அசை போடும் தேவகோட்டை நினைவுகள்-பகுதி: 4

அசை போடும் தேவகோட்டை நினைவுகள்


பகுதி: 4

30-09-2017




கவிக்கிறுக்கன் முத்துமணி
தேவகோட்டை மாட்டுச்சந்தையில் நின்று கொண்டிருந்தோம். வரிசைக்கிரமப்படி திண்ணன் செட்டி ஊருண்ணியைத்தான் வலம் வரம் வேண்டும், இன்றைய தினம் விஜயதசமி என்பதால், இன்று மட்டும் நேராக மாட்டுச்சந்தையில் இருந்து நகரச்சிவன் கோவில் ஊருண்ணி கீழ் கரைக்குச்செல்வோமே!!

நவராத்திரி பெருவாரியான ஊர்களில் நிகழும் விழாதான்… ஆனால் தேவகோட்டைக்கு என்று சில தனித்துவம் இருக்கிறது.  

சண்ட      முண்ட      சும்பவி     சும்பவென
அண்ட      மதிர்த்த     அரக்கரை  உதிர்த்த- சா
முண்ட     மாயவளை   முகமலர  துதிக்கும்
மண்ட      லமிந்த       மாநவ     திரு நாளில்…

அரக்கர் தனை அழித்து அன்னை அமைதி அளித்த வேளையிலே அனைத்துத் தெய்வங்களும் அன்னையுடன் சேர்ந்து அணி வகுத்து வந்தனர் என்பது ஐதீகம்.  விஜய தசமி என்று கொண்டாடப்படுகிற பத்தாம் நாள் திருவிழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் இடம் தேவகோட்டை. இதுதான் சிறப்பு…இந்த நாளில், தேவகோட்டையின் கீழ்க்கண்ட கோவில் உற்சவர்கள் உவகையுடன், உற்சாகத்துடன், வில்லேந்திய வெற்றித் தோள்களுடன்
வீறு கொண்டு  நகரச்சிவன் கோவில் ஊருண்ணி கீழ்கரையில் களமாடும் காட்சி காண கண் கோடி வேண்டும்.

1. நகரச்சிவன் கோவில்
2. வெள்ளையன் ஊருண்ணி கலங்காத கண்ட விநாயகர் 
3. இரவு சேரி மும்முடி நாதர் 
4. செல்லப்ப செட்டியார் கோவில் சிவன்
5. அம்மச்சி ஊருண்ணி கண்ணபெருமான்
6. வெள்ளையன் ஊருண்ணி மேல்கரை கோதண்ட ராமர்,
7. வெள்ளையன் ஊருண்ணி மேல்கரை வேணுகோபாலன்

அனைத்து இறை வடிவங்களும் கூடி தீமை அழிக்க அம்பு விடும் காட்சி மிகவும் அற்புதம் ஆகும்.   வழக்கம் போல நகரத்தார் இந்நிகழ்வில் பங்கெடுத்து விழாவுக்கு தனி முத்திரை பதிப்பர்.  கூட்டம் அலை மோதும்,  பக்தி பரவசத்தில் முதியவர்,  பகட்டு இளம் கன்னியர், கலர் பார்த்துக் கண்களைக் கழுவிக்கொள்ளும் காளையர், உரசிப்பார்க்க முயலும் கழுதைகள் என பலதர மனிதர் கூடுவர்.  

புரவி வாகனங்களில் புடை சூழும் பக்தருடன் அனைத்து மூர்த்திகளும் ஆரவாரமாய் தங்களுக்கு என்று அமைத்திருக்கும் பாடி வீடுகளைச் சுற்றி அம்பு தெறித்துப் போர் புரிவர்.  அந்த அம்பு கைக்கு அகப்பட்டால் தலைப்பிள்ளை ஆண்மகவாக இருக்கும் என்றும் ஒரு நம்பிக்கை.  அந்த அம்பை எடுக்க கூட்டம் ஆரவாரிக்கும்.. குதிரை வாகனத்தில் நிற்கும் குருக்களே பட்டாடடை உடுத்தி, தலைப்பாகை கட்டி அந்தந்த மூர்த்தி ஆகி மருள் வர அம்பு எய்துவர்.  இதில் அமரர் பட்டுக்குருக்கள் அம்பு எய்துவது முப்புரம் எரித்த அந்த இறைவனே வந்தது போல இருக்கும்.  

கிலுக்கி குத்துதல்:

கிலுக்கி குத்துதல் என்பது தேவகோட்டைக்கே உரிய தனிச்சிறப்பு (unique) ஆகும். கிலுக்கி என்பது வெள்ளியினாலோ, மரத்திலானாலோ ஆன வேல் போன்ற ஒரு கூரிய முனை கொண்ட ஆயுதம். ஆடக்கூடிய, ஒசை எழுப்பக்கூடிய மணிகள் பொருத்தப்பட்டு இருக்கும்.  கிலுக்கி என்ற சொல்லே தனித்தமிழ்.  

திருப்புகழிலே அருணகிரியார் கையாண்டிருப்பார்:

மலரணி கொண்டைச் சொருக்கி லேயவள்
    சொலுமொழி யின்பச் செருக்கி லேகொடு
    மையுமடர் நெஞ்சத் திருக்கி லேமுக    மதியாலே
  மருவுநி தம்பத் தடத்தி லேநிறை
    பரிமள கொங்கைக் குடத்தி லேமிக
    வலியவும் வந்தொத் திடத்தி லேவிழி  வலையாலே
நிலவெறி யங்கக் குலுக்கி லேயெழில்
    வளைபுனை செங்கைக் கிலுக்கி லேகன
    நிதிபறி யந்தப் பிலுக்கி லேசெயி    மொயிலாலே
நிதமிய லுந்துர்க் குணத்தி லேபர
    வசமுட னன்புற் றிணக்கி லேயொரு
    நிமிஷமி ணங்கிக் கணத்தி லேவெகு   மதிகேடாய்
அலையநி னைந்துற் பநந்தி லேயநு
    தினமிகு மென்சொப் பனத்திலேவர
    அறிவும ழிந்தற் பனத்தி லேநிதம்   உலைவேனோ
  கசடனை வஞ்சச் சமர்த்த னாகிய
    கசடனை யுன்சிற் கடைக்க ணாடியு
    மலர்கொடு நின்பொற் பதத்தை யேதொழ அருள்தாராய்
பலபல பைம்பொற் பதக்க மாரமு
    மடிமைசொ லுஞ்சொற் றமிழ்ப்பனீ ரொடு
    பரிமள மிஞ்சக் கடப்ப மாலையு     மணிவோனே
  பதியினில் மங்கைக் கதித்த மாமலை
    யொடுசில குன்றிற் றரித்து வாழ்வுயர்
    பழநியி லன்புற் றிருக்கும் வானவர்   பெருமாளே.

கிலுக் என்பதன் பொருளாக,  வளையல்களைத் தரித்துள்ள செங்கையின் “கிலுக்” என்ற ஓசை வரும்.  இந்த கிலுக்கி வளையலின் கிலுக் ஓசை போன்ற ஓசையை எழுப்புவதால், கிலுக்கி என்று பெயர் சூடப்பட்டிருக்கிறது.  இது ஒன்றே போதும், தேவகோட்டை பெருமக்களின் தமிழ் பாண்டித்யம் பகர…

இந்தக் கிலுக்கியை குடும்பத்து ஆண்கள், அங்கே கட்டப்பட்டிருக்கின்ற வாழை மரத்திலே குத்தி வருவார்கள்.  உலக நாயகி அசுரர் குலம் அழிக்க ஈடுபடும் போரிலே, அனைத்து இறைசக்தியும் சேர்ந்து செயல்படும்போது, அவரடியாராக தாங்களும் சேர்ந்து அந்த புனிதப்போரிலே பங்கெடுத்தோம் என்று குறிப்பதே இந்த கிலுக்கி எடுப்பு நிகழ்வாகும்.

இப்போது சொல்லுங்கள்,, தேவகோட்டை மக்களின் தமிழ் உணர்வும், இறைப்பங்களிப்பும் எங்கும் காண இயலாத ஒரு தனித்தன்மை வாய்ந்தது அல்லவா?  எத்தனை தேசங்கள் கடந்த போதும், எத்தனை எல்லைகள் நடந்த போதும், எனைப்பெற்ற தேவி நகருக்கு ஈடு சொல்ல ஏதுமில்லை….

 நகர் வலம் மீண்டும் திண்ணன் செட்டி ஊருண்ணிக்கரையில் இருந்து தொடங்கட்டும்…..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60