அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 39

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 39

29-01-2018
இந்தத் தொடர் எனக்கு எத்தனையோ சொந்தங்களைப் பந்தங்களை மீட்டுக் கொடுத்து கொண்டே இருக்கிறது, அள்ள, அள்ளக் குறையாத அட்சய பாத்திரமாக..

ஒரு நாள் சிங்கப்பூரில் இருந்து மதிப்பிற்குரிய அல்மர்ஹும் (அமரர்) நிமிஷகவி அவர்களின் மகன் தொடர்பு கொண்டார்.  அவர் மூலம் அவரது மூத்த அண்ணன் என் வயது தோழன் ஜனாப்.ஹைதர் அலி தொடர்பில் வந்தார் .

திரு.கிட்டு என்கிற கிருஷ்ணன் செட்டியார் அவர்களை (அமெரிக்கா) பற்றி சென்ற பகுதியில் குறிப்பிட்டு இருந்தேன்.  பேராசிரியர் குமரப்பன் மூலமாக அவர் அன்பு மாப்பிள்ளை சபா அவர்கள் உதவியுடன் கல்வி சேவை செய்து வருவது கண்டு உளம் பூரித்தேன்.  அத்துடன் கனடாவில் இருந்து திருமதி.தெய்வானை பழமலை தொடர்பு கொண்டு ஒரு 20 வருடங்களுக்கு முன்னால்  சென்னையில் சந்தித்ததை நினைவு கூர்ந்ததுடன் அவர் திருச்சுழியார் வீடு வழி  வந்தவர் என்பதையும் நினைவுப் படுத்தினார்.   அவர் மூலம் மலேசியாவில் வாழும் நான் மிகச் சிறுவயதில் பார்த்த, அதன் பின் இன்று வரை பார்க்காத  திரு.சுப்பு மற்றும் சேகர் ( திருமதி சுலோச்சனா ஆச்சியின் மைந்தர்கள் ) அவர்களைப்  பற்றி அறிந்து கொண்டேன்.  

திருச்சுழியார் வீட்டு திண்ணப்ப செட்டியாரின் மகள் தெய்வானை ஆச்சியின் மகன் திரு.சுவாமி நாதன் புஷ்பநாதன் என்று அறிந்து கொண்டேன். மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்த ஜனாப் செய்து பீர் அவர்கள் தேவகோட்டையில் நமது  இசுலாமிய சொந்தங்களின் சுற்றம் என்று அறிமுகம் செய்து கொண்டார்.  இப்படி தினம் ஒரு சொந்தம் என ஏற்பட்டு வாழ்வினை பொருள் நிறைந்ததாக்குகிறது .

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது
என்னை உன்னோடு சேர்த்த தெய்வம்
எழுதும் புதுக்கதை இது...

கண்ணதாசன் பாடல் வரிகள் இவை....

சரி, இப்போது மீண்டும் திருப்பத்தூர் சாலை... மைனர் வீட்டை அடுத்து வருவது சின்ன மைனர் வீடு.  பொலிவு குறையாமல் அப்படியே இன்னும் இருக்கும் கட்டிடக்கலைஞர்களின் கை வண்ணம்.  கடைசியாக அது ஒரு திருமண மண்டபமாக சேவை செய்து கொண்டு இருந்த போது  தேவகோட்டை சென்றிருந்த போது அங்கு சென்றேன்.  இதற்கு நேர் எதிரே 'தர்ம முனீஸ்வரர்' கோவில்.  நல்ல பெரிய இடம்.  கம்பௌண்ட் போட்டு இருக்கும். சின்ன மைனர் வீட்டை ஒட்டி மைனர் தெரு நேராக கருதா ஊரணியை இணைக்கும். இந்தப்  பக்கம் தர்ம முனீஸ்வரர் கோவிலுக்கு பக்கத்தில் 'அப்பு.லேனா' தெரு குதிரைப் பாதை சாலையில் இருந்து புறப்பட்டு திருப்பத்தூர் சாலையை வந்தடையும்.

இந்த அப்பு லேனா  தெரு ஆரம்பிக்கும் இடத்தில் 'கோவிந்தன் கடை' என்று ஒரு மளிகை கடை இருந்தது. அதற்கு எதிரில் முருகேசன் கடை ( இந்த முருகேசன் அவர்களின் வீடு திண்ணன் செட்டி பிள்ளையார் கோவிலுக்கு பின் புறம் நகர கோட்டை அம்மன் கோவிலுக்கு எதிரில், திண்ணன் செட்டி அக்ரஹாரத்தில்... இளங்கலை கணக்கு படித்து கொண்டு இருந்தார்.... நல்ல புத்தி சாலி... என்ன காரணத்தாலோ படிக்கும் போது, தன வாழ்வை முடித்துக் கொண்டார்). முருகேசன் அவர்களின் மூத்த அண்ணன் இந்த கடையை நடத்தி வந்தார்.

அப்போது எல்லாம் முன்பு குறிப்பிட்டு இருந்ததைப் போல் சினிமா போஸ்டர்கள் ஒரு உலோகத்தட்டியில் ஒட்டப்பட்டு கடை வாசலில் வைக்கப் பட்டு இருக்கும். 


அந்தப்பக்கம் மைனர் வீதியில் என்னுடன் சைவ பிரகாச வித்தியா சாலையில் 'சுவாமிநாதன்'  என்பவர் படித்து வந்தார். இவர் வீட்டுக்கு அருகில்/ அல்லது அதே வளவில் திரு.வீரப்பன் என்பவர் என்னுடன் படித்து வந்தார்.  நானும் அவரும் சேர்ந்து குறவன் குறத்தி யாக வேடமிட்டு நடனம் ஆடி  நண்பர்களை மகிழ வைத்து இருக்கிறோம்.  இந்த வீரப்பன் ஒல்லியான தேகம் உடையவர்.  நல்ல நண்பர்.

ஒரு நாள் திரைப்படம் காண பகல் காட்சிக்கு, நானும் எனது மற்றோரு நண்பர் திரு. நரசிம்மனும் இந்த குதிரைப் பாதை சாலை வழியாக சென்று கொண்டு இருந்தோம். அப்போது இந்த வீரப்பன் முருகேசன் கடையில் சாத்தி  வைக்கப்பட்டு இருந்த சினிமா போஸ்டரை குனிந்து பின்னால்  வருபவர் கூடத் தெரியாமல் அயர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தார்.   


நான் அவரை கேலிக்காக பின்னால் இருந்து முழு சக்தியோடு முதுகில் வைத்தேன் ஒரு அடி .  என்னுடன் நடந்து வந்து கொண்டு இருந்த நரசிம்மனுக்கு நான் ஏன் அடிக்கிறேன் என்பது கூடத் தெரியாது.

நான் அடித்த அடியில் முதுகில் வலி தாங்காமல், குனிந்து இருந்தவர் கோபாவேசமாக திரும்பினார். கண்களில் அனல்.  பார்த்த அந்த ஒரு கணத்தில், அறிந்து கொண்டேன் அவர் நண்பர் வீரப்பன் அல்ல.  அவர் போலவே உடல் வாகு கொண்ட யாரோ ஒருவர்.  அப்புறம் என்ன?  பிடித்தேன் ஓட்டம் .... பாவம் நண்பர் நரசிம்மன்.. இவன் ஏன் அடித்தான்... அடி  வாங்கியவர் யார்?  ஏன்  ஓட்டம் பிடிக்கிறான் என்றே தெரியாமல் என்னுடன் சேர்ந்து ஓட ஆரம்பித்தார் ....

நாளை ...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60