்கள் சந்ததிகள்.  செல்வம் என்பவர் மொங்காரியின் அண்ணன்.  இவர்கள் 'செல்வம் சோடா பாக்டரி' நடத்தி வந்தார்கள்.  கையினால் சுற்றி பை கார்பனேட் அடைக்கப்படும் சோடா,  மற்றும் நன்னாரி சர்பத் சப்ளை செய்வார்கள்.

அப்புறம் கோபால் டீ கடை.  இங்கு கல்லூரியில் நான் படித்த காலங்களில், கண் விழித்து படிப்பதற்காக எப்போது வேண்டுமானாலும் நான் தேனீர் அருந்திக் கொள்ளலாம்.  அக்கவுண்டில்.. சித்தப்பா கொடுத்து விடுவார்.  

அப்போது வாடகை  சைக்கிள் கம்பெனி நடத்துவது அத்துடன் தினசரி சீட்டு  வசூல் செய்வது என்பது ஒரு சிறு தொழில்.  அரசப்பன் அண்ணன் ( தற்போது நகராட்சி அலுவலகத்துக்கு அருகில் கடை வைத்து இருக்கிறார் என நினைக்கிறேன்), உதய சூரியன் கருப்பையா அண்ணன், பூமிநாதன்இ, சித்திக்(டைலர்), ஜின்னா  ஈட்டி சின்னையா இவர்கள்  எல்லோரும் வாடகை சைக்கிள் கம்பெனி வைத்து நடத்தி வந்தார்கள்.  இதில் ஈட்டி சின்னையா அவர்களின் 'தமிழரசி' மற்றும் கருப்பையா அவர்களின் 'உதய சூரியன்' சைக்கிள் கம்பெனிகள் மிக பழமையானவை.

இந்த உதய சூரியன் கருப்பையா அண்ணன் பக்கத்துக்கு கிராமம், (வெளிமுத்தி என்று நினைக்கிறேன் ) திராவிட இயக்க செயல் வீரர்களின் முன்னோடி. அவரது சைக்கிள் கடையே ஒரு தி.மு..  கட்சி அலுவலகம் போல காட்சி தரும்.  கருப்பு சிவப்பு வண்ணம் அடித்து இருக்கும். உள்ளே அறிஞர் அண்ணா அமெரிக்காவில் சிகாகோ வில் மைக் பிடித்து பேசிக்கொண்டு இருப்பார் .  'ஒன்றே குலம் ... ஒருவனே தேவன் ..'  என்று எழுதப்பட்டிருக்கும்.   உண்மையில் இயக்கத்தில் இருந்து எதையும் எதிர்பார்க்காமல், இயக்கத்தின் இயக்கமாக இறுதி வரை இருந்து ஏணியாய் கலைந்தவர்கள் பலர்.  இப்படிப்பட்டவர்களை  எல்லாம் இன்றைய நாடோடி அரசியல் வாதிகளை பார்க்கும்போது 'ஜீவநதி ....சாக்கடையாக'  மாறியதை உணர முடிகிறது.  விடுங்க அவங்கள.. அது ஒரு பிழைப்பு என்று ஆகி  விட்டது. யாரு எவ்வளவு சொத்து சேர்த்தாலும் அள்ளிக் கொண்டு எங்கும் பொய் விட முடிவதில்லை.  இங்கேயே எப்போதும் இருக்க போகின்றன.  டீ  எஸ்டேட் இங்கயே தானே இருக்கிறது அப்படியே...


இன்னொரு முக்கியமானவர் உலகப்ப செட்டியார் குடும்பம்.  கருதா ஊரணியில் 'உலகப்ப செட்டியார்' அரிசி ஆலையினை   தேவகோட்டையில் அறியாதோர் இருக்க முடியாது.  சின்னவர் பாலு.. மிக சிறுவயது இளைஞராகப்  பார்த்து இருக்கிறேன்.  புத்தம் புதிய சைக்கிளை ஒத்தக்கடையில் இருந்து கருதா ஊரணி மில்லுக்கு ஓட்டி செல்வார்.  அப்போது மொபெட் எல்லாம் இல்லாத காலம்.  தும்பை மாதிரி வெண்மை  உடையில் நெற்றி நிறைய திருநீறு பூசி இருப்பார் .  அரிசி ஆலை  நிர்வாகம் இல்லம் மூத்தவர் கையில் தான்.  அவரது மகள் 'அன்னமயில்'  என்னுடைய வயது செட். 

இவர்கள் வீட்டுக்கு அடுத்த வீடு சிட்டு இல்லம் எனப்படும் சிட்டா வீடு.  பால் மாடு வைத்து கறந்து பால் வியாபாரம் கன ஜோராக நடக்கும்.  சாயந்திரம் போய்  காத்திருந்து பால் வாங்க வேண்டும்.  கறந்து கொண்டு இருப்பார்கள்.  என் போன்ற சிறுவர்கள் கையில் தூக்கு சட்டியுடன் காத்து இருப்போம்.  அரை ஆழாக்கு 12 பைசா .  அதாவது 100 மில்லி லிட்டர் . அப்படியானால் ஒரு லிட்டர் ரூ.1.20. அட ஆமாங்க...  அங்கு நான் கோமதி அம்மாவுக்காகவோ, பாலா மாமிக்காவோ பால் வாங்கி வந்து இருக்கிறேன்.  அங்கு காத்திருக்கும் வேளையில் சரத்சந்திரரின் தமிழ் மொழி பெயர்ப்பு நாவல்கள் படித்து கொண்டிருந்த நினைவு இருக்கிறது.


இத்துடன் வட்டாணம் ரோடு, ஒத்தக்கடை ஏரியா ரௌண்ட்ஸ் போதும் என்று நினைக்கிறேன்.  தேவைப்படும் நேரம் மீணடும் இங்கு வரலாம்.  சின்ன ஊர் தானே...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60