அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 33



அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 33
13-12-2017
சிவன் கோவில் வடக்கு தெருவில் இருந்து கிழக்கு நோக்கி நடந்தால் இறகுசேரி இரக்கம் வரும்.  சிவன் கோவில் கிழக்கு இருந்து இறகுசேரி மற்றும் கீழக்குடியிருப்பை இணைக்கும் கண்மாய் ஆரம்பித்து விடும்.  இயற்கையாகவே சிவன் கோவில் ஊரணிக்கு கீழ்புறம் பூமி பள்ளமாகவே இருக்கும்.  எனவே இந்த பள்ளம் ஆரம்பிக்கும் இடம் சாலையில் ஒரு இறக்கமாக வடிக்கப்பட்டு இருக்கும்.  இந்த இடம் இறகுசேரி இறக்கம் என்று அறியப்படும்.

இந்த இடத்துக்கு நேரே இருக்கிற வீடு அன்பு நண்பன் சோமசுந்தரம் அவர்களுடையது.  என் மதிப்பிற்குரிய திருச்சுழியார் வீட்டு திண்ணப்ப செட்டியார் அவர்களின் மூத்த புதல்வன் திருமிகு.அண்ணாமலை ( சைவப்பிரகாச வித்தியாசாலையின் சின்ன சார்) அண்ணன்  அவர்களின் மனைவியார் திருமதி உண்ணாமலை ஆச்சி பிறந்த வீடு.  அப்படியே இறக்கத்தில் இறங்கி  கீழே சென்றால் வரிசையாக வீடுகள். அடுத்து பிடாரி கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு துர்க்கை அம்மன் கோவில்.

இந்த துர்க்கை அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். நகரத்தார் நலம் நாடும் நாச்சியார்.  என் சோதனையான காலங்கள் இந்த அம்மனின் அருள் பார்வையால் அடி பட்டு ஓடியிருக்கின்றன.  இங்கு நடக்கும் உத்சவங்களில் பொய்  யானை நன்றாக நினைவில் உள்ளது.  வட்டாணம்  ரோடில் (லண்டன் தி) ஐஸ் கம்பெனி திண்ணப்ப  செட்டியார் தோட்டத்தில் குடியிருந்த  சுந்தரம், ராமலிங்கம் சகோதரர்கள் இந்த போய்  யானை உடை பூண்டு யானை போலவே நடந்து வருவதை அந்த யானை பின்னாலேயே சென்று குதூகலித்து இருக்கிறேன்.  இந்த ராமலிங்கம் தேவகோட்டையில் பேருந்து நிலையம் அருகில் பின்னர் பூக்கடை வைத்து இருந்தார்.  சென்ற முறை தேவகோட்டை சென்றபோது  மரியாதை நிமித்தம் திரு.லண்டன் தி அவர்களை சந்தித்த போது தன்  தோட்டத்தில் குடியிருந்த, தன் ஐஸ் கம்பெனியில் வேலை செய்த ராமலிங்கம் இன்று மிக நல்ல நிலைமையில் அரசியல் செல்வாக்குடன் இருப்பதாக மிகபெருமையுடன் திண்ணப்ப  செட்டியார் என்னிடம் கூறினார்.  இந்த பெருந்தன்மை வேறு எங்கும் காண இயலாதது.


பிற்காலத்தில் கிரேக்கர் வரலாறு படித்த போது, த்ரோஜான் போர் மற்றும்  த்ரோஜான் குதிரை (TROJAN HORSE) பற்றி அறிந்த போது  இந்த பொய் யானை மனதில் வந்து போகும்.  ஏனெனில் இந்த பொய் யானையின் உள்ளே இருந்து ராமலிங்கம் என்னிடம் தண்ணீர் கேட்பார், நானும் ஒரு செம்பில் துணியை தூக்கி கொடுப்பேன்.  இந்த நினைவுகள் தேவகோட்டை பொய் யானையையும் கிரேக்க த்ரோஜான் குதிரையும் மனதில் முடிச்சு போட்டு பார்த்தன..

பிடாரி  கோவில் போகும் முன் ஒரு வீட்டு முன்புறத்த தோட்டத்தில், சோப்பு காய் என்று அழைக்கப்படும் மணிப்புங்குகாய் / பூவந்திக்கொட்டை மரம் வீட்டின் சுவர் தாண்டி வெளியே படர்ந்து இருக்கும்.  கீழே சிதறிக்கிடக்கும் கொட்டைகளை தண்ணீருடன் கலந்து கையில் தேய்த்தால் நுரை கொப்பளிக்கும், அழுக்கு  நீங்கும்.  அந்தக்காலத்தில் அழுக்குப் போக்கியாகப் பயன் படுத்தப்பட்ட இயற்கை (organic ) சோப்பு. 


பேச்சுவழக்கில் பூந்திக்கொட்டை என்றும் கூறுவர்...இத்தக் காய்களின் உலர்ந்த சதைப்பகுதியை இடித்து, நீரில் சற்று ஊறவைத்துப் பிழிந்தால், மிகுந்த நுரையோடு, நறுமணத்தோடுக் கூடிய, திடமான நீர்மம் உண்டாகும்...இதை எண்ணெய் வைத்தத் தலையில் தேய்த்துக் குளித்தால் எண்ணெய் பிசுக்கும், அழுக்கும் அறவே நீங்கிவிடும்...சிகைக்காயைப் போலவேப்பயன்படுத்தக்கூடியது...தண்ணீரோடு சேரும்போது சோப்பைப்போலவே நிறைய நுரை வருவதால் சோப்புக்காய் என்று குறிப்பிடப்படுகிறது...




அந்த வீட்டின் அருகிலேயே நண்பன் சோம சுந்தரத்துக்கு ( உண்ணாமலை ஆச்சி ) அவர்களுக்கு சொந்தமான தோட்டம் ஒன்று உண்டு.  பெரிய கேட் போட்டு, உயரமான மதில் சுவர்களுடன் இருக்கும் வீடு.  உள்ளே நாட்டு கருவேல மரங்கள் அடர்ந்து காய்கள் சரஞ்சரமாய் தொங்கும்.  எங்கள் வீட்டில் எப்போதும் வெள்ளாடுகள் அந்த காலத்தில் வளர்த்து வந்தோம்.  இந்த அடுக்குகளுக்கு இரையாக அந்த தோட்டத்துக்குள் போய்  சாக்குப்பைகள்  நிறைய நாட்டுக்கருவேல காய்கள் பறித்து வருவோம்.


இன்னும் சிவன் கோவில் கிழக்கு தெருவுக்கு செல்ல முடியவில்லை.. அடுத்த பகுதியில்... .கே ?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60