அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 35


அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி

பகுதி: 35

19-12-2017

இன்னும் திருவேங்கடமுடையான் பள்ளிக்கு உள்ளே தான் இருக்கிறோம்.  சென்ற பதிவில், என்னுடன் 6 ஆம்  வகுப்பு படித்த தோழர் மற்றும் வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர், தாளாளர் ஆகியோரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்து இருந்தேன்.  நண்பர்களிடம், யாரும் நினைவு இருந்தால் அவர்களை பற்றிய  நினைவுகளை பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டியிருந்தேன்.  மாப்பிள்ளை இரா.செந்தில்நாதன் ( தற்போது கோவையில் இருக்கிறார் ) சிலரை நினைவு கொண்டு பின்னூட்டமாக குறிப்பிட்டு இருந்தார்.  நினைவு நரைக்கவில்லை .

இந்த பகுதியில் என் நினைவு அலைகளில் நீந்தி என்னால் முடிந்த வரை வரிசையில் நினைவு படுத்தப் பார்க்கிறேன்.  இதில் பலரும் முக நூலில் வந்து போகாதவர்களாக இருக்கலாம்.  பதிவினைப் படிக்கும் நீங்கள் யாரும் இவர்களில் யாரையும் அறிந்து இருக்கலாம்.  எனவே , உங்கள் பங்கேற்பும் பதிவுகளும்  மட்டுமே இந்தப் பகுதிக்குச்  சுவை சேர்க்க முடியும்.

இப்போது கொஞ்சம் அந்த புகைப்படத்தை பார்த்துக் கொள்ளுங்கள், அப்புறம் படியுங்கள்.




முதல் வரிசை ( உட்கார்ந்து இருப்பவர்கள் )   புகைப்படத்தின் வலம் இருந்து இடமாக :

1.சந்துரு :  நகரத்தார் வகுப்பு சந்துரு.  கொஞ்சம் கருப்பு, அதாங்க நம்ம கலர், புஷ்டியான உடல் வாகு.  சிவன் கோவில் வடக்குத்தெரு  தாண்டி குளக்கால் தெருவில் இருந்து வருவார். 

2.சந்திரன் : பரியமவயல் சந்திரன் என்றால் தான் தெரியும், சந்துருவின் பெயருடன் குழப்பம் வராது இருக்க, அவர் ஊரின் பெயரையும் இணைத்து பரியமவயல்  சந்திரன் என்று அழைப்போம்.  பள்ளிக்கு வரும்போது ஒரு தீப்பெட்டியில் அழகான  'பொன் வண்டு'  வை  அடைத்து கால் சட்டைப் பையில் வைத்து கொண்டு வருவார். அந்த 'பொன்வண்டு'  பச்சை நிறத்தில் நீலம்  கலந்து பள பள என மின்னும்.  உனக்கு நாளைக்கு தருகிறேன் என்று சொல்லியே கடைசி வரை என்னை ஏமாற்றி விட்டார்.  மகிழுந்து ஓட்டுநராக தேவகோட்டையில் இருந்தார்.  முன்பு தேவகோட்டை பேருந்து நிலையம் எதிரே 'இராமநாதன்- பிலிப்ஸ் ஷோ ரூம்'  ( தென்னீர்வயல் பெரியண்ணன் கடை ) அருகில் 'உமையாள் டிரஸ் லேண்ட்' என்ற ஆயத்த ஆடை அங்காடி இருந்தது.  இவரின் உறவினர் ஆவார்  அவர்.



3.அந்த சிறு பையன் :  தாளாளரின் உறவினர்.  பெயர்  நினைவில் இல்லை. திரு D.S.ராஜ் கொஞ்சம் விசாரித்து சொல்லுங்கள்.  ( மணி என்று சுந்தர ராஜ ஐயங்காரின் மகன் ஒருவர் நல்ல உயரமாக இருப்பார், அடிக்கடி பள்ளிக்கு வருவார்)

4.திரு.சுந்தரராஜ அய்யங்கார் :  இவரும் இவர் தம்பி திரு.தெய்வசிகாமணி அவர்களும் சேர்ந்து தான் எட்டையபுரம் பகுதியில் இருந்து தேவகோட்டை வந்து இந்த பள்ளியினை பலரிடமும் நிதி உதவியும், ஆதரவும் பெற்று இந்த பள்ளியினை ஆரம்பித்தார்கள் என்று சொல்ல கேள்வி பட்டு இருக்கிறேன்.

5.திரு.தெய்வசிகாமணி அவர்கள்: தலைமை ஆசிரியர்.  முறையாக அந்த காலத்திலேயே B.A .B .T.  படித்த கல்வியாளர்.  ஒழுக்கமுடன் மாணவர்கள்  விளங்க வேண்டும், அடுத்த தலைமுறை தம்மை விட உயரத்தில் இருக்க வேண்டும் என்று நினைத்தவர், செயலிலும் காட்டியவர்.  கண்டிப்பானவர்.  8 ஆம்  வகுப்பில் எனக்கு ஆங்கில வகுப்பு எடுத்து இருக்கிறார். இந்த தொடர் பதிவுக்குப் பின் இவரது மைந்தன் திரு. D.S.ராஜு அவர்கள் (வங்கி அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர்) சென்னையில் இருந்து தான் இன்னார் என்று அறிமுகம் செய்து கொண்டார்.  மிக்க மகிழ்வாக இருந்தது.  இதுதான் இத்தொடர் பலரையும் சென்று அவர்களையும் நினைவுகளின் கணப்பில் நிறுத்தி வைக்கிறது என்பதற்கு சாட்சி.

6.V.K.ஸ்ரீதர் :  இவரின் அப்பா திரு.வேங்கடகிருட்டிணனும்,  தாயார் திருமதி.கோமதி இருவருமே இதே பள்ளியில் ஆசிரியர்கள்.  நண்பன் ஸ்ரீதர் கல்லூரியில் இளங்கலை வணிகமும் என்னுடன் இணைந்து படித்தார்.  இவருக்கு ஒரு தம்பி உண்டு.  பெயர் 'நாராயணன்'.  திரு.தாமஸ் ஆசிரியர் அவர்கள், இந்த நாராயணனை பார்க்கும் போது  எல்லாம், ' நலம் தரும் பெயரை நான் கண்டு கொண்டேன் ......................எனும் நாமம் '  என்று கிண்டல் செய்வார் . சக ஆசிரியர்களின் இளைய மகன் என்ற நோக்கில்.  தற்போது இந்த ஸ்ரீதர், பாண்டியன் கிராம வங்கி, காரியாபட்டி கிளையில் பணி  புரிகிறார்.

7.பெரிச்சியப்பன் :  இவரும் நகரத்தார்.  சாதுவான மாணவர். அவர் உண்டு அவர் படிப்பு உண்டு என்று இருப்பர் .


8.திரு.கிருஷ்ண மூர்த்தி , ஆசிரியர் :  இவரைப் பற்றி சென்ற பகுதியில் ஓரளவு எழுதி விட்டேன்.  யாரும் இன்னும் இவர் பற்றிய விபரங்கள்  தெரிந்து இருந்தால் தெரிவிக்கவும்.  திருப்பத்தூர் சாலையில், சரஸ்வதி தியேட்டர் வலது புறம் இளையபெருமாள் உணவு விடுதிகும், பாலு பெட்டிக்கடைக்கும் இடையில் ஒரு உயரமான கேட் வைத்த வீட்டில் இவர் அந்த காலத்தில் வசித்து வந்ததாக ஞாபகம்.

இரண்டாவது /  நடு  வரிசை / நிற்பவர்கள் -  புகைப்படத்தின் வலம்  இருந்து இடமாக

9. இரா.செந்தில்நாதன் :  மாப்பிள்ளை என்று என்னால் அன்புடன் அழைக்கப்படும், இன்றும் என்னிடம் தொடர்பில் இருக்கும் நல்ல நண்பன்.  மனதில் எந்த கன்மமும் அறியாத பால் மனத்துக்கார நண்பன்.  இவரது தகப்பனார் திரு.இராமலிங்கம் அவர்கள், தேவகோட்டை ஆண்டவர் டிரான்ஸ் போர்ட் கணக்கு வழக்குகளை பார்த்து கொண்டு இருந்தார்.  பின்னர் கொஞ்ச காலம் 'தேவகோட்டை ரோடுவேஸ்'  முழு நிர்வாகமும் கையில் வைத்து இருந்தார்.  இந்த செந்தில், மிக காலம் தொடர்பு அற்று பொய் விட்ட நிலையில் 12 வருடங்களுக்கு முன், சென்னை காதர் நவாஸ் கான் சாலையில் நடந்து போகும் போது இருவரும் கண்டு கொண்டு நட்பை தொடர்ந்தோம். இவர் திரு.கிட்டு (கருதா ஊரணி ) அவர்களின் பால்ய நண்பர் . இன்றும் அந்த நடப்பு கெடாமல் கற்போடு இருக்கிறது.  தற்போது மாப்பிள்ளை செந்தில் கோவையில் பணி  புரிகிறார்.

10. லட்சுமணன் :  இவர் வீடு பவானியார் வீதியில் குளக்கால் உள் குழந்தை வேலன்  செட்டியார் சந்தில் இருந்தது.  அந்த காலத்தில் 'ராணி' வார இதழில் சிறுவர் பகுதி என்று இரண்டு பக்கம் ஒதுக்கி இருப்பார்கள். விடுகதைகள் இருக்கும் .  கட்டாயம் ஒரு சிறுவர் பாடல் இருக்கும்.  குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் பல பாடல்கள் வரும். PHOTOCOPYING என்கிற படிமம் எடுக்கும் வசதி கிடையாது.  அந்த பாடல் பக்கங்களை எல்லாம் இந்த லெட்சுமணன் கத்தரித்து பெரிய நோட்டுப் புத்தகங்களில் ஒட்டி வைத்து இருப்பார் .  எனக்கு படிக்க கொடுப்பார். உடனே திருப்ப கொடுத்து விட வேண்டும் என்ற நிபந்தனையுடன். 

11.மணிவண்ணன் :  நல்ல வெள்ளையாக  இருப்பார். வீடு சேக்கப்பட் செட்டியார் வீதியில்.  நல்ல நண்பன்.  இவரது தந்தை நன்கு பரிச்சயம் ஆனவர் . ஏனெனில், இவர்கள் ஒரு ஐஸ் கம்பெனி நடத்தி வந்தார்கள். அதில் என் மாமா மருது பாண்டியன் வேலை செய்து வந்தார்.   ஒரு 10 வருடங்களுக்கு முன்பு எப்படியோ என்னை சென்னையில் தொடர்பு கொண்டார்.  மார்பிள், மற்றும் க்ரானைட் தொழில் செய்வதாக கூறினார்.  எப்படியோ அவரது தொடர்பு எண்ணை தொலைத்து விட்டேன்.  நண்பர்கள் யாரும் வைத்து இருந்தால் தயவு செய்து தரவும்.

12.அடுத்து இருப்பவர் பெயர் சின்னையா.   வெங்களூர் அவரது ஊர் என்று நினைக்கிறன்.


13.அடுத்து இருப்பவர் Y.சிதம்பரம்.  புகைப்பட கலைஞர் திரு.ஏகப்பன்  அவர்களின் புதல்வர்.  கருதா ஊரணி பிள்ளையார் கோவில் முன்பு வீடு.  சைவப்பிரகாச வித்தியா சாலையில் இருந்து என்னுடன் படித்தார்.  அவர் வீட்டுக்கு விளையாடப் போவதே அவர் அப்பா பிரித்து போடும் பிலிம் ரோலின் கருப்பு சிவப்பு ரோல் காகிதத்தை வைத்து விளையாடத்தான் .  அப்போது expose ஆகாத பிலிமோடு ஒரு பக்கம் கருப்பும் மறுபக்கம் சிவப்பும் உள்ள காகிதம் இணைக்கப்பட்டு இருக்கும்.  காமிராவின் பிலிம் கவுண்டரில் ரோலின் எத்தனையாவது  பிரேம் என்று காட்டுவதற்காக வரிசை எண்  அந்த காகிதத்தில் அச்சடிக்கப் பட்டு இருக்கும்.  இது யாவும் ஒரு பிளாஸ்டிக் ரீல் ஹோல்டரில் சுற்றப்பட்டு இருக்கும்.  DARK ரூமில் கழுவ பிலிம் எடுக்கப்பட்டவுடன் பிலிமை காவல் காத்து வந்த  இந்த காகிதமும் பிலிமை தன்னை சுற்றி பாது காப்பாக வைத்து இருந்த இந்த பிளாஸ்டிக் ரோலும் குப்பைக்கு வந்து விடும்,  உபயோகம் முடிந்ததும் தூக்கி எறியப்படும் மனிதர்களை போல. இதை எடுத்து சுருட்டி விளையாடுவது அப்போது என்னை அங்கு இழுப்பதாகும்.




அடுத்து LAST BENCH .    எப்பொழுதுமே கடைசி பெஞ்ச் கொஞ்சம் வித்தியாசம் தான்.  எனவே கொஞ்சம் ஆற அமர எழுத வேண்டும்.  அடுத்த பகுதியில் பார்ப்போமே ...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60