அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 30


அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 30
22-11-2017

புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் நான் உட்பட பலருக்கு இன்று போயே போய் விட்டது.  இணையம் பேரண்டத்தின் வடிவை மட்டும் சுருக்கி விடவில்லை. இவையெல்லாம் உலகில் அறிமுகமான பின் எழுதுவதும் அச்சு ஊடகமும் சுருங்கி விட்டன.  என்னதான் செயலிகள் டிஜிட்டலில் வந்து கொண்டே இருந்தாலும், புத்தகங்களாகப் படிப்பதில் உள்ள திருப்தி இவற்றில் ஏற்படுவது இல்லை.  ஒரு நாளைக்கு எதோ ஒரு புத்தகமாவது படிக்க வேண்டும் என்ற பழக்கத்தை ஐந்தாம் வகுப்பு படிக்கிற காலத்திலேயே மனதில் ஊன்றியவர் சைவப்பிரகாச வைத்தியசாலையின் தலைமை ஆசிரியர் ஆன  பெரிய சார் தான் .  இப்போது எனக்கும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த பழக்கம் விட்டுப் போய்க்கொண்டு இருக்கிறது,  ஆனால் டிஜிட்டல் மீடியாவில் படிக்கிறோம்.  ஆனால்  வாசிக்காத நாள் உலகில் வசிக்காத நாள் போல ஏதோ குற்ற உணர்வு ( Guilty Concisous ) ஏற்படுகிறது.


ஐந்தாம் வகுப்பு படிக்கின்ற காலத்தில் கொஞ்சம் கால் முளைத்து தேவகோட்டையில் பேருந்து நிலையம் வரை சென்று வர ஆரம்பித்தேன்.  (இந்த ஏரியா பற்றி விபரமாக நகர் வலத்தில் பார்க்கலாம்), தற்போது தேவைக்காக கொஞ்சம் TEASER மட்டும்.  பேருந்து நிலையம் அருகில், இன்றைய தலைமை தபால் நிலையம் அருகில் புத்தகங்களை வேடிக்கை பார்க்கின்ற இடம், 'கேயெமெஸ்' பாரதி பண்ணை.  நிறைய புத்தகங்கள் அங்கு அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும்.  பள்ளிப் புத்தகங்கள் இங்கு கிடைக்கும் .  புது புத்தகங்களின் வாசனையே அலாதிதான்.   என்னை பொறுத்தவரை, ஏதாவது புத்தகங்கள் வேண்டுமென்றால், கிடைக்கும் இடம் பாரதி  பண்ணை என்ற எண்ணம்தான் அந்த வயதில் பதிவானது.

இதற்கிடையில் பெரிய சார் அவ்வப்போது கதைப் புத்தகங்கள்  வாசிக்க கொடுத்து விடுவார்.  வீட்டுக்கு கொண்டு போய்  படித்து விட்டு திரும்பக் கொடுக்க அனுமதிப்பார்.  அனைவருக்கும் அல்ல.  எனக்கும் , நண்பன் ராஜு என்கிற ராமகிருஷ்ணனுக்கு அந்த விலக்கு உண்டு.  அதில் நிறைய புத்தகங்கள் படித்து இருக்கிறேன்.  அந்த நினைப்பில் பாரதி பண்ணையில் அடுக்கி வைக்கப் பட்டு இருக்கும் புத்தகங்களின் தலைப்பை வேடிக்கை பார்த்து,,, பார்த்து விட்டு வந்து இருக்கிறேன்.  

பெரிய சார் கொடுத்த புத்தகங்களில் 'மிட்டாய் பாப்பா'  என்று ஒரு புத்தகம். (குழ.கதிரேசன், எழுதியது என்று நினைக்கிறேன் ).  அந்த புத்தகத்தை பள்ளி முடிந்து வீட்டுக்கு கிளம்பும் போது பெரிய சார் அழைத்து கொடுத்தார்.  தலை கால்  புரியாமல் அதை வீட்டுக்கு சென்று படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு புத்தகத்திலேயே கண்ணாக பள்ளியை விட்டு வெளியே வரும்போது தூணில் மோதி நெற்றியிலே புடைத்து கொண்டேன்.  அவ்வளவு ஆர்வம் .  மிட்டாய் கடையில்   விற்பனைக்கு பல வடிவங்களில் இனிப்பு மிட்டாய்கள் செய்து வைக்கப்பட்டு இருக்கும்.  அவற்றுள்  ஒரு குழந்தை வடிவில் உள்ள ஒரு மிட்டாய் இரவில் உயிர் பெற்று எழுந்து பக்கத்து வீட்டு பையனிடம் வந்து சேரும்.  இருவரும் தனிமையில் யாருக்கும் தெரியாமல் விளையாடுவார்கள்,  விடிந்ததும் கடைக்குத் திரும்பி மிட்டாயாக மாறி விடும். கிளைமாக்ஸில் அந்த மிட்டாயை எறும்புகள்  தின்று கரைக்க ஆரம்பிக்கும் .. இப்படி அந்த 10 வயதில் படித்த அந்த கதை இன்னும் நினைவில் இருக்கிறது, அந்த நேரத்தில் என்னை படாத பாடு படுத்தி விட்டது அந்த கதையின் பாதிப்பு.  இப்படி படிப்பதில் ஒரு சுவாரசியம் கலந்த உணர்வை அனுபவிக்க  புகட்டிய பெரிய சாரை  என்றும் மறக்க முடியாது.


ஒரு நாள் வகுப்பில் பெரிய சார் 'நூல் நிலையம்'  பற்றி வகுப்பு எடுத்துக் கொண்டு இருந்தார்.  நூலகத்தில் பல   துறையைச் சேர்ந்த புத்தகங்கள் இருக்கும்.  பதிப்பாளர் வாரியாக, படைப்பாளி வாரியாக,  துறை வாரியாக,  வயது வாரியாக பிரித்து வைத்து இருப்பார்கள், வேண்டுவனவற்றை  நூலகரிடம் கேட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று விளக்கி  கொண்டு இருந்தார்.

அதுவரை பொது நூலகம் என்ற ஒன்று இருப்பதே நான் அறியேன்.   பணம் கொடுத்து புத்தகங்கள் வாங்கினால் தான் படிக்க முடியும் என்று நினைத்து கொண்டு இருந்தேன்.  அவரிடம், ஆச்சரியம் தாளாமல் மேலும் விபரங்கள் தெரிந்து கொண்டு , அது முதல் லட்சுமி திரை அரங்கத்து வரிசையில் இருந்த இராமநாதபுரம் மாவட்ட கிளை நூலகத்தில் ஞாயிற்று கிழமைகளை கழிக்க ஆரம்பித்து விட்டேன்.  அப்படி என்னை ஊக்குவிக்க ஆசிரியர் இல்லாது இருந்து இருந்தால் நானும் எங்கோ ஓர் கிராமத்திலோ அல்லது நகரின் விளிம்பிலோ கிடைத்த பணியைச் செய்து கொண்டு தான் இருந்து இருப்பேன்.  ஆசிரியர்களின் பங்கு ஒரு தலைமுறையையே புரட்டிப் போட்டு விடும் என்பதை மனதார உணர்ந்து இதை எழுதும் இந்த வேளையில்  எனக்கு கிடைத்த ஆசான்களுக்கு இனி வரும்  என் சந்ததிகள் சார்பாகவும் நன்றி செலுத்துகிறேன்.

பெரிய சார், தூய வெண்  நிறத்தில் வேட்டி  கட்டி, முழுக்கை சட்டை அணிந்து இருப்பார் .  சுருளான முடி, நெற்றியில் நீங்காத நீறு.  பள்ளிக்குள்  நுழையும் முன் கருதா ஊரணி பிள்ளையார் கோவிலில் வழிபட்டு வருவார்.  மாணவர்களோடு நகைச்சுவையாகப் பேசி அவர்களை அப்படியே பாடத்துக்குள் நைசாக இழுத்துச் செல்வதில் பெரிய சார் வல்லவர்.  மிகவும் நட்பு பாராட்டுகின்ற போதும், அவர் மேல் அனைத்து  மாணவர்களுக்கும் ஒரு பயம் கலந்த மரியாதை உண்டு.  ஒரு முறை முடி வெட்டும் CROP வகைகள் பற்றி நகைச்சுவையாக ஒவ்வொரு ஸ்டைல் பற்றியும் அவர் சொல்லியது நினைவு இருக்கிறது.  பம்பை, சம்மர் கட்டிங், ( அப்போது ஸ்டெப்  கட்டிங் இல்லை ) என்று சொல்லிக்கொண்டே வந்தார். நாங்கள் அவர் முடி ஸ்டைலை காண்பித்து இது என்ன ஸ்டைல் என்று கேட்டோம்.  அவர் கொஞ்சமும் சளைக்காமல்  இது 'வாய்க்கால் வெட்டு' என்றார்.  அட ஆமாம் , அவர் தலை முடி அழகாய் வாய்க்கால்கள் பல வெட்டி விட்டது போலத்தான் வரிசையாய் இருக்கும்.

இரண்டு வருடங்களுக்கு முன் தேவகோட்டைக்கு சென்று இருக்கும் போது, பழைய பள்ளிகளை  சென்று பார்த்து வர வேண்டும் என ஆவல்  பீறிட்டது.  ஒத்தக்கடையில் இருந்து நேராக திருவேங்கடமுடையான் பள்ளிக்கு சென்றேன். ஏமாற்றமாக, திருவேங்கடமுடையான் பள்ளி மூடப்பட்டு இருந்தது.  கோடை விடுமுறை நேரம்.  மனம் சலிக்காமல் நடந்தேன்... கருதா ஊரணிக்கு, சைவப்பிரகாச வித்யாசாலைக்கு... போய்  பெரிய சார் எங்கு இருக்கிறார், எப்படி இருக்கிறார் என்று விசாரித்து வரலாம்,  பின்னர் எப்போதாவது தேவகோட்டை செல்லும் போது சந்திக்கலாம் என்றுதான் நினைத்து வழி  நெடுக பழைய நினைவுகளை ஏந்தி சிறு பையனாக மாறி வீதியினை, வீடுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றேன்.  என் அதிர்ஷ்டம்,  சைவ பிரகாச வித்தியாசாலை திறந்து இருந்தது. உள்ளே சென்றேன்.  இரண்டு ஆசிரியைகள், சுற்றிலும் மாணவ மாணவிகள் தரையில் அமர்ந்து.  பெரிய சார் இல்லாத வெற்றிடம் தனியாக தெரிந்தது.

மெதுவாக தயங்கி தயங்கி அந்த ஆசிரியையிடம், நான் இந்த பள்ளியின் பழைய மாணவன்,  பெரிய சார் என்று ஒரு தலைமை ஆசிரியர் இருந்தார், அவரது முகவரி கிடைக்குமா? அவரைப்பற்றி தெரியுமா என்று கேட்டேன்.  அந்த ஆசிரியை, உடனே முகத்தில் மலர்ச்சி பொங்க,  நான் அந்த பெரிய சாரின் மகள்தான், பெயர் சித்ரா,, என்றார். எனக்கு நினைவு வந்தது.  இதே சித்ரா சின்னப்ப பாபாவாக இருக்கும் பொழுது பார்த்து இருந்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.  பெரிய சாரை  பார்க்க இயலுமா எனக்கேட்டேன் .
கொஞ்சம் இருங்கள்,  அவர் இந்தப்பக்கம் வருகிறேன் என்று சொன்னார் என்றார்கள்.  படபடப்பை அடக்கிக் கொண்டு,  பழைய சிறுவனாகவே மாறி பள்ளியின் தோட்டத்தை, மைதானத்தை, ஒவ்வொரு தூணை சுற்றி சுற்றி பார்த்தேன்..கண்கள் கசிய,, நண்பர்கள் யாரும் இல்லை ,, நான் தனியன்,, உடன் இருந்து நினைவு எனும் நண்பன் மட்டுமே..  கொஞ்ச நேரத்தில் என் மதிப்பிற்குரிய பெரிய சார் வந்தார்கள். அதே தூய்மை காத்த உடை, நெற்றியில் திருநீறு.  நன்றாக மெலிந்து இருந்தார்.  உடனே என்னை அடையாளம் கண்டு கொண்டார்.



ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் புகு முக வகுப்பில் நான் Advanced English, Economics , Commerce என்ற 'D' குரூப் எடுத்து இருந்தேன். பொதுவாக அந்தக் காலத்தில் D குரூப்பில் முதல் வகுப்பு எடுப்பது என்பது கடினம். ஏனெனில் சாதாரண பள்ளிகளில் 3 ஆம்  வகுப்புக்கு மேல் ஆங்கிலம் பயின்று விட்டு புகு முக வகுப்பில் Julius Ceaser, Somerset  Maughm படிப்பது கொஞ்சம் கஷ்டம்.  நான் புகுமுக வகுப்பில் முதல் வகுப்பில் தேர்வு பெற்றேன்.  அந்த நேரத்தில் இந்த பெரிய சார் தன்னுடைய மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் முகமாக என்னை  உதாரணம் காட்டி இருப்பார்  போல.. எனக்கு தெரியாது,  என்னை இத்தனை வருடம் கழித்து  பார்த்தவுடன், அதை  நினைவு கூர்ந்தார்.  36 வருடங்களுக்கு பிறகும் ஒவ்வொரு வருடமும் புது மாணாக்கர்களை பார்க்கும் ஆசிரியர் என்னை நினைவு வைத்து இருந்தது எனக்கு மிக ஆச்சரியமாக இருந்தது.  ஆசான்கள் தகப்பன் சாமிகள்... எத்தனை பிள்ளைகள் பெற்றாலும் பிள்ளைகளை தகப்பன் மறந்து விடுவாரா?  எனக்கு அவர் ஒரு தந்தையாகவே கண்ணில் பட்டார்.

பெரிய சாரின் மனைவி உடல் நலம் இல்லாமல் இருப்பதாக நான் சந்தித்த போது  கூறினார். அடிக்கடி பேசிக்கொள் ,  வயது ஆகிறது அல்லவா,  பழைய தைரியம் குறைந்து விட்டது என்றார்.  இங்கு திரும்ப வந்து இரண்டு முறை பேசினேன், பின் எப்படியோ கைபேசி தொலைந்ததில் அவரது எண்ணையும் தொலைத்து விட்டேன்.  ஒரு வருட இடைவெளியில் திரு.சின்ன அருணாச்சலம் அவர்கள் ட்ரஸ்டில் பொறுப்பு எடுத்து கொண்டு பள்ளிக்கு வேண்டியவற்றை செய்து வருகிறார் என்ற நல்ல செய்தியை அவரது முக நூல் மூலமாக அறிந்து பின்னூட்டம் அளித்தேன்.  திரு. சின்ன அருணாச்சலம் அவர்களும் பெரிய சாரின் மகள்  சித்ரா அங்கு வேலை செய்கிறார் , அவருடைய கை பேசி எண் இதுதான் என்று முகநூல் மூலமாகவே செய்தி அனுப்பினார்.

அவ்வப்போது பெரிய சாரின் மகள்  மூலமாக பேசிக்கொண்டேன்  தொலை  பேசியில்.  பல சமயங்களில் பெரிய  சாருடன் பேச இயலாமல் போனது.  நேற்று இந்த பகுதியை எழுத ஆரம்பித்தவுடன் அவர் நினைவு வந்தது.  கையில் இருப்பது அவரது மகள்  சித்ரா அவர்களின் தொலை பேசி எண்  மட்டும்தான்.  நீண்ட நாட்களாக பேசவில்லை.  திருமதி.சித்ராவுடன் தொடர்பு கொண்டு பெரிய சார் எப்படி இருக்கிறார் என்று விசாரித்தேன்.  அவரது தயார் உடல் நிலை எப்படி  இருக்கிறது  என்று விசாரித்தேன்.  பெரியசாரின்  உடல் நிலை சரியில்லாத மனைவி 10 திங்களுக்கு முன் காலமாகி விட்டார் என்ற துயரச்செய்தியையும் கேட்டு அறிந்தேன்.  அனைத்து அன்பர்களும்  அவர்கள் ஆன்மா இறையடியில் அமைதி கொள்ள பிரார்த்திப்போம் .

இன்னும் எவ்வளவோ சைவப்பிரகாச வித்தியாசாலையின் நினைவுகள் மனதில் நிழலாடுகின்ற போதும், கண்ட தேவி ரோடு பயணம் முடிக்க வேண்டும், இன்னும் பல முக்கியமான இடங்களுக்கு செல்ல வேண்டி இருப்பதால் ஜூட் விட்டுடுவோம்.

இப்ப பள்ளியை விட்டு வெளியே வந்து கண்ட தேவி ரோடில் கண்ட தேவி நோக்கி பயணிப்போம்.  ஏற்கனவே சர்புதீன் ரைஸ்  மில்லை பார்த்து விட்டோம்.  அப்படியே இன்னும் நடந்தால் முத்து  மாரியம்மன் கோவில் வரும்.  பக்கத்திலே ஒரு குளக்கால் ஓடும்.  ஆடி மாத உற்சவம் இங்கு அற்புதம்.  அன்பு சுதர்சன் நண்பர்கள் அனைவரையும் தனது இல்லத்துக்கு அழைத்து விருந்து வைப்பார், கிராமங்களில் நடப்பது போல.  அதை அடுத்து உலகப்ப செட்டியார் அரிசி ஆலை .  ஒரு காலத்தில  ஓஹோ என்று ஓடிக்கொண்டு இருந்த மில்அதை அடுத்து சன்மார்க்க சபை.  வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் பெயரில் பசிப்பிணி ஆற்றி வரும் அமைப்பு.  இதை பற்றி முந்தைய பகுதிகளிலும் குறிப்பிட்டோம்.

இதற்கு முந்தைய பகுதியில் ஐயா வெங்கடாச்சலம் (முன்னாள் முதல்வர், சரஸ்வதி நாராயணன் கல்லூரி, மதுரை ) அவர்கள் பின்னூட்டமாக "மாமனார் தொடங்கியதை  மருமகன் புலவர் சுந்தரம் அவர்கள் இரவும் பகலும் அயராது கவனித்து வருகிறார்.  பாரதி  அன்பார் பூவநாதன் விழா ஆண்டு தோறும் நடக்கிறது.பலரும் தங்கள் பிறந்த நாளின் போது அறுசுவை உணவு வழங்கி உதவுகிறார்கள் .  வடலூர் போல இங்கும் அணையாத அடுப்பு  எரிந்து கொண்டு இருக்கிறது.  முடிந்தவர்கள் உதவலாம்"  என்று குறிப்பிட்டு இருந்தார்கள்.


அதேபோல , திருசிராப்பள்ளியில் தற்போது வசிக்கும் திருவாளர் இராமநாதன் லட்சுமணன்,  இவ்வாறு குறிப்பிடுகிறார்:

சன்மார்க்க சபை இன்றும் சிறப்பாக நடை பெற்று வருகிறது.  அந்த இடத்தை எனது பெரிய மாமனார் திரு. .வி.கே. இராமநாதன் செட்டியார் இலவசமாகக் கொடுத்தார்கள்.  அந்த வளாகத்துக்குள் நன்மை தரும் விநாயகர் கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்தார்கள். சைவ வகுப்புகளும் கூட்டங்களும் நடத்தினர்.  திரு.கி. .பெ.விசுவநாதன் பேசிய ஒரு கூட்டத்திற்கு நான் சென்றிருக்கிறேன்...

அதற்கு நேர் எதிரில் விஸ்தாரமான இடத்தை திரு.குழ .மாணிக்கம் செட்டியார் அன்றைய நகராட்சிக்கு பேருந்து நிலையம் அமைப்பதற்காக இலவசமாகக் கொடுத்தார்கள்.  ஆனால் நடந்ததோ வேறு .. ஞாயிற்றுக்கிழமை சந்தை அந்த இடத்தில் நடந்து வருகிறது ...

மேலே கண்ட  இரண்டு பதிவுகளும் அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இந்த பகுதியில் எழுதுகிறேன்.  இன்று புறம் போக்கு நிலத்தைக்கூட மனையாக மாற்றி விற்பனை செய்வோரும்,  பொதுவில் கிடக்கும் தண்ணீரையும், ஆற்று மணலை திருடி சொத்து சேர்ப்போரையும்,  அவர்களுக்கு பின் புலமாக , முன் பலமாக இருக்கும் ஆட்சியாளர்களையும், அந்த  சுகத்தில் அரசியலுக்குள்  அடி  எடுத்து வைக்கும் அற்பங்களையும் எண்ணிப்பாருங்கள்.. எவ்வளவு எளிமையாக வெளியே தெரியாமல் அள்ளிக் கொடுத்த வள்ளல்கள் நம் தேவகோட்டையில் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று....

இந்த கண்ட தேவி ரோடுக்கு இணையாக இதன் கிழக்கே மாரியம்மன் கோவிலுக்கு நேரே செங்கற்கோவிலார் வீதி விரிந்து இருக்கும்.  இப்போது வார சந்தை இருக்கும் இடம் (மேலே சொன்னது)  சும்மா போட்டு வைத்து இருந்தார்கள்.  வார சந்தை சரஸ்வதி டாக்கீஸுக்கு எதிரில் வாடியார் வீதிக்கு இடது புறம் இருந்தது. அதனை பற்றி அந்த ஏரியா விசிட்டில்  பின்னர் பார்க்கலாம்.  தற்போது சந்தை இடத்தில இருந்து புதூர் அக்ரஹாரம் வீதி ஆரம்பிக்கும் வரை ஓரளவு வெற்று இடம் தான்.  புதூர் அக்ரஹாரம் ஆரம்பிக்கும் இடத்தில்து முன்பு தாலுகா காவல் நிலையம் இருந்தது, பின்னர் தேவகோட்டை நகராட்சி அலுவலகம் அங்கு இருந்தது  பின்னால் தீ  அணைப்பு நிலையமும் இருந்த ஞாபகம்.  தயவு செய்து சரியாக தெரிந்தவர்கள் ஆமோதிக்கவும்,  நான் கொஞ்சம் நினைவுகளைத் துழாவி எழுதுகிறேன்..

இன்னும் கொஞ்சம் போனால் தமிழ் நாடு கால் நடை மருத்துவமனை வரும்.. கால் நடையில் அங்கு அடுத்து போவோமே ....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60