அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 38

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 38
26-01-2018

சில நேரம் பழைய நினைவுகளில் மூழ்கும் வேளைகளில் 

அழுதவற்றை  எண்ணிச் சிரிப்பு வரும் 
சிரித்தவற்றை எண்ணி  அழுகை வரும்..

எண்ணிப் பார்ப்பதே சுகம்தான்...



இப்போ திருப்பத்தூர் ரோடில் சத்திரத்தார் வீதி தொடங்கும் இடத்தில்  நிற்கிறோம்.  நமக்கு இடது புறம் தண்ணீர் பந்தலார் வீதி,  குதிரைப்பாதை ரோடில் இருந்து பிரிந்து வந்து திருப்பத்தூர் ரோடில் இணையும்.  இந்த தண்ணீர் பந்தலார் வீதியின் இடது கோடியில் தண்ணீர் பந்தல் இருந்தது.  வலது பக்கம் சிமெண்ட் லட்சுமணன் என்று எங்களால் அன்புடன் அழைக்கப்படும் திரு.லட்சுமணன் அவர்களின் சிமெண்ட் கிராதிகள் தயாரிக்கும் இடம், மற்றும் சிமெண்ட் விற்பனை நிலையம் இருந்தது.  இப்போது இருக்கிறதா என்று தெரியவில்லை.  வலது கோடியில் ஒரு வீடு.  இங்கு கிட்டு என்பவர் நமது ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்தார். எனக்கு ஒரு வருடம் முந்தைய வகுப்பு.  நண்பர்/ உறவினர் தமிழ்கொண்டல் ஆ.குமார் அவர்களின் வகுப்பு.  நான் புகுமுக வகுப்பில்,  ஆனால் நம்ம செட் எப்போதும் சீனியர்கள்  தான்.  அதுவும் குமாருடன் அதிகம் திரிவேன்,  அப்படி அந்த வீட்டுக்கும் குமாருடன் ( தமிழ் கொண்டல் ) அடிக்கடி போய் இருக்கிறேன்.  அந்த கிட்டு ( முழுப் பெயர் கிருஷ்ணன் என்று நினைக்கிறேன் ) அப்போதே அமெரிக்கா சென்று விட்டார்.  தற்போது எங்கு இருக்கிறார் என்று தெரிய வில்லை, விபரம் அறிந்தவர்கள் பகிரவும்.(இந்த தொடரின் பின்னூட்டங்கள் மூலம் திரு.கிருஷ்ணன் செட்டியார் அமெஅமெரிக்காவில் இருந்து நமது நகர் பள்ளிகளு வாரி வழங்கி வருவதாக அறிந்தேன்.  வாழ்க அந்த வள்ளல் பெருந்தகை)

தண்ணீர் பந்தலின் இடப்புறம் திருப்பத்தூர் ரோடில், ஒரு மரக் கேட் உடன் ஒரு காம்பவுணட்.  மாப்பிள்ளை சபா நன்கு அறிவார்.  மைனர் வீடு வழியாக சத்திரத்தார் வீதியில் சென்றால் இடது புறம் மைனர் வீட்டுக்கு அடுத்து வருவது என்னுடன் படித்த மெய்யப்பன் (வெள்ளைப் பணியாரம் ) வீடு.  இங்குதான் எங்கள் மாட்டுக்கார வேலன்  திரைப்படம் நாடகமாக மாற்றப்பட்டது.  இது பற்றி முன்னர் வந்த பகுதிகளில் குறிப்பிட்டு இருந்தேன்.

இதை அடுத்து சத்திரத்தார் வீதியில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் அன்பர்கள் பெரிய ஆணா, சின்ன ஆணா அவர்களின் இல்லமான 'ரெட்டை ஆணா' வீடு.  கடைசியாக இந்த வீட்டுக்கு திரு.வீரப்ப செட்டியார் இயற்கை எய்திய பொழுது சென்றது.  இதற்கு முன், நான் சிறுவனாக இருந்த போது நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.  பெரிய ஆணா, சின்ன ஆணா.... நீங்கள் இதை படிக்க நேர்ந்தால் உங்களுக்கு நினைவு இருக்கிறதா என்று பின்னூட்டம் கொடுத்தால் மகிழ்ச்சி.

தேவகோட்டையில் நகராட்சியில் பணி  புரிந்த துப்பரவு தொழிலாளி.   பெயர் பெருமாள் என்று நினைவில் இருக்கிறது.  என் நினைவு தவறானால், தெரிந்தவர்கள் சரி செய்யும்படி வேண்டுகிறேன்.  விடியற்காலை நேரத்தில் இந்த பெருமாள் துப்பரவுப் பணியில் நம்ம ரெட்டை ஆனா வீட்டு எதிரில் ஈடுபட்டுக் கொண்டு இருந்திருக்கிறார்.   வெற்றிலை பாக்குப் போடும் பழக்கம் உள்ள இந்த பெருமாள், வெற்றிலைக்கு சுண்ணாம்பு தடவி விட்டு, அந்த சுண்ணாம்பு மிச்சம் இருந்த விரலை சின்ன ஆணா  வீட்டு வாசலில் நின்று இருந்த மின்சாரக் கம்பத்தில் தடவி இருக்கிறார்.  அந்த காலத்தில் எல்லாம் சிமெண்ட் கான்கிரிட் போல்டர்கள் இல்லை.  இரும்பு தூண்கள் தான்.  மேலே மின் கசிவு ஏற்பட்டு  அந்தக் கம்பத்தில் மின்னூட்டம் இருந்து இருக்கிறது. இவர் சுண்ணாம்பு விரலை வைத்ததும், இவர் உடலில் மின்சாரம் பாய்ந்து அந்த இடத்திலேயே அவரின் உயிரைக்  குடித்து விட்டது.   பரிதாமாக அந்தக் கம்பத்தின் அருகிலேயே இறந்து கிடந்ததை அந்த விடியற்காலை நேரத்தில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று பார்த்து வந்தது இன்னும் நினைவில் ரணமாக..

இந்த வீட்டுக்கு அடுத்தது ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி தாளாளர் அமரர் அண்ணாமலை செட்டியார் அவர்களின் பெரிய வீடு.  நான் சிறுவனாக இருந்த போது  இந்த வீடு கட்டப்பட்டு இருக்க வில்லை.  பழைய வீடும் காலி இடமும் மனக்கண்களில்  இன்றும் தெரிகிறது.  இந்த வீடு கட்டி கொண்டிருந்த காலமும் நினைவில் இருக்கிறது.  இந்த பெரிய பங்களாவின் பின்னால் ஒரு மரத்தச்சர் குடும்பம்.  அவர் பையன் என்னுடன் சைவப் பிரகாச வித்தியாசாலையில் படித்தார். 
 அவரது பெயர் வீரபத்திரன்.  இவரது உறவினர் திரு.சுப்பையா என்பவர் குடும்பம் சிவன் கோவில் தெற்கில் இருந்த ஒரு கேட்டில்  குடி   இருந்தது.  இவர்களுக்கு முழு நேர பொழுது போக்கு சூரிய வெளிச்சத்தில் லென்ஸ் வைத்து வெள்ளைத் துணியைத் திரை ஆக்கி துண்டு பிலிம்களை வைத்து படம் போடுவது தான்.  அதில் எனக்கும் ஒரு சீட்  ரிசர்வ் செய்யப்பட்டு இருக்கும்.  அதற்காக கல்லூரித் தாளாளர் வீட்டுக்குப் பின்புறம் இருந்த இந்த வீரபத்திரன் வீட்டுக்கு சென்றது உண்டு.  

பியூஸ் ஆன  குண்டு  பல்பை எடுத்து, அதன் பேஸ் அலுமினியம் பகுதியை பல்பின் கண்ணாடி உடையாத வண்ணம் நைசாக கழற்றி, பிலமென்ட் தண்டை எடுத்து, அதை ஒரு குடுவை மாதிரி ஆக்கி, பின் அதில் நல்ல தண்ணீரை ஊற்றி தொங்க விட்டால் அருமையான லென்ஸ் தயார்.   இப்போது நினைத்தாலும் திரும்ப செய்ய முடியாது.. அடுத்து இந்த ARC LIGHT தயார் செய்யும் வேலை.   ஒரு உடைந்த அல்லது ரசம்  போன முகம் பார்க்கும் கண்ணாடி,  யாரவது ஒருவர் வெளியே சென்று சூரிய ஒளியில் இந்த கண்ணாடியை REFLECTOR ஆக மாற்றி ஒளிக் கற்றையை வீட்டுக்குள் அனுப்ப வேண்டும்.  புதிதாக வரும் நண்பருக்கு இந்த APPRENTICE  வேலை கொடுக்கப்படும்.   நான் நிறைய நாள் APPRENTICE  ஆக இந்த வேலையைப் பார்த்துப்பின் தான் ப்ரோமோஷனில் பிலிம் பிடிக்கும் வேலைக்கு சென்று இருக்கிறேன்.  கொளுத்துகிற கத்திரி வெயிலில் சரியாக அந்த ஓட்டைக்கண்ணாடித் துண்டில் இருந்து சரியான கோணம் எல்லாம் பார்த்து, ஒரு உடைந்த செங்கலை அதற்கு stand  ஆக்கி வைத்து விட்டு உள்ளே படம் பார்க்கும் அரங்கத்துக்கு செல்கிற வேளையில், ஒன்று ஓடும் மேகங்கள் வந்து வெயிலை குறைத்து விடும்,  அல்லது அந்த கண்ணாடி துண்டு செங்கல்லில் இருந்து சறுக்கி விழுந்து இருக்கும்...சரியான பைத்தியம் பிடிக்கிற வேலை... ஆனால் அலுப்பு இல்லாமல் ஆர்வத்துடன் செய்த வேலை.

அப்புறம் அந்த ஒளிக்கற்றைக்கும் நீர் நிரப்பிய குண்டு பல்பு குடுவைக்கும் இடையில் பிலிமை  தலை கீழாகப் பிடித்து அடுத்து இருக்கிற திரையில் அந்த பிம்பத்தைக்  காண்பது பெரிய சாதனை செய்வது போல் ஒரு நினைப்பு. இந்த பிலிம் பிடிக்கிற வேலை செய்பவர் தான் கேப்டன். அவர் ஆபரேட்டராம் !  .  எத்தனை DOLBY, 4D, QUBE எபெக்ட்டோடு உள்ள அரங்குகளில் இன்று திரைப்படங்கள் கண்டு ரசித்தாலும், இந்த குண்டு பல்பு  சினிமா கொடுத்த திகில் (Thrill ) இனிமேல் கிடைக்கப் போவது இல்லை.

இந்த நண்பன் சுப்பையா வின் உறவினர் சென்னையில் AVM படப்பிடிப்பு நிலையத்தில் அரங்கம் அமைப்பவர்களாக இருந்தனர்.  இந்த சுப்பையா 6 ஆம் வகுப்பு படிக்கும்போது கோடை விடுமுறைக்கு ( 1969) சென்னை சென்று வந்தார் தன்  உறவினர் இல்லங்களுக்கு.  அப்போது அவர்கள் படபிடிப்புக்கு அழைத்துச் சென்று உள்ளனர். அப்போது இயக்குனர் P.மாதவன் அவர்கள் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடிக்க 'சாப்பாட்டு ராமன்'  என்ற திரைப்படம் எடுத்துக் கொண்டு இருந்தார்கள்.  இந்த படப் படப்பிடிப்பை நம்ம நண்பர் பார்த்து விட்டு வந்து அப்படியே கேமரா கோணம், விளக்குகளின் வெளிச்சம், நடிகர்கள் நடித்த விதம் என்று சென்னை ஸ்டுடியோக்களையே தேவகோட்டைக்குக் கொண்டு வந்து விட்டார்.



அப்புறம் என்ன?   எப்படா இந்தப் படம் நம்ம ஊருக்கு வரும். நண்பன் விவரித்த காட்சிகள் திரையில் எப்படி வருகின்றன என்று காண ஆவல்.  கடைசியில் 'சாப்பாட்டு ராமன்' என்ற பெயர் மாற்றப்பட்டு 'ராமன் எத்தனை ராமனடி'  என்ற பெயரில் வெளியானது.  1971, ஏப்ரல் 14ல் ( தமிழ் வருடப்பிறப்பு) என்று நினைக்கிறேன்,  நம்ம சரஸ்வதி டாக்கீஸில் திரை இடப்பட்டது.  வெகு நாள் காத்திருந்த படம்.  என்ன இப்படி நாள், கிழமை எல்லாம் குறித்து சொல்கிறேன் என்று நினைக்கிறீர்களா?  இந்தப் படம் பார்த்த கொடுமை மறக்க முடியாதது.

அந்த தமிழ் வருடப்பிறப்பு அன்று ராமன் எத்தனை ராமனடி  படம் காலை 10:00 மணி காட்சிக்கே செல்ல வேண்டும் என்று ஒரே ஆசை.  வீட்டில் படம் பார்க்க காசு கொடுத்து விடுவார்கள்.  ஆனால் படம் பார்க்க அனுமதி வாங்குவது குதிரைக்கொம்பு. எப்படியோ காசும், அனுமதியும் வருடப்பிறப்பு பரிசாக வாங்கி ஆகி  விட்டது.  சும்மா போக வேண்டியது தானே.  எனக்கு ஒரு தம்பி.  அவர் பெயர் சேகர்.  வேலியில் போனதை எடுத்து வேட்டியில் விட்ட கதையாக,  குழந்தையாக இருந்த என் தம்பியையும் அழைத்து கொண்டு படம் பார்க்க சென்றேன்.



திரையில் சிவாஜி வந்தார், சாப்பாட்டு ராமனாக.  வட்டில் வட்டிலாக சாப்பிட்டு கொண்டு இருந்தார், சிதறு தேங்காய் பொறுக்கி சாப்பிட்டார்,  கே.ஆர்.விஜயாவை டாவடித்து 'பொண்ணுக்கு தங்க மனசு' என்று பாடினார். 



அதுவரை நல்ல பிள்ளையாக இருந்த என் தம்பி சிவாஜி கணேசனை நம்பியார் சவுக்கால் வெளுக்கும் காட்சி வந்ததும் அலறி அழ ஆரம்பித்தவர் தான்.... ம் ஹூம், நிறுத்தவே இல்லையே !   திரை அரங்குகளில் நல்ல காட்சி ஓடிக்கொண்டு  இருக்கும் பொழுது ஓலமிட்டு அலறுகின்ற குழந்தைகளைக் கண்டாலே படம் பாக்கிறவங்க கடுப்பாகி விடுவாங்க.   எனக்கோ அடுத்து சிவாஜி என்ன செய்ய போறாருனு பார்க்கணும், இவனோ அழுகையை நிறுத்துவதாக இல்லை.  வெளியில் வந்து 5 காசு முறுக்கில்  4 வாங்கி கொடுத்ததும் அழுகை சட் என்று நின்று விட்டது.  அப்பா.... சாமி.. சந்தோசம் டா ராஜான்னுட்டு, அரங்கில் மீண்டும் நுழைந்தால் இருட்டில் பெஞ்ச் எது வழி  எதுன்னு புரியல.  ஒரு வழியாக இடத்தை கண்டு பிடிச்சு உட்க்கார்ந்து ஒரு நிமிடம் கூட ஆக வில்லை . மறுபடியும் தம்பி சங்கு ஊத ஆரம்பித்து விட்டார்.  என்னடான்னு பார்த்தல் 4 முறுக்கும் முடிந்து விட்டது.  'ஆஹா' ன்னு மறுபடியும் வெளியே வந்து மறுபடியும் உள்ளே வந்து...மறுபடி...மறு படி...கையில் இருந்த மொத்த காசும் காலி...அப்புறம் தான் தெரியுது இந்த மைனர் வாங்கி கொடுத்த முறுக்கை எல்லாம் கீழே தூக்கி கடுப்பில் கடாசி இருக்கிறார் என்று...  'சீ ..சீ .. இந்தப் படம் புளிக்கும்'  என்று தம்பியை அழைத்துக் கொண்டு சிவாஜி சென்னைக்கு திருட்டு ரயில் ஏறியதைப்  பார்த்த படியே வீடு வந்து சேர்ந்தேன்.

அந்தக் கால படங்கள் தான் 17 ரீலுக்கு குறையாமல் இருக்குமே...திரும்பவும் வீட்டிலிருந்து சரஸ்வதி டாக்கீஸ்.  சிவாஜி இப்போ சோகமா 'பொண்ணுக்கு தங்க மனசு' பாட்டை பாடிக் கொண்டு  இருந்தார்.  தலையும் புரியல... வாலும்  புரியல.   வீட்டில் அந்த வயதில் ஒரு தடவை படம் பார்க்க அனுமதி வாங்குவதே பிரம்ம பிரயத்தனம்.  அதுக்கு அப்புறம் எங்கே ....

ரொம்ப காலம் கழித்து  கல்லூரி முடித்த சமயம் அதே திரைப்படம்.... அதே சரஸ்வதி டாக்கீஸ்...இந்த முறை நண்பர்.. அன்பு மாப்பிள்ளை...வித்தகர், சபா ( பாண்டியன் கிராம வங்கி ) அவர்களுடன் ரசித்து பார்த்தேன்.  மாப்பிள்ளை அப்படியே அவரவர் modulation ல் அப்படியே பேசி காட்டுவார்,  கல்லூரி நாட்களில்...  புலவர் கீரன், நடிகர்/ இயக்குனர் விசு எல்லாம் மாப்பிள்ளை குரலில் வந்து போவார்கள்.  இந்த ராமன் எத்தனை  ராமனடி திரைப்படம் இருவரும் சேர்ந்து பார்க்கையில்,  அதிலும் சிவாஜி கணேசன் தேங்காய் பொறுக்கி  கொண்டு காலை தாங்கி நடந்து வருகையில், அவரது ஒவ்வொரு செல்லின் அசைவையும் என்னுடன் பகிர்ந்து ரசித்து , ரசிக்க வைத்த நினைவுகல் வருகின்றது.  என்ன மாப்பிள்ளை  சபா, நினைவு இருக்கிறதா?

நினைவோ ஒரு பறவை - 
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தான் உறவை

என்று ஒரு பாடல் உண்டு. பாருங்களே , எதிலேயோ ஆரம்பித்து நினைவு எங்கேயோ பொய் விட்டது.  இதோடு சத்திரத்தார் வீதி விட்டு, திருப்பத்தூர் ரோடு வந்து விடுவோம்.  சரியா...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60