அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 40
அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 40
09-02-2018
அன்புச் சொந்தங்களே!
கடைசியாக அப்பு.லேனா தெருவில் திரிந்தோமா ? இந்த அப்பு லேனா தெருவில் ஊடுருவி சிலம்பணி ஊரணியில் இருந்து புறப்படும் குளக்கால் கீழக்குடியிருப்பு கண்மாய் தேடி ஓடும். இந்த குளக்கால் தெருவைக் கடக்கும் இடத்திற்கு முன்பாக தெருவின் இடது புறத்தில் ஒரு விறகுக்கடை இருந்தது. என் பள்ளி நண்பர் திரு.சதாசிவம் அவர்களுக்குச் சொந்தமானது. நல்ல காய்ந்த மரங்களைப் பிளந்து விறகுக் கட்டைகளாக்கி அடுக்கி வைத்து இருப்பார்கள் விற்பனைக்காக. எரி வாயு என்றால் என்னவென்று அறியாத காலம்.
பெரிய மூங்கில் கம்பங்களில் பெரிய மரத்தட்டுகளுடன் துலாபாரமாக நிற்கும் உயர்ந்த தராசு. பெரிய கைப்பிடியுள்ள இரும்பு எடைக் கற்கள் ( இரும்பில் இருந்தாலும் கற்கள் என்றுதான் அழைக்கிறோம், பழமை மாறா பைந்தமிழர் நாம்). மிதி வண்டியில் சென்று 5 கிலோ, 10 கிலோ என்று எடை போட்டு வாங்கி மிதி வண்டியின் பின்புறம் உள்ள கேரியரில் கயிறு கொண்டு கட்டி வீட்டுக்கு கொண்டு வந்து சேர்த்த ஞாபகம் இருக்கிறது. அப்போதெல்லாம் அதிகப்பட்சம் விறகு அடுப்புகளும் , கொஞ்சம் கரி அடுப்புகளும் தான் முதன்மை எரி பொருள். சிலர் மண் எண்ணெய் அடுப்புகள் காற்றின் அழுத்தத்தில் பம்ப் செய்யப்படும் அடுப்புகள் பயன் படுத்தி வந்தனர். மண்ணெண்ணெய் லட்சுமி டாக்கீஸ் எதிரில் பெரிய ட்ரம்களில் மற்ற பெட்ரோலிய பொருட்கள் விற்கும் இடத்தில் விற்பார்கள். லிட்டர் 18 காசுகள் என்ற நினைவு இருக்கிறது. அதை விடக் குறைவான விலையில் (SUBSIDISED ) நியாய விலைக்கடைகள் என்று பெயரிடப்பட்ட ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் கிடைக்கும்.
எனக்கென்னவோ, விறகு அடுப்பும், கரி அடுப்பும், மாட்டு சாணத்தால் ஆன வறட்டியும் எரி பொருளாக சமையல் அறையில் இருந்தவரை இந்த கொசுக்களும் மற்ற மைக்ரோ உயிரிகளும் குறைவாக இருந்தனவோ என்று எண்ணம். இந்த விறகு மற்றும் வறட்டியின் புகையை துரத்தி விட்டு, கொசு விரட்டிகளாக இராசயனம் கலந்த கொசு வர்த்திகளின் புகையை சுவாசித்துக் கொண்டு இருக்கிறோம்.
அப்பு லேனா தெரு திருப்பத்தூர் சாலையைத் தொடும் இடத்துக்கு எதிரே தொலைபேசி தொடர்பு நிலையம் (தானியங்கி ) இருக்கிறது. இதுதான் முன்பு வட்டாணம் சாலையில் ஜமீன்தார் வீட்டுக்கு எதிரில் ( சொர்ணவள்ளி பங்களாவுக்கும் எதிரில்) இருந்தது. அப்போதெல்லாம் ட்ரங் கால் எனப்படும் மனிதர்களால் அமைக்கப்படும் இணைப்புகள் தான். இந்த தானியங்கி தொலைத்தொடர்பு நிலையம் வந்த பிறகு வெளியூர் அழைப்புகளை இயந்திரம் செய்ய ஆரம்பித்தது. இப்போது எல்லாம் செயற்கை கோள் வழியாக இந்தப் பணி நிகழ்கிறது. இதை அடுத்து சந்திரன் மரம், ஓடு வியாபாரம் என்று ஒரு மரக்கடை. இதற்குள் ஒரு பழமையான கோவில் இருந்தது போன்ற ஞாபகம்.
இதற்கு நேர் எதிரே, தேவகோட்டை நகராட்சியின் மகத்துவம் வாய்ந்த ஆயுர் வேத மருத்துவமனை இருந்தது. மகத்தான மருத்துவ சேவை செய்து வந்த தலம் இது. டாக்டர்.இராஜகோபால் மற்றும் கம்பௌண்டர் கோபாலன் பற்றி ஏற்கனவே பகிர்ந்து கொண்டு இருக்கிறோம் முந்தைய பகுதிகளில்.. மிக எளிமையான மருத்துவர் டாக்டர் இராஜகோபால். இவரது மகன் திரு விஜயகிருஷ்ணன் என்னுடன் தே பிரித்தோ உயர் நிலைப் பள்ளியில் பயின்றார். அதன் பிறகு எந்த தகவலும் இவர் பற்றி எனக்கு தெரியாது. விஜயகிருஷ்ணன் எங்கு எப்படி இருக்கிறார் என்று அறிந்தவர்கள் பகிரவும். அந்தக் காலத்தில் தமிழக அரசின் சார்பில் நடத்த பட்ட பொது மருத்துவமனை ஒத்தக்கடையில் தி.பிள்ளையார் கோவில் பக்கவாட்டில் இருந்தது, அளவில் அதைவிட இந்த நகராட்சியின் ஆயுர்வேத மருத்துவமனை பெரியது.
இந்த மருத்துவமனையின் பக்கவாட்டில் ஓடும் தெரு V.P.R.M. தெரு முத்தாத்தாள் பள்ளி வழியாக கீழ பஜார் ரோடில், ந.நா.நந்த கோபாலன் நகை கடை மற்றும் உஜ்ஜினி விலாஸில் போய்ச்சேரும். இந்த தெரு வழியாகவும் தேவகோட்டை குளக்கால் வெட்டிச்செல்லும். இந்த இடத்தில அந்தக் காலத்தில் ஒரு நில அளவை அலுவலகம் இருந்தது. இந்த அலுவலகத்தில் என் அம்மாவின் ( ஆத்தா என்று அழைத்தால் தான் மனம் நிறைகிறது), ஆத்தாவின் சொந்த கிராமமான அன்னவாசலில் (மானா மதுரை ) இருந்து ஒரு தேவர் வகுப்பைச் சேர்ந்தவர் பணி புரிந்து வந்தார். குள்ளமாக இருப்பார் . அதனால் அவருக்கு பட்டப்பெயர் பிள்ளையார் என்பது. அவரை நான் பிள்ளையார் மாமா என்றே அழைப்பேன். ரொம்ப நாள் அவர் என்னுடைய சொந்த மாமா, நாங்கள் வெவ்வேறு வகுப்பினர் என்பது எல்லாம் தெரியாது. அந்தக்காலத்தில் எங்கள் கிராமங்களில் எங்கள் இரு வகுப்பினர் மட்டுமே வாழ்ந்து வந்தனர், பாகுபாடு இல்லாமல் மாமா, மச்சான் என்று ஒற்றுமையாகத்தான் இருந்து வருகின்றனர் இன்று வரை. . அவர் இந்திய இராணுவத்தில் பணி புரிந்து விட்டு ஓய்வு பெற்ற பின் இந்த தமிழக நில அளவு அலுவலகத்தில் sub staff எனப்படும் சிப்பந்தியாக பணி புரிந்து வந்தார். குடும்பம் கிராமத்தில் இருந்து தேவகோட்டை வரும்போது வீட்டில் வசிப்பார் . மனைவி ஊருக்கு விவசாய காலங்களில் சென்று விட்டால் இந்த அலுவலகத்திலேயே இரவு தங்குவார்.
ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மாலை வேளைகளில் எங்கள் வீட்டுக்கு வந்து என் அப்பா, அம்மாவுடன் ஊர்க்கதைகள் பேசிக்கொண்டு இருப்பார் . அப்போது மக்கள் திலகம் மற்றும் நடிகையர் திலகம் நடித்த 'வேட்டைக்காரன்' சரஸ்வதி திரை அரங்கத்தில் ஓடிக்கொண்டு இருக்கிறது. எனக்கு ஒரு 5 அல்லது 6 வயது இருக்கும். இந்தப்படத்தில் புலி வரும் என்று மற்றவர்கள் பேசுவதை வாய் பார்த்து எனக்கு இந்த படத்தை காண ஆவல். யார் அழைத்து செல்வார்கள். இந்த பிள்ளையார் மாமா வீட்டில் பேசும் போது இரவு திரைப்படம் பார்க்க செல்வதாக சொல்லிக்கொண்டு இருந்தார். ஆத்தாவை நச்சரித்து எப்படியோ அனுமதி வாங்கி விட்டேன். பிள்ளையார் மாமாவும் அழைத்து சென்று விட்டார்.
திரையில் புலி பாய்ந்து வந்தது. M .G .R . துப்பாக்கியால் சுடும்போது தப்பித்துப் போய் பின் இரவு நேரங்களில் வீட்டுக்கு வர ஆரம்பித்தது. திரையில் புலி பார்த்து கிலி பிடித்துவிட்டது. படம் முடிந்து பிள்ளையார் மாமா தனது அலுவலகத்தில் என்னையும் படுத்துக்கொள்ள சொல்லி அழைத்து வந்து விட்டார். புதிய இடம், உறக்கம் வரவில்லை... நேரம் ஆக ஆக இந்த புலி சரஸ்வதி தியேட்டரில் இருந்து நேராக இந்த அலுவலக கதவை தட்டுவது போல ஒரு பிரமை. பயம் பற்றிக் கொள்ள விடிய விடிய விழித்து இருந்தேன்.
பின்னர் வளர்ந்து பெரியவனாகி விட்ட பின்னர், முத்தாத்தாள் பள்ளி வழியாக இந்த தெருவில் அந்த அலுவலகம் இருந்த இடத்தை கடந்து போகும் நேரம் எல்லாம் திரையின் நிழல் புலியால் வந்த கிலியை நினைத்து முறுவல் பிறக்கும் ...
அடுத்த பகுதியில் திருப்பத்தூர் சாலையில் ... மீண்டும் ...
கருத்துகள்
கருத்துரையிடுக