அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 41


அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்
கவிக்கிறுக்கன் முத்துமணி
பகுதி: 41
12-02-2018
அன்புசொந்தங்களே !
தேவகோட்டை   திருப்பத்தூர் சாலை ஆயுர் வேத மருத்துவனை முன்பு நிற்கின்றோம்.  நல்ல உள்  முத்தம் வைத்த கட்டிடம்.  மேலே செல்லும் படிகள் வழியாக ஏறி சென்றால்,  தலைக்கு மேல் மின் விசிறி  சுழல டாகடர். இராஜகோபாலன் அமர்ந்து இருப்பார்.  அவருக்கு முன் இருந்த டாகடர் நரசிம்மன் அவர்களைக் கேள்வி பட்டு இருக்கிறேன்,  பார்த்தது இல்லை.  மருத்துவர் இராஜகோபால் தான் நல்ல பழக்கம்.  நேற்று இது பற்றி என் மனைவியிடம் பேசிக்கொண்டு இருந்த போதுதான் அறிவேன் மருத்துவருடைய மூத்த மகள் என் மனைவியின் வகுப்புத்தோழி என்று.
உள்ளே டாக்டரைக்  கடந்து அடுத்த மூலைக்கு  சென்றால் கம்பௌண்டர் கோபாலன் அவர்களின் அறை.  ஒரு mid wife  இருப்பார் . அவர் முகம் நினைவில் உள்ளது .  பெயர் மறந்து விட்டது.  அந்த முத்தம் கடந்து சென்றால் உள்ளே உள்  நோயாளிகள்.  பெரிய அளவில் கட்டில்கள் எல்லாம் இருக்காது.  சமயங்களில் தரையிலும் நோயாளிகள் கிடத்தப்பட்டு கிடப்பார்கள்.  கம்பௌண்டர் கோபாலனுடன் எனக்கு நல்ல தொடர்பு.  காலில் கையில் அடி  பட்டு காயங்களுடன் அடிக்கடி அவர் கட்டுப்போட்டு  உறவில் கட்டிப்போட்டவர்.  அப்படி என்ன கம்பௌண்டர் கோபாலனுடன் பந்தம் என்று கேட்கிறீர்களா?  அதற்கும் ஒரு கதை இருக்கிறது.
அன்றைய திரை நடிகர்கள் அனைவருமே மேடையில் இருந்து திரைக்கு வந்தவர்கள்.  மேடையில் நடித்து பழகியதால் தான் மக்களின் உடனடி உணர்வுகளை அறிந்து கொண்டு மக்களுக்கு எது பிடிக்கும்,  எது பிடிக்காது என்ற மனோ ஓட்டம் அறிந்து கொண்டவர்களாக இருந்தார்கள். M.G.R., சிவாஜி கணேசன், முத்துராமன்,மனோகர்,கோபால கிருஷ்ணன் என்று அனைவருமே சொந்தமாக நாடகக் குழு வைத்து இருந்தார்கள்.  இதில் சிவாஜியின் நாடகங்கள் மிக பெயர் பெற்றவை. சிவாஜி நாடக மன்றம் பல நாடகங்களை நடத்தி வந்தது.

பிரபல திரைப்பட வசன கர்த்தா திரு வியட்நாம் வீடு சுந்தரம், 1962அம ஆண்டு சென்னை டன்லப் தொழிற்சாலையில் பணி புரிந்த காலத்தில் எழுதிய நாடகம் 'பிள்ளையார் மாப்பிள்ளை யார் '  புரட்சி நடிகர் M.G .R   முன்னிலையில் அரங்கேற்றம் ஆகியது. அந்த முழு நாடகத்தையும் கண்டு களித்த  தலைவர், திரு.சுந்தரம் அவர்களை அழைத்து விடாமல் எழுது,  பெரிய வரவேற்பு பெறுவாய் என்று வாழ்த்தியது அப்படியே நடந்தது.  இவர் Y.G .P. க்காக  எழுதிய நாடகங்களை திரு.ஒய்.ஜி. பார்த்தசாரதி படித்து விட்டு இந்த நாடகங்கள் சிவாஜி கணேசன் அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று பெருந்தன்மையுடன் சொல்ல, அப்படி. இப்படி என்று திரு சுந்தரம் சிவாஜி கணேசன் அவர்களை சந்தித்து அவர்களின் கூட்டு முயற்சியாக வியட்நாம் வீடு படம் வெளிவந்து வெற்றி நடை போட்டதுடன் கதை வசன கர்த்தா, சுந்தரம், வியட்நாம் வீடு சுந்தரம் ஆனார். 

கண்ணன் வந்தான், மேடை  நாடகம், கவுரவம் என்ற பெயரில், சிவாஜி, இரு வேடங்களில் நடித்த, வெற்றிப்படம். தொழிலதிபர் டி.எஸ்.கிருஷ்ணாவின் உருவ அமைப்பு, பிரபல வக்கீல் வி.பி.ராமன் பேசுகிற பாணி, பிரபல வக்கீல் கோவிந்த் சுவாமிநாதன் போன்று நிற்பது, நடப்பது என்று, எல்லாம் கலந்து, பாரிஸ்டர் ரஜினிகாந்த் வேடத்தில், சிவாஜி, நடித்து சாதனை படைத்தார்.

வியட்நாம் வீடு நாடகத்தை அடுத்து, மேஜர் சுந்தர்ராஜனின் நாடக குழுவிற்காக, ஞான ஒளி என்ற, நாடகத்தையும் எழுதினார் . சிவாஜி, பிரபல இந்தி நடிகர், சஞ்சீவ் குமாரோடு வந்து பார்த்தார். அவருக்கு, பிடித்திருந்தது. ஞான ஒளி அதே பெயரில் படமாக்கப்பட்டது. சிவாஜி கிறிஸ்துவராக நடித்தார். பூண்டி மாதா கோவிலை பின்னணியாக வைத்து, எழுதப்பட்ட கதை அது. 

இந்த ஞான ஒளி திரைப்படம் 1972ல் வெளியாகி பின்னர் தேவகோட்டை சரஸ்வதி திரையரங்கம் வந்த நேரம்.  நான் 8ஆம்  வகுப்பு முடித்து கோடை விடுமுறையில் இருக்கிறேன்.

இந்த தகவல்கள்  எல்லாம் திரட்டி வைத்து அப்படிப்பட்ட ஞான ஒளி திரைப்படம் பார்க்க வேண்டும் என்று காத்து இருக்கிறேன்.  அதிலும் அந்தக் கால கட்டத்தில், சிவாஜி கணேசனுக்கு T.M.S.  பாடல் வரிகளின் இடையே கொஞ்சம் வசனமும் பேசுவார்.  அப்படி ஒரு ட்ரெண்ட் அப்போது...

அந்த நாள் ஞாபகம் வந்ததே நெஞ்சிலே....பாடல் இடையே

ஒரு ராஜா  ராணியிடம் ..... வெகு நாளாக ஆசை கொண்டான் ....பாடல் இடையே

அதே போல இந்த படத்தில் ....

தேவனே .... என்னைப்பாருங்ககள்... இடையே ...

உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன....இரண்டும் சந்தித்த போது ... பேச முடியவில்லையே.....

தேவகோட்டையில் கோடை வாட்டி எடுக்கும் வேளையில் வேறு என்ன பொழுது போக்க முடியும்?  குளம் குளமாய்க் குதித்துக் குளிப்பதைத் தவிர.  போதாக்குறைக்கு நாங்கள் எல்லாம் நீச்சல் வீரர்கள் வேறு.  மூட்டாங்குண்டு என்றழைக்கப்படும் வீட்டின் அருகாமையில் இருக்கும் அருணாச்சலப்  பொய்கையில் ஆரம்பித்து, சிவன் கோவில் ஊரணி, இரவு சேரி ஊரணி, புதூர் அக்ராஹார ஊரணி, சமயங்களில் இராம் நகர் கடந்து குளத்தின் சைசில் இருக்கும்   P .S .S .கிணறு வரை போய் டைவ் அடித்து குளிப்பது ஒன்று தான் பொழுது போக்கு.  கண்கள் சிவக்க சிவக்க படித்துறையில் இருந்து தண்ணீருக்குள் குட்டிக்கரணம் அடித்து வருவது ஒரே குஷி .

அன்றைக்கு எனக்கு போதாத காலம்.  காலை  10 மணிக்கே குளிக்க அருணாசலப்  பொய்கை போய்  விட்டேன்.  மதியம் வரை தண்ணீரில் ஆடி விட்டு மதிய  உணவை வீட்டில் முடித்துக் கொண்டு மேட்னி ஷோ 'ஞான ஒளி'  பார்ப்பது தான் அன்றைய அஜெண்டா..   எட்டாம் வகுப்பு ,முடித்து விட்டாச்சு.... அடுத்து 9 ஆம்  வகுப்புக்கு தே  பிரித்தோ பள்ளியில் சேர வேண்டும்.  எனவே ஒன்றும் பெரிய பொறுப்புக்கள் எல்லாம் இல்லை.  மனம் முழுக்க சிவாஜி கணேசனின் கூலிங் கிளாஸ்  அணிந்த வயதான முகம்.  'வாய் முழுக்க' ,  தேவனே என்னை பாருங்கள் என்று பாவத்துடன் பாடல்.   அதே சமயம் உயரமான படிக்கட்டில் இருந்து 'சர் ' என்று டைவ்.   அப்படியே எழுந்து வந்து மீண்டும் ... மீண்டும்...  குளியல் அல்ல ... குதியல் ...ஒரு குதியலில் ஊரணியின் செம்பாறைக்  கல்லில் குதிக்கின்ற  நொடியில் கால் வழுக்கி விட்டது.. மேலெழுந்த உடல் முழு உயரம் போகாமல் முழங்காலுக்குக்  கீழே பாறையில் மோதி அப்படியே குட்டிக் கரணம், குட்டிக்கரணம் ஆகி  தண்ணீருக்குள் விழுந்தேன்.  அப்போது ஒன்றும் தெரியவில்லை.  தண்ணீரில் அடியில் இருந்து மேற் பரப்புக்கு வந்தால், அந்த பகுதி முழுவதும் இரத்தம் .  ஆஹா... என்று மேலே கரை ஏறி பார்க்கிறேன், இரண்டு கால்களிலும் முழங்காலுக்கு கீழே பிளந்து கிடக்கிறது.  ஒரு அடி  எடுத்து வைக்க முடியவில்ல.  பிறகு....

பிறகு என்ன ?? நேராக நகராட்சி ஆயுர் வேத மருத்துவமனை.  கம்பௌண்டர் கோபாலன் பிடியில்,  அடி  பட்ட இடத்திலேயே தையல் மேல் தையல் வேறு..... அந்த  ஞான ஒளி பார்க்கவே இல்லை.. அப்புறம் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்கின. கால் காயம் ஆறிய பாடில்லை.  இரண்டு கால்களிலும் பாண்டேஜ் கட்டிக்கொண்டு பள்ளி செல்வேன் .  அதோடு தே பிரித்தோ  பள்ளியில் கால்  பந்து விளையாடுகிறேன் பேர்வழி  என்ற ஆறுகிற காயத்தில் மறுபடியும் அடி  வாங்கிக்கொண்டு வருவேன்.  ரொம்ப நாள் கோபாலன் மனம் கோணாமல் கட்டுப்போட்டு கொண்டே இருந்தார். 

இதைப்படிக்கும் அன்பு நண்பர்கள் என்னடா இந்த முத்துமணி ஒரே சினிமா கதையாக எழுதுகிறானே  என்று எண்ணுவார்கள். அந்த கால கட்டத்தில் தேவகோட்டை போன்ற ஊர்களில் அறிவுக்கு தீனி போட்டவை திரைப்படங்கள், கந்தர் சஷ்டி விழா கழகம், ஆர்ச் அண்ணா அரங்கம் இவை மட்டும்தானே!..  ஆனால்  தற்காலத்தை போன்ற அர்த்த மற்ற திரைப்படங்கள் மிக மிகக்குறைவு.   இசையும், இலக்கியமும், தமிழும் கற்றுத்தந்த நல்ல பல்கலை கூடங்களாகவே அன்றைய திரைப்படங்கள் விளங்கின.  அப்போது தொல்லையான    தொலைக்காட்சியோ ,  அனைத்தும் உள்ள கைபேசியோ எது?

இந்த மருத்துவனையின் இடது புறம் தற்போது சில பல மளிகைக் கடைகள் இருக்கின்றன.  முதல் கடையாக நண்பர் ஆத்மநாபன் பொதுத் தொலை பேசி இணையம் நடத்தி வந்தார்.  அடுத்து அடுத்து மளிகைக்கடை,   ஸ்ரீ கண்ணாத்தாள் டிரான்ஸ்போர்ட்  புக்கிங் அலுவலகம் என்று நடந்து வந்தது கடைசியாக நான்  கண்ட வரை. 

இதை அடுத்து ஒரு சிறிய கதவுடன் தொடங்கி  முக்கோண வடிவமான ஒரு வீடு.  இதில் முன்பு PT.இராஜன் என்ற ஆசிரியர் குடி இருந்தார்.  இவர் அண்ணன் அங்குச்சாமி அவர்கள் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த சமயங்களில் அவருக்கு ஒரு செயலாளர் போல் செயல் படுவதை பார்த்து இருக்கிறேன்.  தொகுதியில் வரும் மனுக்களை முத்திரை இட்டு வைப்பது, அனுப்பி வைப்பது போன்ற வேலைகளை செய்வார்.  பொதுத்தேர்தல் சமயத்தில் புரட்சித்தலைவர் போல வேடம் அணிந்து திறந்த வெளி ஊர்தியில் வாக்கு  சேகரிக்கும் ஊர்வலத்தில் வலம்  வந்தார்.  அதன் பின் என்ன ஆனார் என்று தெரியாது.

கொஞ்ச காலம், நண்பன் ஆசைத்தம்பி, மரகதவல்லி டீச்சர், வேலு சார் குடும்பம் இதே வீட்டில் குடியிருந்தது.  இதற்கு எதிரே முடி திருத்துவோர் குடி இருப்பு. இதில் முக்கியமானவர் முருகன் நுட வைத்திய சாலை என்ற பெயரில் எலும்பு முறிவு வைத்தியம் பார்த்து வந்த முருகன்.  இவருக்கு ஒரு கிளை வைத்திய சாலை தி.ராம.சாமி வீட்டில் இருந்து வெள்ளையன் ஊரணி தென் கரைக்கு செல்லும் சாலையில் இருந்தது.  இவருடனும் நல்ல பழக்கம். என்ன கையை முறித்துக்கொண்டு தொழில் முறை பழக்கம் தான் ... 

11 ஆம்  வகுப்பு பள்ளி இறுதி ஆண்டில் பொதுத்தேர்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன் தியாகிகள் ரோடில் மிதி வண்டியில் இருந்து கீழே விழுந்து மணிக்கட்டை முறித்துக் கொண்டேன்.

இந்த மருத்துவர் குடியிருப்பை அடுத்து ஒரு தனி வீடு.  நான் 4 ஆம்  வகுப்பு படிக்கும் காலத்தில் இந்த இடத்தில் 'பரணி ஸ்டூடியோ'  என்று ஒரு புகைப்படம் எடுக்கும் ஸ்டூடியோ  இருந்தது.  அவரது மகள் 'ஜெகதாம்பாள்'  என்ற பெண் என்னுடன் ஒரே வகுப்பில் படித்தார். 

அதன் பின் அந்த கட்டிடம் மருத்துவர்கள் மாலை நேரம்  வைத்தியம் பார்க்கும் 'கிளினிக்'  ஆகியது. டாக்டர்.தேவசேனா இங்கு வைத்தியம் பார்த்தார் .  பின்னர்  டாக்டர்.தங்கவேலு இங்கு வைத்தியம் பார்த்து கொண்டு இருந்தார்.  தற்போது .... தெரியவில்லை.

இதற்கு நேர் எதிரே 'முச்சந்தி முனீஸ்வரர்' கோவில்.  இந்த கோவிலுக்கு நேர் எதிரே மாந்தோப்பு வீதி.  இந்த மாந்தோப்பு வீதி தொடங்கும் இடத்தில் ஒரு பூங்கா முக்கோண வடிவில் இருந்தது போன்ற நினைவு. அப்புறம் அந்த பூங்கா காணாமல் போய் விட்டது??!!!

முச்சந்தி முனீஸ்வரன் கோவிலுக்கு அடுத்து 'ராஜு நாயுடு' மளிகைக்கடை இருந்தது.  எந்த நேரமும் 'ஜே ..ஜெ..' என்று இருக்கும் கடை...

அடுத்து தேவகோட்டையில் முக்கிய வீதியான,  தேவகோட்டையின் ரங்கநாதன் தெரு ஆகிய, 'வாடியார் வீதி'    வருகிறது.  அன்பர் முத்துபழனியப்பன், P I சந்திரன் ஆகியோர் இந்த ரெங்கநாதன் தெரு பற்றி எழுதாவிடின் என்னை கோபித்து கொள்வார்கள்.

மற்றவை நாளை .....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தென் கிழக்கில் .. தெக்கத்தியான் (தெற்கத்தியான்) 21. தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடு'

22.தென்னாடும் தென் கிழக்கும்....இந்தோனேசிய வரலாற்று ஆவணங்களில் இருந்து....தென் கிழக்கில் ..

அசை போடும் ..தேவகோட்டை ஞாபகங்கள்-பகுதி: 60