அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 36

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 36
25-12-2017

பள்ளிப் பருவத்தை நினைவில் நிறுத்திப்பார்க்கும் போதே,  சின்னஞ் சிறுவர்களாய் மனது மாறி  விடுகிறது.  என்னதான் சம்பாதித்தாலும், எவ்வளவு உயர் நிலை என்று மற்றவர்கள் மதிக்கும் நிலைக்கு ஏறினாலும், அந்த திருப்தியை, ஆத்மாவின் ஆனந்தத்தை இனி எண்ணி அசை போடத்தான் இயலும் தவிர அந்த நிலைக்கு திரும்ப முடியாது.  எந்த புற நிகழ்வுகளும் பாதிக்காத பச்சை மண் பருவம் அது.  நடிக்காத தெரியாத வயது. இன்று இறைவினிடம் கையேந்தி வேண்டும் வேளையில் கூட நம் இயல்பில் இருந்து பிறழ்ந்து நடிக்கிறோமோ என்ற எண்ணம் தான் ஏற்படுகிறது.

ஏற்றத்தாழ்வு ஏற்காத மனம்...  எதையும் எதிர் பார்த்து பழகாத குணம். ஏழ்மை,செழுமை, மேலோன்,கீழோன் என எந்த வேறு பாடும் அறியாத இறைவனின் குழந்தைகளாக இருந்த காலம்.  இனி வராது என்று என்றும் ஏங்கும் காலம்.  இப்போது கடைசி வரிசையில் நிற்கின்றவர்கள் ( 6ஆம்  வகுப்பு நினைவுகள் தொடர்ச்சி) பார்ப்போம்.

புகைப்படத்தின் வலமிருந்து இடமாக...கடைசி பெஞ்சில்  நிற்பவர்கள்:

14:ரவீந்திரன் :  இவர் என்னுடன் சைவப்பிரகாசா வித்தியாசாலையில் இருந்தே படித்தார்.   பின்னர் ஒரு வகையில் தூரத்து உறவினர் ஆனார்.  இவரது தகப்பனார் (அழகர்சாமி ) தேநீர் கடை வைத்து இருந்தார், மிதி வண்டி வாடகை நிலையமும் சேர்த்து...  இவரது அண்ணன் திரு.சுதர்சன் அவர்கள் என்னுடைய நண்பர் பின்னாளில்.  இந்த ரவீந்திரனின் கன்னம் உப்பி நன்றாக உருண்டை வடிவில் இருக்கும்.  எனவே வகுப்பு நண்பர்கள் இவரை 'ஒப்புக்குட்டி'  என்று பட்டப்பெயர் சொல்லி அழைப்பார்கள். இவருக்கு கடுமையாக கோபம் வரும் இப்படி யாரும் அழைத்தால் .. 

பட்டம் வாங்குகிறோமோ இல்லையோ.. அனைவருக்கும், பட்டப்பெயர் வைத்து ஆக  வேண்டும்.  ஒவ்வொரு பட்டபெயருக்கும் பின்னால் ஒரு கதை இருக்கும்.

15.& 16:  இவர்கள் இருவரின் பெயர்கள் மறந்து விட்டது .  (அடச்..சே...) இவர்கள் ஆற்றுப்பாலம் தாண்டி உள்ள கிராமங்களில் இருந்து வருவார்கள்.

17: அழகு சுந்தரம் :  இவரும்  அருகில் உள்ள கிராமத்தில் இருந்து வருபவர்.  இவரது உறவினர்கள் வெள்ளையன் ஊரணி மேல் கரையில், பெருமாள் கோவிலுக்கு வலது புறம் மண் பண்டங்கள் விற்பர் .  ஒரு நாள் இவர் ஒரு பிட் நோட்டீஸ் கொண்டு வந்தார். அதில் இளம் நண்பர்கள் சேர்ந்து 'வா  ராஜா  வா'என்று 1969 ல் வெளி வந்து சக்கைப் போடு போட்ட திரைப்படத்தை நாடகமாக இவரது கிராமத்தில் நடத்துவதாக விளம்பரம்.  நடிப்பவர்கள் பெயர் போட்டு, அவர்கள் என்ன வேடத்தில் நடிக்கிறார்கள் என்று போடப்பட்டு இருந்தது.  அந்த நேரங்களில் நன்றாக ஓடுகின்ற திரைப்படத்தின் கதை வசனம் காட்சிகள்  எண்  போடப்பட்டு புத்தகமாக வெளி வரும்.  இந்த 'வா ராஜா  வா' திரைப்படம் மாஸ்டர் (அப்போது) பிரபாகர், சுமதி இவர்கள் நடிப்பில், திரு.ஏ.பி.நாகராஜன் அவர்களால் இயக்கப்பட்டு வெளிவந்த படம்.



18.முத்துமணி,  நானே தாங்க.  அட ...யதார்த்தமாக எண் இட்டு வந்தேன்.  என்ன ஆச்சரியம், எனக்கு வரிசையில் வந்த எண்  18.  அப்ப நியூமராலஜி என்ற ஒன்று உண்மையில் நம் வாழ்வில் கலந்து இருக்கிறதோ?  அட ஆமாங்க.. 

நான் பிறந்தது:  18 ஆம்  தேதி,  புதன் கிழமை
எனக்கு திருமணம் நடந்தது :18 ஆம்  தேதி,  புதன் கிழமை
எனக்கு முதல் மகன் பிறந்தது : 18 ஆம்  தேதி,  புதன் கிழமை
இப்ப இந்த வரிசை எண்ணும் 18..

"எண்ணும் எழுத்தும் கண்ணென தகும் "  என்று சரியாகத்தான் சொல்லி வைத்து இருக்கிறார்கள் பெரியவர்கள் .  என்னைப் பற்றி பெரிதாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.  

19.இவர் பெயரும் மறந்து விட்டது.  பக்கத்து கிராமம்.  இவரது அம்மா அடிக்கடி பள்ளி வந்து ஆசிரியரிடம், எப்படியாவது தன் மகனை படிக்க வைத்து விடுங்கள் என்று கெஞ்சுவார்கள்.

20.தண்ணீர்மலை:  இவர் அருகில் உள்ள நல்லாங்குடி கிராமம் என்று நினைக்கிறேன்.  உறுதியாக சொல்லமுடியவில்லை.  பள்ளிக்குச் செல்லும் வழியில், என் வீட்டுக்கு வந்து சேர்வார்.   பின்னர் இருவரும் சேர்ந்து பள்ளிக்குச் செல்வோம்.  சரியான வால்.  அந்த நேரத்தில் அருகில் இருக்கும் பள்ளி வாசலில் வாழும் புறாக்களைப் பார்த்து வீட்டில் அது போல வளர்க்க வேண்டும் என்று ஆசை.  ஒரு சமயம் ஒரு புறாக்குஞ்சு, வீட்டு வாசலில் விழுந்து கிடந்தது,  பறக்க இயலாமல்.,  உடனே அதை எடுத்து வீட்டில் வளர்க்க ஆரம்பித்து விட்டேன்.  வளர, வளர  அதன் சிறகில் வளர்ந்து இருக்கும் இறகை என் சித்தப்பா கத்திரித்து விடுவார், அதனால் பறந்து போக இயலாமல் இருப்பதற்காக… அந்தப் புறாவுக்கு என்று ஒரு பலகையில் ஊஞ்சல் போலத் தயார் செய்து அதில் அந்தப் புறாவை அமர வைத்து விடுவேன்.  நெல்மணிகள் ஒரு கிண்ணத்தில், தண்ணீர் இன்னொரு கிண்ணத்தில் என்று பார்த்துப் பார்த்து வைத்து, வளர்த்து வந்தேன்.  என் அப்பாதான் கத்திக் கொண்டே இருப்பார்.  புறாக் கத்துவது (அனத்துவது என்பார்கள்), வீட்டுக்கு ஆகாது என்பார்.  ஒரு நாள் காலையில் எழுந்து பார்த்தால், ஊஞ்சல் மட்டும் தான் தொங்குகிறது.  புறாவைக் காணோம்.  இறக்கை முளைக்கவில்லையே?? எங்கு பறக்க முடியும்? கொஞ்சம் கீழே,  புறாவின் இறகுகள்….  ஆஹா… இரவு என் இனிய புறா ஒரு பூனைக்கு டின்னர் ஆகி விட்டு இருக்கிறது.  என்னால் தாங்க முடியவில்லை சோகம்.. 


 எவ்வளவு வேதனையோடு என் புறா தன் இன்னுயிர் நீத்து இருக்கும்? அத்தோடு புறாவைப் பற்றி இனிமேல் பேச இயலாத நிலைமை வந்து விட்டது.  அதே சோகத்தோடு இருக்கும் போது நண்பன் தண்ணீர்மலை பள்ளிக்கு அழைக்க வீட்டுக்கு வந்தார்.  என் சோகம் அவரைத் தாக்கியது போலும்… உனக்கு நாளைக்கு அழகான பச்சைக் கிளி கொண்டு வருகிறேன், வளர்த்துக் கொள் என்றார்.

அன்று இரவு முழுவதும் கனவில் பச்சைக்கிளி…. முத்துச்சரம் தான்.  அப்பா திட்ட முடியாது,,, அனத்துகிறது என்று….   கிளி நான் பேசுவதெல்லாம் திரும்பப் பேசுமே…..  அப்புறம் கொஞ்சம் சீட்டு எல்லாம் தயார் செய்து, கிளியை சீட்டு எடுக்கப் பழக்கப்படுத்தி விட வேண்டும்.  பள்ளிக்கூடத்தில் அனைவருக்கும் கிளி ஜோசியம் பார்த்தால் தலைக்கு 10 பைசா என்று பெரிய வசூல் செய்து விடலாம். இது போல பல கற்பனைகள் கலந்த கனவுகளோடு பொழுது விடிந்தது.



நண்பன் வரவுக்காக வீட்டுக்கும் ரோட்டுக்கும் நடை நடந்து இடை மெலிந்தேன்.  ம்…ஹூம்ம்ம்….. தண்ணீர்மலை அன்று எனக்கு தண்ணி காட்டி விட்டான்.  அப்புறம் என்ன..வீட்டுல அம்மா,  என்ன இவ்வளவு நேரம் ஆகியும் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பலையா என்ற சப்தம் கேட்டு, பள்ளி சென்றால், அங்கு நம்ம தண்ணீர்மலை வகுப்பில் உட்கார்ந்து இருக்கிறார்.   என்னைப் பார்த்த உடனேயே… அடடா, முத்துமணி,  அழகான கிளி, கையில் பிடித்துப் பிடித்துக் கொண்டு வந்தேன்.  சரியா, உன் வீடு வாசல் வரும் சமயம் கையைக் கடித்து விட்டு பறந்து விட்டது.  அதை விரட்டிக் கொண்டே வந்ததில் உன் வீட்டுக்கு வர முடியவில்லை. அதான் வகுப்புக்கு நேராக வந்து விட்டேன்.  கிளி பறந்து போயிடுச்சு…. கவலைப் படாதே, ஒரு ரெண்டு நாள் டைம் கொடு,  வேற கிளி கொண்டு வாரேன்.   அவர் கொஞ்சம் கப்சா அடிப்பது போல அடிமனதுக்குத் தெரிந்தது…. ஆனாலும்,  கிளி மேல் உள்ள ஆசை,  அவனை சந்தேகிக்க இடம் கொடுக்க வில்லை.  சரி.. ரெண்டு நாள் தானே… கிளி வந்துடுமே…. என்ற சுய சமாதானத்தோடு என் கற்பனை வானில் கிளியைப் பறக்க விட்டேன்.   கிளி பறந்து பறந்து இன்னும் நிறையத் தோழமைக் கிளிகளை என்னிடம் வந்து சேர்த்தது.   கற்பனையில் தான்..

அந்த ரெண்டு நாளும் வந்து போனது… அடுத்த நாட்களும் போயின.. கிளி மட்டும் வரவே இல்லை.  ஆனால் புதுப் புதுக் கதைகளால், அடுத்தடுத்த நாட்களில் கிளி என் வீடு வருவதாக தண்ணீர்மலை வாக்கில் வந்து போனது.  அடுத்து வந்ததுதான், உச்சம்…. நான் நேராக வகுப்புக்கு வந்து விட்டேன்.   ஏனெனில், இப்போதெல்லாம், தண்ணீர்மலை என் வீட்டுக்கு வந்து என்னுடன் சேர்ந்து பள்ளிக்கு வருவதில்லை.  அன்று வகுப்பில் தண்ணீர்மலை இல்லை.   பின்னர் தாமதமாக வகுப்புக்கு வந்தார்.  வகுப்பு நடந்து கொண்டு இருக்கிறது… கிசுகிசு குரலில் என்னாச்சு என்று வினவினேன்.   நண்பர் சொன்னார்.  கிளியோடு உன் வீட்டுக்குப் போனேன்.  அப்போது கூட பக்கத்து வீட்டு ரேடியோவில்,  ‘கிளியே…. கிளியே… உனக்கென்ன வேலை… விருந்துக்கு வரவா….நாளைக்கு மாலை…’  என்ற பாடல் ஓடிக்கொண்டு இருந்தது.   ( உண்மையில் அந்தப் பாடல்….விழியே…. விழியே… உனக்கென்ன வேலை…என்று ஆரம்பிக்கும்)  உங்கள் வீட்டில் ஒருவரும் இல்லை.  எல்லோரும் வெளியே போய் விட்டார்கள் போல் இருக்கிறது.  கதவின் ஓட்டை வழியாக கிளியை உன் வீட்டுக்குள் விட்டு வந்து இருக்கிறேன்.  நான் சொன்னபடி செய்து விட்டேன்.. இனி நீயாச்சு உன் கிளி ஆச்சு, என்றார்.  எனக்கோ, ஐய்யய்யோ….கிளி பூனைக்கு இரையாகாமல் இருக்க வேண்டுமே என்ற கவலை….,   யாராவது, கிளி இருப்பது தெரியாமல் கதவைத் திறந்து,  கிளி பறந்து போய் விடுமோ என்ற எண்ணங்களில், கிலி பிடித்து, எப்போது மாலை சாயும்,  வீடு போய் சேர்வோம் என்று நாளைக் கழித்தேன்.  மாலை வீட்டுக்கு சென்று அம்மாவிடம் கேட்டால்… கிளியா,,, தண்ணீர்மலை கொண்டு வந்து காலையில் வீட்டில் விட்டானா?  பைத்தியம்…..  நான் காலையில் இருந்து வீட்டில் தானே இருக்கிறேன்.. அவன் வரவே இல்லையப்பா.. இந்த கிளிப் பைத்தியத்தை பறக்கடித்து விட்டு, ஒழுங்கா படிக்கிற வேலையப் பாருன்னு பாட்டு வாங்கினது தான் மிச்சம்.  அந்தப் பச்சைக்கிளி கடைசி வரை வரவே இல்லை.

இப்போதும், பச்சைக்கிளிகளை, அதன் பவளக்கூர்வாய், கழுத்தில் இயற்கை அளித்த வட்ட அட்டிகை இவற்றைக் காணுகையில்  நண்பன் தண்ணீர்மலை வந்து போவார்.

21.முருகப்பன்:  இவரும், சைவப்பிரகாச வித்தியாசலையில் இருந்தே ஒன்றாகப் படித்தவர்.  ஃபொட்டோகிராபர் ஏகப்பன் அவர்கள் வீட்டு வளவில் தான் இவருக்கும் வீடு.  இவரது அண்ணன் சந்திரன்.  சந்திரன் அவர்களின் தொலைபேசி எண்ணை அன்பர் P.I.சந்திரன் அவர்கள் அளித்தார்கள்.  இன்னும் அவருடன் பேச சந்தர்ப்பம் கை கூடவில்லை.  இந்த முருகப்பனை கடைசியில், மேலபஜார் சாலையில், ரேடியோ மெக்கானிக்காக சந்தித்தேன்.  அப்புறம் சந்திக்கவே இல்லை.  விபரம் அறிந்தவர்கள் பகிரவும்.

22.தங்கராசு:  இவர்தான் எங்கள் தங்க ராஜா… நான் ஏற்கனவே, கிருஷ்ணமூர்த்தி சாரின், பிரம்பை சிவன் கோவில் ஊரணியில் எனக்காக நடுத்தண்ணீர் வரை சென்று மூழ்கடிக்க முயற்சித்த மேதை.. தீவிர MGR ரசிகர்.  இவருக்கு அடுத்து இருக்கும் மெய்யப்பன் அவர்கள் வீட்டில் எங்களை எல்லாம் அழைத்து ‘மாட்டுக்கார வேலன்’  படத்தை நாடகமாக நடத்தினார்.  1970 ஆம் வருடம் வெளி வந்து பெரும் வரவேற்பை பெற்ற மக்கள் திலகம் இரண்டு வேடங்களில் நடித்த திரைப்படம் மாட்டுக்கார வேலன். ‘ஜிக்ரி தோஸ்த்’ என்ற இந்திப்படத்தின் தமிழ் வடிவம்.

   இந்தப் படத்தில் அத்தனை காட்சிகளும், வசனங்களும், இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் ப.நீலகண்டன் கூட மறந்து இருப்பார்.  ஆனால், நண்பர், தங்கராசுவுக்கு தலைகீழ் பாடம்.



இவருக்கு அடுத்து இருக்கும் நண்பர் மெய்யப்பனின் வீடு சத்திரத்தார் வீதியில், மைனர் வீட்டுக்கு அடுத்து இருந்தது.  இந்த வீட்டின் முகப்புப்பகுதி கொஞ்சம் இடிந்து இருந்தது, அப்போது.. அவர்களால் அவ்வளவு பெரிய வீட்டை சீரமைக்க இயலாது அப்படியே போட்டு இருந்தார்கள். இந்த இடத்தில், நண்பர் தங்கராசு எங்கள் அனைவரையும் அழைத்து ஆளுக்கு ஒரு வேடம் கொடுத்து நடிக்க வைப்பார்.  தற்போது இவர் தேவகோட்டை லோடுமேன் சங்கத் தலைவராக இருக்கிறார் என்று அன்பர் பாரீஸ் முத்துசாமி பதிவு செய்து இருந்தார்.

23.மெய்யப்பன்:   இவர் பற்றி மேற்கண்ட பாராவில் குறிப்பிட்டு இருக்கிறேன்.  இவரும் சைவப்பிரகாச வித்தியாசாலையில் இருந்தே உடன் படித்தார். இவருக்கு பட்டப்பெயர், ‘வெள்ளைப்பணியாரம்’ அந்த வயதிலேயே.. பட்டப்பெயர் வைப்பதில் நம்ம பசங்கள மிஞ்ச முடியுமா.. திருவேங்கடமுடையான் காலத்துக்குப் பிறகு இவரை நான் சந்திக்கவே இல்லை.

இந்த மேற்படி செட், ஆறாம் வகுப்பு.  இவர்கள் தவிர, திருவேங்கடமுடையான் பள்ளியில் பயின்ற போது சந்தித்த மனதில் நின்றவர்கள், இன்னும் ….

திரு.சாத்தப்பன்: சிவங்கோவில் வடக்குத்தெருவில் இணையும் சிவன் கோவில் குளக்கால் தெருவில் வீடு. சென்ற பகுதிகளில் இவர் பற்றிய குறிப்பினைப் பார்த்து நண்பர் சோமசுந்தரம், இந்த சாத்தப்பன் சென்னையில் இருப்பதாகத் தெரிவித்து இருந்தார்.  இன்னும் தொலைபேசி எண் கிடைக்கவில்லை.
திரு.பெரிச்சியப்பன்:  இவர் தனது பாதத்தை தேவகோட்டை பெருமாள் கோவில் தேர்க்காலில் சிக்கவைத்து விபத்தில் தெய்வாதீனமாகத் தப்பியவர்.  பாதத்தில் அந்த வடு இருக்கும்.  இவரது தந்தையார், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர், விசுவாசி.  தற்போது எங்கு இருக்கிறார் என்று அறியேன்.
திரு.ஆசைத்தம்பி என்ற ஆதியப்பன்: கீழக்குடியிருப்பு நடேசன் ஐய்யா (கண்ணப்பா ட்ரான்ஸ்போர்ட் ஓட்டுனர்) அவர்களின் மூத்த மகன். இவர் பற்றி முன்பும் குறிப்பிட்டு உள்ளேன்.  இரவுசேரிக்கு காளிமுத்து அம்பலம் அவர்கள் வகையில் பிள்ளை போனவர்.

திரு.இராஜாராம்:  பெரிய பள்ளிவாசல் எதிரில் உள்ள இசுலாமியர் இடுகாடு (கபர்ஸ்தான்) எதிரில் உள்ள இடையர் தெருவில் வீடு. மகிழுந்து (car) ஓட்டுனராக இருந்தார்.
திரு.ஜெயராமன்: இவரும் இதே தெருவை சேர்ந்தவர்.  இவர்கள், தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி அலுவலகப் பணியாளர்களாய் இருந்த திரு.இராஜாமணி,  திரு.சிங்கத்துரை ஆகியோரின் உறவினர்கள்.

திரு.கிட்டு:  கருதா ஊரணி கூத்துச்செட்டியார் அவர்களின் புதல்வர்.  கரூரார் வீடு இவரின் தாய் பிறந்த வீடு. அப்போதே பெரிய ஸ்டைல் மன்னன்.  ஒரு சிறிய அழகான மிதி வண்டியில் வருவார்.  தற்போது சென்னையில் இருக்கிறார்.  மாப்பிள்ளை செந்தில்நாதன் இன்னும் தொடர்பில் உள்ளார் இவருடன்.  நான் ஒருமுறை தொலைபேசியில் உரையாடினேன்.  பின்னர் ஒரு நாள் மைலாப்பூரில் திரு .கிட்டு அவர்களின் புதல்வரைப் பார்த்தேன். அப்படியே கிட்டுவைப் பார்ப்பது பொன்றே இருந்தது.

இத்துடன்… திருவேங்கடமுடையான் பகுதியை முடித்துக் கொண்டு அடுத்த பகுதிகளுக்குச் செல்லலாம் என்று நினைக்கிறேன்….  என்ன சரிதானே….

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60