அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 42

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 41
14-02-2018
அடி ஆத்தாடி...

தேவகோட்டை மக்களிடம் கொஞ்சம் ஏப்பை  சாப்பை மாட்டி தெரியாமல் வாயைக் கொடுத்துட்டா பிச்சு பிராண்டிருவாங்கப்பா. தெரியாத்  தனமா  நேற்று திருப்பத்தூர் சாலையில் முச்சந்தி முனீஸ்வரர் கோவிலுக்கு எதிரே ஒரு பூங்கா போல காலி இடம் முன்பு இருந்தது போன்ற ஒரு நினைவு என்று சொன்னாலும் சொன்னேன்...எத்தனை பின்னூட்டங்கள்?

கொஞ்சம் நினைவுகளின் நீள அகலங்களை ஒரு முறைக்கு இரு முறை அளந்துதான் எழுத வேண்டும்.  யார் கிட்ட?  ஹா .. ஹா...ஹா...

இந்த ராஜு நாயடு கடையில் இருந்து சேகர் என்று ஒரு பையன் என்னுடன் பள்ளியில் படித்தார். சுப்புராஜ் என்பவரும் எம் வயது செட்.  தற்போதைக்கு மாந்தோப்பு வீதிக்குள் நுழைந்தால் நேரம் ஆகி விடும். ஏற்கனவே வெள்ளையன் ஊரணி கீழ் கரையில் இருந்து வந்து காசுக்கடை வீதி (நடு பஜார் ரோடு) சேரும் இடத்தில் நிறுத்தி வைத்து இருக்கிறேன். மேல பஜார் ரோடு இன்னும் பயணம் ஆகவில்லை .  முக்கியமான வாடியார் வீதி வருவதற்கு இந்த மேல பஜார் ரோடு வழியாக வந்து சரஸ்வதி டாக்கீஸின் முன் வந்தால் தான் சரியாக இருக்கும்.  இப்போது திருப்பத்தூர் சாலையில் வாடியார் வீதி வரை வந்து விட்டு பின்னர் மேல பஜார் ரோடில் இருந்தே பயணம் தொடங்குவோம்..  என்ன சரி தானே?

இந்த ராஜு நாயுடு கடைக்கு அடுத்து ஒரு சந்து உள்  பக்கமாக செல்லும். அதற்குள் சரஸ்வதி தியேட்டர் அடுத்து பெட்டிக்கடை வைத்து இருக்கும் 'லட்சுமி அக்கா'  வீடு.  இரவும் பகலுமாக தூங்காது திறந்து இருக்கும்.  லட்சுமி அக்காவின் மகன் திரு.பாலு என் நண்பன் கூட.  லட்சுமி அக்கா வும் அவரது கணவரும் நண்பன் பாலுவும் மாற்றி மாற்றி கடையில் இருப்பார்கள்.

இந்த சந்துக்கு அடுத்து விஸ்வகர்மா வகுப்பை சேர்ந்த திரு.அருணாசலம் அவர்களின் வீடு. இந்த அருண் (நாங்கள் அப்படிதான் அழைப்போம் ) அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் நகரில் கட்டப்பெற்ற அருள் மிகு வெங்கடேஸ்வரர் ஆலய கட்டுமான பணிகளில் பங்கு பெற்றவர்.  நல்ல ஓவிய நுணுக்கங்கள் கை வரப்பெற்றவர்.

அங்கு வருடக்கணக்கில் தங்கி இருந்து அலையத் திருப்பணி செய்த காலங்ககளில் நாட்டிய பேரொளி பத்மினி அவர்கள் அனைத்து தொழிலாளத் தோழர்களுக்கும் விருந்தோம்பல் செய்ததை நினைவு கூர்வார் .  1975 ஆம் ஆண்டு திருப்பதி தேவஸ்தானத்தில் அனுமதி பெறப்பட்டு அமெரிக்க வாழ் அன்புள்ளங்களின் மனமுவந்த நன்கொடையினாலும் நிர்மாணிக்கப்பட்ட வெங்கடேசன் உறையும் கோவில்  இது.  உலக புகழ் பெற்ற நம் எழுவன் கோட்டை தந்த மாணிக்கம் கணபதி ஸ்தபதி அவர்கள் ஆந்திர மாநில அறநிலையத் துறையில் கட்டுமானபிரிவில் பொறுப்பாளாராக இருந்து மிகக்குறைந்த காலத்தில் ஆலய ஆகம விதிகளின் படி அருமையான கோவில் கட்டிட வல்லுநர்களை இங்கிருந்து அழைத்து சென்று திருப்பணியினை செய்யது முடித்தார். 



அந்த தெய்வத்திருப்பணியில் அன்பர்  அருணும் ஈடுபட்டு இருந்தார்.  இவரது தம்பி சுப்பிரமணி  தான் எங்கள் வயது செட்.  இந்த சுப்பிரமணி லிபியா நாட்டில் பணியில் இருந்து விட்டு வந்தார். அதனால் அவரை 'லிபியா' என்று தான் அழைப்போம்.  இந்த வரிகளை எழுதும்போது அந்த நண்பரின் நினைவு வந்தது. எனவே அந்த சுப்ரமணியன் மிக நெருங்கிய நண்பரான கோவையில் தற்போது வசிக்கும் மாப்பிள்ளை செந்திலிடம்  சுப்பிரமணியன் இப்போது எப்படி, எங்கே இருக்கிறார் என்று தொலை பேசியில் விசாரித்தேன்.  ஒவ்வொருவரைப் பற்றியும் எழுத முற்படும் போது  முடிந்த வரை அவர்களுடனோ அல்லது அவர்களைப்பற்றியோ பேசி விட முயற்சி செய்கிறேன்.  ஆனால் இந்த சுப்ரமணியன் 3 வருடங்களுக்கு முன்பேயே இயற்கை எய்தி விட்டதாக அறிந்து அதிர்ச்சி உற்றேன்.  மனித வாழ்வு மிக குறுகிய காலம்.  மற்றவர் மனதில் எவ்வளவு காலம்  வாழ்கிறோம் என்பது மட்டும் தான் ஒருவரின் உண்மையான வயது.  உதாரணத்துக்கு நண்பர் சுப்பிரமணி, இன்று வரை. இந்த நிமிஷம் வரை வாழ்ந்து கொண்டு தான் இருந்தார் என் மனதில்




இந்த அருணா, சுப்ரமணியன் சகோதரர்கள் வீட்டின் முன் பகுதியில் கொஞ்ச காலம் ஆசிரியர் Y .A .P . என்று அழைக்கப்படும் திரு.அருள் பிரகாசம் அவர்களின் தம்பி அருள் காபி என்று ஒரு காபித்தூள் அரவை இயந்திரம் வைத்து கடை நடத்தி வந்தார். இந்த ஆசிரியர் அருள் பிரகாசம், நகரத்தார் மேல் நிலைப்பள்ளியில் ஆசிரியர், மற்றும் தேசிய மாணவர் படை பொறுப்பாளர்.  இவரது தந்தை திரு.யாகுப் பிள்ளை, (தே  பிரித்தோ பள்ளி ஆசிரியர் ) எங்கள் கிராமத்துக்கு (மானாமதுரை) அருகில் உள்ள சவேரியார் பட்டணம் என்ற ஊரை சேர்ந்தவர்கள்.  எனவே அவர்கள் குடும்பம் முழுவதும் மிகவும் நட்பு என்னுடன்.  அது பற்றி சரசுவதி தியேட்டர் பற்றி எழுதும் போது  பார்க்கலாம்.

இதற்கு அடுத்து 'தின தந்தி'  நிருபர், மற்றும் முகவர் திரு.சிவசூரியன் அவர்களின் அலுவலகம் மற்றும் கடை.  விளம்பரங்கள், தினத்தந்தி பத்திரிகையில் கொடுக்க வேண்டும் எனில் இவரிடம் தான் செல்ல வேண்டும். அதே சமயம்,  அவர்தான் தேவகோட்டை பகுதியின் நிருபரும் கூட. இப்படித்தான் சி.பா.ஆதித்தனார், தினத்தந்தி பத்திரிகையை வளர்த்து எடுத்தார் .

அடுத்து 'பரக்கத்' பெட்டி  கடை.  சிகரெட், வெற்றிலை பாக்கு வியாபாரம்,  கூட்டம் எப்போதும் கடை முன்பு.  இவர் கடைக்கு நேர் எதிரே, சரஸ்வதி தியேட்டரின் இடது பக்கம் 'சண்முகம் பெட்டிக்கடை' . சபாஷ்.. சரியான போட்டி என்று சொல்லும்படி இவர்கள் கடைகளில் போட்டி போட்டு கொண்டு வியாபாரம் நடக்கும்.  இந்த பரக்கத் கடைக்கு அடுத்து 'S S S' சைக்கிள் கடை. TRIPLE S கடை என்றுதான் அழைக்கப்படும்.  இதற்கு இடையில் மாணிக்கம் மளிகை கடை இருந்தது.  இந்த பரக்கத் கடை இருந்த வீட்டில் , திரு.ரங்கபாபு , என்ற அருமையான பாடகர் இருந்தார்.  சினிமா பாட்டு கச்சேரிகளில்  கொடி கட்டி பறந்தார்.  அருமையான குரல் வளம்.

கோவையில் 'சேரன் போக்கு வரத்து கழக'  இன்னிசைக்குழுவில் தலைமைப் பாடகர்.  எங்கள் கல்லூரி விழாவுக்கும் அழைத்து இருந்தோம் , ஒரு முறை. பிரபல இயக்குனர் R .சுந்தரராஜன் இயக்கத்தில் ஒரு படத்தில் ( தூங்காத கண்ணின்று ஒன்று, என நினைக்கிறன் ) பின்னணி பாடினார்.  பாடல் வரிகள், காட்சிக்கு பின் புலத்தில் ஒலிக்கும்.  
தையல் இட்டாள் ஒரு தையல் ..... என்று  ( பரவாயில்லை, ஞாபகம் இன்னும் தெளிவு குறையவில்லை )..

திரை உலகில் திறமை இருந்தால் மட்டும் போதாதே... அரசியல் தெரிந்து இருக்க வேண்டும். அப்புறம் அவர் பற்றி ஒன்றும் அறியேன் .
இதற்கு எதிர் வரிசை, 'சித்தி விநாயகர் மாவு அரவை மில்',  பாண்டியன் வறு கடலை கடை, ஒரு சிற்றுண்டி கடை அப்புறம் முதலில் சொன்ன சண்முகம் கடை.  அடுத்து தி கிரேட் 'சரஸ்வதி தியேட்டர்' . இது  பற்றி எழுத நிறைய நேரமும் வேண்டும்,  நிறைய நினைவுகளை இழுத்து நிறுத்தி அனுபவித்து பின் எழுத வேண்டும்.  எனவே இப்போது அவசர கதியில் சரஸ்வதி தியேட்டருக்குள் நுழைய வேண்டாம்.

அடுத்து நாம் மேல பஜார் ரோடில் இருந்து, வாடியார் வீதி வழியாக மீண்டும் இதே இடத்துக்கு ( சரஸ்வதி டாக்கீஸ் ) முன்புறம் நடை போடுவோம் அடுத்த பகுதியில்......

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60