அசை போடும் தேவகோட்டை நினைவுகள்-பகுதி: 44
அசை போடும் தேவகோட்டை நினைவுகள்
பகுதி: 43
22-02-2018
உங்கள் கை பிடித்து செல்லும் இந்த தேவகோட்டை நகர் உலா
உள்ளத்தில்
உற்சாகம் ஊட்டுகிறது,
உவப்பை காட்டுகிறது,
உறவுக்கரம் நீட்டுகிறது
இந்த உறவுகள் தானே வாழ்வின் அச்சாணி..என்னை உடன் அழைத்து என்னுடன் சமமாக ஊர் சுற்றி வரும் என் அன்பு நட்புக்களை எண்ணி இறைவனிடம் நன்றி கூறுகிறேன்.
வாடியார் வீதியின் இடது புறம் இருந்த இந்த வீட்டுக்குப் பின் ஓடும் சந்து வாடியார் வீடுதியை பழனியப்பன் சந்தில் இணைக்கும். இதை அடுத்து இருந்த வீட்டை இடித்துதான் கடைகள் முதலில் கட்டப்பட்டு, அதில் பூமி நாதன் பேன்சி ஸ்டோர்ஸ் கடைதனை பூமி.துரைராஜ், பூமி.இராமநாதன் சகோதரர்கள் நடத்தினார்கள். இவர்கள் வீடு, சிலம்பணி ஊரணி வட கரையில். இந்த வீடு கட்டப்படுவதற்கு முன் இந்த இடத்தில ஒரு பெரிய விறகுக்கடை நடந்து வந்தது. நல்ல பெரிய வீடு. கீழ்ப்பகுதியில் இவர்கள் இருந்து கொண்டு மேல் மாடியில் அறைகளாகத் தடுத்து நமது சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் படித்து கொண்டு இருந்த மாணவர்களுக்கு வாடகைக்கு விட்டு இருந்தார்கள். இந்த வீடு பற்றி பேச ஆரம்பித்தால் அப்புறம் வாடியார் வீதி வாடிப்போய் விடும். எனவே இந்த பகுதிக்குள் வரும்போது இது பற்றி பேசுவோம். இபபோது over to Vadiyaar Street .
இதை அடுத்த உயரமான படிக்கட்டுகள் வைத்த வீடுதான் 'பழனியப்பா நெய் ஸ்டோர்ஸ்'. முன்பகுதியினை கடை ஆகவும், பின் பகுதியில் குடி இருக்கவும் ஆக அமைத்து இருந்த வீடு. திரு.தட்க்ஷிணா மூர்த்தி மற்றும் அவரது பங்காளி 'நந்தி' இவர்களின் வீட்டு தோட்டம் இந்த பகுதி. தேவகோட்டையில் இருந்த ஒரே வணிக ரீதியான வெண்ணெய் மற்றும் நெய்க்கடை. பொங்கல் பண்டிகை சமயங்களில் இந்தக்கடைக்கு தூக்கு சட்டியில் நெய் வாங்க போய் இருக்கிறேன். அந்த சமயங்களில், இந்த வீட்டுடன் ஆத்மார்த்த நட்பும் உறவும் பின் வந்த நாட்களில் மலரும் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை.
உயரத்தில் தொங்கும் ஒரு தராசுத்தட்டில் நெய்யோ, வெண் நெய்யோ வாங்க வருபவர்கள் கொண்டு வரும் பல் வேறு எடை உள்ள பாத்திரங்கள் முதலில் எடை போடப்படும், இதற்கு சிறிய ஆணிகள், கம்பிகள், காசுகள் என்று பல்வேறு எடையில் பொருட்கள் பயன் படுத்தப்படும். அதன் பிறகு எத்தனை கிராம் வாங்க வேண்டுமோ அந்த எடைக்கல் பயன்பாட்டுக்கு வரும்.
நான் புகுமுக வகுப்பு முடித்து விட்டு இளங்கலை வணிகவியல் வகுப்பில் சேர்க்கிறேன். 1976 ஆம் வருடம். எல்லாம் புதுமுகங்கள், புகுமுக வகுப்பில் பயிலும் அந்த ஓராண்டிலும் அதற்கு முன்பும் அறிந்த முகங்கள் தவிர அனைத்தும் புது முகங்கள். இதில் கொஞ்சம் குட்டையாக, ஒரு சிறிய மிதி வண்டியில் அளவுக்கு மேற்பட்ட அலங்காரம் ( மிதி வண்டியைத்தான்) மற்றவர்கள் கவனம் தன் மீது விழும் வண்ணம் உருண்டை முகத்துடன், கொழு கொழு குழந்தை போல இராமநாதபுரத்தில் இருந்த வந்தவர் முருகேசன். ஆரம்பத்தில் கொஞ்சம் கண்டுக்காமல் தான் இருந்தோம். நடை,உடை ,பாவனை எல்லாம் வெறும் முருகேசனை 'பந்தா' முருகேசன் என்ற பட்டம் வைத்து குறிப்பிட எங்களை ஆக்கியது.
ஆனால், எங்களது வணிகவியல் 1976~1979 பேட்ச், அனைவருமே, நல்ல திறமைசாலிகள். என்ன வாய் தான் காது வரை..... (ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் வில்லன் நடிகர் S .V .ராமதாஸ் பேசும் வசனம்). அப்போது, இன்னும் கூட வணிகவியலுக்கு நிறைய கிராக்கி. அதனால் பார்த்துப் பார்த்து பொறுக்கி எடுத்த பேட்ச் எங்களது. எல்லா சேட்டைகளையும் செய்வார்கள், ஆனால் படிப்பதிலோ, மதிப்பெண் பெறுவதிலோ ரொம்ப ரொம்ப கெட்டி.. INTERNAL PAPER களில் ஒரு அரை மதிப்பெண் கூட குறைய விடமாட்டோம். ஆசிரியர்களிடம் வாதாடி, போராடி வாங்கி விடுவோம். அதே போல குழுவாக சேர்ந்து பாடங்களை படிப்பது ... அப்படி நான், நண்பர் (EX -ICICI BANK ) பழனிச்சாமி, நண்பர் நாகராஜ் (now at Malaysia ), இந்த முருகேசன் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டி உறவாட ஆரம்பித்தோம். இதில் முருகேசன் எங்கள் அனைவருக்கும் மாப்பிள்ளை. கல்லூரி பற்றி தனி ட்ராக் , இப்போ வாடியார் வீதி ...
அடுத்து ஒரு பாத்திர வாடகை நிலையம். அப்புறம் அன்புத் தம்பி திரைப்படத்துறையில் சாதிக்க உள்ள முத்து பழனியப்பன் அவர்கள் இல்லம். அப்புறம் குளக்கால் குறுக்கிட்டு விடும். அதைத் தாண்டினால், வார சந்தை. இது எல்லாம் வாடியார் வீதியின் இடது புறம்.
வலது புறம், ஈரோடு மீயன்னா அவர்கள் இல்லத்தைத் தாண்டினால் , ஒரு வீடு, பழனியப்பா நெய் ஸ்டோருக்கு நேர் எதிரே (என்ன முத்து பழனியப்பன், நினைவு வருகிறதா ?). அப்புறம் ஒரு பெரிய காலி இடம் உள்ள காம்பௌண்ட். கேட்டை திறந்து உள்ளே கொஞ்சம் நடந்தால் ஓட்டு வீடு வரும். இந்த வீட்டில் மாப்பிள்ளை முருகேசனும் அவரது மனைவி அன்புத்தங்கை சாரதாவும் கொஞ்ச காலம் குடி இருந்தார்கள்.
எப்போதுமே இந்த வாடியார் வீதியில் மக்கள் நடமாட்டத்துக்குப் பஞ்சமில்லை .ஞாயிற்று கிழமை சந்தை அன்று சொல்லவே வேண்டாம். உங்களை நான் இப்போது வாரச்சந்தைக்கு வாடியார் வீதி ( பழைய) வழியாக அழைத்து செல்லப் போகிறேன். போகிற போக்கில் அப்படியே வேடிக்கை பார்த்து கொண்டே அந்த மக்களையும் பார்த்துக் கொண்டே செல்லலாம்.
முதலில் பழனியப்பா நெய் ஸ்டோர்ஸ் பார்த்து விட்டோம். இந்த வீட்டுக்கு எதிர் காம்பௌண்டும் பார்த்து விட்டோம். இன்னைக்கு சந்தை இல்லையா...இந்த காம்பௌண்ட் வாசலில் ஒருவர் கறுப்பா, பயங்கரமா, பயங்கர கறுப்பா, ஒரு பெரிய புனல் போன்ற மெகா போனை வாயில் வைத்து கொண்டு 'மூ.... ஊ... ட்டைப் பூச்சி மருந்து'......'எலி .......இஇஇ ... மருந்து' என்று கூவிக் கூவி சிறிய காகித பொட்டலங்களில் மடித்து ஒட்டப்பட்டு இருக்கும் மருந்துகளை விற்றுக் கொண்டு இருப்பார். அவர்க்கு எதிரில் மீனாட்சி கையில் இருக்கும் பச்சைக் கிளியே நேரில் தேவகோட்டைக்கு வந்தது போல் 'பில்ட் அப்' கொடுத்து 'கிளி ஜோசியம்' பார்க்கும் ஒருவர் 'வாம்மா மீனாட்சி.... வந்து கருப்பையா என்ற பெயருக்கு நல்ல தொரு சீட்டு எடுத்துக் போட்டு போ தாயே' என்பார். அந்த கிளியும் , கிடைக்கிற இரண்டு நெல் மணிகளுக்காக கடமை ஆற்றும். 10 பைசாவை கட்டணமாக கொடுக்க கையில் வைத்துக் கொண்டு ஜோதிடம் பார்க்க வந்தவர், தனது மொத்த பரம்பரையின் எதிர் காலமே அந்த கிளி எடுக்கும் சீட்டில் தான் இருப்பது போல குத்துக் கால் போட்டு உடகார்ந்து கேட்பார்.
அவரின் உடல் மொழியிலேயே வருபவரின் எதிர் பார்ப்பை அறிந்த கிளி ஜோதிடக்காரர், தன் கை அசைவில் கிளியினை இயக்கி, அனுமன், ராமா சீதா, சமயபுரம் மாரி அம்மன் என்று வித விதமாய் படத்துடன் பலன் இருக்கும் சீட்டை எடுத்துப் படிப்பார். இதில் மசாலாவாக, கையில் கோடங்கி வைத்து இசை பட பாடுவோரும் உண்டு. கிளி பார்த்து சலித்து போனவர்களை கவர அவ்வப்போது வெள்ளை எலியும் வந்து மனிதரின் எதிர் காலத்தை கணித்து விட்டு கூண்டுக்குள் பதுங்கி கொள்ளும்.
அப்படியே இன்னும் கொஞ்சம் மேலே (சரஸ்வதி டாக்கீஸ் நோக்கி) சென்றோமானால், அடுத்து ஒரு பாத்திர வாடகை நிலையம். பெரிய அண்டாக்கள் , ஜமக்காளங்கள், இரும்பு நாற்காலிகள் என நல்லது மற்றும் நல்லது அல்லது ஆகிய நிகழ்வுகளுக்கு வாடகைக்கு கொடுப்பார்கள். A G S பாத்திர வாடகை நிலையம் என்று நினைக்கிறேன்.
அப்புறம், நல்ல மாட்டுக் கொம்பில், கொக்கு குடும்பத்துடன் நிற்பது போன்ற அழகிய வேலை செய்த குடைவு உருவங்களை அந்த வீதியிலேயே தயார் செய்து சுடச்சுட கூவி விற்பார்கள். கொஞ்சம் தள்ளி, காய் கால் குறைவாய் உள்ள மாற்றுத் திறனாளி , குஷ்டரோகம் உள்ள பிச்சைக்காரர்கள், தன் முன்னால் ஒரு துண்டை விரித்து, இரத்தக்கண்ணீர் M R ராதா வின் மாடுலேஷனில், 'கை...கால்... முடியாத பாவியம்ம்மா ... ஒரு வேலை செய்ய முடியாத ஜீவன் அம்மா' என்று தனி சுரத்தில் பாடிக் கொண்டு இருப்பார்கள்.
அப்புறம் இன்னும் செல்ல, நமது வலது புறத்தில் 'தமிழ் இசைப் பள்ளி' என்ற பெயருடன் பெரிய கேட் போட்ட கட்டிடம். உள்ளே நல்ல மலர்ச்செடிகள் நிறைய இருக்கும். கர்நாடக வாய்ப்பாட்டு, பரதம், மற்றும் இசைக்கருவிகள்வாசிக்க இங்கு கற்றுத்தருவார்கள். அந்த இசைப்பள்ளி ஆசிரியர் வலது கால் பாதத்தில் யானைக்கால் வியாதியினால் சற்று பருத்து இருக்கும்.
அக்ரஹாரத்து பெண்கள் ஒரு சடங்காகவே, கர்நாடக வாய்ப்பாட்டு கற்றுக் கொள்வார்கள். பின்னர் பெண் பார்க்க பிள்ளை வரும்போது ஒரு கீர்த்தனையாவது பாடி விட வேண்டுமே என்கிற தாயாரின் கரிசனத்துக்காக... அந்த இடம் தாண்டி செல்லும் போது , மிருதங்க இசை கேட்கும், ஆசிரியரின் 'ஜதி' சொல்லும் குரல் கேட்கும்... 'பாப்பா ....மாமா..... மாமா .... பாப்பா' என்று ஆரோகணத்தையும், அவரோகணத்தையும், எவரோ யாரோ பாடும் குரல்கள் கேட்கும்.
இதை அடுத்து ஒரு திண்ணை வைத்து ஒரு மூங்கில், சவுக்கு கழிகள், கயிறு போன்ற கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் கடை. பெயர் மறந்து விட்டது. இதை அடுத்து வலது கைய் பக்கம் வாடியார் வீதி சந்து வந்து விடும். இந்த சந்து முனையில் ஒரு குடி நீர் குழாய் இருக்கும். (தேவகோட்டையில் தண்ணீர் பஞ்சம் எவ்வளவு மோசமாய் இருந்தது என்பது இன்றைய தலை முறைக்குத் தெரிந்து இருக்க நியாயம் இல்லை.. தேவகோட்டை நகராட்சி பற்றி எழுத வரும்போது அது பற்றி குறிப்புகள் பதிவு செய்வோம்).
இந்த இடத்தின் எதிர் புறம் தான் தம்பி முத்து பழனியப்பன் அவர்களின் வீடு. அடுத்து குளக்கால் வந்து விடும். குளக்கால் தாண்டினால் வாடியார் வீதியின் மகுடம், வாரச்சந்தை வந்து விடும். இது உண்மையில் ஒரு பெரிய திடல். மற்ற நாட்களில் காலியாக இருக்கும். மாலை நேரங்களில் மட்டும் மீன் கடை காண்டா விளக்கு வெளிச்சத்தில் பரபரக்கும். இதன் இன்னொரு கோடியில் ( தற்போது இந்த இடம் எல்லாம் கடைகள்.... பேருந்து நிலையத்துக்கு பின் புறம் இணைக்கும் கடைத்தெரு ஆகி விட்டதை கண்டேன் ) ஒற்றைப் பனை மரம் நிற்கும். அதன் அடியில் திறந்த வெற்று வெளியில் பானை சட்டிகள் விற்பனைக்காக விரிந்து பரந்து இருக்கும்.
இந்த குளக்கால் பாலம் அருகில் துணிகள் தரையில் பரப்பி விற்பார்கள். சந்தைக்கடை துணி என்றே இதற்கு பெயர். பாப்ளின், சீட்டி துணிகளில் சிறுவர்களுக்கான ஆடைகள் விற்பார்கள். கிராமத்தில் இருந்து வருபவர்கள் வாங்கி செல்வார்கள் .
தவசி அண்ணன் , மீரா,மற்றும் பலர் தினசரி தொண்டியில் இருந்து மிதி வண்டியில் மீன் கொண்டு வந்து, உடனுக்குடன் இங்கு விற்பார்கள். இன்று வார சந்தை என்பதால் இத்துடன் மாட்டு வண்டிகளில் வந்து சந்தை நிறைய, காய் கறிகள் , வெங்காயம், கிழங்கு வகைகள் என்று தனித்தனியாக வரிசையில் (சில தற்காலிக டெண்டுகளிலும்) சந்தை வியாபாரம் கன ஜோராக நடக்கும்.
இன்றைக்கு இதற்கு மேல் எழுத முடியவில்லை. இன்னும் கொஞ்சம் எழுத உட்கார்ந்தால் , இந்த பகுதியை வெளியிட நாள் ஆகி விடும். அடுத்த பகுதியில் இந்த இடத்தில் எனக்கு தெரிந்த நண்பர்கள் முருகேசன், முத்து பழனியப்பன் பற்றி பார்க்கலாம் ..
கருத்துகள்
கருத்துரையிடுக